சனி, மார்ச் 15

எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் - ஆதவன் தீட்சண்யா

வர் கண்ணுமறியா நுண்ணிழையில் பூக்கும் அரூபச் சுரங்கம் மனசு. அரணும் மதிலுமென வாய் பிளந்து மேயும் முதலைகளின் அகழியுமாகிய தடை சூழ் காவற்கோட்டைகள் எப்புறமும் மாயத்தில். அண்டவொணாத கால வெளியற்று ஓயாப்பறவையின் சிறகுகளாகி சதாவும் இயக்கம். அணுவணுவாய் உள்பொதியும் அனந்தகோடி ரகசியம் படிக்க யாரால் கூடும்… முடிவற்ற ஆயுளே சித்தித்தாலும் முடியா இலக்கு. வாழ்நாளெல்லாம் முயன்று நனைந்தத் துணியாய் துவளும் இக்கணத்தில் ஏதுமற்ற வெறுங்கூடாய் என்னையே வீசிக்கொள்கிறேன் படுக்கையில். சதையிணுக்குகளில் சல்லடையிட்டு, சாரம் குடிக்க நாச்சுழற்றும் குரூரத்தின் ரூபமானது இப்படுக்கை. காலத்தின் குழந்தைகள் கடைசி சயனம் கொள்ள கதியிதுவேயென விரிந்த கபடம்- ஆஸ்பத்ரி வார்டின் அழுக்கு படுக்கைகள் போல.

பாயின் ஒரு கோரைபோல ஊடுபாவி மௌனத்தின் உரு பூண்டு படுத்திருந்தேன். பசிப்பும் புசிப்புமற்ற ஏகாந்தமேக, பறக்கும் கம்பளத்தில் படுத்திருப்பதான சிலிர்ப்பு. பாயும் தலையணையும் கெக்கலிக்கின்றன தாமும் படுத்திருப்பதாய். ஓய்விற்கோ உறக்கத்திற்கோ அல்லாது விழிப்பை முன்னிறுத்தியே நான் படுத்திருப்பதை அவற்றுக்கும் யாவற்றுக்கும் பதிலாய் சொன்னேன்.

ஒவ்வோர் கணம் தெளிவின் சோபை மின்னல் பிரகாசமாய் விகாசமடித்து தீட்சண்யத்தில் ஜ்வலிக்கிறது முகம். திடுமென இருளிட்டு கறுக்கிறது. இமையற்றுப் பிறந்தவன் போல் திறந்தே கிடக்கும் விழியில் வெறித்தப்பார்வை. பின்மூடி ஆழ்தியானம் பூணுவதாகிறது என்னிருப்பு.

முக மனவோட்டங்களின் மர்ம வெளிப்பாடுகளால் பெரிதும் கலவரப்பட்டவர் முதலில் என் அப்பாவே. அம்மாவும் வந்தாள். எப்போதோ அறுத்த தொப்புள்கொடி இப்போது கிளைத்து அசைவதாய் அரற்றினாள். தவமாய் தவமிருந்து பெற்றப் பிள்ளை இப்படி தவங்கிக் கிடக்கிறானே பிணம் போல் என்றழுதாள். ஆடு சினையாவது எஜமானன் பிழைக்க அல்ல என்று நான் நினைத்ததை எப்படியோ அறிந்து கொண்டார்கள். நெருப்புச்சாட்டையால் விளாறல் கண்டோராகி துடிப்பில் வெளியேறினர். சிருஷ்டிப்பின் தாத்பர்ய சரடை நான் உருவி எறிந்ததில் அவர்களது துன்பம் அளவிடற்கரியதானது.

என் மனைவியிடம் விசாரணை. இரவின் அந்தரங்கத்தில் ஆளுமையும் கொள்ளாது அடங்கியும் நில்லாது விசித்திரப் போக்காளியாக நானிருந்ததை வைத்து பல திட்டவட்டமான முடிவுகளுக்கு அவள் ஏற்கனவே வந்துவிட்டிருந்தாள். படுக்கையில் தாசி போலிருக்க வேண்டுமென்ற துர்போதனைக்கு வெகுவாய் பலியாயிருந்த அவளது சாகசங்கள் என்னை எவ்வகையிலும் கிளர்த்த முடியாததில் மிக்க அவமானம் தாக்கியவளாய் ஊமையழுகையில் ஊறி நைந்திருந்தாள். உனக்கு நான், எனக்கு நீ, நமக்காக குழந்தைகள் என்பாள் தூக்கத்திலும். யாரும் யாருக்காகவுமில்லையென விளங்கவைக்க மேற்கொண்ட முயற்சிகள் என்னையொரு துஷ்டப் பிண்டமென உறுதிபடுத்த போதுமானதாயிருந்தது அவளுக்கு. கட்டுதிட்டம் இல்லாதவனை கட்டிக்கொண்ட கவலையில் இரவையும் பகலையும் அலை அலையாய் எழும்பும் விசும்பல் வளையங்களால் கோர்த்தாள். உலுக்கி உலுக்கி கேட்ட அம்மாவிற்கு அனாயசமான தோள்பட்டை குலுக்கலும் உதாசீனமான உதட்டுப்பிதுக்கலுமே என் மனையாளின் பதில்.

எனக்கு நேர்ந்திருப்பது என்னவென்று நானே அறியாத நிலையில் குடும்பத்தார் வெகு பிரயத்தனம் கொண்டனர். எல்லாப் புரியாமைகளுக்கும் பரிகாரம் தேடும் பூர்வகுணம் தூண்ட வேலைகள் துவங்கிற்று. ஊரடங்கிய பின்னிரவில் வீட்டுவாசலில் ஒற்றைநாய் ஊளையிட்டுச் சென்றதுதான் பரிகார வேலையை துரிதமாக்கியிருக்க வேண்டும். இப்போதெல்லாம் அப்பா வெளித்திண்ணையில் சுருட்டு பிடித்தபடி நாய்விரட்டக் காத்திருக்கிறார்.

நடுக்கூட மூங்கில் வாரையில் மந்தரித்த மஞ்சள்துணி கட்டப்பட்டது. ஒண்ணேகால் ரூபாய் காணிக்கைத்தொகையும் அரிசி கருப்புக்கயிறு காதோலை கருவளையமும் அதனுள். காற்று பலமாய் வீசும்போதெல்லாம் மூக்குக்கு நேராய் ஆடிக்கொண்டேயிருக்கிறது மனிதர்களை கேலியிட்டபடி.

படுக்கை பற்றிக்கொள்ளாத தூரத்தில் குண்டம் மூட்டி யாகம் வளர்ந்தது. உள்ளூர் கங்காணியம்மன் கோயில் பூசாரியிலிருந்து மலையாள மாந்திரீகன் வரை தெய்வாம்சம் நிறுவிப்போயினர். இடுப்பிலும் புஜத்திலும் பிணிக்க ஏதுவான இன்னோரன்ன அவயங்களிலும் தாயத்துகள் நேர்ந்து கட்டப்படுவது வாடிக்கையாகிவிட்டது. தர்காவிற்கு தூக்கிப்போய் பாத்தியா ஓதியதையும் பாதிரியொருத்தர் வீட்டிற்கே வந்து ஜெபித்துப்போனதையும் யாருக்கோ நடக்கிறது இதுவெல்லாம் என்று பார்த்திருந்தேன் விழிமூடி. வெளியூர் உறவினர்கள் இஷ்டதெய்வ சன்னதிகளில் பிரார்த்தித்து கூரியரில் பிரசாதம் அனுப்பிய வண்ணமுள்ளனர். அம்மாவும் துணையாளும் மூவேளையும் என் நெற்றியை திருநீரால் துலக்கினர். புத்திர பாசத்திற்கும் பதிபக்திக்கும் நடந்தப் போட்டியில் என் நெற்றி ஓரங்குலம் மேடுதட்டியது.

தலைமாட்டில் உயிரென படபடத்துக் கொண்டிருக்கிறது என் வாக்குமூலம். எனக்குள் நானே திருடிச் சேர்த்த வார்த்தைகள் கொண்டு இழைத்து நிறைத்தது. எவர் படிக்கவும் தோதாக எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. அடிக்குறிப்புகள், அருஞ் சொற்பொருள் விளக்கம் உள்ளிட்ட இலக்கண சாஸ்திர நியமங்கள் வழுவாது நெறியாளப்பட்டுள்ளது. கண்ணுக்கு உறுத்தாத வண்ணத்தில் ஒயிலான வடிவம் கொண்ட எழுத்துக்கள். ஜொலிக்கும் ப்ளோரசண்ட் எழுத்தையே கண்டவர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான். புரையும் பிரமையும் நீக்கி படிக்கலாம். எல்லோருக்கும் கிடைக்க எண்ணிலடங்கா பிரதிகளெடுத்து ஹெலிகாப்டர் வழியாகவும் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணக்கட்டுரை, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு போன்றே வாக்குமூலமும் கூட எழுத்தில் ஆகிருதி கொண்டதொரு வடிவமேயென இலக்கிய உலகம் ஒப்புக்கொள்ள சகுனம் பார்த்துக்கொண்டிருப்பதாய் சற்றுமுன் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கருவாய் தரித்த கணத்திலேயே எழுதத் தொடங்கியது பூர்த்தியாகிவிட்டது. முற்றுப்புள்ளி வைக்க மட்டும் ரத்தமில்லை மிச்சம்.

‘‘ பொருத்தமற்ற அலங்காரம். பொய் தளும்பும் வசனங்கள். மிகைப்பட்ட பாவனைகள். மோர்ப்பானையில் விழுந்தது போல் மொழி புளிக்கிறது. நெடுநாளாய் நடக்கும் இந்நாடகம் கண்டு மேடையே இற்றுக் கிடக்கிறது வெட்கிக் கூசி. நான் ஏற்று நடிக்கும் பாத்திரம் எதுவுமேயில்லை. ராஜபார்ட், வில்லன், பபூன், ஸ்திரீபார்ட், தாதி, பத்தினி, பரத்தை, உத்தமன், கள்ளபார்ட், கஞ்சன், வள்ளல், – ஹோ.. எல்லா வேடங்களும் நான் தோற்க உத்திரவாதமானவை. புழுங்கிச்சாகும் வெற்றுப் பார்வையாளனாய் இருக்கவொப்பது நடிக்க வந்தாலோ அட்டைக்கத்தியிலும் பாஷாணம் தடவி சொருகிவிடுவீர். ஆம் உங்களுக்கு புத்தம் புதியதாய் எதுவும் பிடிக்காது. பிடிக்காது என்பதை விடவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயலமாட்டீர். பின் தெரியாதிருப்பதே திறமையென வாதித்துக் கிடப்பீர் வருசத்தில் பாதி நாள். அதற்கொரு மேடை தேவை. உண்மையில் கலைஞானம் எதுவுமறியாத நீங்கள் நாடகத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பது மேடையை உங்கள் அனுபோகத்திலேயே வைத்திருக்கும் சூதின் ஒரு பகுதியே என்பதை நானறிவே.. ”

சேனையே தோற்று மாயினும் களம்புகும் சுத்தவீரனுக்கு ஒற்றைக்குறுவாள் போதும். நானும் என் யுத்தத்தின் ஏகரூப ஆயுதமாய் நம்பிக்கொண்டிருப்பது இந்த சின்னஞ்சிறு வாக்குமூலத்தைத் தான். என்மீதான கேள்விகளுக்குரிய பதில்களாலும், பதிலறிவதற்கான கேள்விகளாலும் நிரம்பி தாள் விட்டுக் கீழிறங்கி திசையெல்லாம் வழியும் என்னுயிரொத்த குழந்தைபோல் அனாதையாய் துடிக்கிறது எழுத்து. வாரியணைத்து பால் புகட்ட வேண்டாம். ஒரு துளி விஷம் போதும். அடங்கிவிடும். காத்திருக்கிறேன் யார் தீண்ட வருவரென்று.

கருணை பொருந்திய காற்றும் ஒளியுமே முதலில் வந்தவை. இங்கேயே இவை இருந்திருக்கக் கூடும். தந்துகிகளை வெட்டிவிட்டு சொட்டுச் சொட்டாய் வடியும் ரத்த மசியெடுத்து உயிர்தாளா வாதையில் ஒவ்வொரு எழுத்தாய் எழுதுவதைக் கண்டு இரக்கம் கொண்டனவோ என்னவோ… ஆரத்தழுவி விம்மின. பாவம் தற்குறிகள் அவை. எழுத்துக் கூட்டி படிக்கவும் ஏலாதவை. உபாயமாய் குளுமையில் வீசின அறையெங்கும்.

மனித தேவ பாஷைகளறிந்த மகான்களுக்காக வழியும் விழியும் திறந்தேயிருந்தன. பார்க்க வந்த ஓரிருவரும் பார்வையை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருப்பதால் வாக்குமூலத்தை வாசிக்க முடியாதிருப்பதாய் சொன்னதை நம்பவேண்டியிருந்தது. வழியெல்லாம் தடுக்கி விழுந்து காயங்களோடு வந்து சேர்ந்திருப்பது அவர்களின் கூற்றை உறுதி செய்கிறது. பார்வையை பதனமிட்டு வைத்திருக்கும் ரசக்குடுவையின் சாவி, ஏழுகடல் ஏழுமலை தாண்டி ஒன்றுபோல் பறக்கும் ஒன்பது கிளிகளில் ஒன்றின் வயிற்றுள் இருப்பதாயும், அதன் காவல்பூதங்கள் காற்றணுக்களிலும் கலந்திருப்பதாயும் சொன்னபோது மலைப்பும் பயமும் தொற்றியது. சடுதியில் ஓடிப்போய் சாவி எடுத்து பார்வை தரித்து வந்து படிப்பதாய் பதைத்தார்கள். என்னருகில் நின்றிருக்கும்போதே அவர்களது கால்கள் கழன்றுபோய் செருப்பை மாட்டிப் கொண்டு வழியில் நின்றன வாகனங்களாகி.

அந்தி மசங்கலில் வந்து சேர்ந்தார்கள் அண்டை வீட்டார் வண்டி பூட்டிக்கொண்டு. முன்கூட்டியே வந்துபார்க்காத குற்றவுணர்வு மேலோங்க, காரணங்களை அடுக்கினர். ஓய்வு ஒழிச்சலற்ற தம் பணியால்தான் உலகமே சுழல்கிறதென்றும், நிற்க நேரமில்லை என்றும் சொன்னார்கள். காலம் பொன் போன்றதென்று உடலெங்கும் பச்சை குத்தியிருந்தார்கள். இருபத்தி நாலு முள் வைத்த கடியாரத்தை கண்ணிமையில் கட்டித் தொங்கவிட்டு காலத்தை அளந்தளந்து விரட்டிக் கொண்டிருக்கிறார்களாம். கழுத்தில் தொங்கிய காலண்டர் தாள்களை கைகள் அனிச்சையாய் கிழித்தபடியேயிருந்தன. வாக்குமூலத்தை வாசிக்க நேரமற்றிருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். வரும் வருஷத்து பஞ்சாங்கத்தோடோ, வார, மாத இதழ் ஏதோவொன்றின் இலவச இணைப்பாகவோ கொடுத்தால் ஒழிந்த நேரங்களில் படிக்க முயல்வதாய் உத்தரவாதம் தந்து போயினர். போகிற அவசரத்தில் விட்டுப்போன வண்டிமாட்டின் கழுத்துமணி மாதாக்கோயிலில் போல் அடித்துக்கொண்டேயிருந்து வாசலில்.
ஆராய்ச்சி மாணவர்கள் வந்திருந்தனர் பேரேடுகளோடு. சிறுமழலைப் பிராயம் தொட்டே பாடம் சுமந்ததில் கூன் கண்டிருந்தனர். கண்ணிருக்கும் இடத்தைகூட கண்ணாடி மாட்டிய பின்தான் அறிய நேர்ந்தது. விளம்பரப் பலகைகள் போல் விதவிதமான வாசகங்கள் பொருந்திய உடுப்புகளும் கால்ஜோடுகளும் தரித்திருந்தனர். நடையுடை பாவனைகளில் முன்னணி நட்சத்திரங்களின் சாயல் தெறித்தது. படுக்கையின் நீள அகலம், நிறம், படுத்திருந்த கோணம், பார்வையின் திசை, வாக்குமூலத்தின் தடிமன், எடை, நொடிக்கு எத்தனை முறை தாள்கள் படபடக்கின்றன என்ற அதிநுட்ப விபரங்களை குறிப்புகளாக்கினர். காற்றும் ஒளியும் கோபத்தில் மூர்க்கமாய் வீசின பொறுக்காது. எல்லாம் நிலை புரண்டன. கெட்ட ஆவிகள் கட்டிப்புரளும் இந்த அறையை இடித்து வாஸ்துபடி நிர்மாணிப்பது நலமென கட்டிடக்கலை நிபுணர் ஒருவர் சொன்ன கருத்து ஆமோதிக்கப்பட்டது.

படித்துக் கொண்டிருக்கும் நீங்களாவது வாக்குமூலத்தை படித்தாலென்ன என்றேன் தீனஸ்வரத்தில். எத்தனை மார்க் கிடைக்கும் என்றார்கள். எல்லாமே மதிப்பெண்களாக அளவிடப்படுகையில் மௌனமே சரியான எதிர்ப்பாயிருக்குமென பதிலற்றிருந்தேன். அவர்களுக்கு உறுத்தலாகி இருக்கும் போல. பாமரன் பொம்மை பார்க்க புரட்டுதல் போன்று ஒப்புக்கு விரல்நுனியில் அளைந்தனர். பின் ஒருவன் உரக்க படிக்க எல்லோரும் கேட்பதென தீர்மானமானது. கற்றலில் கேட்டலே நன்று என்றொருவன் முதுமொழி செப்ப அவனது சமயோசித புத்தியை ‘‘சபாஷ்’’ என்று கூட்டம் ஆரவாரித்தது.

‘‘….ஒன்றுக்கு அடுத்து இரண்டு என்கிறது உம்கல்வி. இல்லை. இரண்டுக்குமிடையே எத்தனை தசம பின்ன அலகுகள்… ஏன் மறைக்கிறீர்… குறை பின்னங்கள் ஊனங்களென குற்றம் சாட்டுகிறீர். உண்மையில் குறை பின்னங்களின் சேர்மானத்தில்தான் உமது முழுமையடங்கி இருக்கிறது என்பதை ஞாபகம் வையுங்கள். மட்டுமல்ல, யாதொரு பின்னமும் அதனளவில் பெருமைபடத்தக்க அளவுக்கு முழுமையானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளும் காலம் வரும். பிரச்னை என்னவெனில், உங்களின் ஒப்புதலுக்காக செல்லாப் பிண்டமும் கூட காத்திருக்கப் போவதில்லை என்பதுதான். அதனிமித்தம், என் தாத்தன் மண்ணை உழுதுழுது மலட்டித் தள்ளியது போல் கல்வியை தலைகுப்புற கவிழ்த்துப் போட்டு புதிதாய் எழுத…’’

‘‘….Match the following வகையாக அட்டவணைப் படுத்திவிட்டீர் மனிதரை.
(எ.டு) மாணவன்- கல்வி, கலாட்டா.
இளைஞர்- வேலை, காதல்.
பெண்- கல்யாணக் கனவு.
திருமணமானவள்- வரதட்சணை, மாமியார் நாத்தி நங்கை கொடுமை.
வயோதிகம் – பென்சன், ஈஸி சேர்.
விவசாயி- கடன், ஜப்தி …. இன்னின்னாருக்கு இன்னின்ன பிரச்னைதான் இருக்க முடியுமென மருந்துச் சீட்டைப்போல பரிந்துரைக்கிறீர். உண்மையில், வகுக்கப்பட்ட எல்லா சூத்திரங்களுக்கும் அடங்காமல் தான் ஒவ்வொருவர் வாழ்க்கையும் தன்போக்கில் உள்ளது. ஒரே வார்த்தையில் விடையளிக்கும் ஒரு மார்க் கேள்வி போன்று மொன்னையும் தட்டையுமானதல்ல வாழ்க்கை. சிக்கலும் நுட்பமும் செறிந்த சுருள் வளைய பரிமாணம் கொண்டது. நீங்கள் முன்வைக்கும் நேர்க்கோட்டுத் தீர்வுகளை, ஒரு வண்டைப் போல் குடைந்து கொண்டு போய் தன்பாதையை நிறுவுதல் வழியாக உங்களை நிராகரிக்கிறது…’’  

 -வாசித்துக் கொண்டிருந்தவன் அஜீரணம் கண்டவனாகி ஓங்கரித்து வாந்தியெடுத்தான். ‘‘ஓவர்டோஸ்’’ என்றார் மேற்பார்வையாளர். வேண்டுமானால் வாக்குமூலத்திற்கு கோனார் நோட்ஸ் இருந்தால் வாங்கிப் போய் மனப்பாடம் செய்து கொள்வதாகவும், முடியாதபட்சம் பிட்டெழுதுவது அல்லது Choice ல் விட்டு விடுவதாகவும் சலிப்போடு கூறினர். நோட்ஸாக சுருக்கித்தர முடியாதவன் வாக்குமூலமே எழுதியிருக்கக் கூடாதென்று கால்மாட்டிலிருந்த புகார் புத்தகத்தில் பதிந்தனர். நவீனாபிமானி ஒருவன் Floppy/CD யாவது இருக்கிறதா என்றான். மிதமிஞ்சிய ஏமாற்றத்தில் கோரஸாக பயணமே வீணென்று தலையிலடித்துக் கொண்டு வெளியேறினர்.

வாக்குமூலம் எழுதிவிட்ட பின் உயிரோடிருப்பது வீணென்றும், சட்டென முடிந்தால் அடக்கவேலை பார்த்துவிட்டு விடிந்ததும் வேறு வேலை பார்க்கலாமே என்றும் அங்கலாய்த்தனர் நண்பர்கள். விடியவைக்கும் வேலையே தமக்கிருப்பதால் விரைவாக சாகுமாறு என்னை வேண்டினர். எழுதியவனே சவம்போல் கிடக்கையில் எழுத்து மட்டும் ஏன் ஆடவேண்டுமென்று கண்ணோரம் துடிக்கும் வாக்குமூலத்தை உயிருள்ளதொரு வில்லனென பாவித்து கொல்லக் கொதித்தனர். இரும்புக்கை மாயாவியராகி காற்றலைகளில் மிதந்து காகிதங்களின் கழுத்தை நெறித்தனர். பின் சாதுபோல் வெளியேகி கனவின் மரணத்திற்கு அஞ்சலிக்க பூங்கொத்தொன்றை புறாக்காலில் கட்டி அனுப்பியிருந்தனர். பூவின் இதழ்கள்தோறும் உபயம் இன்னின்னாரென கோயில் படிக்கட்டுகள், டியூப்லைட்டுகளில் போல் பெயர், பதவி மறவாது எழுதப்பட்டிருந்தது. பூக்கள் கன்றி வாடின என்போல்.

பொதுவில் வாக்குமூலங்கள் குறித்து திட்ட வட்டமான காரணங்களின் பேரில் அவர்கள் வெறுப்பு கொண்டிருந்தனர். வாக்குமூலம் தேவையற்றது என்பதை முடிந்த வகையிலெல்லாம் எல்லாக் காலத்திலும் தாம் வலியுறுத்தியே வருவதை நினைவூட்டினர். கையோடு கொண்டுவந்திருந்த அலமாரிகளை திறந்து காட்டினர். சங்க காலம் தொட்டு சமகாலம் வரையான இலக்கியச்சான்றுகள், செய்திக்கோப்புகள், தீர்மான நகல்களால் அலமாரி பிதுங்கியது.

எவர்மீதும் குற்றம்சாட்டாத வாக்குமூலம் எதுவுமே இருக்கமுடியாதென்றும் அப்படி வெளித் தெரியாதவைகளில் மாந்திரீக மசியால் சங்கேதக் குறிகளாக குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டிருக்குமென்றும் நம்பினர். என்றேனுமொரு நாள் எடுத்து வாசிக்கையில் கூண்டில் நிற்போர் பட்டியலில் தன்பெயரும் இருக்கக் கூடுமென ஒவ்வொருவரும் ரகசியமாக அச்சம் கொண்டிருக்கிறார்கள். உயிலைத் தவிர வேறொன்றும் எழுத உரிமையற்றவனாகவே சாகும் தருவாயில் ஒருவனிருக்க வேண்டுமென சட்டத்திருத்தம் கோரினர். கனவான்கள் சபை விசேஷ கூட்டத் தொடருக்காக காத்திருக்கிறது.

திடுமென சூறைக்கு ஊசல்கண்ட தூளியாய் அங்குமிங்கும் அலைகிறது நினைவு. உலகமே அகண்டதொரு பெரும் படுக்கையாய் தோன்றுகிறது. பாத்யதை கோரும் பாகத்திற்கு பட்டா பத்திரம் சிட்டாடங்கலென பக்கா ஏற்பாடுகளோடு படுத்திருக்கிறார்கள் சிலர். சர்வே எண், விலைமதிப்பு, பதவி, பட்டம், பிறந்த நட்சத்திரம், இறக்கும் நாள் விபரங்கள் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது. இசை நாற்காலி பந்தயம்போல் படுக்கையைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறது பெருங்கூட்டம். தாதன் சங்கொலி நின்றதும் இடம் கிடைத்துவிடுமென பரபரப்பில் தோய்ந்தோடுகிறார்கள் அவர்கள். நான் யாரோடும் சேராது எட்ட நின்றிருக்கிறேன். வேடிக்கை பார்ப்பதாய் சொல்ல முடியாது. விட்டேத்தி என்றும் அர்த்தமில்லை அதற்கு.

எல்லோரும் என்போன்றே வாக்குமூலம் எழுதிவைத்திருக்கிறார்கள். அது பறந்து விடாதபடிக்கு தம் தலையை தாமே கொய்து பேப்பர் வெயிட்டாக அமுக்கியுள்ளார்கள். பரஸ்பரம் குரோதம் வளர்ந்திருக்கிறது முகாந்திரமின்றியே நகம் போல. அடுத்தவரது வாக்குமூலம் – அது எவ்வளவு நியாயம் சூடியது என்றாலும் படிக்காது எப்படியும் நிராகரிப்பதென அந்தரங்கமாய் சங்கல்பம் கொண்டிருப்பது தும்மல் வழியாயும் துப்பிய எச்சில் ஊடேயும் எங்கும் பரவி பகிரங்கமாகிவிட்டது. என்ன செய்வது இவ்வளவு தாள்களையும் என்ற தவிப்பு எல்லோருக்கும். “பழைய பேப்பருக்கு பட்டாணி….’’ என்றொருவனின் கூப்பாட்டில் பதற்றமும் உளைச்சலும் பெருகியது இவர்களுக்கு.

யாரும் யாருடையதையும் படிப்பதில்லை என்றானது. இப்போது எல்லோருமே அவரவர் வாக்குமூலத்தை அவரவரே படித்து மகிழ்ந்தனர். சொல் பொருள் நயம், சொல்லியிருக்கும் விதம் இன்னும் பன்னூறு நுண்ணிய விவரிப்புப் பாங்கினை சிலாகித்து தம்மைத்தாமே பாராட்டி புகழ்ந்தார்கள். புகழுரையும் கைத்தட்டலும் ஒலிநாடாவில் பதியப்பட்டு சுய புளகிப்பு நிமித்தம் இரவும் பகலும் இடையறாது ஒலிக்கிறது. ஐங்கண்டங்களிலும் அண்டார்டிகாவிலும் அறிமுகக் கூட்டங்களை சொந்த செலவில் ஊர்கூடி நடத்துவது போல் நடத்தினர். சுய வாக்குமூலம் மீதான இவர்களின் விமர்சனக் கட்டுரைத்தொகுப்பு வாக்குமூலத்தை விடவும் பெரியதாயிருந்தது. முடிந்தவரை கை வளைத்து முதுகில் தட்டிக்கொடுத்தனர். தலையில் ‘ஷொட்டு’ வைத்து கன்னம் வழித்து நெட்டி முறித்து ‘‘என் கண்ணே பட்டிரும் போல’’ என்று திருஷ்டி கழித்தனர். இறுதியில் தமக்குத் தாமே பரிசளித்துக் கொள்ள தீர்மானித்து வெற்று மைதானத்தில் ஒற்றையாளாய் நின்று விழா எடுத்தனர். ஜோல்னாப்பையில் கொண்டு வந்திருந்த பதக்கத்தை ஓரங்க நாடகத்தின் நடிகன்போல் கொடுத்து வாங்கி பையிலேயே திணித்துக் கொண்டனர். சிலரோ கழுத்தில் கட்டித் தொங்கவிட்டு அலைந்தார்கள்.

பூனையாய் பம்மி ஒற்றறியப் போன என் புலன்களுக்கு சோர்வே மிஞ்சியது. அவர்களது வாழ்வு பற்றிய எத்தகவலுமற்று என் மீதான புகார் பட்டியலின் தொகுப்பாயிருந்தன அவை. ஒட்ட ஒழுகாது வெட்டிக்கொண்டு திரியும் துக்கிரி என்ற அடைமொழியால் விளித்திருந்தனர் என்னை.

ஓரிருவர் என்போலவே எழுதியிருந்தனர்: ‘‘…சித்ரகுப்தனின் பேரேடு நிகர்த்த உமது அகராதிகளும் குறிப்பேடுகளும் தூசுதட்டுப்பட்டு தயார் நிலையிலிருக்கும் இப்போதே. ஒரு பாவமும் அறியாத மகான்கள் யாராவதொருவரின் மேற்கோள்/குட்டிக்கதை வழியாக எனது மனப்போக்கிற்கு வலிந்து சாயல் ஏற்றிவிடுவீர். கோழைத்தனமென்றோ, தப்பியோடுதல் (Escapism) என்றோ அடைமொழியும் தரப்பட்டுவிடும். குற்றம் சுமத்தியவன் மீதே அதை பாயவைக்கும் பூமராங் வித்தையில் கை தேர்ந்தவராயிற்றே…

கண்ணுக்கு தெரியாத அளவுகோலும் தராசும் சட்டகங்களும் உங்கள் கையிலிருக்கும். யாருக்கோ தைத்த செருப்புக்கும் உடுப்புக்கும் நான் பொருந்தியாக வேண்டுமென சட்டாம்பிள்ளையாகி உத்திரவிடுவீர். ஏற்காவிடில், இவன் மனிதனே இல்லை என என்மீதான இறுதிப் பிரகடனம் வாசிக்கப்பட்டுவிடும்…’’

டாக்டர்களிடம் போகவும் தயக்கமே. வைத்யசாலைக்கு வெளியே அலங்காரமாய் தொங்கும் பெயர்ப்பலகையிலும் உள்ளிருக்கும் கருவிகளிலும் வழிகிற நுட்பமும் திறமையும் சிகிச்சைகளில் வெளிப்படுவதேயில்லை. ஓடிக்கொண்டே ஒன்னுக்கிருப்பது மாதிரி அவசர அவசரமாகவும், சிலநேரங்களில் நெடுநேரம் யோசிக்கிற பாவனை செய்தும் எனது மனநிலைக்கு ஏதாவதொரு ‘‘..மேனியா’’ என்றோ ‘‘…போபியா’’ என்றோ நாமகரணம் சூட்டுவர். பெயருக்குப் பின்னால் இன்னும் இரண்டு மூன்று எழுத்துக்களை கூட்டிக்கொண்டு தம் மேதாவிலாசத்தை புதுக்கிக் கொண்ட திருப்தியில் ஆழ்வர். ஆராய்ச்சிக்கூட வெள்ளெலி போல் நான் கிடக்க, டாக்டரின் கல்லாப்பெட்டி தள்ளாடும் பளுவில்.

வாக்குமூலங்களை வாசிக்க வாசிக்க, எனது வாக்குமூலத்தின் சில பகுதிகளை திருத்தியும் விரித்தும் எழுதவேண்டிய அவசியம் உணர்ந்தேன். ‘‘குற்றச்சாட்டுகளுக்கான பதில்’’ என்று புதிய அத்தியாயமே சேர்க்க வேண்டியதிருந்தது. பிடித்தக் கவிதை, ரசித்த இசை, முதல் முத்தத்தின் கிளர்ச்சி, வந்த – எழுதிய காதல் கடிதங்களின் உயிரோட்டமான விவரிப்புகள், என் சினேகிதிகளை சக்களத்திகளாய் வரித்துக்கொண்டு மனைவி ரகசியமாய் உகுக்கும் கண்ணீரின் வெதுமை, கனவுகளின் ஆளுமை… இப்படி தனித்துவம் செறிந்த பலவும் அமுங்கிப் போய்விடாதபடி கவனமாய் எழுத வேண்டியிருந்தது புது அத்தியாயத்தை.

‘‘பல்லிடுக்கில் துருத்திக் கொண்டிருக்கும் எனது சதை இணுக்குகளும் மேலன்னத்தில் படிந்திருக்கும் ரத்தகறையும் உங்களது குரூர வெற்றியின் அடையாளங்களாகி நிற்கும். உளைச்சல் தோய்ந்த என் சாவை முன்னிட்டு ஷெனாயின் பேரிரைச்சலோடு துவங்கும் உங்களின் நாடகம். பெருகி வழியும் கிளிசரின் கண்ணீர் துடைக்க திரைச் சீலைகளே கைக்குட்டைகளாகி நனையும். கொலைக் குற்றத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் தவிப்பில் வசனங்கள் வந்துவிழும் அர்த்தப் பிழைகளோடு. துன்பியலாய் தொடங்கி அங்கதமாய் தானே மாறிப்போகும் அந்த நாடகத்தையும் நான் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கும் – பால்வெளி மண்டலத்தின் ஏதாவதொரு வீதியில் நட்சத்திர மீனாயிருந்து…’’

இதுகாறும் யாரும் எடுத்துப் படிக்காத என் வாக்குமூலத்தை, காலம் ஒரு நாள் தன் கண்ணில் ஒற்றிப் படிக்கும். சருகையும் ரசித்து வாழ்வைத் துய்த்தவொரு மனசை, வாள்கொண்டு கிழித்து நூல்கொண்டு தைக்க முயன்றோரை கூண்டிலேற்றும். என் வாக்குமூலத்தின் கடைசிவரிகளை காற்றும் ஒளியும் கடலடி பாசிகளும் காலகாலத்திற்குமாய் சொல்லிக் கொண்டேயிருக்கும். காரியசித்தமானதும் தம்மில் இப்படி பொறித்து என் வாழ்வுக்கு சாட்சியமாகும் :

‘‘ மேடை எங்களுடையது. எமக்கே எமக்கானதொரு மேடையை கட்டுவிக்க அடியும் சுதையுமாய் சமைந்திருப்பது எம்முன்னோரின் ரத்தமும் சதையும். அவர்களின் கனவைப் பாடவும் கதையைக் கூறவும் எங்களுக்கு எங்களின் மேடை தேவை.

வயல்வெளியில், ஆலைகளில், வானம் படுத்துறங்கும் மலைமுகட்டில் எமது நாடகமாந்தர் ஜனித்த வண்ணமிருக்கிறார்கள். ஆர்டீசியன் ஊற்றாய் பொங்கும் இவர்களது ஆசைகளே இனி நாடகங்கள்.

நேற்றிரவு நடத்தியதே உமது கடைசி காட்சியாயிருக்கட்டும். கள்ளமாய் கைப்பற்றிய மேடையிலிருந்து மலிவான உங்கள் பழஞ்சரக்குகளோடு கீழிறங்குவீராக. நாங்கள் மேலேறி வருகிறோம் சூரிய சந்திர ஒளி குளித்து ஆடவும் பாடவும்…’’ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...