kate jarvik birch
ஜனநாயகத்திருவிழா
என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு
மதிப்பு ஒவ்வொருவருக்கும் அதே மதிப்பு என நாம் ஏற்றுக்கொண்ட சமத்துவ அடிப்படையை ஒருவருக்கு
ஒரு வாக்கு என்கிற உரிமையின் மூலம் உறுதிப்படுத்தும் இந்தத் தருணம் உண்மையில் கொண்டாட்டத்திற்குரியதுதான்.
இதன் பொருள், தமக்கிடையே சமமான, தமது அன்றாட வாழ்வில் சக மனிதருடன் சமத்துவத்தால் பிணைக்கப்பட்ட
வாழ்க்கைமுறையினை கைக்கொண்டுள்ள குடிமக்கள், வாக்குரிமையிலும் சமத்துவத்தைப் பேணுகின்றனர்
என்பதாகும். ஆனால் இந்த 75 ஆண்டுகால ஜனநாயகக் குடியரசு, வாக்குரிமையைத் தவிர வேறெதிலும்
சமத்துவத்தைக் கொண்டு வரவில்லை என்பதற்கு இங்கு நிகழ்ந்துவரும் சாதிய வன்கொடுமைகள்
கொடுஞ்சான்றுகளாய் உள்ளன.
உடலையும் மனதையும்
காயப்படுத்துகிற எந்தவொரு செயலுமே வன்கொடுமைதான் என வரையறுக்கும் பட்டியல் சாதிகள்,
பழங்குடிகள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் அதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளையும் மீறப்படும்போது
வழங்கப்பட வேண்டிய தண்டனைகளையும் தெரிவிக்கிறது. சாதியவாதிகளை வன்கொடுமை நிகழ்த்தும்
குற்ற மனப்பான்மையிலிருந்து விடுவித்து அவர்களை மனிதாயப்படுத்தாமல், வன்கொடுமையின்
வரையறையையும் தண்டனையின் கடுமையையும் மாற்றியமைப்பதனால் மட்டும் விரும்பத்தக்க எந்தவொரு
மாற்றமும் நிகழ்ந்துவிடாது. தவிரவும் சட்டவரம்புக்குள் பிடிபடாத பல வடிவங்களில் தீண்டாமை
அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்படுவதை உணர்த்தும் சில அண்மைய நிகழ்வுகளை இங்கே பரிசீலிப்போம்.
**
டவுன், காலனி
என்கிற சொற்கள் ஒருவரது மனதுக்குள் நவீனமான நிலப்பரப்பு ஒன்றின் வரைபடத்தை விரிக்கக்கூடும்.
ஆனால் அரூரைப் பொறுத்தவரை இந்த டவுன் என்பது சாதி இந்துக்களின் வசிப்பிடத்தையும் காலனி
என்பது பட்டியல் சாதியினரின் வசிப்பிடத்தையும் குறிக்கிறது. 1883 ஆம் ஆண்டு வெளியான
மேனுவல் ஆஃப் சேலம் டிஸ்ட்ரிக்ட் என்ற ஆவணம் வாணியாற்றின் மேற்குக்கரையில் அரூரும்
கிழக்குக்கரையில் பறைச்சேரியும் இருப்பதாக குறிப்பிடுவதை கணக்கில் கொண்டால்கூட குறைந்தபட்சம்
இந்த வசிப்பிட பாகுபாடு சுமார் 150 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருக்கிறது எனலாம்.
இந்தப் பறைச்சேரி அரிஜன காலனி என்றாகி பின்னாளில் அம்பேத்கர் நகர் என்று பெயர் சூட்டிக்கொண்டாலும்
இன்னமும் வெகுமக்கள் மனதிலும் மொழியிலும் அது காலனி என்றே பதிந்திருப்பதால் ஒவ்வாமையும்
வெறுப்பும் நீடிக்கிறது. எனவே சேரி, காலனி, அம்பேத்கர் நகர் என்று தமது வசிப்பிடத்தைச்
சொல்வதனால் உண்டாகும் புறக்கணிப்பு, பாதுகாப்பின்மை, அவமதிப்பு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும்
வழியாக “12வது வார்டு” என்று குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. முகவரியில் வார்டு எண்ணைக்
குறிப்பிடும் இந்த விசித்திர முடிவுக்குப் பின்னேயுள்ள உளவியலை எழுதினால் அது ஆன்டன்
செகாவின் ஆறாவது வார்டு கதையைவிட பெரிதாக இருக்கும்.
மக்களிடையே
நிலவும் பாகுபாட்டிலிருந்துதான் வசிப்பிடப் பாகுபாடும் உருவாகிறது. எல்லா இந்திய/ தமிழக ஊர்களைப் போலவே அரூரிலும் மாநில/
ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்விக்கூடங்கள், நீதிமன்றங்கள், நிதிநிறுவனங்கள்,
வணிக மையங்கள், தொழிலமைப்புகள், மருத்துவமனைகள், பேருந்துநிலையம், வாரச்சந்தை, டாஸ்மாக்
ஆகிய அனைத்துமே டவுன் பகுதியில் மட்டும்தான் இருக்கின்றன. நகரமயமாக்கம் எல்லா பகுதிகளையும்
உள்ளிழுத்துப் போட்டுக்கொண்டு வளரும் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து. பேருந்து நிலையத்திலிருந்து
கூப்பிடு தூரத்தில் உள்ள காலனியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் பள்ளிக்கூடம் ஒன்றைத்தவிர
வேறு எந்தவொரு அரசு நிறுவனமும் (தனியாருடையதும்) கிடையாது. அரூர் அரசுக் கலைக்கல்லூரியைக்
கட்டிக்கொள்ளத் தேவையான நிலத்தை பட்டியல் சாதியினர் தானமாக கொடுக்க முன்வந்த போதும்கூட
போயும்போயும் காலனியாட்கள் இடத்திலா கட்டுவது, அங்கு பிள்ளைகளால் மன ஒருமையோடு படிக்கமுடியாது,
பாதுகாப்பு இருக்காது என்றெல்லாம் அவதூறு கிளப்பி கல்லூரியை சாதி இந்துக்கள் தங்கள்
பகுதிக்கு கடத்திப்போக அரசும் உடந்தையாக இருந்து.
நகர உருவாக்கத்தையும்
விரிவாக்கத்தையும் திட்டமிடக்கூடியவர்களாக பெரும்பாலும் சாதி இந்துக்களே இருப்பதால்,
அவர்களது மனதில் சாதி இந்துக்கள் மட்டுமே மக்கள், அவர்கள் வசிக்கும் டவுன் பகுதியை
மட்டுமே வாழத்தகுந்த அனைத்தையும் கொண்டதாக வளப்படுத்தினால் போதும் என்கிற கருத்து ஆழப்பதிந்துள்ளது.
எனவே, எல்லா கட்டமைப்புகளையும் தாங்கள் மனத்தடையற்று எளிதில் அணுகுவதற்குத் தோதாக தங்களுடைய
வசிப்பிடத்தைச் சுற்றியே உருவாக்கிக் கொள்வதோடு அவற்றை தமக்கு மட்டுமேயானதாகவும் அல்லது
அவற்றின்மீது தமக்கு முன்னுரிமை இருப்பதாகவும் கருதிக்கொள்கின்றனர். இந்தத் தடைகளுக்கிடையே
காலனி அடைந்துவரும் மாற்றங்களை இவர்கள் கவனிப்பதில்லை, கவனித்தாலும் ஏற்கமுடிவதில்லை.
அரூர் சட்டமன்றத்
தொகுதி தொடர்ந்து தனித்தொகுதியாக இருந்துவந்த போதும் அதனால் இங்கு பட்டியல் சாதியினரின்
பொருளியல் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றமேதும் நிகழவில்லை. அடிப்படை வாழ்வாதாரமான
நிலம் இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. தொழிலும் வணிகமும்கூட கிடையாது. சூழலை
விளங்கிக்கொண்டு தகவமைத்துக் கொள்ளும் முனைப்பு மேலெழுகிறது. விவசாயக்கூலிகளாக இருந்த
அவர்களில் ஒருபகுதியினர் கட்டுமானத்தொழிலாளர்களாகி காலப்போக்கில் கட்டுமானத்தொழிலை
வசப்படுத்துகின்றனர்.
சாதியம் தங்களுக்கு
மறுத்ததையெல்லாம் கல்வியறிவினால் பெற்று விடுவது என்கிற புரிதலுடன் கல்விப்பரம்பலும்
அதிகரிக்கிறது. கலை அறிவியல் பட்டதாரிகளும், தொழிற்கல்வி பெற்றோரும் பெருகுகின்றனர்.
படித்த இளைஞர்கள் ஒருகட்டத்தில் அரசுப்பணிகளுக்கான தேர்வுகளுக்குத் தயாராகின்றனர்.
அவர்களது தயாரிப்பின் தீவிரம் இலக்கை அடைவதிலான ஒருவகை பித்தநிலை என்றுகூட சொல்லிவிடுமளவுக்கானது.
ஒவ்வொரு தேர்விலும் இந்தக் காலனியிலிருந்து சிலர் பணி நியமனம் பெறுவதைப் பார்த்து சாதி
இந்துக்களும்கூட இவர்களிடம் பாடம் கேட்க வரும் நிலை உருவாகி இன்றளவும் நீடிக்கிறது.
இன்று காலனியாட்கள்
மாநில/ ஒன்றிய/ பொதுத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், அறிவியலாளர்கள்,
மருத்துவ நிபுணர்கள், வழக்கறிஞர்கள் என பல மட்டங்களில் நிறைந்திருப்பதற்குப் பின்னால்
உள்ள வரலாற்று வைராக்கியம் ஆய்வுக்குரியது. கட்டுமானத் தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள்
அதிகாரிகள் ஈறாக காலனியாட்கள் இன்று பல்லாயிரம் பேரை நிர்வகிக்கும் திறனாளர்களாக வெளிப்பட்டுள்ளனர்.
ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்பு அன்னாடங் காய்ச்சிகளாக இருந்தவர்களின் சந்ததியினரான
இவர்களது மாதச் சம்பாத்தியத்தின் கூட்டுத்தொகை சில கோடிகளை எட்டுமளவுக்கானது இவர்களிது
பெரும் எண்ணிக்கை. தம் வருமானத்தை, வருங்காலத் தலைமுறையினரை இன்னும் மேம்பட்ட வாழ்க்கைத்தரத்திற்கு
உயர்த்துவதற்கான மூலதனமாக செலவழிக்கின்றனர். இப்படியானவர்கள் வாழும் காலனியை “திருடர்களின்
பதுங்கிடமாக” அவதூறு செய்து சிறுமைப்படுத்தும் ஓர் அவல நிகழ்வு சமீபத்தில் நடந்தது.
தருமபுரி மாவட்டத்தின்
மலைப்பகுதி ஊர்களான சிட்லிங், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, கோவில்தலமான தீர்த்தமலை, அரூர்
அம்பேத்கர் நகர் மற்றும் ஆற்றோர வீதி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊர்களின் மக்கள்
எளிதாக வந்துபோக ஏதுவாக பழைய பேருந்து நிலையத்தின் வடக்குப் புறத்தில் நுழைவுவழி விடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது இப்பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, “கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்
திட்டத்தின்” கீழ் 3.62கோடி ரூபாயில் கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையத்தில்
நுழையவும் வெளியேறவும் மேற்கில் மட்டுமே வழிவிடப்பட்டுள்ளது. முன்பு வடக்குப்புறத்தில்
இருந்த வழி புதிய கட்டுமானத்தில் இல்லை. காலனியாட்கள் பஸ்ஸ்டான்டில் செல்போன்களைத்
திருடிக்கொண்டு தப்பியோடி விடுவதைத் தடுக்கவே வடக்குப்புறத்திலோ பக்கவாட்டிலோ வழிவிடவில்லை
என்று பேரூராட்சி நிர்வாகத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். எல்லா சாதியிலும் சிலர் திருடர்களாக
இருக்கும்நிலையில் ஒட்டுமொத்தப் பழியையும் காலனிக்காரர்கள் மீது சுமத்துகிறார்கள்.
இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. நடத்திய அமைதிப் (?) பேச்சுவார்த்தையின் போது, இந்த அவதூறுக்கு
கண்டனம் தெரிவித்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியவேண்டும் என்று
கோரியதும், தாங்கள் அவ்வாறாக ஒருபோதும் சொல்லவில்லை என்று மாய்மாலம் பேசி பின்வாங்கினர்.
வழக்கிலிருந்து தப்பிக்க பின்வாங்கியவர்கள் காலனிக்காரர்கள்மீது வைத்திருக்கும் மதிப்பீட்டை
மாற்றிக்கொண்டார்களா இல்லையா என்பதை எந்தச் சட்டத்தினால் கண்டறிவது?
**
அரூர் வட்டம்
போளையம்பள்ளியைச் சேர்ந்த பட்டியல் சாதிப் பெண்கள் மாரப்பநாயக்கன்பட்டியில் கொள்ளுக்காய்
பிடுங்கும் வேலைக்குப் போகின்றனர். அங்கு இவர்களுக்கு நிலத்துக்காரர்கள் கொட்டாங்குச்சியில்
தேநீர் கொடுப்பதை அவ்வழியே சென்ற இளைஞர் ஒருவர் செல்போனில் படம்பிடித்து தனது நண்பருக்கு
அனுப்புகிறார். முகநூலில் பார்த்தபோது மிகுந்த மனவுளைச்சலை உண்டாக்கிய அந்தக் காணொலியையும்
அது பற்றிய விவரத்தையும் கோட்டாட்சியருக்கு அனுப்பிவைக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
என்று அவர் உடனடியாக தெரிவிக்கிறார். இதனிடையே ஊடகங்களிலும் இச்செய்தி பரவி அழுத்தம்கூடிய
நிலையில் மறுநாள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட
இருவரையும் கைது செய்து சிறையிலடைக்கிறது காவல்துறை. இதுவரை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
கொட்டாங்குச்சியில்
டீ கொடுத்ததில் என்ன தப்பு, இதற்கெல்லாமா கேஸ், டீ கொடுத்த நல்லெண்ணத்தைப் பார்க்காமல் இப்படி குற்றம்
கண்டுபிடிப்பது தகுமா, இப்ப ஜெயில்ல தள்ளிட்டு நாளப்பின்னைக்கு அவங்க முகத்துல எப்படி
முழிப்பீங்க, அவங்கள பகைச்சிக்கிட்டு இங்க வாழமுடியுமா, இந்த மாதிரி சட்டமெல்லாம் இருக்குன்னு
தெரிஞ்சிருந்தா அவங்க இப்படி செய்திருப்பாங்களா, உங்களுக்கு வேலையும் கொடுத்து கூலியும்
கொடுத்து, டீயும் கொடுத்து இப்ப நாங்க ஜெயில்லயும் இருக்கனுமா? - என்பதான கேள்விகள்
கிளம்பின. இந்தக் கேள்விகளின் சாராம்சத்துடன் சாதியகங்காரத்தையும் சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்டோர்
தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பேசியிருக்கிறார்.
குற்றஞ்சாட்டப்பட்டோர்
தரப்பினர் விவசாயக்குடியினர். மாட்டுக்குத் தாளியில் தினீ வைக்கவும், நாய்க்கு தட்டில்
சோறு வைக்கவும் தெரிந்து வைத்திருக்கிற அவர்கள், பட்டியல் சாதிப் பெண்களுக்கு கொட்டாங்
குச்சியில் தேனீர் தருகிறார்கள் என்றால் அவர்கள் இந்தப்பெண்களை தமக்கு சமமானவர்களாக
கருதவேயில்லை என்பதனால்தானே? மனிதர்களைத்தான்
மனிதர்கள் சமமாக நடத்தமுடியும் என்று குதர்க்கமாக கேட்கிறவர்களிடம் நாம் கேட்கவேண்டியது:
இருவரில் யார் மனிதர்?
**
அரூர் வட்டம் நவலையைச் சேர்ந்த மு.பாஞ்சாலை (59) பட்டியல்
சமூகத்தவர். நவலை பஸ்நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்துவரும் இவர்
அரூரில் மாட்டிறைச்சி வாங்கிவந்து மாலையில் பொரித்து விற்பதுண்டு.
சம்பவத்தன்று மூடியிடப்பட்ட தூக்குவாளியுடன் அரசுப்பேருந்தில்
ஏறிய பாஞ்சாலையை பார்த்த நடத்துநர் ஆட்சேபம்
ஏதும் தெரிவிக்கவில்லை. நகரத்துக்கு வெளியே மோபிரிப்பட்டி வனப்பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது
வண்டியை நிறுத்திய நடத்துனர், மாட்டுக்கறியை பேருந்தில் எடுத்துவருவது சட்டவிரோதம்
என்று பொய்சொல்லி பேருந்திலிருந்து இறங்கச்சொல்லி நிர்ப்பந்தித்துள்ளார். பாஞ்சாலை
எடுத்துவந்த தூக்குவாளி மூடியிடப்பட்டுள்ளது. அதில் என்ன இருக்கிறதென்று நடத்துனருக்குத்
தெரியாது. ஒருவேளை பாஞ்சாலை இத்தனை நாட்களும் மாட்டுக்கறியே எடுத்துவந்திருந்தாலும்
அன்றைக்கு தூக்குவாளியில் மாட்டுக்கறிதான் இருந்ததா என்பதும் தெரியாது. அப்படியே இருந்தாலும்
அதில் நடத்துனருக்கு என்ன பிரச்னை? ஆனாலும், நவலையைச் சேர்ந்த - சுக்கா விற்கின்ற அந்தப்
பெண்ணின் தூக்குவாளியில் மாட்டுக்கறியைத் தவிர வேறெதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பது
அவரது முன்னனுமானம்.
நடுக்காட்டில் 15நிமிடங்கள் நிறுத்தி மல்லுகட்டுவதற்கு
பதிலாக அடுத்த நிறுத்தத்திலாவது இறக்கிவிடும்படி பாஞ்சாலை கோரியதை நடத்துநர் ஏற்கவில்லை.
அந்த உச்சிவெயிலில், ஒதுங்க ஒரு மரம் செடிகூட இல்லாத நெடுஞ்சாலையில் மூன்று கிலோமீட்டர்
தூரம் நடந்தால்தான் அடுத்த பஸ்நிறுத்தம் என்று தெரிந்தே பாஞ்சாலையை பலவந்தமாக இறக்கிவிட்டுள்ளார்.
அவமானத்தில் குன்றிப்போன பாஞ்சாலை தன் நிலையை எண்ணி கலங்கியபடியே இறங்கிய அந்த கணம்
எவ்வளவு கொடூரமானது? இருதய நோயாளியான தனக்கு பதற்றத்தினாலும் உடல் சோர்வினாலும் ஏதேனும்
ஆகியிருந்தால் மகன் அநாதையாகிருப்பானே என்று சொல்லும்போது அவரது குரல் தளுதளுக்கிறது.
அன்று மாலை அதேவழித்தடத்தில் திரும்பிவந்த அந்தப் பேருந்தை
நவலையில் நிறுத்தி மக்கள் நியாயம் கேட்கிறார்கள். எகத்தாளமான பதிலே வருகிறது. மறுநாள்
அரூர் பணிமனையில் மேலாளரிடம் முறையிடுகிறார்கள். அவர் நடத்துநரின் செயலை நியாயப்படுத்துகிறார்.
இந்தக் கொடுமை வெளியே தெரியாமலே போய்விடுமோ என்கிற பதைபதைப்பில் போக்குவரத்துத்துறை
அமைச்சருக்கும் அரூர் கோட்டாட்சியருக்கும் வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்கிறோம். துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அடுத்த
ஆறாவது நிமிடத்தில் அமைச்சர் பதிலளிக்கிறார். மிகவும் துரிதமாக நடவடிக்கை எடுத்து நடத்துனரை
மட்டுமல்லாது உடந்தையாக இருந்தவர் என்ற அடிப்படையில் ஓட்டுநரையும் பணியிடை நீக்கம்
செய்து அந்த உத்தரவின் நகலை அமைச்சர் அனுப்பிவைக்கிறார். கூடவே, பட்டியல் சாதியினர்
/ பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகியவற்றின்கீழ்
வழக்கு பதியப்படுகிறது. ஓரிரு நாட்களில் ஓட்டுநர் கைதாகிறார். தலைமறைவாகி சென்னை உயர்நீதிமன்றத்தில்
முன்பிணை கோரிய மனுமீது பெற்ற வழிகாட்டுதலுடன் தருமபுரி சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த
நடத்துனரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பாஞ்சாலை விசயம் சமூக ஊடகங்களிலிருந்து சர்வதேச
ஊடகங்கள் வரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
“மாட்டுக்கறி எடுத்துனு வர்ற இவளுக்கு ஒரு பாடம் புகட்டணும்கிற
முடிவோட தான் அந்த கண்டக்டர் நடுவாந்தடத்துல என்னை இறக்கி விட்டிருக்கான். அப்படி செஞ்சதுக்கு
அவனுக்கொரு காரணம் இருந்ததை புரிஞ்சிக்க முடியுது. ஆனா பஸ்சுல இருந்த அம்பதறுபது பேர்ல
ஒருத்தர்கூட வாய் திறக்காம இருந்ததை நெனைக்கிறப்ப தான் ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று
கலங்கினார். ஒவ்வொரு தவறு இழைக்கப்படும்போதும், அந்தத் தவறினால் பாதிக்கப்படுபவர் யாராக
இருப்பினும் அவருக்கு மற்றவர்கள் உதவுவதே பொதுமக்கள் மனசாட்சி என்றும் அது ஜனநாயகம்
நீடிப்பதற்கு அவசியமானது என்றும் அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்தியதைத்தான் பாஞ்சாலை
தனது சக பயணிகளிடம் எதிர்பார்த்திருக்கிறார்.
மாஞ்சோலை தொழிலாளர்கள் 17பேர் தாமிரபரணியில் சுட்டுக் கொல்லப்பட்ட நாளின் மாலையிலும்
எவ்வித உறுத்தலுமின்றி திருநெல்வேலிக்காரர்கள் அல்வாவும் மிக்சரும் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக
ச.தமிழ்ச்செல்வன் புதுவிசையில் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.
வன்கொடுமை வெளியே தெரிந்துவிட்டாலோ புகார் கொடுத்து
விட்டாலோ பஞ்சாயத்துப் பேசி ஏதோவொரு தொகையைப் பெற்றுக் கொண்டு புகார் தராமல் விடுவதையோ
புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதையோ பார்த்துப் பழகிப்போன மக்கள், தன்னையும் அவ்வாறே
பார்ப்பது பாஞ்சாலைக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. “காசு பணம் இல்லன்னா
உழைச்சு சம்பாதிச்சிக்கலாம், மானம் மரியாதை இல்லன்னா…?” அவர் முடிக்காமல் விட்ட இந்தக்கேள்வியை
யோசிப்போம்.
**
அரூர் பகுதியில் இப்படி அடுத்தடுத்து வன்கொடுமைகள்
நடப்பதால் “வன்கொடுமை தடுப்புச்சட்டம் என்ன சொல்கிறது” என்கிற தலைப்பில் கருத்தரங்ம்
நடத்தினோம். பங்கெடுத்த 200 பேரில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். தோழர் ப.பா.மோகனின்
உரையினால் புரிதல் பெற்ற அவர்கள் பட்டியல் சமூகத்தவர் புழக்கத்தில் உள்ள ஏரி ஆகிகிரமிப்பு,
பஞ்சமி நில அபகரிப்பு, விசிக ஒன்றியச் செயலாளர் மீது தாக்குதல் – வழக்கு என தங்கள்
பகுதியில் நடந்த தீண்டாமை நிகழ்வுகளை விவரித்தார்கள். இனி எங்கு தீண்டாமை வெளிப்பட்டாலும்
சட்டத்தின் முன் துணிச்சலுடன் நிறுத்துவோம் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.
இந்தக் கருத்தரங்கம் உருவாக்கிய தாக்கத்தை தணிப்பதற்காகவோ
அல்லது வன்கொடுமைகள் நடந்த இடங்களில் செய்து தீர்க்கவேண்டிய சடங்காகவோ அடுத்த சில நாட்களிலேயே
தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறையும் தமிழ்நாடு காவல் துறையின்
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவும் இணைந்து போளையம்பள்ளியில் “மாபெரும் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு
விழா” ஒன்றை திடீரென நடத்தின. ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள்
பங்கேற்கவிருப்பதாக அழைப்பிதழில் இருந்தாலும் அவர்கள் வரவில்லை. பந்தல், மைக்செட்,
மதிய உணவுக்கான சமையல் ஆகியவற்றை ஏற்பாடு செய்தவர்கள், வன்கொடுமைக்காளான போளையம்பள்ளி
செல்வி உள்ளிட்ட பெண்களுக்கோ நவலை பாஞ்சாலைக்கோ கூட தகவல் தரவில்லை என்பதிலிருந்தே
இவ்விழாவின் நோக்கம் சந்தேகத்திற்குரியதாகிறது. இப்பகுதியின் பட்டியல் சமூகத்தவரல்லாத
சாதி இந்துக்கள் ஒரு சிலர் வந்திருந்தபோதிலும் அவர்கள் நிகழ்வில் ஒன்றாமல் இருந்தனர்.
விழாவுக்கு தலைமை வகித்த சமூகநீதி மற்றும் மனித உரிமைகள்
பிரிவு துணைக்கண்காணிப்பாளர் இங்கு ஒரு சின்ன சம்பவம் நடந்துவிட்டது என்று ஆரம்பித்து
உபதேங்களாக உளறிக்கொட்டியதைப் பார்க்கும்போதே இவர் வன்கொடுமை புகார்களை கையாளும் லட்சணம்
பல்லிளித்தது. புள்ளியியல் துறை உதவி இயக்குநரும், அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளரும்
வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்து பேசியிருக்காவிட்டால் ஏதோவொரு நலத்திட்ட விளக்க
முகாம் போல இவ்விழா முடிந்திருக்கும். தாங்கள் எதிர்கொள்ளும் தீண்டாமைப் பிரச்னைகளைப்
பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பட்டியல் சமூகத்தவர்கள் கோரியபோதும் ஒருவரைக்கூட
பேச அனுமதிக்காமல் தேசியகீதம் போட்டு பதற்றமாக நிகழ்வை முடித்தார்கள். பிரச்னைகளை எழுத்துப்பூர்வமாக கொடுத்தபோது, இது மனுவாங்கும் முகாமல்ல என்று ஆதிதிராவிடர்
நல அலுவலர் உட்பட அனைவருமே வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டனர். எனில் இந்த விழா எதற்காக
நடந்தது?
**
தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று சொன்னால் பரிகாரம் செய்து
விட்டு தொடர்ந்து பாவம் செய்வார்கள் என்பதனால்தான் தீண்டாமை ஒரு குற்றம் என்று வரையறுத்து
அதற்குரிய தண்டனைகளையும் கடுமையாக்கினோம். ஆனால் அதனாலேயே யாருக்கும் நீதி கிடைத்து
விடுவதில்லை. தம்மீது குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளதை பொதுவெளியில் சொல்வது, புகார் தருவது, வன்கொடுமை
தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவது, குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்வது, பிணையில்
வருவதற்கான அவர்களது தகிடுதத்தங்களை முறியடிப்பது, இறுதிவரை வழக்காடி தண்டனை பெற்றுத்தருவது
என ஒவ்வொரு கட்டத்தைக் கடப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு
எளிதல்ல. உதவியும் தோழமையும் சட்ட அறிவுடன் தலையிடும் வழிகாட்டுதலும் கிடைக்குமானால்
அஞ்சாமல் தளராமல் உறுதியுடன் போராடுவோம் என்பதை செல்விகளும் பாஞ்சாலைகளும் உணர்த்துகிறார்கள்.
உணரும் நுட்பம் நமக்குத் தேவை.
நன்றி: நீலம், ஏப்ரல் 2024 இதழ்