சனி, மே 28

நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் - ஆதவன் தீட்சண்யா


முகப்போவியம்: அன்புத்தோழன் கார்த்தி

சந்தியா பதிப்பகம் வெளியிடவிருக்கும் 
எனது நான்காவது சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை. 
 

துஷ்டக்கதைகள் 

காணும் யாவிலும் கதைகள் கொழித்திருந்தும், கண்ணுற்று எழுதுவதுதான் அரிதாகிப் போகிறது எனக்கு. இதை எழுதிவிட வேண்டும் அதை விட வேண்டும் என்று முதலில் பரபரப்பதும் பின் எழுதத்தக்கவையா இவையென யோசித்து கைவிடுவதுமாக வாசகர்களுக்கு என்னாலான நன்மை செய்கிறவனாயிருக்கிறேன். வாசகர்களின் கண்ணில் பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதித்தொலைக்கும் அவசியமும் இல்லைதானே? ஆகவே, ஆமை ஆமைகளோடும் முயல் முயல்களோடும்  போட்டியிட்டால் போதுமானது என்கிற மனப்படிவில் என் சுபாவத்திற்கு இசைந்ததென உணரும் கதையை மட்டும் எப்போதாவது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இவ்வளவு அற்புதமான உலகத்தில் / தேசத்தில் / ஊரில்/ குடும்பத்தில் நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று மனிதர்களை குற்றவாளிகளாக்கி அவர்களை நல்வழிப்படுத்தும் ‘நீதிபோதனை’க் கதையொன்றை நான் எழுதாமலிருக்கக் காரணம் அவை அப்படியொன்றும் அற்புதமானவையல்ல என்பதுதான். அடக்கஒடுக்கமாக, அன்பு மழை பொழிந்து, காதலால் கசிந்துருகி கருணையால் நெக்குருகி, ஓடியாடி சம்பாதித்து குழந்தைக் குட்டிகளைக் காப்பாற்றுகிற குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் ஏற்கனவே தமிழ்க்கதைப் பரப்பெங்கும் மலிந்து உலவுவதால் அந்த புளித்தமாவு தோசையை சுடவேண்டாம் என்றும் ஒதுங்கி விடுகிறேன். நம்மையொத்த சாமானிய மனிதர்களை எதிரெதிர் பண்புநலன் கொண்ட கதாபாத்திரங்களாக்கி முட்டி மோதவிட்டு  மூக்கைச் சிந்தி நாக்கைத் துருத்தி நவரசங்களோடும் கூடிய கதையொன்றை இதுவரை நான் எழுதாமல் போனதற்கான காரணத்தை பின்னாளில் எப்போதேனும் நானோ நீங்களோ கண்டுணரக்கூடும். வாசகரின் ஆழ்மனத்தில் உறைந்திருக்கும் மனிதாயப் பண்புகளை கிளர்த்திவிடும் சிலிர்ப்புடன் கூடியதொரு கதையை என் வாழ்நாளில் எழுதவே முடியாதென்று ஆணித்தரமாக நம்புகிறேன். படிக்கத் தொடங்கியதும் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர்மல்கி விடுமானால் மீதிக்கதையை எப்படி படிப்பார்கள் என்று வாசகர்கள் மீதுள்ள அக்கறையினாலேயே நான் அவ்வாறான கதைகள் எழுதுவதை தவிர்த்துவிடுகிறேன்.

துக்கத்தில் தோய்த்து ஆளை அப்படியே உலுக்கிவிடுகிற, கொண்டாட்டத்தில் திளைக்க வைக்கிற அல்லது கோபத்தில் துடிக்க வைக்கிற கதைகளை வாசிப்பவர்களுக்கு என் கதையின் ஓரெழுத்து கூட உவப்பாய் இல்லாததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அமரத்துவம் வாய்ந்த மகத்தான வரிகளைத் தேடியலையும் அதிமேன்மை ரசனையாளராக, வாழ்வின் உன்னதங்களையும் நெகிழ்ச்சியான தருணங்களையும் கண்டு துய்ப்பவராக காட்டிக்கொள்ள விழையும் எவராலும் தீண்ட முடியாதவையாக என் கதைகள் இருக்கவேண்டுமென நெஞ்சார விரும்புகிறேன். ஒரு கதையிலிருந்து மறுகதைக்கு அதிலிருந்து அடுத்தக்கதைக்கு என வாசிப்பின் உற்சாகத்தை வடியவிடாமல் இழுத்துச் செல்லும் போக்கானது, தெளிவதற்கு முன்பாகவே அடுத்தடுத்தும் கோப்பையை நிரப்பிக்கொடுத்து ஒருவரை நிரந்தர போதைக்குள் ஆழ்த்தி காசு பறிக்கும் சாராய வியாபாரியின் மலிவான தந்திரத்தைவிட எள்ளளவும் மேன்மையானதல்ல.

புராணம்,  இதிகாசம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை என்று  எதிலிருந்தாவது உருவியெடுத்து சாயம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டி பளபளவென புதுசு போலாக்கும் நுட்பத்தை நீ அறிந்துகொள்ளாத வரை, பழம் பெருமை வாய்ந்த இலக்கிய மரபில் ஒரு கதையைக்கூட உன்னால் எழுதவே முடியாது என்று யாரோ விட்ட சாபம் என்னை என்றென்றும் ஆசீர்வதித்துத் தொடர்கிறது. எனவே நான் துஷ்டக்கதைகளை எழுதுகிறேன்- ஆறடியோ ஆறுபதடியோ தூரந்தள்ளிப் போகுமாறு ஆசாரச்சீலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனக்கான வாழ்க்கையை எவரின் பொருட்டு எவ்வாறாக வாழ கட்டுப்படுத்தப்பட்டுள்ளேன் என்கிற கேள்வி ஆன்மீகம் தொடர்பானதல்ல, அரசியல்மயமானது. என் கதைகள் இந்தக் கேள்வியிலிருந்து பிறக்கின்றன அல்லது இந்தக் கேள்வியை பிறப்பிக்கின்றன.

- புத்தர் மனிதராக பிறந்த நாள் 21.05.2016
ஒசூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...