ஞாயிறு, அக்டோபர் 16

றெக்கைகட்டி பறக்கும் நகரம் பற்றிய நத்தையின் புகார் - ஆதவன் தீட்சண்யா


1.
ஒளியுமிழும் இந்த நகரத்தின் பாதைகள் எனக்குத் தோதானவையல்ல
இவை கண்களின் பாவைகளில் செயற்கையான பிரகாசத்தை அப்பி
என் சொந்தநிறத்தை மங்கச்செய்கின்றன

நடக்கும்போது என் கால்களை இடறச்செய்து வீழ்த்துகின்றன
பாயும் வாகனங்களின் வெளிச்சத்தை உள்வாங்கவியலாமல்
கூசும் கண்களை இடுக்கியபடி பேதலித்து நின்றுவிடுகிறேன்
நட்டநடுரோட்டில்

பாதையும் வெளிச்சமும் இணைந்தே இருப்பவை
வெளிச்சத்தால் பாதைகள் துலக்கம் பெறுகின்றன
துலக்கம்பெற்ற பாதைகள் கண்ணாடிகளாகி
தன்னில் கடப்போரின் பிம்பங்களை  காமிராபோல சிறைபிடிப்பதால்
முகவரி தேடி விசாரித்தலையும் ஒரு புதியவனை
அந்நியனென்று சந்தேகித்து சுட்டுத்தள்ளுகிறது என்கவுண்டரில்
பிணவறைகளில் கேட்பாரற்று கிடப்பவற்றில் ஒன்றிரண்டு
உங்கள் கிராமத்திலிருந்து உங்களைத்தேடி வந்தவருடையதாயிருக்கலாம்

வெளிச்சமற்ற பாதையென்று எதுவுமேயில்லை
உண்மையில் வெளிச்சமே பாதையாய் வியாபித்திருக்கிறது
விரித்துவைக்கப்பட்ட வலையைப்போல் நகரமெங்கும்

நகரமென்ற பெரும்பாம்பின் கண்ணென மினுங்கும்
பாதரச, சோடிய விளக்குகளிலிருந்து பெருகும் வெளிச்சம்
வழிகாட்டுதலின்பாற்பட்டதல்ல
அது, நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதைக்குள் மட்டுமே
என் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சட்டம் ஒழுங்கின் ஒருபகுதி
வசக்கி என்னை தொழுவில் கட்டும் சவுக்கின் நீட்சி

நம்பிக்கையின்மையின் குறியீடான இவ்வெளிச்சம்
வெட்டவெளிகளில் சுவர்களை எழுப்புகிறது
சுவர்களை மதில்களாக்கி அதன் விளிம்பில் உடைந்த சீசாத்துண்டுகளை பதிக்கிறது
பின்னும் எச்சரிக்கையுணர்வில் மின்வேலியிட்டுக்கொண்டு
நாலாபக்கமும் சுழன்றொளிர்வதன் மூலம்
இந்த நகரத்தையே திறந்தவெளி சிறைச்சாலையாக்கிவிடுவதால்
இங்கு
ஒவ்வொரு விளக்குக்கம்பமும் ஒரு காவல்கோபுரமாகி   
வேவுக்காரனைப்போல கண்காணிக்கிறது எவரொருவரையும்

இடுப்புநாடாவை வாள்முனையில் உருவி
என் மதத்தைத் தேடும் ஒரு வெறியனைப்போல
மேலிருந்து படர்ந்து துரத்தும் இந்த வெளிச்சம்
கள்ளச்சாவியிட்டு திறக்கப் பார்க்கிறது ரகசியங்களின் பேழைகளை
என் அந்தரங்கத்தை 
அரசாங்கக்கோப்புக்குள் துல்லியப்படுத்தும் பொருட்டு
அத்துமீறி நுழைகிறது கழிப்பறைக்குள்ளும் படுக்கையறையிலும்

2.
விளக்கும் வெளிச்சமுமில்லாத இடத்தில் மட்டும்தான்
இருளையே பச்சையமாய் உட்செரித்து
மீறல்களுக்கான தைரியம் வளர முடிகிறது
வளரும் தைரியம் கோடுகளை அழிக்கிறது
தவிர
மனிதனை மனிதன் என்பதற்காகவே தீண்டவும் தூண்டுகிறது.

1 கருத்து:

  1. வெளிச்சம் ஒவ்வொரு வரியும் எங்கள் அறிவுக்கு வெளிசமாக நன்றி தோழரே

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...