சனி, பிப்ரவரி 20

மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் - ஆதவன் தீட்சண்யா



அமைதியின்மையின் கொடுவெள்ளம்
அடித்துச் செல்கிறது என்னை
ஊனுறக்கமழித்து உளைச்சலாகி வாட்டும்
பதற்றத்தின் பேரலையோ
அலைக்கழிக்கிறது ஆணிவேரையும்

தீராப்பழி சுமத்தி திணறடிக்கும் சர்ச்சைகளால்
சிதறடிக்கப்படுகிற எனது ஆளுமை
வதந்திகளின் நஞ்சேறி சிறுமையுறுகிறது
அவமதிப்புகளும் அவதூறுகளும்
இற்றுவிழச் செய்கின்றன
எனது பற்றுக்கோல்களை

முகாந்திரமின்றி
ஒவ்வொரு நாளின் நள்ளிரவிலும்
முற்றுகையிடப்படும் என் வீட்டை
எந்த நேரத்திலும் தகர்த்துவிட
குறிவைத்து காத்திருக்கின்றன படையணிகள்

வெடித்துச் சிதற
என்னையன்றி என்னிடம்
எதுவுமேயில்லையெனத் தெரிந்திருந்தும்
சுற்றி வளைத்து இழுத்துவரப்பட்ட நான்
கைகளை விரித்து கால்களை அகட்டி
நிர்வாணமாகவே நிறுத்தப்பட்டிருக்கிறேன்
சோதனைச்சாவடியில்
ஓரடியும் அசையவொட்டாது
என் பாதங்களைப் பொசுக்குகிறது
நடமாட்டத்தைக் கண்காணிக்கும் தீக்கண்

என் எழுதுமேசையில் கிடக்கும் வெற்றுத்தாள்களில்
என்னதான் எழுதவிருக்கிறேன் என
விளக்கும் கேட்டு வதைக்கும் தணிக்கைச் சட்டம்
துரோணருக்கு வெட்டிக்கொடுத்தது போக
மிச்சமிருக்கும் ஒன்பதுவிரல்களையும்
காவு கேட்கிறது

எப்போதும் ஏதாவதொன்றுக்கான விசுவாசத்தை
நிரூபித்துக்கொண்டேயிருக்கும்படியான அவலத்தை
கனவில் துடித்தரற்றிய குற்றத்திற்காக
அறுத்து வீசப்படவிருக்கும் என் நாக்கை
கவ்விப்போக தவித்திருக்கிறது நாய்க்கூட்டம்

ஆதிப்பெருவெடிப்பின் கங்குகளை
எரிமலையாய் பதுக்கியதோடு
சூரிய சந்திர ஒளியைத் திருடுவதாயும்
காற்றைக் கடத்துவதாயும்
தேமலைப்போல் பரவும் என் நிழலால்
பூமியின் வனப்பைக் கெடுப்பதாயும்
வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ்
அடுத்தடுத்து புனையப்படுகின்றன பொய்வழக்குகள்

புராதன கற்கோடாரி அல்லது நீதிபதியின் சுத்தியலால்
சட்டரீதியாய் நான் கொல்லப்பட்ட பிறகு
ஊடகங்களில் விவாதிப்பதற்கென
மிச்சமிருக்கிறது ஒரு கேள்வி:
இன்னமும் என் ரத்தம்
எப்படி சிவப்பாகவே இருக்கிறது
அல்லது
ஏன் காவியாய் மாறவில்லை?

19.02.2016

நன்றி: தீக்கதிர் நாளிதழ் : 20.02.2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...