சகோதரி யோகி எடுத்த இந்நேர்காணல் மலேசியாவின் தென்றல் வார இதழில் (6.11.2016) வெளியாகியுள்ளது.
1.மலேசியாவுக்கு இது உங்களின் நான்காவது பயணம். இந்த நாட்டைப் பற்றிய உங்களது பார்வை என்ன?
நான்கு முறை வந்திருக்கிறேன் என்றாலும்
ஒரு நாட்டைப் பற்றி அபிப்ராயம் சொல்லுமளவுக்கு இங்கு எதையும் உற்று கவனித்திருக்கிறேனா
என்கிற சந்தேகம் எனக்குள்ளது. அழைத்துவந்த
நண்பர்கள் கூட்டிப்போகும் இடங்களையும் மனிதர்களையும் பார்த்தேன் என்பதன்றி சுயேச்சையாக
நான் எதையும் யாரையும் பார்க்கவில்லை என்கிற உண்மையை கணக்கில்கொண்டால் இந்த சந்தேகம்
சரியெனவேப்படுகிறது. ஆனால் எடுத்தயெடுப்பில் சொல்வதானால், மிக அழகான இயற்கையமைப்பைக்
கொண்டதாக தெரிகிறது மலேசியா. எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும் சாப்பாட்டுக்கடைகள்,
அவற்றில் நிரம்பி வழியும் கூட்டம், வகைவகையான உணவுவகைகளையும் பானங்களையும் கொண்டாடி
உண்ணும் ரசனை, ஒருவரை பார்த்ததும் ‘பசியாறியாச்சா?’ என்று விசாரிக்கும் உபசரணை என்று
எனக்கு பிடித்த விசயங்கள் அநேகம் உள்ளன.
தலைநகரத்திலும் நாடு நெடுகிலும் அகன்று
நீண்டிருக்கும் நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், தொடர்வண்டிப்பாதைகள், கார் உள்ளிட்ட வாகனங்கள்,
விண்ணை முட்டும் கட்டிடங்கள், பிரமிப்பூட்டும் வணிகப் பெருவளாகங்கள் ஆகியவையெல்லாம்
ஒரு நாட்டின் வளர்ச்சியைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டால் உங்கள் நாடு வளர்ந்திருக்கிறது
என்றே சொல்லவேண்டும். ஆனால் இந்த வளங்கள், சொத்துகள், கட்டமைப்புகள், வசதிகள், அதிகாரங்கள்
போன்றவற்றை நீதியாக பகிர்ந்துகொள்வதை நோக்கி உங்கள் சமூகம் இன்னமும் முன்னேறவில்லை
என்றே சொல்லத் தோன்றுகிறது. அதற்கான கருத்துருவாக்கம் மற்றும் செயலாக்கத்தில் அக்கறையோடு
ஈடுபடும் அமைப்புகளைக் காண்பதும் அரிதாகவே இருக்கிறது.
பொதுவெளியில் பெண்களின் நடமாட்டத்தை
பெருமளவில் காணமுடிகிறது. இது பெண்கள் சுயேச்சையாக தேர்ந்துகொண்டதா அல்லது பெருகிவரும்
வாழ்க்கைச் செலவினங்களை ஈடுகட்டும் வகையில் குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்கான கட்டாயத்தில்
ஏற்றுக் கொண்டதா என்பதை நீங்கள்தான் சொல்லமுடியும்.
பல்லினங்கள் வாழும் மலேசியச் சமூகத்தில்
அவ்வவற்றுக்குள்ளும் அவற்றுக்கிடையிலுமான இணக்கமும் பிணக்கும் எவற்றின் அடிப்படையிலானது, அவற்றினூடாக உங்கள் சமூகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது
என்றெல்லாம் சொல்வதற்கு எனது விருந்தாளிப் பயண அனுபவங்கள் போதுமானவையல்ல.
2. சிறுகதை, கட்டுரை, கவிதைகள், புதுவிசை ஆசிரியர் குழுவில் அங்கம் என தொடரும் உங்கள் பணிகளில் பேச்சாளராகவும் களப்போராளியாகவும்
இருக்கீங்க. எழுதுவதற்கும் களத்தில் இயங்குவதற்குமான செயற்பாட்டை குறித்து சொல்லுங்க.
பேச்சாளர் என்ற வகைமைக்குள் நான் வரமாட்டேன்.
எனது அனுபவங்களையும் படித்து உள்வாங்கியவற்றையும் பகிர்ந்து கொள்வதிலும் அது சார்ந்து
உரையாடுவதிலுமே நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். களப்போராளி என்று குறிப்பிடும்படியாகவும்
நான் எதையும் செய்து கொண்டிருக்கவில்லை என்கிற அப்பட்டமான உண்மையை உங்கள் வழியாகவாவது
சொல்லிவிட வேண்டுமென நினைக்கிறேன். அதிகாரம், அடக்குமுறை, மனிதவுரிமை மீறல் எங்கெங்கு
நடந்தாலும் தலையிலே தீப்பிடித்துக் கொண்டாற்போன்ற பதற்றத்துடன் களத்திற்கு செல்கிற
போராளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவம், அவர்களுக்கு தாங்கள்தான் போராளிகள் என்று
சொல்லிக்கொள்ள தெரிவதில்லை அல்லது உரிமை கோர அவர்கள் விரும்புவதில்லை. அவர்களது நேரடிப்
போராட்டங்களைப் பற்றி எப்போதாவது எழுதுவதாலோ என்னவோ என்னைப் போன்றவர்களுக்கு களப்போராளி என்கிற பட்டம் சிரமமின்றி இலவசமாக கிடைத்துவிடுகிறது.
வருடத்தில் 52 ஞாயிற்றுக்கிழமைகள்,
12 நாட்கள் தற்செயல் விடுப்பு, 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 15 நாட்களுக்கு அரைச்சம்பள
விடுப்பு, 17 நாட்கள் பொதுவிடுமுறை என்று எவ்வித
வருமான இழப்புமின்றி ஊர் சுற்ற கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாக நான் பயன்படுத்திக்
கொள்கிறேன். வார ஓய்வுநாள் அல்லது விடுமுறை நாட்களில் மிக அரிதாகவே வீட்டில் இருப்பேன்.
(மற்ற நாட்களில் வீட்டில்தானே இருக்கிறேன்?). இலக்கிய அமைப்புகள் அல்லது மக்கள் இயக்கங்களின்
நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குறைந்தபட்சம் வாரத்தில் ஒருநாளாவது வெளியூர்களுக்கு
சென்றுவருகிறேன். அவ்வளவுதான். தமிழ்நாட்டின் போக்குவரத்து நிலைமைகளை அனுசரித்துப்
போய் நிகழ்வுகளில் பங்கெடுத்துவிட்டு திரும்புவதில் ஏற்படும் அற்பச்சிரமங்களை சிலர்
களப்போராட்டம் என்று மிகைப்படுத்தி அலட்டிக்கொள்கிறார்கள். பயணம் போவதையும் நிகழ்வுகளில்
பங்கெடுப்பதையுமே போராட்டம் என்பதாக புரிந்துகொண்டிருப்பவர்கள், அதில் ஏற்படும் சில
அசௌகரியங்களைப் பொறுத்துக்கொள்வதையே தியாகம் போல கற்பிதம் செய்து கொள்கிறார்கள். என்னைப்
பொறுத்தவரை, புதிய நிலப்பரப்புகளையும் மனிதர்களையும் அனுபவங்களையும் தருகிற பயணங்களும்
சந்திப்புகளும் உவப்பானவை. இப்படி ஊர் சுற்றகிற நேரத்தில் உட்கார்ந்து உருப்படியாக
எழுதலாம்தானே என்று கேட்கலாம். உருப்படியாக எழுத வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம்
நான் எழுதவதற்கே முன்னுரிமை கொடுத்துவருகிறேன். தவிரவும், உருப்படியில்லாத வேலைகளுக்கென்று
நான் ஊர் சுற்றுகிறவனுமில்லை.
நூற்றாண்டைத் தாண்டி வளரும் ரப்பர் மரத்தினடியில் |
3. இதற்கு முன்பு மலேசிய இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த நீங்கள்
இம்முறை ‘சாதியம் அறிவோம்-துறப்பதற்கு’ என்று உரை நிகழ்த்த வந்தீர்கள். மலேசியாவில்
இம்மாதிரியான உரை நிகழ்த்துவதற்கான காரணம் என்ன?
தமிழ்நாட்டிலிருந்து காலனியர்களால் கப்பலிலும்
பன்றிப்படகுகளிலும் அள்ளிப்போட்டு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உலகின் பல நாடுகளுக்கும்
தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டு கொடியச் சுரண்டலுக்கு
ஆட்படுத்தப்பட்டதற்கு பின்புலமாக இருப்பது சாதியமே. சொந்தபந்தங்களையும் பிறந்த மண்ணையும்
விட்டுவிட்டு வரமுடிந்த இவர்களில் தாயகத்தோடு இன்னமும் தொடர்பினை பேணி வருகிறவர்களால்
நூற்றாண்டுகளைக் கடந்தும் சாதியை விட்டுவிட முடியவில்லை என்பது பேரவலம்தான். பெருந்தோட்டங்கள்,
பணப்பயிர் சாகுபடி, சுரங்கங்கள், கட்டுமானம் ஆகியவற்றுக்காக கொண்டுவரப்பட்ட விதம்,
பணியிடச்சூழல், வாழ்விடம், வருமானம், சுரண்டல், ஒடுக்குமுறை, இனப்பாகுபாடு உள்ளிட்டவை
இவர்கள் அனைவருக்கும் பொதுவானவை தான் என்றாலும் அவற்றுக்கூடாக இவர்கள் சாதியுணர்வை
கைவிடாமல் பேணிவருகிறார்கள். தாயகத்தில் சொந்த ஊர் எதுவெனத் தெரியாதவர்கள்கூட தமது
சாதியை சந்தேகத்திற்கிடமற்ற வகையில் அறிந்துவைத்திருக்கிறார்கள். இவர்கள் தமக்கென உருவாக்கிக்கொண்ட
கட்சிகள், தொழிற்சங்கங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றில் சாதியமே தீர்மானிக்கும் சக்தியாக
இருக்கிறது என்பதை இங்கள்ள நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கெதிராக ஆயுதமேந்திப் போராடிய மலேசிய கம்யூனிஸ்ட் படையினருக்கு சிகிச்சையளித்து, ஜப்பானியரின் சிறைக்கொடுமைகளுக்கு ஆளான Sybil Medan Kathigasu அவர்களின் நினைவிடம், இபோ |
தமிழ்நாட்டிலும் இந்தியாவெங்கிலும் கடைபிடிக்கப்படுவதைப்
போன்ற தீண்டாமைகளையோ வன்கொடுமைகளையோ இவர்கள் கைக்கொள்வதில்லை என்றாலும் பெரும்பாலும்
சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதன் மூலம் சாதியை மறுவுற்பத்தி செய்துவிடுகிறார்கள்.
மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது குறைவான விகிதத்திலேயே நடக்கின்றன என்றாலும், புலம்பெயர்
நாடுகளின் பூர்வகுடியினர்/ வேறு இனத்தவர் / நாட்டவர் அல்லது ஒருவேளை சாதிக்கு வெளியே
திருமண உறவு ஏற்படுமாயின் அதை கலவரம் அல்லது கௌரவக்கொலையாக மாற்றாமல் கடந்துபோகிற ஒரு
பக்குவத்தை எட்டியிருக்கிறார்கள். அடிப்படையில் தொழிலாளிகளாகிய இவர்களைத் தொடர்ந்து
இன்னுமொரு தொகையான தமிழர்கள் வியாபாரம் அல்லது பெருநகரம் சார்ந்த நவீனத்தொழில்களுக்கான
வேலைகளுக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களனைவரும்
புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை சிறுபான்மைச் சமூகத்தவர்தான். சிறுபான்மைச் சமூகமாக
இருக்கக்கூடிய தமிழர்கள் புலம்பெயர் நாட்டின் குடிமக்கள் என்கிற வகையிலான உரிமைகளுக்காகவும்
வாழ்வியல் நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் தமக்குள்ளும், பிற இந்தியர்களோடும் ஒன்றுபட்டு
குரலெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் தொடர்ந்து இருத்தப்பட்டுள்ளனர் என்பதை என்னைவிடவும்
நீங்கள் நேரடி அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள்.
இவ்வளவுக்கிடையிலும் தாயகத்தொடர்பை பேணும்
விதமாகவும் தமது சுயேச்சையான வளர்ச்சியை தாயகத்திற்கு தெரிவிக்கத் தோதாகவும் தமிழகத்திலிருந்து
கலை இலக்கியவாதிகளையும் சமூக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் ஆளுமைகளையும்
தங்களிடத்திற்கு அழைத்து உபசரித்து உரையாடி வருவதை தொடர்கின்றனர். ஆனால் சமீப காலமாக,
தமிழகத்தில் மிகக்கொடிய சாதிய வன்கொடுமைகளை நிகழ்த்தி சமூகத்தை பதற்றத்தில் மூழ்கடித்து
வருகிற அமைப்புகளின் தலைவர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்து தங்கள் சாதியினரை அணிதிரட்டி
உசுப்பேற்றும் சீர்குலைவு வேலைகளில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சமூக நல்லிணக்கத்திலும்
ஒற்றுமையிலும் அக்கறையுள்ள பல நண்பர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்த ஆபத்தை தடுப்பதற்கான
தொடக்கநிலை முயற்சிகளில் ஒன்றாக மணிமொழி ஏற்பாடு செய்த சாதியம் குறித்த விவாதத்தில்
பங்கெடுக்க வந்தேன். நான் நினைத்துக்கொண்டு வந்ததைவிடவும் கேடான விதங்களில் இங்கு சாதியவாதிகளின்
கைங்கர்யம் இருப்பதை உரையாடல்களினூடாக உணர்ந்து கொண்டேன்.
இபோவிலுள்ள ஈயத்தொழில் அருங்காட்சியகத்தில் |
4. மலேசியத் திராவிடர் கழக ஏற்பாட்டில்
நடந்த கருத்துக்களத்திலும் கலந்துகொண்டீர்கள். மலேசியத் திராவிடர் கழகத்தினரின் திராவிடக்
கொள்கைகள் அல்லது அவர்களின் திராவிட புரிதல்கள்
ஏற்புடையதாக இருக்கிறதா?
அவர்களோடு இதுகுறித்து நான் அவ்வளவாக
எதையும் உரையாடவில்லை. திராவிடம் என்கிற சொல் ஆரியர்களுக்கும் முன்பே இந்தியாவிற்குள்
வந்த ஓர் இனம், பூர்வகுடிகளாகிய நாகர்களோடு கலந்து உருவாக்கிய ஒரு பண்பாட்டைக் குறிக்கிறது.
பெரியார் ஒரு புகைப்படமோ சிலையோ டிரஸ்டோ அல்ல, ஆரிய வழிப்பட்ட வேதங்கள், யாகங்கள்,
பூஜைபுனஸ்காரங்கள், பார்ப்பனீயக் கருத்தியலை உள்ளுறையாகக் கொண்ட சாதியம், சாதியத்தின்
தொகுப்பாக இருக்கிற இந்துமதம் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு கருத்தியல்.
தமிழர் என்பதற்கு மறுசொல்லாகவோ அல்லது
இணையாகவோ இந்து என்கிற சொல் மலேசியத் தமிழர்களால் பாவிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து
மலேசியாவுக்கு வந்துள்ள முஸ்லிம்களை இந்து முஸ்லிம் என்றே சுட்டுமளவுக்கு அதன் பயன்பாடு
விரிகிறது. மேலும் இந்து என்பது வெறும் சொல்லாக சுருங்கிவிடாமல் சாதி, சடங்குகள், பரிகாரப்
பூஜைகள், மூடநம்பிக்கைகள், அவற்றை முன்னிட்ட பணவிரயம் நேரவிரயம் என்பனவாக தமிழர்களின்
மனங்களில் தங்கி அவர்களது அன்றாட வாழ்வை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. ஒருவர் கோவிலுக்குள்
நுழையும் போதே ஒரு வழிபாட்டிடம் என்கிற வகையில் அங்கு நிலவும் பாகுபாடுகள், புறக்கணிப்புகள்,
ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றுவேலைகள் அனைத்தையும் ஒப்புக்கொள்வதாக மாறிவிடுகிறது. அதன்
நீட்சியாக சமூகத்தில் நிலவும் பாரபட்சங்களையும் இயல்பானதாக ஏற்றுக்கொள்வதற்குரிய மழுங்கல்தான்மை
புத்தியில் படிந்துவிடுகிறது. திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் குறுக்கீடு செய்யவேண்டிய
இடம் இதுதான் என்பதை சொன்னேன். கலந்துரையாடலின் போது மிகுந்த அக்கறையோடு எழுப்பப்பட்ட கேள்விகள், நாத்திகம் என்பது பகுத்தறிவின்
ஒரு பகுதிதானேயன்றி அதுவே முழுமையானதல்ல என்று
விவாதத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தின.
5. இலக்கியத்திற்காக கொடுக்கப்பட்ட அல்லது கொடுக்கப்படும் விருதுகள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதும்
விருதுகளை மறுதளிப்பதும் அதை நகைப்பு ஆக்குவதும்
தொடர்கிறதே? விருதுகளின் தாத்பரியம்
என்ன?
இந்த தொங்குபாலத்தின் சங்கிலியில் "காதலுக்காக" நேர்ந்து கட்டப்பட்டுள்ள பூட்டுகள் |
விருதுகளை இலக்கிய ஆர்வமுள்ள சில நிறுவனங்கள்/
பத்திரிகைகள்/ அரசின் கீழுள்ள கலை பண்பாட்டுத்துறையால் நிர்வகிக்கப்படும் அமைப்புகள்
வழங்குகின்றன. இதற்கான தேர்வுக்குழுக்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, அவற்றில் இடம்பெறுவதற்கான
அடிப்படைத் தகுதிகள் எவை என்பதெல்லாம் மூடுமந்திரம்தான். பலநேரங்களில் தேர்வுக்குழு
நியமனத்திலேயே ஊழல் தொடங்கிவிடுகிற போது, அந்தக்குழுவின் பரிந்துரை எந்தளவுக்கு நடுநிலையானதாக
இருக்கமுடியும்?
பொதுவாக மூத்த / பிரபல எழுத்தாளர்கள்,
பேராசிரியர்கள்/ விருது வழங்கும் நிறுவனத்திற்கு வேண்டியவர்களைக் கொண்டே விருது தேர்வுக்குழுக்கள்
அமைக்கப்படுகின்றன. இவ்வாறான எந்தவொரு குழுவும், குறிப்பிட்ட துறையில் வெளியான அத்தனை
நூல்களையும் நுணுகிப் பரிசீலித்து விருதுக்கு பரிந்துரைப்பதில்லை. விருதுக்கென அனுப்பி வைக்கப்படுகிறவற்றில்
இந்த தேர்வுக்குழுவினர் தமது அப்போதைய மனச்சாய்வுகளுக்கு இயைபான நூலுக்கு அல்லது எழுத்தாளருக்கு
வழங்கப்படுகிறது. மனச்சாய்வை பால், சாதி, மதம், பிரதேசம், அரசியல் போன்ற காரணிகள் உருவாக்குகின்றன.
எனவே எழுத்தை விடவும் பலநேரங்களில் எழுத்தாளரே பரிசீலிக்கப்படுகிறார். ஆகவே, இன்னாரிடம் நைச்சியமாக இளித்துக்கிடந்தால்
எதிர்காலத்தில் ஏதாவதொரு விருதுக்கு பரிந்துரைக்கப்படுவோம் என்று தனிப்பட்ட தொடர்புகளைப்
பேணுவது, போலியாக விசுவாசம் காட்டுவது, இந்த
மூத்த / பிரபல எழுத்தாளர்களின் அபத்தக் கிறுக்கல்களைக்கூட ஆஹாஓஹோவென பாராட்டித் தள்ளுவது,
பேராசிரியர்களின் சாரமற்ற ஆய்வுகளை நுண்மான் நுழைபுலம் மிக்கது எனப் புகழ்வது போன்ற
கொல்லைப்புற வழிகளை சில எழுத்தாளர்கள் கையாள்வதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தேர்வுக்குழுவினரை
கண்ணி வைத்துப் பிடித்தோ குழுவிலிருப்பவரே சக உறுப்பினர்களை தமக்கு சாதகமாக வளைத்தோ
தான் ஒருவருக்கு விருது தரப்படும் என்றால் அதன் மதிப்பு அந்தளவுக்கானதுதான் என்று ஒதுக்கிவிட்டுப்
போகவேண்டியதுதான். விருதுகளால் சம்பந்தப்பட்ட
எழுத்தாளர் அல்லது நூல் மீது வாசகர்களின் கவனம் குவிவது போல தோன்றினாலும் உண்மையில்
அவர்கள் சொந்த வாசிப்பின் மூலமே அதன் இலக்கியப் பெறுமதியை தீர்மானிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக