வெள்ளி, மே 4

மே 6 நீட் தேர்வை நிறுத்து - ஆதவன் தீட்சண்யா

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களுக்கு கேரளாவின் எர்ணாகுளம், ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் உதய்பூர் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையத்தை ஒதுக்கியிருப்பதாக ஏப்ரல் 18ஆம் தேதி  சிபிஎஸ்இ அறிவித்தது. நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டிருந்த விவரக்குறிப்பின் அத்தியாயம் 2 விதி 4(சி)ல் குறிப்பிடப்பட்டிருந்த வழிமுறைகளுக்கு புறம்பாக தொலைதூர தேர்வு மையங்களை ஒதுக்கியதானது, மாணவர்களை அலைக்கழிப்பதாகவும் மனநிலையை சிதைப்பதாகவும் அவர்களது நிதிச்சுமையை கூட்டுவதாகவும் இருப்பதால் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வுமையம் ஒதுக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காளிமுத்து மயிலவன் பொதுநல வழக்கொன்றை தொடுத்திருந்தார்.    

இவ்வழக்கை கடந்த 27.04.18 அன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்களை ஒதுக்கவேண்டும் என்ற தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பானது, சம்பந்தப்பட்ட மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் கடும் அலைச்சல் மற்றும் செலவினத்திலிருந்து தப்பிக்கவைத்து நிம்மதியும் ஆசுவாசமும் கொள்ளவைத்தது. தீர்ப்பு அமலாகும் என்ற நம்பிக்கையில் அவர்களில் பலரும் முந்தைய தேர்வுமையங்களுக்குச் செல்வதற்காக பதிவு செய்திருந்த பயணச்சீட்டுகளை ரத்து செய்திருக்கக்கூடும். கமுக்கமாக இருந்த  சிபிஎஸ்இ, தேர்வுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று (03.05.2018) மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்து (என்னத்த விசாரித்ததோ?) சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்த  உச்சநீதிமன்றம், சிபிஎஸ்இ ஏற்கனவே ஒதுக்கிய தேர்வுமையங்களுக்குச் சென்று தேர்வை எழுதமாறு மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

மே 6 ஆம் தேதி காலையில் தேர்வு தொடங்கவுள்ள நிலையில் மிகக்குறுகிய கால அவகாசத்தில் அவர்கள் எப்படி இந்த தொலைதூரங்களுக்கு செல்லமுடியும்? குறைந்தபட்சம் 5ஆம் தேதி இரவாவது சம்பந்தப்பட்ட நகரங்களுக்கு அவர்கள் சென்று சேர்ந்தாக வேண்டிய நிலையில் அவர்கள் எவ்வாறு பயணிப்பார்கள்?  முன்பதிவின்றி ரயிலிலோ பேருந்திலோ சென்றுவிடக்கூடிய தூரத்தில் இருக்கின்றனவா இந்நகரங்கள்? இந்த மாவட்டங்களிலிருந்து 10மணிநேரமாவது பயணித்தால் மட்டுமே எர்ணாகுளத்தை அடைய முடியும். துணைக்கு ஒரு ஆள் தேவை. முந்தின நாள் இரவே சென்று தங்கவேண்டியிருக்கும். இதற்காகும் கூடுதல் செலவினங்களுக்கு யார் பொறுப்பேற்பது?  

மதுரையிலிருந்து ஜோத்பூருக்கு / உதய்பூருக்கு ரயிலில் பயணநேரம் வழித்தடங்களுக்கேற்ப 51 மணியிலிருந்து 63மணி நேரம் வரை நீள்கிறது. இன்னும் சிலமணி நேரத்தில்  அதாவது 04.05.18 நள்ளிரவு 00.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் ரயிலில் பயணித்தால்கூட அவர்கள் தேர்வு நேரத்துக்கு போய்ச்சேர முடியாது. திருவனந்தபுரத்திலிருந்து 5ஆம் தேதி பிற்பகல்தான் வண்டி. அந்த பிகானீர் துரிதவண்டியில் போனாலும் 43மணிநேரம் பயணிக்க வேண்டியிருப்பதால் தேர்வு நேரத்துக்குப் போய்ச் சேர முடியாது. தென்மாவட்ட மாணவர்கள் அங்கிருந்து கிளம்பி வந்து இன்றிரவு 21.20 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பக்கூடிய அனுவரத் எக்ஸ்பிரஸை பிடிப்பதும் சாத்தியமில்லை. ஆக தீர்ப்பு வந்த மறுநொடியே கிளம்பியிருந்தாலும்கூட ராஜஸ்தான் தேர்வு மையங்களுக்கு போய்ச்சேர்வது சாத்தியமில்லை. விமானத்தில் நாளையோ மறுநாளோ செல்வதானாலும்கூட திருவனந்தபுரத்திலிருந்து ஜோத்பூருக்கு குறைந்தபட்ச கட்டணம் 14884 ரூபாய், உதய்பூருக்கு 13517  ரூபாய். சென்னையிலிருந்து 12931ரூபாய். மாணவருக்கு துணையாக செல்லும் ஒருவருக்கும் சேர்த்தால், பயணத்திற்கு மட்டுமே இந்த குறுகிய சிலமணி நேர அவகாசத்தில் குறைந்தது 50ஆயிரம் ரூபாய் புரட்ட வேண்டியிருக்கும். அவ்வளவு பொருளாதார வலுவுள்ளவர்கள் மட்டும் கிளம்பி வந்து நீட் எழுதினால் போதும் என்று சிபிஎஸ்இ-யும் உச்ச நீதிமன்றமும் வடிகட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனவா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

நீட் தேர்வு என்பதே அநீதி, அது ரத்து செய்யப்பட வேண்டும் என்று  கோரிவந்த மாணவர்கள், இன்று எங்கள் மாநிலத்துக்குள்ளேயே தேர்வெழுத அனுமதியுங்கள் என்ற கெஞ்சும் நிலைக்கு தாழ்ந்துபோனதற்கு காரணம் மத்திய அரசும் அதன் கழிவுபோல நாறிக்கொண்டிருக்கும் மாநில அரசும் தான். தமிழக மக்கள் தமது வரிப்பணத்தில் உருவாகி வளர்ந்துள்ள மருத்துவக்கல்லூரிகள் மீதான உரிமையை கடந்து ஆண்டு இழந்தோம். பாடத்திட்டம், கேள்வித்தாள், தயாரிப்பு நிலை என எல்லா நிலைகளிலும் பாரபட்சத்தை எதிர்கொண்ட நமது குழந்தைகள், இப்போது சொந்த மாநிலத்தில் நுழைவுத்தேர்வு எழுதும் உரிமையினையும் இழந்திருக்கிறார்கள். இவ்வளவு அலைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாக்கப்படும் இம்மாணவர்களால் இயல்பான மனநிலையோடு தேர்வை எழுத முடியுமா முடியாதா என்பது ஒருபுறமிருக்க, அவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்வதே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இயற்கைநீதி மற்றும் சமூகநீதியின்பால் நமக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக, 6 ஆம் தேதி நாடு முழுவதும் நடக்கவுள்ள நீட் தேர்வை நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசை கோருவதும் அதற்காக மாநில அரசின் பொடனியைப் பிடித்து நெட்டித்தள்ளுவதும்  அவசியமாகிறது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருவள்ளுவர் சொன்னது அறம், கீதை சொல்வது தர்மம்

திருவள்ளுவர் சொன்னது அறம், கீதை சொல்வது தர்மம்