புதன், மே 13

சட்டம் தன் கொடுமையைச் செய்து கொண்டேயிருக்கிறது- புதுவிசை 43வது இதழின் காலங்கம்


டிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, பண்பாட்டுத் தனித்துவங்களை பேணிக்காத்து, சமூகப் பாதுகாப்புடன் கூடிய கண்ணியமான வாழ்வை குடிமக்களுக்கு உறுதி செய்திடும் ஒரு சேமநல அரசை நடத்தப்போவதாய் வாக்களிக்கப்பட்ட இந்த நாட்டில் அதற்கு நேரெதிரான அரசே நீடிக்கிறது. தாராளமயமாக்கலுக்குப் பிறகோ அரசானது பெயரளவிலான மேற்பூச்சுகளைக்கூட உதிர்த்துவிட்டு இந்திய அந்நிய முதலாளிகளின் கொடிய சுரண்டலுக்கு உகந்ததாக சட்டங்களை மாற்றியும் இயற்றியும் அவற்றின்கீழ் நாட்டையும் மக்களையும் அடக்கி ஒடுக்கும் நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

சாதிய முன்னுரிமைகளாலும் காலனிய ஆட்சியாளர்களை நத்திப் பிழைத்தும் உருவான இந்திய ஆளும் வர்க்கம், சுதந்திரத்திற்குப் பின்னான புத்தெழுச்சியை உறிஞ்சி வளர்ந்ததொரு விதமென்றால் கால்நூற்றாண்டு கால தாராளமய மாக்கலால் ஊட்டமுற்று பெரும் கார்ப்பரேட்டுகளாக கொழுத்துள்ளது மற்றொரு விதம். தமது சொந்த சுரண்டல் நலனை முன்னிட்டு அந்நிய நிதி மூலதனங்களோடுச் சேர்ந்து நாட்டை மறுகாலனிய ஆதிக்கத்திற்குள் மூழ்கடித்து வரும் அவர்களுக்கு இப்போது தேவைப்படுவது மக்களை அடிமைகளைப்போல ஒடுக்கி வைக்கிற ஒரு சர்வாதிகார அரசு.

சுதந்திர உணர்வையும் போர்க்குணத்தையும் இழந்து அரசின் கண்காணிப்பின் கீழ் அன்றாட வாழ்க்கையை நடத்தும்படியாக  மக்களை ஒடுக்கும் ஓர் அரசின் கீழ்தான் தமது கொள்ளையை மூர்க்கமாகத் தொடர முடியும் என்கிற அந்த ஆளும் வர்க்கத்தின் தேவையை நிறைவு செய்ய காங்கிரஸ், பா.ஜ.க என்கிற இரட்டைக் குதிரைகள் / கழுதைகள் கிடைத்திருக்கின்றன. மதச்சார்பற்ற முகத்துடன் காங்கிரஸ்; மதவெறி முகத்துடன் பா.ஜ.க. முழு இந்தியாவையும் சந்தையாக- சுரண்டல் களமாக கருதுகிற ஆளும் வர்க்கத்தின் பார்வையும் அகண்ட இந்தியா-ஒற்றைக் கலாச்சாரம் என்கிற இந்துத்வாவின் பார்வையும் இணைந்த ஓர் அரசினை இப்போது பா.ஜ.க. அரசாங்கம் வழி நடத்துகிறது.

அரசியல் சட்டத்தின்படியன்றி தனது ரகசியத் திட்டங்களின்படி நாட்டை ஆட்டுவிக்கும் ஒரு கட்சியினுடைய ஆட்சியின் கீழ் குடிமக்கள் இன்னும் கடுமையான நிலைமைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். மக்களது பின்தங்கிய உணர்வுகளையும் மூடநம்பிக்கைகளையும் ஆதிக்க மனோபாவத்தை யும் கிளறிவிட்டு அவர்களை சாதி மத பெருமிதச் சிறைக்குள் தள்ளிப் பூட்டிவைக்கும் வேலையை அக்கட்சியும், நாட்டின் இயற்கை வளங்களையும் நிதிச்சேகரங்களையும் உள்நாட்டு பன்னாட்டு பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கத் திறந்துவிடுவதை அக்கட்சியின் அரசாங்கமும் நிறைவேற்றி வருகின்றன. 

மக்களுக்காக அரசாங்கம் என்றல்லாது அரசாங்கத்திற்காக மக்கள் என்னும் நிலை தீவிரமடைந்துவருகிறது. மக்கள் தமது சுயேச்சையான இருப்பைத் தாமே மறுத்து தம்மை அரசாங்கத்தின் அடிமைகளாக தாழ்த்தியுணரும் படியாக அன்றாட வாழ்வி லும் தனிமனிதச் சுதந்திரத்திலும் அரசாங்கத்தின் தலையீடு என்றுமில்லாதபடி அதிகரித்து வருகிறது. உணவு, உடை, வாழ் விடம், மொழி, மதம், கல்வி, தொழில், நடமாட்டம், கருத்து வெளிப்பாடு என அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிப்பதற்கான தகுதியாக இந்துமதத்தையும் உயர்சாதியையும் முன்னிறுத்துவதன் மூலம் சமூகத்தை பிளவுபடுத்தி நிரந்தரப் பதற்றத்திற்குள் தள்ளுவதே அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாக மாறிக்கொண்டுள்ளது.

தமது அடிப்படை உரிமைகளும் வாழ்வாதாரங்களும் நாட்டின் தற்சார்பும் அரசாங்கத்தால் சூறையாடப்பட்டு வருவதன்மீது குவிய வேண்டிய மக்களின் கவனம், ஆளுங்கட்சியினரும் சங் பரிவாரத்தினரும் அன்றாடம் கிளப்பும் ஏதேனுமொரு சர்ச்சையில் திசைமாறுகிறது. திட்டமிட்டு உருவாக்கப்படும் இந்தச் சர்ச்சைகள் மக்களின் பன்முக அடையாளங்களை மத வயப்பட்டதாகச் சிதைப்பதோடு  சமூகத்தை பகைமுகாம்களாகவும் பிளக்கிறது. இந்துக்கள் என்று பிளவுபடுத்தப்பட்ட மக்களை பார்ப்பனீயத்திற்கு கீழ்ப்படுத்துகிற வேலை எல்லாத் தளங்களிலும் அச்சமூட்டும் வேகத்தில் நடக்கிறது.

இந்தியச் சமூகம் வளர்ச்சிப்போக்கில் கண்டடைந்த பல்வேறு நிறுவனங்களும் மூளைச்சாவுக்கு ஆளாகி செயலிழக்கும் அவலம் திடுமென உருவாகிவிடவில்லை. தாம் பரப்பும் நச்சுக்கருத்துகளை உள்வாங்கிக்கொள்ளும் கருத்தியல் வெற்றிடத்தோடு பெருவாரியான மக்கள் இருக்கின்ற உண்மையைச் சரியாகப் பயன்படுத்தியே கார்ப்பரேட் பயங்கரவாதமும் காவி பயங்கரவாதமும் அதிகாரத்துக்கு வந்துள்ளன. மேடையிலிருந்து அறைகூவல் விடுக்கும் சம்பிரதாயப் போராட்டங்களால் இந்தப் பயங்கரவாதங்களை ஒழிக்கமுடியாது. மேடைகள் அமைவிடரீதியாகவும் குணாம்சத்திலும் மக்களின் இருப்புக்கும் மனநிலைக்கும் எதிர்த்திசையில் தான் அமைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரும் தனது சக மனிதரின் தோளில் கைபோட்டு நேரடியாக தொடங்கும் உரையாடலே ஒருவேளை இந்தப் போராட்டத்தின் தொடக்கவடிவமாக இருக்கக்கூடும்.

***

தலித்துகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டது தொடர்பான வெண்மணி, பதானிதோலா, லஷ்மன்பூர். கம்பாளப்பள்ளி  வழக்குகளில் சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்குத் தந்து விடுதலை செய்திருக்கும் பாரம்பரியரிமுள்ள இந்திய நீதிமன்றங்கள் அமித் ஷா, சல்மான் கான், ஜெயலலிதா வகையறா, ராமலிங்கராஜு போன்றோரை விடுதலை செய்ததில் அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. சட்டம் தன் கொடுமையைச் செய்து கொண்டேயிருக்கிறது.

- ஆசிரியர் குழு, புதுவிசை

கட்டுரைகள்:

அகிம்சையின் அத்துமீறலா? நாட்டை நாசப்படுத்துவதா?
பி.ஆர்.அம்பேத்கர் 
மராத்தியிலிருந்த ஆங்கிலத்தில்: பிரசாந்தி ராஹி தமிழில்: இரா.சிசுபாலன் 3

மிசோக்களின் உணவுக் கலாச்சாரம் - முனைவர். ரத்னமாலா 12

பண்பாட்டு நிலவியலும்  திணைக் கோட்பாடும் - பேரா.அ.ராமசாமி 18

மெய்வெளி பயணத்தில் பெண்ணுடல் - புதியமாதவி 26

தமிழக மறைத்தள வரலாற்று வரைவும் கால்டுவெல்லும் 36

தலித் தனிக்குடியேற்றம் - ஒரு புதிய வாழ்வு இயக்கம்
கோ. ரகுபதி 48

புனிதப்பசு - ஆனந்த் டெல்டும்டே தமிழில்: இரா.விஜயகுமார் 54

ஆர்.எஸ்.எஸ் - 3.0
தினேஷ் நாராயணன் தமிழில்: செ.நடேசன் 58

நேர்காணல்: சிங்கள திரைப்பட இயக்குனர் பிரசன்னா விதானகே 40

நூல் அறிமுகம்:

ந.பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி - ஜீவன் பென்னி 57
எம்.சிவகுமாரின் ‘சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு’ - ஆண்ட்டோ 76

சிறுகதை:
மிஞ்சின கதை - அழகியபெரியவன் 79

கவிதை: விஜயபத்மா. ஜி 84

முகப்போவியம்: கார்த்தி




பிரதிகள் மற்றும் சந்தாவுக்கு:


ந.பெரியசாமி: 9487646819
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...