கோபக்கார எழுத்தாளர்களும் கும்கி யானைகளும் -ஆதவன் தீட்சண்யா

சிவசுப்ரமணியம்,
துபாய்

கேள்வி: ஆதவன் அவர்களுக்கு, நான் அண்மையில்தான் துபாய்க்கு பணி நிமித்தமாகச் சென்றேன். ஓரளவு எனக்கு வாசிப்பு பின்புலம் உண்டு. ஆனால் துபாயில் நான் சந்திக்கும் இள தலைமுறை பலருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா மட்டுமே அறிமுகமாகின்றனர். வலைப்பூதான் அதற்கு காரணம் எனவும் சொல்ல முடியவில்லை. பலருக்கும் இப்போது தளங்கள் உள்ளன. உண்மையில் இவர்கள்தான் இன்றைய வாசகர்களைக் கவர்கின்றனரா? எந்நிலையில்?

குறிப்பிட்டதொரு பிராண்டை பிரபலமாகிவிட்டால் அதற்குப்பிறகு அந்தப் பெயரில் எந்தக் குப்பையையும் விற்கமுடியும் என்பது சந்தைவிதி. பிரபலமான அந்த பிராண்டை உபயோகிப்பதை ஒரு பெருமிதமாக கற்பிதம் செய்து கொள்வதுதான் நுகர்வுக் கலாச்சார மனநிலை. சந்தைமயப்படுத்தப்பட்ட இச்சமூகத்தில் இலக்கியத்தையும் ஒரு சரக்காக மாற்றும் நோக்கில் எழுத்து வியாபாரத்தை அல்லது வியாபார எழுத்தை ஊக்குவித்து குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை ‘பிராண்டுகளாக’ மாற்றுவதற்கு சில பத்திரிகைகளும் பதிப்பகங்களும் செய்துவருகிற தொடர்முயற்சிகளை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. சந்தையின் தேவைகளுக்குப் பொருந்திப் போவதற்கு தயாராயிருக்கிற எழுத்தாளர்கள் ‘விரைவாதமா புட்டைவீக்கமா நரம்புத் தளர்ச்சியா ஆண்மைக்குறைவா? உடனே வாருங்கள்...’ என்று பொதுக் கழிப்பிடச்சுவர்களில் அழைப்பு விடுக்கும் ‘சகல நோய்களையும் குணப்படுத்தும் கைராசி மருத்துவர்’ போல மாறுகிறார்கள். பழம் பெருமை பேசுகிற, இறுகிய சமூக ஒழுங்குகளை நியாயப்படுத்துகிற, பொதுப்புத்தியை குறுக்கீடு செய்யாத, அதிகாரத்திற்குப் பணிந்து போகிற அல்லது துணை நிற்கிற, வாசகமனதை தொந்தரவு செய்யாத, மறைவிட நமைச்சல்களை சொரிந்து கொடுக்கிற எழுத்துகளை முன்வைக்கும்போது அவர்களைக் கொண்டாடுவது வணிகப் பத்திரிகைகளுக்கும் உவப்பானதே. சாரமற்ற விசயங்களை தன்காலத்தின் அதிமுக்கியப்பிரச்னையாக முன்னிறுத்தி எழுதி மெய்யான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்பவும்கூட இந்த எழுத்தாளுமைகள் தயங்குவதில்லை.

மேற்சொன்ன மலினமான காரணங்களைத் தவிர்த்து வேறு எதை முன்னிட்டு நீங்கள் குறிப்பிடும் மூவரும் அயலக இளந்தமிழரிடையே பிரபலமாகியிருந்தாலும் அது மகிழ்ச்சியளிக்கக்கூடியதே.

நரேன்
மலேசியா

கேள்வி: வல்லினத்தில் ஷம்மிக்கா என்பவர் குமரிக்கண்டம் தொடர்பாக சில கருத்துகளைச் சொன்னதை வாசித்தீர்களா? அந்தத் தகவல்கள் சரியானதுதானா? இன்றைய ஆய்வில் அதன் கண்டடைவின் எல்லை என்ன?

மாசு மருவற்ற, போற்றி கொண்டாடத்தக்க பொற்காலமாக தமிழர்கள் தங்களது கடந்தகாலத்தை கற்பனை செய்யும் போது அந்த கற்பனையை உலவவிடுவதற்கு சௌகரியமான ஒரு இடமாக இந்துமாக்கடல் விளங்குகிறது. கடற்கோளுக்கு மிஞ்சிய அல்லது அதற்குப் பிறகு உருவான தமிழ்ச்சமுதாயம் அந்த இழந்த சொர்க்கத்தை மீட்டெடுப்பதில்தான் இயல்பான ஆர்வம் கொண்டு செயல்பட்டிருக்கும். இன்றைய தமிழ்ச்சமூகம் நேற்றின்/ கடல் கொண்ட நாகரீகத்தின் தொடர்ச்சிதான் என்றால் இது இருந்தால் என்ன இன்னொருமுறை கடல்கொண்டு போனால்தான் என்ன என்ற கேள்வி வருகிறது. ஆனால் இதற்கப்பால், ‘தென்னிந்திய நிலப்பரப்பின் ஒரு பகுதியை கடல் கொண்டதென்னவோ உண்மைதான். ஆனால் அது இப்பகுதியில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே நடந்துவிட்டது’ என்பதாக சு.கி.ஜெயகரனின் ‘குமரிநில நீட்சி’ என்ற நூலில் படித்ததாக நினைவிருக்கிறது.

கேள்வி: தோழர், இன்றைக்கு நிறைய தீவிர படைப்பாளிகள் ஜனரஞ்சக இதழ்களில் எழுதத் தொடங்கிவிட்டனரே. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? சோரம் போவதாக இதை சொல்லலாமா? என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சு.ரா அவ்வாறு செய்யவில்லையே...

வெகுஜன / வணிகநோக்கிலான இதழ்கள் தங்களது வாசகர்களின் ரசனைமட்டம் என்கிற கற்பிதமான அளவீடு ஒன்றை எப்போதும் முன்னிறுத்துகின்றன. அந்த ரசனைமட்டம் மேம்போக்கான விசயங்களை, கொறிப்புத்தீனிகளை மட்டுமே அனுமதிப்பதாய் இருப்பது வாசகநலனை முன்னிட்டல்ல. அவை எந்தவொரு வாசகரையும் கலந்தாலோசித்து இன்னின்னதை வெளியிடலாமென முடிவெடுப்பதில்லை. வாசகர்களின் பெயரால் பத்திரிகையின் அதிகாரம்தான் நிலைநிறுத்தப்படுகிறது. எங்கள் வாசகர்கள் இதையெல்லாம் தாங்கமாட்டார்கள், ஓவர்டோஸ் என்று சொல்லிக்கொண்டு வாழ்வின் நுண்ணடுக்குகளையும் வெவ்வேறு பரிமாணங்களையும் அதனதன் ஆழத்திற்கே சென்று விளங்கப்படுத்துகிற எழுத்துகளை அவை அனுமதிப்பதில்லை. தமது அரசியல் கரிசனைகளுக்கு பங்கம் விளைவிக்கிற ஒரு வார்த்தையையோ வரியையோ அனுமதிக்காமல் தணிக்கை செய்துவிடுகிற இப்பத்திரிகைகள் கருத்துச்சுதந்திரம் பற்றி பேசுகிற கேலிக்கூத்துக்கும் இங்கே பஞ்சமில்லை. இப்படியான தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளியாகும் எழுத்துகளைப் பார்த்து இன்னின்ன பத்திரிகைக்கு இப்படியிப்படி எழுதினால் தான் வெளியிடுவார்கள் என்று எழுத்தாளர்களே ஒரு சுயதணிக்கைக்கு தம்மைத்தாமே ஆட்படுத்திக் கொள்கிற கொடுமையும் இங்கு நடந்துகொண்டிருக்கிறது. அதாவது தன்னை வெளிப்படுத்துதல் என்கிற எழுத்தின் மிக அடிப்படையான நோக்கத்தைக் கைவிட்டுவிட்டு பிரசுரமாவதற்குரிய சாத்தியங்களுக்கு உட்பட்டு எழுதுகிறவர்களாக எழுத்தாளர்கள் தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்கின்ற நிலைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

சாராம்சத்தில், இந்த வெகுஜன / வணிக நோக்கிலான இதழ்களும் அவற்றின்மீது ஒவ்வாமை கொண்டு அவற்றுக்கு வெளியே உருவாகியிருந்த ‘தீவிர’ இலக்கியப் பத்திரிகைகளும் ஒரே அரசியலைத்தான் பேசின. ஆனால் இருவேறு முகாம்களாக பிரிந்திருந்தன. ஒரே அரசியலை நிலைநிறுத்த விரும்பும் சக்திகள் இருவேறு முகாம்களாக பிரிந்திருக்க வேண்டியதில்லை என்கிற பரஸ்பர புரிதலினூடாகத்தான் ‘தீவிர எழுத்தாளர்கள்’ என அறியப்பட்ட சிலர் வெகுஜன இதழ்களில் பணியாற்றச் சென்றார்கள். வெகுஜன இதழ்களை தீவிர இலக்கிய இதழ்களாக மாற்றிவிடும் நோக்கத்தில் நடந்த ஊடுருவல் என்றோ, இலக்கியத்தை வளப்படுத்தும் வகையில் வெகுஜனப்பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட மனமாற்றம் என்றோ இந்தப்போக்கினை மிகைப்படுத்தி புரிந்துகொள்ளாதபட்சத்தில் நாம் இதுதொடர்பில் இன்னும் கொஞ்சம் பேசமுடியும். இவர்கள்தான், வெவ்வேறு காரணங்களுக்காக வெகுஜன இதழ்களில் எழுதாமல் இருந்தவர்களை அவை உள்ளிழுத்துக் கொள்வதற்கான உத்திகளை தற்செயலாகவோ திட்டமிட்டோ வகுத்தவர்கள். ஒருவகையில் கும்கி யானை போன்றவர்கள். தத்தமது நிலைப்பாடுகளை தளர்த்திக்கொள்ளாமலே இயங்குவதற்கான சுதந்திர வெளிகளாக வெகுஜனப் பத்திரிகைகள் மாறிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியவர்கள் இவர்கள்தான். இவர்களது பங்களிப்பில் வெளியான இந்தியா டுடே, விகடன் போன்றவற்றின் இலக்கிய மலர்களிலும் குமுதம் ஸ்பெஷல்களிலும் தீராநதிகளிலும் தீவிர மற்றும் அதிதீவிர எழுத்தாளர்கள் என்று நம்பப்பட்டவர்கள் பெரிதாக நிர்ப்பந்தங்கள் இன்றி எழுதிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். குடும்பத்திற்கு அடங்கிய பிள்ளைகளுக்கு கிடைப்பதைக் காட்டிலும் கோபக்கார பிள்ளைகளுக்கு சில கூடுதல் உரிமைகள் கிடைப்பது இயல்புதானே?

இந்த கோபக்கார பிள்ளைகளுக்கு வெகுஜனப் பத்திரிகைகளில் கிடைக்கத் தொடங்கிய இந்த அறிமுகம் இவர்களின் புத்தகங்களை பதிப்பித்த பதிப்பகங்களின் வியாபாரத்திற்கு உதவிகரமாக அமைந்தன. மட்டுமல்ல, வெகுஜனப் பத்திரிகைகளின் பரந்துவிரிந்த வாசகர்களிலிருந்து சிறுவீதத்தையாவது ஈர்த்துக்கொள்வதற்காக தீவிர இதழ்கள் என அறியப்பட்டவை ஒரு நடுவாந்திரத்தன்மைக்கு மாறியதையும் இங்கு ஒரு உடன் விளைவாக காணமுடிந்தது. வெகுஜன இதழ்களால் கிடைக்கும் பிரபல்யம், சன்மானம் போன்றவற்றுக்கு இரையாகிவிடாமல் விரிந்துபரந்த வாசகத் தளத்தையும் வீச்செல்லையையும் தமது மாற்று அரசியலையும் அதனை உட்செரித்த எழுத்துகளையும் முன்வைப்பதற்கான ஒரு களமாக பயன்படுத்திக் கொள்கிறவர்கள் எத்தனைப்பேர் என்கிற விவரம் என்னிடமில்லை.

பிறகு, நீங்கள் சுந்தரராமசாமி பற்றி குறிப்பிட்டுள்ளதைப் பொறுத்து ஒன்று சொல்லவேண்டியுள்ளது. வெகுஜன இதழ்களுக்கு எதிரான புனிதப்போரை தொடங்கியவர் என்பதுபோன்று முன்னிறுத்தப்படுகிற அவர் குமுதம், தீராநதி, விண்நாயகன் போன்றவற்றில் எழுதியவர்தான். வெகுஜன இதழ்களை எதிர்த்ததனாலும் இணக்கம் கண்டதனாலும் அதிக ஆதாயங்களை அடைந்ததும்கூட அவரும் அவரது குடும்பத்தாரிக் பதிப்பகமும்தான் என்பது குற்றச்சாட்டல்ல. எனக்குத் தெரிந்த உண்மை.

நன்றி: http://www.vallinam.com.my/issue41

1 கருத்து:

  1. வெகுஜன/ஜனரஞ்சக விளக்கம், என்ன சொல்லவருகிறீர்கள் என புரிந்துக்கொள்ள கடினமாக உள்ளது ஓவர்டோஸோ!?. உங்களின் சொற்பொழிவு எளிமை ஆனால் எழுத்து புரிந்துக்கொள்ள கடினம். `கும்கி யானை’..கேள்விப்படாத ஒரு சொல். உங்களிடம் தமிழ் கற்றுக்கொள்ளலாம். சொற்களின் ஜாலம் அற்புதம்.

    பதிலளிநீக்கு