படிப்பும் பகிர்வும் - ஆதவன் தீட்சண்யா

டிப்பு என்பதை கல்விநிலையத்துடன் மட்டுமே தொடர்புடையதாக கருதிக்கொள்ளும் ஒரு போக்கு சமூகத்தில் செல்வாக்கு பெற்றுள்ளது. எனவே குறிப்பிட்ட வகுப்பை முடித்ததுமே படித்து முடித்துவிட்டதாக நம்மில் பலரும் நினைத்துக்கொள்கிறோம். அதாவது நாம் படிக்கவேண்டியதே அவ்வளவுதான் என்றும் இனி இவ்வுலகத்தில் படிப்பதற்கென எதுவுமே இல்லையென்றும் இறுமாப்படைகிறோம்.

குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட வகுப்பில் அதற்கென தீர்மானிக்கப்பட்ட பாடங்களை மட்டுமே படித்து முடிப்பதோடு பலரது படிப்பின் எல்லை முடிந்துவிடுகிறது. அதிலும், அந்த படிப்பை முடித்ததற்காக வேலையொன்றும் கிடைத்துவிடுமானால் ஒருவர் படித்ததன் பயன் அதுவேயென்றாகிவிடுகிறது. அதற்கப்புறம் அவர் படிப்பதெல்லாம் அவரது அலுவல் சார்ந்த தாள்களையும் கோப்புகளையும் மட்டும்தான். இப்படியானவர்களில் ஒருசாரார்நாட்டுநடப்பை அறிந்துகொள்ளவும் பொதுஅறிவை வளர்த்துக்கொள்ளவும்நாளிதழ்களையும் வாரஇதழ்களையும் படிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இவற்றின் வழியாக அறிந்துகொண்ட செய்திகளைக் கொண்டே உலகின் சகலத்தையும் அறிந்துகொண்டதான பாவனையை இவர்களிடம் காணமுடியும். இவர்களைப் பொறுத்தவரை புத்தக வாசிப்பு என்பது வார/ மாத இதழ்களைப் புரட்டுவதுதான். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சொற்கள் தமிழில் தொகுக்கப்பட்டு வளமேற்றப்பட்டிந்தாலும் பாடப்புத்தகங்களும் பத்திரிகைகள் திரைப்படங்கள் உள்ளிட்ட ஊடகங்களும் திரும்பத்திரும்ப சில ஆயிரம் சொற்களை மட்டுமே பயன்படுத்துகின்றன. தமிழ்மொழியின் சொல்வளத்தை பயன்படுத்தாமலே வீணடிக்கிற இவற்றின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்கள் தாம் அறிந்து வைத்திருக்கிற இந்த சொற்பமான சொற்களுக்கு அப்பால் புதிதாக ஒருசொல்லைக் கண்டாலும்அய்யோ கடினம்என்று அலறுகிறார்கள்.

இவ்வாறான பலபோக்குகளினால் சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு சார்ந்து உலகம் முழுக்க பல லட்சம் தலைப்புகளில் ஒவ்வோராண்டும் வெளியாகும் புத்தகங்களில் ஒன்றிரண்டைக் கூட படிக்காதவரும்கூட தன்னை படித்தவர் என்றே கருதிக்கொள்கிறார். தமிழில் மட்டுமே ஆண்டொன்றுக்கு சராசரியாக எட்டாயிரம்  புத்தகங்கள் வெளியாகும் நிலையில் அவற்றில் எதையுமே படிக்காத ஒருவர் இங்கு தன்னை படித்தவர் என்று சொல்லிக்கொள்கிற அபத்தங்களுக்கும் குறைவில்லை

ஒரு மொழியில் அல்லது குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியாகும் எல்லா நூல்களையும் ஒருவர் படித்தேதானாக வேண்டும் என்று கட்டாயமில்லை, தேவையுமில்லை. தவிரவும் படிப்பதை மட்டுமே ஒருவர் தொழிலாகவும் செய்துகொண்டிருப்பது சாத்தியமில்லை. ஆனால், ஒருவர் தான் இயங்கும் துறையில் தன்னை சமகாலத்திற்குரியவராக மேம்படுத்திக்கொள்வதற்கு தன்னுடைய துறை சார்ந்து வெளியாகும் நூல்களில் சிலவற்றையாவது படிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இதில் பொதுநலன் என்றொரு புண்ணாக்குமில்லை, அவரவர் வளர்ச்சி என்கிற சுயநலத்திற்கே கூட அவசியமாயிருக்கிறது படிப்பு.

சென்னை, மதுரை, ஈரோடு, நெய்வேலி என்று மாநிலம் முழுவதும் நடக்கக்கூடிய புத்தகக் கண்காட்சிகளில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு புத்தகங்கள் விற்பனையாகிவரும் இன்றைய காலகட்டத்தில் படிப்பு சம்பந்தமாக இப்படியொரு பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டை வைப்பது சரியா என்றும்கூட தோன்றலாம். புத்தகம் வாங்குவதற்கும் புத்தகம் படிப்பதற்கும் என்ன தொடர்பிருக்கிறது? வீடுகளில் இடம்பெற்றிருக்கும் பொருட்களை வைத்து ஒரு குடும்பம் மதிக்கப்படும் இந்த நுகர்வுக்கலாச்சார காலக்கட்டத்தில் புத்தகமும் ஒரு அலங்காரப் பண்டமாகத்தான் வாங்கப்படுகிறதா அல்லது வாசிப்பிற்காக வாங்கப்படுகிறதா என்று பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஒரு நகரத்திலுள்ள பேரங்காடிகளையும் பிட்சா கார்னர்களையும் திரையரங்குகளையும் மதுக்கடைகளையும் அறிந்துவைத்திருக்கிறவர்களில் எத்தனைப்பேர் அந்த நகரத்தின் பொதுநூலகம் எங்கே இருக்கிறது என்று அறிந்துவைத்திருக்கிறார்கள்? பெரும்பாலும் நூலகங்கள் ஓர் அடையாள இடமாகத்தான் ( லேண்ட் மார்க்) அறியப்படுகிறதேயன்றி அது புழங்கத்தக்க/ வாசிப்புக்குரிய இடமாக கருதப்படுவதில்லை. ஒரு ஊரின் மக்கள்தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் கூட அங்குள்ள நூலகங்களில் உறுப்பினராக இல்லாதிருப்பதை எதனுடைய குறியூடாக அளவிடுவது?

சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் நடந்தவற்றையும் நடப்பவற்றையும் நடக்கக்கூடியவை அல்லது நடக்கவேண்டியவற்றையும் பற்றிய வெவ்வேறு கண்ணோட்டங்களைத் தாங்கி வெளியாகும் புத்தகங்களை வாசிப்பதானது உலகைப் பற்றிய நமது கண்ணோட்டத்தை சீர்தூக்கிப் பார்க்க உதவுகிறது. நமது நிறைகளையும் போதாமைகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவும் கைக்கொள்ள/ கைவிட வேண்டிய மதிப்பீடுகளை அறியவும் வாசிப்பு வழியமைத்து தருகிறது. புதிய அனுபவத்தை, புதிய வாழ்க்கையை, புதிய நிலப்பரப்பைபுது வகையான அறிவுத்தளத்தை, புதிய மொழியை பொதித்து வைத்துள்ள புத்தகங்களை வாசிப்பதானது  தனிமனிதர்களின் ஆளுமை உருவாக்கத்தில் உள்ளுறையாக இருந்து அளப்பரிய பங்கு வகிக்கிறதுகுடும்பம், சாதி, மதம், ஊர், கல்வி, ஊடகம் ஆகியவை திணித்துக்கொண்டேயிருக்கிற கருத்துக்களின் வழியே உருப்பெறும்பொதுப்புத்திஎன்கிற மந்தை மனோபாவத்திலிருந்து விடுபடுவதற்கான விமர்சனக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளவும்கூட வாசிப்பு அவசியமாகிறது.

***

கண்டது, கேட்டது, உணர்ந்தது என்று எதுவொன்றைப் பற்றியும் எல்லோருக்கும் ஏதேனுமொரு கருத்து இருக்கிறது. எது பற்றியும் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை என்று ஒருவர் சொல்வதும்கூட ஒரு கருத்துதான். கடந்தகாலத்தின் மீதான விமர்சனமாகவோ நிகழ்காலத்தின் மீதான குறுக்கீடாகவோ எதிர்காலத்தின் மீதான கனவாகவோ இந்தக் கருத்து இருக்கலாம். உடன்படுவதாகவோ முரண்படுவதாகவோ எதுவாயினும் அதுவும் கருத்துதான்இந்தக் கருத்தை நாம் வாய்மொழியாகவோ சைகை உள்ளிட்ட உடல்மொழியினாலோ ஓவியமாகவோ நடிப்பாகவோ பாட்டாகவோ எழுத்தாகவோ வெளிப்படுத்துகிறோம் அல்லது பகிர்கிறோம். குழந்தைகளின் கிறுக்கல்கள்  தொடங்கி  தண்டிதண்டியான புத்தகங்கள் வரை எல்லாமே வெளிப்பாடுகள்தான்.

உயிர்வாழ்தலுக்கு இணையான மனிதவுரிமைகளில் ஒன்றாக கருத்து வெளிப்பாடுச் சுதந்திரம் போற்றப்படும் காலத்தில் வாழும் நாம், நமக்குள்ள கருத்துகளை நமக்குத் தெரிந்த வழியில்/ வடிவத்தில் தயங்காமல் வெளிப்படுத்துவோம். நம் காலத்தின் பிரதிநிதிகள் நாம்தான். நம் காலத்தின் வாழ்க்கை மீதான கருத்துக்களை நாமே சொல்லமுடியும். நம்மில் ஒவ்வொருவரது வாழ்வனுபவமும், உலகம் பற்றிய ஒவ்வொருவரது கண்ணோட்டமும் தனித்தன்மையானது. தனித்தன்மையான நம் ஒவ்வொருவரது வாழ்வைப் பற்றிய பகிர்தலின் தொகுப்பு நமது காலகட்டத்திய சமூகத்தின் வரலாறாக கூட்டுத்தன்மை பெறும். வரலாற்றின் ஒரு பகுதியை நீங்கள் ஏன் எழுதக்கூடாது…?

நன்றி: நெய்தல், ஜன-பிப்'2014


1 கருத்து: