வழிப்பறிகள் பெருகிவிட்ட இந்நாட்களில்
அதிகாலை நடைப்பயிற்சிக்கு
கருப்பனுடன் செல்வதே பாதுகாப்பாயிருக்கிறது
(கருப்பன்= கைத்துப்பாக்கி / குறுவாள்/ சையனட் குப்பி )
ஆயிரம்பேர் புடைசூழ வேட்டைக்குப் போனாலும்
மோப்பம் பிடிக்க ஒருநாய்தானே தேவை?
(இப்போது ஒரு கருப்பன் = ஆயிரம் ஜவான்)
திரும்பிவரும்போது
முற்றத்தில் விழுந்துகிடக்கும்
பால்பாக்கெட்டையோ
நாளிதழ்களையோ
பல்பதியாமல் கவ்விக்கொண்டு வரவும் (பல்பதிந்தால் தீட்டு)
இப்போதெல்லாம்
பழகிவிட்டிருக்கும் இந்த நாய்
மழையானாலும் வெயிலானாலும்
வரம்புமீறி வாசற்படி தாண்டி
வீட்டுக்குள் நுழைந்ததேயில்லை ஒருபோதும்
(இரண்டு காரணங்கள்- 1.நாயைக் கூப்பிட்டு நடுவீட்டில் வைக்கமுடியாது
2.எல்லை தாண்டிய பயங்கரவாதம் நாய்களிடம் இன்னும் பரவவில்லை)
களத்தில் காயும் தானியங்களை
கோழி குருவிகள் கொத்தாமல் காப்பது
வேற்றார் வந்தால் விரட்டுவது வீட்டாள் வந்தால் குழைவது என்று
அப்புறமும் ஓய்ந்திருக்காத அதற்கென்று
நாங்கள் தனியாக உலைவைத்துப் பொங்கியதில்லை ஒருநாளும்
மிச்சம்மீதியைக்
கொடுத்தால் போதாதா அதற்கு?
(நாய்= இரப்பாளி (எ) எடுப்புச்சோத்து ஆள்காரன்( அ) விசுவாசி )
சகநாய்களை சண்டையிட்டுத் துரத்தினாலும்
மாலைப்பொழுதின்
விளையாட்டுகளில்
எங்களது பேரக்குழந்தைகள் வீசியெறியும் பந்துகளை
லாவகமாய் கவ்வியெடுத்து வரும்போது
அதுவும் ஒரு குழந்தைபோலாகிவிடுகிறது
( நாய் பிறநாய்களுடன் சேர்ந்து விளையாடுவது தடுக்கப்படுவதுடன்
ஒரு அல்லக்கையாக தொழிற்படவும் பழக்கப்படுத்தப்படுகிறது)
எப்போது தூங்குமென்று யாருக்கும் தெரியவில்லை
பகலெல்லாம் பாய்ந்தோடி ஓய்வின்றி அலைந்தாலும்
ராத்திரியாகிவிட்டால்
ராணுவச்சிப்பாய்போலாகி
காதுவிடைக்க சுற்றிவரும் அதன் காவல்மீறி
ஈ காக்காகூட எட்டிப்பார்க்க முடியாது எங்கள் வீட்டை
(பேயும் பிசாசும் நாயிக்குத்தான்
தெரியும்)
இது இப்படியே நெடுநாளாய் இருக்க,
நாய் என்ற ஒன்று இருக்கப்போய்தான்
நாங்கள் மனிதரென்று வேறுபடுத்தி அறியப்படுவதும்
இப்படியொரு குடும்பத்தை காத்துவருவதாய்
அந்த நாய் சொல்லப்போவதில்லை என்ற தைரியத்திலேயே
ஒரு நாயை வளர்த்துக்கொண்டிருப்பதாய் நாங்கள் ஜம்பமடித்திருப்பதும்
அந்த நாய்க்கு இன்னும் தெரியாது.
- ஆதவன் தீட்சண்யா
நாய்களின் அஜாக்கிரதை நாய்களுக்கு எப்போதும் தெரியப் போவதில்லை. .ஏனெனில் அவை எப்போதும் நாய்களாகவே இருக்கின்றன. இருக்க விரும்புகின்றன.
பதிலளிநீக்கு