நிலா
வந்துவிட்டது.
எல்லையற்றப் பெருவெளியை வெறிகொண்டு தழுவுகையில் தூரிகையில் பிடிபடாத வர்ணவினோதமாய் உருகி
வழிகிறது கனவுக்குழம்பு. கவிஞனும் ஓவியனும் கவனப்படுத்திவிட முடியாத நெருக்கத்தில், கோர்த்த விரலிடுக்கில் வியர்வை கசிய
விழிமூடி ரசித்து லயிப்பின் முகடுகளில் இருவரும். உறைந்திருந்த மௌனம்
மட்டுமே உடையாய் படிந்திருக்க, காலம்
மூட்டிய பருவக்கொடுந்தணல் தகித்து ஜ்வாலையடங்கி காற்றின் ஆலிங்கனத்தில் தானே
எரிந்துவிட தவித்து கிடந்தது கனன்று.
அனுமானங்களை உதிர்த்துவிட்டு மனசை
பிழிந்து மனசை
நிறைத்துவிட்டுப் போகிற
வெற்றியை நிகழ்த்தும் வார்த்தைகளுக்கான தவம்,
வரம்
பெறாமலேயே கலைந்தது.
”சொல், வேர்
மண்ணிலிருந்து வெளியேறுவது வேதனைதானே…?”
“வேருக்கும் மண்ணுக்கும் சாசுவத
பிணைப்பொன்றுமில்லை. எல்லாமே தற்காலிகம்…ஒப்பந்தம் முறிகிற கால
அளவிற்கான காத்திருத்தலை நிரந்தரமெனக் கொள்ளாதே. நிரந்தரம் தேக்கத்தின் குறி.
சுருங்கி சுருங்கி பூஜ்யத்தில் வீழ்கிற துவக்கம். தற்காலிகம்…எல்லாமே தற்காலிகம்… விதையை
உதறிவிட்டு செடி
வருகிறதே…”
“நேரடியாக கேட்கிறேன். நாம்
பிரிவதில் வருத்தமில்லையா உனக்கு…”
“இயந்திர வார்ப்புகளில் எல்லாமே வந்துவிட்டாலும், இதயம்
இன்னும் உணர்வு
சாகரத்தை உறிஞ்சி குடித்துவிட்டு தள்ளாடித்தான் திரிகிறது. வருத்தமில்லை என்று
சொல்வது என்னை
வேறாக
பிம்பப்படுத்துகிற வார்த்தை. அதற்காக, நீயில்லாமல் எப்படி
வாழ்வேன் என்று
போலியாகவும் சம்பிரதாயமாகவும் பேசும்
நாடக
பாணியில் எனக்கு
சம்மதமில்லை…”
மேகம்
தன்னையே எல்லாதிசையிலும் அனுப்பியது உடைத்து உடைத்து. நிலவோ
போக்குகாட்டி தப்பி
குளிர்க்கரங்களை நீட்டியபடி எதிர்திசையில் சுழன்றது. இந்த
நித்தியச் சண்டையில் இன்றாவது வெற்றி
தோல்விக்கு சாட்சியமாகிவிடுவதென்று ஓசையின்றி காத்திருந்தன நட்சத்திரங்கள்.
“ஆறுதலாக பேசத்தெரியாதா உனக்கு…”
“பொய்மரங்களில் ஊஞ்சல்கட்டி ஆடுவதில் உனக்கு
விருப்பமிருக்கிறதா… காவியச்சாயல் படிந்த
வார்த்தைகளை கண்ணீரில் தோய்த்து பிழிய
பிழிய
பேசுவதில் உனக்கு
சந்தோசமா…மனசைக்
காட்டினால் நீ
ஏன்
வாயைப்
பார்க்கிறாய்… ஒப்புக்கு பேசினாலும் உனது
உயிரை
நீட்டிக்கும் வார்த்தைகள் என்னிடத்தில் உண்டு.
இருக்கிற எல்லாவற்றையும் எடுத்துக்காட்ட நானொன்றும் விற்பனைக்கூடத்து வேலையாளில்லை…”
“இனிவரும் நாட்களின் தனிமை
குறித்தாவது அச்சம்
கொள்கிறாயா…”
“தேவையானதையெல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டபின் நாமே
நமக்கு
மாட்டிக் கொள்கிற கூண்டுதானே தனிமை…
அதில்
கிட்டாததும் எட்டாததும் எதுவுமில்லை. அதற்கேன் அச்சம்…அதன்றி, ஆற்றல் பொருந்திய பன்முகமாய் விரியும் வீரத்தின் மையப்புள்ளியே அச்சம்தான் என்று
நம்புகிறேன்…”
“புரிகிற மாதிரி
பேசேன்…”
“பிடிக்காத விசயத்தை எந்த
மொழியில் யார்
பேசினாலும் புரிவதில்லை உனக்கும் எனக்கும் யாருக்கும்…”
“நீ அதிகமாக பேசுகிறாய்…”
“ஊமைகளின் முணகல்களுக்கும் உள்ளர்த்தம் உண்டு…”
உறக்கத்தை விரட்டிவிட்டு, கண்ணாமூச்சியாயிருக்குமோ என்ற
ஐயத்தில் வெறித்தன நட்சத்திரங்கள். பதில்
கிடைக்காத இழுபறி.
“ஆண்துணை இல்லாமலேயே இனி
வாழ்ந்துவிடப் போகிறாயா…”
“சத்தியம் சொல்லும் தருணமில்லை இது.
பிறப்பின் நிர்மலத்தை ஆடை
கொண்டு
போர்த்தி அழகுபடுத்திக் கொள்ள
பாடம்
படிப்பதில்லை யாரும்.
தேவையே
அதற்கானதை தேடிக்கொள்ளும். துணை
என்கிற
ஆதிசூத்திரத்திற்குள் அடங்காத வாழ்வும் உறவும்
எங்குதானில்லை… நீயாக
உன்னை
பாதுகாவலனாக வரித்துக் கொள்ளாதே. வேலியை
ஆடுகள்
மட்டுமல்ல, விவரிக்க முடியாததும் நியாயமானதுமான பல
காரணங்களுக்காக பயிர்களும் விரும்புவதில்லை…”
“என் மீது
மெய்யான காதலில்லையா…”
“உன்னிடமிருக்கிறதா மெய்யுக்கும் பொய்யுக்குமான துலாக்கோல்…”
“அப்படியில்லை. என்னோடு வாழ
உனக்கு
விருப்பமில்லையா…”
“விருப்பம் சார்ந்ததில்லை வாழ்க்கை. அதன்
போக்கில் வந்து
படிவதை
ஏற்கவும் நிராகரிக்கவும் மனம்
கொள்கிற பக்குவத்தில் புதைந்திருக்கிறது விருப்பும் வெறுப்பும். சிற்பி
நினைப்பது மட்டுமே சிற்பமாகிவிடுகிறதா என்ன…உளியின் ஜீவரசம் தன்னில் உயிர்பெற்றெழ பாறையும் ஒத்துழைக்க வேண்டுமே…நான் உளிகளையும் பாறைகளையும் படித்துக்கொண்டே, என்னை
அவைகளினிடத்து படிப்பித்துக் கொண்டுமிருக்கிறேன்…”
மாயக்கால்களால் சுழன்றோடும் நிலவை
கவ்வி
விழுங்க மேகசர்ப்பம் வாய்பிளந்து துரத்துகிறது உடலெங்கும் தலைகளோடு. சாகச
விளையாட்டின் முடிவை
நோக்கி
காத்திருந்தன இமையில்லாத நட்சத்திரங்கள்.
இருவரது அம்பறாத்தூணியிலிருந்தும் கிளம்புகிறது சமபலத்திலான அஸ்திரங்கள். மோதிக்கொள்ளும் கணச்சிதைவில், நோக்கை
புறந்தள்ளி மூர்ச்சையற்று வீழ்ந்தபடியும் முத்தமிட்டுக் கொண்டபடியுமாக எய்தவர்களையே இளக்காரத்தில் வீழ்த்தின.
“அவ்வளவு தூரம்
நீ
போயாக
வேண்டுமா…”
“தூரங்களை நெருங்கித்தொடாத பயணம்
வாயை
தைத்துக்கொண்டு பாடக்கிளம்புவது. அது
உயிரின் கிளர்ச்சியை அனுமதிப்பதில்லை. மயானத்துக்கு செல்லும் சவ
ஊர்வலத்தில் குயில்களுக்கும் ஸ்வரங்களுக்கும் வேலையில்லை…”
“நீ சம்பாதித்து ஆகவேண்டியது என்ன…”
“அது பணத்தின் குறியீடல்ல. விழிப்படலம் சிவக்க
சிவக்க
கற்றதற்கான அங்கிகாரம். பாடசாலைகளுக்கு வெளியே
பரந்து
திளைத்திருக்கும் அனுபவக் கல்வியை அடைய
கிடைத்த வாகனம்.
எனக்கு
சுயமாய் கால்களிருப்பதை சொல்கின்ற சூட்சும வடிவம்.
என்னை
கௌரவப்படுத்தும் எதையும் கீழ்மையில் ஆழ்த்தமாட்டேன்…”
“உள்ளூர் நஷ்டமும் சரி
வெளியூர் லாபமும் சரி
என்பதை
அறியாதவளா நீ…”
“நாற்றங்காலில் தங்குகிற பயிர்
நல்லபடியாய் விளைவதாக உயிர்
விஞ்ஞானம் ஒப்புவதில்லை. லாபமும் நஷ்டமும், பணத்தாள்களாகவும் பரிவர்த்தனைப் பிண்டங்களாகவும் உள்ள
உங்கள்
மதிப்பீடுகளில் நான்
வேறுபடுகிறேன்…”
நிராயுதத்தின் விளிம்பு வந்தாகிவிட்டது. எஞ்சியவற்றை இனி
கவனமாய் எய்வதில்தான் வெற்றி.
வியூகத்தை மாற்றி
உக்கிரமாய் தொடர்கிறது சண்டை.
“ஆணின் சம்பாத்தியத்திற்குள் அடங்கி
வாழ்வதுதான் இலக்கணம் என்பதையும் நீ
மறுக்கிறாயா…”
“நமது சந்திப்பை நீ
ஒரு
வழக்கைப்போலவும் பேட்டியாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறாய். ஆண்மை
ஆணுக்கும், பெண்மை
பெண்ணுக்கும் உள்ள
குணங்களா…அது
மனிதர்களுக்கு பொதுவானது. எல்லோரிடத்திலும் எல்லா
குணங்களும் புயலும் தென்றலுமாய் நுழைந்து பரவி
நுட்பமாக வாழ்கிறது. அதை
இலக்கணமென்ற முரட்டு வார்ப்புக்குள் திணிக்காதே…”
“திசை திருப்பாதே. ஆணின்
சம்பாத்தியத்தில் அடங்கி
வாழ
முடியுமா முடியாதா…”
“பொதி சுமக்கிற கழுதையைப் போலவும், ஏர்
உழுகிற
மாட்டைப்போலவும் சம்பாதிக்கிற மிருகமாக உன்னை
பாவித்துக்கொள்ள உரிமையிருக்கிறது. அருவியை குழாயில் அடைத்துவைத்துக் கொண்டு,
தேவைபடுகிறபோது திருகிவிட்டு குடிக்கவும் குளிக்கவும் நினைப்பது ஆதிக்கமா அராஜகமா என்ற
தடித்த
விவாதத்திற்கு இது
இடமில்லை. நாம்
காதலர்களாகவே பிரிவோம்…”
“இனியும் எங்கே
இருக்கிறது காதல்…”
“தேடிப்பாரேன் எங்காவது தென்பட்டதா என்று-
நாம்
பிரிந்துவிட்ட பிறகாவது…”
“கடைசியாக கேட்கிறேன். திருமணம், தாம்பத்யம், புனிதம், பௌத்ரம் மீதெல்லாம் உனக்கு
நம்பிக்கையுண்டா…”
“ஏனில்லை…எனக்கான கோணத்தில் இருக்கத்தான் செய்கிறது. இருக்கும். மூதாதையர்களின் மாண்புகளுக்குரிய மரியாதைகளோடு, மரபுகளை மதித்துக் கொண்டேதான் மறுதலித்து வருகிறேன்…”
“நீ கனவுகளை கட்டிக்கொண்டு காகிதத்தில் வாழ்பவளோ…”
“நன்றி. கனவுகளை தொலைத்தவர்கள் ஜடத்திலே ஜனித்தவர்கள் என்கிற
குற்றப்பட்டியலில் என்னை
சேர்க்காமல் விட்டதற்காக…”
துரத்தலும் வெளித்தாவி தப்புவதுமாக சண்டை
நீள்கையில் நேற்று
மிச்சம் வைத்திருந்த கிரணங்களோடு வானில்
பாய்ந்தது சூரியன்.
ஏனிப்படி தகிக்கிறது குளிர்நிலவென்று விழித்தன வேடிக்கை சலித்து பின்னிரவில் உறக்கத்தில் தோய்ந்த நட்சத்திரங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக