நவகண்டம் - ஆதவன் தீட்சண்யா


நவகண்டம்

கடல் என்பது மீன்தான் என்று
நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே
வலையோடு வந்த ஒருவன் சொன்னான்
இல்லை அது தண்ணீர் என்று

தண்ணீர்தானென்றால்
கேனில் அடைத்து விற்றுவிடலாமேயென
துள்ளிய மற்றொருவனிடம் 
உப்புத்தண்ணீரை
யாரடா வாங்குவார்கள் என்றேன்
அதனாலென்ன
தண்ணீரையும் உப்பையும் தனித்தனியாகப் பிரித்து
தண்ணீரை தண்ணீரைவிட சுவையானது எனவும்
உப்பை உப்பைவிட கரிப்பானதெனவும்
இரட்டை வியாபாரம் நடத்தலாமென்றான்

வியாபாரம் என்று வந்துவிட்டால்
எதையாவது விற்றுக்கொண்டேயிருக்க வேண்டுமென
எல்லாவற்றையும் விற்கத் தொடங்கியவர்கள்
இறுதியில் 
தத்தமது தலையை வெட்டி தராசில் நிறுத்தினர்

இத்தனைப் பிணங்களையும் எப்படித்தான் தின்பதென
பொய்யாய் சலித்தபடி
இரையெடுக்கத் தாழும் கழுகினை வீழ்த்த
கவணில் பொருத்துகிறேன்
என் தலையை.
 
 தன்வினை

அச்சு முறிந்துவிடுமோவென அஞ்சுமளவுக்கு
பாரவண்டியில் சொற்பொதியேற்றி
சந்தைக்குப் போனவேளையில்
அனேகரும் அவ்விதமே வந்திருக்கக் கண்டேன்

மூட்டையிலிருந்து அவிழ்த்து
மண்டியில் கொட்டிய மாத்திரத்தில்
பண்டத்திற்குரிய தோற்றம் பெற்றுவிட்ட சொற்களை
கிளைத்தும் கலைத்தும் நசுக்கியும் பிதுக்கியும்
நயம் பார்த்து தரம் தீர்த்து
பலபட பேசிய சொல்வணிகனொருவன்
பண்டத்தின் பெறுமதி விற்பனையில்தான் என்றான்

சந்தை
அதற்கேயுரிய பரிவர்த்தனை விதிகளோடு
இயங்கத்தொடங்கிய  சற்றைக்கெல்லாம்
கொள்முதலுக்குரிய பண்டமென
பரத்திவைக்கப்பட்டிருந்தேன் நான்
பழிதீர்த்துக்கொண்ட நமட்டுச்சிரிப்போடு
டெல்லி அப்பளம் தின்று கொண்டிருக்கின்றன
என் சொற்கள்.

- 22.1.2014

(நன்றி: காக்கைச்சிறகினிலே / பிப்ரவரி 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக