சனி, அக்டோபர் 8

அயர்ந்து முளைக்கிறது சூரியன் - ஆதவன் தீட்சண்யா


உன் பெயரை ஜெபித்தபடி
புலர்ந்திருக்கும் இவ்விரவை
நான் தன்னந்தனியே கடக்க வேண்டியிருக்கிறது
ஒரு நிலவைப்போல
கடைசி சந்திப்பின் வெதுவெதுப்பான ஞாபகங்களன்றி
வழித்துணைக்கு ஏதுமில்லை

இதோ இதோவென தளர்ந்து நகரும்
கிழட்டு நொடிகளைக் கோர்த்தபடி  
எண்திசையும் கண்சுழற்றிப் பார்க்கிறேன்
நீ வந்துவிடுவாயென

இருளின் அரூபங்களில் உன் முகங்கண்டு பித்தேறி
வெற்றுவெளி துழாவி கட்டித் தழுவியது மாயமென்றறிந்து
துக்கத்தின் நெடுவேலில் பாய்ந்து
துடித்தடங்குகிறேன் உயிரைப்போல

இதே வானத்தின் கீழ்
பெருமூச்சை உகுத்தபடி நீயும் கிடப்பதறியாது
என்பொருட்டு இரக்கமுற்ற ராப்பூச்சிகள் வினோத ஒலியெழுப்பி
உன்னையழைக்கும் இப்பகல் கவியும் வேளையில்
அயர்ந்து முளைக்கிறது சூரியன் வீடு திரும்பும் கூர்க்காபோல
கூசும் கண்களை மூடிக்கொள்கிறேன்
பின்வரும் இரவுகளிலும்
இவ்வாறே விழித்திருக்கத்தான் வாய்த்திருக்கிறதென்று.

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...