செவ்வாய், ஜனவரி 10

இரண்டகம் - ஆதவன் தீட்சண்யா

டுக்கையில் சாவதானமாய் ஏறி
போர்வைக்குள் நுழைந்து
கால்களால் என்னைப் பின்னிக்கொண்டு தூங்கும்
என் செல்லமகளின் உரிமையோடு
கொடிவாகாய் வாலைப் படரவிட்டு
கழுத்திலொரு மண்டலமும் சுற்றி
உடலோடு அணைந்து படுத்து
காதோரம் தலைசாய்த்து கதை அனந்தம் பேசி
தூங்கவொட்டாமல் விளையாடிக் களித்தது
சர்ப்பம்

கொசுவலையடித்த ஜன்னலையும் மீறி
உள்நுழைந்த மாயம் பிடிபடவில்லை இன்னமும்
உறங்க வரும்முன்
நேஷனல் ஜியாகரபி சேனலில்
கடைசியாய் பார்த்ததுதான் கனவில் வந்திருக்குமோ
நிஜமெனில்
அது
விலக்கப்பட்ட கனிக்கு இச்சையூட்டி
ஏவாளைத் தூண்டிய
முதல் கலகக்கார பாம்பாயும் இருக்கக்கூடும்
ஒருவேளை
பரமசிவனின் குண்டலமாய்
எந்நேரமும் விறைத்துக் கிடக்கப் பிடிக்காமலோ
ஆதிசேடனாய் திருமாலிடம்
அழுந்தியிருக்கத் தாளாமலோ
தப்பியோடி வந்து தஞ்சம் புகுந்திருக்குமோ
யோசனையிலும்
கொத்தி நஞ்சேற்றி கொன்றுவிடுமோவென்ற பீதியிலும்
தூக்கமற்று நான் நெளிந்துகொண்டிருக்க
பாம்போ
சீரான குறட்டையொலியுடன் தூங்கிக்கொண்டிருந்தது

விடிகையில்
இடுப்பிலிருப்பதே தெரியாத மென்மையில்
நெகுநெகுத்து மினுங்கும்
ஒரு புதிய பெல்ட் இருந்தது என்னிடம்
பாவம்
தோலுரிக்கப்பட்டது தெரியாமல்
நிணம் கசிய
அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது பாம்பு.

1 கருத்து:

  1. அருமை. சைவத்துக்கு எதிராகப் பேசும் எல்லோருமே வைக்கும் ஒரு குற்றச்சாட்டு - "சைவம் சாப்பிட வேண்டும் அல்லது அசைவம் சாப்பிடக் கூடாது என்று சொல்லும் யாரும் வியாபாரக் காரணங்களுக்காகக் கொல்லப்படும் மற்றும் துன்புறுத்தப் படும் எண்ணிலடங்கா உயிரினங்கள் பற்றி மூச்சு விடுவதில்லை!" என்பதே. எனக்கென்னவோ கொஞ்சம் கொல்வது நிறையக் கொல்வதை விடப் பரவாயில்லை என்று படுகிறது.

    பதிலளிநீக்கு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்: தோற்றமும் செயல்பாடும் - ஆதவன் தீட்சண்யா

தோழர் கண.குறிஞ்சி அவர்கள் வெளியிட்டுவரும் "புதுமலர்" காலாண்டிதழின் 2025 அக்டோபர் - டிசம்பர் இதழில் வெளிவந்துள்ள நேர்காணல். 0  தமிழ...