ஞாயிறு, டிசம்பர் 16

கடவுள், சாத்தான், மரியா, நீங்கள், நான் மற்றும் சம்பு - ஆதவன் தீட்சண்யா



  சந்தியா பதிப்பகம் வெளியீடாக வரவிருக்கும்
சம்புவின் "அறம் எனும் ரத்தச்சிவப்புக்கனி" என்ற  கவிதைத்தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை

‘‘ஜோசப்பு செத்துட்டானாம்’’

‘‘எந்த ஜோசப்?’’ 

இது பக்கத்துத்தெரு ஜோசப். மனைவியையும் இழந்து போனவருஷம் ஒரு விபத்தில் தனது மகளையும் இழந்து காசநோயுடன் தனியாக வாழ்ந்துவந்த ஜோசப். ஐந்தாறு வருசங்களுக்கு முன்னால் ஒரு ஜோசப் செத்துப்போனான். அவன் நோய் வந்து சாகவில்லை. இதுபோன்ற ஒரு கோடைக்காலத்தில்தான் என்னால் கொலை செய்யப்பட்டு இறந்துபோனான்...

- என்று தொடங்கும் ஜி.முருகனின் கதையைப்போலவே சம்புவின் கவிதைகளும் ஜோசஃப்புகளால் நிறைக்கப்பட்டவை. யாரோ ஒருத்தர்உம்கொட்டியபடியே உடன் வருகிற தைரியத்தில் ஏழேழு லோகங்களுக்குள்ளும் அண்டசராசரங்களுக்குள்ளும் நுழைந்து தன்கதையை வளர்த்தும் விரித்தும் கொண்டு செல்வதற்கான தைரியத்தை பாட்டி பெற்றுவிடுவதைப்போல தன்னோடு உரையாட எங்காவது சில  ஜோசஃப்புகள் காத்திருப்பார்கள் என்கிற ஒரு நம்பிக்கைதான் சம்புவை எழுத வைக்கிறது. ஜோசஃப்புகள் மட்டுமல்ல, ஜோசஃப்பை போலவே இருக்கிற கடவுள், சாத்தான், மரியா, நீங்கள், நான் என்று எல்லோருடனும் அவர் நிகழ்த்த விரும்பும் உரையாடல்தான் இக்கவிதைகள். தன்னிலையாக பேசிக்கொள்வது போன்ற தோற்றத்தைக்காட்டினாலும் உண்மையில்  அது நம்மை நோக்கிப் பேசுகின்றன. நம்மை நோக்கிப் பேசுவதாக காட்டிக்கொண்டே அவை இன்னொரு தளத்தில் தனக்குள்ளேயே தனக்காக முணுமுணுக்கவும் செய்கின்றன. தன்னிலையையும் முன்னிலையையும் இணைக்கிற புள்ளியாக இருக்கிற ஜோசஃப்புகள் யாரோபோல் தெரிகிற நம்மின் பிரதிகள்

பழுப்பேறி மங்கிய புகைப்பட ஆல்பத்தை பார்த்துப்பார்த்து தன் பால்யத்தையும் ஊரையும் உறவையும் பிரிவையும் எண்ணி விம்மியழுவதையெல்லாம் கவிதையென முன்வைக்கிற லகுவான உத்தியை சம்பு கைக்கொள்ளாதிருப்பது ஆறுதலாயிருக்கிறது. அவ்வாறு எழுதப்படுகிற கவிதைகளைக் காட்டிலும் அந்த புகைப்படங்கள் கவித்துவமானவை என்கிற தெளிவு இதற்கொரு காரணமாயிருக்கலாம். அல்லது, சொற்களைக் குழைத்து ஒரு சித்திரத்தை வரைந்து அதன் கதையை வண்ணங்களால் ஒளிரவிடத் தெரிந்திருக்கிற அவருக்கு, படம் பார்த்து கதை சொல்கிற இரவல் நிலையின் மீது ஏற்படும் ஒம்பாமையும் குமட்டலும்கூட காரணமாயிருக்கலாம். புகையைப்போல அலைகிற நினைவுகளைப் பின்தொடர்ந்துப்போய் அந்திரத்தில் கரைந்து மிதந்தபடி பூமியிலிருப்பவர்களையெல்லாம் அற்பமென குனிந்து பார்க்கும் மனோபாவம் அண்டாத சம்பு, மிக இயல்பானதொரு மனிதராக நாம் நடக்கும்போது நடந்தும் பறக்கும்போது பறந்தும் உடனிருந்து நம்மோடு சமனிலைப் பேணுகிறார். அவர் எதற்குள்ளும் போய் பதுங்கிகொள்ளாமல் சமகாலத்தை அதனதன் கதியில் தன் கவிதைகளின் வழியே எதிர்கொள்கிறார். மற்றுமொரு விசயம், சமகாலம் என்று அவரது கவிதைகளில் முன்னிறுத்துவது வெறும் அன்றாடத்தை அல்ல. எண்திசைகளையும் ஏககாலத்தில் கண்திருப்பி பார்த்திட வாய்க்கப்பெற்றவர் எதையெல்லாம் சொல்லத்தகுமோ அதையெல்லாம் சொல்ல விழைகிறார்.

கவிதையின் கோருதலை  விடவும் கவிஞர் என்கிற தோரணையை கட்டியெழுப்புவதற்கான கச்சாக்களை எழுதுவதற்கே வசக்கப்பட்டுள்ள மரபான சூழலுக்கு வெளியே நின்றுகொள்கின்ற சம்புவின் கவிதைகள் வேறு எதைத்தான் பேசுகின்றன? அவை, கட்டவே முடியாத மாளிகைக்கான வரைபடத்தை ஒருவர் கனவில் வரைந்தும் திருத்தியும் அழித்துக்கொண்டேயும் இருப்பதைப்போல வாழ்ந்தேயிராத வாழ்க்கையின் மீதான பெருவிருப்பங்களையும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் அததற்கான சுரவொழுங்கில் இடையறாமல் முன்வைத்தபடியே இருக்கின்றன. ஆகவே அவை நடப்புலகத்தின் புழங்குமொழியைத் தவிர்த்து அமானுஷ்யங்களைப் பேசும் மறைநூல்களுக்குள்ளும் மந்திர தந்திரக் கதைகளுக்குள்ளும் கொழித்திருக்கும் மொழியையும் குறியீடுகளையும் சொற்கட்டையும் தன்வயமாக்கிக்கொண்டு வெளிப்படுகின்றன. ஆர்டரின் பேரில் மொத்தமாகவோ சில்லறையாகவோ எழுதிக்குவிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு தன்னை இரையாக்கிக்கொள்ளாமல் எழுதுவதற்கான உந்துதலை இயல்பாக பெறும்போது மட்டுமே எழுதுகிறவராக இருப்பதால் அவர் தேர்ந்துகொள்ளும் விசயங்களும் பொதுப்பட இல்லாமல் தனிப்பட இருக்கின்றன

கற்பனைக்கெட்டாத காலம்தொட்டு இயங்கி வருகிற இச்சமூகத்தின் சிந்தனைகளாலும் மொழியாலும் அர்த்தங்களாலும் அனர்த்தங்களாலும் மதிப்பீடுகளாலும் அதிகாரத்தினாலும் சட்டதிட்டங்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு மனிதர் தன்னை சுதந்திரவானாக அறிவித்துக் கொள்வதில் உள்ள அபத்தங்களையும் முரண்களையுமே சம்புவின் கவிதைகள் பேசுகின்றன. அவ்வாறு அறிவித்துக்கொண்ட யாரோ ஒரு ஜோசஃப்பையோ அல்லது தன்னையோ பற்றி அவருக்குள் ஊறி கொப்பளிக்கிற இரக்கம், கோபம், பகடி, இளக்காரம் போன்றவைதான் இக்கவிதைகளோ என்பதான ஐயத்தை திட்டமிட்டே படரவிடுகிற அவர், உண்மையில் நம் ஒவ்வொருவரையும்தான் வம்புக்கிழுக்கிறார் என்பது வாசிப்பில் பிடிபிடுகிறது. ஆனால் அவரிடம் வாங்கிய ஊமைக்குத்துகளை வெளிக்காட்ட முடியாமல் அவமானத்தில் குமைந்தபடியே அடுத்தப்பக்கத்திற்கு நகரவேண்டியுள்ளது. எல்லாமே இயல்பாக போய்க்கொண்டிருக்கிறது என்கிற பித்தத்தை தெளியவைத்து தெளியவைத்து அவர் விடுகிற குத்துகள், நம்மொத்த சராசரிகள் கண்திறந்து நம்மே நாமே பார்த்துக்கொள்ளத் தூண்டுகின்றன.  அவரவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவரவரே வாழ்வதாக கொண்டிருக்கும் நம்பிக்கையின் போலித்தன்மையை சிதறடித்துவிடுகிற சம்பு, நாம் திகைத்துச் சோரும் வேளையில் வாழ்க்கை எவ்வளவு கொண்டாடத்தகுந்தது என்பதையும் அதற்கென தீவிரத்தோடு மேற்கொள்ளும் எந்தவொரு சிறுமுயற்சியும் பெருஞ்சவாலாக மாறிப்போவதையும் கவனப்படுத்துகிறார்

கட்டுத்தளையற்ற சுதந்திரத்தைக் கோருகிற அல்லது அப்படியானதொரு சுதந்திரத்தைக் கொண்டிருப்பதாய் நம்புகிற ஒரு எழுத்தாளர் மிக அடிப்படையிலேயே எல்லாவகையான ஒடுக்குமுறைகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிரானவராக இயங்க வேண்டியிருக்கிறது. அரசியல் பூர்வமான இந்த நிலைப்பாட்டை மேற்கொள்வதில் பொதுநலனுமில்லை ஒரு புண்ணாக்கும் இல்லை, தான் கொண்டாடும் சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பும் ஒருவர் சுயநலன் சார்ந்தே இந்த நிலைப்பாட்டுக்கு வந்தாக வேண்டியுள்ளது. அதிகாரத்தை ஒழிக்க வேண்டுமானால் முதலில் அதை இழையிழையாக பிரித்து சிதைக்க வேண்டியிருக்கிறது. கவிதையின் செயல் எல்லையும்கூட அதுதான். அதற்கும் மேலாக கவிதை அதைச் செய்யும் இதைச் செய்யும் என்பதெல்லாம் வெற்று அலட்டல்கள்தான். அதிகாரத்தை பீடங்களில் வீற்றிருக்கும் ஒன்றாக பார்க்கின்ற மரபான மனப்பாங்கிலிருந்து தம்மை வலுவந்தமாக விடுவித்துக் கொள்கிற சம்புவின் கவிதைகள், அதிகாரம் என்பது திட்டவட்டமான வடிவங்களிலும் நிறங்களிலும் இடங்களிலும் மட்டுமே இருக்கக்கூடியது என்பதற்கும் அப்பால் சென்று அது தங்கியிருந்து ஆட்டுவிக்கும் நுண்ணடுக்குகளையும் வடிவங்களையும் அரூபங்களையும் காட்டித்தருகின்றன. ஒடுக்குமுறையாளர் ஒடுங்குகிறவர் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற இரட்டைநிலைகளில் ஒன்றை மறைத்து இன்னொன்றாய் காட்டிக் கொள்கிற அருவருப்பை    அம்பலப்படுத்துவதன் மூலம், அதிகாரத்தை எதிர்த்த கலகமானது தன்னைத்தானே கழுவேற்றிக்கொள்வதில்தான் நிறைவடைகிறது என்பது இக்கவிதைகளால் உணர்த்தப்படுகிறது. ஆகவே இங்கு கவிதை தானாக தன்னை எழுதிக்கொள்ளவில்லை. சம்பு என்கிற ஒருவர் தன் முழு அரசியல் பிரக்ஞையோடு கவிதை எழுதும் வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். வேலை நடக்கிறது வேறுபாதையில் செல்லவும் என்கிற எச்சரிக்கை எழுத்திற்கு பொருந்தாது. சம்புவின் கவிதைகள் நமது பொதுப்பயன்பாட்டுக்கும் நடமாட்டத்திற்கும் திறந்தே இருக்கின்றன. 

***
ஏதாவதொரு பதிப்பகத்திற்கு வெளிப்படையாக கவிதைகளையும் அவற்றை நூலாக வெளியிடுவதற்கான தொகையை கையூட்டாக ரகசியமாகவும் கொடுத்து கவிஞர் என்று தன்னைத்தானே நம்புவதற்கு வெட்கமன்றி பல முயற்சிகள் நடக்கின்ற காலமிது. ஊர்ஊராகப்போய் டெண்ட் அடித்து வித்தை காட்டுகிறவர்களைப்போலவும் வயக்காடுகளில் கிடை போடுகிறவர்களைப் போலவும் சிலர் ஒரு குழுவாக கிளம்பிப்போய் அறிமுக/ விமர்சனக் கூட்டங்களை நடத்திஇன்னின்னாரது கவிதைகள்தான் இந்தக் காலத்தின் குரல்என்று நிறுவத்துடிக்கிற முயற்சியும்கூட இவ்வகையானதே.  இந்தக்கூட்டங்களில் வாசிப்பதற்கென்றுநிரந்தர வாத்தியக்காரர்களும்’ ‘சபாஷ் வாரே ...வாஹ்...’ என்று தொடைதட்டி ரசிக்கிற நிரந்தர பார்வையாளர்களும்கூட கிடைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செட்டப் கூட்டங்களை இயல்பானவை போல காட்டுமளவுக்கு இவர்கள் தேர்ந்த நடிகர்களாகவும் பிரச்சார பீரங்கிகளாகவும் மாறியுள்ளதையும் புறக்கணிப்பதற்கில்லை. ஒலி ஒளி அமைப்பதற்காக மைக்செட் உள்ளிட்ட கூட்டத்தளவாடங்களை சொந்தமாக கொண்டுள்ள கவிக்குழுக்கள் விரைவில் உருவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான குழுக்கள் எதிலும் இல்லாதவர் சம்பு. சடக்கென ஒரு இடத்திற்கு கிளம்பிப்போய் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் தந்திரங்கள் அறியாதவர். நாலு இடங்களுக்கு வலிய போய் அறிமுகம் செய்துகொண்டு தன் கவிதைகளைக் காட்டி கவிஞர் என்கிற அங்கீகாரத்தை யாசகம் கேட்கிற மலிவான உத்திகளைப் பழகாத சம்பு தன் கவிதைகளை மட்டும்தான் நம்பியிருக்கிறார். ஆமாம், சுயமரியாதையுள்ள அசலான ஒரு கவிஞர் வேறு எதை நம்பமுடியும்?
ஆதவன் தீட்சண்யா
13.12.12


2 கருத்துகள்:

  1. //யாரோபோல் தெரிகிற நம்மின் பிரதிகள்// அழகு

    //நாலு இடங்களுக்கு வலிய போய் அறிமுகம் செய்துகொண்டு தன் கவிதைகளைக் காட்டி கவிஞர் என்கிற அங்கீகாரத்தை யாசகம் கேட்கிற மலிவான உத்திகளைப் பழகாத சம்பு// செம.. :)

    அருமையான வாசிப்பு ஆதவன்.

    பித்தமெல்லாம் தெளிஞ்சிருச்சு. கட்டாயம் படிக்கணும் இந்த தொகுப்பை!

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...