ஞாயிறு, டிசம்பர் 30

குழந்தைகளுக்கு புகட்டப்படும் நஞ்சு...




னேகமாக எல்லா நாளிதழ்களுமே வாரத்தில் ஒருநாள் சிறுவர்களுக்கான இதழை இலவச இணைப்பாக வெளியிடுகின்றன.  குழந்தைகளை ஈர்க்கும் வகையான வண்ணங்களிலும் வடிவங்களிலும் வெளியாகும் இவ்விதழ்கள் நமது குழந்தைகள் வாசிப்பதற்கென  எதைக் கொடுக்கின்றன என்பது குறித்து நாம் கவனம் கொள்வதில்லை.    

பத்திரிகை நிறுவனங்களின்/ ஆசிரியர்களின் சமூக அரசியல் பொருளியல் பண்பாட்டு சார்புநிலைக்கு ஆதரவாக குழந்தைகளின் மனதை தகவமைப்பதற்காகவே இந்த சிறுவர் இதழ்கள் வெளியாகின்றன. எல்லா நிலைகளிலும் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும் இச்சமூக அமைப்பிற்கு இசைவான மதிப்பீடுகள்,  நீதிக்கதை, பாடல் ஓவியம் கேலிச்சித்திரங்கள் வழியாக திணிக்கப்படுகின்றன. சாதிய பேதங்களையும் பால்மைப் பாகுபாடுகளையும் மததுவேஷங்களையும் நியாயப்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்டு வெளியாகும் இந்த இதழ்கள் வரலாற்றையும் திரிக்கின்றன. 

தினமணி நாளிதழ் 22.9.2012 அன்று வெளியிட்டுள்ள சிறுவர் மணியில் இடம் பெற்றுள்ள “சிலந்தி வலையும் கேடயமாகும்!” என்ற கதை இதனால் உணர்த்தப்படும் நீதி யாதெனில் “இறைவனிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்தால், சிலந்திவலை கூடக் கேடயமாகி நம்மைக் காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை!” என்று கூறி முடிக்கிறது. இந்த மகத்தான நீதியைச் (?) சொல்வதற்காக எழுதப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தக்கதை உண்மையில் களப்பிரர் மீதான எதிர்மறை எண்ணங்களையும் வெறுப்பையும் உருவாக்குவதற்காவே எழுதப்பட்டுள்ளது. 

" கி.பி.ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய நாட்டை ஆண்ட களப்பிர விக்ராந்தன், மிகப் பெரிய கொடுங்கோலன். சமயங்களை அழிப்பதே அவன் வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது. விக்ராந்தனின் காட்டாட்சியில் பைந்தமிழ் பாண்டிய மண்டலமே நடுநடுங்கியது. பாண்டிய நாட்டில் உள்ள கோயில்களில் பூஜையே நிகழக்கூடாது என்று ஆணை பிறப்பித்தான். கோயில்கள் அனைத்தையும் இழுத்துப் பூட்டினான். அவனுடைய தீய செயல்களால் சனாதன தர்மத்தை தம் கண்ணென நேசித்த பாண்டிய நாட்டுத் தமிழ் மக்கள் தாங்க முடியாத துயரத்தில் வாடினர்." - என்று தொடங்கும் கதை,  கடுங்கோன் என்ற பாண்டிய நாட்டு இளைஞன் "களப்பிரர்களிடமிருந்து தமிழ்மண் விடுதலை பெறும்வரை, இங்கிருந்து நகரமாட்டேன்; எனக்கு வாழ்வானாலும் சாவானாலும் இதே மண்ணில்தான்'' என்று சூளுரைத்து படைதிரட்டி வெற்றிபெறுவதாகவும் அதற்கு கடவுளே துணைபுரிவதாகவும்  முடிகிறது.

களப்பிரர்மீது பார்ப்பனர்களுக்குள்ள வன்மம் வரலாற்றுரீதியானது. மநுஸ்மிருதியின் கெடுதிசையில் சமூகத்தை செலுத்திய மூவேந்தர்களையும் வென்று தமிழகத்தை கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை ஆண்டவர்கள் களப்பிரர்கள். மூவேந்தர்களும் பார்ப்பனர்களுக்கு வழங்கியிருந்த சிறப்புரிமைகள் அனைத்தையும் ரத்துசெய்த களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தைப் பற்றி எழுதவந்த பார்ப்பன வரலாற்றாசிரியர்கள் பலரும் அந்த காலக்கட்டத்தை “ இருண்டகாலம்” என்றே குறிப்பிட்டு வருகின்றனர். 

பதினென் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் வீரசோழியம் உள்ளிட்ட இலக்கண நூல்களும் உருவான களப்பிரர் காலம் தமிழுக்கு இருண்டகாலமல்ல. பார்ப்பனீயத்தின் பிடியிலிருந்து சமூகத்தை விடுவித்த-தாலும்,  வேதமந்திரங்களையும் சடங்குகளையும் யாகங்களையும் முன்னிறுத்தி நடந்துவந்த பார்ப்பனச் சுரண்டலை தடுத்ததாலும் அது தமிழர்களுக்கும் இருண்டகாலமல்ல.  ஆனால் சமூகத்தின்மீது எல்லாவகையிலும் மேலாதிக்கம் செலுத்திவந்த பார்ப்பனர்கள் அந்த நிலையை இழக்கவேண்டி வந்தது. எனவே களப்பிரர் ஆட்சி ஒழியவேண்டும் என்பதே அவர்களது பிரார்த்தனையாகவும் ஒற்றை செயற்திட்டமாகவும் இருந்தது. 

களப்பிரர் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின் மீண்டும் ஆதிக்கம் பெற்றுவிட்டாலும், அதிகாரத்தை இழந்திருந்த அந்த காலக்கட்டத்தின் மீதும் களப்பிரர்கள் மீதும் 1500 ஆண்டுகள் கழித்தும் அடங்காத ஆத்திரம் கொண்டுள்ளனர் பார்ப்பனர்கள். களப்பிரர்கள் மீது பார்ப்பனர்களுக்குள்ள இந்த பகையுணர்ச்சி அவர்களுக்கு இயல்பான ஒரு உள்ளுணர்வாகவே மாறிவிட்டிருக்கிறது. எனவே அவர்கள் களப்பிரர்கள் மீதான தமது பகையுணர்ச்சியை ஒட்டுமொத்த சமூகத்தின் பகையுணர்ச்சியாக மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். “சிலந்தி வலையும் கேடயமாகும்!” என்ற கதையை சுமந்திரன் என்பவர் எழுதியதற்கும் தினமணி அதை வெளியிட்டதற்கும் பின்புலமாகவும் இந்த பகையுணர்ச்சியே இயங்குகிறது.

குழந்தைகளுக்கு புகட்டப்படும் இந்த நஞ்சினை எப்படி தடுக்கப்போகிறோம்...?

- ஆதவன் தீட்சண்யா

நச்சுக்கதை முழுவதையும் படிக்க:
http://dinamani.com/weekly_supplements/siruvarmani/article1271955.ece



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...