வியாழன், நவம்பர் 29

ஒசூரெனப்படுவது யாதெனின்:10 -ஆதவன் தீட்சண்யா



''நான் ஒசூர்ப் பகுதிக்கு வந்து 27 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒருநாள்கூட எங்கம்மா இங்கு வந்து என்னோடு தங்கியது கிடையாது. வரும்போதெல்லாம் சாயங்காலத்திற்குள் திரும்பிவிடுவார். 1964, 65-ல் இங்கிருந்த அனுபவத்தில் கடுமையான குளிர் பிரதேசம் என்று ஒசூர் பகுதிபற்றி அவர்களது மனதிற்குள் பதிந்த சித்திரம் இன்னும் அப்படியே கலையாமல் இருக்கிறதுபோலும். அந்த ஊர் குளிரில் நான் தங்க முடியாதுப்பா என்று சொல்லிவிடுவார். ஆனால், சமவெளியில் இருக்கிற எல்லா ஊர்களையும்போல இந்த ஊரும் வெகுநாட்களுக்கு முன்பே வெக்கை மிகுந்ததாக மாறிவிட்டது என்கிற உண்மை எங்கம்மாவைப் போலவே பலருக்கும் தெரியாது. அதனாலேயே ஒசூர் என்றதும் ஏதோ தூந்திரபிரதேசத்திற்குச் செல்வது போன்ற பாவனையுடன் ஸ்வெட்டர், மப்ளர், குல்லா என்று சகல முன்னேற்பாடுகளுடனும் வந்திறங்குகிறவர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள்.

தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஏற்பட்ட மாசும், நகர விரிவாக்கமும் கட்டடங்களின் பெருக்கமும் இந்தப் பகுதியைப் பாழ்படுத்திவிட்டன. மேலேயிருந்து கையாலேயே முகர்ந்து குடிக்குமளவுக்கான கிணறுகளைக் கொண்டிருந்த இப்பகுதியில் இன்று 1,000 அடிவரை ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுகின்றன. தனித்தனி வீடுகள், தனித்தனி கிணறுகள்... பெரிய பெரிய குடியிருப்பு வளாகங்கள், அடுக்குமாடி கட்டடங்கள், பண்ணையத்தை ஒழித்துக் கட்டிவிட்டு கட்டப்பட்டுவரும் பண்ணை வீடுகள் என்று நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ராட்சதக் குழாய்கள் பூமிக்குள் இறங்கிக் கொண்டேயிருக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. மேல்தளத்தில் கைகுலுக்கிக்கொள்கிற அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எஞ்சியுள்ள நீரை யார் கைப்பற்றுவதென்கிற சண்டையை பூமிக்கடியில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஒசூர் பகுதியின் குளுமைக்கும் நிலத்தடி நீர்மட்டத்தைப் பேணுவதற்கும் காரணமாயிருந்த ஏரிகள் தூர்ந்துவருகின்றன. அவற்றுக்கு நீர் கொண்டுவந்து சேர்க்கிற வழிகளை ஆக்கிரமித்து அடைத்தபிறகு, அவை காய்ந்தும் தூர்ந்தும் போவதைத்தவிர வேறென்ன நடக்கும்? ஏரிகளுக்குள் நடக்கும் ஆக்கிரமிப்பு ஊரையே பாதிக்கும் என்கிற கவலை யாருக்கும் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு ஏரிகளிலும் ஆகாயத்தாமரை படர்ந்தும் அழுகியும் நாற்றக் கிடங்குகளாக மாறியுள்ளன. தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தின் பின்புறமிருந்த ஏரியை சமீபத்தில் பார்த்தபோது பெரும் சோகம் கவ்விக் கொண்டது என்னை. கரையில் அமைந்திருக்கும் யாரப் தர்காவின் பிம்பத்தை ஒளித்தூண்களாய் தன்னுள் தவழவிட்டுத் தளும்பிக்கொண்டிருந்த அந்த ஏரி குப்பைமேடாக மாறிவருவதைப் பார்ப்பது பெருந்துயரம். ஒசூர் ராமநாய்க்கன் ஏரியும் தர்கா ஏரியும்கூட அவ்வாறே ஆகிக்கொண்டிருக்கின்றன.

ஒசூர் பகுதியில் முன்பு ஏரிகளும் இருந்தன என்று சொல்லும் நிலை உருவாகியிருப்பதைப்போலவே, இப்பகுதியில் முன்பெல்லாம் மலைகளும் இருந்தன என்று சொல்லும் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. இங்குள்ள மலைகள் முழுவதும் கனிம வளங்களாகவும், டாலர்களாகவும், ஈரோக்களாகவும் பார்க்கப்படுகின்றன. ஆகாயம் முட்டி அண்ணாந்து பார்க்க வைத்த மலைகள் இன்று தலைகவிழ்ந்து பார்த்தாலும் தரைக்கு கீழே பலநூறு அடிகள்வரை தோண்டப்பட்ட பள்ளங்களாகியுள்ளன. கிரானைட்டுக்காகவும் ஜல்லிக்காகவும் ஒசூர் தேன்கனிக்கோட்டை வட்டாரம் முழுவதும் இருக்கின்ற மலைகள் தொடர்ந்து தகர்க்கப்பட்டு வருகின்றன. இயற்கையின் சமநிலையிலும் பல்லுயிர்ச் சூழலிலும் ஏற்படும் சீர்கேடுகளைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இங்குள்ள மலைகளைத் தகர்ப்பதற்காகவே நூற்றுக்கணக்கான கிரானைட் தொழிற்சாலைகள் இப்பகுதியில் வந்த வண்ணமுள்ளன. ஏற்கனவே கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பகுதியில் இருந்த மலைகளைத் தகர்த்துத் தின்றபிறகு, இப்போது ஒசூர் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கின்றன இந்த கிரானைட் கம்பனிகள். கோடிகோடி டாலர்கள் கொட்டிக்கொடுத்தாலும் இத்துனூண்டு கல்லைக்கூட உருவாக்க முடியாது என்று தெரிந்திருந்தும் கோடானகோடி வருடங்களில் உருவான மலைகள் தகர்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பற்றி வெகுவாக அலட்டிக்கொள்கிற பல அமைப்புகள் / ஆளுமைகள்கூட இந்த மலைத்தகர்ப்பு  பற்றி வாய் திறப்பதில்லை. மலைகளைத் தகர்த்தெடுத்த கற்களால் அலுவலகங்களையும் வீடுகளையும் ஆலைகளையும் மழமழப்பாகவும் குளுமையாகவும் கட்டிக்கொண்டு வேறெதையோ சுற்றுச்சுழல் ஆபத்து என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

குண்டூசி முதல் குட்டி விமானம்வரை உற்பத்தியாகும் இடம் என்கிற கீர்த்திக்கு விலையாக ஒசூர் பகுதியின் சுற்றுச்சூழல் காவு கொடுக்கப்பட்டாகிவிட்டது. கோடைக்காலத்திலும்கூட மின்விசிறியின்றி இருந்த காலம்போய் இப்போது மின்விசிறியின்றி குளிர்காலத்தையும்கூட கடக்கமுடியாது என்கிற நிலை வந்துவிட்டது. இந்த ஊரில் நிரந்தரமாகத் தங்குவதற்கான ஆசையை எதுவெல்லாம் உருவாக்கினவோ அதுவெல்லாம் இல்லாமல் போய்விட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்களால் மட்டுமே பனிஷ்மென்ட் ஏரியா என்று சொல்லப்பட்டுவந்த இப்பகுதி ஒரு சுற்றுக்குப்பிறகு, மீண்டும் பனிஷ்மென்ட் ஏரியாவாகிவிட்டது. நிகழ்ந்துவரும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழாமல் இப்படி பழையதை எண்ணிப் புலம்பக்கூடாது என்று உபதேசிக்க அவசரப்படுகிறவர்களே, சற்று பொறுங்கள்... இது மாற்றமல்ல. அழிவு!

***

இன்று ஒசூர் விரிந்து பரந்த நகரமாகி பெங்களூருவின் அடுத்ததெருபோல மாறிவருகிறது. சாலைகள் மேலும் மேலும் அகலமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கத்தைக் கடக்க ஆட்டோ பிடிக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவை அகலமாக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் ஒரு ஏக்கர் ஒரு கோடி என்கிற அளவுக்கு நிலத்தின் மதிப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. உண்மையில் இப்போது இங்கே ரியல் எஸ்டேட் தொழில்தான் செழித்து வளர்ந்துள்ளது. புதிது புதிதாக ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உருவாகி தத்தமது நிழலைக்கூட விற்றுவிடுமாறு ஆசைகாட்டி வருகிறார்கள். தூண்டப்பட்ட பலரும் தமது குடும்பத்தின் பாரம்பரிய நிலங்களை விற்றுவிட்டு ஸ்கார்பியோ காரில் பவனி வருகிறார்கள்.  ஆற்றை, மலையை, வனத்தை, வளத்தை, கல்வியை விற்பதாக அரசாங்கங்கள் இருக்கும்போது அதன் குடிமகன் தனக்குள்ள நிலத்தை விற்பதைத் தவறென்று எவ்வாறு நாம் சொல்ல முடியும்? ஆனால், இந்த நில விற்பனை இங்கு பல குடும்பங்களுக்குள்ளேயே பகையையும் வெறுப்பையும் உருவாக்கியுள்ளது. ரத்த உறவுகளைக்கூட வெட்டிச்சாய்த்துவிட்டு நடக்கும் இந்த நிலபேரங்கள்தான் இன்று ஒசூரின் பணப்புழக்கத்திற்கு ஆதாரமாக இருக்கிறது.

ஒசூரில் டிராஃபிக் சிக்னல்கள் நிர்மாணிக்கப்பட்ட நாளில்தான், இந்த நகரம் ரொம்பவும் பெருத்துவிட்டதோ என்கிற பயம் எனக்கு முதன்முதலாக ஏற்பட்டது. ஐந்து நிமிட நடைக்குள் தெரிந்தவர்கள் என்று சிலரைப் பார்க்கமுடிந்த ஊரில் இப்போது கடைவீதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் என்று எங்கு பார்த்தாலும் புதிய முகங்கள். வேறு யாருடைய ஊருக்கோ தவறுதலாக வந்துவிட்டதுபோன்ற உணர்வை உருவாக்கும் படியாக அவ்வளவும் புதிய முகங்கள். அவர்களோடு எந்த அறிமுகமும் உரையாடலும் ஊடாட்டமும் கொள்ளாமல் ஒதுங்கிப்போய் தனிமைப்படுத்திக் கொண்டதைப்போன்ற நினைப்பு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. ஊரில் இருக்கும்போது வெளியே வராமல் ஏதாவது வேலையைச் செய்தபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதும் அடிக்கடி வெளியூர்களுக்குப் போய்விடுவதும்கூட இப்படியான நிலையை உருவாக்கி இருக்கும். என்னைப் போலவேதான் ஒவ்வொருவரும் நினைத்தபடி மற்றவரைக் கடந்து போகிறார்களோ என்னவோ? அதற்காக, சட்டென எதிரேபோய் ''என் பெயர் ஆதவன், நானும் ஒசூரில்தான் இருக்கிறேன். நீங்கள்...?’ என்று ஒவ்வொருவரோடும் அறிமுகமாகி நண்பர்களாகிவிட முடியாது. ஆனால் ஜார்ஜ், பழனிச்சாமி, சந்துரு, மல்லிகா, ராணி, தனபால், ராமன், ராமகிருஷ்ணப்பா, ஜி.ஹெச். ராஜசேகர், சுமதி, டாக்டர் பொன்ராஜ், 'கௌரிசங்கர்’ அருள், என்.எஸ்.மாதேஸ்வரன், வசந்த சந்திரன், பொறியாளர் வாசுதேவன் ஆகியோரைப் போலவே ஒசூரின் ஒவ்வொருவரையும் என்மீது அன்புள்ளவர்களாக மாற்றிக்கொள்ளவே மனம் விரும்புகிறது. அந்த மகத்தான பொறுப்பை காலத்திடம் ஒப்படைத்துக் காத்திருக்கிறேன்.''


(நிறைந்தது)


 நன்றி: என்விகடன்.காம்
 

2 கருத்துகள்:

  1. நல்ல ஒரு பதிவு.

    மிக்க நன்றி.

    Tamil Magazine

    பதிலளிநீக்கு
  2. மண்ணையும் ,மக்களையும் நேசிக்கிறவர் என்பது ஒவ்வொரு சொல்லாடலிலும் உணரமுடிகிறது. நல்ல பதிவு ஒவ்வொரு பதிவரும் தங்கள் பகுதிகளில் நடக்கும் இதுபோன்ற கொடுமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்..

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...