மசியின் நிறங்கள் - ஆதவன் தீட்சண்யா

அ.பாண்டியன் எழுதிய ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ என்கிற நூலின் வெளியீட்டு விழாவில் ( நவம்பர் 1, கோலாலம்பூர்) பேசியது.. 

பல்லினங்கள் வாழக்கூடிய ஒரு சமூகத்தில் ஒவ்வொரு இனமும் தன்னுடைய தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்கொள்கிறது. அதேவேளையில் அது தனக்குப் புறத்தே இருக்கிற பிற இனங்களின் பண்பாட்டிலிருந்து தேவையானதை தன்வயமாக்கிக்கொள்வதோடு தன்னிடமிருப்பதை பகிர்ந்தும்கொள்கிறது. நாம்- நாங்கள், அவர்கள் - மற்றவர்கள் என்கிற பாகுபாடுகளைக் கடந்து இடையறாது நிகழ்ந்தவாறே இருக்கும் இந்தப் பரிமாற்றம் பண்பாட்டுப் பொதுமைகளை உருவாக்குகிறது.

ஒவ்வொரு இனமும் தன்னையும் தனக்கு வெளியே இருக்கிற மற்ற இனங்களையும் குறித்த மதிப்பீடுகளைக் கொண்டிருக்கிறது. தனக்கும் மற்றவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசங்களை தனித்துவங்களாக கருதி இணக்கம் பேணுவது அல்லது இந்த வித்தியாசங்களின் மீது நல்லது-கெட்டது, உயர்வு- தாழ்வு, தீட்டு- புனிதம் ஆகிய கற்பிதங்களை ஏற்றி இடைவெளியை உருவாக்குவது என்பதாக இம்மதிப்பீடு உருத்திரள்கிறது.    

வரலாற்றின் போக்கில் இனங்களுக்கிடையே உருவாகியுள்ள பொதுமைகளையும் வித்தியாசங்களையும் விளங்கிக்கொள்வதற்கான தரவுகளை மொழியும் கலை இலக்கியமும் பொதித்துவைத்திருக்கின்றன. எனவே தனது சகஜீவிகளான மலாய் இனத்தவரது வாழ்வியலை அவர்களது சிறுகதைகளின் ஊடாக புரிந்துகொள்ள அ.பாண்டியன் மேற்கொண்ட முயற்சியும் வாசிப்பனுபவமும் ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ என்கிற கட்டுரைத்தொகுப்பாக நமக்கு கிடைத்திருக்கிறது.

இயற்கைக்கும் தனக்கும், தனக்கும் தன்னையொத்த மனிதச் சமூகத்திற்கும் இடையிலான உறவுகளுக்கும் முரண்களுக்குமான காரணங்களை கற்பிதமாக புனையத் தொடங்கியதிலிருந்து கதைகள் பிறந்தன எனலாம். காலத்தோடு சேர்ந்து கதைகளும் வளர்ந்து பெருகின. அச்சு இயந்திரங்கள் உருவாகி செய்தித்தாள்கள் வெளியான காலத்தில் அவை மக்களை ஈர்ப்பதற்காக அதாவது சந்தையை விரிவுபடுத்துவதற்காக மக்களது கூட்டு நினைவில் ஆழப்பதிந்து வாய்மொழி மரபாக பரவிக்கிடந்த இந்த தொல்கதைகளைச் சுருக்கி வெளியிடத் தொடங்கின. செய்தித்தாள்கள் ஒதுக்கும் இடவரையறையைக் கருத்தில் கொண்டு அதற்குள்ளாக அடங்கிவிடும் தன்மையில் உருவாக்கப்பட்ட வடிவம்தான் சிறுகதை. பின்னாளில் காலனியம் பரவியபோது அதனூடாகவே அச்சியந்திரமும் சிறுகதை வடிவமும் பரவியது என்பதற்கும் அப்பால் இதை திருநிலைப்படுத்திக் கொண்டாட எதுவுமில்லை. ஆகவே சிறுகதைக்குரிய வடிவ மற்றும் உள்ளடக்க வரையறை என்பது எழுதப்படும் மொழிக்குரிய மக்களின் தேவைகளையொட்டி மாறிக்கொண்டே இருக்கிறது. மலாய் சிறுகதையிலும் இதுதான் நடந்திருக்கிறது என்பதை பாண்டியனின் நூல்வழியே அறியமுடிகிறது.

ஒரு பெரும்பான்மை தேசிய இனத்தின் மொழியாகவும், சுதந்திரத்திற்குப் பின் தேசிய மொழியாகவும் சிறப்புரிமை பெற்ற மலாய் மொழிச் சிறுகதைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காய்தல் உவத்தல் இன்றி சொல்லி, அது  பழமைவாதத்தையும் மத வட்டத்தையும் தாண்ட முடியாமல் மாட்டிக் கொண்டிருப்பதையும் அவற்றுக்கெதிரான  மீறல்களையும் விமர்சனப்பூர்வமாக முன்வைக்கிறது அறிமுகக் குறிப்பு. மலாய் சிறுகதைகளோடு மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் நிலையை ஒப்பிட்டுள்ள பார்வையும் முக்கியமாகப் படுகிறது. ஆனால், மலேசியத் தமிழ்ச்சமூகத்திற்கு எழுத்தறிவு கிடைக்கப் பெற்றதற்கான வரலாற்றின் தொடர்ச்சியில் வைத்துதான் மலேசியத் தமிழ் எழுத்திலக்கியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் மதிப்பிட வேண்டும். மலேசியத் தமிழிலக்கியத்தை அதன் காலத்திற்குள் வைத்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கோருவதை அதற்கு கோரப்படும் சலுகையாக தாழ்த்திக் கொள்ளவேண்டியதில்லை. ஆகவே அதை தமிழ்நாட்டு அல்லது மலாய் சிறுகதைகளுடன் ஒப்பிடுவது பொருந்தா முடிவுகளுக்கே இட்டுச் செல்லும். மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் இன்றைய நிலை காலம் அதை அனுமதித்த அளவை எட்டியுள்ளதா, காலத்தின் தேவையை நிறைவு செய்யும் உள்ளக ஆற்றலை பெற்றுள்ளதா என்கிற ரீதியிலான ஆய்வின் தேவையை இந்த அறிமுகக் குறிப்பை வாசிக்கும் போது உணரமுடிகிறது.

ஷஹனூன் அமாட் எழுதிய வறண்ட வயல், ஹிடாயா அஸ்ஸாரி எழுதிய நாவிதனின் மகள், பஹருடின் கஹார் எழுதிய பா உரே, டத்தோ அப்துல்லா  ஹூசேன்  எழுதிய தன்னை தொலைத்தவர்கள், ஸைன் கஸ்தூரி எழுதிய ஹாங் நாடிமின் வேறு கதை, அனுவார் ரிட்வான் எழுதிய டிக் டிக் டிக், சஸ்ஜீரா எழுதிய சக்களத்தி ஆகிய மலாயர்கள் எழுதிய சிறுகதைகளையும்,  தமிழரான சரோஜாதேவி மலாயில் எழுதிய ‘கந்தசாமி’, க்ஷியோ ஹேய் என்பவர் சீனமொழியில் எழுதி வூ தெக் லோக் என்பவரால் மலாயில் மொழியாக்கம் செய்யப்பட்ட ‘தூறல் மழையில்’ ஆகிய சிறுகதைகளையும் ஏ.சாமாட் சைட் எழுதிய சலீனா என்கிற நாவலின் ஒரு பகுதியையும் அறிமுகப்படுத்தி பாண்டியன் எழுதிய பத்து கட்டுரைகளே இத்தொகுப்பு.

கட்டுரையின் பேசுபொருள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

1. எழுத்தாளர் அறிமுகம்

குறிப்பிட்ட எழுத்தாளரின் சமூகப் பின்புலம், எழுதவந்த காலகட்டம், அவரது இலக்கியப் பார்வை, இலக்கியத்தில் அவரது பங்களிப்பு, பெற்ற விருதுகள், சமூகத்தில் அவர் ஆற்றிவரும் பணிகள் மற்றும் வகிக்கும் பொறுப்புகள் குறித்த விவரங்கள் சுவைபடச் சொல்லப்படுகிறது. வாழ்வின் வெவ்வேறு அடுக்குகளிலிருந்து எழுத்தாளர்கள் உருவாகி வந்திருப்பதையும் தங்களது அன்றாடங்கள் விதிக்கும் தளைகளை மீறி   அவர்கள் படைப்புரீதியாக தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் அறியத் தருகிறது.  

2. கதையின் கதை

குறிப்பிட்ட கதை மலாய் சிறுகதைப்பரப்பில் வடிவ மற்றும் உள்ளடக்கரீதியில் கொண்டுள்ள தனித்துவம், சமூகத்தின் நிலவரம் கதையின் மையக்கருவாக உருத்திரண்டு வெளிப்படுவதற்கான காரணிகள், கதை எதிர்கொள்ளப்பட்ட விதம், அது பிறமொழிக் கதைகளோடு கொண்டுள்ள ஒப்புமை. 

3. கதை

கதையின் சுருக்கம், அந்தக்கதை பற்றிய பாண்டியனது கருத்து

ஒருவகையில் இவரது கதைத்தேர்வு வட்டாரம் சார்ந்தும் வகைமை சார்ந்தும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. மலேசியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்களின் கதைகள் அவர்களது வட்டார மொழிநடையில் எழுதப்பட்டிருப்பது இங்கு கவனப்படுத்தப்படுகிறது. போட்டிப் பொறாமையிலும் பரஸ்பர அவநம்பிக்கையிலும் வெந்துழலும் விவசாயிகள், தமது தேவையிலிருந்து புதியதொரு கூந்தல் அலங்கார பாணியை அறிமுகப்படுத்திவிடுகிற பாசமிகு நாவிதரும் அவரது மகளும், பூர்வீக நிலம் அரசாங்க ஒப்புதலோடு அபகரிக்கப்படுவதன் வலியில் துடிக்கும் பழங்குடி, தன்னலம் துறந்த அரசியல் போராளிகள், தாயகம் எதுவெனக் குழம்பித் தவிக்கும் இந்திய வம்சாவளித் தொழிலாளிகள், இஸ்லாத்தை தழுவி மலாய்க்காரராக மாற தீவிரமாய் முயற்சிக்கும் ஆங்கிலேயர்- மேற்கத்திய வாழ்முறையை ஆரவாரமின்றி கைக்கொண்டிருக்கிற மலாய்கள், சமகாலத்திற்கு இழுத்துவரப்பட்ட செவ்வியல் இலக்கியத்தின் கதாநாயகன், ஓட்டரசியலின் பகடைகளாக உருட்டப்படும் எளிய மக்கள், ஹிரோஷிமா பெண்ணும் நெவாடா ஆணும், கணவனை இன்னொரு பெண்ணுடன் பகிர்ந்துகொள்வதற்கு இடமளிக்கும் மதாச்சாரத்தை கேள்விக்குட்படுத்தும் பெண்கள் என்று இக்கதைகளின் மாந்தர்கள் மலேசிய சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வழியே சொல்லப்படும் கதைகள் மலேசிய சமூகத்திற்கு அப்பாலும் விரிந்து மனிதகுலம் எதிர்கொள்ளும் சிக்கல்களை பேசமுனைகின்றன.

இனம், மொழி, மதம் ஆகியவை ஒன்றாகவே இருந்தபோதும் தனிமனிதர்களுக்கு இடையே நிலவும் முரண்கள், பண்பாட்டு ஊடாட்டங்களால் ஏற்படும் மாற்றங்களை ஏற்கவும் விலக்கவுமான மனப்போராட்டம், ஒரு சமூகமாக ஈட்டிய சாதனைகளையும் பெருமிதங்களையும் பகிர்ந்துகொள்வதிலுள்ள இடர்ப்பாடுகள், தனிமனித வாழ்வில் மதம் வகிக்கும் பங்கு, பழமைவாதத்தின் மீதான பிடிப்பும் விடுவித்துக் கொள்வதற்கான எத்தனங்களும், ஆண் பெண் உறவுகளில் வெளிப்படும் பாலினப் பாகுபாடும் ஒடுக்குமுறையும், அரசியல் போதாமையும் ஏமாற்றுகளும், நகரமயமாக்கத்திற்காக விரட்டியடிக்கப்படும் மக்களின இடப்பெயர்வு, ஆயுதக்குவிப்பு மற்றும் போரினால்   ஏற்படும் அழிமானங்கள் என்று உலகளாவிய அளவில் மனிதகுலம் எதிர்குலம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மலாய் கண்கொண்டு பார்த்து எழுதப்பட்டவையாய் இருக்கின்றன இக்கதைகள்.

தனது சகஇனத்தவரைப் பற்றி எழுதும் போது கவனம்வைக்க வேண்டிய வரம்பு உள்ளிருந்து வழிநடத்துவதால் அதற்கிசைவான மொழி பாண்டியனுக்கு வாய்த்திருக்கிறது. தோட்ட வாழ்க்கை, தோட்டங்கள் துண்டாடப்படுதல், மலாயா கம்யூனிஸ்ட் இயக்கம், ஜப்பான் ஆதிக்கம், இரண்டாம் உலகப்போர், பெர்சே போராட்டம், அணுகுண்டு அபாயம் என்று கதைகளை ஒட்டியும் உட்புகுந்தும் பல்வேறு விசயங்களைப் பேசுவதற்கு அவரை இக்கதைகள் தூண்டியிருக்கின்றன.

‘கறாரான’ விமர்சன அளவுகோல் எதுவும் என்னிடம் இல்லை. அதை வைத்திருப்பதாக அலட்டிக் கொள்கிறவர்கள் அதைக்கொண்டு ஒருபோதும் தன் எழுத்துகளை அளந்ததாக நான் கேள்விப்பட்டதுமில்லை.  எனவே வாசிப்பை வெறும் அனுபவமாகவோ சாதனையாகவோ குறுக்கிக்கொள்ளாமல் அது தனக்குள் ஏற்படுத்திய சலனங்களை உணர்ந்ததை உணர்ந்தவாறு யாவரோடும் பாண்டியன் பகிர்ந்துகொண்டிருக்கும் அதேபாங்கில் இந்நூல் குறித்த எனது கருத்துகளை இங்கு நான் பகிர்ந்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக