மிச்சமிருப்பவன் என்கிற கதையின் வழியே எனக்கு அறிமுகமானவர் இரா.நடராசன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக படித்த அந்தக்கதை இன்னும் அப்படியே நினைவிலிருந்து வதைப்பதாயுள்ளது. இதோ இந்தத் தொகுப்பில் அந்தக்கதையுள்ள பக்கங்களை வேகமாக திருப்பிக் கடக்கிறேன். மீண்டும் படித்துவிடக்கூடாது என்கிற பதற்றம் அவ்வாறு என்னை கடக்கத் தூண்டுகிறது. சீருடைக்கொலையாளிகள், பரமக்குடியிலும் மதுரை சிந்தாமணியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தி 6 தலித்துகளை கொன்றுவிட்டது குறித்த ஆற்றாமையால் குமைந்து கிடக்கும் இப்பொழுதில் அந்தக்கதை ஒரு திகிற்பிரதியாக தெரிகிறது. சாதிவெறியர்களால் எரித்து முடிக்கப்பட்ட சேரியாக கதையில் வரும் நிலப்பரப்பு தமிழ்நாடுதான் என்று தோன்றுகிறது. சாதி வெறியர்களின் பாத்திரத்தை இம்முறை காவல்துறை வகித்தது தற்செயலானதல்ல என்கிற உண்மையை நடராசனின் கதை நமக்கு விளம்பி நிற்கிறது. ரத்த உறவுகளையும் சொந்த பந்தங்களையும் இழந்து மிஞ்சியிருக்கிற சாம்பலை அளைந்துத் திரியும் ஒரு குஞ்சாக்கிழவனாக என்னை தினந்தோறும் உணர்ந்து கொள்ளவைக்கிறது இக்கதை. வெண்மணியில், கயர்லாஞ்சியில் தமிழ்நாட்டின்/இந்தியாவின் எந்தவொரு சேரியிலும் இப்படியொரு எஞ்சிய ஆன்மா உழன்று கொண்டு தானிருக்கும். பேசுவதை நிறுத்திக்கொண்ட அந்த ஆன்மாவுக்காக நடராசன் எழுதுகிறார்.
தனது மற்ற கதைகளிலும்கூட நடராசன் இப்படியான குஞ்சாக்களின் வாழ்வையே பேசுகிறார். கதைப்பரப்பின் விளிம்பிலும்கூட நிறுத்தப்படாதவர்களை அவர் தன் கதைகளின் மையத்தில் இருத்துகிறார். அவர்களை மேலிருந்தோ தனக்கு தொந்தரவு தராத சவுகரியமான இடத்திலிருந்தோ பார்த்து எழுதாமல், அவரவர் இருப்பிலிருந்து பிறக்கும் நியாயங்களை அவரவர் வழியிலும் மொழியிலும் பேசவிடுகிறார். பேசாதவர்கள் பேசத்தொடங்கினால் இதுவரை பேசிக் கொண்டிருந்தவர்கள் மூடிக்கொண்டு கேட்க வேண்டும்தானே? அதுதான் நடக்கிறது இவரது அனேகக்கதைகளில். கதைமாந்தர்கள் பேசுவதைக் கேட்டு பிழையற எழுதுவதற்கப்பால் தனது செயல்வரம்பை விரிவுபடுத்திக் கொள்ளும் தந்திரம் எதையும் கைக்கொள்ளாத நடராசன், கதைகள் அவற்றின் முழுமையில் விளைந்து முற்றி நிற்கும்வரை காத்திருப்பதில் ஒரு அரசியல் இருக்கிறது. கதையிலாவது அவர்கள் குறுக்கீடும் மிரட்டலும் அச்சமுமின்றி மனதிற்குப்பட்டதை பேசட்டும் என்று ஒதுங்கி நின்றுகொள்கிற அந்த அரசியல் நிலைப்பாடு நிஜத்தில் பேசுவதற்கு தடையாயிருப்பவர்களின் மீதான விமர்சனமாக அமைந்துவிடும் என்கிற நுட்பத்தை நடராசன் அறிந்திருக்கிறார். கதை தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது என்கிற மாந்திரீகவாதத்தினால் பீடிக்கப்பட்டவராக அல்லாமல், கதை கோருவதையெல்லாம் அதற்குள் பாயவிடுகிற ஒரு பட்டகமாக மாறி இதுவரையறியாத வர்ணக்கோவைகளும் ஒளியோட்டங்களும் உருவாவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறவராகிறார் நடராசன்.
அடித்தள மாந்தர்களினூடாக நடுத்தரவர்க்க மதிப்பீடுகளை பேசவைத்துவிடுகிற கபடத்தை முற்றாக நிராகரித்துவிடுகிற நடராசன் அந்தந்த வாழ்வியலுக்குள் உருக்கொண்டுள்ள மதிப்பீடுகளையே பேசுகிறார். அதன் நியாயங்கள் இங்குள்ள உளுத்துப்போன சட்டங்களுக்கும் உறுமிக்கொண்டிருக்கிற அதிகாரங்களுக்கும் எதிரானவை. கலகம் என்று முழங்காமல் கலகம் செய்யக்கூடியவை. சாணியள்ளுகிறவனின் மனம் ஒரு பெரிய சாணியுருண்டாகவே உலகத்தைக் காண்பதும் அதற்குள்ளிருந்தே பேசுவதும் இயல்பானது என்று நம்பிக்கொண்டிருப்பவர்களிடம் இல்லை, அது அவனுக்குள் திணிக்கப்பட்ட பிம்பம். அவனுக்கான உலகம் வேறு வடிவிலானது என்று கூறத்துணிபவை. தேவாலயத்தின் கக்கூஸ் தொட்டிக்குள் ஜெபமோதிரத்தை தேடியெடுக்க இறங்கிய கைவழியே தானும் இறங்கி துழாவித் துழாவி கடைசியில் சுருணை சுருணையாக ‘பொம்பிளிங்க’ தலைமுடியை வெளியே இழுத்துப்போட்டு கனவான்களின் புனிதங்களை நாறடித்துவிடுகிற கதைகள் அவை. எடுத்ததற்கெல்லாம் சுசி சுசி என்று அழைத்து அதிகாரம் செய்வதன் மூலம் பெண்ணின் உழைப்பை உறிஞ்சிவாழும் ஒட்டுண்ணிகளாக ஆண்களிருப்பதை அம்பலப்படுத்திவிடக் கூடியவை. தனக்குள்ளிருக்கும் அரவாணியை வாழ வைப்பதற்காக, ஊரும் உலகும் அறிந்த ஆண்மை என்கிற போலிமையைத் துறக்கக்துணிபவை. அல்லது நான்காம் உலக நாட்டில் ‘கிளர்ச்சியை யுத்தமாக்கியது யார்?’ என்று கேட்ட வேல்ரத்தினம் சுட்டுக் கொல்லப்படும் பின்னணியை வைத்து இலங்கையில், காஷ்மீரில், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், கனிமம் சுரக்கும் வனங்களில் ஆயுதங்களின் முனையில் நகரும் மனிதவாழ்வு எவ்வளவு அவலம் மிக்கது என்கிற உண்மையைச் சொல்லி நம்மை நிம்மதியிழக்க வைப்பவை. தூயத்தமிழ் என்றும் ஆய்வுகளென்றும் நடக்கும் அபத்தங்கள் ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்றாக்குவதுடனோ அவரது நாடகங்களை நாவல்கள் என்று நிறுவுவதுடனோ முடிந்துவிடவில்லை என்பது வெறும் அங்கதமல்ல. களவில் நாட்டம் கொண்ட ஒருவன் கடல்புகுந்து மாயும் முன் பேசுகிறவை என்னைப் போலவே யாவரையும் உலுக்கக்கூடியவை. எழுவரில் இளையவனாய்ப் பிறந்து இப்படியொரு களவாணியாகி எங்கள் கைவிட்டுத் தவறிப்போய் எங்கோ மறைந்தலையும் என்தம்பியும்கூட இப்படியாகத்தான் கடலிடமோ மலையிடமோ தனக்கான நியாயங்களை துயரம் கசியும் இறுதிக்குரலில் பேசிக்கொண்டிருப்பானெனத் தோன்றுகிறது.
நடராசனின் கதை வைப்புமுறையும் மாறுபட்டது. அது ஒரே ஒரு ஊர்ல என்று வழக்கமாகவோ வாஸ்து பார்த்தோ தொடங்குவதில்லை. வாழ்வின் எந்தவொரு பொழுதும் இடமும் அதனளவில் முழுமையானது என்கிற புரிதல் இருப்பதால் அவரது கதை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்குகிறது. கடியாரத்திற்கும் காலண்டருக்கும் பஞ்சாங்கத்திற்கும் வெளியே துடிக்கிற காலத்திற்குள் இயங்குகிறது. எனவே அது நேற்றெனப் பேசுவது நேற்றையல்ல, இன்றெனப் பேசுவது நாளையாகவுமிருக்கலாம். எங்கோ நடப்பதெனச் சுட்டுவது உங்களது காலடி மண்ணாக இருக்கலாம், காலடி மண்ணென்பது கனவில் வந்த தங்கப்பொடியாயும் இருக்கலாம்தானே?
முடிவதும்கூட அப்படித்தான். யூகிக்கமுடியாத ஒரு திடீர் திருப்பத்தை முடிவில் வைத்து வாசகரை திணறடித்துவிடுகிற மெனக்கெடல்கள் எதுவுமின்றி முடிந்து விடுகிறது. அப்படி அவ்விடத்தில் முடிவதால் அது வாசகரைப் பொறுத்தவரை வளர்வதாய் மாறுகிறது. அந்த முடிவு தருகிற நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தனக்குகந்த ஒரு முடிவை கதைக்கு கொடுத்துவிட முடியுமா என்று வாசகர் தொடர்ந்தும் அக்கதைக்குள் இயங்கியாக வேண்டிய நிலை வருகிறது.
பிறகு, எதார்த்தமாய் கதை சொல்கிறவராயும் நடராசன் இல்லை. எதார்த்தமாய் ஏன் சொல்ல வேண்டும், எதார்த்தம் என்பது தட்டையான- உங்கள் கண்ணுக்கு தெரிகிற ஒன்றுமட்டும்தானா என்கிற கேள்விகளையும் எதார்த்தமாய் சொல்வதற்கு கதை எதற்கு என்கிற அதைவிட முக்கியமான கேள்வியையும் தன்போக்கில் எழுப்பிச் செல்கிறார். நிலவும் எதார்த்தத்திற்கு எதிராக விரும்பும் எதார்த்தம் ஒன்றை நிறுவுவதற்குத் தோதாக எப்படியெல்லாம் சொல்லமுடியுமோ அப்படியெல்லாம் சொல்லிப் பார்த்திருக்கிறார். ‘படிதாண்டி’ச் செல்கிற, ஒழுங்கைக் குலைக்கிற, கற்றுக்கொடுக்கப்பட்டவற்றை கடாசி எறிகிற மனநிலையிலிருந்துதானே புதிதாய் எதையாவது உருவாக்கித் தொலைக்க முடியும்? எனவே பழஞ்சோற்றில் வடாம் பிழிந்துகொண்டு தாம் படைப்புத்தொழில் ஈடுபட்டிருப்பதாக விதந்தோதும் ‘படைப்பாளி’களிடமிருந்து நடராசன் வேண்டியமட்டிலும் சுயஒதுக்கம் கொண்டிருக்கிறார்.
நம்பகத்தன்மையின் பொருட்டு உள்ளதை உள்ளபடியே விவரித்துவிடுகிற ஒரு செய்திக்கட்டுரையிலிருந்து ஒரு புனைவெழுத்து பிரியும் புள்ளியை எவ்வாறு கண்டடைவது? வரலாறாகட்டும், நடப்புலகத்தின் நிகழ்வுகளாகட்டும் அல்லது வருங்காலத்திற்கான கற்பனைகளாகட்டும்- இவை கதைக்கான கச்சாப்பொருளா அல்லது கதையே அவைதானா? கதையின் மொழி என்பது கதைமாந்தரின் மொழியா கதாசிரியனின் மொழியா? குறிப்பிட்ட நிலப்பரப்பின் மனிதவாழ்வில் ஒருத்துண்டு நேரத்தின் நிகழ்வினைப் பேசும் கதை எவ்வாறு பரந்த இவ்வுலகின் கோடானகோடி மனிதர்களது வாழ்வோடு தொடர்புடையதாக மாறுகிறது? கதை என்பது வெறுமனே மனிதர்களோடு மட்டுமே தொடர்புடையதா? - என்று எழுதுகிறவர்கள் எதிர்கொள்கிற சில கேள்விகளுக்கு பதில் சொல்லும் பாங்கிலும்கூட நடராசனின் கதைகள் அமைந்துவிட்டிருக்கின்றன.
எதை எழுதுவது என்பது எழுத்தாளனின் அரசியலுடன் மிக நேரடியாக தொடர்புடையது. இவ்விசயத்தில் நடராசன் மிகத்தீர்மானமாக சார்புநிலை எடுத்து அதிகாரமற்றவர்களின் பக்கம் நிற்கிறார். அதிகாரம் செலுத்த முடியவில்லை என்று ஏங்கித் தவிப்பவர்களுக்காகவோ அதிகாரத்தில் பங்கு கேட்க விரும்புகிறவர்களுக்காகவோ அல்லாமல் அதிகாரம் என்பதற்கே எதிராக நிற்கிறார். இந்த நிலைப்பாடு அதிகாரத்திற்குள் பதுங்கியிருக்கும் வன்முறையின் மீது கொண்டுள்ள அச்சத்திலிருந்து உருவானதல்ல. ஒடுக்குவதற்கும் ஒடுங்குவதற்கும் தேவையில்லாத சமூகச்சூழலில்தான் அச்சமற்று வாழ்வதற்குரிய விடுதலை கிட்டும் என்கிற மார்க்சீயத்திலிருந்து உருத்திரண்டது.
நடராசன் சரியாகத்தான் இருக்கிறார் - முன்னத்தி ஏராக.
(பாரதி புத்தகாலயம் வெளியீடாக வரவிருக்கும் இரா.நடராசனின் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை )