அரசியல் மிருகம்?-ஆதவன் தீட்சண்யா


மணிகண்டன், தமிழகம்

கேள்வி: கட்சியில் இருப்பது உங்களைப்போன்ற படைப்பாளிக்குத் தடையில்லையா? நீங்கள் கட்சியில் இயங்குவது பற்றி சுய விமர்சனம் உண்டா?

அமைப்புகளில் சிக்கிக்கொள்ளாத சுதந்திரப்படைப்பாளிகள் என்று தம்மை சொல்லிக் கொள்வோர், தங்களது சுதந்திரமான படைப்புணர்வைக் கொண்டு அப்படியென்ன காத்திரமான இலக்கியத்தை படைத்துக் கிழித்திருக்கிறார்கள்? அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவதற்கு தங்களது சுதந்திரத்தை எவ்வளவுதூரம் பயன்படுத்தியிருக்கிறார்கள்? என்று உங்களிடம் எதிர்க்கேள்வி ஒன்றை கேட்கின்ற வாய்ப்பை நான் வேண்டுமென்றே கைவிடுகிறேன்.

இறுகி கரடுதட்டிப் போன குடும்பம், சாதி, மதம் போன்ற அமைப்புகளுக்குள் இருப்பதும் பணிவிதிகள் அவ்வளவுக்கும் கட்டுப்பட்டு ஓரிடத்தில் ஊழியம் செய்வதும் படைப்புப்பணிக்கு தடையாக இல்லையா என்கிற கேள்வி ஒருமுறைகூட கேட்கப்படாமலிருப்பதும், ஒரு அரசியல் இயக்கத்தல் இருப்பது தடையாக இல்லையா என்ற கேள்வி திரும்பத்திரும்ப எழுப்பப்படுவதும் தற்செயலானதுதானா என்கிற சந்தேகம் எனக்கிருக்கிறது.
‘‘.... படைப்பு என்பது தனிநபர் செயல்பாடு. இடதுசாரித் தோழர் ஒருவர் ஓட்டல் வைத்திருந்தால், அவர் தினமும் ‘சாம்பார் நல்லா இருக்குதா’ என்று கட்சி அலுவலகத்தில் போய்க் கேட்டுவிட்டு தொழில் நடத்துவதில்லை. அதே போல் நானும் என்னுடைய கவிதையை யாரிடமும் கொண்டு போய் கருத்துக் கேட்டுவிட்டு வெளியிடுவதில்லை. இயக்கத்தைப் பற்றி தெரியாதவர்களும் அதற்குள்ளிருந்து இயங்காதவர்களும் அவர்களாகவே அனுமானத்தில் எதையாவது சொல்வது இங்கொன்றும் புதுசல்ல. கட்சி அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு எழுத்தாளரையும் ஒரு கமிஸார் கண்காணித்துக் கொண்டிருப்பதாய் குற்றம்சாட்டுவதெல்லாம் ரசமான கற்பனைதான். எழுத்து என்பது தனியொருவரின் அனுபவம், அவர் மீதான வன்முறைகள், அவருக்குக் கிடைக்கிற சுதந்திரம் சார்ந்த விஷயம். இதில் எந்த இயக்கமும் தலையிடுவதில்லை...’’ என்று இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே ஒருமுறை பதில் சொல்லியிருக்கிறேன். (நான் ஒரு மநுவிரோதி / பக்- 50).

அமைப்பு / கட்சி என்பது குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அணிதிரளும் மனிதர்களின் தொகுப்பு தான். அந்த நோக்கங்களை அடைவதற்கான அன்றாட / தொலைநோக்கு செயற்திட்டங்கள் / நடைமுறைகள் குறித்து எனக்கொரு கருத்து இருக்கிறதென்றால் அதை அமைப்பிற்குள் பரவலாக்குவதற்கும் முடிந்தால் அமைப்பின் கருத்தாகவே மாற்றிவிடுவதற்கும் தொடர்ந்து சோர்வின்றி முயற்சிப்பதை மட்டுமே எனது வேலையாக கருதுகிறேன். அதேவேளையில் என்னைப்போலவே மற்றவர்களும் தத்தமது கருத்துக்களோடு வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனம் கொள்ளத் தவறிவிடுகிறேன். எனவே அவர்கள் அவர்களது கருத்தை முன்வைக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு பதிலாக என்னோடு முரண்படுகிறார்கள் என்று மட்டுமே குறுக்கிப் புரிந்து கொண்டிருக்கிறேன். நான் விரும்புகிற விசயங்களை அமைப்பு செய்யும்போதோ அல்லது நான் முன்வைக்கும் கருத்தை அமைப்பும் வெளிப்படுத்தும்போதோ அமைப்பு சரியான வழியில் செல்வதாக கருதிக்கொள்வதும், எனக்கு உடன்பாடில்லாத கருத்துகளை வெளிப்படுத்தும்போதோ நடவடிக்கைகளில் ஈடுபடும்போதோ இயக்கம் தடம்பிறழ்ந்துவிட்டதாக குற்றம் சாட்டுவதுமாக இருந்திருக்கிறேன். அந்தப் பிரச்னையில் அவர்கள் மோசம், இந்தப் பிரச்னையில் இவர்கள் மோசம்- ஆகமொத்தத்தில் என்னைத்தவிர எல்லோரும் மோசம் என்று எப்போதும் பிறரை குற்றம்சாட்டுகிறவனாக பலநேரங்களில் வெளிப்பட்டிருக்கிறேன். என்கூட வருவதற்கு என் நிழலுக்கும் கூட தகுதியில்லை என்கிற அளவுக்கு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அம்மாதிரியான தருணங்களில் என்மீதான கழிவிரக்கம் மிகுந்து ஒடுங்கிப்போய்விடுவேனேயன்றி அமைப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

கட்சிகளும் அமைப்புகளும் மோசம் என்று சொல்லிவிட்டு வெளியேறியவர்களெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கிறேன். அவர்கள் தத்தமது தலைமையில் புதிதுபுதிதாக அமைப்புகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறார்கள். அதாவது தலைமைப் பொறுப்பில் தம்மைத் தாமே இருத்திக்கொள்கிற அமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது ஏதாவது தொண்டு (?) நிறுவனங்களை நத்திப் பிழைக்கிறார்கள். தமது அரசியலோடு இணங்கிப்போகிறவர் என்று இன்னும் ஒரே ஒருவரை அங்கீகரிப்பதற்குகூட தயாரில்லாத அளவுக்கு தனிமைப்படுத்திக் கொள்கிறவர்கள், நூற்றுக்கு நூறு சதம் தான் மட்டுமே சரியாக நடப்பதாகவும் உலகமே தப்பாக சுழன்றுகொண்டிருப்பதாகவும் கருதிக் கொண்டிருப்பவர்கள் என்று இவர்கள் பலவிதங்களில் தென்படுகிறார்கள். தனது ஒருநாள் சம்பளத்தையோ, ஒருவேளை சாராயத்தையோகூட இழக்கத் துணியாத இவர்கள், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அரசியல் இயக்கங்களில் அர்ப்பணிப்போடு செயல்படுகிறவர்களைப் பற்றி எப்போதும் அவதூறுகளை பரப்பிக்கொண்டேயிருப்பார்கள். அரசியல் உணர்வுள்ளவர்கள் ஏதேனுமொரு அமைப்பிற்குள் அணிதிரண்டுவிடாமல் ஒவ்வொருவரும் உதிரிகளாக கழன்று திரிவதே சுதந்திரமானது சரியானது என்று வாதிடுகிற இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அமைப்புகளைவிட தீவிரமாக அரசியல் பேசி அமைப்புகளுக்குள் அணிதிரளக்கூடியவர்களை தனது ரசிகப் பட்டாளமாக மாற்றிக்கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள். தாங்கள் சொல்வதைக் கேட்க உலகமே காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிற இவர்கள், வேறு யார் சொல்வதையும் கேட்பதற்கு காதில்லாதவர்களாக மாறி விடுகிறார்கள். இவர்களில் ஒருவனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை.

‘‘.... அரசியலுக்கு வருவதென்றால் கட்சி அமைத்துக்கொள்வது என்று பொருள். கட்சிப் பின்னணி இல்லாத அரசியல் வீண் வேலை. சுயேச்சையாக இருப்பேன் என்று சில அரசியல்வாதிகள் சொல்லலாம். அவர்கள் தனிமையில் தங்கள் தங்கள் நிலத்தை உழுதுகொண்டு இருக்கவேண்டியது தான். அத்தகைய அரசியல்வாதிகளை நான் எப்போதுமே நம்புவது இல்லை. யாரோடும் சேர முடியாத ஓர் அரசியல்வாதி எந்தப் பயன் நடைமுறை நோக்கத்துக்கும் பயன்பட மாட்டான். அவனால் எதையும் சாதிக்க முடியாது. அவனுடைய நிலத்தில் ஒரு புல்கூட முளைக்காது. பெரும்பாலான அரசியல்வாதிகள் சுயேச்சையாக இருக்க நினைப்பது அவர்களுடைய அறிவு நேர்மையாலல்ல, தங்களுக்கு அதிக விலை நிர்ணயித்துக் கொண்டு தங்களைத் தாங்களே விற்றுக் கொள்வதற்காகத்தான். இதற்காகத்தான் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் சுதந்திரமாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அரசியல் சுயேச்சை பற்றிய என் மதிப்பீடு இதுதான். அனுபவமும் இதுதான். கட்சியில்லாமல் அர்த்தமுள்ள அரசியல் நடத்த முடியாது என்பதே என் கருத்து..’’ என்கிற அண்ணல் அம்பேத்கரின் கூற்றை (தொகுதி 37, பக்- 241) படித்ததனால் எனக்குள் ஏற்பட்ட மாற்றமாகக்கூட இதை நீங்கள் கருதிக்கொள்ளலாம்.


ஹம்சாவர்த்தினி, மலேசியா

கேள்வி: உங்கள் சிறுகதைகளில் (ஒன்றிரண்டு படித்துள்ளேன்). ஆனால் அதில் நகைச்சுவை துள்ளுகிறது. நீங்கள் பேசும் போதும் அப்படித்தானா?

பொதுவாக என்னை வறட்டுவாதி, அரசியல் மிருகம் என்றெல்லாம் எனது நண்பர்கள் கடிந்துகொள்வதுண்டு. நிகழ்வுகள் மீது என்னால் வினையாற்ற முடியாத போது விலகி நின்று பார்ப்பதும் அவற்றை பகடி செய்து ஆற்றிக் கொள்வதுமாக நான் எழுதிய சில கதைகள் அங்கதத்துடன் வெளிப்பட்டிருப்பது உண்மைதான். பேசுபொருள் என்ன, பங்கேற்பாளர்கள் யார், நிகழ்வின் நோக்கம், அப்போதைய மனநிலை உள்ளிட்ட காரணங்களால் சிலவேளைகளில் பேச்சும் அவ்வாற அமைந்துவிடுவதுண்டு. எதற்கும் நாம் ஒருமுறை பேசுவோம், பிறகு நீங்களாக ஒரு முடிவுக்கு வாருங்களேன்.

விவேகாநந்தன் அருணாசலம், சென்னை

கேள்வி: இலக்கியத்தில் ஈடுபட அடிப்படை பயிற்சியாக எதைச் சொல்வீர்கள். கொஞ்சம் கைட் செய்யுங்கள் சார்.

வழிகாட்டுவதற்கு நான் ஆளில்லை நண்பரே. என் எழுத்தனுபவங்களை வேண்டுமானால் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் அந்த அனுபவங்களை பொதுமைப்படுத்த முடியாது என்பதே என் கருத்து.

கரண், துபாய்

கேள்வி: மறுபிறப்பு மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2012 மே 18-20 வரை ஒசூரில் நடந்த படைப்பூக்க முகாமில் பிரளயன் வாசித்தக் கட்டுரை இப்படியாக முடிகிறது:

‘‘மரணத்துக்குப் பின் வாழ்க்கையிருக்கிறதா என்று கேட்டால் உடனே முற்போக்காளர்களாகிய நாம் இதற்கு பதில் சொல்லத் தொடங்கிவிடுகிறோம். அது சரிதான். ஆனால், மரணத்துக்கு முன் இங்கே வாழ்க்கையிருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு என்ன சொல்லப்போகிறோம்?’’. இந்தக் கேள்வி உங்களுக்கான பதிலாகவும் இருக்கிறது என்றே கருதுகிறேன்.

நன்றி:http://www.vallinam.com.my ஜூன் இதழ

3 கருத்துகள்:

 1. முதல் கேள்விக்கு, தாங்கள் அளித்துள்ள பதிலால் வாயடைத்துப்போனேன். அப்படியே புரட்டிப்போட்டுவிட்டீர்கள் சார்.
  இரண்டாவது கேள்வி.. உங்களின் சிறுகதைகள் புரிவதே பெரிய விஷயம் தான். அதில் நகைச்சுவைகள் இருப்பதைக் கண்டுக்கொண்ட ஹம்சவர்த்தினிக்கு பாராட்டுகள்.
  மூன்றாவது கேள்விதான் படு சுவாரிஸ்யம். இலக்கியத்திற்கு வழிகாட்டுதலைப் போன்றதொரு கடுமையான காரியம் வேறுண்டோ!? தமிழ் கற்க வழிகாட்டலாம், இலக்கியத்தைக் கற்க முடியுமா?நல்ல கேள்வி சார் இது. உங்களின் பதில் அற்புதம்.

  பதிலளிநீக்கு
 2. ஆதவன் அவர்களே! மணிகண்டன் அவர்கள்கெள்விக்கு நீங்கள் அளித்துள்ள பதில் நிறைவாக இருந்தது.---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 3. தோழர். ஆதவன், உங்களுடைய கேள்வி பதில் இடுகை நன்றாக உள்ளது, குறிப்பாக சுயேச்சை அரசியல்வாதிகளைப் பற்றிய பார்வை.

  பதிலளிநீக்கு