சுண்டக்கா கால்பணம்
சுமைக்கூலி முக்காப்பணம். பத்துரூபாய்
கடன் வாங்குவதற்குள் வெத்தாளாய்
ஆக்கிவிடுவார்கள் வங்கிகளில். அதற்கும்
அசையும் சொத்து அசையாச் சொத்து என்ன இருக்கிறது ஜாமீனுக்கென்று
குடாய்ந்துவிடுவார்கள். அய்யா துரைமாரே அப்படி எந்த சொத்துபத்தும் இல்லாததால்தான்
இப்படி லோனுக்கு லோல்படுகிறேன் என்றால்,
வெடிக்காத துப்பாக்கியை வைத்துக்கொண்டு
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்
செக்யூரிட்டி கார்டுக்கு வேலையும்
வீரமும் ஒருங்கே வந்துவிடும். நம்மை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டுத்தான் அவர் மறுவேலை பார்ப்பார். வங்கியில்
நடக்கவிருந்த பெருங்கொள்ளையைத் தடுத்த பெருமிதத்தோடு அவர் மீசையைத் தடவி பட்டாளத்தில் பெற்ற பதக்கங்களை துடைத்து பளபளப்பாக்கிக் கொள்வார்.
அந்தக்காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் காலையில்
காபித்தூள் வாங்குவதற்கு
காசில்லையே என்று கனவு கண்டால்கூட இந்தா பிடி கடன், ஈசி இன்ஸ்டால்மென்ட்
என்று கதவைத் தட்டுகின்றன
வங்கிகள். தேவையெல்லாம்
நீங்கள் ஒரு ஊதியக்காரனாய்
இருக்க வேண்டும் என்பதுதான்.
பூதக்கண்ணாடி
கொண்டும் படிக்கமுடியாத
பொடியெழுத்துக்களால்
அச்சடிக்கப்பட்ட பாண்டுபத்திரங்களில் நூற்றுக்கணக்கான கையொப்பங்களை பெற்றுக்கொண்டு செத்து சிவலோகம் போனாலும் அங்கே வந்து வசூலிக்கத் தோதான காபந்து செய்து கொண்டு கடன் தந்துவிடுகிறார்கள். மீளமுடியாது எந்த ஜித்தனும்.
இதெல்லாம்
தெரிந்தே தான் என் நண்பர்களும்
உறவினர்களும்
கடன் பல பெற்று வளம் சில சேர்க்கின்றவர்களாய்
இருக்கின்றனர்.
திடீரென்று வெறிபிடித்தவர்களைப்போல
அது வாங்கணும் இது வாங்கணும் என்று கிளம்பியுள்ளனர்.
இதையெல்லாம்
வாங்கி அனுபவிக்காமல்
என்ன வாழ்க்கை என்று தத்துவ விளக்கம் தருவதிலும் சமர்த்தராயிருக்கிறார்கள்.
பொருளை விற்கும்போதே
இப்படியெல்லாம்
பேசுங்கள் என்று கடையிலேயே போதித்தும் அனுப்புகிறார்கள்
போலும். அல்லது போதனையில் தேறிய பின்தான் பொருளை வாங்குகிறார்களாக்கும்.
வேண்டும் வேண்டாம் என்றில்லை. இருக்கட்டும்
நம்மிடமும் என்று எதையும் வாங்கி நிரப்புகின்றனர்
வீட்டை. புதிய பொருட்களோடு
அவற்றுக்கேயுண்டான
கேடுகளும் வந்துவிடுகின்றன.
பாத்ரூமுக்கும்கூட
வண்டியிலேயே
போகப் பழகிவிட்டு பின் தொந்தியைக் குறைக்க நடைப்பயிற்சி
செய்கிற பித்துக்குளித்தனம்
எல்லோரிடமும்
கூடக்குறைய இருக்கிறது.
இப்போது வீடுகட்டும் வெறி உச்சத்தில் நின்றாட்டுகிறது எல்லோரையும். ‘குருவிக்காவது ஒரு கூடிருக்கிறது…உங்களுக்கு?’ என்கிற மாதிரியான தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்துவிட்டு குருவியை ஜெயிக்க பணயம் வைக்கிறார்கள் வாழ்க்கையை.
ஊரைச்சுற்றி ஒன்பது
மைல் விஸ்தீரணத்திற்கு
எங்கு பார்த்தாலும்
வீடுகள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அல்லது முகூர்த்தநாளும்
எனக்கும் இணையாளுக்கும்
ஓய்வே கிடையாது. யாராவதொருவரின்
வீட்டு கிரஹபிரவேசத்திற்கு
(எந்த கிரஹத்திலிருந்து
எந்த கிரஹத்திற்கு?)
போய்வருவது முக்கியப் பணியாகிவிட்டது.
சிலநாட்களில்
ஆறேழு வீடுகளுக்கும்கூட
போய்வர வேண்டியதாகிவிடும்.
குறைந்தபட்சம்
வாரத்தில் நான்கு புதுமனைப் புகுவிழாக்களுக்கு
அழைப்பிதழ் எழுதும் பேறு எழுத்தாளனாகிய
எனக்கு வாய்த்திருக்கிறது.
அல்லது அப்படி எழுதி எழுத்தாளன் என்ற ஸ்திதியை நிலைநிறுத்திக்
கொள்ள வேண்டியிருக்கிறது.
ஊருலகத்தில் இடமாயில்லை… இங்க
வந்து கட்டியிருக்காங்களே…
என்று வாய்விட்டு பினாத்துமளவுக்கு
ஊரைவிட்டு வெகுதொலைவில்
அத்தாந்தரமான
இடங்களைத் தேர்ந்தெடுத்து
அவர்கள் வீடுகளைக் கட்டினார்கள்.
டவுனுக்குள்ள
நம்மால மனைகூட வாங்கமுடியாது…
தள்ளி வந்ததால அந்த தொகைக்கு வீடே முடிஞ்சிருச்சு…
நம்மளப் பார்த்து இன்னும் நாலுபேர் வாங்கியிருக்காங்க..
ஒரே வருசத்துல ஏரியா கிடுகிடுன்னு
வளர்ந்திரும்
பாருங்க… என்று இந்த இடத்தை தேர்வு செய்ததில் தனக்கிருக்கும்
தொலைநோக்கையும்
சாமர்த்தியத்தையும்
அடக்கமாக விளம்பும்போது
அவர்களின் கண்களில் பொங்கும் பெருமிதம் மெச்சத் தக்கதாயிருக்கிறது.
போகத்
தொடங்கிய ஆரம்பக் காலங்களில் எங்களுக்கிருந்த
தயக்கம் மெதுவே விலகி இப்போதெல்லாம்
அப்படியான தருணங்களில்
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கிதம் எங்கள் மகளுக்கும்கூட
கைவரப் பெற்றுவிட்டது.
ஒரு புதிய பகுதிக்குள்
நுழைந்ததும்
வீட்டைக் கண்டுபிடிப்பதில்
முன்பிருந்த
குழப்பமெல்லாம்
இப்போது அத்துப்படி.
உருமால் கட்டியதுபோல
மொட்டைமாடியில்
ஷாமியானா போடப்பட்டிருக்கும்
என்கிற பொது அடையாளம் பழகி வண்டி நேரே அங்கு போய் அனிச்சையாய்
நிற்கப் பழகிவிட்டது.
வண்டியை
விட்டு இறங்கும்முன்பே
‘வாங்க வாங்க’ என்று வரவேற்பவரின்
பெயர் வீட்டு உரிமையாளர்.
அவரும்கூட ஆறேழு வீடுகளைக் கட்டிய அனுபவஸ்தரைப்போல
நல்ல மொழியில் உங்களிடம் பேசப் பயின்றவராய்
அந்நேரம் இருந்து ஆச்சர்யத்தில்
மூழ்கடிக்கக்கூடியவராய்
இருப்பார். நாம்தான் கவனமாய் இருக்கவேண்டும்.
‘மொதல்ல மேல போய் சாப்பிட்டுட்டு
வந்துடலாம்’
என்ற உபசரிப்பை உடனே நாம் ஒப்புக் கொள்ளக்கூடாது.
ஏனென்றால் அன்றன்றைக்கான
அப்பத்தை அன்றன்றே கொடுத்து ஊசிப்போகும்முன்
பரிமாறும் பொறுப்பு ஆண்டவனுடையதாயிருக்கிறது.
அவனது கிருபையால் மொட்டைமாடியில்
இலைபோட்டு மூடிவைக்கப்பட்டிருக்கும்
உங்களுக்கான
இட்லி 2, ஒரு கரண்டி பொங்கல் அல்லது கிச்சடி, வடையொன்று, கேசரி என்ற புனைப்பெயரோடு
மேலன்னத்தில்
ஒட்டிக்கொள்ளும்
இனிப்பு உப்புமா, அனல் பறக்கும் அல்லது ஆறிப்போன ஒரு டம்ளர் காபி ஆகியவற்றை எந்த காக்காவும் தூக்கிப் போய்விடாது.
உத்திரவாதப்படுத்தப்பட்டுவிட்ட ஒன்றைப் பற்றி அக்கறையில்லாததைப் போல நீங்கள்
காட்டிக் கொள்ளும் பம்மாத்துதான்
பற்றற்ற நிலையின் தொடக்கநிலை.
எனவே சாப்பிடுவதற்கு
உடனே படியேறுவதில்லை
என்பதில் நாங்கள் தீர்மானமாயிருந்தோம்.
(இந்த டிப்ஸை பயன்படுத்திக்
கொள்ளும் யாரும் எங்களுக்கு எந்த ராயல்டியும்
தரத் தேவையில்லை.)
எத்தனை
சதுரம் என்று கேட்டு எங்கள் அறியாமையை வெளிப்படுத்திக்
கொள்ள மாட்டோம். சதுரத்துக்கு
எவ்வளவாச்சு
என்பதுமாதிரி
நாம் தொடங்கினால்
போதும், மொத்த அயிட்டங்களையும்
மனனமாகச் சொல்லும் ஓட்டல் சப்ளையரைப்போல
மீதி விபரம் அனைத்தையும்
அவரே சொல்லிவிடுவார்.
வேறெதோ விசயத்தைக் கேட்டிருந்தாலும்கூட
இதேரீதியில்
தொடங்கும் அவருடைய பேச்சு கடைசியில் ‘நாங்க போட்டிருந்த
கணக்கையெல்லாம்
தாண்டி எங்கியோ போயிருச்சு…’
என்று முடிவது தவிர்க்க முடியாதது.
‘எப்படி சமாளிச்சீங்க’
என்று கமறும் குரலில் கேட்போம். பிறகு எத்தனை அடியில் தண்ணீர் கிடைத்தது –
நல்ல தண்ணியா உப்புத் தண்ணியா என்பது மாதிரியான பொதுவான விசாரிப்புகளை
வெளிப்படுத்தும்போது
அன்னியோன்னியம்
அதிகமாகிவிடுவதை
எங்கள் அனுபவத்தில்
கண்டிருக்கிறோம்.
இதேபாணியான கேள்விகளுக்கு
ஒரே பாணியான பதில்களை அயராமல் எல்லோருக்கும்
சொல்லும் பக்குவத்தை வீடு கட்டத் தொடங்கிய பின்தான் அவர்கள் பெற்றிருக்கக்கூடும்.
வீட்டைப்
பார்ப்போம் முதலில் என்று ஒவ்வொரு அறையாக நுழைவோம். ஒவ்வொரு அறையிலும் ஏதேனுமொரு அபிப்ராயத்தின்
மூலமாக அவர்களைப் பாராட்டுவது
முக்கியம். மொசைக் அல்லது மார்பிள் பதிக்கப்பட்ட
தரை, சுவற்றின் வண்ணம், சன்னலின் டிசைன், எதுவும் தோன்றாவிட்டால்
காற்றும் வெளிச்சமும்
நன்றாக வருமாறு வெண்டிலேசன்
இருக்கிறது என்றாவது சொல்வது அவசியம். இல்லையானால்,
அடடே பரவாயில்லையே,
காற்றையும் வெளிச்சத்தையும்
வெளியிலேயே நிறுத்திவிடும்
கில்லாடித்தனத்தை
எங்கே கற்றீர்கள் என்றுகூட வஞ்சப் புகழ்ச்சியாய்
சொல்லலாம்.
சொல்வது முக்கியம். உங்களது இந்த வார்த்தைகளுக்காகத்தான்
சிறுவாடு பிடித்தும் சிக்கனம் பண்ணியும் நூற்றுக்கணக்கான
கையெழுத்துகளிட்டு
கடன் பெற்று ஆயுள் பரியந்தம் அடமானமாகியிருக்கிறது
அந்தக் குடும்பம் என்பதை கவனம் வையுங்கள். கட்டின வீட்டுக்கு குத்தம் சொல்ல லட்சம்பேர் என்பதெல்லாம்
உண்மையிலேயே
பழைய மொழி. இப்போதைய தேவையெல்லாம்
ஆறுதலாய் நாலுவார்த்தை.
நாளைக்கே நீங்கள் வீடு கட்டுவீர்களானால்
மொய் முறைமை போல ஒரு எழுத்தும் மிச்சமில்லாமல்
அந்த நாலு வார்த்தைகளும்
வட்டியும் அசலுமாய் திருப்பிச் செலுத்தப்படும்
என்பது உறுதி.
மாங்குச்சிகளில் நெய்வார்த்து யாககுண்டம் மூட்டி
புனிதப் புகையால் வீட்டை நிரப்பும் புரோகிதர் அதிகாலையிலேயே
வந்து புண்ணியார்த்தனம்
பண்ணியிருப்பார்.
கோமாதாவும் வந்து கோமியம் தெளித்துப் போயிருக்கும்.
குழந்தை மூச்சா போக டாய்லெட். கோமாதா பெய்ய நடுக்கூடம்.
அதன் தாரைகளையும்
தடயங்களையும்
நடுக்கூடத்தில்
நாங்கள் காண நேர்ந்தாலும்
அதுபற்றி கேட்கமாட்டோம்.
அப்படி கேட்பது எல்லை தாண்டிய பயங்கரவாதம்.
ஏனென்றால் காதுகுத்து,
மஞ்சள் நீராட்டு, கிரஹப் பிரவேஷம் மாதிரியான இப்படிப்பட்ட
சடங்குகளை ஒருபோதும் செய்ய விரும்பாத ஆனால் வீட்டின் பெரியவர்களுக்காகவும்
பெண்களுக்காகவும்
மட்டுமே தான் செய்ய நேர்ந்ததாக எங்களின் நண்பர்கள் சொல்லும் வசனம் எப்போதும் எங்கள் காதுகளில் ரீங்கரித்துக்
கொண்டேயிருக்கிறது.
நாம் நம்பிக் கொள்ளவேண்டும்
என்று விரும்பி அவர்கள் சொல்லும் பொய்யை ஏற்றுக்கொள்வதன்
மூலம் நீடு வாழும் நட்பும் உறவும்.
நாங்கள்
பார்த்த அளவில் தங்கள் வீட்டை சுற்றிக் காட்டும் ஒவ்வொருவரும்
டபுள் பெட்ரூம் – பாத்ரூம் அட்டாச்டு என்பதைச் சொல்லும்போது
அவர்களின் முகத்தில் முக்தியடைந்த
தேஜஸ் வந்துவிடுகிறது.
படுக்கையிலிருந்து
எழுந்ததும் நேராக குளிக்கப் போவதில்லை யாரும். அப்புறமெதற்கு
அட்டாச்டு பாத்ரூம்…. ஒன்றுக்கு மேற்பட்ட கக்கூசுகள் தங்கள் வீட்டிலிருப்பதைத்தான்
இப்படிச் சொல்லி பெருமையடைகிறார்கள்.
அதற்காக நாம் முகஞ்சுளித்து
அருவருப்படையக்கூடாது.
அதையும் வாஸ்து பார்த்து கட்டியிருப்பதாக
சொல்லும்போது
மெல்லிய நகைப்போடு அதை நீங்கள் ஆமோதிப்பது நல்லது. ”வெளியே போவதுதான் நம்முடைய பழக்கம். வெள்ளைக்காரன்
வந்தப்புறம்தான்
வீட்டுக்குள்
கக்கூஸ். அப்படியிருக்க
இன்னயிடத்தில்
தான் கக்கூஸ் இருக்கவேண்டும்
என்று ஆதியிலேயே உருவாகிவிட்டதாக
பீற்றும் வாஸ்து சாத்திரம் கூறமுடியுமா”
என்று பட்டிமன்றத்தில்
பெரியார்தாசன்
பேசிய உண்மை இந்த நேரத்தில் ஞாபகம் வராமலிருந்தால்
இன்னும் நல்லது. ஆம் நண்பர்களே, எல்லோரது கனவுமாளிகையின்
உப்பரிகைகளும்
கக்கூஸ் அட்டாச்டுதான்.
இப்படி
கிரஹப்பிரவேசங்களுக்குப்
போய்விட்டு சொந்த கிரஹத்துக்கு
திரும்பும் வழியிலும் வந்து உடை களையும் போதும் அதன் பின்னுமான அன்றையப் பொழுதுகளிலும்
எங்களது பேச்சின் மையமாய் வீடு இடம் பெறும். இதற்கு முன் கட்டப்பட்ட எங்களது நண்பர்களின்
வீடுகளுக்கும்
இன்று போய் வந்ததற்குமான
ஒற்றுமை வேற்றுமைகள்
குறித்து கட்டிடக்கலை
நிபுணர்களைப்போல
நாங்கள் நடத்தும் விவாதம் ‘நாமும் ஒரு வீடு கட்டத்தான் வேண்டும்’ என்கிற இடத்தில் வந்து நிற்கும். அப்புறம் பேச்சு அப்படியும் இப்படியுமாக
அலைந்து வீட்டைக் கட்டிப்பார்
கல்யாணத்தைப்
பண்ணிப்பார்
என்று ஏற்கனவே நொந்தவன் சொல்லிப்போன
பழமொழியை நினைத்தபடியே
நின்றுபோகும்.
வாயைக்கட்டி வயித்தைக்கட்டி நமக்கு
வேண்டிய வட்டத்தில் யாரேனும் வீடு கட்டினால், நன்றாக உடுத்தி அலங்காரம் பூசிக்கொண்டு
போய் ஒரு ஐம்பது ரூபாய் மொய் கவரை கொடுத்துவிட்டு
சாப்பிட்டு வருவதுதான் நம்முடைய வேலையேத் தவிர இப்படியொரு பகீரத வேலையை எங்களுடையதாய்
ஒருபோதும் நாங்கள் நினைத்ததில்லை.
ஒருவேளை, நமக்கென்று ஒரு வீடு வேண்டும்தானே
என்று யார் முதலில் வெளிப்படையாகவும்
பிடிவாதமாயும்
முன்மொழிவதென்ற
தயக்கம் இருவருக்கிடையேயும்
சுவர் போலிருந்து தடுக்கிறதா என்றும் தெரியவில்லை.
ஆனால்
இன்று எனக்கு நிலை கொள்ளாதிருந்தது
மனம். காலையில் போய்வந்த வரதப்பன் வீடு ஏதோவொரு வகையில் தனித்துவம் கொண்டு மிளிர்ந்தது.
சின்ன இடத்தில் இவ்வளவு அழகான வீட்டைக் கட்டமுடியுமா
என்று ஆச்சர்யம் கொள்ளத்தக்க
வகையில் அவனது ரசனை ரொம்பவும் ஈர்ப்பானதாய்
வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும்
மாற்றியிருந்தது.
பணவோட்டம் நின்று நின்று சுதாரித்து கட்டி முடிக்க அவன் குடும்பம் பட்ட கஷ்டங்கள் ஆயிரமிருந்தாலும்
அவை யாவும் நன்கு பூசிய சுவருக்குள்
மறைந்துவிட்டன.
கதவில்
எல்லோரையும்
போல ஏதேனுமொரு சாமியுருவை செதுக்கி வைக்காமல் மிக நவீனமான, அசப்பில் சிற்பமென நம்பவைக்குமளவு
ஆலிவ் இலை ஏந்திய புறா சிறகசைத்தது.
என்னிடமிருந்து
வாங்கிய பிகாஸோவின் ஓவியம் ஒன்றின் சிறுபகுதியை
அவன் இவ்வாறு மாற்றியிருந்தான்.
இந்தப் படத்தை கொண்டுபோய் தச்சனிடம் கொடுத்து இதைத்தான் கதவில் செதுக்கவேண்டும்
என்று இவன் கூறியபோது பாவம் இந்தாளுக்கு
வீடுகட்டும்
அலைச்சலில் மூளை பிசங்கிவிட்டது
போலும் என்கிற பாவனையில் தச்சன் பார்த்ததாயும்
அதன்பின் இருவருக்குமிடையில்
சகஜமான ஒரு உரையாடல் நிகழாமலே போய்விட்டது
என்றும் ஒருநாள் வரதப்பன் சொல்லியிருந்தான்.
ஒருவேளை நான்தான் அப்படத்தை கொடுத்தவன் என்று தெரிந்திருந்தால்
என்னையும் அதே லிஸ்டில் தச்சன் சேர்த்திருக்கக்கூடும்.
இவ்விசயத்தை
என் மனைவியிடம் சொன்னபோது அவளது கண்களிலும்கூட
தச்சனின் பாவனையைக் காண முடிந்தது.
மாடியில்
கட்டப்பட்டிருந்த
அவனது மகளுக்கான அறையிலேயே என் மனம் தங்கியிருந்தது.
அறையின் இருமருங்கிலும்
அலமாரிகள். ஒன்றில் அவளது பாடப்புத்தகங்கள்.
பிறிதில் பொம்மைகள், கார்ட்டூன் காமிக்ஸ் கதைப் புத்தகங்கள்,
வண்ணக் குப்பிகள், சுடுமண் சிற்பம் போன்ற குவளையில் செருகி வைக்கப்பட்டிருக்கும்
தூரிகைகள், மயிலிறகு, வினோத வடிங்களிலான
கூழாங்கற்கள்,
பாசிகள். அலமாரிகளுக்கு
நேர்மேல் அவள் தீட்டிய ஓவியங்கள் இரண்டை எழிலுற சட்டகமிட்டு
மாட்டியிருந்தான்.
அவ்வோவியங்கள்
தெளிவுற எதையும் புலப்படுத்தாவிட்டாலும்
ஒன்பது வயது குழந்தையொருத்தி
எதையோ தீவிரமாய் சொல்ல முயன்றிருக்கிறாள்
என்ற உணர்வை கிளர்த்தி மௌனத்தில் ஆழ்த்தின. இவ்வளவு கஷ்டத்தில் இப்பவே எதற்கு அவளுக்கு தனி அறை என்றேன். அவளுக்கு இதைக் கட்டுவதற்காகத்தான்
இவ்வளவு கஷ்டப்பட்டதும்
என்று வரதப்பன் சொன்னபோது என் மகளைப் பார்த்தேன்.
அவள் கண்கள் விரிய ‘ஹை’ என்று எதையோ வியந்து சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்
இவளிடம். தனக்கான ராஜ்ஜியத்தை
பெற்றிருக்கும்
ராஜகுமாரியின்
சந்தோசத்திற்காக
உடன் சிரிக்கும் சேடிப்பெண்ணைப்
போல ஒருகணம் தெரிந்தாள் என் செல்லமகள்.
நாமும்
ஒரு வீடு கட்டினால் என்ன என்றொரு யோசனை தீவிரத்தொனியில்
உள்ளோடிக் கிளர்ந்தது அப்போதிலிருந்தே.
வழக்கமான நினைப்பில்லை
இதுவென்று எடுத்தயெடுப்பிலேயே
விளங்கி விட்டது. வரதப்பன் தன்மகள் மீது கொண்டிருக்கும் அக்கறையில் துளிகூட
என்னிடமில்லையோ
என்ற குற்றவுணர்ச்சியே
இதன் மூலாதாரமாயிருக்கும்
என்று தோன்றியது. நெறிக்கும் கடன்களை பவுடர் பூசி மறைத்துக் கொண்டு சொந்தவீட்டின்
காம்பவுண்ட்
சுவற்றில் கையூன்றிக் கொண்டு பெருமிதம் பேசும் நண்பர்களும்
உறவினர்களும்
ஞாபகத்தில் வந்து அலைக்கழித்தனர்.
உலகே மாயம் என்று உபதேசிப்பவனாகட்டும்,
எல்லாமே பொது என்று முழங்குகிறவனாகட்டும்
எல்லோருமே தங்களுக்கென்று
எதையோ தேடித்தேடி சேர்க்கிற காலமாயிருக்கிறது
இது. எதிரெதிர் தத்துவங்களைச்
சொல்லும் இருவரும் அவரவர்க்கான
நியாயங்களைச்
சொல்லிக்கொண்டு
கைகோர்க்கும்
புள்ளியாக சொத்தே இருக்கிறது.
சுமாரான சம்பாத்தியம்
இருந்தும்கூட
பொண்டாட்டி பிள்ளைக்கென்று
சொத்து எதுவும் சேர்க்காத ஊதாரியாய் நான் மட்டுமே வாழ்வதான ஊமைக்குடைச்சல்
அதிகரித்துக்
கொண்டேயிருந்தது.
நானும் ஒழுங்காயிருந்து
அரசாங்கமும்
எங்கள் துறையை விற்காமல் ஒழுங்காக வைத்திருந்தால்
எனக்கின்னும்
இருபது வருசம் சர்வீஸ் இருக்கிறது.
சூரிய சந்திரரின் நல்லொளியும்
தண்ணென்றக் காற்றும் விரும்பிய வண்ணம் உலாவிப் புழங்க பரந்த அறையும் கொண்டதொரு வீட்டை என் மகளுக்கு கட்டுவதற்கு,
நூறு மாத சம்பளத் தொகை பதினைந்து வருடத் தவணையில் வீட்டுக் கடனாக கிடைக்கிற இந்த சந்தர்ப்பமே
மிகத் தோதானது. அதுவுமில்லாமல்
பணி ஓய்வடையும் முன்பே கடனும் அடைந்துவிடும்…
என்றெல்லாம்
நியாயங்களை தர்க்கித்து
வாதை கொண்டது மனம்.
வழக்கம்போல் அலுவலகம்
போன எனக்கு பதினோரு மணிவாக்கில்
நெஞ்சுவலி வந்து இறந்து போய்விட, குவார்ட்டர்சை
எப்போது காலி பண்ணப் போகிறீர்கள்
என்று அலுவலகத்தில்
கேட்கிறார்கள்
அவளிடம். வீடா வாசலா … எங்கு போவதென்று தெரியாமல் மனைவியும் மகளும் பேதலித்து நிற்பது மாதிரியான சினிமாத்தனமான
கனவைத் தாங்காமல் எழுந்து பார்த்தபோது
இருவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள்.
எழுப்பிச் சொன்னபோது என்னை ஏறயிறங்கப் பார்த்துவிட்டு
ஏதும் சொல்லாதிருந்தாள்
அவள். பகற்கனவு பலிக்காது, பயப்படாமல் தூங்கு என்றாள். அவளிடம் பக்குவமாக பேசிவிட வேண்டும் என்ற பதைப்பில் காபி போட்டுக்கொண்டு
வந்து மறுபடி எழுப்பினேன்.
முதல்முறையாக
காபி குடிப்பவளைப்போல
அலாதியான ருசிப்புடன்
குடிப்பதில்
காட்டிய ஆர்வத்தில் எனக்கு அவமானமாகிவிட்டது.
லேசான
கோபமும்கூட.
கல்யாணமாகி இத்தனை வருடத்தில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவைக்கூட
வாங்கி வந்திராத அளவிற்கு குடும்பப் பொறுப்பு துளியுமற்ற இவனாவது வீடு கட்டுவதாவது
என்று நினைத்தாளோ என்னவோ நான் சொன்னதை அவள் பொருட்படுத்தவேயில்லை.
குறைந்தபட்சம்
என்ன திடீர்னு வீடு கட்டும் யோசனை என்றாவது கேட்பாளென நம்பி ஏமாந்தேன். என்னிடமிருந்து
இப்படியான வார்த்தைகளை
எதிர்பார்க்காமலிருந்ததால்
ஏற்பட்ட அதிர்ச்சியால்
முதிர்ந்த மௌனமாகவும் கூட
இருக்கலாம்.
அல்லது ஆண்டி மடம் கட்டுவதைப்போல
அங்கலாய்ப்புக்குப்
பேசுவதில் என்ன பிரயோஜனம் என்றிருக்கிறாளா
என்பதும் தெரியவில்லை.
அப்படியொரு அபிப்ராயம் அவளுக்கிருக்குமானால்
அதற்கு முழுப் பொருத்தமானவனாகத்தான்
நானிருந்தேன்
என்பதும் உண்மைதான். அதற்காகத்தான்
இந்த உதாசீனம் என்றால் அது அதிகபட்சத் தண்டனை.
இப்படித்தான் அவள்.
பெரிய திட்டங்களோடு
நான் பேசும் விசயங்களை ஓன்றுமில்லாததென
ஒதுக்கிவிடுவாள்.
அல்லது உரையாடலைத் தொடரமுடியாதபடி
அவள் நினைப்பதை தெளிவாகக் கூறிவிட்டு மௌனமாகிவிடுவாள்.
நானென்றே இல்லை, நண்பர்கள் உறவினர்களும்
கூட அவளுக்கு ஓர்நிறைதான்.
பொண்ணா பெத்துட்டீங்க,
கொஞ்சம் உஷாரா இப்பயிருந்தே
நகைநட்டு சேர்க்கப்பாருங்க..
என்று ஒருமுறை என் பெரியக்காள்
சொன்னதற்கு,
(அவளுக்கு இரண்டு பையன்கள்) இப்பமே காண்ட்ராக்ட்
போட்டு மூணு நாலு வருசம் பொழைச்சிட்டு
ஆளக்கொரு திக்கால பிரிஞ்சிப் போற பழக்கம் வந்துக்கிட்டிருக்கு…
இவள் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் பருவத்தில் கல்யாணம்கிறது
என்ன கதியில இருக்கும்னு
யாருக்குத் தெரியும்… நல்லா படிக்க வைப்போம். படிக்கப் பிடிக்கலேன்னா
பிடிச்சதை செய்யுன்னு ஒத்தாசை பண்ணுவோம்… அதற்குமேல் எப்படி வாழணும்கிறது
அவளோட விருப்பம் என்றாள். இப்படியும்கூட
ஒரு பொம்பளை தன் மகளின் எதிர்காலம் பற்றி அக்கறையற்று
விட்டேத்தியாய்
பேசமுடியுமா
என்று வாய்விட்டு பொருமினாள் அக்கா. நாளைக்கு அவள் இப்படித்தான்
இருப்பாள் என்று நம்பி அதற்கேற்ற காபந்துகளைச்
செய்வதாக சொல்வது எதற்கென்றால்
இப்படித்தான்
அவள் இருக்க வேண்டும் என்று இப்போதிருந்தே
வளையமிடுகிற
நமது கபடத்தை மறைக்கத்தான்
என்று ஒரு தீர்ப்பைச் சொல்கிற தொனியில் வந்த வார்த்தைகளுக்குப்
பிறகு இன்றுவரை என்னக்கா இவளிடம் ஜாக்கிரதையாகத்தான்
உரையாடுகிறாள்.
இல்ல,
நான் சீரியசாத்தான்
கேட்கிறேன், எப்படியாயிருந்தாலும் நமக்கென்று ஒரு வீடு தேவைதானே… என்றேன். இப்போ நாமென்ன தெருவிலா இருக்கிறோம்… என்றாள். அவளின் இந்த பதில் ஏற்கனவே ஒரு சந்தர்ப்பத்தில் அவளுக்கு நான் சொன்னதுதான். குத்திக் காட்டுகிறாளோ… இருக்கட்டும், அடிபட்டவள் பகையாற்றட்டும் என்று அமைதியாயிருந்தேன். பிறகும் நானே பேச வேண்டியிருந்தது. அதன்பின் அவள் சகஜமாகி எங்களுக்குள் நடந்த உரையாடல் ஒரு வீட்டின் நிமித்தமானது மட்டும்தானா என்கிற சந்தேகமும் என்னை பீடித்துக் கொண்டது. அவள் பார்வையில் மின்னுவது பரிகாசமா என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆசுவாசமாய் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு என்னையே பார்த்தாள். பின் உறங்கும் மகளின் தலையை கோதியபடியே, உனக்கொன்றும் ஆகிவிடாது… ஆறுவதற்குள் காபியைக் குடி என்றவள் குரலில் துறவின் ஞானம் கசிவதாய் தோன்றி அச்சமூட்டியது என்னை.
இப்படியொரு விவாதம் வருமானால் எப்படி எதிர்கொள்வது என்று ஏற்கனவே ஒத்திகைப் பார்த்தவளைப் போல துளியும் அலட்டிக்கொள்ளாத முகபாவமும் பிசிறற்ற குரலும் அவளுக்கு வாய்த்திருந்தது இப்போது. என்னை மறுப்பதாயுமில்லாமல் தன்னை நிறுவுவதாயுமில்லாமல் இயல்பாக அவள் பேசியதிலிருந்து அவள் இவ்விசயம் குறித்து தீர யோசித்திருப்பாள் என்றே பட்டது. அவள் சொல்வதும் சரிதான். நாமென்ன அனந்தகோடி வருசமா வாழப் போகிறோம்… அல்லது சேர்ந்தேதான் சாகப் போகிறோமா.. இப்பமே எனக்கு நாற்பது. ஆச்சு அவளுக்கும் முப்பத்தாறு. நான் வேலையிலிருக்கிறவரை குவார்ட்டர்ஸ் இருக்கு. அதுக்கப்புறமும் ரெண்டுபேரும் உயிரோடியிருந்தால் ரிட்டையர்மெண்ட் பணத்தில் ஒரு பகுதியை மகளுக்கு ஒதுக்கிவிட்டு எஞ்சியதில் தேவைக்குத் தகுந்த ஒரு வீட்டை அப்போது வாங்கிக் கொள்ளலாம் தான். இல்லையா வாடகை வீட்டில் இருந்துவிட்டுப் போகலாம். இல்லையானால் மிஞ்சிய காலத்திலாவது சொந்த பந்தங்களோடு இருக்கலாமென்று பூர்வீகத்துக்குப் போய்விட வேண்டியதுதானே… சுத்தமான காற்றும் மாசடையாத நீரும் வெளிச்சமும் எங்குதானில்லை… நாம் தான் தேடிக் கண்டடைய வேண்டும்…
எதற்கிந்த
பதற்றம் உனக்கு? எந்த நிலையையும் தைரியமாய் எதிர்கொண்டு
வாழப் பழகடி மகளே என்று நம்பிக்கையூட்டி
பாப்பாவை வளர்ப்போம்.
நாம் விரும்புகிறபடியே
எல்லாம் நடந்துவிடுமானால்
நீ வேலையிலிருந்து
வெளியேறுவதற்குள்
அவளது படிப்பு முடிந்துவிடும்.
அல்லது தான் யாராய் இருப்பது என்று முடிவெடுக்கிற
வயதை அவள் எட்டிவிடுகிறாள்.
அவள் எங்கே போகிறாளோ அங்கே அவளோடு நாமும் போய்விடுவதில்
என்ன பாதகம்…? தோதுபடவில்லையானால்
ஒரு முதியோர் இல்லத்தில் சந்தோசமாக இருந்து கழிய வேண்டியதுதானே…
அவள் குரல் தழைந்து தழைந்து சாந்தத்தின்
ஸ்திதியை எட்டியது. இவ்வளவு காலமும் அவள் எனக்கு சரிக்குச் சரியாக அல்லது மீறியும் பேசுவதைக் கேட்டு சகித்துக்கொண்டு
எதிர் வழக்காடுவதே
இழுக்கு என்று எனக்குள்ளிருந்து
எழுந்தெழுந்து
மீசை முறுக்கும் ஆம்பிளைத்தனம்
என்னை பகடி செய்தது. ஆனாலும் அவள் சொல்வதையெல்லாம்
மறுத்தேயாக வேண்டும் என்ற முனைப்பு மங்கி மௌனத்தில் உறைந்தது.
என்
ஆர்வத்தையோ அக்கறையையோ உதாசீனப்படுத்துவதற்காக
அவள் இப்படியெல்லாம் பேசுவதாக
நினைத்துக் கொள்ளமுடியாதபடி
பேசினாள். கடனை வாங்கி வீட்டைக் கட்டிவிட்டு,
பிறகு வீடென்றால் அந்தஸ்தாக நாலு பொருள் இருக்கணுமே என்று அதுகளையும் கடனில் வாங்கி நிரப்பிக்கொண்டு
ஆயுசுக்கும்
கடனாளியாய் நிம்மதியின்றி
கிடக்கணுமா என்ற அவளது கேள்விக்கு உண்மையில் என்னிடம் பதிலில்லை. எந்த செலவைக் குறைத்து மாதாந்திரத்
தவணையை கட்டுவது என்கிற யோசனைகூட இல்லாமல்தான்
வீடுகட்டலாம்
என்று நான் இதுவரை குதித்துக் கொண்டிருந்தேன்
என்பதே அவள் சுட்டிக் காட்டிய பின்தான் உறைத்தது. வாழ்வின் கொண்டாடத்தக்க
தருணங்கள் பலவற்றை இழந்து நம்மாலும் எல்லாவற்றையும்
வாங்கிச் சேர்க்கமுடியும்தான்.
ஆனால் கேட்பாரற்றுக்
கிடக்கும் செட்டிநாட்டு
வீடுகள், சிதிலமாகிக்
கிடக்கும் அரண்மனைகள்,
பூகம்பத்தில்
புதையுண்ட நகரங்கள், ஆழிப்பேரலையில்
அழிந்த நாடுகள்…. இதிலிருந்தெல்லாம்
நாம் கற்றுக்கொள்ள
எதுவுமில்லையா
என்ற கேள்வியோடு நிறுத்திக்கொண்டாள்
பேச்சை.
வாய்க்கு
ருசியாக வயிறாற உண்டு, கண்குளிர மனசுக்கு பிடித்த துணிமணி உடுத்தி, பார்த்துக் களிக்கவும் அறியவும் ஊர்உலகம் சுற்றி நிம்மதியாய்
உறங்கி எழுகிற அவளது யோசனையை என் ஆம்பிளை மனம் உடனடியாய் ஒப்புக்கொள்ள
முடியாமல் உழன்றது. ‘ஒருவேளை இடையில் எனக்கேதேனும்
ஆகிவிட்டால்
… ?’ என்றேன்
பலவீனமாக. ‘உன் ரிட்டையர்மெண்ட்
பணம் மொத்தமும் கடனடைக்கப்போய்விடும்.
அப்போதுதான்
நானும் பிள்ளையும் நடுத்தெருவில்
நிற்போம். அல்லது உன் வேலை எனக்கு கிடைக்கும்.
நானும் பிள்ளையும் நல்லாயிருப்போம்’
என்றாள் பதட்டமில்லாமல்.
சேர்ந்து
வாழ்வதைப் பற்றி மட்டுமல்லாமல்
புருசனது சாவுக்கப்புறமும்
முன்னோடிப் பார்க்குமளவு
தீர்க்கம் கொண்டிருப்பவளுக்கு
வேறு யோசனைகள் அவசியமில்லை
என்று ஆசுவாசம் கொண்டது மனசு. இதில் தனக்கு யாதொரு சம்பந்தமும்
இல்லையென்பதுபோல்
இன்னும் உறக்கத்தில்
ஆழ்ந்திருந்தாள்
மகள். அவளை நோக்கி திருப்பப்பட்ட
எங்கள் வாழ்க்கையை அவள் தன் போக்கில் கூட்டிச் செல்லட்டும்
என்று நினைத்துக் கொண்டபோது தொலைபேசி மணியடித்தது.
பொன்னன் மாமா. புதுவீடு கட்டியிருக்கிறாராம்.
நேரில் வரமுடியவில்லை
என்று போனில் உருகி அழைக்கிறார்.
போய்வர குறைந்தது ஆயிரமாவது அழியுமென்ற பயத்தில் வர முயற்சிப்பதாய்
சொல்லி முடித்தேன்.
அங்கிருந்து
தனுஷ்கோடி பக்கம்தானாமே…
அப்படியே போயிட்டுவரலாம்
என்றாள் அவள். அங்க என்னவெல்லாம்
இருக்குப்பா
என்று ஆர்வம் பொங்க கேட்டபடியே துயிலெழுந்தாள்
மகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக