ஊர்க்கொளுத்திகள் - ஆதவன் தீட்சண்யா

அவர்கள்தான் எவ்வளவு பெரிய கருணைவான்கள்
உலகம்
அவர்களது காருண்யத்திற்கு நன்றி சொல்கிறது
இம்முறை அவர்கள்
நம்மில் ஒருவரையும் கொல்லாமல் விட்டதற்காக
ஆனால்
இந்த வெற்றுடம்பிற்குள்ளா இருக்கிறது நமதுயிர்?


-இப்படி ஏதாச்சும் நாலுவரி எழுதிவிட்டு சமாதானம் அடைந்துகொள்ள முடியாதபடி இடையறாத வாதைகளைத் தருவதாயிருக்கிறது தர்மபுரி வன்கொடுமைகள். கொளுத்தப்பட்ட வீடுகளின் சாம்பல் மேலெல்லாம் படர்ந்திருக்க பேதலித்து அலையும் அந்த மக்களின் முகங்கள் திரும்பத்திரும்ப நினைவுக்கு வந்து நிலைகுலைய வைக்கிறது. உறக்கத்தைப் பறித்துக்கொள்வதாக, உறக்கத்தில் வீழ்ந்தாலும் அரற்றி உலுக்கி கலங்கடிப்பதாக, விழித்திருக்கும் வேளையிலும் செயலற்று முடங்கிப்போகச் செய்வதாக இருக்கின்ற அந்த நினைவுகள்தான் எவ்வளவு கொடூரமானவை... யார் சாவுக்குப் போனாலும் ஏற்கனவே செத்துப் பிரிந்தோரெல்லாம் நினைவிலாடி துக்கத்தை பெருகப்பண்ணுவதேபோல் ஒரு வன்கொடுமையின் துயரம் இதுவரையான எல்லாத் துயரங்களையும் பாதாளசோவிபோல இழுத்துவந்து வதைக்கிறது

சாதியம் பற்றி விவாதிக்கும்போது இருக்கின்ற நிதானமான மனநிலை சாதியத்தின் கொடுமைகளை நேரடியாக காணும் போது வாய்ப்பதில்லை. அவமானமும் இயலாமையும் நமக்கும் நேரும் என்கிற அச்சமும் அப்படி நேர்ந்தால் எப்படி எதிர்கொள்வதென்கிற குழப்பமும் படபடப்பும் இலக்கறியா கோபமும் சகமனிதர் மீதான அவநம்பிக்கையுமாக அலைக்கழிக்கப்படுகிற மனநிலை எழுதுவதற்கு உகந்ததல்ல. ஆளுமைச்சிதைவுக்குள் நெட்டித்தள்ளுகிற அந்த மனநிலை ஒருமுகப்படுத்தி எழுதுவதற்கும் விலகி நின்று விவரிப்பதற்குமான சாத்தியங்களையும் சேர்த்தே சிதைத்துவிடுகிறது. எரிக்கப்பட்ட ஊரும் சிதைக்கப்பட்ட மனமும் ஒருநிறமேறி அரற்றியழும்போது  சாம்பலின் நமநமப்பும் புகையின் கமறலும் கண்ணீரின் உப்பும் ஊறி வெளிப்படும் எழுத்து பலரின் ரசிப்புக்குரியதாய் இருப்பதில்லை. ஆகவே வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் அதைப்பற்றி எழுதுவதும் படிப்பதும் வெவ்வேறல்ல, அவை வாதையின் வெவ்வேறு தருணங்கள்.

வாழ்வின் வெவ்வேறு நிறஅடுக்குகளை அறிவதிலும் விவாதிப்பதிலும் எழுதுவதிலும் ரசிப்பதிலும்  இருக்கின்ற இயல்பார்வங்களை திசைமாற்றி சாதி என்கிற ஒன்றை மையப்படுத்தியே இயங்கவேண்டிய நெருக்கடியை கடந்த ஆண்டு பரமக்குடி படுகொலைகள் உருவாக்கியதென்றால் இப்போது தருமபுரி வன்கொடுமைகள். நமது நிகழ்ச்சிநிரல்களும் சிந்தனை மட்டமும் வேறெதிலும் சென்றுவிடாதபடி முளையடித்த மாடுபோல ஓரிடத்திலேயே உழப்பிக்கொண்டு தத்தளித்துக் கிடக்க இப்படி வருடத்திற்கொரு வன்முறை போதுமானதாகத்தான் இருக்கிறது. வெண்மணியிலும் மேலவளவிலும் செகுடந்தாளியிலும் சென்னகரம்பட்டியிலும் கொடியன்குளத்திலும் தாமிரபரணியிலும் பரமக்குடியிலும் அடைந்த இழப்புகளுக்கும் அவமானங்களுக்கும் அழுது தீர்க்கும் முன்பாகவே  தருமபுரி அழித் தொழிப்பு நிகழ்த்தப்பட்டுவிட்டது.  

இயற்கையின் உன்னதங்களையும் மனிதகுலம் படைத்தளித்த சாதனைகளையும் துய்த்துக் கொண்டாடி பரவசம் காண உலகம் ஒருதிசையில் துள்ளாட்டம் போட்டு போய்க் கொண்டிருக்கும் போது, எப்போது பார்த்தாலும் பிணங்களையும் சாம்பலையும் வைத்துக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாக தலித்துகள் கதறிக்கொண்டிருப்பதை நினைத்தால் பெருத்த அவமானமாய் இருக்கிறது. தேதியும் இடமும்தான் மாறுகிறதேயன்றி அலங்கோலமும் முறையீடுகளும் மாறாமல் பத்திரிகையில் தொலைக்காட்சியில் சுவரொட்டியில் பேனரில் தலித்துகள் நிரந்தரமாய் அழுது கொண்டேயிருக்கிறார்கள். இந்த அழுகைச்சித்திரங்களுக்குள் ஒவ்வொரு தலித்தும் தன்னையே கண்டு விக்கித்துப்போய் அச்சம் கொண்டாலும் ஆவேசம் பெற்றாலும் அது சாதியவாதிகளுக்கு வெற்றிதான்.

இந்த அழுகையும் ஆற்றாமையும் ஆவேசமும் எந்த சாதியவாதியை திருத்தியிருக்கிறது அல்லது எத்தனை நல்லுணர்வாளர்களின் மனசாட்சியை உலுக்கி சாதியத்திற்கெதிராய் போராடத் தூண்டியிருக்கிறது? நிரந்தரமாய் ஓரிடத்தில் கேட்கும் யாசகக்குரல் யாருடைய இரக்கத்தையும் தூண்டாமல் அனிச்சையாக சில சில்லறைக்காசுகளை பெற்றுவிடுவதைப்போல வன்கொடுமைக்கு ஆளாகும் தலித்துகளின் நிரந்தரக்கதறலும் சாதியத்தைப்பற்றி யாதொரு விவாதத்தை யும் கிளப்பிவிடாமல் நிவாரணங்கள் பற்றிய ஓலமாக சிறுமைப்படுத்தப்படுகிறது. பிச்சையாளர் இல்லாவிட்டால் கருணையாளர்களை யாரறிவார்

சாதிய வன்கொடுமைகளை இயல்பாக எடுத்துக்கொள்ளுமள வுக்குபொதுச் சமூகத்தின்உளவியல் சாதியவாதத்துடன் கைகோர்க்கிறது. வன்கொடுமைகளை தலித்துகளின் தனித்தப் பிரச்சினையாகவும், எப்போதும் நடக்கக்கூடியதாகவும், ஆகவே அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை எனவும் பரவியுள்ள இந்த உளவியல்தான் சாதிவெறியர்களின் முதன்மையான ஆதரவுத்தளம். ஒவ்வொருவரும் தலித்துகள் மீது சிறுவீதத்திலாவது கொண்டுள்ள அசூயை, வெறுப்பு, இழிவான பார்வை, தமக்கு கீழானவர் என்கிற நினைப்பு ஆகியவற்றை கிளறிவிட்டு ஒருங்கு திரட்டுவதின் மூலம் சாதிய வன்கொடுமைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இப்போது தருமபுரி அழித்தொழிப்பும்கூட அவ்வாறே நியாயப்படுத்தப்படுகிறது

2.
தருமபுரி திருப்பத்தூர் சாலையின் ஓரத்திலேயே இருக்கிற அண்ணா நகர் காலனிக்கு முதலிலும் நத்தம், கொண்டயம்பட்டி காலனிகளுக்கு அடுத்தடுத்தும் போனோம். அழித்தொழிக்க வந்தவர்கள் ஐந்து மணிநேரம் வெறியாட்டம் போட்டு முடிக்கிறவரையிலும் எட்டிக்கூட பார்க்காத போலிஸார், எல்லாம் அழித்தொழிக்கப்பட்ட பிறகு வண்டிவண்டியாக வந்து இறங்கியிருந்தார்கள். தமிழ்ச்சினிமாவிலாவது கடைசியில் வரும் போலிஸ் இங்கு அப்படியும்கூட வந்து தொலைக்கவில்லை. நாங்கள் வந்தவேலை முடிந்தது, நீங்கள் வரலாம் என்று சிக்னல் கிடைத்த பிறகு  வந்தவர்களைப் போன்று குவிந்திருந்த போலிசார் எங்களைப் போன்றவர்களை துருவித்துருவி விசாரித்த பிறகே உள்ளே அனுமதித்தார்கள். எங்களை விசாரிக்கிற வெண்ணெய் வெட்டும் வேலையில் காட்டுகிற இந்த விரைப்பிலும் மிடுக்கிலும் கொஞ்சத்தை சாதிவெறியர்களிடம் காட்டியிருந்தார்களா னால் எவ்வளவோ இழப்புகளை தடுத்திருக்க முடியும்

வன்னியர்களால் அழித்தொழிக்கப்பட்ட அந்த தலித் குடியிருப்புகளுக்கு எங்களைப் போலவே தினமும் ஐம்பதறுபது கார்களில் பலரும் வந்துபோகிறார்கள். ஆறுதல் சொல்லவும் துக்கம் பகிரவும் நிவாரணம் வழங்கவும் உண்மையறியவும் என்று வந்துபோகும் அவர்களை மலங்கமலங்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்-உயிரைத்தவிர மற்றெல்லாவற்றையும் இழந்துநிற்கும் அம்மக்கள். பாடுபட்டு சேர்த்ததெல்லாம் இப்படி பாழில் அழிந்ததே என்று அங்கலாய்ப்பும் ஆற்றாமையும், இழந்தவற்றில் எதையாவது மீட்டுவிட முடியாதா என்கிற பரிதவிப்பும், யாரிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது என்கிற மருகலுமாக இருக்கும் அந்த மக்களைப் பற்றி எழுதும் இக்கணத்திலும் கண்ணீர் முட்டித் தளும்புகிறது. ஏற்கனவே வந்த ஒரு கூட்டம் வீடு வாசலை யெல்லாம் எரித்துவிட்டுப் போய்விட்டதே இப்போது வந்திருக்கும் கூட்டம் என்ன செய்யப் போகிறதோ என்கிற அச்சத்தில் உறைந்த குழந்தைகள் எங்களிடமிருந்து தள்ளியே நின்றன.  உயிரைக் காத்துக்கொள்ள ஓடிப்போய் பாம்பும் தேளும் மேயும் காடுகளுக்குள் இரவெல்லாம் பதுங்கிக் கிடந்து உயிர் பிழைத்து வந்திருக்கிற அவலம் அவர்களுக்குள் ஏற்படுத்தும் ஆளுமைச்சிதைவை யார் வந்து சீர்செய்ய முடியும்? அவர்களது பிஞ்சு மனங்களில் பாய்ச்சிய நஞ்சு உள்ளிருந்து மாய்க்கும். மாய்வது யாராகவும் இருக்கலாம்.
நாங்கள் ஓர் உண்மையறியும் குழுவாகப் போயிருந்தோம். பொதுவாக சாதிய வன்கொடுமை நிகழ்வுகளில் புதிதாக கண்டுபிடிக்கக்கூடிய உண்மை என்று எதுவும் தனியாக இருப்பதில்லை. தம்மைத்தாமே உயர்வாக கருதிக்கொள்வது, தலித்துகளை கீழாக கருதி இழிவுபடுத்துவது, தலித்துகளது வளர்ச்சியைக்  கண்டு பொறாமையும் ஆத்திரமும் கொள்வது, அவர்களை தாக்குவதையும் அழித்தொழிப்பதையும் தமது பிறப்புரிமையாக கருதுவது உள்ளிட்ட சாதி இந்துக்களின் உளவியல்தான் ஒவ்வொரு வன்கொடுமையையும் நிகழ்த்துகிறது என்கிற வரலாற்று உண்மை ஏற்கனவே தெரிந்ததுதான். எந்தச் சூழலில் நேரத்தில் எவ்விதமாக இந்த வன்கொடுமை நிகழ்ந்தது, இழப்புகள் எவ்வகையானவை, அவற்றின் தோராய மதிப்பு என்ன, இந்த முறை அழித்தொழிப்பில் ஈடுபட்டவர்கள் யார்யார், அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் தலையீடு, ஊடகங்களின் செயல்பாடு என்ன என்பது மாதிரியான விவரங்களைத் திரட்டுவதைத் தான் நாங்கள் உண்மையை அறிவதாக நம்பிக்கொண்டு செய்ய வேண்டியிருந்தது

யார் கண்ணிலும் படாத எவர் கவனத்திற்கும் வராத ஏதோ ஒரு உண்மையைக் கண்டுபிடித்து உலகத்தின் முன்னால் போட்டுடைக்கப்போகிறோம் என்ற மனநிலை தொடக்கத்தில் இருக்கத்தான் செய்தது. ஆனால் நாலைந்து வீடுகளை பார்ப்பதற்குள்ளாகவே மனவுறுதி குலைந்துவிட்டது.   ஒன்றைப்போலவே ஊரின் எல்லா வீடுகளும், ஒரு ஊரைப் போலவே மூன்று ஊர்களும் அழித்தொழிக்கப்பட்டுள்ளன.  19ம் நூற்றாண்டில் கொள்ளையடிக்கப்பட்ட சிவகாசி, சிங்கள இனவெறி ராணுவத்தால் சிதிலமாக்கப்பட்ட இலங்கையின் தமிழர் பிரதேசங்கள், இஸ்ரேலின் தாக்குதலால் அழிபடும் காஸா ஆகியவற்றை நினைவூட்டும் விதமாக   இந்த தலித் குடியிருப்புகள் எரித்தழிக்கப்பட்டுள்ளன. உயிர்ப்பலி இல்லை என்கிற ஒன்றைத்தவிர மிச்ச அழிமானங்கள் எல்லாம்  ஒரே வகையிலானவைதான். உயிர்ச்சேதம் விளைவிக்காதது  ஜீவகாருண்யத்தால் அல்ல, உயிரைத்தவிர எல்லாவற்றையும் அழித்து நடைப்பிணங்களாக்கும் திட்டத்தின் ஒருபகுதிதான். பல தலைமுறைகளாக உழைத்துழைத்து சிறுகச்சிறுக சேர்த்த உடைமைகளை கொள்ளையடித்து  அழித்தொழிப்பதன் மூலம் தலித்துகளை ஏதிலிகளாக இன்னும் சில பத்தாண்டுகளுக்கு பின்தள்ளிச் சரிப்பது, இழப்புகளை எண்ணியெண்ணி காலத்திற்கும் மருகுவது, வன்னியப் பெண்ணைக் காதலித்தால் ஊரையே அழித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் உறையவைப்பது என பன்முகப் பலன்களை அடைந்திருக்கிறார்கள் சாதியர்கள்

நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்கிற தலித் இளைஞர், செல்லங்கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னிய சாதிப் பெண்ணை காதலித்து கல்யாணம் முடித்ததுதான் இந்த அழித்தொழிப்புக்கான காரணம் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களது காதலையும் கல்யாணத்தையும் ஏற்க மறுத்த வன்னியர்களின் சாதிவெறிதான் உண்மையான காரணம். தங்கள் சாதியின்புனித ரத்தத்தில்தாங்கள் இழிவாக எண்ணும் ஒரு சாதியின் ரத்தக்கலப்பு நடப்பது பற்றிய வன்னியர்களின் சகிப்பின்மையிலிருந்தே இந்த வன்கொடுமை நடத்தப்பட்டுள்ளது. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்கிற காட்டுமிராண்டிகால தண்டனையை மிஞ்சுவதாயிருக்கிறது ஒரு பெண்ணுக்கு மூன்று ஊர்கள் என்பது. இத்தனைக்கும் அந்தப்பெண் வாழ்வதற்குத்தான் போயிருக்கிறாள், இதில் யாருக்கு என்ன இழப்பு

சாதியின் அடிப்படை அலகான குடும்பத்திற்குள் வைத்து வளர்க்கப்படுகிற பெண்களும் சாதியுணர்வுடனேயேதான் வளர்கிறார்கள். ஒவ்வொரு ஆணைப்போலவும் அவர்களுக்கும் சாதியப் பெருமிதமோ தாழ்வுணர்ச்சியோ இருக்கத்தான் செய்கிறது. யாரை மணந்து யாரோடு படுத்து யாருடைய பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்கிற ஆபாசமான கட்டளைக்கு ஒரு பெண் கீழ்ப்படிவதில்தான் அவளது குடும்பமானம்/ சாதிமானம்/  இனமானம் என்பதெல்லாம்  அடங்கியிருக்கிறது என்று பாடம் செய்து வளர்க்கப்படுவதால் பெரும்பாலான பெண்கள்  தத்தமக்கு வரையறுக்கப் பட்டுள்ள இந்த எல்லைக்குள்ளேயேதான் வாழ்க்கைத் துணையை தெரிவுசெய்கிறார்கள். அவர்களது விருப்பப்படி நடப்பதைப்போல மேலுக்குத் தெரிந்தாலும் மிக இறுகிய கட்டுப்பாட்டினாலும் ஒடுக்குமுறையினாலுமே இந்த ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டு வருகிறது

சுதந்திரமாக சிந்திக்கவும், சுதந்திரமாக நடமாடவும், விரும்பியதை கற்கவும், வேலைக்குச் செல்லவும் வாய்ப்பு பெற்ற பெண்களும்கூட தமது வாழ்க்கைத்துணையை தத்தமது சாதிக்குள்ளேயே தேர்ந்தெடுப்பதுதான் இங்கு பொது வழக்கு. விதிவிலக்காக சாதிக்கு வெளியே சிலர் வாழ்க்கைத் துணையை தேடிக்கொண்டாலும் அது காதல் திருமணம் மூலமாகத்தானேயன்றி குடும்பத்தார் ஏற்பாடு செய்ததாக ஒருபோதும் அமைவதேயில்லை. காதல் எல்லாக்காலத்திலும் இருந்துவருகிறது என்றாலும் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தில் சாதிமாறி காதலித்து மணம் செய்துகொள்வோர் மிகமிகச் சொற்பமானவர்கள். அதினிலும் சொற்பமானவர்களே தலித்துகளை காதலித்து வாழ்க்கைத்துணையாக ஏற்று சொந்த சாதியை துறக்கிறார்கள். ஆனால் அப்படியான திருமணங்கள் எதுவும் இயல்பானதாக ஏற்கப்படாமல் இப்படியான வன்கொடுமைகள் மூலமாகவே எதிர்கொள்ளப்படுகின்றன. சாதியின் உயிர் எதில் தங்கியிருக்கிறது என்பதை சாதியவாதிகள் நன்றாகவே அறிந்துவைத்துள்ளனர்

வன்னியப் பெண்களை - கவனிக்கவும் பெண்களைத்தான்- வேறு சாதியினரை மணம் முடித்தால் அவர்களை தீர்த்துக் கட்டுமாறு காடுவெட்டி குரு பேசியதுதான் இவ்வளவு அழிவுகளுக்கும் காரணம் / தொடக்கம் என்பதுபோல பலராலும் சொல்லப்படுகிறது. காடுவெட்டி குருவோ கழுத்துவெட்டி துருவோ தூண்டிவிடுவதற்கு முன்பு வன்னியர்கள் மற்ற சாதியினரோடு ஏதோ சமாதான சகவாழ்வு வாழ்ந்துவந்ததைப் போலவும் கொண்டான் கொடுத்தான் உறவைப் பேணியதைப் போலவும் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. சாதி மீறி மணம் முடிக்கும் பெண்களை தீர்த்துக்கட்டும் எல்லாச் சாதியர்களையும் போலவேதான் வன்னியர்களும் இருந்தனர் என்பதற்கு அவலம் பொதிந்த சாட்சியங்கள் பலவுண்டு. புதுக்கூரைப்பேட்டை கண்ணகியையும் முருகேசனையும் துள்ளத்துடிக்க அவர்கள் கொன்ற விதம் நாடறிந்ததுதானே?

அதுபோலவே தருமபுரி பகுதியில் நக்சலிசம் செல்வாக்கிழந்ததால் தான் சாதிவாதம் தலைதூக்கிவிட்டதாக சொல்லிக் கொள்ளவும் சிலர் ஆசைப்படுகிறார்கள். நக்சலைட்டுகள் தீவிரமாக செயல்பட்டுவந்த காலத்திலும்கூட இம்மாவட்டத்தில் மெணசி, மருக்காலம்பட்டி கலவரங்களையும், தருமபுரி அரசு கல்லூரி விடுதி மாணவரிடையே ஏற்பட்ட கலவரத்தையும் சில வன்னியர்களே முன்னின்று நடத்தினதை வரலாறு தன் நினைவில் வைத்திருக்கிறது. வன்னியர் செறிந்த வாழும் இப்பகுதியில் முதலியாரான பாலனின் சிலை எதற்கு என்று ஒரு தலைமுறையின் தியாகத்தையே அவமதிக்குமளவுக்கு சாதிவெறி உச்சத்தில் நின்றாடும் நிலை அங்கு ஒருநாளில் உருவானதல்ல.   
   
3.
இலஞ்சம், ஊழல், அதிகாரவெறி, குடும்பஅரசியல், சந்தர்ப்பவாதம் ஆகியவற்றில் திளைத்து சொந்த சாதி மற்றும் கட்சி அணிகளிடம் ராமதாஸ் செல்வாக்கை இழந்துகொண்டிருந்த காலமிது. என்னதான் தமிழ், தமிழர், பாட்டாளி என்று சவடால் அடித்தாலும் அவரது கட்சியில் வன்னியர் தவிர வேறு யாரும் சேர்ந்துவிடப் போவதில்லை என்பது ஒருபுறமிருக்க வன்னியர் அனைவரும் தன்பக்கம் இருப்பதாக அவர் காட்டிவந்த தோரணையும்கூட  போலியானதுதான். அவரது வன்னிய ஆதரவுத்தளம் அரிக்கப்பட்டுவிட்டது என்ற உண்மை சமீபத்திய தேர்தல்களில் அம்பலமாகிவிட்டது. பா...வை பெரியதொரு வாக்குத் திரட்டியாக பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும், அதனோடு கூட்டுவைத்தால்தான் வன்னியர்களின் ஓட்டுகளைப் பெறமுடியும் என்பது மாதிரியான நிலை எதார்த்தத்தில் இல்லை என்பதும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. அக்கட்சியின் அங்கீகாரமும் கேள்விக்குள்ளாகிவிட்டது. எனவே வன்னியர் சங்கத்தை புதுப்பிப்பது, ஆண்ட பரம்பரை என்ற டூப்புகளை அவிழ்த்து விடுவது, வன்னிய சாதியின் தூய(?) ரத்தத்தைப்  பாதுகாக்க அறைகூவல்விடுவது ஆகியவற்றின் மூலம் வன்னியர்களின் ஏகப்பிரதிநிதியாக காட்ட முயற்சிக்கிறார். தன்னைவிட்டால் வன்னியர்களுக்கு நாதியில்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதன் மூலம் அடுத்துவரும் தேர்தல்களில் அரசியல் பேரத்தை வலுவாக நடத்தமுடியும் என்பதே ராமதாசின் கணக்கு. அதற்காக அவர் மேற்கொண்டிருக்கிற இழிவான முயற்சிகளின் விளைவுதான் தருமபுரி அழித்தொழிப்பு. அழித்தொழிப்பு குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையை வன்னியர் யாவருக்குமான ஆபத்தென முன்னிறுத்தி வன்னிய உணர்வை கிளறிவிடுவதும் அதை தலித்துகளுக்கு எதிரான துவேஷமாக திருப்பிவிடுவதுமாகிய அவரது நடவடிக்கைகள் யாவுமே  சமூகத்தை பெரும் அமைதியின்மைக்கு இட்டுச்செல்லும் தன்மை கொண்டவை. குற்றம் செய்யத் தூண்டியதும் குற்றவாளிகளை பாதுகாப்பதும் முதன்மைக்குற்றங்களே

அழித்தொழிப்பு முடிந்து பத்துநாட்கள் வரை பம்மிக் கிடந்த இந்ததமிழ்க்குடிதாங்கிஇப்போது வாய்திறந்துள்ளார். தனது சாதியினர் மூன்று தலித் ஊர்களில் 10கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை  கொள்ளையடித்ததையும்  கொளுத்தியழித்ததையும் கண்டு வெற்றியின் மமதையேறிய  வார்த்தைகளை விஷமென இறக்குகிறார். தன் சாதியினரின் மனிதத்தன்மையற்ற அழித்தொழிப்பை நியாயப்படுத்தமுன்னேறிய சாதிப்பெண்கள் தலித் குடியிருப்புகள் வழியாக பத்திரமாக கடக்க முடியவில்லைஎன்கிற அபாண்டத்தைச் சுமத்துமளவுக்குச் சென்றார். மிகவும் பிற்பட்ட சாதி என்று கூப்பாடு போட்டு இடஒதுக்கீடு கேட்கிறவர் வன்கொடுமையில் ஈடுபடும்போது முன்னேறிய சாதி என்று முண்டா தட்டுகிற கேவலத்தை என்னவென்று சொல்வது? குறிப்பிட்ட இயக்கத்தின் கட்டளைப்படி தலித் இளைஞர்கள், ‘முன்னேறியசாதிகளின் வசதியான குடும்பத்துப் பெண்களை காதல்வலையில் வீழ்த்தி, பிறகு அந்தப்பெண்களை விடுவிக்க பெரும் தொகையை பேரம்பேசி வாங்கிக்கொண்டு விரட்டிவிடுவதாக ராமதாஸ் பொழிந்த கண்ணீரில் தமிழ்நாடு முப்போகம் விளையும். கட்டளையின்படி கலவரம் தான் செய்யமுடியும், காதல் செய்யமுடியாது என்ற குறைந்த பட்ச அறிவுகூட இல்லாத மூடரல்ல அவர். அழித்தொழிப்பை நியாயப்படுத்தவும் இந்த அநியாயத்திற்கு பிறசாதி யினரை துணைசேர்க்கவுமே தமிழ்ச்சினிமாவிலும் வராத இந்த உச்சபட்ச அபத்தக்கதையை அவிழ்த்துவிடுகிறார்.

தலித்துகளைப் பற்றிய இவ்வளவு கடுமையான அவதூறைக் கொட்டியிருக்கிற அவரை - இந்த ஒரு காரணத்திற்காகவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம். காதல்வலையில் வீழ்ந்துவிடுகிற அபலைகள், செல்போன் வாங்கித் தந்தால் மடங்கிவிடுகிறவர்கள்,   பாலியல் சீண்டல்களை எதிர்க்கும் திராணியற்றவர்கள்  என்றெல்லாம்  தனது சொந்தசாதிப் பெண்களை இழிவுபடுத்துவதற்காகவும்கூட  அவர் தண்டிக்கப்பட வேண்டியவர். ஆனால் அப்படியான ஆற்றல்கொண்ட அரசாங்கமும் இல்லை- அப்படி கோருகிற இயக்கங்களும் இல்லை என்பதுதான் இன்றைய அவலங்களுக்கு பெரும் காரணம். ஃபேஸ் புக்கின் நிலைத்தகவலாக மிகச் சாதாராணமான ஒரு கருத்தை வெளியிட்டவர்களை கைதுசெய்து சிறைப்படுத்துகிற காவல்துறையினரும் ஆட்சியாளர்களும், துவேஷமூட்டி பொது அமைதியை குலைக்கிற ராமதாசையும் காடுவெட்டி குருவையும் வாயைப் பொத்தாமல் வெளியே விட்டுவைத்திருக்கிறது

காமிக்ஸ் கதைகளில் வரும் .கொ.தீ. ( அழிவு கொள்ளை தீமைக் கழகம்) போல இந்த அழித்தொழிப்பில் ஈடுபட்ட பா... இனி அடுத்தடுத்தும் அவ்வகையான திட்டங்களை வைத்திருக்கிறது என்பதை ராமதாசின் அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள பாச்சிரப்பாளையத்தில் தருமபுரி மாதிரியிலேயே மற்றுமொரு அழித்தொழிப்பு நவம்பர் 27ம்தேதி நடத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஏதோ ஒளிவுமறைவாக நடக்கவில்லை. மிக வெளிப்படையாக, சமூக அமைதியையும் சட்டத்தின் ஆட்சியையும் ஏற்க முடியாதென பகிரங்கமாக அறிவித்தே நடக்கின்றன. வெறியேறியவர்களை சிறை வைக்காவிட்டால் ஊரெல்லாம் தீவைத்து அலைவார்கள்

மற்றமைகளை எதிரியாக கட்டமைத்து துவேஷம் வளர்ப்பது, அந்த எதிரியிடமிருந்து அச்சுறுத்தல் என வதந்தியை கிளப்பி பீதியூட்டுவது, எதிரியை அழித்தொழித்தால்தான் நிம்மதியாக வாழமுடியும் என்ற பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வன்முறையைத் தூண்டுவது என வகுப்புவாதிகள் கையாளும் மலிவான தந்திரங்களையே ராமதாசும்   அவரொத்த சாதியவாதிகளும் கையிலெடுத்துள்ளனர். தலித்துகளுக்கு எதிரான சாதியவாதிகளின் இந்த அணிதிரட்சி, ஒருபக்கத்தில் வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விடுவதுடன் மறுபக்கத்தில் தமது சொந்தசாதிப் பெண்களை ஒடுக்குவதற்கும் வழிவகுக்கிறது.  கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை மணிகண்டன், பிராமின் டுடே நாராயணன், .தி.மு.. பழ.கருப்பையா என்று பலரும் அவரோடு கருத்தொன்றுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆமாம், சாதியவாதிகள் தனித்தனியாக இருந்தாலும் அவர்களது எண்ணமும் செயலும் அவர்களை ஒருங்கிணைத்துவிடுகிறது. சாதி மறுப்பாளர்களோ ஒன்றுபோல் தெரிந்தாலும் தனித்தனியாக செயல்பட்டு பிரிந்து கிடக்கிறார்கள்

***

அழித்தொழிப்பைக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த முதலமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50ஆயிரம் ரூபாயை நிவாரணத்தொகையாக அறிவித்தார். ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு இந்த தொகை எம்மாத்திரம்? அதற்கப்புறம் அரசு எடுத்த நடவடிக்கைதான் என்ன?   பாதிக்கப்பட்டுள்ள தலித்துகளைப் பார்த்து ஆறுதல் சொல்ல தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்கூட இன்றுவரை அங்கு  எட்டிப் பார்க்கவில்லை. பிறகெதற்கு அப்படியொரு துறை? அதற்கெதற்கு ஒரு அமைச்சர்? அழித்தொழிப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைப்பு காட்டிய நிலையில் இவ்வழக்கு யாரும் கோராத நிலையில்  அவரிடமிருந்து பறிக்கப்பட்டு சி.பி.சி..டி பிரிவினரிடம்  ஒப்படைக்கப்பட்டது குறித்து பலத்த சந்தேகம் கிளம்பியுள்ளது. சி.பி.சி..டி. பொறுப்பேற்று 15 நாட்களாகியும் மேற்கொண்டு இன்னும் ஒருவரைக்கூட கைது செய்யாமலும் அழித்தொழிப்பின் தடயங்களை முழுமையாக சேகரிக்காமலும் இழப்புகளை முறையாக மதிப்பீடு செய்யாமலும் இருப்பதால் அவநம்பிக்கை அடைந்துள்ள தலித்துகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இவ்வழக்கு மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று கோருவதில் நியாயமிருக்கிறது.  

தகர்க்கப்பட்ட வீடுகள் இன்னும் கட்டித்தரப்படாத நிலையில் அரசு அமைத்துள்ள ஒரு தகரகூடாரத்திற்குள்தான் ஊரின் மொத்த தலித்துகளும் தங்க வேண்டியுள்ளது. மாற்றுத்துணி இல்லை. பொங்க ஒரு சட்டியில்லை.  மொண்டு குடிக்க ஒரு சொம்பில்லை. அவர்களது தவச தானியங்களெல்லாம் தீக்கிரையாக்கப்பட்டதால் அரசு ஆக்கிப்போடுகிற சோற்றை பிச்சை போல வாங்கித் தின்னும் அவமானம் அவர்களை கூனி குறுகச் செய்துள்ளது. உழைத்துண்ணும் பண்பில் வளர்ந்த அம்மக்கள் இந்த பிச்சைச்சோறு வேண்டாமென மறுத்து நவம்பர் 28முதல் உண்ணாநோன்பை மேற்கொண்ட பிறகே மாவட்ட ஆட்சித்தலைவர் எட்டிப்பார்த்திருக்கிறார். சுற்றிப் பார்க்க வந்தபோது தாம்தூம் என்று எகிறிய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் அமைதி காக்கிறது.   

கள்ளத்தோணி ஏறி ஈழத்திற்குச் செல்லத் தெரிந்த வைகோ  எல்லா வாகன வசதிகளும் அகண்ட பெரும் சாலைகளும் இருக்கின்ற இந்த தலித் ஊர்களுக்கு வந்துபோக வழி தெரியாமல் இருக்கிறார். தமிழருக்கொரு ஆபத்தென்றால் தாய் தடுத்தாலும் நில்லேன் என்று நரம்பு புடைக்க முழங்கும் எழுச்சி / புரட்சி தமிழர்கள் தலித்துகளை யாராகத்தான் மதிப்பிட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்து ஒற்றுமை பேசுகிற பா... கப்சிப். காங்கிரஸ் கட்சி சில பொருட்களை நிவாரணமாக கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது. வரும் தேர்தலில் பா...வுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியமேயில்லை என்று தெரிந்துகொண்ட பிறகு - பத்துநாட்கள் கழித்தே - ஆய்வுக்குழுவை அனுப்பி வைத்த தி.மு.. அழித்தொழிப்புக்கு காரணம் பா... தான் என்று சொல்லியதையே பெருஞ்சேவையாக எண்ணி அமைதியடைந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடக்கநாளிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ(எம்), சிபிஐ, திராவிடர் கழகம், சில மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் குழுக்கள் மட்டுமே களத்தில் இருக்கின்றன.  

சமாதானமான காலத்தில் சாதிகடந்தவர்களாக காட்டிக் கொண்டிருந்தவர்கள் ஒரு நிலை எடுத்தாக வேண்டும் என்கிற இப்படியான இக்கட்டுக்குள் சிக்கும்போது திணறித் தவிக்கிறார்கள். சாதிகடந்தவர் என்கிற வேஷமும் கலையாமல் தலித் ஊர்கள்  அழித்தொழிக்கப்பட்டதிலும் நியாயமிருக்கிறது என்று வாதாட அவர்கள் படும்பாட்டை பார்க்க கேவலமாக இருக்கிறது. மறுபக்கத்திலோ உண்மையறிய வந்த குழுக்கள் பலவும் தாங்கள் அகழ்ந்தறிந்த உண்மைகளை வெளியிட்டுவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டன. ஊடகங்களுக்கும் அடுத்தடுத்த பரபரப்புக்கு வேறுவேறு விசயங்கள் கிடைத்துவிடுவதால் இந்த கிராமங்களுக்கு வருவதை நிறுத்திக்கொண்டன.  ஆகக் கடைசியில் உலகத்தின் பார்வையிலிருந்து அந்த மூன்று தலித் கிராமங்களின் எரிந்த சித்திரம் மெதுவே மங்கி வருகிறது

ஒவ்வொரு சாதிய வன்கொடுமை நிகழ்த்தப்படுகிற போதும் அதுபற்றி அரக்கப்பரக்க பேசுவதும் பிறகு அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பிவிடுவதும்தான் சாதிவெறியர்கள் தொடர்ந்து இயங்குவதற்கான வாய்ப்பை வழங்குகி றது. சாதியை மறுத்து தைரியமாகவும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் வாழமுடியும் என்கிற நம்பிக்கையை எல்லாத் தளங்களிலும் ஏற்படுத்தும்போதுதான் சாதிமறுப்பு திரு மணங்கள் இயல்பாக ஏற்கப்படும். அப்படியொரு சூழலை உருவாக்குவதற்குரிய திட்டமும் அர்ப்பணிப்பும் உழைப்பும் தங்களிடம் இருக்கிறதா என்று  சாதிஒழிப்பில் நம்பிக்கையுள்ள இயக்கங்கள் தம்மைத் தாமே சோதித்துக் கொள்வதற்கான தருணம் இதுவே.

நன்றி:  vallinam.com.my, புதுவிசை 37வது இதழ்

6 கருத்துகள்:

 1. //பாதிக்கப்பட்டுள்ள தலித்துகளைப் பார்த்து ஆறுதல் சொல்ல தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்கூட இன்றுவரை அங்கு எட்டிப் பார்க்கவில்லை. பிறகெதற்கு அப்படியொரு துறை? அதற்கெதற்கு ஒரு அமைச்சர்? அழித்தொழிப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைப்பு காட்டிய நிலையில் இவ்வழக்கு யாரும் கோராத நிலையில் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு சி.பி.சி.ஐ.டி பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்து பலத்த சந்தேகம் கிளம்பியுள்ளது. //
  பழுதான அரசு இயந்திரம்... :(( என்ன சொல்வது?

  பதிலளிநீக்கு
 2. சாதி ஒழிப்பில் நம்பிக்கையுள்ளவர்களும், சாதி மறுப்பாளர்களும் கூட இந்தச் சூழலில் வாய்பொத்திதான் இருக்கிறார்கள் என்பதே வருத்தத்திற்குரிய உண்மை. அழுத்தந்திருத்தமான கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. சமூக சமத்துவம் என்பது, மவுனித்துக் கிடக்கும் சமூகமும், அரசாங்கத்தினால் மண்ணில் புதைக்கப்படுகின்றது. தமிழகம் மட்டுமில்லை இந்தியா முழுவதுமே பழங்குடிகள், தலித்கள் வன்கொடுமைக்குள் ஆக்கப்பட்டனர். ஆனால் அவற்றை பற்றி சிந்திக்கவோ, கவலைப்படவோ, மாற்றம் கொண்டு வரவோ நமக்குத்தான் நேரமோ அக்கறையோ இல்லை. உங்களின் பதிவு இதன் தீவிரத்தை ஆழமாக ஆராய்கின்றது.

  பதிலளிநீக்கு
 4. என்ன கொடுமை இது.. உருப்படுமா? உலகத்தில் எங்குமே நிகழாத இந்த கொடுமைகளை எப்படித்தான் சமாளிக்கப்போகிறார்களோ.

  பதிலளிநீக்கு
 5. இந்த அளவுக்கு தருமபுரி கலவரத்தை புரிந்துக் கொண்டவர்களை விட அதை அன்றைய ஒரு செய்தியாக பாவித்து கடந்து சென்றவர்களே அநேகம். அரசியல் வாதிகள் அரசியல் செய்ய ஒரு நிகழ்வாக மட்டுமே பார்க்கிறார்கள். வெகு சிலரோ அங்கலாய்க்க மட்டுமே முடிகிறது.

  பதிலளிநீக்கு
 6. இந்த அளவுக்கு தருமபுரி கலவரத்தை புரிந்துக் கொண்டவர்களை விட அதை அன்றைய ஒரு செய்தியாக பாவித்து கடந்து சென்றவர்களே அநேகம். அரசியல் வாதிகள் அரசியல் செய்ய ஒரு நிகழ்வாக மட்டுமே பார்க்கிறார்கள். வெகு சிலரால் அங்கலாய்க்க மட்டுமே முடிகிறது.

  பதிலளிநீக்கு