இதோ என் காலுக்குக் கீழ் உருண்டு கொண்டிருக்கும் இந்த பூமியை
ஒரு பந்தைப்போல் உதைத்து விளையாடலாமா என்றால்
என்னை ஹிட்லர் என்று சொல்லக்கூடும்.
சரி,
வெடிக்காத ஒரு குண்டைப்போல் தெரிகிற இதன் மையத்தில்
ஒரு திரியைச் சொருகி பற்றவைக்கட்டுமா என்றால்
நீ பயங்கரவாதியா என்கிறீர்கள்.
தாகம் வாட்டுகிற கோடைப்பொழுதில்
தர்ப்பூசணிப்பழம் போல் தெரியுமிதை அறுத்து
ஆளுக்கொரு கீற்றாய் சாப்பிடக் கூப்பிட்டதற்கு
வக்கிரமான கற்பனையென ஒதுங்கிக்கொண்டீர்கள்.
நிஜத்தில்
என்னவாக இருக்கிறது இந்த பூமி?
மேசை மீதிருந்த குளோப்பை சுழற்றிவிட்டுப் பார்த்திருந்தேன்
தன்னைத்தானே சுற்றிக்கொள்ளத் தெரிந்த அந்த உருண்டை
நான் சுற்றிவிட்டதில் சமநிலை குலைந்து
ஜம்பமாய் தன் தலைப்பாகத்தில் சொருகி வைத்திருந்த
பேனா பென்சில்களை கீழேத் தள்ளியபடி
தீர்க்க அட்ச ரேகைகள் சிதற
சில பாகைகள் சாய்ந்து
அரைவட்ட வடிவத்தில் திறந்துகொண்டது
உள்ளே
கிழித்துப்போட்ட காகிதத்துண்டுகள், குண்டூசிகள்
ரப்பர்பேண்டுகள், இத்யாதி குப்பைகள்
உண்மையைப்போல் பொம்மைகள்
அல்லது
பொம்மையைப் போல் உண்மைகள்