செவ்வாய், செப்டம்பர் 18

கரை தட்டியவர்கள் -ஆதவன் தீட்சண்யா




தோ வந்துவிட்டன முப்படைகளும்
ஐந்தாம்படையும்கூட அவர்களுடனேயேதான் இருக்கிறது

"...இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்ப நிலவியது" என்று
எம் உயிர் கரையும் ஒவ்வொரு நொடியையும்
துல்லியமாய் ஒளியொலி பரப்பிட 
24X7 செய்திச்சேனல்களும் குவிந்துவிட்டன

நைந்த சொற்களை இரந்து
முன்கூட்டியே எழுதிவைத்திருக்கும்
கண்டன அறிக்கையோடு காத்திருக்கிறார்கள்
கட்சித்தலைவர்களும்கூட

கணினித்திரையே கருகிப்போகுமளவுக்கு
அரசியல்வாதிகளைத் திட்டி நிலைத்தகவல் எழுதிவிட்டு
அடுத்த பரபரப்புக்குத் தாவும் அவசரத்துடன் 
முகப்புத்தகப் போராளிகளால் திரட்டப்படுகின்றன
கார்ட்டூன்களும் வசைகளும்

ஏதொன்றையும் பிராஜக்டாக காட்டி
பெருந்தொகைப் பெயர்த்துவிடும் ஆசையில் 
ஏதேதோ பெயர்களில்  பதுங்கியலையும் என்.ஜி.ஓக்கள்
எம்மிலும் தீவரமாய் பேசுகின்றன எம்மைப்பற்றி

கறிகாய் வாங்கி ஆக்கியவித்து தின்றுவிட்டு
கவலைகொண்டதான பாவனையோடு வந்திருக்கும் இந்த ஆதவனோ
சந்தடிச்சாக்கில் எம்மைக் கச்சாப்பொருளாக்கி
கவிதையொன்றை யாத்துவிடும் எத்தனிப்பிலிருக்கிறான்

கடலிறங்கிப் போராடும் எமக்கான ஆதரவாய்
அவரவர் ஊரின் குளம்குட்டையில் இறங்கவோ
ஆங்காங்கே மணலுக்குள் புதையவோ  முயலாது 
கரையிலிருந்தே கர்ஜிக்கிறார்கள் இவர்கள்

கடல்மூழ்கிச் சாகும் எம்மை கணக்கெடுத்து அறிவிக்க
மறுகரையில் காத்திருக்கிறது அரசாங்கம்.



1 கருத்து:

  1. மிகச் சரியான சாட்டை அடிகள் இந்தக் கவிதை வரிகள்! வாசிக்கும் போதே சுரீர் சுரீரென வலிக்கின்றன - நம்மாலும் எதுவும் செய்ய முடிய வில்லையே யென்கிற குற்ற உணர்வுகளுடன்.

    பிணம் தின்னும் கழுகுகள் போல் கரையெங்கும் வியாபித்துக் காத்திருக்கின்றன ஊடகங்கள் தங்கள் தங்களின் பசிப் பார்வைகளோடு!

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...