வினோதகனாய்த் தெரியும் ஒருவன்
நகரத்தின் சந்தடி மிகுந்த சதுக்கங்களில்
நின்று
தன் கைவசமிருக்கும் மீசைகளை விற்றுவிட்டுப்போக
காத்திருக்கிறான்
வேறொரு நகரத்தில் நேற்றிருந்தது போலவே
அவனுக்குத் தெரியும் அவனது வாடிக்கையாளர்கள்
யாரென்று
மீசையின் மகிமையை அறிந்த அவர்கள்
நகரத்தின் இண்டுஇடுக்குகளிலிருந்து கரப்பானைப்போல வெளிப்படுவார்கள்
இருட்டத் தொடங்கியதும்
நூறுமீசைகளை வைத்துப் பார்த்து ஒன்றை தேர்வுசெய்கிறவராய்
அவனது வாடிக்கையாளர் ஒருபோதும் இருப்பதில்லை
கஞ்சாப்பொட்டலம்
கைமாறும் லாவகத்துடன்
முகமேற்றி அனுப்பிவிடுவான் மீசைகளை
வேண்டாமென யாரோ மழித்தெறிந்த வெறும் மயிர்களைக்கொண்டு
அவன் படைத்தனுப்பும் புதிய ஆண்கள்
அந்த நொடியிலிருந்தே மீசையை முறுக்கி
வீரத்தையும் அதிகாரத்தையும் ஆண்மையையும் வெளிப்படுத்துவார்கள்
தங்களது ஒட்டுமீசை விழுந்துவிடக்கூடாதென்ற பயத்தோடு.
- ஆதவன் தீட்சண்யா
இன்றுதான் உங்களுக்கு வலைப்பக்கம் இருப்பதையறிந்தேன் தோழா! இந்தக் கவிதையையும் இன்றுதான் படிக்கிறேன். உங்களுக்கேயுரிய எள்ளலோடு, மொழியோடு மீசை வெளிப்பட்டு இருக்கிறது. கந்தவர்னின் மீசைகள் கவிதையைத் தாண்டிய அடர்த்தியும், பரிமாணங்களும் இதில் இருக்கின்றன.
பதிலளிநீக்குசந்தோஷம் தோழா, தங்களை இங்கே பார்த்தது. தொடர்ந்து எழுதுங்கள்.
வலை உலகத்திற்கு வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குதகவல் சொன்ன தோழர் மாதவராஜுக்கு நன்றி! :))