செவ்வாய், செப்டம்பர் 25

ஒசூரெனப்படுவது யாதெனின்... 2 ஆதவன் தீட்சண்யா


ருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதிக்கு எதிரே கதிர்வேல் என்பவர் ஒரு தையல் கடையைத் திறந்த சிலநாட்களிலேயே எங்களுடைய நண்பர் குழாம் அவரோடு பரிச்சயம் செய்துகொண்டது. திரையில் வரும் நாயகர்களின் ஸ்டைல்களை எல்லாம் நடப்பில் கொண்டுவரும் நவீன பாணிகளின் தூதுவர்களாகிய முடி திருத்துநர்களும் தையல்காரர்களும் கல்லூரி மாணவர்களின் வாழ்வில் வகிக்கும் பாத்திரத்தை நன்கு உணர்ந்திருந்த நாங்கள் அவருடைய நட்பை முக்கியமானதாகக் கருதினோம். ஒரே பேன்ட்டை பெல்ஸ், டைட்ஸ், நேரோ என்று காலத்துக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கும் நுட்பங்கள் அறிந்த ஒருவர் எங்களிடம் மாட்டிய பிறகு, எங்களிடம் இருந்த ஒன்றிரண்டு உடைகள் பல்வேறு வடிவங்களை எடுத்தன. கிட்டத்தட்ட 'அட்டக்கத்தி' படத்தின் கதாநாயகன் தினாவைப் போன்ற ஆறேழு பேர் சேர்ந்தால் என்னென்ன கூத்தும் குளறுபடிகளும் நடக்குமோ அவற்றை எல்லாம் செய்யக்கூடிய எங்கள் குழாம் மீது அவரும் பிரியத்தோடுதான் இருந்தார். விடுதியில் இருந்து இரண்டுமுறை சஸ்பெண்டும் ஒருமுறை நிரந்தர நீக்கமும் செய்யப்பட்ட எங்களுக்கு அவருடைய கடைதான் போக்கிடமாக இருந்தது. பேன்ட், சர்ட் பிட்டுத் துணிகளை மொத்தமாக வாங்கி வந்து தன்னுடைய தையற் கடையைத் துணிக்கடையாகவும் விஸ்தரிக்க அவர் விரும்பியபோது ஏற்கனவே 'ஒ...சூ...ர்...’ வரைக்கும் போய் துணி மணிகள் கொள்முதல் செய்த அனுபவம் எனக்கு மட்டுமே வாய்த்திருந்தபடியால் நான் அவருக்குச் சில பல ஆலோசனைகளை வழங்க வேண்டியதாயிற்று. இப்படியே பிட்டுகளை விற்றுச் சிறுகச் சிறுகச் சேர்த்து தருமபுரி மாவட்டத்திலேயே மிகப்பெரிய துணிக்கடை (அல்ல) துணிக்கடல் முதலாளியாகி உழைப்பால் உயர்ந்த உத்தமர் வரிசையில் கதிர்வேல் பேட்டி கொடுக்கும்போது என் பெயரையும் நன்றியோடு நினைவுகூர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.    

கடைசியில் ஒரு சுபயோகம், சுபமுகூர்த்தம் கூடிய நன்னாளில் நாங்கள் ஒசூருக்குப் பயணப்பட்டோம். அண்ணா போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக இருந்த என்னுடைய தாய்மாமன் கோவிந்தசாமிக்கு ஒசூர் அத்துப்படி என்பதால் அவரும் எங்களோடு வந்து இந்தக் கொள்முதலுக்கு உதவினார். அன்றைக்கும் ஒசூரில் மழை கொட்டிக்கொண்டு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே இருட்டு மீண்டும் ஊரின்மீது கவிந்துவிட்டதைப் போன்றிருந்தது. நனைந்துகொண்டே போய் பேருந்து நிலையத்தின் பின்புறத்துக் கட்டடத்தில் இயங்கிவந்த பிரிமியர் மில்லின் ஷோரூமில் வேண்டிய மட்டும் துணி பிட்டுகளை வாங்கினோம். அந்தச் சந்தோஷத்தோடு கடையின் மாடியில் இருந்த ஒரு ஹோட்டலில் (செலக்ட்?) புரோட்டாவும் கோழிக்கறியும் சாப்பிடும்போது நான் அந்த கீத்துக் கொட்டகை சோத்துக் கடையை நினைத்துக்கொண்டேன். பேருந்து நிலையத்தில் இருந்து நூறுமீட்டர் தூரம்கூட தள்ளிப்போகாமல் திரும்பிவிட்டாலும் அது எனது இரண்டாவது ஒசூர் பயணம் என்பதுதான் வரலாறு.

தருமபுரி அரசு கலைக் கல்லூரி விடுதியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் தங்கிப் படித்துவந்தாலும் ஓரிருவர் தவிர மற்றவர்கள் சாதி ரீதியாகவே அறைகளையும் நண்பர்களையும் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். சாதி ரீதியாகப் பிரிந்து இருக்கும் குடும்பங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் கிளம்பிவந்திருக்கும் இந்த மாணவர்கள் சாதியைத் துறந்துவிட்டோ மறந்துவிட்டோ சமத்துவம் பேணுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அறை ரீதியிலான இந்தப் பிரிவினை, சாதி ரீதியானதாக இருந்தது, யாருக்கும் உறுத்தவே இல்லை. 'ப' வடிவிலான விடுதி இருவகிடாகப் பிரிந்திருப்பது இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. உணவுக்கூடமும் வகுப்பறையும் ஒன்றுகூடும் இடங்களாக இருந்தபோதிலும் இருக்கைகள் சாதிரீதியில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏற்கெனவே நிலவிய இந்த எழுதப்படாத விதிகளுக்கேற்பவே நான் 44- ம் எண் அறைவாசியாகி இருந்தேன்.                                                                                                                      ஊர்களைப் போலவேதான் இந்த விடுதியும். தனிநபர்களுக்கு இடையிலான சிறு சிறு பிரச்னையும்கூட ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இடையேயோன பிரச்னையாக இங்கு மாறிக்கொண்டு இருந்தது. இந்தப் புகைச்சல் ஒருநாள் கடும் மோதலாக வெடித்து கடைசியில் விடுதியும் கல்லூரியும் இழுத்து மூடப்பட்டன. பெரும் சேதாரங்களை விளைவித்த இந்த மோதல் விடுதியோடு முடிந்துவிடாமல் ஒட்டப்பட்டி, அம்பேத்கர் தெரு, கோல்டன் ஸ்ட்ரீட், ராஜாபேட்டை என்று அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் எதிரொலித்தது. தப்பித்து ஊர்களுக்கு ஓடும் மாணவர்கள் இங்கெல்லாம் தடுத்து விசாரிக்கப்பட்டு சாதி அடிப்படையில் தாக்கப்பட்டார்கள் அல்லது தைரியம் தரப்பட்டார்கள். நானும் சில நண்பர்களும் இந்தப் பகுதியினரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக ரயில்பாதையிலேயே அதியமான்கோட்டைவரை நடந்துபோய் அங்கே பஸ் ஏறி அவரவர் ஊர்களுக்குத் தப்பிச் சென்றோம்.

சில நாட்களுக்குப்பின் மீண்டும் விடுதி திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பகை முகாம்களைப்போல பிரிந்து இருந்தார்கள். யார்முகத்திலும் நட்பு இல்லை. மனதில் இல்லாதது முகத்தில் எப்படி வரும்? உணவுக் கூடத்தில் நிலவிய இறுக்கமும் அமைதியும் அச்சமூட்டுவதாக இருந்தது. ஒருவரோடு ஒருவர் பேசாமலே ஒருவர் குரல்வளையை மற்றவர் கடித்துவிடுவார்களோ என்பதுபோல் இருந்தது நிலை. அப்போதுதான் விடுதிக்கு அருகாமையில் இருந்த வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இருந்த வணிகவரித்துறை ஊழியர் டி.சண்முகம், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.எம்.ஹரிபட் ஆகியோரது முன் முயற்சியில் எஸ்.திருப்பதி, ஆதிமூலம், வேலுச்சாமி, மாதுதயாளன், நான் ஆகிய ஐவரும் இணைந்து 'இந்திய மாணவர் சங்க அமைப்புக் குழு' என்ற பெயரில் மாணவர் ஒற்றுமையை வலியுறுத்தி துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டோம். பாரபட்சமின்றி இருதரப்பு மாணவர்களிடம் விநியோகித்தோம். ஊறிக் கெட்டித் தட்டிப்போய் கிடக்கிற சாதிய மனங்களை ஒரு துண்டறிக்கை என்ன செய்துவிட முடியும்? என்று எல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை. சரியாகச் சொன்னால், யோசிக்கத் தெரிந்து இருக்கவில்லை. சாதியம் பற்றிய எவ்விதப் புரிதலும் இன்றி, மாணவர்களுக்குள் ஒற்றுமை தேவை என்கிற நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்களால் எவ்வளவு யோசிக்க முடியுமோ அந்த அளவுக்குத்தான் யோசித்தோம். யாராவது ஒருவர் பேச்சைத் தொடங்கித்தான் ஆகவேண்டும் என்பதற்காக நாங்கள் பேசினோம். 'ஃபர்ஸ்ட் இயர் பசங்களுக்கு, அதுவும் எஸ்.சி. பசங்களுக்கு வந்த நாட்டாமையைப் பார்த்தியா?’ என்று இரு தரப்பிலிருந்தும் வந்த வசைகளையும் மிரட்டல்களையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஞாயிற்றுக் கிழமையொன்றில் மாணவர்களைச் சந்தித்து ஆதரவு கோருவதற்காக விடுதிக்கு வந்திருந்த யாரோ ஒரு ஈழப் போராளியிடம் கொடுத்து அனுப்புவதற்காகச் சாப்பாட்டுத் தட்டை ஏந்திப்போய் ஒவ்வொரு அறையின் கதவையும் தட்டி நிதி திரட்டினோம். வலியப்போய் கை குலுக்குவதால் ஏற்பட்ட சில அவமானங்களை மாணவர் ஒற்றுமைக்காக மிகப்பெரும் தியாகம் செய்வது போன்ற நினைப்பில் தாங்கிக்கொண்டோம்.

சிறைக் கைதிகளுக்குச்  செலவழிப்பதைவிடவும் குறைந்த அளவேயான தொகையைத்தான் வளர் இளம் பருவத்தில் இருந்த மாணவர்களான எங்களுக்காக அரசாங்கம் செலவிட்டது. மாணவர்களுக்காகச் செலவிடப்படும் தொகையை அறிவார்ந்த ஒரு எதிர்காலச் சந்ததிக்கான முதலீடாகக் கருதும் அரசியல் ஆர்வம் அற்றதாக இருந்தது அரசாங்கம். எனவே, எங்களுக்கு வழங்கப்பட்ட உணவு எப்போதும் தரமற்றதாகவே இருந்தது. புழுக்கள் செத்து மிதக்கிற, நாயும் முகரத் துணியாத அளவுக்கு நாற்றமடிக்கிற கொட்டையரிசி சோற்றைத் தின்றுதான் நாங்கள் உயிரும் உடலும் வளர்த்துப் படிக்கவேண்டி இருந்தது. வெள்ளைக் குண்டு (இட்லி), கடலை ரசம் (சட்னி), தூக்க மருந்து என்று கேலி செய்தாலும் அவற்றைத் தவிர வேறு உணவேது எங்களுக்கு? இத்தனைப் பிரச்னைகள் பொதுவாக இருப்பதை உருக்கமாகச் சுட்டிக் காட்டினால் 'மாணவர் சமுதாயம்' என்ற ஒற்றை அடையாளத்தின்கீழ் எல்லோரும் ஒன்றுபட்டுவிடுவார்கள் என்கிற குழந்தைத் தனமான புரிதலுடன்கூடிய எங்களுடைய முயற்சிகள் உடனடிப் பலன் எதையும் தந்துவிடவில்லை. அதற்கு அப்புறமும் மாணவர்கள் சாதியாகத்தான் இருந்தார்கள் என்றாலும் அவர்களிடம் ஒருவகையான  இணக்கம் உருவாகிவிட்டிருந்தது. அந்த இணக்கம் எங்களால் மட்டுமே வந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதற்கான முதல் தப்படி எங்களுடையது. ஆனால் அந்த இணக்கம் மீண்டும் ஒரு மோதல் உருவாகுவதைத் தடுக்கும் அளவுக்குத்தான் இருந்ததே அன்றி சாதிப் பிரிவினையைக் கைவிடுமாறு மாணவர்களைத் தூண்டும் வலுவற்று இருந்தது.

காலம் எங்களை வெவ்வேறு இடங்களுக்குக் கூப்பிட்டுக்கொண்டது என்றாலும் பயணங்களினூடே அந்த விடுதியைக் கடக்கும்போது எல்லாம் நினைவுகள் அந்த மோதலின் மீது நிலை கொள்வதைத்  தவிர்க்க முடிவதில்லை. கல்வி அறிவு சாதியத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பது மாதிரியான வாதங்களைக் கேட்கும்போது எல்லாம்  எனக்கு அன்றைய மோதல் சட்டென நினைவுக்கு வந்துவிடுகிறது. தடதடவென யாராவது கதவைத் தட்டினால், தாக்கிவிட்டு ஓடிப்போய் தாழிட்டுக் கொண்டவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக 20 -ம் எண் அறையின் கதவு உடைக்கப்பட்ட சத்தம் காதைக் குடைகிறது இப்போதும். (நெடுநாளைக்குப் பிறகு, இப்போது  போயிருந்தபோதும் அந்தக் கதவின் மேற்புறம் அதே ஒட்டுப்போட்ட  பலகையுடன் இருந்ததைப் பார்க்கமுடிந்தது.)  கல்லூரி மாணவர்களிடையே மோதல் என்று வரும் ஒருவரிச் செய்திகூட அன்றைய மனநிலையை அலைக்கழிக்கப் போதுமானதாக இருக்கிறது. முன் தயாரிப்புடன் விறகுக் கட்டைகளையும் மிளகாய்ப் பொடியையும் சேகரித்து அறைகளில் பதுக்கி வைத்தவர்களாக ஒருதரப்பும் திடீர்த் தாக்குதலை கற்களை வீசி எதிர்கொண்ட மறுதரப்புமாக மாணவர் சமூகம் பிளவுபட்டுக் கிடந்தது எல்லாம் எங்கள் தலைமுறையோடு போனது என்று சொல்லி முடிக்கத்தான் ஆசை. ஆனால், ஒரு தலித் ஆயா சமைத்த சத்துணவைச் சாப்பிடக்கூடாது என்று தீண்டாமை வெறியேற்றி தம் குழந்தைகளை வளர்க்கும் இந்தச் சமூகத்தில் அப்படி ஒரு பொய்யைச் சொல்லத்தான் வேண்டுமா?

(சொல்வேன்...)

நன்றி: en.vikatan.com


3 கருத்துகள்:

  1. //மனதில் இல்லாதது முகத்தில் எப்படி வரும்//
    என்னதான் செய்வது?

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பெயர் எனக்கு புத்தக கடைகளில் பார்த்த பரிச்சயம் இன்று தான் முதல் வருகை வலைசரம் மூலம் அருமையான விழிப்புணர்வு கூடிய நினைவுகள் எதார்த்தம் சுடும் சொற்கள் ..........தொடர்ந்து எழுதுங்கள்
    நானும் எழுதுகிறேன் http://kovaimusaraladevi.blogspot.in/2012/09/blog-post_26.html#comment-form

    பதிலளிநீக்கு
  3. இவ்வளவு கொடுமைகள்!!.. தொடருங்கள் சார்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...