1. எனது முதல் கதையை எப்போது எழுதத் தொடங்கினேன் என்று இப்போது துல்லியமாகக் கூறுவது சாத்தியமில்லை; அவசியமுமில்லை. ஒருவேளை அது இன்னும் எழுதப்படாதும் இருக்கலாம். ஆனால் என் முப்பாட்டனான பெரியூர் (உத்தமசோழபுரம்) ஜெண்டாக்காரன் வம்சத்தில் பிறந்து இலக்கியப் பரப்புக்குள் நுழைந்த முதலாமவனாக நான் இருக்கக்கூடும். (முப்பாட்டியின் பெயர் யாருக்கும் நினைவிலில்லை).
அதிகாலைக்கே உரித்தான அமைதியின் ஒரு பகுதியைப்போல சாந்தமானதொரு குரலில் ஆர்.சி.செட்டிப்பட்டி தேவாலயத்திலிருந்து மிதந்துவந்த விவிலிய வாசகங்களில் இருந்த மயக்கும் மொழிநடை, அலமேலுபுரத்திலிருக்கும் எங்கள் காட்டில் அந்திஏர் பூட்டி நிலம் தளர உழுகையில் புரளும் செம்மண்ணில் படிந்து ஜொலித்த மஞ்சள் வெயில், கால்/அரை/ முழுப்பரிட்சை லீவுகளில் என்தாயின் ஊரான ஈச்சம்பாடிக்குப் போய் அங்கே பட்டிக்கு காவலிருக்கச் செல்கிற அல்லது ராத்திரி கரண்டில் தண்ணிகட்டுகிற என் மாமன்களிடம் விடியவிடிய ஜகடைகளைப் பற்றி கேட்டு பயந்த கதைகள், சிங்காரி என்றும் கொத்துக்காரிச்சி என்றும் அழைக்கப்படுகிற என் தந்தைவழிப் பாட்டி மாரிமுத்தம்மாள் மீது எந்நேரமும் படிந்திருக்கும் புகையிலையுடன் கூடிய தாரின் வாசம்.... இப்படியான என் ஞாபகங்களில் எவையெல்லாம் என்னை எழுதச் செலுத்தின என்று இழைபிரித்துச் சொல்லும் ஜாதகக் குறிப்புகள் எதுவும் என்னிடமில்லை. ஓர் எழுத்தாளனாக அடையாளம் பெற்றுவிட்ட இந்நாளில் எனக்கான கொடியையும் அதனடி வேரையும் தேடிப்பிடித்து இன்னின்ன பூர்வீகக் காரணங்களால் நான் ஒரு எழுத்தாளனாக வெளிப்பட்டிருக்கிறேன் என்று கூறுகிற முயற்சி கருவிலே திருவுடையவனாக்கும் என்று காட்டிக் கொள்கிற அபத்தத்திற்கே இட்டுச் செல்லும். ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும், எல்லாக்காலத்திலும் என் முன்னோர்களிடம் கதைகளிருந்தன. அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள், நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நான் எழுத வந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கிறேன். ஒன்றும் குடி முழுகிப் போயிருக்காது என்பது விளங்குகிறது. ஏனென்றால் எங்கள் குடி என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதெல்லாமே ஏற்கனவே பாஷாணத்தில் மூழ்கடிக்கப்பட்டு விட்டிருந்தன. திமிறியடித்து மேலெழுந்துவிடாதபடி அவற்றின்மீது குப்பைகளையும் பாரங்களையும் கொட்டி வாழ்ந்ததற்கான தடயங்கள் முற்றாக மறைக்கப்பட்டிருந்தன. ஏன் யாரால், எப்போது- முக்கியமாக- எவ்வாறு மூழ்கடிக்கப்பட்டோம் என்பதைத் தேடிப் போவதின் வழியே தன்னைத்தானே கண்டடையத் துடிக்கிறவர்களில் ஒருவனாக என்னையும் இணைத்துக்கொண்டது மட்டுமே நான் எழுத வந்ததன் பயனென உணர்கிறேன்.
தங்கச்சுரங்கங்களை பறிகொடுத்துவிட்டு காக்காப்பொன்னுக்காக சாக்கடை மண்ணை
அரித்து சலித்துக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் ரசிப்பதற்கும் கொண்டாடுவதற்கும்
என்ன இருக்கிறது என்ற கேள்வி என்னை துரத்துகிறது, ஓடிக்களைக்கிறபோது சாய்ந்து கொள்ளத்
தோதுவான கல்திட்டையாகவும் அதுவே இருக்கிறது. இனி அது துரத்துவதை நிறுத்தி விட்டாலும்கூட
ஓடுவதை நான் நிறுத்தமாட்டேன் எனத் தோன்றுகிறது. ஆமாம் என்னை விரட்டுவதற்கென்றே கடிக்கத்
தெரிந்த மிருகங்கள் சிலவற்றை நானே வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என் சொந்தப் பொறுப்பில்.
2. 'ராஜமாடுகள் தேவ கொம்புகள்/ வசந்தநிறத்திலே போடும் சாணிகள்...’ என்பதாக
எழுதப்பட்ட கவிதைகள் சிலவற்றை கல்லூரிக் காலத்தில் வாசிக்க நேர்ந்திருந்தபோதும் அதன்
சாயல் படாமல் தப்பிவந்தது குறித்த படபடப்பு இப்போதும் எனக்குண்டு. இலக்கியத் தீவிரவாதிகளின்
கூட்டங்களுக்கு செல்லத் தொடங்கிய காலத்தில் அங்கு எழுந்த விவாதங்கள், இந்திய/ தமிழகச்
சூழல் - அதில் நின்று வாழும் ஒரு படைப்பாளி எதிர்கொள்ளும் சிக்கல்கள்- படைப்பாளிக்கும்
சமூகத்திற்குமான உறவு- படைப்புமனதை தக்கவைத்துக் கொள்வதில் உள்ள இடர்ப்பாடுகள்- பொதுப்புத்தி
சார்ந்த தனது புரிதல்களிலிருந்து விடுபட்டு சுயமான அறிதல்களை நோக்கி நகர்தல் என்பவற்றை
உள்ளடக்கியதாக இராமல் வெறுமனே இஸங்களைப் பற்றிய சர்ச்சையாக நீண்டும் நெளிந்தும் கொண்டிருந்த
ஒரு காலமாய் இருந்தது அது.
எந்த இஸமாக இருந்தாலும் அதன் பொருத்தப்பாடு- தேவை குறித்து பரிசீலிக்காமல்
பொருத்தியே தீர்வது என்பதில் மட்டுமே பிடிவாதமாய் இருந்மோமானால், அது பொருந்துவதற்குப்
பதிலாக துருத்திக் கொண்டுதானிருக்கும் என்று எனக்குத் தோன்றும். ஆனால் யாரிடமும் வாதிடுவதில்லை.
அறிவுச் சோம்பல்/ முட்டாளின் சுயதிருப்தி/ வெட்டிவேலை என்று சாராம்சப்படுத்திக்கொள்ள
நான் விரும்பவில்லையானாலும் உண்மையில் எனக்கு இவ்விவாதங்கள் அலுப்பூட்டக்கூடியனவாகத்தான்
இன்றும் உள்ளன. எனவே எழுதுவது மட்டுமே என் வேலை என்ற அளவில் இலக்கியத் தீவிரவாதிகளின்
பயிலரங்குகள்/ ஃபெயிலரங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியவனாயிருக்கிறேன். ஆனால்
இந்த மனச்சுருக்கம் சரிதானா என்ற கேள்வி எப்போதும் என்னைப் பின்தொடர அனுமதித்துக் கொண்டிருக்கிறேன்.
3. பொதுவுடமை இயக்கத்தோடு ஏற்பட்டத் தொடர்பு அறிவார்ந்த ஒரு தேடலிலிருந்து
எனக்கு ஏற்பட்டதல்ல என்பதை நேர்மையாக சொல்ல வேண்டியிருக்கிறது. கல்லூரி காலத்தில் நடந்த
ஒரு சாதிக்கலவரத்திற்கு பிறகு அகவயமாகவும் புறவயமாகவும் பெரும் நெருக்கடிக்காளாகியிருந்த
போது டி.சண்முகம், கே.எம்.ஹரிபட் போன்ற தோழர்களுடன் ஏற்பட்ட தொடர்பு- அவர்களது வாழ்முறையில்
இருந்த எளிமை- பழகும் சுபாவம்- தொடர் வாசிப்பு- நடப்புலகம் குறித்த விமர்சனப் பூர்வமான
பார்வை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு பின் அவர்களுக்குப் பின்புலமாய் இருக்கிற அரசியலை
நானும் கற்றுணர விரும்பி வந்தடைந்த இடம் பொதுவுடமை இயக்கமாய் இருந்தது. ஒரு இயக்கத்தின்
பகுதியாக இயங்குவதற்குத் தேவையான அன்றாட அரசியலை உள்வாங்கிக் கொண்டது போல அடிப்படைத்
தத்துவமான மார்க்சீயத்தை உள்வாங்கிக் கொள்வது எளிதானதாய் எனக்கு இன்றளவும் தோன்றவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானது என்ற பொத்தாம் பொதுவான ஒருவரி புரிதலை வைத்துக்கொண்டு
மார்க்சீயத்தை விளங்கிக் கொண்டதாய் கற்பிதம் செய்துகொள்கிற எனது அபத்தங்களை பலநேரங்களில்
உணர்ந்திருக்கிறேன்.
ஒரு கட்டிடத்திற்கான வரைபடத்தை முழுதாக தயாரித்து வைத்துக்கொண்டு வேலையைத்
தொடங்குதல் போன்றோ, நோட்ஸைப் பார்த்து விடைகளை எழுதுவது போன்றோ மார்க்சீய நூல்களைப்
பார்த்துப் பார்த்து இங்கு சமூகமாற்றத்தை கொண்டுவந்துவிடலாம் என்கிற குழந்தைத்தனமான
புரிதல்களை நான் வைத்திருந்த காலத்தில் எழுதியவற்றை வாசிக்கும்போது எனது அறியாமைகள்
பிடிபடுகின்றன. இடையறாது ஆழ்ந்து கற்பதற்கும் செயல்படுத்திப் பார்ப்பதற்கும் அதன் வழியே
செழுமைப்படுத்திக் கொண்டு மீண்டும் செயலுக்குத் தூண்டுவதுமான இயங்காற்றல் கொண்ட ஒரு
தத்துவத்தை இப்படி மொக்கையாக ஜோசியம் போல் நம்புவதிலுள்ள இடர்ப்பாடுகளிலிருந்து வாசிப்புதான்
என்னை மீட்டேற்றியது என்பேன்.
ஒரு புரட்சிகர மாற்றத்திற்கான கொதிநிலையை சமூகம் எட்டிவிட்டதான கற்பிதத்தில்,
புரட்சிக்கான இறுதி விசையை இழுத்துவிடும் தனிச்சிறப்பான வரலாற்றுக்கடமை எழுத்தாளனுக்கே
இருப்பதாய் கருதிக் கொண்டு அறைகூவல்களை எழுதிக் குவித்த காலம் ஒன்றிருந்தது. சுற்றியுள்ளவர்களெல்லாம்
சொதசொதவென ஈரத்தில் அமுங்கி நமுத்துக் கிடக்கிற போது படைப்பாளி மட்டும் அகவெழுச்சி
கொண்டு திகுதிகுவென எரியும் சுடராக இருப்பது சாத்தியமில்லை. எனவே அறைகூவல்களையும் பிரகடனங்களையும்
விடுக்கிற காலமல்ல இதுவென்றறிந்தேன். சமூகத்தில் இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கும்
மாற்றங்களுக்கு சாட்சியமாகவும் அம்மாற்றம் எதை நோக்கி சமூகத்தை உந்தித் தள்ளும் என்கிற
முன்னனுமானத்தையும் (தீர்க்கதரிசனமல்ல) என்னவாக மாறவேண்டும் என்ற கனவின் முன்மொழிவையும்
கொண்டதாகவுமே கலைஇலக்கியம் இருக்க முடியுமேயன்றி, அதுவே மாற்றத்தைக் கொண்டு வந்துவிடாது
என்ற நிதானம் பிடிபட நான் எடுத்துக்கொண்ட காலம் சற்று அதீதமோ என்ற கேள்வியும் எனக்கிருக்கிறது.
எல்லாவற்றையும் மொத்தமொத்தமாகவும் பொத்தாம்பொதுவாகவும் பார்ப்பதிலிருந்து
விலகி அவற்றைப் பகுத்தும் தொகுத்தும் நுணுகிப் பார்க்கிறதொரு விமர்சனப் பார்வையை மார்க்சீய,
அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனைகளிலிருந்து பெற்றுக் கொண்ட பிறகே பொத்தாம்பொதுவான கதைமாந்தர்களும்
கதைக்களன்களும் சம்பவங்களும் என் படைப்புகளுக்குள் வருவது தடைபட்டிருக்கலாமென இப்போது
மதிப்பீடு செய்து கொள்கிறேன். சமூகம் வர்க்கங்களாய் பிளவுண்டிருக்கிறது என்று அதுவரையிருந்த
புரிதல் விசாலப்பட்டு வர்க்கம் சாதிகளாயும், சாதிகள் உட்சாதிகளாயும், உட்சாதிகள் குடும்பங்களாயும்,
குடும்பங்கள் பாலினபேதங்களோடும் சிதறடிக்கப் பட்டிருக்கிறதென கண்டுகொண்டபோது அதன் தலைகீழ்
அடுக்குமுறைக்குள் இருந்த ஒரு முரணும் பிடிபட்டது. அதாவது ஆண் பெண் இணைந்து குடும்பமாயும்,
குடும்பங்கள் கூடிய தொகுப்பு உட்சாதியாயும் உட்சாதிகளின் தொகுப்பு சாதிகளாயும் உருவாகி
வருகிற ஒரு சங்கிலியின் நீட்சியில் எல்லா சாதிகளுக்குள்ளிருந்தும் வர்க்கங்கள் உருவாகியிருக்க
வேண்டும். ஆனால் இங்கு உடைமை வர்க்கமோ உழைக்கும் வர்க்கமோ எல்லா சாதிகளிலிருந்தும்
உருவானவர்களைக் கொண்ட தொகுப்பாக அல்லாமல் குறிப்பிட்ட சில சாதியினரிலிருந்தே உருவாகியுள்ளது
என்ற உண்மை ‘நேர்க்கோட்டு சூத்திரங்களை’ நிராகரிப்பதாயிருக்கிறது.
இந்திய/தமிழ்ச் சூழலை விளங்கிக் கொள்வதில் இப்படி எனக்குள் இடையறாது ஏற்படுகிற குழப்பங்கள், அதிலிருந்து விடுபடுவதற்கான எத்தனங்களில் அவ்வப்போது பிடிபடும் தெளிவுகள் என்று எனக்குள் நான் அனுமதித்துக் கொண்ட எல்லாப் போக்குகளையும் பகிரங்கப்படுத்திக் கொள்வதற்கும் அவற்றை என் சகஜீவிகளுடனான உரையாடற் பொருளாக முன்வைப்பதற்கும் என் படைப்புகளன்றி வேறு யாதொரு துணையும் அற்றவனாயிருக்கிறேன். இவ்வாறு வெளிப்படையாக என்னை முன்வைத்துக் கொள்வதால் என் பலவீனங்களும் குழப்பங்களும் வெளித்தெரிந்துவிடும் என்கிற பயமேதுமில்லை எனக்கு. யாதொரு குழப்பமுமின்றி எல்லாவற்றுக்கும் திட்டவட்டமான தெளிந்த பதில்களை தெரிந்துகொண்ட பிறகு அம்மா வயிற்றைக் கிழித்துக்கொண்டு தொப்பென எகிறி குதிக்கிற வரமெதையும் நான் பெற்றிருக்கவில்லை. அவ்வாறு அறிவித்துக் கொள்கிற அல்லது தன்னைத்தானே மதித்துக்கொள்கிற/ தன் பலவீனங்களை ரகசியநோய்போல பதுக்கிப் பாதுகாக்கிற அதிமேதாவிகள் எங்கும் இருக்கத்தான் செய்வர். ஆனால் நான் ஓர் எளியன். சமூகம் எனக்குள் என்னென்னவிதமான மனவோட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சமூகத்தின் பரிசீலனைக்கே படைப்புகளாக திருப்பியனுப்புகிறேன்.
4. யார் மனதும் நோகாமல், எல்லோருக்கும் பிடித்தமானதை எழுதிக் காட்டுகிற
பபூன் டெக்னிக் எனக்கு கைவரவில்லை. எதை எழுதினாலும் கோவித்துக்கொள்ளவென்று ஒரு கூட்டமோ
கோஷ்டியோ இருப்பதைப் பார்த்த பிறகுதான் திருவாளர்.வாசகரும் பொத்தாம்பொதுவானவரல்ல என்பது
உறைக்கிறது. சாதியத்தால் தடித்து முருடுதட்டிப் போயிருக்கிற தமிழ்வாசகர் தன்னை மெல்லிய
இதயம் கொண்டவராக காட்டிக்கொள்ள என் எழுத்துக்கள் ரொம்பவும் க்ரூடாக/ ரூடாக இருக்கிறதென்று
அங்கலாய்ப்பது சற்றே நகைப்புக்குரியதுதான்.
தன் நம்பிக்கைகளையும் நடவடிக்கைகளையும் சந்தேகிக்காத- அதுபற்றிய மறுபரிசீலனையைக்
கோராத / குற்றம்சாட்டாத எதுவொன்றையும்- அது எண்ணாயிரம் பக்கங்களில் எழுதப்பட்டிருப்பினும்
எவ்விதத் தொந்தரவுமின்றி வாசித்துவிடுகிற திருவாளர் வாசகர், சாதி/பாலினம்/ மதம் குறித்த
அவரது சார்புநிலைகளை சீண்டிப் பார்க்கிற படைப்புகளைக் கண்டமாத்திரத்தில் பதற்றமடைந்துவிடுகிறார்.
இந்த பதற்றம் அவசியமானது. உண்மையில் இந்த பதற்றம்தான், குற்றவுணர்ச்சியாக மாறவும்,
பின் ஒடுக்குமுறைச் சிந்தனைகளை கைவிடவும் / எல்லாநிலைகளிலும் சமத்துவத்தை முன்மொழியவும்
ஒருவரைத் தூண்டுகிறது என நம்புகிறேன். எனவே திருவாளர்.வாசகர் தனது பீடங்களிலிருந்து
கீழிறங்கி வருவதற்குத் தயாராகிவிடும் பட்சத்தில் எனது படைப்புகள் அவரை மனிதத்தின் அடுத்தடுத்தத்
தளங்களுக்கு ஏந்திப்போகுமொரு வாகனமாக மாறிவிடக் காத்திருக்கின்றன என இவ்விடம் உறுதியளிக்கிறேன்.
5. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்திருக்கிற/ பழகிய விசயங்களை தனது மொழிநடையிலும் ஒருதடவை சொல்லிப் பார்க்கும் நிர்ப்பந்தம் எந்தவொரு படைப்பாளிக்கும் இல்லை. எனவே அலுப்பூட்டும் இத்தகைய கூறியது கூறலைக் கடந்து ஒரு படைப்பு எப்படியானதாக இருக்கவேண்டும் என்று கருதுகிறாரோ அப்படியாக அவரே எழுதிப் பார்ப்பதுதான் சரியானதாயிருக்க முடியும். இந்தப் புரிதலுடன்தான் நான் எழுதிக் கொண்டிருப்பதாக நம்புகிறேன். அதாவது பரந்த இந்த உலகத்தில் எதை/ யாரை/ எவ்வாறு எழுதுவது என்று பிரக்ஞைப்பூர்வமாக, ஒரு சார்பு நிலை எடுத்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த சார்புநிலையிலிருந்தே அடுத்தடுத்து எழுதுவதற்கான கருப்பொருளை தெரிந்தெடுக்கிறேன்.
ஆயிற்று, இன்றைக்கெல்லாம் தொகுத்துப் பார்த்தால் அதிகபட்சமாக ஒரு நூறு கவிதைகளும் இருபத்தோரு சிறுகதைகளுமே தேறிநிற்கின்றன. போதுமா இது என்கிற கேள்வி எனக்குள் எப்போதும் எழுந்ததில்லை. எனக்குத் தெரியும் எண்ணிக்கையிலோ தடிமனிலோ எதுவுமில்லை என்பது. ஆனால், நான் எழுத வேண்டியது நிறைய என்பது மட்டும் ஓடிக்கொண்டேயிருக்கிறது ரத்தம்போல. (இங்கு நிறைய என்பது அளவைக் குறிக்கும் எளிய சொல்லாக பயன்படுத்தப் படவில்லை.) எழுதுவேன், இன்னும் ஒரு நூறு கதைகளையாவது. இடையறாது நினைவின் குறுக்கும்மறுக்கும் ஓடிக் கொண்டேயிருக்கும் தெறிப்புகள் கவிதைகளாக உருப்பெறக்கூடும்.
என்னால் சொல்லப்படாத வார்த்தை யாராவதொருவரால் சொல்லப்பட்டுவிடும் என்று
நான் பதற்றமடைவதில்லை. இன்னொருவர் வார்த்தையை எப்படி என்னால் சொல்ல முடியாதோ அதுமாதிரியே
என் வார்த்தையை இன்னொருவர் சொல்ல முடியாது. சொல்லும் கணத்தில்தான் நானே என் வார்த்தையை
கண்டெடுக்க முடிவதாய் இருக்கிறபோது அதெப்படி என் வார்த்தையை இன்னொருவர் அனுமானித்து
சொல்லக்கூடும்? என் வார்த்தையின் மேல் என் எச்சில் படிந்திருக்கும். என் மூதாதைகளின்
உருவம் பச்சைக் குத்தப்பட்டிருக்கும். உடைந்த சீசாத்துண்டைப்போல மூர்க்கர்களின் பாதையில்
காத்திருப்பவற்றை என் வார்த்தைகளென அறியுங்கள்.
6. ஆனால் இப்படியெல்லாம் அலட்டிக்கொண்டாலும் எனது எழுத்துக்கள் யாருடைய சமன்களை குலைத்திருக்கிறது என்ற விவரங்கள் என்னிடத்தில் இல்லை. இப்படியெல்லாம் எதிர்பார்ப்பது அதீதமோ என்றுகூட தோன்றுகிறது சிலவேளைகளில். எழுத்துகள் வழியே நான் யாரோடு/ எதை/ ஏன் உரையாட விரும்புகிறேன் என்கிற கேள்விகள் எனக்கு மட்டுமேயானதா அல்லது எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படியான கேள்விகள் இருக்குமா? படைப்பாளியின் சுதந்திரம் என்ற வலுவான ஆயுதத்தைக் கொண்டு நான் எந்த அதிகாரத்தை எதிர்த்தாவது என் படைப்புகள் வழியே பேசியிருக்கிறேனா அல்லது என் சமகாலத்தின் குரலுக்கும் அழைப்புக்கும் செவிமடுக்காது தப்பியோடுவதைத்தான் படைப்பாளியின் சுதந்திரம் என்று சொல்லி பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கிறேனா என்பதெல்லாம் இன்னும் யாராலும் பரிசீலிக்கப்படவில்லை. உன் படைப்புகளால் இந்த சமூகத்தின் அமைதியும் ஒழுங்கும் கெட்டுவிட்டது என்று தண்டிக்கப்படுமளவுக்கு ஏன் இன்னும் என்னால் எதுவும் எழுதிவிட முடியவில்லை என்ற கேள்வி என்னை நிம்மதியற்றவனாக்கியிருக்கிறது. எல்லாத்தளங்களிலும் சமத்துவமின்மையை பேணிவரும் இச்சமூக அமைப்பின் அஸ்திவாரத்தில் ஆப்புவைக்கிற வன்மத்தைக் கொண்டிருக்கிறது என்று என் படைப்பு எதுவும் இந்தநாள் வரை தடை செய்யப்படாமல் இருக்கிறபோது, நான் எவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. ஏதோ ஆத்திரம் தீர நாலுவார்த்தை கத்திவிட்டுப் போகட்டும் என்று இந்த அமைப்பு அனுமதித்திருக்கிற எல்லையை மீறாத கவனத்தோடு தான் எனது படைப்புமனம் இயங்கிக் கொண்டிருக்கிறதா? அழுத்தத்தை உருவாக்குகிற சமூகமே அதன் தீவிரத்தைத் தணிக்கிற துளைகளையும் இட்டுவைத்திருக்கிறதா தனக்குள்ளே?
இப்படி எனக்குள் நடக்கும் வாதப்பிரதிவாதங்களை பகிர்ந்துகொள்ளும்போது,
நிலவும் சூழலுக்கு ஏற்ற படைப்புதான் வெளிப்படும் என்று சமாதானம் சொல்லப்படுகிறது. பாலஸ்தீனத்தில்,
இலங்கையில் போர் நடப்பதால் அங்கிருந்து வெளிப்படும் படைப்புகள் அதற்கேயுரித்தான உக்கிரத்தோடு
வெளிப்படும் என்றும் தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ அப்படியான கொந்தளிப்பான சூழல் இல்லையென்றும்கூட
சொல்லப்படுகிறது. உண்மையில் இங்கு கொந்தளிப்பான சூழலென்று எதுவுமில்லையா?
உயிர்களைக் காவு கொள்ளுதல், பெண்களை வல்லாங்கு செய்தல், உடைமைகளை அழித்தல்,
குழந்தைகளை அநாதையாக்குதல், உடலுறுப்புகளை சிதைத்தல், வாழிடத்தைப் பறித்து அகதிகளாக
விரட்டியடித்தல், கடும் மனஅழுத்தங்களுக்கு ஆட்படும் வண்ணம் மக்களை கண்காணிப்பதாயும்
கொடூரமாக சித்திரவதை செய்வதாயும் அரசப்படை/ ஆயுதந்தாங்கிய குழு செயல்படுதல்- என்று
ஒரு போர் அங்குள்ள மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் அழிமாண்டங்களை பட்டியலிடலாம்.
நமது அகிம்சாபூமியில் ஒரு வருஷத்தில் மட்டும் 1357 பேர் காவல்நிலையத்திற்குள் உயிரை
இழந்திருக்கிறார்கள். என்கவுண்டர் என்ற பெயரில் எவரொருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு
தேசவிரோதியென்றும் தீவிரவாதியென்றும் முத்திரைக் குத்தி தப்பித்துக்கொள்வது இங்கு ராணுவத்தினருக்கும்
போலிசாருக்குமான தேசிய விளையாட்டாக இருக்கிறது. இதிலே ஸ்பெஷலிஸ்ட்டுகள் உருவாகிவிட்டதாகவும்
அறிய வருகிறோம். விசாரணையேதுமின்றி அப்பாவிகள் பலர் பல பத்தாண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருப்பதை
மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. 19348 பெண்கள் பாலியல்
வல்லுறவுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் ஓராண்டில். புகார் தராதவர்கள் இதில் சேர்த்தியில்லை.
சட்டப்படி கொடுப்பதாய் அறிவிக்கப்பட்டிருந்த கூலியைக் கேட்டதற்காக ரெட்டணையில்
சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் எளிய மக்கள். அன்னிய முதலாளிக்காக நிராயுதபாணிகளாயிருக்கும்
தொழிலாளர்கள் அடித்து நொறுக்கப்படுகிறார்கள் அரசாங்கத்தால். லட்சக்கணக்கான விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்... பிறந்த ஊரைவிட்டு பஞ்சம் பிழைக்க பெருநகரங்களை
நோக்கி நீளும் தங்க நாற்கரச்சாலைகளில் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயக்
கூலிகள்.... தொடரும் வகுப்புக் கலவரங்களால் கொல்லப்படுகிறவர்களைப் பற்றிய விவரங்கள்
நம்மிடம் எப்போதும் உருப்படியாய் இருந்ததில்லை. தலித்துகளுக்கு எதிராக ஒவ்வொரு பதினெட்டு
நிமிடங்களுக்கும் ஒரு குற்றம் நிகழ்த்தப்படுகிறது. கொஞ்சம் நிலமும் படிப்பும் கொண்டவர்களாய்
இருந்ததற்காகவே ஒரு குடும்பம் அழித்தொழிக்கப்படுகிறது கயர்லாஞ்சியில். செப்டிக் டேங்க்
சுத்தம் செய்ய இறங்கி சாகிறவர்கள் எல்லோருமே ஒரு சாதியினராக மட்டுமே இருக்கிறார்கள்.
சத்துக்குறைவின் காரணமாக ஒரு கிராமத்தில் 10 நாட்களுக்குள் 140 குழந்தைகள் இறந்துபோகின்றனர்.
இப்படியாகத்தான் இந்த நாட்டில் மனிதவுயிர்களும் அவர்களது உடைமைகளும் எந்தவொரு போர்நிகழும்
நாட்டின் சூழலுக்கு சற்றும் குறையாத வண்ணம் அழிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இவையெல்லாம்
ஒரு படைப்பாளியின் மெல்லிதயத்தை ஊடுருவித் தாக்காத வெறும் புள்ளிவிவரங்களா?
மும்பை ஹோட்டல்களில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு சற்றும் குறையாத எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் வெள்ளத்திலும் மழையிலும் சிக்கி மாண்டிருக்கிறார்கள். ஆனால் எதற்காக யார் எப்போது எவ்வாறு துக்கப்பட வேண்டும், யாருடைய சாவு இழப்பாக கருதிப் போற்றப்படவேண்டும் என்று ஆளும் வர்க்கமும் அதன் ஊடகமும் காட்டுவதைத் தாண்டி பிறவற்றைக் காணமுடியாத கருத்துக் குருடு நம் படைப்பாளிகளை பீடித்திருக்கிறதா? திட்டவட்டமாயும் வெளிப்படையாயும் தெரிகிற இரு எதிரிகளுக்குள் நடக்கிற ஆயுதம் தாங்கிய சண்டை மட்டும்தான் போர் என்கிற மரபான ராணுவமயப்பட்ட பார்வையிலிருந்து விடுபட்டு இந்தியாவில்/ தமிழ்நாட்டில் மனித வாழ்க்கை எப்படியெல்லாம் சூறையாடப்படுகிறது என்பதை நம்மால் உணரமுடியாதா? நிராயுதபாணிகளான மக்கள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் கொலைகளையும் அவமதிப்புகளையும் அலைக்கழிப்புகளையும் தம்முடையதாய் உள்வாங்குவதற்கு ஒரு படைப்பாளி மனதைத் திறந்துவைத்திருப்பாரேயானால், அவராலும் உயிர்த்திரவம் பற்றியெரிய தன் படைப்புச்சக்தியை வெளிக்கொணர முடியும் என்றே நம்புகிறேன். கறுப்பர்களும், லத்தீன் அமெரிக்கர்களும், பாலஸ்தீனியர்களும், இலங்கைத் தமிழர்களும் இப்படியாகத்தான் உக்கிரமும் உயிர்வாழ்தலுக்கான தவிப்பும் சகமனிதன் மீதான கரிசனமும் கொண்டதாக தம் படைப்புகளை மேலேற்றி இயங்கச் செய்கின்றனர் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?
‘நம் குழந்தைகள் வயிறு நிரம்ப உண்ணவேண்டுமென்பதற்காக, குளிருக்கு அடக்கமான
ஆடைகளை அணிய வேண்டுமென்பதற்காக, மூட்டைப்பூச்சிகள் இல்லாத படுக்கைகளில் தூங்க வேண்டும்
என்பதற்காக, நம் குழந்தைகளுக்காகவும் மக்களுக்காகவும் பொருள் உற்பத்தி செய்ய வேண்டுமென்பதற்காக....’
போராடினோம் என்று தன் நாவலில் வரும் வங்காரியின் வழியே கூகி வா தியாங்கோ அறிக்கையிட்டுக்
கொள்வதைப்போல நம்மில் எத்தனை எழுத்தாளர்கள் தேறக்கூடும் என்று யோசிப்போமா? ஒரு மனிதன்
கண்ணியமாகவும் சுயமரியாதையாகவும் வாழ்வதற்குரிய அடிப்படைகளை எட்டுவதற்கே வாழ்நாளெல்லாம்
போராட வேண்டியதாயிருக்கிற அவலத்திற்கும் அதன்பொருட்டு அடைகிற இன்னல்களுக்கும் இழப்புகளுக்கும்
நிலவும் இந்த சமூக அமைப்பின் உள்கட்டமைப்பே காரணமாயிருக்கிறதென்ற குறைந்தபட்ச அரசியல்
புரிதல் வந்துவிடுமானால் ஒரு படைப்புமனதிற்கு தனது இயங்குதிசை பிடிபட்டுவிடும்தானே?
ஆனால் இங்குதான் ஒரு படைப்பாளியின் உலகக் கண்ணோட்டம் எவ்வாறு பொதுப் புத்தியிலிருந்து
விலகியிருக்கிறது அல்லது வேறுபட்டுள்ளது என்ற கேள்வி வருகிறது.
எல்லா நிலைகளிலும் ஏற்றத்தாழ்வைப் பேணிவரும் இந்துமத/ ஆணியக் கண்ணோட்டத்திலிருந்து
உலகைக் காண்கிறபோது எல்லாமே அதனதன் இயல்பில் இயங்கிக் கொண்டிருப்பதாயும் நெருடலாய்
எதுவுமே இல்லையென்பது போலவும் தெரிவதில் வியப்படைய ஒன்றுமில்லை. அதற்கு எதிரான எத்தனிப்புகள்கூட
அதற்குள்ளேயே பொருந்திக் கொள்வதற்கான முயற்சியாகத் தான் தென்படுமேயன்றி விடுபடுவதற்கான
போராட்டமாக உணரப்பட மாட்டாது. எனவே வாழ்வின் உன்னதங்களை தரிசிக்க வைப்பது அல்லது அந்த
உன்னதங்களை மறைத்துப் போர்த்தியிருக்கும் பொருக்குகளை சொறிந்து களைவதுதான் தன் படைப்பின்
அதியுச்ச எல்லை என்று தன்னைத்தானே தாழ்விறக்கம் செய்துகொள்கிற படைப்பாளி, எவ்வித சங்கடங்களுமற்று
தன் தினப்படி வாழ்க்கையை கடக்க முடிந்தவராகிறார். அதன்பொருட்டே அவர் மழை, அருவி, கடல்,
காற்று, குயில், மலர், குழந்தை, ஈரம், அன்பு, காதல், கருணை, கத்திரிக்காய் என்பவற்றில்
தோய்ந்து தன்னை அனிச்சத்தின் மறுவுருவாய் கற்பித்துக்கொண்டு தனது ‘மெல்லிதயத்தை’ படைப்பின்
வழியே யாவருக்கும் பகிர்ந்தளிக்க முன்வருகிறார். வாழ்வின் மென்மையைப் பேசும் இவர்களிடமிருந்து
இவ்விடத்தில் நான் தனி கிளையெடுத்துப் பிரிந்து வாழ்வின் மூர்க்கத்தை எழுத முனைகிறேன்.
என்போன்றே சிலர் நடந்த கொடித்தடம் ஒன்று மெல்லிதாய் நீள்கிறது என்முன்னே...
7. “....இன்றைய காலகட்டத்தில் பண்டை நாட்களின் ஞானியின் பணியை மேற்கொள்ள
வேண்டும். அதாவது தான் சார்ந்துள்ள சமூகத்தின் மனசாட்சியாக இருந்து வரப்போகும் அபாயத்தை
முன்கூட்டி தெரிவித்து அறிவுரை வழங்கி எச்சரிக்கை செய்து நெறிப்படுத்தவது எழுத்தாளனின்
பணி. அறிவுப்பூர்வமாகவும் ஊக்கத்துடனும் சமூகத்தின் மறு உருவாக்கத்தில் தனது பங்கைச்
செலுத்துமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுதான் அவனது எழுத்தின் அவசரமான/ அத்தியாவசியமான
செய்தியாக இருக்கவேண்டும். இன்றைய ஆப்பிரிக்காவின் நல்ல எழுத்தாளனின் குரல் வலிமையாக
உறுதியாக ஊடுறுவுவதாக இருக்கிறது. தொந்தரவு செய்யும் ஒரு செய்தி அதில் பொதிந்திருக்கிறது...
” என்கிற கூகியைத்தான் நான் வாழும் காலத்தின் சக்தியூட்டும் படைப்பாளியாக உணர்கிறேன்.
சிலர் எழுதிய தாள்கள் மலம் துடைக்கவும் தகுதியற்றதாக அருவருப்பூட்டும்.
ஆனால் சிறையிலடைக்கப்பட்ட கூகி அங்கு மலம் துடைக்கும் தாளில் ஒரு நாவலை எழுதி முடிக்கிறார்.
அது நாட்டின் வயல்வெளிகளிலும் அடுப்படிகளிலும் தெருமுனைகளிலும் மதுபான விடுதிகளிலும்
வரிக்குவரி வாசிக்கப்படுகிறது. மதுபானவிடுதியில் வாசித்துக் காட்டுகிறவனின் கோப்பை
காலியாகிற போதெல்லாம் என் கணக்கில் அவனது கோப்பையை நிரப்பு என்று கூட்டத்திலிருந்து
யாரோ ஒருவன் செலவழிக்கிறான் கூகியின் எழுத்தை கேட்பதற்காக. தமிழில் அப்படி வாசிக்கப்படும்
உக்கிரமான முதல் படைப்பாக என்னுடைய எழுத்துகள் இருக்க வேண்டும் என்ற எளிய ஆசையை அகங்காரம்
துளியுமின்றி இவ்விடத்தில் வெளிப்படுத்துகிறேன். எனக்கும் முன்பாகவே யாருடைய எழுத்தேனும்
வாசிக்கப்படுமேயானால், வாசித்துக் காட்டுகிறவரின் கோப்பை என் செலவில் தளும்பி வழியும்-
என் மகிழ்வைப்போல.
2008 டிசம்பரில் சந்தியா பதிப்பகம் வெளியிட்ட "ஆதவன் தீட்சண்யா கதைகள்" தொகுப்புக்கு எழுதிய என்னுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக