புதுவிசை - 42வது இதழின் காலங்கம்

உலகளாவிய அளவில் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலொன்றை Quacquarelli Symonds என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இப்படியான பட்டியல்களின் நம்பகத்தன்மை, நோக்கம் ஆகியவை ஒருபுறமிருக்க, மும்பை ஐ.ஐ.டி.க்கு 222வது இடம் என்பதிலிருந்துதான் இதில் இந்தியாவின் கணக்குத் தொடங்குகிறது. இதை முன்னிட்டு இந்தியாவின் உயர்கல்வி நிலை பற்றி அக்கறையோடு விவாதிக்கலாம். அல்லது இப்போதே இந்த லட்சணம் என்றால் கல்வியை காவிமயப்படுத்தும் ஆட்சியாளர்கள் இன்னும் எப்படியான சீரழிவைக் கொண்டு வந்து சேர்க்கப்போகிறார்களோ என்று கவலைப்படலாம். ஆனால் இப்படி விவாதிப்பதற்கான அறிவுநாணயமற்றவர்கள், இடஒதுக்கீடு இருப்பதால்தான் இந்த இழிநிலை என்கிற நிரந்தர ஊளையை இப்போதும் எழுப்பிவருகிறார்கள். உள்கட்டமைப்புகள், ஆய்வுகள், கற்பிக்கும் முறை, ஆசிரியர் மாணவர் விகிதம், பன்னாட்டு ஆசிரியர்கள், வேலைவாய்ப்பு, பிற நாட்டு மாணவர்களும் வந்து கற்பதற்கான சூழல் ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் பட்டியலுக்குள் இந்தியா முன்னிலை பெறுவதை இடஒதுக்கீடு எங்கே வந்து தடுக்கிறது? 

கல்வி, வேலைவாய்ப்பில் பொதுப்பட்டியல் நேர்மையாக நிரப்பப்படுமானால் அதன் பெரும் பான்மை இடங்களைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பியாகவேண்டிய நெருக்கடி இப்போது உருவாகியுள்ளது. மட்டுமின்றி, பொதுப் பட்டியலுக்கும் இடஒதுக்கீட்டுக்குமான இடைவெளி கால்/அரை மதிப்பெண்தான் என்கிற அளவுக்கு அவர்கள் கடும் போட்டியை உருவாக்கிவருகிறார்கள். உண்மையில் போட்டி இப்போது மூன்றாம் தசமத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இடஒதுக்கீட்டுக்காக தளர்த்தப் படும் கால்/ அரை மதிப்பெண்ணால் கல்வியின் தரம் தாழ்ந்து போகவில்லை. மதிப்பெண் வேட்டையில் வெல்வதற்காகத் தனியார் பள்ளிகள் நடத்திவரும் மோசடிகளும், ஆகக்கடைசி மதிப்பெண் பெறுகிறவர்களும் கூட சுயநிதித் திட்டத்தில் பட்டங்களை விலைக்கு வாங்கும் வியாபாரத்தினாலும்தான் கல்வியின் தரம் குறைந்துவருகிறது என்கிற உண்மையை மறைக்கவே  இந்த மெரீட் மினுக்கிகள் இடஒதுக்கீட்டின் மீது பழிபோடுகிறார்கள்.

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப்பாகுபாடுகளும் புறக்கணிப்புகளும் களையப்படும்போதுதான் கற்பிக்கும் திறனிலும் கற்கும் ஆர்வத்திலும் ஒரு புதிய பாய்ச்சலை உருவாக்கமுடியும். இந்நிறுவனங்களில் முடிவெடுக்கும் மட்டத்தை ஒற்றைச் சாதியக் கண்ணோட்டத்திலிருந்து விடுவித்து ஜனநாயகப்படுத்துவதும் இதற்கு அவசியமாகிறது.

***
கடந்த அறுபதாண்டுகளில் பெய்யாத மழை பெய்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ள உயிரிழப்புகளும் சேதாரங்களும் யாவரையும் மனம் பதைக்கச் செய்வதாயிருக்கிறது. உத்தரகாண்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளச்சேதத்தின் போது தன்னந்தனி மனிதராக தனது மாநில மக்கள் 15,000 பேரை மட்டும் மாயாஜாலமாக மீட்டுக்கொண்டு வந்தவர் என்று புனைந்தோதப்பட்ட நரேந்திர மோடி இந்த முறை அப்படியான சாகச அவதாரம் எதையும் எடுக்காதது ஆறுதலான விசயம்தான். பிரதமர் என்கிற முறையில் அவர் ஜம்மு காஷ்மீர் வெள்ளச்சேதம் குறித்து தனது கவலையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தனது பிறந்தநாளைக் கொண்டாடாமல், வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்யுமாறு தனது தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக அவரது மனிதாபிமானத்தை பலரும் புகழ்ந்து புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கும் வேளையில், பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தமைக்காக மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் நகரத்திலுள்ள விக்ரம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜவஹர்லால் கவுல், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.  இத்தோடும் நில்லாது, இந்தியாவுக்கு விசுவாசமில்லாமல் இருப்பதற்காகவும், இந்தியாவிலிருந்து பிரிந்துபோக நினைப்பதற்காகவும் ஜம்மு காஷ்மீர் முஸ்லிம்களுக்கு இயற்கை வழங்கிய தண்டனை இது என்றும், இவர் களனைவரையும் ஜலசமாதியாக்கியிருக்க வேண்டும் என்றும் வெள்ளச்சேதத்தைக் கொண்டாடி சமூக வலைத் தளங்களில் எழுதிக் களிக்கிறார்கள் (http://www.first post.com/india/when-a-flood-is-not-a-flood-why-kashmir-is-not-uttara khand-1711785.html) அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பில் ஊறி நொதிக்கும் சங் பரிவாரத்தினர் இதற்கும் குறைவான வகையில் தமது வக்கிரத்தையும் குரூரத்தையும் வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. 

*** 
ஐ.நா.போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் தலைவிதியை காஷ்மீர் மக்களே தீர்மானித்துக்கொள்ளவேண்டும் என்று 1947ல் ஜனநாயகரீதியான தீர்வை முன்வைத்த இந்திய அரசு தனது ராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் அந்தத்தீர்வை இன்று வரை தடுத்துவருகிறது. இதை நினைவூட்டுவோர் மீது தேச துரோக வழக்கு, தாக்குதல் என்று அடக்குமுறை தொடர்கி றது. தனிஈழம் குறித்து ஈழத்தமிழரிடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை, இன/ நாடாளுமன்றப் பெரும்பான்மை மற்றும் ராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் நீண்டகாலமாக மறுத்துவருகிறது இலங்கை அரசு. ஆனால் பிரிட்டனிலிருந்த பிரிந்துசெல்வதா கூட்டாட்சியில் தொடர்வதா என்கிற பிரச்னைக்கு ஸ்காட்லாந்து மக்கள் பொது வாக்கெடுப்பின் மூலம் இப்போதைக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள். ‘ஒரு தனியான வாழ்விடத்தில் உள்ள, தனியான இன மக்களுக்கு உரிய அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவதன் மூலம் பிரிவினையை தடுத்துக்கொள்ள முடியும் என்பது இலங்கை உட்பட பல நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு பாடம்’ என்று (http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/09/140919_scotsampa.shtml) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறியிருப்பது இந்தியாவுக்கும் பொருந்தும்.

***
இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. அடைந்துவரும் தோல்வி, அது மத்தியில் ஆட்சியில் நீடிப்பதையோ அதன் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலையோ மாற்றியமைத்துவிடப் போவதில்லை. அடுத்துவரும் தேர்தலில் அது தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் வல்லமை கொண்டதுதான் என்றாலும், அதிகாரத்தை இழந்து வெளியேறிவிட நேர்ந்தாலும்கூட தனது கருத்தியல் செல்வாக்கின் கீழ் சமூகத்தை நிரந்தரமாக இருத்திவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு இந்த ஆட்சிக்காலம் அதற்கு போதுமானதாயிருக்கும்.  நமக்குத்தான் போதாத காலமாயிருக்கும்.

- ஆசிரியர் குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக