சனி, அக்டோபர் 15

முடிந்துபோன சிகரெட்டுகளும் மிச்சமிருக்கும் விவாதங்களும் - ஆதவன் தீட்சண்யா

காங்கிரசின் ஜெயராம் ரமேசுக்கும் ராஸ்ட்ரீய சர்வநாச சங்கத்தின் மோடிக்கும் இப்போதைக்கு பிடித்த ஒரே கவிதை இதுவாகத்தான் இருக்கும் என்பதால் காலப்பொருத்தம் கருதி இங்கு மறுவெளியீடு செய்யப்படுகிறது.

முதலில்
கழிப்பிடம் என்றதும்
ஸெப்டிக் டேங்க்கை விழுங்கியதான
முகச்சுளிப்பின்றி சமனிலை காக்கவும்

பின்
கழிப்பறைகளை
மலஜலம் தொடர்பானதென்றும்
பீடி சிகரெட் அரக்கிய வடுவேறி
பினாயில் ஆசிட் மூத்திர உப்பில்
அரிபட்டச் சுவரும் பெயர்ந்த தாழுடனும்
அடிபாகம் வெற்றிலைக் காவியேறிய
சச்சதுர அறை என்பதுமான
கற்பிதங்களை விட்டொழிப்பது நல்லது

நாராச வசவில் அரண்டெழுந்தும்
பீளையோரம் தொக்கும் கனா
பரிமாறவும் படிக்கவும் ஏலாது
மாரோரம் நையும் காதல் கடிதம்
மங்கலில் புரளும் பிடிபடாக் கவிதை
தொடையிடுக்கு நமைச்சல்
ஜட்டிக் கிழிசல்
கடவுச்சீட்டின்றி பயணம் போக
இன்னும்
பகிரவியலாத காரியம் பலதுக்கும்
நாடோடி மனம் தங்கும் கூடாரமாயும்
காலம் நேர்ந்துவிட்டதாக எஞ்சியிருப்பது
கழிப்பிடம் மட்டுமே

அவர்கள் கச்கூசுக்கு இவர்களும்
இவர்களுடையதற்கு அவர்களும்
எப்போதாவது வருவரென நம்பி
கரித்துண்டு பச்சிலைகளால்
முகவரி தொலைபேசியிலக்கம் சங்கேதக்குறி
கேள்வி பதில் உடன்படுதல் சார்ந்த
ஓவியம் கவிதை செய்திகள்
உறைந்தும் உயிர்த்தும் அங்கே
ஒடுக்கப்பட்ட இலக்கியத்தின் வீர்யத்தோடு

நீங்களோ
பால் இன வர்க்க பேதங்களை
கக்கூஸ்வரை நீட்டித்து
வாசித்தறியும் நல்வாய்ப்பை மறுக்கிறீர்
(இருந்தும் அரவாணிகளுக்கு தனித்தறிவதில்
தோல்வியுற்றதை மறைக்கிறீர்)

ஒன்றும் குடிமுழுகிப் போகாது (போனாலும் போகட்டும்)
உளுத்த பண்பாட்டுக் கதவுகளை
கொஞ்சம் அகட்டி வையுங்கள்
காற்றைப்போல்
எல்லோரும் எல்லாவிடமும்
சென்றுவரத் தேவையிருக்கிறது

மோட்சவீடு பற்றி முழங்கும் மதங்கள்
மோட்சக் கழிப்பிடம் குறித்து மூச்சுவிடுவதேயில்லை
கடவுள் / சாத்தான் ஆசீர்வதிப்பில்
இப்பிறவியிலேயே எமக்கு கழிப்பிடம் கிடைக்க
தியான மண்டபங்களும் தேவாலயங்களும்
அவ்வாறே மாறுவதாகுக

காவல் நிலையம் நீதிமன்றம்
சிறைச்சாலை ராணுவக்கேந்திரம்
தொழிற்கூடம் தூதரகம்
அரசாங்க அலுவலகம் அணுஉலைகளோடு
மூளையைக் கருக்கும் கலாசாலைகளையும்
தனிமை காத்து நிற்கும் கழிப்பிடங்களாக்கவும்
கட்டணக்கழிப்பிடங்களில்
கிரடிட் கார்டுகளை ஏற்கவும்

உணவுக்கூடங்கள் எந்தளவிற்கு வெளிப்படையோ
அந்தளவிற்கு
கழிப்பிடங்கள் அந்தரங்கமானவையென்றும்
அரசியல்சட்டத் திருத்தம் செய்ய
நடப்புக் கூட்டத்தொடரிலாவது
மசோதா கொண்டு வந்தாகணு...

என்னது,
இதெல்லாமா கவிதை என்கிறீர்களா?

சரி,
அதையும் விவாதிப்போம்
யாரிடத்தில் சிகரெட் மிச்சமிருக்கு...?










































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...