களவு -ஆதவன் தீட்சண்யா

கிழங்குக்காட்டில் பிடிபட்ட அவளை கிணற்றோர கரண்ட் கம்பத்தில் கட்டிப் போட்டிருந்தான் மாரிக்கண்ணு. அவள் பிடுங்கிச் சேர்த்திருந்த கிழங்கு மூட்டை ஒன்று அவளது காலடியில் சரிந்து கிடந்தது. பகலிலே அவ்வளவு உன்னிப்பாக தோது பார்த்தும் இப்படி எகனைமொகனை இல்லாமல்  மாட்டிக்கொண்டோமே என்கிற ஆதங்கம் அவளை வாதித்தது. ஆளரவம் கேட்டு சுதாரித்து கிழங்குக் குச்சிக்கு அடியில் செத்தநேரம் இருளோடு இருளாக பம்மிக் கிடந்திருந்தால் ஒரு வில்லங்கமும் வந்திருக்காது என்று இப்போது நினைத்து என்ன ஆகப்போகிறது? தப்பி விடலாம் என்று ஓடத் தொடங்கியதுதான் பிழையாகப் போய்விட்டது. அவனும்தானென்ன இருட்டுக்குள் வருகிறவனைப் போலவா வந்தான்? முரடன், நாலே எட்டில் பாய்ந்துவந்து இடுக்கி மாதிரியல்லவா கழுத்தைப் பிடித்தான்...

விடிந்தால் யார்யார் வந்து என்னென்ன சொல்லி தன்னைத் திட்டுவார்கள் என்ற நினைப்பு அவளுக்கு மேலும் உளைச்சலைத் தருவதாயிருந் தது. மேங்காட்டிலிருந்து சொசைட்டிக்கு பாலூற்ற அந்த வழியாக வருகிறவர்களுக்கு சேதி தெரிந்துவிட்டால் பிறகு இந்தப் பக்கம் பராந்திரியில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு போய்  கூலிநாழிக்கு நிற்பது? யாரையும் பார்க்க விரும்பாதவள்போல அவள் தலையைத் தொங்கப்போட்டவாறு இருந்தாள். அவிழ்ந்திருந்த தலைமுடி அவளது முகத்தை மூடியிருந்தது.

மழை இன்னும் நிற்கவில்லை. அவள் வெட்டவெளியில் மழைக்குள்தான் நின்றிருந்தாள். காலுக்குக் கீழே தரையை அரித்துக்கொண்டு குறுகுறுத்து ஓடிய மழைநீரில் அவள் பாதங்கள் ஊறிப்போய் கடுத்தன. மழையில் நனையும் கயிறு இறுகி அவளை நெரித்துக் கொண்டிருந்தது. கயிற்றின் அழுந்தலில் பெருகிய எரிச்சலும் வலியும் தாளமுடியாததாயிருந்தது. சதையை அறுத்துக்கொண்டு கயிறு உடம்புக்குள் துளையிட்டு இறங்குவதுபோல கடுத்துக் கொண்டிருந்தது அந்த வலி. நனைந்து சொதசொதத்துப்போன அவளது முரட்டு உடுப்பு இப்போது கனத்தது பெரும் பாரமாகி. 

மாரிக்கண்ணு தன்னை என்ன செய்வான் என்று அவளால் ஊகிக்க முடியாமலிருந்தது. தன் முகத்தைப் பார்த்துவிட்டானென்றால் அதைவிட மானக்கேடு எதுவுமில்லை. பிறகு விசயம் அவனது அண்ணம்பொண்டாட்டி வேடம்மா காதுக்குப் போகும். ‘ஒத்தா உறவா உடன்பிறந்த மருவா நெனைச்சு பாசங் காட்டுகிற’ அவள் முகத்தில் எப்படி விழிப்பது? இப்படியே இந்த ஈரத்தில் விரைத்து ஜன்னி கண்டு செத்துப்போய்விட்டால்கூட நிம்மதியாயிருக்குமே என்று நினைத்துக்கொண்டாள். திடீரென கரண்ட் வந்து மழைநீரில் பாய்ந்து தன்னைத் தாக்கினால் உருளையனைப்போல தானும் உடல் கருகி அடையாளம் தெரியாமல் செத்துவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்ற நினைப்பு அவளுக்கு ஆறுதலைத் தந்தது.   

மாரிக்கண்ணு மோட்டார்ரூமின் கூரையடியில் மழைக்கு மறைவாக உட்கார்ந்து இவளை இருளில் வெறித்தபடி இருந்தான். அவள் ஆம்பிளைபோல உடுத்தியிருந்ததை வைத்து யாரோ டவுன்காரன் தான் கிழங்கு திருட வந்து மாட்டிக் கொண்டிருக்கிறான் என்று முதலில் நினைத்திருந்த அவன் ஆத்திரத்தில் முடியைப் பிடித்து ஆட்டும்போதுதான் பிடிபட்டிருப்பது பொம்பளை என்றறிந்தான். கீழே விழுந்து ராந்தல் கண்ணாடி உடையாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் முகத்தைப் பார்த்து யாரென்று கண்டுபிடித்திருக்கலாமே என்ற அங்கலாய்ப்பிருந்தது அவனுக்கு.

அவன் ஒன்றும் இவளை திட்டமிட்டோ பொறி வைத்தோ பிடித்திருக்கவில்லை.  மலையடிவாரம் என்பதால் கிழங்குச்செடிகளை உலும்ப வருகிற காட்டுப்பன்றிகளை விரட்ட வழக்கம்போல ராந்தல் கொளுத்திக் கொண்டு வந்தவனிடம்தான் இவள் பிடிபட்டுப் போனாள். பிடிபட்டவள் கொஞ்சநேரம் அப்படியிப்படி திமிறினாளே தவிர கீச்மூச்சென்று ஒரு சத்தம் போடவில்லை. நீ மட்டும்தான் வந்தியா? உன்கூட வேற யாரும் வந்தாங்களா? யார் நீ, எந்த ஊர்? எங்கெங்கே களவெடுத்திருக்கே? என்று அவன் நினைத்துநினைத்துக் கேட்ட ஒருகேள்விக்கும் பதில் சொல்லாமல் உசிரே இல்லாதவள்போலக் கிடந்ததில் அவனுக்கு வெகாளம் கிளம்பியது. “இப்பிடியே நாக்கறுந்தவளாட்டம் இருந்தேன்னு வச்சுக்க, குத்துக்கோல்ல ஒரே ஏத்தாஏத்தி கொடலு குண்டாமணி எல்லாத்தயும் வெளிய இழுத்துருவேன் பாத்துக்க” என்று மிரட்டியும் பலனொன்றுமில்லை. குரலை வைத்து அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற் காக அவள் வாய் திறவாதிருக்கிற தந்திரம் அவனுக்குப் பிடிபடவில்லை.

எங்கோ தூரத்துக்கொல்லையில் நாயொன்று குரைக்கும் சத்தம் மழையின் இரைச்சலில் நடுங்கிக் கேட்டது. அடுத்தடுத்து முழிப்பு கண்ட நாய்களின் குரைப்பொலி அடங்க வெகுநேரமாயிற்று. சனநடமாட்டம் தொடங்கிவிட்டதோ என்று இவனுக்கு கொஞ்சம் படபடப்பு கூடியது. இன்னும் கொஞ்சநேரத்தில் விடிந்துவிடும். அதற்கப்புறம் இவளை என்ன செய்வது என்று அவனுக்கு ஓடாத யோசனை இல்லை. ஒரே அருங்குழப் பமாக இருந்தது. யாரையாச்சும் சைக்கிளில் பழனங்குடிக்கு அனுப்பி போலிசை வரவழைச்சு ஒப்படைச்சிடலாமா என்ற யோசனையை உடனே கைவிட்டான். ‘அவனுங்ககிட்ட தலையக் குடுத்துட்டு யாரு அல்லாடுறது’ என்ற பயமே அவனை அப்படி வெருட்டியது. பிடித்த உடனே ஆத்திரம்தீர கண்மண் தெரியாமல் அடித்து சாத்தியும் விட்டான். இனி வலிந்து கோபத்தை வரவழைத்துக்கொண்டு அவளை இன்னொரு வாட்டி அடிக்கவும் தன்னால் முடியாதென்றே அவனுக்குத் தோன்றியது.

தனது வீட்டாள்களோ அக்கம்பக்கத்துக் கொல்லைக்காரர்களோ பார்த்தால் அவர்கள் இவளை என்ன செய்வார்கள் என்றும் அவனால் கணிக்க முடியவில்லை. சாணியைக் கரைத்து ஊற்றுவது, மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊரைச் சுற்றி வர விரட்டுவது, கோயிலுக்கு அபராதம் கட்டவைப்பது என்று அந்தப் பகுதியில் நடப்பிலிருக்கும் ஏதாவதொரு தண்டனையை அவர்கள் கொடுக்கலாம். ஆனால் இதையெல்லாம் ஆண்களுக்கு விதித்து தான் அவன் பார்த்திருக்கிறானே தவிர இதுவரையிலும் ஒரு பொம்பளைக்கு விதித்திருப்பதாக கேள்விப்பட்டதுமில்லை. ராவா ராத்திரியில் தன்னந்தனியாக ஒரு பொம்பளை திருட வந்திருக்கிறாள் என்பதையே இன்னும் நம்ப முடியாமலிருந்த அவனால் அவளுக்கான தண்டனையை இறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தக் கெழங்கை எடுத்துனு போய் என்னா செய்வா இவ? மிஞ்சிப்போனா ரெண்டு நாளைக்கு வேகவச்சுத் திங்கமுடியும். இல்லாட்டி ஆட்டி புளிக்கவச்சு ரெண்டு வேளைக்கு தோசை சுடலாம். அதுக்கு மேல வச்சிருந்தா பாலேறி கசந்துடும். இதுக்கும் நாதியத்தா ஒரு பொம்பள  ராவாராத்திரியில திருட வந்திருக்கா? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். உடல் முழுக்க வயிறாகக் கொண்டு தீராத பசியில் வேகும் ஒரு ராக்காசியாகவோ காட்டேரியாகவோ இருந்தால் மட்டுமே இந்தக் கிழங்கையும்கூட திருட வந்திருப்பாள் என்று யோசித்தவனுக்கு அதன்பிறகு அவளிருந்த திசையைப் பார்க்கவே ஒருவித அச்சமாய் இருந்தது. அவள் இந்நேரத்திற்கு அவளைக் கட்டியிருந்த கயிற்றையும் கரண்ட் கம்பத்தையும்கூட தின்றுவிட்டு நின்றிருக்கக்கூடும் என்று தோன்றியது. அவ்வளவு பசி யோடு இருக்கும் அவளை விரட்டிப்பிடிக்கும்போது தனது குரல்வளையைக் கடித்து ரத்தம் உறிஞ்சிக் குடிக்காமல் விட்டதே பெரிய கருணைதான் என்று சொல்லிக்கொண்டான். அவள் முகத்தைப் பார்க் காமல் போனதும்கூட ஒருவகையில் நல்லதுதானோ என்று பட்டது. அவளிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டால் போதும் என்றானது அவனுக்கு.

ஒரு மின்னல்வெட்டுக்காக காத்திருந்தவன் அந்த வெளிச்சத்தில் அவளிடம் தட்டுத்தடுமாறி போய்ச் சேர்ந்தான். “இன்னொருவாட்டி இந்தப்பக்கம் வந்திட்டியானா நான் மனுசனா இருக்கமாட்டேன். எங்கியாச்சும் கண்காணாம ஓடிப்போ...” என்ற வீறாப்பு குறையாதவனைப் போன்ற குரலில் அதட்டிக் கொண்டே கட்டுகளை அவிழ்த்துவிட்டான். கயிற்றின் பிடி தளர்ந்த அவள் நனைந்த துணிபோல நிலைகுலைந்து விழுந்தாள். பயந்துபோன அவனோ அவளை அரட்டிப்புரட்டி உலுக்கி எழுப்பினான்.

வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்த பொன்னிக்கு படபடப்பு அடங்காமல் இருந்தது. தன்னைச் சுற்றிலும் மலங்க மலங்கப் பார்த்தாள். தான் இன்னும் சாளைக்குள்ளேயே இருப்பதை உறுதி செய்து கொள்ள அவளுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஆமாம், நான் இன்னும் சாளைக்குள்ள பத்திரமாத்தான் இருக்கேன்... என்னை யாரும் பிடிச்சி கட்டிவைக்கல” என்று தைரியம் சொல்லிக்கொண்டாள். மாரிக்கண்ணமூட்டு கிழங்குக்காட்டுக்குப் போவதற்காக ஊரடங்கட்டும் என்று நினைத்தபடி அடுப்புத்திட்டோரம் படுத்திருந்து அப்படியே கண்ணயர்ந்து போனதால் வந்த வினை இது என்பதை ஒருவாறு யூகித்துக்கொண்ட பிறகே அவளுக்கு மூச்சு சீரானது. இருந்தாலும் களவெடுக்கப் போய் பிடிபட்டுவிட்டால் என்னாவது என்கிற பயம் அவளுக்கு அப்போதி ருந்து தான் தொற்றியது. தனக்குத்தானே நூறுநூறு சமாதானம் சொல்லிக் கொண்டவள், சொப்பனத்துல வர்றதெல்லாம் நெசத்துலயும் நடக்கும்னா சாமியேது பூதமேது  என்று தேற்றிக்கொண்டாள். 
***
வெளியே மழை சீரற்று முன்னதுபின்னதாய் வீசியடித்து பெய்து கொண்டிருந்தது. மழையோடு காற்றும் இருந்ததால் பெருகி  நடுக்கியது குளிர். குபீர்குபீரென்று காற்று சீறியடிக்கும்போது சாளையின் கூரையை மல்லாத்திவிடுமோ என்ற விசனம் பீடித்தது அவளை. வெள்ளம் திரண்டு தெருவில் தபதபவென்று ஓடும் சத்தம் ஆற்றோரத்தை நினைவுபடுத்தியது. மழையின் சத்தத்தைத் தவிர வேறொன்றும் கேட்காத அமைதியை சிதறடித்தபடி சனங்கள் பள்ளிக்கூடத்துக்கு  ஓடிக் கொண்டிருந்தார்கள். செவுரு இடிஞ்சி வுழுந்திருச்சி, தண்ணி பூந்திடுச்சு என்று நேரங்காலமில்லாமல் கூப்பாடிட்டு ஓடிக்கொண்டிருக்கும் இவர்களது கண்ணில் படாமல் வெளியேறிப் போவதற்காக அவள் ரொம்பநேரமாய் காத்திருக்கிறாள். கிளம்பும்போது போட்டுக்கொள்வதற்காக உலர்த்தியிருந்த உடுப்பு கொடியில் ஆடிக்கொண்டிருப்பதையே பார்த்தபடி படுத்திருந்தாள்.

தீத்தானின் ஞாபகமாய் அந்த உடுப்பு ஒன்றை மட்டுதான் அவள் வைத்திருக்கிறாள். மலைமேல் கூத்தாடப் போகும்போது  அங்கிருந்த எஸ்டேட் துரை ஒருத்தர் இவனுக்கு சன்மானமாய் கொடுத்த பட்டாளத்து உடுப்பு அது. குளிர்காலத்தில் அவன் அதைத்தான் போட்டுக் கொள்வான். அதன் கதகதப்பு அவ னது உடம்பைத் தாண்டி இவளுக்கும் பரவி இதமூட்டிய இரவுகளை அவள் இப்போது நினைத்துக்கொள்வதில்லை. அதை வெறுமனே ஒரு முரட்டுத்துணியாக மட்டுமே இதுமாதிரியான குளிர்மண்டிய இரவுவேளைகளில் பாவிக்கிறாள்.

அவள் இன்று பகலிலேயே ஒருசில முன்னேற்பாடுகளை செய்திருந்தாள். ஒருவார மோடத்தில் கையிருப்பிலிருந்த கம்பும் சோளமும் காலியாகி அடுத்தவேளைக்கு என்ன செய்வது என்று யோசித்து களைத்தப் பிறகுதான் இன்று மத்தியானம் மாரிக்கண்ணமூட்டு கொல்லைப்பக்கம் போய் கிழங்குக்காட்டை நோட்டம் விட்டுத் திரும்பியிருந்தாள். மலையடிவாரம் என்பதால் நல்ல செங்காட்டு மண்ணுக்கு மரம்போல திமுதிமுவென்று ஆளை மறைக்கும் உயரத்திற்கு வளர்ந்திருந்தன கிழங்குச்செடிகள். அடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையில் பதமாய் ஊறி பூரித்துக் கிடந்தது நிலம். அடிக்குச்சியில் கைவைத்து பூபோல இழுத்தால்கூட முனை முறியாமல் கிழங்கு மேலே வந்துவிடும். கரணைகரணையான கிழங்குகள் வெந்து வெடித்து கிளர்த்திவிடும் வாசனையை அவள் அப்போதே நுகரத் தொடங்கி விட்டிருந்தாள். 

அவள் முக்கியமாய் நோட்டமிட வந்தது இதையல்ல. காட்டைச் சுற்றி கரண்ட் கம்பி எதுவும் ஓடுகிறதா என்பது மட்டுமே அவளுக்கு உடனடியாய் தெரியவேண்டியிருந்தது. இரவானால் மலைக்காடுகளிலிருந்து கிளம்பி வந்து கிழங்குச்செடிகளையும் கடலைக்கொடிகளையும் உலும்பிப் போட்டுவிட்டுப் போய்விடுகிற காட்டுப்பன்றிகளைத் தடுக்க இந்த மலையடிவாரத்து பண்ணையக்காரர்கள் இப்போதெல்லாம் காட்டைச்சுற்றி கரண்ட்விடத் தொடங்கியுள்ளனர். முன்பெல்லாம் கரிமருந்து நிரப்பின நாட்டுத்தோட்டாவை வெடிக்கச்செய்து பன்றிகளை வாய் கிழித்துக் கொன்றவர்கள் இப்போது கரண்ட்டாபீஸ் ஆட்களுக்கும் பாரஸ்ட்காரங்களுக்கும் கையூட்டு கொடுத்துவிட்டு திருட்டுத்தனமாக கம்பி ஓட்டுகிறார்கள்.

நரம்புமாதிரி மெல்லிசான அந்த கொடிக்கம்பியில் சிக்கினால் பன்றி மட்டும்தான் சாகும் என்றில்லை. சுளுவில் கண்ணுக்குத்தெரியாத சன்னத்தில் உயிரெடுக்கிற எமன் பொழியடியில் நீண்டு படுத்திருப்பதறியாது மாட்டிக்கொண்டு செத்தவர்களின் முகமெல்லாம் நினைவுக்கு வந்து ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று அவளிடம் குசுகுசுப்பது போலிருந்தது. பனந்திட்டு கண்ணுப்பையன், இட்டேரி ஜடையன், வளத்தி மவன் கூப்புனு, சவுளுமேடு அங்காரன் என்று அந்தப்பக்கத்தில் பேர்பெற்ற திருடர்கள் பலரும் கரண்ட்டில் சிக்கி செத்துப் போயிருக்கிறார்கள். திருடப் போனவங்களை கரண்ட் பாய்ச்சி கொன்னுட்டாங்க என்று வழக்குப் போட்டு வாய்தா கேட்டு கச்சேரிப்படியேற எந்த சனத்துக்குத்தான் துணிச்சல் வரும்?

இப்படி கரண்டில் சிக்கிச் செத்த முதல்ஆள் பாண்டுவோட அப்பன் உருளையன்தான். அஞ்சாறு வருஷத்துக்கு முந்தி பாண்டுவும் அவங்கப்பன் உருளையனும் இதேமாதிரி ஐப்பசி மோடத்தில் தீபாவளிக்கு முதல்நாள் ராத்திரி வேலிவெட்டான் தோட்டத்துக்கு களவுக்குப் போயிருக் கிறார்கள். அது நல்ல கொழுத்தப் பண்ணையம். கைக்கு சிக்கிய காய்கசுறுகளை ரெண்டுசாக்கு நிறைய லாவிக் கிட்டு கிளம்பறப்ப, இருடா நாலு தேங்கா தள்ளிக்கிட்டுப் போலாம் என்று சொல்லி மகனை தொலைவில் காவலுக்கு நிறுத்தி விட்டு அப்பன்காரன் தென்னையேறியிருக்கிறான். உருளையன் நல்ல தாட்டிகமான ஆள். ஒரு குலை தேங்காயை பல்லில் கடித்துக்கொண்டு இறங்குகிற வலுவுள்ளவன் என்பார்கள் அவனை. ஆனால் அன்றைக்கு உச்சிமரத்தில் காத்திருந்த சாவு அவனது உயிரை உறிஞ்சியெடுத்துக் கொண்டு சக்கையாக வீசியது கீழே.

இது தெரியாமல் அப்பனின் கால்பட்டு தென்னமட்டை தான் விழுந்துவிட்டதாக்கும் என்று இருளைப் பார்த்துக்கொண்டு காத்திருந்திருக்கிறான் மகன். நேரமாகமாகத்தான் அவனுக்கு சந்தேகம் வந்து அவர்களுக்குள் புழங்குகிற சங்கேத ஒலி எழுப்பி அப்பனை அழைத்திருக்கிறான். அப்பனிடமிருந்து மறுசத்தம் வராமல் போகவே கிலேசம் பிடித்து இருட்டிலேயே அங்கும் இங்கும் உழப்பித் தேடி கடைசியில் அப்பனின் பிணத்தைத்தான் அவனால் கண்டெடுக்க முடிந்திருக்கிறது.

கருகல் நாற்றமடிக்கிற அப்பனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வூட்டுக்குப் போய் அம்மாக்காரியை எழுப்பியிருக்கிறான். ஓசையின்றி கதவைத் திறந்தவளுக்கு எல்லாமே விளங்கிவிட்டது. அழுது புரண்டு அக்கம்பக்கத்தை எழுப்பிவிடக் கூடாது என்று முந்தியை சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டாள். நடுவூட்டில் பிணத்தைக் கிடத்தி கதவை அடைத்துவிட்டு ராந்தல் திரியை ஏற்றிப் பார்த்தால் உடம்பு முழுக்க கருகிப் போயிருந்ததாம். மரத்துலயும் கரண்ட் விடுவாங்கன்னு தெரியாமப் போச்சே என்று அரற்றிக்கொண்டு அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து விடியறதுக்குள்ள வூட்டுக்குள்ளேயே குழியெடுத்து உருளையனை புதைத்துவிட்டு மூச்சுப்பேச்சில்லாமல் இருந்துவிட்டார்கள். ஏதோ பெரிய கேஸ்ல மாட்டி கடைசியில் ஊருபக்கமே வராம உருளையன் எங்கியோ தலைமறைவாயிட்டான் என்று ஊரார் பேசிக்கொள்வதை அவர்கள் இன்றுவரைக்கும் மறுக்கவேயில்லை. ஆனாலும் அப்படியிப்படி என்று விசயம் வெளியே கசியாமலுமில்லை.

உருளையனுக்கு ஆனதுபோல தனக்கு ஏதாச்சும் ஆகிவிட்டால் சாளைக்கு தூக்கிப்போகக்கூட ஒருத்தரும் இல்லையே என்று நினைத்துக் கொண்ட பொன்னி முன்பு போலிருந்தால் இந்நேரத்துக்கு அழுதிருப் பாள். இப்போதெல்லாம் கல்லே கரைந்தாலும் அவள் கண்மட்டும் கலங்குவதில்லை. எப்படியெல்லாம் சாகக்கூடாதுன்னு ஏற்கனவே செத்தவங்களப் பார்த்து உசாராயிருந்துக்க வேண்டியது தானே என்று தனக்குத்தானே தேற்றம் சொல்லிக் கொண்டு கரடு ஏறினாள்.

யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கரட்டில் விறகொடிக்க வந்தவளைப்போல ஏழெட்டை உடைத்து சிறுஞ்சுமையாய் கட்டிக் கொண்டு  திரும்பும்போது ‘என்னாடி பொன்னி கொட்டாப் பக்கம் வராமலேப் போற...’ என்ற குரலைக் கேட்டதும் அவளுக்கு இப்போதே  பிடிபட்டுவிட்டதைப் போல விலுக்கென்று மனசு பதைத்தது. மாரிக் கண்ணோட அண்ணம்பொண்டாட்டி வேடம்மாதான் பொழியைக் கடந்து வந்து கொண்டிருந்தாள். ‘இருந்த கொம்பு கோலு அல்லாத்தயும் எரிச்சாச்சு. அடுப்பெரிக்க ஏதாச்சம் பொறுக்கினுப் போலாமேன்னு இவுத்தாள வந்தேங்கா’ என்று சொல்வதற்குள் பொன்னிக்கு நாக்கு குழறியது. 

நஞ்சையும் புஞ்சையுமாக நாலுஇடத்தில் நிறக்கப் பண்ணையமுள்ள குடும்பத்துப் பொம்பளையானாலும் தன்னிடம் ஒருநாளும் ராங்கியா  நடந்துகொள்ளாத வேடம்மாளிடம் கதையடிப்பது பொன்னிக்கும் பிடித்தமானதுதான். ஆனால் இன்று கண்ணுக்கு கண் பார்த்து இயல்பாய் பேச முடியாமல் மல்லாடினாள். இன்னிக்கு ராத்திரி உன் கொழுந்தமூட்டுக் கெழங்கு காட்லதான் கைவைக்கப் போறேன் என்று தானே உளறிக் கொட்டிவிட நேருமோ என்று பொன்னி அஞ்சினாள். வேடம்மா தொண தொணவென்று பேசியதை காதில்லாவள்போல கேட்டுக் கொண்டிருந்தாள். பத்து சொல்லுக்கு ஒருவாட்டி தலையாட்டினாள் அல்லது சுருக்கமாய் பதில் சொல்லிவிட்டு மௌனம் காத்தாள். ‘ஈரத்த எடுத்துனு போய் எப்புடி எரியூடுவ? கொட்டாயாண்ட வா, நாலு குச்சி குடுத்துவுடறேன்’ என்று கூப்பிட்ட வேடம்மாளை தட்டமுடியாமல் அவளோடு போக வேண்டிய தாயிற்று.

கொல்லைக்கு மத்தியிலிருந்த வேடம்மாளின் கொட்டாய் கருப்பஞ் சோகையால் திண்ணென்று வேயப்பட்டதாயிருந்தது. ஊத்துமழைப் பெய்தாலும் ஆத்துவெள்ளம் வந்தாலும் தாங்கக் கூடியதாயிருந்த அது போன்ற ஒரு கொட்டாய் பற்றி பொன்னிக்குள் நெடுநாளாய் இருக்கிற ஆசை மோடகாலங்களில் கூடிவிடுகிறது. ஒழுகும் கூரையும் ஓதமேறிய தரையும் உள்ள சாளைக்குள் கிடந்து நடுங்குகிறவளுக்கு வேறென்ன நினைப்பிருக்கும்? வேடம்மாள் குடிக்க கடுங்காப்பியும் கடித்துக்கொள்ள பனவெல்லமும் கொடுத்தாள். கொறிப்பதற்கு கொடுத்திருந்த சோளப்பொறி மணத்துக் கிளப்பியது பசியை.

வேடம்மாள் எல்லாருக்கும் இப்படி கொடுப்பவளில்லை. ஊருக்குள் ளிருக்கிற வீட்டை பூட்டிவைத்து விட்டு கொல்லைக்குள் இந்த ஒண்டிக்கொட்டாயை போட்டுக்கொண்டு குடிவந்ததே சொந்த சாதிசனம் அண்டி விடக்கூடாது என்பதற்காகத்தான். ஆனாலும் பொன்னியைப் பார்த்து விட்டாளென்றால் மட்டும் வெறுங்கையோடு அனுப்பமாட்டாள். தன்னந் தனியா நின்னு சீவிக்கிற தெகிரியம் வாய்க்கப்போய்தான் இன்னிக்கு நீயும் ஒரு மனிசியா இருக்கிற... என்ற அங்கலாய்ப்போடு எதையாவது கொடுத்தனுப்புவாள்.

போடுவாரப்பன் மலைமீது ஏகத்துக்கும் இருட்டிக்கொண்டு மழை இறங்கியது. நான் போறேங்கா என்று எழுந்தவளை வேடம்மாள் நிறுத்தினாள். அங்கப்போயி ஒண்டியா உருக்குருக்குன்னு கிடக்கறதுக்கு இங்கத் தான் செத்தநேரம் இரேன்டி. காலைல கடைஞ்ச கீரை இருக்கு. களி கிண்டுறேன். நாலுவாய் போட்டுனு பொழுதெறங்கப் போவ... என்று அவள் தடுத்தபோது பொன்னி மறுப்பேதும் சொல்லாமல் நின்று கொண்டாள்.

வேடம்மாள் கொடுத்த களி விருந்தா யாசகமா என்று அவளை குழப்பியடித்தது. உள்ளவன் தின்னா மருந்து இல்லாதவன் தின்னா நரகலுங்கிற கதையாட்டம்தான் இதுவும் என்று தோன்றியது. ஆனாலும் சுடுகளியின் வெதுவெதுப்பு பொன்னியை புதுமனுசி போல ஆக்கிக்கொண்டிருந்தது. ஒரு உருண்டைக் களியில் அடைபட்டுப் போகிற இத்தனூண்டு வயித்துக்காகவா திருடப் பார்க்கிறேன் என்று தன்னையே கேட்டுக்கொண்டாள்.

களவெடுக்கும் யோசனையை விட்டுவிட்டு,  வேலை செய்து கழித்துவிடுகிறேன் என்று இவளிடமே இரண்டு வள்ளம் கம்போ சோளமோ கடனாகக் கேட்டு வாங்கி இந்த மோடத்தை ஓட்டிவிடலாமா என்றும் யோசனை ஓடியது. ஆனால் இப்படி சொல்லியும் சுத்துப்பக்க பண்ணையங்களில் அப்பப்ப வாங்கியிருக்கிற கடன் ஏழெட்டு வள்ளத்தை தாண்டியிருப்பதால் அந்த யோசனையையும் களியோடு சேர்த்து விழுங்கிக் கொண்டாள். 

வேடம்மாளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவள் ராத்திரியில் தான் வந்துபோக வேண்டிய பாதையை காலுக்கும் கண்ணுக்கும் பழக்கியபடியே சாளைக்குத் திரும்பினாள். அடிக்கடி புழங்கின பாதைதான் என் றாலும் ராவேளையில் தன்னந்தனியாக வந்து போகுமளவுக்கு அதை மனசுக்குள் பதியவைத்துக் கொள்ள வேண்டியிருந்தது அவளுக்கு.
***
மழை மோடம் பிடித்துக்கொண்டால் காடுகரைகளில் களவுகள் பெருகுவது சகஜம்தான். நிலம் நீச்சு உள்ளவர்களே தள்ளாடுகிறபோது கூலி நாழிக்காரர்கள் பசியடக்கும் தவசதானியங்களைத் தேடி ராவுபகலென்று பாராமல் காடுகாடாக கன்னம்வைத்து அலைய வேண்டியதாயிற்று.  மண்ணையள்ளிக் கொட்டி மரத்துப்போகச் செய்ய வயிறு ஒன்றும் குளமோ குட்டையோ அல்ல என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சூளையடுப்பு போல காந்தலெடுத்து எரியும் இந்த வயிற்றுக்குள் துருத்தி அடைக்க அசலூருக்குப் போயாவது கம்பங்கருது, ஆரியக்கருது, கடலைக்காய் என்று கைக்கு சிக்கியதையெல்லாம் பீராய்ந்து கொண்டு வந்து ஒருவேளைக்காவது சீவனம் கழித்தார்கள்.

உப்பிட்டு வேகவைத்த வெறும் முருங்கக்கீரையை மட்டும் தின்று பசியாற்றிக் கொள்கிற குடும்பங்களைப் பார்க்கிறபோது தன்பாடு தேவலாம் என்று பொன்னிக்கிருந்த நினைப்பு இந்த ரெண்டுநாளில் நமுத்துப் போயிருந்தது. இனிமேலும் தாக்குப்பிடிக்க எதுவுமில்லாத தானும் மற்ற வர்களைப்போலவே திருடித்தானாக வேண்டும் என்று தோன்றிய பிறகு தான் அவள் கிட்டத்தில் இருக்கிற மாரிக்கண்ணமூட்டு கிழங்குக்காட்டை குறிவைத்தாள். 

காலையிலிருந்து கங்கணம் கட்டி பல ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வைத்திருந்த பொன்னி கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டிருந்தது. கொடியில் உலரப்போட்டிருந்த பட்டாளத்தான் உடுப்பு காற்றில் படபடப்பதை பார்க்கும்போது எடுத்துப் போட்டுனு கிளம்பு என்கிற மாதிரியும் இருந்தது, வேணாம் வேணாம் என்று பதைக்கிற மாதிரியும் தெரிந்தது. 

சாயங்காலம் தின்ற களியில் வயிற்றின் காந்தல் தணிந்து விட்டதால் தான் களவெடுக்கும் எண்ணத்தில் இருந்த தீவிரம் குறைந்துவிட்டதோ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு படுத்தே கிடந்தாள். களவெடுக்கப் போகாமல் இருப்பதற்கான நியாயங்களை ஒரு வேலியைப் போல தனக்கு முன்னே எழுப்பி அதில் தன்னைத்தானே அடைத்துக் கொண்டு தப்பித்துவிட முடியுமா என்று பார்த்தாள்.

ஆனால் பாசத்திலோ பரிதாபத்திலோ வேளாவேளைக்கு யாராவதொரு வேடம்மாள் எதையாவது தந்து பசியாற்றிக் கொண்டிருக்கமாட்டாள் என்ற உண்மை அவளை நெரித்துப் பிதுக்கியது.

ஒருவேளை அவள் இன்னும் கொஞ்நேரத்தில் களவெடுக்கப் போகக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக