வியாழன், ஜனவரி 12

வெறும் பதிவு என்ன வெங்காயத்துக்கு? - ஆதவன் தீட்சண்யா

தோழர். எஸ்.ஜி.ரமேஷ்பாபுவின்
"பிறிதொரு பொழுதில்" - கட்டுரைத்தொகுப்புக்கான முன்னுரை

தனது அறிவு, திறமை, கல்வி, ஆர்வங்கள் வழியாக சொந்த வாழ்வை பொருளாதாராரீதியாக மேம்படுத்திக் கொள்வதே இங்கு வாழ்வின் ஆகப்பெரும் லட்சியமாக முன்னிறுத்தப்படுகிறது. அதற்காக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கையாளப்படும் கீழ்த்தரமான உத்திகள் யாவும் முன்னேறுவதற்கான வழிகள் எனக் கொண்டாடப்படுகின்றன. சம்பாதனை, சொத்து, சொகுசுகள், பிரபலம், அதிகாரம் மட்டுமே வாழ்க்கை என்கிற இந்த செக்குமாட்டுத்தனத்தை புறந்தள்ளுவதற்கு ஒரு மனோதிடம் தேவைப்படுகிறது. அவ்வாறு விலத்தியடித்துவிட்டதற்கு பிறகு மேற்கொள்ளும் புதிய வாழ்வில் ஒன்று நீங்கள் துறவியாகலாம் அல்லது அரசியல் ஊழியராகலாம். துறவியானவர் எவற்றையெல்லாம் துறந்திருக்கிறார் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, அவர் அவருக்காக மட்டுமே வாழ்கிறவராக தேங்கிப்போய்விடுகிறார். அந்தவகையில் அவர் சுயநலத்தை முன்னிறுத்தி அலைகிறவர்களுக்குள் ஒரு தனிவகையானவர். மற்றபடி எவ்வகையிலும் வேறுபட்டவரில்லை. மட்டுமல்ல, வாழ்க்கை முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளும் மனத்துணிவற்று ஒதுங்கி தப்பித்துப்போகிறவருமாகிறார். இந்த அம்சங்களிலிருந்துதான் ஓர் அரசியல் ஊழியரது வாழ்க்கை வேறுபடுகிறது.

ஆனால் துறவைப்போலவே அரசியலும் வெகுவாக பாழ்பட்டுப் போயிருக்கிறது  என்கிற புகாரில் நூறுசதவீதத்திற்கும் மேலான உண்மை இருப்பதுபோல ஒரு தோற்றமுள்ளது. சாமியார்களை துறவிகளென தப்பர்த்தம் செய்துகொள்வது போலவே மக்களை அதிகாரம் செய்து பொறுக்கித் தின்று வயிறு வளர்ப்பதே அரசியல் என்று தவறாக விளங்கிக்கொண்டதனால் வருகிற புகாரிது. நாம் சொல்கிற அரசியல் என்பது மக்களுக்கு ஊழியம் செய்வது. அதாவது ஒடுக்கப்படுகிற, அதிகாரமற்ற, சமகால வாழ்வுக்குரிய வாய்ப்புகள் மறுக்கப்படுகிற மக்களைத் திரட்டி அரசியல்படுத்திப் போராடுவதும் முன்னேறுவதுமாகும். அதற்காக தனது அறிவு ஆற்றல் அனைத்தையும் முழு விருப்பத்துடன்  எவ்வித ஆதாயத்திற்காகவும் அல்லாமல் செலவிடுவது. அதன்பேரில் தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதிப்புகளை தாங்கிக்கொள்வது. அந்த அர்த்தத்தில் ரமேஷ்பாபு ஓர் அரசியல் ஊழியர். மாணவப்பருவம் தொட்டு இவ்வாழ்வை அவர் விரும்பி தேர்ந்து களப்பணியாற்றி வருகிறார்.

களப்பணி என்பது ஊர்ஊருக்கு அலைவதல்ல. பாதுகாப்பான அரங்குகளில் அல்லது மேடையில் ஏறி மக்களுக்கு எதிர்த்திசையிலிருந்து உரைவீச்சோ உபன்யாசமோ நிகழ்த்துவதுமல்ல. குறிப்பிட்ட ஊரில் / ஊரின் குறிப்பிட்ட பகுதியில் மக்களோடு கலந்துறவாடி அவர்களது பிரச்னைகளைக் கண்டறிந்து அவர்களது மொழியில் கோரிக்கைகளை உருவாக்கி அவற்றை அடைவதற்கான சக்திமிக்கப் போராட்டங்களை உடனிருந்து நடத்துவது என்பதே களப்பணி. இந்த நிகழ்முறையினூடாக மக்களை அமைப்பாக்குவதும் களப்பணியின் ஓரம்சம். இந்த அனுபவங்களை எழுத்தாக்கியதன் மூலம் ரமேஷ்பாபு களப்பணிக்கு கூடுதல் பரிமாணத்தை வழங்கியிருக்கிறார்.

உலகமயமாக்கம் என்பது பசப்பான அடைமொழிகளுடன் அமலாகிக் கொண்டிருக்கும்  அப்பட்டமான கொள்ளை என்பதன்றி வேறில்லை. அது அரசு  மற்றும் உள்ளூர் அடியாள்பட்டாளத்துடன் இந்த நாட்டின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் மக்களின் பாரம்பரிய வாழ்வாதரங்களையும் ஒருசேர சூறையாடி வருகிறது. கடற்கரையை பன்னாட்டு நிறுவனங்கள் கோலோச்சும் ஒரு திறந்தவெளிச்சந்தையாக  மாற்றும் அரசின் ‘வளர்ச்சி மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள்’ கடும் அழிமானங்களை உருவாக்க வல்லது. கடல்சார் பூர்வகுடிகளான மீனவச்சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் கடல்வளம், கடற்கரை மீது  அவர்களுக்குரிய பாரம்பரிய உரிமைகளையும் பறிக்கக்கூடியது. இதுகுறித்து நேரடியாகத் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலான ரமேஷ்பாபுவின் கட்டுரை கடலை விடவும் கொந்தளிப்பானதாக கடற்கரை மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது.
சிறப்பு பொருளாதார மண்டலம், தொழிற்பூங்கா போன்றவை தொழிலாளர்களை மனிதநிலைக்கும் கீழாக தாழ்த்திச் சுரண்டிவருகின்றன. தொழிலாளர்களின் குறைந்தபட்ச அடிப்படைத்தேவைகள் கூட அங்கு நிறைவேற்றப்படுவதில்லை. பணிப்பாதுகாப்பு, வேலைநேரம், ஊதிய நிர்ணயம், படிகள், சீருடை, மருத்துவம், காப்பீடு உள்ளிட்ட சட்டப்பூர்வ உரிமைகள் நலச்சட்டங்கள் எதுவும் இந்த தொழிற்பேட்டைகளுக்குள் அமலாவதில்லை. விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் கூட உரிய சிகிச்சையோ நிவராணமோ வழங்கப்படுவதில்லை. இத்தகயை சுரண்டலுக்கு எதிராக சங்கம் சேரவும் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பார்கள். வடக்கிலும் சிலர் வாழ்கிறார்கள் தெற்கிலும் சிலர் வாழ்கிறார்கள், தொழிலாளர்களைப் பொறுத்தவரை எல்லா இடங்களிலும் சுரண்டப்படுகிறார்கள் என்பதே உண்மை. அதிகபட்சம் நாளொன்றுக்கு மிஞ்சும்   60 - 80 ரூபாய்க்காக  ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து அல்லலுறும் வட இந்தியத் தொழிலாளர்களின் அவலவாழ்வை ரமேஷ்பாபு சீற்றத்துடன் பதிவு செய்திருக்கிறார். அவர்களை  அணிதிரட்டுவதன் அவசியத்தையும் அதிலுள்ள இடர்ப்பாடுகளையும் உணர்ந்து தாங்கள் செய்த தலையீடுகளையும் தற்காலிக வெற்றிகளையும்  பகிர்வதன் மூலம் அது வெறும் பதிவாக சுருங்காமல் ஒரு செயலறிக்கையாகவும் செயலுக்கு தூண்டும் அறிவிக்கையாகவும் உருக்கொள்கிறது. நல்லதுதான், வெறும் பதிவு என்ன வெங்காயத்துக்கு? 

அண்ணாந்தபடியே சென்னையைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களை சமநிலைக்குத் திருப்பி கண்மட்டத்திலும் அதற்கு கீழும் உள்ள சென்னையை  பார்க்கவைக்கிறது இதிலுள்ள ஒரு கட்டுரை. கிராமப்புறங்களிலிருந்து நெட்டித் தள்ளப்படும் அடிநிலை மக்கள் கெட்டும் பட்டணம் சேர் என்று இம்மாதிரியான பெருநகரத்திற்கு வந்து எவ்வகையாக எங்கு வாழ்கிறார்கள் என்பது குறித்த கவனத்தை அது கோருகிறது.

எவ்வளவு கழிசடைத்தனமான கருத்தோட்டம் உள்ளவர்களையும் - அவர்கள் பிரபலமாய் இருக்கும் பட்சத்தில் எவ்வித விமர்சனமுமின்றி கட்டித்தழுவி உச்சிமுகர்ந்து நட்புகொள்ளும் மலினமான மனநிலையோடு சிலர் அலைவார்கள். அப்படியான பிரபலங்களுக்கு கறிசோறாக்கிப் போட்டு பீடா மடித்துக் கொடுப்பதிலேயே அவர்கள் பிறவிப்பயனை எய்திவிடுவார்கள். இருக்கப்பட்டவர்களுக்கு விருந்து வைத்துவிட்டு, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் நெஞ்சம் என்று வள்ளலார் ரேஞ்சுக்கு நெக்குருகிப் போகிறவர்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. ஆனால் ரமேஷ்பாபுவின் மனமோ பேப்பர் பொறுக்கி ஜீவனம் கழித்து சாலையோரங்களிலும் பாலத்தடியிலும் தலைசாய்க்கும் ஒரு முதியவரோடு சகவாசம் கொள்ளவே அவாவுகிறது. முதியவரின் வசிப்பிடத்தில் நிகழ்ந்த நீண்டதொரு உரையாடல் முற்றுப்பெற்ற நள்ளிரவில் அவருடன் தேநீர் அருந்தும் ஆசை கிளர்கிறது. இந்தப் பிச்சைக்காரன் வாங்கிக் கொடுப்பதை குடிக்கமாட்டீங்களா என்றதுமே பதறிப்போய் முதியவரின் தேநீர் உபசாரத்தை ஏற்று திரும்பிவந்து எழுதப்பட்ட கட்டுரை உங்களது கரிசனம் எவர் பொருட்டு என்கிற கேள்வியை நம் ஒவ்வொருவரிடமும் எழுப்புகிறது. 

வாசிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்கவேமாட்டேங்குது என்று புலம்புகின்ற நேரத்தில் எதையாவது வாசிப்பது / எழுதுவது நல்லது. தனது பணிகளின் ஒரு பகுதியாக வாசிப்பையும் எழுத்தையும் ரமேஷ் கைக்கொண்டிருப்பதன் அடையாளமாக இத்தொகுப்பிற்கு சலீமா, சிலம்பு, நந்தன் குறித்த கட்டுரைகள் கிடைத்துள்ளன. மொழியும் சொல்லிப்போகும் பாங்கும் எழுப்பும் கேள்விகளும் குறுக்கீடுகளுமாக இழைந்து  சலீமா கட்டுரை, புனைவுக்கு மிக நெருக்கமாக வந்து சேர்ந்திருக்கிறது. ரமேஷ்பாபுவுக்குள்ளிருந்து வெளிப்பட எத்தனிக்கும் புனைவெழுத்தாளரின் தத்தளிப்பினாலும்கூட இது நேர்ந்திருக்கலாம். அவனையும் எழுதவிடுங்கள் தோழர்.



31. 12. 2016 / ஒசூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...