சடங்குகளைப் பற்றிய பேச்சை சதுர்வர்ணத்திலிருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது... (ஆயிரத்தோராவது தடவையாக)தயசங்கரின் "சாதிகளின் உடலரசியல்"  என்ற நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை

முன்குறிப்பு- மற்றவர்களை விட உயர்ந்த வர்ணத்தவர்/ சாதியினர் என்கிற பொருளில் சுட்டப்படும் பிராமணர் என்ற சொல்லை அந்தக் காரணத்தாலேயே நான் பயன்படுத்துவதில்லை. கடைசியாக வந்தவர்கள், இளையவர்கள் என்னும் பொருள்பட தமிழில் உள்ள பார்ப்பனர் என்ற சொல் அந்த சரியான காரணத்திற்காகவே என்னால் இக்கட்டுரையிலும் எடுத்தாளப்பட்டுள்ளது.

1.
அன்றாட வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஆரியச்சமூகம் தன்னை பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நால்வர்ணமாக பகுத்துக்கொண்டது. ‘மனுவும் சப்தரிஷிகளும் அடங்கிய குழு’வால் அந்தச் சமூகத்தின் எந்தவொரு ஆண் உறுப்பினரும் இந்த நான்கு வர்ணத்தின் ஏதாவதொரு பிரிவுக்குள் அடக்கப்பட்டனர். அதாவது, சப்தரிஷிகள் பார்ப்பனர்களையும், மனுவானவர் சத்திரியர்களையும் வைசியிர்களையும் தெரிந்தெடுத்தப் பிறகு எஞ்சியவர்கள் சூத்திரர்களாக விடப்பட்டனர். இந்தப் பிரிவினையின் ஆயுட்காலம் ஒரு யுகம், அதாவது நான்காண்டுகள் மட்டுமே. ஒரு யுகத்திற்குப் பிறகு அதாவது நான்காண்டுகளுக்குப் பிறகு அவர்களை பரிசீலிக்கும் மனு-சப்தரிஷிகள் குழு அவர்களை அதே வர்ணத்தில் நீட்டிக்கலாம் அல்லது வேறு வர்ணத்திற்கு மாற்றலாம். இந்தக் காலக்கட்டத்தில் வர்ணங்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை. குறிப்பிட்ட வர்ணத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள தொழில்களைச் செய்து அதற்குரிய ஒழுக்கங்களைப் பேணுவதே வர்ண தர்மம் எனப்பட்டது.

சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்த ஆரியச்சமூகம் தனிமனித வாழ்வை பிரம்மச்சரியம், கிருகஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்கிற நான்கு ஆசிரமங்களாக (பருவங்களாக) பிரித்திருந்தது. இந்த நான்கு ஆசிரமங்களுக்குமுரிய காலக்கட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிகளும் ஒழுக்கங்களும் ஆசிரமத் தர்மம் எனப்பட்டது. நான்கு வர்ணங்கள் மற்றும் நான்கு ஆசிரமங்களுக்கு உரிய விதிகளின் தொகுப்பே வர்ணாசிரம தருமம் எனப்படுகிறது.

பிரம்மச்சரிய காலத்தில் கல்வி பயில்வதற்காக குரு ஒருவரிடம் அனுப்பும் முறையானது பின்னாளில் குருகுல முறை உருவாக வழிவகுத்தது. முன்பு சப்தரிஷிகளால் செய்யப்பட்டு வந்த வர்ணப் பகுப்பு காலப்போக்கில் குருவால் செய்யப்படுவதாக மாறியது. எட்டுவயதுக்கு மேற்பட்ட ஆண்குழந்தைகள் அனைவரும் 12 ஆண்டுகாலம் கல்வி பயில குருவிடம் அனுப்பப்பட்டனர். தன்னிடம் கல்வி பயின்ற மாணவர்களுக்கு அவரவர் திறமை மற்றும் ஆர்வங்களுக்கேற்ப அவரவர்க்குரிய வர்ணத்தை ஒதுக்கும் பொறுப்பு அந்த குருவுடையதானது. உபநயனம் செய்து பூணூல் அணிவிப்பதின் மூலம் இந்த பொறுப்பை குரு நிறைவேற்றினார். ஒரே குடும்பத்தற்குள் வெவ்வேறு வர்ணத்தவர் இருக்கும் சாத்தியங்கள் கொண்ட இந்தக் காலகட்டத்திலும் வர்ணங்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை.

கல்வியின் அடிப்படையில் பிரம்மச்சரிய காலத்தில் ஒருவருக்கு  வர்ணம் ஒதுக்கப்படுவதால் அவர் தனது ஆயுட்காலம் முழுவதும் அதே வர்ணத்தில் நீடிக்கும் நிலை உருவானது. மனுவாலும் சப்தரிஷிகளாலும் வர்ணப்பகுப்பு நடத்தப்பட்ட காலத்தில் வர்ணங்களுக்குள் இருந்த நெகிழ்வுத்தன்மை அதாவது நான்காண்டுகளுக்குப் பிறகு ஒரு வர்ணத்திலிருந்து மற்றொரு வர்ணத்திற்கு மாற முடிந்த நிலை வழக்கொழிந்தது. இதன்படி பார்ப்பனர் ஆயுட்காலம் முழுவதும் பார்ப்பனர். அதேவேளையில் அவரது மகன்கள் வேறு வர்ணத்தவர்களாக இருக்கவும் வாய்ப்பிருந்தது. வர்ணப்பகுப்பில் தங்களுக்கு இருக்கும் உயர்ந்த நிலை, அதிகாரத்திலும் சமூகத்திலும் தமக்கு இருந்த செல்வாக்கு ஆகியவை  தங்களின் பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக, வர்ணத்தை ஒதுக்கும் அதிகாரத்தை குருவிடமிருந்து பறித்த பார்ப்பனர்கள் தந்தையின் வர்ணமே மகனுக்கு என்றாக்கினர். அதாவது தகுதி திறமை என்கிற அடிப்படையில் பிரிக்கப்பட்ட வர்ணம், பரம்பரை அடிப்படையில் வாரீசுரிமையாக்கப்பட்டது. (தகுதி, திறமை என்கிற அடிப்படைகளை ஒழித்துக்கட்டி தங்களை நிலைநிறுத்திக் கொண்ட  பார்ப்பனர்களில் பெரும்பாலானவர்கள்தான் இப்போது எதற்கெடுத்தாலும் தகுதி திறமை என்று பீற்றுகிறவர்களாய் இருக்கிறார்கள்.) இதன்படி உபநயனம் செய்வித்து பூணூல் அணிவிக்கும் உரிமை தந்தைக்குரியதாகியது.

இந்த புதிய நிலைமை, வர்ண அடுக்கில் மேலிருந்த பார்ப்பனர்களை அதே இடத்தில் நிலைப்படுத்தியதோடு அவர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் இருந்த சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தவர் குடும்பங்களில் இருந்து பார்ப்பன வர்ணத்தவர் எவரும் உருவாகி வந்த முந்தைய நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வழிபாட்டுச் சடங்குகள் மற்றும் யாகங்களை நிகழ்விக்கும் புரோகிதத் தொழில் மூலம் கிடைத்துவந்த ஆதாயங்களை நேரடி ரத்த வாரீசுளுக்கு மட்டுமே உரியதாக மாற்றுவதற்காக பார்ப்பனர்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை குடும்பம் என்பதை ஒரே வர்ணத்தவர் மட்டுமே உள்ளதாக - அதாவது சாதியாக மாற்றியது. அதாவது பார்ப்பனர்கள் தம்மைத்தாமே உள்வைத்து சாத்திக் கொண்டதன் மூலம் ஒரு சாதியாக மாறினர். பார்ப்பன வர்ணத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டதை உணர்ந்த பார்ப்பனரல்லாதார் தாங்களும் அவ்வாறே ஆகினர். 

பார்ப்பனர்கள் சமூகத்தை சாதியாக மாற்றியதோடு திருப்தியடைந்துவிடவில்லை. தங்களுக்கு எதிராக பிறர் ஒன்றிணைந்தவிடாதபடி அவர்களை பிளவுபடுத்தும் வகையில் சாதிகளுக்குள் கலந்துண்ணலையும் கலப்பு மணத்தையும் தடுத்து நிறுத்தினர். சாதியின் தூய்மையைக் காப்பாற்றிக்கொள்ள இந்தத் தடைகள் அவசியம் என சொல்லப்பட்ட போதும் அவர்களது உண்மையான நோக்கம் பார்ப்பனரல்லாதாரை பிரித்துவைப்பதுதான். அதற்காக அவர்கள் சாதிகளுக்கிடையே ஏற்றத்தாழ்வை கற்பித்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியதோடு சாதிகளை உட்சாதிகளாகவும் பகுத்தார்கள். அவர்களது இழிநோக்கம், இந்திய மக்களை என்றென்றைக்கும் ஒன்றிணைய முடியாதபடி பிளவுபடுத்திவிட்டதை ‘நஞ்சின் கொடிய விளைவுகள் நஞ்சு இட்டவன் முதலில் எண்ணியிருந்த அளவுடன் நின்றுவிடுவதில்லை...’ என்று வர்ணிக்கிறார் அம்பேத்கர்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு வர்ணமும் சாதியும் ஒன்றுதான். வர்ணம் சாதியாக மாறியபோதும் அவர்கள் பார்ப்பனர்களாகவே நீடித்தனர். அதாவது அவர்களது மேலாதிக்க நிலை தக்கவைக்கப்பட்டது. மற்ற வர்ணத்தவர்களோ சாதிகளாக சுட்டப்பட்டனர். (எங்கள் சாதி எப்படி உருவாச்சு தெரியுமா என்று யாராச்சும் பீற்றினால் அது இப்படிதான் உருவாச்சு என்று சொல்லுங்கள்.)

2.

நான் மேலே கூறிவந்துள்ள பாங்கில் கோர்வையாகவும் நேர்கோட்டிலுமாக வர்ணம் சாதியாக மாறியதன் நிகழ்ச்சிநிரல் அமைந்துவிடவில்லை. முட்டாளுக்கும் முரடனுக்குமிடையேயான சண்டை என அம்பேத்கரால் குறிப்பிடப்படுமளவுக்கு அந்தஸ்து தொடர்பாக தம்மோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த சத்திரியர்களோடு பார்ப்பனர்கள் சமரசம் செய்துகொண்டது, வேதத்தின் முதன்மையை ஏற்றுக்கொண்ட சமூகக்குழுக்கள்  பலவற்றையும் ‘விராத்திய ஸ்தோமா’ என்னும் சடங்கின் மூலம் ஆரிய சமூகமாக உள்ளிழுத்து வைசிய சூத்திர வர்ணங்களுக்குள் அடைத்து பெருக்க வைத்தது, சமூகத்தின் அன்றாட வாழ்வில் புரோகிதக்கூட்டத்தின் தலையீடுகளும் ஆதிக்கமும் அதிகரித்தது, புரோகிதர்களாகிய பார்ப்பனர்கள் தங்களது நலன்களை முன்னிறுத்தும் குறுகிய நோக்கில் ஆட்சியாளர்களை  வழிநடத்தியது என்று வரலாறு நமக்கு விட்டுச் சென்றுள்ள அனேக விசயங்களை விஸ்தாரமாகப் பேசாமல் இவ்விடத்தில் நான் கடப்பதற்கு காரணம் மனுஸ்மிருதியைப் பற்றி சொல்லி முடிக்கவேண்டும் என்பதால்தான்.

பார்ப்பனர்களது வேள்விகள் மற்றும் சடங்குகளால் ஏற்பட்ட பொருள் விரயம், கால்நடை பலிகள், சமூகப்பாகுபாடுகள், தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக வேதமறுப்பை அடிப்படையாகக் கொண்ட சமணமும் பௌத்தமும் உருவாகின. பௌத்தம் தழுவிய அசோகரின் ஆட்சிக்காலம் தொடங்கி அடுத்தவந்த 140 ஆண்டுகாலம் பார்ப்பனர்கள் தங்களது சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் அதிகாரத்தையும் இழக்கவேண்டி வந்தது. உயிர்ப்பலிகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டதால் பார்ப்பனர்களால் விலங்குகளைப் பலியிடும் யாகங்களை நடத்தமுடியாமல் போனது. பௌத்தத்தை ஒழித்துக் கட்டினால் மட்டுமே மீண்டும் பழைய செல்வாக்கைப் பெறமுடியும் என்கிற பார்ப்பனர்களது ஆதிக்கவெறியின் வடிவமாக புஷ்யமித்திர சுங்கன் உருக்கொண்டான். அவன் கி.மு.185ல் மன்னன் பிருகத்ரதனை கொன்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினான்.

புஷ்யமித்திர சுங்கன் ஒவ்வொரு பௌத்தப்பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் என விலைவைத்து ஒழித்துக்கட்டினான். ஒடுக்குமுறைக்கும் உயிரழிப்புக்கும் அஞ்சாது பௌத்தத்தை பற்றியொழுகியவர்களை தீட்டுக்குரியவர்கள் என்று அறிவித்து தீண்டத்தகாதவர்களாக்கி அவர்களை ஊருக்கே வெளியே ஒதுக்கிவைத்தான். இந்த வரலாற்றுப்பகைமையை மறக்காத முன்னாள் பௌத்தர்களான தலித்துகள், தங்களது சேரிக்குள் பார்ப்பனன் நுழைவதை விரும்புவதில்லை. தவறி நுழைந்துவிடுவானாகில் அவனது தலையில் சாணியைக் கரைத்து ஊற்றி விரட்டியடிக்கும் வழக்கம் பிரிட்டிஷார் காலம் வரைக்கும்கூட இருந்ததை எட்கர் தர்ஸ்டன், அபே பே, தஞ்சை மாவட்ட அரசிதழின் ஆசிரியரான ஹெமிங்ஸ்வே ஆகியோர் பதிவு செய்துள்ளனர். அதேபோல அன்றைய மைசூர் மாநிலம் ஹாஸன் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோலியர்கள் தங்களது குடியிருப்புக்குள் நுழைந்த பார்ப்பனனை செருப்பால் அடித்து விரட்டும் வழக்கத்தைப் பின்பற்றினர் என்பதை ஜே.எஜ்.எப். மெக்கன்ஸி என்பவர் பதிவு செய்திருக்கிறார். இப்பதிவுகளை அம்பேத்கரும் மேற்கோளாக எடுத்தாண்டிருக்கிறார். (பக்கம் 28-30 தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்- தி.பெ.கமலநாதன், எழுத்து வெளியீடு). (ஆனால் இந்த வரலாற்றை மறந்துவிட்ட இன்றைய தலித்துகள் கல்யாணம் காதுகுத்து ஈமக்காரியம் பால்காய்ச்சு என்று சகல வாழ்க்கைவட்டச் சடங்குகளையும் பார்ப்பனப் புரோகிதர்களைக் கொண்டு நடத்துமளவுக்கு சுயமரியாதையற்றவர்களாக வீழ்ச்சியடைந்துவிட்டனர். )

சமூகத்தின் மீதான பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை என்றென்றைக்குமாக நிலைநிறுத்தும் சட்டத் தொகுப்பாக மனுஸ்மிருதி எழுதப்பட புஷ்யமித்ர சுங்கனது ஆட்சியே வழிவகுத்தது.  சுமதி பார்கவா என்பவனால் எழுதப்பட்ட ஸ்மிருதி, நெடுங்காலமாக ஆரியச்சமூகத்தில் மரியாதைக்குரியதாக இருந்த மனு என்கிற பெயரை முன்னொட்டாகக் கொண்டு மனுஸ்மிருதியானது. பார்ப்பனர்களை பூதேவர்கள்- பூமியின் கடவுளர்கள் என்று கொண்டாடிய மனுஸ்மிருதியானது ஒவ்வொரு சாதிக்குமான கடமைகள் மற்றும் உரிமைகளை வரையறுத்தது. குறிப்பிட்ட சாதியின் அங்கத்தவர் என்ற முறையில் ஒவ்வொரு தனிமனிதருக்குமான அன்றாட மற்றும் ஆயுட்கால நடவடிக்கைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்தளித்தது. பொத்தாம்பொதுவாக அல்லாமல் மனித வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு புஷ்யமித்திரன் காலத்தில் அமலுக்கு வந்த இந்தச் சட்டத்தொகுப்புக்கு உட்பட்டுதான் இந்தியச்சமூகத்தின் உளவியல் இன்றளவும் இயங்குகிறது. சக மனிதரைப் பற்றிய கண்ணோட்டம், பெண்களைப் பற்றிய மதிப்பீடு, கல்வி, தொழில், விளையாட்டு, திருமணம், வழிபாடு, பிறப்பு- இறப்பு- பூப்படைதல் போன்ற தருணங்களில் கடைபிக்கப்படும் சடங்கு சம்பிரதாயங்கள் என்று நாம் இப்போது செய்துகொண்டிருக்கும் எதுவொன்றும் மனுஸ்மிருதியால் சொல்லப்பட்டவைதான். மனுஸ்மிருதி என்கிற பெயரையே கேள்விப்பட்டிராதவர்களும்கூட அதன்படியேதான் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். அந்தளவுக்கு அதன் கருத்தியல் செல்வாக்கு வலுவாகவும் நுட்பமாகவும் பரவியுள்ளது.

‘‘...மனுஸ்மிருதி என்பது சட்டவிதிகள், சமயம், ஒழுக்கவியல் ஆகிய அனைத்தும் திரண்ட ஒரு நூலாக உள்ளது. மனிதரின் கடமைகளை வகுத்துரைப்பதால் இது அறவியல் நூலாகின்றது. இந்த சமயத்தின் உயிர்நிலையான சாதிகளைப் பற்றிக் கூறுவதால் சமய நூலாகின்றது. அவரவர்க்கு விதித்த கடமைகளை மீறுவோருக்குத் தண்டனைகளை விதிப்பதால் இது சட்ட நூலாகின்றது. இந்த நோக்கில் சமய எண்ணப்போக்கு, அவர்களின் ஒழுக்கத் தத்துவத்தின் சாரம் ஆகியவற்றை அறிவதற்கு மனுஸ்மிருதியை அணுகுவதில் தவறேதுமில்லை... என்னும் அம்பேத்கரின் (தொகுதி 7, பக்கம் 261) கூற்று நிலைமையின் தீவிரத்தை அப்பட்டமாக உணர்த்துகிறது.  

3.

தூக்கத்திலிருந்து காலையில் எழும்புகிற ஒருவர் மீண்டும் இரவு படுக்கைக்குச் செல்லும் வரையாக அன்றைக்கான தனது எண்ணங்கள் செயல்கள் அனைத்தும் தன்னிஷ்டம் போலவே அமைவதாக  கருதிக்கொள்கிறார். ஆனால் - தூக்கத்திலிருந்து எழும்புவது அல்லது தூங்கச் செல்வது உட்பட எதுவொன்றைக் குறித்த நினைப்பும் செயலும் அவரால் சுயமாக தீர்மானிக்கப்பட்டதல்ல. வரலாற்றின் ஒருபகுதியாக இருந்து அவரது முன்னோர்கள் உருவாக்கிக்கொண்ட மொழி, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகள், கொண்டாட்டங்கள், சடங்குகள் ஆகியவற்றையே அவர் கைக்கொள்கிறார்.  இப்படி பிறப்பு முதல் இறப்புவரை அன்றாடமாக தன் ஆயுட்காலம் வரை- செத்தப் பிறகும்கூட- அவர் நியமம் தவறாமல் செய்துவருவதெல்லாம் தமது முன்னோர்களை அடியொற்றிப் போவதுதான். ஒருவேளை அவர் சுயமாக ஏதாவது செய்வதாக இருந்தால் அது தமது முன்னோர்கள் செய்து வந்தவற்றை செய்யாமல் இருப்பதுதான். சரி, அவர்களது முன்னோர்கள் எவற்றை ஏன் செய்துவந்தார்கள் என்று தேடிப் போனோமானால் தொடக்கத்தில் இனக்குழு சார்ந்த பண்பாட்டைப் பேணிவந்த அவர்கள் பிற்காலத்தில் ஆரியமயப்படுத்தப்பட்ட- வேதவழிப்பட்ட- வர்ணாசிரமம் வலியுறுத்திய மதிப்பீடுகளையும் பழக்கவழக்கங்களையும் பேணிவந்திருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதாகயிருந்தால் அவர்கள் சிந்திப்பதற்கென்று எதையும் வர்ணாசிரமம் மிச்சம் வைக்கவில்லை. தனிமனித அளவிலும் வர்ணம், சாதி ஆகிய குழு நிலையிலும் யார்யார் எதையெதை செய்யவேண்டும் என்கிற சட்டவிதிகளையும் அவற்றை பயின்றொழுகாவிடில் எதிர்கொண்டாக வேண்டிய தண்டனைகளையும் மனுஸ்மிருதி என்கிற பெயரில் வர்ணாசிரமம் தயார்நிலையில் உருவாக்கி வைத்துவிட்டது. ஆகவே வாழ்க்கை வட்டச் சடங்குகள் என்று நாம் கடைபிடிக்கக்கூடியவற்றுள் பெரும்பாலானவை வர்ணாசிரம தர்மத்தினை நிலைநாட்ட உருவான மனுஸ்மிருதியால் திணிக்கப்பட்டவை அல்லது இடையீடு செய்யப்பட்டவை.

பௌத்தத்தை வீழ்த்தி புஷ்யமித்திர சுங்கன் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு நிகரானதொரு கொண்டாட்ட மனநிலையை பார்ப்பன மேலாதிக்கவாதிகள் பாரதிய ஜனதாவின் இப்போதைய ஆட்சி ஏற்பட்டதிலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலனியாட்சிகள், பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவம், குடியாட்சி முறை, மார்க்சீயம் பெரியாரியம் அம்பேத்கரியம் ஆகியவற்றின் குறுக்கீடுகளால் சாதியத்தில் ஏற்பட்ட சின்னஞ்சிறு மாற்றங்களைக்கூட அடித்துநிரவி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுபோக அவர்கள் அஞ்சத்தக்க வேகத்தில் பணியாற்றி வருகிறார்கள். பார்ப்பன மேலாதிக்கவாதிகள் அரசியல்ரீதியாக தமக்கு கிடைத்துள்ள வெற்றியை பண்பாட்டு மேலாதிக்க வெற்றியாக மாற்றிக் கொள்வதற்காக  மேற்கொண்டு வரும்  முயற்சிகள் வெற்றிபெறுமானால் இந்தியச் சமூகம் கடந்தகாலத்தின் இருளுக்குள் மூழகடிக்கப்பட்டுவிடும் என்கிற அபாயத்தை முன்னுணரும் கூருணர்ச்சி கொண்ட அரசியல் விலங்குகளாக  எழுத்தாளர்கள் மாற வேண்டியுள்ளது.
 
இந்த வரலாற்றுப் புரிதலோடும் காலம் தனக்கு வழங்கியுள்ள பாத்திரத்தை நேர்மையாக வகிக்கும் ஆர்வத்தோடும் தமது சொந்தவாழ்வை உற்றுப் பார்க்கும் உதயசங்கர் இன்றைய நவீனகாலத்திற்குரிய அரசியல் பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிரானதொரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் அவலத்தை உணர்கிறார். பொருள்வயமான புறவாழ்க்கை நவீனம் சார்ந்ததாகவும் கருத்தியல்ரீதியான அகவாழ்க்கை பழமைவாதமாகவும் இருக்கிற இரட்டை நிலையையும் அதை வெளிக்காட்டாது மறைக்கிற போலித்தனத்தையும் கண்டு நாணுறுகிறார். அதுகுறித்த குற்றவுணர்ச்சியும் சுய ஒப்புதலும் விடுபடும் தவிப்பும் எத்தனமும் கொண்டவராக மாறுகிறார். மனுஸ்மிருதியால் குறுக்கீடு செய்யப்படாத தனது கடந்தகாலத்தைத் தேடியலைவதற்கு பதிலாக மத, சாதிய, பால்நிலை சார்ந்த சாய்மானங்களில் இருந்து விடுபட்டு கருத்தியல்ரீதியாக நவீனமானதொரு மனிதராக மாறுவதற்கான போராட்டத்தை தனக்குள்ளிருந்து தனக்கெதிராகவே தொடங்குகிறார். அந்தப் போராட்டத்தினூடாக தான் எதிர்கொண்ட அனுபவங்களையும் யோசனைகளையும் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் அவரது விழைவிலிருந்து உருவான இக்கட்டுரைகள் அவற்றின் மெய்த்தன்மையின் பலத்தால் வாசக மனதையும் தன்னிலை குறித்து யோசிக்கத்தூண்டுபவை.  

ததும்பும் தோழமையோடு
ஆதவன் தீட்சண்யா
22.10.2015, ஒசூர்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக