செவ்வாய், மே 1

மே1: உழைப்பாளர் தினமும் ஐசிஐசிஐ மோசடியும் - ஆதவன் தீட்சண்யா


மே-1, சர்வதேச தொழிலாளர் தினம். வேலைநேரத்தை எட்டுமணி நேரமாக குறைக்க வேண்டியும் இன்னபிற அடிப்படையான கோரிக்கைகளுக்காகவும் நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் நாள். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் மே 1 பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை இல்லாத பகுதிகளில் அதற்கான போராட்டம் தொடர்கிறது.

இந்தியாவில் மத்திய அரசு பொதுவிடுமுறை தினமாக அறிவிக்காவிட்டாலும் மாநில அரசுகளும், வங்கி, காப்பீடு போன்ற நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் மே தினத்திற்காக விடுமுறை அளித்துவருகின்றன. ஐசிஐசிஐ வங்கியும்கூட மே1 அன்றைக்கு நாடு முழுவதும் தனது கிளைகளுக்கு விடுமுறை விட்டுள்ளது. ஆனால் உழைப்பாளர் தினத்திற்காக அல்ல. அன்றைக்கு மகாராஷ்டிரா தினத்திற்காகவாம். ஆட்டுப்புழுக்கையை வாங்கிக்கொண்டு ஐசிஐசிஐயில் பணம் தருகிறார்கள்  என்று சொல்வது எந்தளவிற்குப் பொய்யோ அந்தளவிற்குப் பொய்யானது மே முதல்நாளை உழைப்பாளர் தினம் என்று சொல்லாமல் மறைப்பது.

மே முதல்நாளை நிராகரித்து விஸ்வகர்மா பிறந்த தினத்தை (?)  உழைப்பாளர் தினமாக கொண்டாடவேண்டும் என்று சங் பரிவாரத்தைப்போலவே வேறு ஏதாவதொரு நாளை உழைப்பாளர் தினமாக கொண்டாடச் சொல்லி ஐசிஐசிஐயும் ஜோக்கடிக்கிறதா என்று பார்த்தால் அதுவுமில்லை.   மாறாக, மே முதல்நாளை சட்ட தினம் (Law Day) என்றும் விசுவாச தினம் ( Loyalty Day) என்றும் அறிவித்து உழைப்பாளர் தினத்தை இருட்டடிப்பு செய்யும் அமெரிக்காவுக்கு நிகரானதொரு அரசியல் மோசடியில் ஐசிஐசிஐ ஈடுபட்டுள்ளது

30.4.12 அன்று ஐசிஐசிஐ ஒசூர்கிளையின் ஒளிபரப்புத்திரையில்மே1 விடுமுறை: மகாராஷ்டிரா தினம்என்ற செய்தியை படிக்க நேர்ந்ததும் அதுகுறித்து கிளைமேலாளரிடம் வினவினேன். நாளை மே தினத்திற்காகத்தான் விடுமுறை என்றார். பின் ஏன் இவ்வாறு ஒளிபரப்பாகிறது என்று கேட்டதற்கு, மகாராஷ்ட்டிரா தினமும் நாளைக்குத்தான்- மும்பையிலிருந்து  மத்தியப்படுத்தப்பட்ட ஒளிபரப்பு என்பதால் இங்கும் அவ்வாறே தவறுதலாக வருகிறது என்று தெரிவித்தார்

இதே மத்தியப்படுத்தப்பட்ட ஒளிபரப்பில், தனது வணிகம் சார்ந்த கருத்துகள் என்று வருகிறபோது மட்டும் அந்தந்த வட்டாரத்தின் மொழியில் அந்தந்தப் பகுதிக்கேயுரிய தனித்தன்மைகளை உள்வாங்கி லாவகமாக வெளிப்படுத்த முடிகிற இவ்வங்கியினால் அதன் விடுமுறையையும் அவ்வாறே பிரித்து அறிவிக்க முடியாதா என்ன? முடியும் முடியாது என்பதல்ல, மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் தினம் என்று தனது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கக்கூடாது என்பதுதான் ஐசிஐசிஐயின் பிரச்சனை. அதனால்தான் அது மகாராஷ்டிரா என்ற ஒரு மாநிலம் உருவான தினத்தைக் கொண்டாட இந்தியா முழுவதிலும் உள்ள தனது அத்தனைக் கிளைகளுக்கும் விடுமுறை விட்டிருக்கிறது. பீகார் அல்லது வேறு ஏதாவதொரு மாநிலம் உருவான தினத்திற்காக மகாராஷ்ட்டிராவிலும் விடுமுறை என்று அறிவித்திருக்குமானால் சிவசேனா, நவநிர்மாண் சேனாவின் சூறையாடலுக்கு  ஒரு ஐசிஐசிஐ கிளைகூட தப்பியிருக்க முடியாது. மகாராஷ்டிரா மாநிலம் உருவான மே முதல்நாளை மகாராஷ்ட்டிரா தினமாக கொண்டாடும் அம்மாநில மக்களது உணர்வுகளை மதித்து அன்றைக்கு ஐசிஐசிஐ விடுமுறை அளிப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வேறு எந்தவொரு மாநிலம் உருவான தினத்தையும் தன்னுடைய விடுமுறை நாளாக அறிவிக்காத ஐசிஐசிஐ, மகாராஷ்ட்டிரா தினத்திற்கு மட்டும் விடுமுறை என்று அறிவித்திருப்பது எதனால்

குறிப்பிட்ட ஒரேநாள் வெவ்வேறு வரலாற்றுரீதியான காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறும் போது, அந்த எல்லாக்காரணங்களையும் குறிப்பிட்டு அன்றைக்கான விடுமுறையை அறிவிப்பதை இவ்வங்கி வழக்கமாக கொண்டுள்ளதை அதன் இணையதளத்தில் உள்ள விடுமுறைதினங்களின் பட்டியல் (http://www.icicibank.com/pfsuser/icicibank/ibank-nri/nrinewversion/common/holiday.htm) தெரிவிக்கிறது. (உதாரணத்திற்கு, ஏப்ரல் 14:  டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவிசுவ சங்கராந்தி/ சிராபோ/ பிஜூ பண்டிகை/ வைசாகி/ போஹாக் பிஹூ). இதன்படி மே முதல்நாளை சர்வதேச உழைப்பாளர் தினம்மகாராஷ்டிரா தினம் என்று குறிப்பிட்டிருந்தால் அதை நேர்மையான செயலாக கருத முடியும். அவ்வாறின்றி மே முதல்நாளை வெறுமனே மகாராஷ்ட்டிரா தினமாக மட்டுமே ஐசிஐசிஐ அறிவிப்பதன் பின்னே உள்ள அரசியல் என்ன? எட்டுமணி நேர வேலைக்காகப் போராடி உயிர்நீத்த தொழிலாளர்களின் வரலாற்றை 12 மணிநேரம் வேலை பார்க்கும் தன்னுடைய ஊழியர்கள் அறியக்கூடாது என்று அஞ்சுகிறதா ஐசிஐசிஐஒற்றுமை, சங்கம், போராட்டம், கூட்டுபேரச்சக்தி என்பவற்றை நினைவூட்டும் உழைப்பாளிகளின் போராட்ட வரலாற்றை மக்களது நினைவுப்பரப்பிலிருந்து அழிப்பதற்கு அது விரும்புகிறதா? உண்மையான வரலாற்றுக்காரணங்களுக்காக கொண்டாடப்படும்/ நினைவு கூர்ந்திடும் புகழ்பெற்ற நாட்களை அவமதிப்பதற்காகவோ முக்கியத்துவமிழக்கச் செய்வதற்காகவோ அந்த நாட்களின்மீது வேறு மலினமான காரணங்களை புனைந்தேற்றுகிற பிற்போக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளதைப் பார்த்தால், ஐசிஐசிஐ வெறும் வங்கித்தொழிலை மட்டும் செய்துகொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது.

சர்வதேச உழைப்பாளர் தினத்தை இருட்டடிப்பு செய்வதை ஒரு முழுநேரத் தொழில் போல செய்து வருகின்ற அமெரிக்காவிலேயே வால்ஸ்டீரிட்டை இடங்கொள்ளும் இயக்கத்தவர் இவ்வாண்டின் மே தினத்தில் சக்திமிக்க வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த ஐசிஐசிஐ எம்மாத்திரம் என்று ஒதுக்கிவிட்டுப் போகாமல் அதற்கு நமது கண்டனத்தை தெரிவிப்போம். கூடவே, 126 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆதிக்கச்சக்திகளால் வெறுக்கப்படுமளவுக்கும் அச்சுறுத்துமளவுக்கும் மே தினம் வலுவோடுதான் இருக்கிறது என்கிற செய்தியையும் உலகறியச் சொல்வோம்.

4 கருத்துகள்:

  1. we all must condom the actions of ICICI BANK FROM ALL our forums..The news must be spread to all news papers/news channels..Like this matters shall be taken as"priority" in our work..

    பதிலளிநீக்கு
  2. அன்பிற்கினிய ஆதவன் அவர்களுக்கு

    நேற்று நீங்கள் அலைபேசியில் இந்தச் செய்தி குறித்துச் சில விஷயங்களைக் கேட்கும்போதே கொதித்த உங்கள் கொதிப்பு கட்டுரையில் இன்னும் தீவிரமாகப் பதிவாகி உள்ளது. மிகவும் தாக்கம் மிகுந்த அற்புதமான கட்டுரை. வரிக்கு வரி அருமை.
    கடவுள் உண்டா இல்லையா என்ற தோழர் ஏ பாலசுபிரமணியன் அவர்களது அற்புதமான நூலுக்கு அறிமுகம் எழுதுகையில் தோழர் வே மீனாட்சிசுந்தரம் ஒரு சங்கதியைக் குறிப்பிட்டிருப்பார்.

    அதுவாவது:

    கார்ல் மார்க்ஸ் தமது மூலதனத்தின் முதல் தொகுதிக்கான முன்னுரையில் சொல்லியிருப்பார்: இங்கிலாந்தில் உள்ள மிகச் செல்வாக்குள்ள தேவாலயத்தில் அனுசரிக்கப்பட வேண்டிய விசுவாசத்தின் பெயரிலான முப்பத்தொன்பது சரத்துக்கள் உண்டு. அந்த முப்பத்தொன்பதில் முப்பதெட்டு குறித்த கேள்விகளை எவரும் எழுப்ப முடிந்தாலும் முடியும், ஆனால் தேவாலயத்திற்கு வரும் வருவாயின் முப்பத்தொன்பதில் ஒரு பங்கு எங்கே செல்கிறது என்று கேட்கத் துணிந்தால் உங்கள் தலை கழுத்தின் மீது உட்கார்ந்திருக்க முடியாமல் போய்விடும்..

    அரசியல் விவகாரங்களில் மூலதனமும், ஆதிக்க சக்திகளும், அதன் காவலாளிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

    தலைமைச் செயலகத்தில் நடந்த மிக முக்கிய போராட்டம் குறித்து அறிவீர்கள். தோழர் ராஜியைக் காட்டிலும் அதி தீவிர சொற்களைக் கையாண்ட பேச்சாளர்கள் அப்போதும் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள் மாநிலம் முழுக்க அரசு ஊழியர் அரங்கில். ஆனால் ராஜி ஏன் இலக்கு வைக்கப் பட்டார் என்றால், அவர் உலக வங்கி நிபந்தனை குறித்த நேரடி சங்கதியை ஊழியர்கள் மத்தியில் போட்டு உடைத்தார்.

    மத்திய தர ஊழியர்கள், ஏன், சில தொழிற்சங்கத் தோழர்களே கூட தமது மனைவியை - குழந்தைகளை கோயிலுக்கும், வேறு விசேஷங்களுக்கும், நண்பர்கள் வீட்டுக்கும், ஏன் மோசமான திரைப்படம் பார்க்கவும் தயங்காமல் அனுமதிப்பதும், தொழிற்சங்கம் சார்ந்த விஷயங்களின் வாசனை கூட முகர விடாமல் தற்காப்பதும் ஏன் என்பதும் தெரிந்தது தானே...

    மிக தற்செயலாகக் கிடைத்த ஒரு துருப்பை வைத்து தனியார் பெருமுதலாளி வர்க்கத்தின் அரசியல் புத்தியை அம்பலப் படுத்தியது வாழ்த்துக்குரியது.

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  3. அன்பிற்கினிய ஆதவன் அவர்களுக்கு

    அருமையான கட்டுரை. நேற்றே இந்த விஷயம் தொடர்பாக நீங்கள் அலைபேசியில் அழைத்துச் சிலவற்றைக் கேட்டறிந்தபோதே கொதித்த கொதிப்பு இன்னும் தீவிரமாகப் பதிவாகிறது. ஒவ்வொரு வரியும் முக்கியம். தாக்கம் மிகுந்தது.
    ஆளும் வர்கத்தின் எச்சரிக்கை உணர்வின் மீதான சம்மட்டி அடியை அடித்தவாறே மே தினம் எத்தனை சக்தி மிக்கதாக இன்னும் திகழ்கிறது என்பதோடு அதை இணைத்திருப்பது அற்புத இடம்.
    வாழ்த்துக்களுடன்

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  4. ஒரு கருத்தைப் பதிவு செய்யும் போது எந்தெந்த விஷயங்களையெல்லாம் ஆராய வேண்டும் என்பதை உங்களது இந்தக் கட்டுரையும் தெளிவுபடுத்துகிறது தோழர்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...