வாசல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள
" ஆகாயத்தில் எறிந்த கல்"
என்ற கட்டுரைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள முன்னுரை
சென்னை பல்கலைக்கழகம் ‘வெட்சி’
என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகளின்
தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதில், ஆய்வாளர் ஒருவர் எனது ஆக்கங்களை ‘ஐயந்தீர
ஆய்வு செய்து’ எழுதிய கட்டுரை ஒன்றும் வெளியாகியிருக்கிறது. இட ஒதுக்கீடு யாசகமல்ல- உரிமை என்கிற எனது கட்டுரையை சிறுகதை
என்பதாக புரிந்துகொண்டு அதுபற்றி
விலாவாரியாக அவர் பின்னிப்பின்னி எழுதிச்
சென்றிருக்கிறார். அணிந்துரை எழுதிய துணைவேந்தருக்கும் முன்னுரை எழுதியுள்ள தமிழ்த் துறைத்தலைவருக்கும் இந்த அபத்தம் தெரியாமல் போனதா அல்லது அவர்களும் இவ்வாறே
விளங்கிக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை
தமது மாணவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை படித்துக்கூட பார்க்காமலே
இந்த ஆய்வாளப் பெருந்தகைகள் அணிந்துரையும்
முன்னுரையும் எழுதித் தள்ளுகிறார்களா என்பதும்
தெரியவில்லை. இப்படியொரு தொன்மையான பல்கலைக் கழகமே
வெளியிட்டிருப்பதால் நம்பகமானதாகத்தான் இருக்கும் என்று கருதி பிற்காலத்தில் வருகிற ‘மெய்யாலுமே’ ஆய்வாளர்கள் இத்தொகுப்பை
ஆதாரமாகக் கொண்டு இன்னும் என்னென்ன எழுதித் தொலைப்பார்களோ என்று நினைக்கவே நடுக்கமாகத்தான் இருக்கிறது.
இவ்வகையான முட்டாள்தனத்தில்
சென்னை பல்கலைக்கழகத்திற்கு சற்றும் குறைந்தவையல்ல மற்ற பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள். இலக்கிய
பரிச்சயமோ ஆர்வமோ சற்றுமற்றவர்கள் இலக்கியத்தை
ஒரு பாடமாக மட்டுமே படிப்பதிலும் படிப்பிப்பதிலும்
ஏற்படுகின்ற அபத்தங்கள் சொல்லித்தீராதவை.
எனது கவிதைத்தொகுப்பை தமிழ் முதுகலைப் பட்டத்திற்கான பாடமாக வைத்திருந்தது புகழ்பெற்ற தன்னாட்சிக்
கல்லூரியொன்று. கல்வியாண்டின் பாதிக்காலம்
முடிந்துவிட்டிருந்த நிலையில் கலந்துரையாடல் ஒன்றுக்காக
சம்பந்தப்பட்ட துறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். கவிதைத்தொகுப்பை ஏற்கனவே வாசித்துவிட்டிருந்த மாணவர்கள் பலரும் நுணுக்கமாக விவாதிக்கத்
தொடங்கினார்கள். புரியவேயில்லை என்கிற புகாரோடு இருந்தவர் அங்கிருந்த
பேராசிரியர் மட்டுமே. புரியாததை நடத்தி என்ன ஆகப்போகிறது என்று அவர் ஆறுமாதங்களாக அந்தப்புத்தகத்தை
வகுப்பறைக்கு வெளியேயே நிறுத்திவிட்டிருந்தார்.
வேறொரு பல்கலைக்கழகத்தில் எனது கவிதைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட
ஒரு முதுகலை மாணவர் கவிதைத்தொகுப்பின் தலைப்பே புரியவில்லை என்ற புகாருடன் என்னை சந்தித்தார். தலைப்பே
புரியாமல் எதற்கு இந்த நூலை தேர்வு செய்தீர்கள் என்று வினவியபோது பல்வேறு தொகுப்புகளின் பெயர்களை
எழுதி குலுக்கல் போட்டதில்,
தான் இந்தப் புத்தகத்திடம் அகப்பட்டுக்கொள்ள
நேரிட்டதாக அவர் சலித்துக்கொண்டார். எனது கவிதைகளில் உள்ள தலித் வாழ்வியற்கூறுகளை ஆய்வு செய்யக் கிளம்பிய இன்னொரு பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர் ‘தலித்’ என்கிற சொல் நேரடியாக இடம்பெற்றிருக்கும் ஏழெட்டுக்கவிதைகளை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த சொல் இல்லாத ஒரு கவிதைக்குள் செல்ல வேண்டியதில்லை என்கிற முன்தீர்மானத்தோடு இருந்த அவரிடம் தயவு செய்து எனது கவிதைகளை விட்டுவிடுங்கள் என்று கண்ணீர்மல்க கெஞ்சத்தான் வேண்டியிருந்தது.
இப்படியான துன்பியல் அனுபவம்
எனக்கு மட்டுமே நேர்ந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. இவர்களைப்போன்றே
இன்னும் வேறுசில பேராசிரியர்களையும் மாணவர்களையும் அவ்வப்போது சந்திக்கத்தான்
வேண்டியிருக்கிறது. நமக்கு ஏற்புள்ளதோ இல்லையோ
அவர்கள் என்னத்தையாவது ஏழெட்டு
கட்டுரைகளை எழுதி ‘ஆய்வாளப் பெருந்தகை’களாகிவிடுவார்கள்.
அதற்கப்புறம் அவர்கள் அனத்துவதுகூட ஆய்வு என்றே வகைப்படுத்தப்படும் கொடுமைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும். ஊதியத்திற்கும் ஆண்டுயர்வுத்தொகைக்கும்
பதவி உயர்வுக்குமாக ஆய்வுக்கட்டுரைகளை
பிதுக்கித் தள்ளும் இவர்களும் இவர்களது
துறைத்தலைவர்களும் துணைவேந்தர்களும் தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாத
அப்பாவிகள் என்று தைரியம் கொள்வதன்றி வேறொன்றறியோம்
தமிழகமே.
ஆனால் இவர்கள் மட்டுமே ஏகப்பிரதிநிதிகளாக இருப்பதல்ல ஆய்வுலகம். நாட்டின்
மூலைமுடுக்கெல்லாம் அலைந்து இண்டுஇடுக்கெல்லாம் தேடி ஆவணக்காப்பகங்களுக்குள் அலசித் துருவி அங்கிருந்தெல்லாம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு எழுதுகிற ஆய்வாளர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள். இவர்களைக்கொண்டே தமிழ்ச்சமூகத்தின்
அறிவியக்கம் உயிர்ப்போடு விளங்குகிறது
என்பதே ஆறுதல்தான். வரலாறு,
சமகால நிகழ்வுகள், கலை இலக்கிய ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள், ஆளுமைகள் குறித்த மதிப்பீடுகள் என்று பல்துறை சார்ந்து செறிவாக எழுதுவதில் இவர்கள்
செழுமையான மரபுகளைத் தோற்றுவித்திருக்கிறார்கள்.
கட்டுரை என்கிற இலக்கிய வகைமையை காத்து கையளித்திருக்கும் இவர்களைப்போலவே எழுதவேண்டும் என்கிற முனைப்பிருந்தாலும் ஈயடிச்சான் காப்பி வேலைகள் எதிலும் நான் ஈடுபடவில்லை. அது தேவையுமில்லை. என்றபோதிலும் அ-புனைவு எழுத்துக்களே என்மீது கூடுதலாயும் தாக்கம்
செலுத்துகின்றவையாய் உள்ளன. இதனாலேயே எனது கதைகளிலும்கூட கட்டுரைத்தன்மை
மிகுதியாய் இருக்கிறதென்ற இடித்துரைப்பை
எப்போதுமே நான் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.
ஆனால் அதுவொன்றும் பாவமல்ல
என்பதாலும் பாவமேயென்றாலும் அதைச் செய்வதில் ஆதாம் ஏவாளுக்கு இணையாக உவகையும் ஆர்வமும் கொண்டிருக்கிறேன் என்பதாலும் தொடர்ந்து கட்டுரைகளை
எழுதுவது விருப்பமாகவே இருக்கிறது.
அவ்வகையில் அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகள் சிலவற்றை
தொகுத்து இந்நூலை வாசல் பதிப்பகம் வெளியிடுகிறது.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அவற்றின்
பேசுபொருள் சார்ந்து தமிழில் வெளியாகும் முதற்கட்டுரைகள்
அல்ல. நான் விளங்கிக்கொண்டதன் வெளிப்பாடுகள் என்ற அளவிலேயே அவற்றை முன்வைக்கிறேன். நான் விளங்கிக்கொண்ட வகையில்தான் உலகம் இருப்பதாக நிறுவும் முனைப்பு எதுவும் எனக்கில்லை.
தலித் இலக்கியம் குறித்து
தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிற கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் அனேகம்பேர்
மிகுந்த பொறுப்புணர்வோடு பதில் சொல்லிவிட்டப் பின்பும் எழுதவருகிற ஒவ்வொருவரிடமும்
அதேவகையான கேள்விகளை திரும்பத்திரும்ப
எழுப்புவதன் பின்னே என்னவகையான அரசியல்
இருக்கிறது என்று கவனிக்க வேண்டியுள்ளது. தலித் இலக்கியம் குறித்த சுயவரையறுப்புகளை முன்வைப்பதற்கு ஆக்கப்பூர்வமாக ஒதுக்கவேண்டிய
ரேத்தையும் உழைப்பையும் செக்குமாட்டுத்தனமான
கேள்விகளுக்கு பதில் சொல்வதிலேயே விரயமாக்கிக்
கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்ற மருகலோடுதான் அதுபற்றிய
கட்டுரைகளை எழுத வேண்டியிருந்தது. ஆனாலுமென்ன, தமது சொந்த சாதியின் அழுக்காறுகளையும் அடக்குமுறைகளையும் சாதியத்தை தாங்கிப்பிடிப்பதில்
உள்ள பற்றுதல்களையும் அம்பலப்படுத்துவதற்குத்
துணியாமல் தலித் இலக்கியத்தில் பங்கு கேட்கிறவர்கள் ஓய்ந்தபாடில்லை. தலித்துகளிடமிருக்கும்
ஆகச்சிறந்த அனைத்தையும் சுவிகாரம்
செய்துகொள்கிற ஆதிக்கச்சாதியினரின் குணம்தான் இதிலும் வெளிப்படுகிறது எனக் குற்றம்சாட்டுவது என் நோக்கமல்ல. ஆனால் இவர்கள் தமது சொந்த சாதியை பொத்திவைத்துப் பாதுகாக்கும்
தந்திரத்தை கையாள்கிறார்களோ என்கிற ஐயம் வலுப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. சாதியத்திலிருந்து விடுபடுவதற்கான வேட்கைத்
ததும்பும் தலித்துகளின் எழுத்துகளும்,
தமது சொந்த சாதிகளின் ஒடுக்குமுறைப்
பண்புகளை எதிர்த்து அம்பலப்படுத்தி
தலித்தல்லாதவர்கள் எழுதுகிறவையுமாக இணைந்து
சாதி எதிர்ப்பு இலக்கியம்
உருத்திரள்வதற்கும் இவர்கள் தடையாகி மறித்து நிற்கிறார்கள். எனவே தலித் தனது வாழ்வனுபவத்தை எழுதுவதோடு
தேங்கிவிடாமல் தனித்துவமிக்க அதை எழுதுவதற்கான உரிமையை தக்கவைத்துக் கொள்வதற்கான
நியாயத்தையும் எழுத வேண்டியிருக்கிறது. இவ்வாறான புரிதலோடு எழுதப்பட்ட
எனத கட்டுரைகள் இந்த மையமான நோக்கத்தை எந்தளவுக்கு
சக்தியோடு வெளிப்படுத்தியிருக்கின்றன என்பதை வாசகர்களே கண்டு சொல்லக்கூடும்.
சிங்களப் பேரினவாதத்தினால் 1980களில் புலம் பெயர்ந்து பலநாடுகளுக்கும்
ஏகிவிட்ட ஈழத்தமிழர்கள் எழுதுவதே
புலம்பெயர் இலக்கியம் என்கிற பொதுவான புரிதல் இருக்கிறது. ஒருவேளை
அது ஈழத்திற்கான புலம்பெயர்
இலக்கியமாக வேண்டுமானால் இருக்கலாம்.
ஆனால் தமிழ்நாட்டிற்கான புலம்பெயர் இலக்கியம் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உருவாகிவிட்டது
என்பதை வரலாறு தெரிவிக்கிறது. பிரிட்டிஷ்
மற்றும் பிரான்ஸ் காலனிய ஆட்சியாளர்கள் நாற்பதுக்கும்
மேற்பட்ட தமது காலனிநாடுகளின் பெருந்தோட்டத்தொழிலுக்கும்
சுரங்கம் மற்றும் ரயில்வே பணிகளுக்காகவும் இங்கிருந்து
தமிழர்களை என்றைக்கு பிடித்துக்
கொண்டுபோனார்களோ அன்றே - அந்தக் கப்பல்களிலேயே தமிழின்
புலம்பெயர் இலக்கியம் உருவாகிவிட்டது.
புலம்பெயர் இலக்கியம் என்கிற பெயரிடல் வேண்டுமானால் பிற்பாடு
வந்திருக்கலாமேயன்றி உள்ளடக்கரீதியில் அது அப்போதே தொடங்கிவிட்டது. அது அன்றைக்கு எழுத்துவடிவில் அல்லாமல்
வாய்மொழிப்பாடலாகவோ சொல்கதைகளாகவோ இருந்திருக்கலாம்.
இலங்கையின் மலையகத்திலும் மலேயாவின்
ரப்பர் தோட்டங்களிலும் ஈயச்சுரங்கங்களிலும்
நிலைகொண்ட அவற்றை தமிழின் புலம்பெயர் இலக்கியம்
என்று முன்வைத்தமைக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள
வேண்டியதாகிவிட்டது. விமர்சனங்களுக்கு அஞ்சினால் எதைத்தான் பேசமுடியும்?
இதுவல்லாமல் அவ்வப்போதைய
நடப்புகள் மீதான எதிர்வினைகளாக எழுதப்பட்ட
சில கட்டுரைகள், குறிப்பிட்ட
பேசுபொருளுக்கு வெளியே சென்று
அதனோடு தொடர்புடைய வேறுசில
விசயங்களையும் பேசமுனைந்துள்ளன. அந்தமட்டில் அவை வெளியான நேரத்தில் பரவலாக வாசிக்கப்பட்டன. மாற்றுக்கருத்துக்களும் வந்தன. முன்வைக்கப்பட்ட கருத்தை
எதிர்கொள்ள முடியாமல் அவதூறுகளால்
நிராகரிப்பதற்கான முயற்சிகளும்கூட நடந்தன.
அவதூறுகள், அவற்றை உற்பத்தி செய்யும் மனங்களின் அழுகலைத்தான்
பிரதிபலிக்கின்றனவேயன்றி உண்மைகளை அவை ஒருபோதும் தீண்டுவதில்லை.
தன் காலத்தின் நிகழ்வுகள்
எல்லாவற்றின்மீதும் எழுதிவிடுவது எவரொரையும்
போலவே எனக்கும் சாத்தியமில்லை, தேவையுமில்லை.
எனது மனத்தகவமைப்புக்கு ஏற்ப எழுதுவதற்கு தூண்டப்பட்ட
விசயங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். அவற்றிலிருந்து ஒருபகுதி இத்தொகுப்பில். எஞ்சிய மற்ற கட்டுரைகளை அடுத்தடுத்த
தொகுப்புகளாக உங்களுக்கு கொண்டுசேர்க்கும்
பொறுப்பை ரத்னவிஜயன் நிறைவேற்றுவார்
என்று நம்புகிறேன்.
அன்புடன்,
ஆதவன் தீட்சண்யா,
----------------------------------------------------------------------------------------
வாசல், 40- D/3 முதல் தெரு, வசந்த நகர், மதுரை-625003, 9842102133
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக