ஒசூரில்
நடக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்கு பெங்களூரிலிருந்து வந்துபோகும் ஒருவராக அறிமுகமாகி
பின்னாட்களில் தோழமையின் உருவகம் போல மாறிப்போன தோழர். அசோகன் முத்துசாமி அவர்களின்
நினைவு நாளில் உரையாற்றும் கெடுவாய்ப்பை இயற்கை எனக்கு வழங்கியிருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
ஊழியர்கள் என்ற முறையிலும் கலை இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளிலும் அவரோடு இணைந்து
பணியாற்றிய அனுபவங்களின் நினைவுகளால் தத்தளிக்கும் உங்களின் நிலையிலேயே நானும் இருக்கிறேன்.
சாதியின் சிற்றலகான குடும்பமும், குடும்பங்களின் தொகுப்பான சாதியும் உண்டாக்கித் தருகிற
ரத்த உறவுகளுக்கு அப்பால் பரந்து விரிந்திருக்கிற இம்மானுடச் சமூகத்துடன் கலந்துறவாடிய
அவருக்கு புதிய உறவுகளாக வாய்த்த தோழர்களும் நண்பர்களும் குழுமியுள்ள இந்த அவை பொருத்தமான
அஞ்சலியை இவ்வேளையில் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு முழுநேரப் புரட்சியாளருக்குரிய
விழிப்பு மனநிலையுடனும் செயல் வேகத்துடனும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான அவரது
எத்தனங்கள் கைகூடுவதற்கு காலம் அனுமதிக்கவில்லை.
ஆயினும் இறந்தவரைப் பற்றி நல்லவிதமாக விதந்துரைக்க வேண்டும் என்கிற சம்பிரதாயத்துக்கு
அவசியமின்றியே அவரது வாழ்வும் இயல்பும் மதிக்கத்தக்கதாய் இருக்கிறது.
அவரும்
தானும் கூட்டாக பொறுப்பேற்று நிறைவேற்றியிருக்க வேண்டிய குடும்பரீதியான கடமைகள் பலவற்றை
தனிமனுஷியாய் எதிர்கொண்டு நிறைவேற்றி வருவதோடு அமைப்புடனும் தொடர்புகளை பேணிவருகிற
தோழர் அசோகனின் துணைவியார் தோழியர்.சுதா அவர்களின் உழைப்பை இந்த அவையில் பெருமிதத்தோடு
பதிவுசெய்கிறேன்.
தோழர்.அசோகன்
இடதுசாரி அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்திருந்தாலும் கருத்துலகத்தில்
குறுக்கீடு செய்வதில்தான் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய தனிப்பட்ட எழுத்துகளும்
மொழிபெயர்ப்புகளும் உரையாடல்களும் அவரது இந்த ஆர்வத்திற்கு மதிப்புமிக்க சான்றுகளாக
இருக்கின்றன. தனது காலத்தில் சமூக அரசியல்
பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் முன்னுக்கு வந்த பிரச்னைகளை புரிந்துகொள்ளவும் அவற்றின்மீது
வினையாற்றவும் துணைபுரியக்கூடிய கருத்தாக்கங்களைத் தேடித்தேடி பயின்று வந்த அவர் அவற்றின்
சாரத்தை கட்டுரைகளாகவும் மொழிபெயர்ப்புகளாகவும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். இடதுசாரி
கருத்தியலுக்கு வளம் சேர்க்கும் நோக்கில் பன்முகப்பட்டதாக விரிந்திருந்த தனது வாசிப்பினால்
உடனடியான கருத்தியல் தலையீடுகளைச் செய்வதற்கான உள்ளாற்றலை அவர் பெற்றிருந்தார். தான்
நம்பும் கருத்தியலுக்காக பத்திரிகைகள் தொடங்கி முகப்புத்தகம் வரையாக தன் காலத்தின்
தொடர்புச்சாதனங்கள் அனைத்திலும் குன்றாத ஆர்வத்துடன் இயங்கிவந்த அவரது வேகம் இயக்கவாதிகளுக்கு
தேவைப்படுகிற குணங்களில் ஒன்றென குறிப்பிட வேண்டியுள்ளது. இந்துத்துவ அரசியல் ஆட்சியதிகாரத்தை
கைப்பற்றி மூர்க்கமாக தனது நிகழ்ச்சிநிரலை செயல்படுத்தி வருகிற இக்காலத்தில் இந்துத்துவத்தின்
அபாயம் குறித்து எப்போதுமே எச்சரித்து வந்திருந்த அவரது இன்மையானது மேலும் மேலும் அவரை
நினைவூட்டுகிறது. அவரது எழுத்தாற்றலும் மொழியறிவும்
மையம் கொண்டியங்கிய புள்ளிகளில் ஒன்றான இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் குறித்த இவ்விவாதம்
காலத்தோடு வெகுவாக பொருந்தி நிற்கிறது.
***
பாரதிய
ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இந்துத்துவ அரசியல் குறித்த விவாதங்கள் கிளம்புகின்றன.
ஆனால் அக்கட்சி திடுமென ஆட்கிக்கு வந்துவிடவில்லை என்பதையோ அக்கட்சியை மக்கள்தான் ஆட்சியில்
அமர்த்துகிறார்கள் என்பதையோ, அந்த மதவெறிக் கட்சியை தம்மை ஆளுங்கட்சியாக அமர்த்திக்கொள்ளும்
நிலைக்கு இசைவாக மக்களது மனநிலை மாறியிருக்கிறது என்பதையோ இவ்விவாதங்கள் பொருட்படுத்துவதில்லை.
இன்னும் சற்றே முன்னகர்ந்து இந்துத்துவத்திற்கு இசைவாக மக்களது மனநிலை மாறியிருக்கிறதா
அல்லது ஏற்கனவே அது அவ்விதமாகத்தான் இயங்கிக் கொண்டிருந்ததா என்பதிலிருந்தே கூட விவாதத்தை
தொடங்கவேண்டியிருக்கும். ஆயிரக்கணக்கான இஸ்லாமியரை அழித்தொழித்ததற்கான வெகுமானமாகவோ
அல்லது குஜராத் கொடூரங்களை நாடு முழுவதும் விஸ்தரிக்கத் தோதானவர் என்கிற நம்பிக்கையிலோ
மோடியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவது ஆர்.எஸ்.எஸ்.சுக்கு உகந்த முடிவாக இருக்கலாம்,
ஆனால் அப்படியான ஒருவரை நாட்டின் பிரதமராக ஏற்றுக்கொள்வதற்குத் தோதான மனநிலை சமூகத்தில்
ஒரு பகுதியினருக்கு ஏற்பட்டதை எவ்வாறு விளங்கிக்கொள்வது?
இந்துத்துவம்
பாரதிய ஜனதா கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதல்ல. இந்துத்துவம் தான் ஒரு கட்டத்தில்
பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கிக் கொண்டது. அதற்கும் முன்பாக காலனிய ஆட்சிக்காலம் தொட்டே
பல்வேறு அமைப்புகளிலும் கட்சிகளிலும் ஊடுருவி தனது கருத்தியல் தளத்தை விரிவுபடுத்தி
வந்த இந்துத்துவம் தனக்கென கொடுத்துக்கொண்ட உருவமே ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவாரம்.
இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களாலும் அம்பேத்கரின் வருகையோடு தொடங்கிய ஒடுக்கப்பட்ட
மக்களின் எழுச்சியாலும் சமூகநீதிக்காக நாடெங்கும் கிளர்ந்த போராட்டங்களாலும் நிம்மதியிழந்து
போன உயர்சாதியினர், ஆளுகை இழந்த ஆண்ட பரம்பரையினர், நிலவுடைமையாளர்கள், மடாதிபதிகள்,
கந்து வட்டிக்காரர்கள், சாதிவெறியர்கள் உள்ளிட்ட வெகுஜன விரோதிகளுக்கும் பழமைவாதிகளுக்குமான
புகலிடமாக அது தன்னை வெட்கமின்றி காட்டிக் கொண்டது.
காலனிய
ஆட்சியினாலும் 1920களில் தொடங்கி 1930களில் கடுமையடைந்த உலகளாவிய பொருளாதாரப் பெருமந்தத்தினாலும்
நாட்டின் சமூக அரசியல் பொருளியல் பண்பாட்டுத்தளங்களில் பல்வேறு நெருக்கடிகளும் மாற்றங்களும்
ஏற்பட்டு வந்த நிலையில் அதற்கான உண்மைக்காரணத்தைச் சொல்லாமல் அதிகாரமற்ற இஸ்லாமியர்களை
எதிரிகளாக பொய்யுறுத்தி ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது. அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்துப்
போராடுவதைக் காட்டிலும் அருகருகாக வேறு கலாச்சார பின்புலமுள்ள இஸ்லாமியர்களை- அந்த
கலாச்சார வேறுபாடுகளையே வெறுப்புக்குரியதாக முன்னிறுத்தி எதிரிகளாக கட்டமைத்ததன் மூலம்
இந்து வெகுஜனங்களை தன்பின்னால் திரட்டிக்கொள்வது சங்கரிவாரத்திற்கு லகுவான வழியாக அமைந்தது.
இதன் மூலம் இந்து என்கிற மத அடையாளத்தின் வழியாக அடிநிலைச் சாதியினரையும் அணிதிரட்டி
உயர்சாதியினருக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் பழமைவாதிகளுக்கும் பழையபடியே கீழ்ப்படுத்திக்
கொடுக்கும் பொறுப்பை சங்பரிவாரம் நிறைவேற்றிக் கொடுத்தது. இஸ்லாமியர்களுக்கு எதிராக
நாடெங்கும் கட்டவிழ்த்துவிடப்பட்ட மதக்கலவரங்கள் ஊடாக அது மேலும் மேலும் இந்து உணர்வை
இஸ்லாமிய வெறுப்பாக மாற்றுவதில் அச்சம்தரக்க வகையில் முன்னேறியது. இதன்மூலம் இஸ்லாமியரிடையே
ஏற்பட்டுவந்த பாதுகாப்பற்ற உணர்வு தற்காப்பு மனநிலையாகவும் மதரீதியான அணிதிரட்சியாகவும்
மாறுவதை சங்பரிவாரம் விரும்பியது. அதன் விருப்பத்தை முஸ்லிம்களில் ஒருபகுதியினர் நிறைவேற்றியும்
தந்தனர்.
இஸ்லாமியரல்லாத
ஒரு நாடாக இந்தியாவை முன்மொழிந்ததன் மூலம் இந்துத்துவவாதிகள் தனிநாடு கோரிக்கையை எழுப்பும்
நிர்ப்பந்தத்தை இஸ்லாமியர்களுக்கு ஏற்படுத்தினர். நாடு துண்டாடப்படுவதில் தனக்குரிய
பங்கை மறைக்க அது இஸ்லாமியர் மீது பழிபோட்டது. அதற்குப்பின்னும்கூட இஸ்லாமியரோடு இணைந்து
வாழும் சகிப்புத்தன்மையை அறவே ஒழித்துக் கட்டும் முயற்சிக்குத் தடையாக இருந்த காந்தியை
அது தீர்த்துக்கட்டியது. இதன் தொடர்ச்சியில் சட்டரீதியாக ஆர்.எஸ்.எஸ். தடைசெய்யப்பட்ட
போதும் அது நாடெங்கும் சாகாக்களை நடத்திவந்தது. அரசியல் நடவடிக்கை எதிலும் ஈடுபடப்போவதில்லை
என்று உறுதிமொழிக் கடிதத்தைக் கொடுத்து தன்மீதான தடையை நீக்கிக்கொள்ளும் தந்திரத்தைக்
கையாண்ட ஆர்.எஸ்.எஸ்., காஷ்மீர் பிரச்னை, இந்திய
சீன எல்லைத்தகராறு, நெருக்கடி நிலை, ஜனநாயக மீட்பு, மண்டல் எதிர்ப்பு என்று எந்தவொரு
சந்தர்ப்பத்¬யும் பயன்படுத்தி தன் ஆதரவுதளத்தை விரிவுபடுத்தி வந்திருக்கிறது. சட்டவிரோத,
சமூகவிரோதக் காரியங்களை நிகழ்த்துவதற்கு பல்வேறு நிழலமைப்புகளை நடத்திவந்த அதன் வெளிப்படையான
சட்டரீதியான அரசியல் முகமாக முதலில் உருவாக்கப்பட்ட ஜனசங்கம் பின்பு பாரதிய ஜனதாவாக
உருமாற்றப்பட்டது. பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்குவதை இந்துக்களின் கௌரவப்பிரச்னையாக
முன்வைத்து மதவெறியைக் கிளப்பி இந்துக்களை வாக்குவங்கியாக திரட்டிக் கொண்டதன் மூலம்
அந்த பாரதிய ஜனதா கட்சி முன்பு ஆளுங்கட்சியாகியது. இப்போதும் அது ஆர்.எஸ்.எஸ். சார்பில்
ஆளுங்கட்சியாக பொறுப்பேற்றுள்ளது. தனக்குத்தானே
செய்துகொண்டாக வேண்டிய சகாயம் என்கிற அடிப்படையில் பா.ஜ.க. இந்துத்துவம் மேலும் பரவுவதற்கும்
ஆழங்கால் பதிப்பதற்கும் அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் பயன்படுத்துகிறது. அதற்காக
அது சட்ட நெறிமுறைகள், பாராளுமன்ற ஜனநாயகத்தின் மிச்சசொச்ச விழுமியங்கள் ஆகியவற்றை
துச்சமெனத் தள்ளிவிட்டு களத்தில் நிற்கிறது. பொறுப்பேற்ற நாளிலிருந்தே பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சின்
நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.
கார்ப்பரேட்
முதலாளிகளின் பெரும் முதலீட்டில் தேர்தலைச் சந்தித்தபோதும் 31 சதவீத வாக்குகளை மட்டுமே
பா.ஜ.க.வினால் பெற முடிந்திருக்கிறது. இதுவே கூட அதன் சக்திக்கும் உழைப்புக்கும் பொருத்தமற்ற
விதாச்சாரத்தில் கூடுதலாக கிடைத்ததுதான் என்று சொல்வதனால் முடிவில் எந்த மாற்றமும்
ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனெனில் எண்விளையாட்டாகிப்போன தேர்தல்முறை பா.ஜ.க. வழியாக
ஆர்.எஸ்.எஸ் கையில் நாட்டை ஒப்படைத்துவிட்டது. அது அதிகாரத்தைக் கைப்பற்றி இருப்பதானது
வெறுமனே இந்தியாவை ஐந்தாண்டுகளுக்கு ஆண்டுவிட்டுப் போவதற்கல்ல. அதிகாரத்திற்கு வருவதற்கு
நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே தான் சொல்லி வந்திருக்கிற ‘இந்தியாவை இந்துமயமாக்கு
இந்துவை ராணுவமயமாக்கு’ என்கிற முழக்கத்தை
நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான உள்ளக ஏற்பாடுகளை செய்து முடிப்பதற்கு அது இந்த ஐந்தாண்டுகால ஆட்சியைப் பயன்படுத்திக்கொள்ளப்
போகிறது என்பதை உணர்த்தும் சமிக்ஞைகள் வெளியாகிவருகின்றன. அடுத்தத் தேர்தலில் வெற்றி
வாய்ப்பை இழந்தாலும் நீண்டகாலத்திற்கு தனது கருத்தியல் போரை அரசியந்திரத்திற்குள் இருந்து
நடத்திச் செல்வதற்கான ஊடுருவலையும் அது செய்துவிட்டுப்போக தயாராகிவருகிறது.
மக்களின்
பின்தங்கிய உணர்வுநிலை, பகுத்தறிவற்ற தன்மை, மூடநம்பிக்கைகள், விமர்சனத்தன்மையற்ற கல்வி,
சடங்குகள், பழக்கவழக்கங்கள், சாதியப் பிடிமானம், ஆணாதிக்கப்பார்வை, தனிச்சொத்துடைமை
ஆகியவற்றை தொந்தரவு செய்யாமல் அவற்றுக்கு இணையாக தன்னைப் பொருத்திக் கொள்வதன் வழியாகவே
சங் பரிவாரம் மக்களை நெருங்கிச் செல்கிறது. அதன் கருத்தியல் தனிநபர் தொடர்புகளின் வழியாகவும்
ஊடகங்கள் வழியாகவும் அரசியந்திரத்தினை பயன்படுத்தியும் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும்,
ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் அது தனது கருத்தியல் ஆதரவாளர்களைக் கண்டடைந்திருக்கிறது.
அதற்கேற்ற முழக்கங்களை அது உருவாக்குகிறது.
பா.ஜ.க.வுக்கு
வாக்களித்த 31 சதவீதத்தினருக்கும் அப்பால் சங்பரிவாரத்தின் கருத்தியல் செல்வாக்கு விரிந்து
பரந்துள்ளது. அதன் ஏதொரு அமைப்பிலும் அங்கம் வகிக்காத- நேரெதிர் கட்சிகளில் அங்கம்
வகித்தாலும் கருத்தியல்ரீதியாக சங் பரிவாரத்துடன் ஒருமைப்பாடு கொண்டு நிற்கும் பலரையும்
காணமுடிகிறது. யோகா, உடற்கல்வி, ஆன்மீகம், இயற்கை வேளாண்மை, முதியோர் இல்லம், அனாதைகள் இல்லம், விபத்துக்கால
உதவி, பசு பாதுகாப்பு என்று தன்னலமற்ற ஒரு சேவை நிறுவனம் போன்ற வேடத்தை தரித்துக்கொண்டு
வெகுமக்களுடன் ஊடாட்டம் கொள்கிற பல்வேறு அமைப்புகளை நிர்வகித்து வருகிறது.
கொள்கைவயப்பட்ட
கட்சி என்கிற இறுக்கமான தோற்றத்தை தளர்த்திக் கொண்டு தன்னை வழமையானதொரு கட்சியாக காட்டிக்கொண்டதன்
மூலம் சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரும் வந்து சேர்வதற்காக பா.ஜ.க.வின் கதவுகளை சங்பரிவாரம்
அகலத் திறந்து வைத்தது வீண்போகவில்லை. தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், நடிகர்கள், உயர்
வர்க்கத்தினர், ஓய்வு பெற்ற அரசதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்,
கனிமக் கொள்ளையர்கள், சாமியார்கள், ஒப்பந்ததாரர்கள், கேபிள் டிவி உரிமையாளர்கள், கட்டைப்
பஞ்சாயத்துப் பேர்வழிகள், கல்வித்தந்தைகள், சாதிச்சங்கத் தலைவர்கள் என பல்வேறு தரப்பையும்
அது உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது. இதன்பொருள் அது தன் நிலையிலிருந்து பிறழ்ந்துவிட்டது
என்பதல்ல, மாறாக, அது புதிய தளங்களிலிருந்து ஆட்களை திரட்டிக் கொண்டுள்ளது. அவர்களை
தனது மதவெறி நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொண்டுமிருக்கிறது. தமது இருப்பை நிலைநிறுத்திக்
கொள்வதற்கு அதிகாரத்தில் எப்படியாவது ஒட்டிக்கொண்டாக வேண்டும் என்கிற கட்டாயத்தில்
இருக்கிற ராம்விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அதாவாலே, உதித்ராஜ் போன்ற தலித் தலைவர்களை
சங்பரிவாரம் தனது கூட்டாளிகளாக மாற்றிக் கொண்டுள்ளது. தலித்துகள் மீது வன்கொடுமைகள்
அல்லது அவர்களது உணவு உரிமையைத் தடுப்பது போன்ற அட்டூழியங்கள் நிகழும் போதுகூட வாய்திறக்க
முடியாதபடிக்கு அல்லது ஒப்புக்கு ஓர் அறிக்கைவிடுவதோடு முடங்கி விடுமளவுக்கு இக்கூட்டாளிகள்
சங்பரிவாரத்திடம் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்களின் வழியாக சங்பரிவாரம் தலித்துகளுக்குள்
ஊடுருவிக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளை அப்பட்டமாக அறிந்திருக்கும் பலரே
பிழைப்புவாதத்திற்காக அதனுடன் கூட்டு சேரும்போது, அவ்வமைப்பினை அறிந்திராத- சாதியொழிப்பு
கருத்தியல் கொண்டு சேர்க்கப்பட்டாத தலித் பகுதியினரிடம் அதன் ஊடுருவல் பாரதூரமான கெடுவிளைவுகளை உருவாக்கும்.
அம்பேத்கரை தனது வணக்கத்திற்குரிய தலைவர் என்கிற வார்த்தை ஜாலத்துடன் தலித்துகளுக்கும்,
அம்பேத்கரின் அடிப்படையான கொள்கைகளுக்கு நேரெதிரான நடவடிக்கைகள் மூலம் தலித்தல்லாதாருக்கும்
வலைவிரித்து காத்திருக்கிறது சங்பரிவாரம்.
கட்டாய
நிதிவசூல், வழியை மறித்து சிலை எழுப்புதல், ராப்பகலாக பக்திப் பாடல்களை ஒலிபரப்புவது,
சிலையைக் கரைக்கும் வரை தொடர்பூசை, கரைக்கும் தினத்தில் பெரும் ஊர்வலம், ஊர்வலத்தையொட்டி
பதற்றத்தை உருவாக்குதல், மதவெறி முழக்கங்களை எழுப்புதல், சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலை
விளைவிக்கும் வகையாக விளம்பரங்களைச் செய்தல் என்று ஏற்கனவே விநாயகர் சதுர்த்தியின்
பெயரால் உள்ளூர்மட்டத்தில் இளைஞர்களை அணிதிரட்டுவதில் சங்பரிவாரம் முன்னேறியிருக்கிறது
என்பதை வெட்கமின்றி நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆற்றல்மிக்க, வினைத்திறன் வாய்ந்த வயதினரான அந்த
இளைஞர்கள் மதவெறியூட்டப்பட்டவர்களாக- பிற்போக்கான இந்துத்துவவாதிகளாக மாற்றப்படுகின்றனர்.
உள்ளுர்
கோவில் திருவிழாக்கள் பலவும் இப்போது ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டன.
ஊராரில் பெரும்பகுதியினர் - குறிப்பாக பெண்கள் பங்கேற்கும் வகையாக விழாக்களை விமர்சையாக்குவது,
புதிய நோன்புகளையும் விரதங்களையும் பூஜைகளையும் அறிமுகப்படுத்துவது, பிரம்மாண்டமான
சிலைகளை நிறுவுவது, பெருந்தெய்வங்களின் அவதாரங்களாக குலசாமிகளையும் நாட்டார் தெய்வங்களையும்
மாற்றுவது, வேதம் பயின்றவர்களை அர்ச்சகராக்குவது, வாணவேடிக்கை, அலகு குத்துதல், தீச்சட்டி
ஏந்துதல், குண்டம் மிதித்தல், இவற்றுக்கு தேவையான நிதியாதாரத்தை திரட்டுவது என்று வெகுவாக
திட்டமிட்டு பலரையும் ஈடுபடுத்தும் வேலையை சங்பரிவாரம் ஒருங்கிணைக்கிறது. பக்தர்களாகத்
திரளும் மக்களை தன் பக்கம் ஈர்த்துக்கொள்வதன் மூலம் அதன் காவிக்கொடி ஏற்றப்படாத கோவில்களே
இல்லையெனும் நிலை உருவாகிவருகிறது. கடவுளுக்கும் பக்தர்களுக்குமான இடம் என்கிற கற்பிதத்தைப்
பயன்படுத்திக் கொண்டு சங்பரிவாரம் அங்கும் தன் அணிதிரட்சியை செய்துகொண்டிருக்கிறது.
இவற்றோடல்லாது,
அது ஆரம்பப்பாடசாலைகள் தொடங்கி ஐஏஎஸ் ஐபிஎஸ் பயிற்சிப் பள்ளிகள் வரையாக நடத்தி அம்மாணவர்களை
பல்வேறு பகுதிகளுக்கும் தனது ஊழியர்களாக்கி அனுப்பிவைக்கிறது. அதன் ஆதரவாளர்கள் நடத்திவரும்
பல்வேறு கல்வி நிலையங்களும் தொண்டு நிறுவனங்களும் இதே நோக்கத்துடன் இயங்குகின்றன. அதன்
மாணவர் அமைப்பு, கல்வி நிலையங்களில் வேத சுலோகங்களை ஓதவைப்பது, மாணவர்கள் தம் பெற்றோருக்கு
பாதபூஜை செய்யும் விழாக்களை நடத்துவது, ஆண்டுவிழாக்கள் போன்ற நிகழ்வுகளை மதச்சார்புத்தன்மையுடன்
நடத்துவதற்கு தூண்டுவது, மாணவர் விடுதிகளில் இறைச்சி பரிமாறுவதை தடுத்து மரக்கறி உணவே
சிறந்ததென பிரச்சாரம் செய்வது, வெளியே நடக்கும் கலவரங்களில் ஈடுபட மாணவர்களைத் திரட்டுவது,
சங் பரிவாரத்திற்கு எதிராக விமர்சிக்கும் மாணவர்களைத் தாக்குவது, இடஒதுக்கீட்டுக்கு
எதிராக கலவரத்தை நடத்துவது ஆகிய சீர்குலைவுகளின் வழியாக மாணவர்களில் ஒருபகுதியினருக்கு
நஞ்சேற்றும் வேலை நடக்கிறது.
மத்திய
அரசால் நிர்வகிக்கப்படும் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் உயர்சாதி ஆதிக்கம்
இயல்பாகவே இந்நிறுவனங்களை சங்பரிவாரத்திற்கு வளமான களமாக அமைத்துக் கொடுக்கிறது. சென்னை
ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பு தொடங்கப்பட்ட போது
அதன் பெயரிலிருக்கும் அம்பேத்கரையும் பெரியாரையும் நீக்கிவிட்டு வேறு பெயரை சூட்டுமாறு
அதன் நெறிஞர்களுக்கு நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வந்தது இப்போது அம்பலமாகியுள்ளது.
சமூகப் பொறுப்பும் அரசியல் கண்ணோட்டமும் உள்ள அந்த மாணவர்கள் அமைப்பின் நிகழ்வுகளை
கண்காணித்துவந்த சங்பரிவார சாய்மானம் கொண்ட சக்திகள் ஒரு மொட்டைப் பெட்டிஷன் மூலமாக
அந்த அமைப்பையே தடைசெய்ய வைத்துள்ளனர். அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை விமர்சிக்கக்கூடாது
என்கிற கல்வி நிறுவனத்தின் விதியை மீறி மோடி அரசாங்கத்தை விமர்சித்தக் குற்றத்திற்காகத்
தான் இந்தத் தடை என்கிறது நிர்வாகம். அப்படியானால் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு
அறிவிக்கப்பட்டபோது அது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்று அமைதி காக்காமல் ரகளையில்
ஈடுபட்ட இதே நிறுவனத்தின் உயர்சாதி மாணவர்கள் மீது ஏன் நடிடவடிக்கை எடுக்காமல் ஒத்துழைத்தது?
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் வெளியீடுகள் மாணவர்களில் ஒருதரப்பினரது உணர்வுகளைப்
புண்படுத்துகிறது என்று இன்றைக்கு கண்ணீர் வடிக்கிற நிர்வாகம், இட ஒதுக்கீட்டுக்கு
எதிராக உயர்சாதி மாணவர்கள் வெளிப்படுத்திய வக்கிரமான இழிமொழிகளால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட
பழங்குடி மாணவர்களின் உணர்வுகள் ரணமானதற்கு என்ன செய்து கிழித்தது? மோடி அரசாங்கத்தில்
மட்டுமல்ல காங்கிரஸ் அரசாங்கத்திலும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையும் அதன் கீழ்
இயங்கும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகமும் சங்பரிவாரமும் ஒருங்கிணைந்தே செயல்படுகின்றன
என்பதற்கு இது மற்றுமோர் உதாரணம்.
தேசியப்
பெருமிதம், இந்து மதத்தின் தொன்மை, பாரதப் பண்பாட்டின் மேன்மை, வேதக் கலாச்சாரத்தின்
மகிமை, மநுதர்மம்- வர்ணாசிரம்- சாதியத்தின் இன்றியமையாமை, எல்லைதாண்டிய பயங்கரவாதத்தால்
ஏற்படும் ஆபத்து, பிறமதத்தாரின் துரோகம் மற்றும் இந்தியத் துவேஷம், அண்டை அயலார் அச்சுறுத்தல்
என்று அது உண்மைபோல் புனைந்திறக்கும் கட்டுக்கதைகளில் ஏமாறுகிறவர்களாக கணிசமான மக்கள்
திரள் இருப்பது சங் பரிவாரத்திற்கு சாதகமாக இருக்கிறது. வரலாற்றைத் திரிப்பது, சமகால
நிகழ்வுகளை இந்துத்துவப் பார்வையில் விளக்குவது, புராண இதிகாசங்களை உண்மையென சாதிப்பது,
மூடபழக்கவழக்கங்களுக்கு அறிவியல்பூர்வமான வியாக்கியானம் செய்து கொண்டே அறிவியல்பூர்மான
விசயங்களை இந்து நம்பிக்கைகளுக்கு எதிரானதென மறுத்தொதுக்குவது என்று நெடுங்காலமாக அது
மக்களை பின்தங்கிய உணர்வுக்குள் தள்ளிவருகிறது. வட்டார அளவிலான ஆதிக்கச் சாதியினரிடையே
உணர்ச்சிப்பூர்வமான பிரச்னைகளை கிளப்பிவிட்டு அவர்கள் மத்தியில் காலூன்றும் தந்திரத்தை
அது கையாள்கிறது என்பதை மாதொருபாகன் சர்ச்சை வெளிக்கொணர்ந்தது.
***
மதச்சார்பற்றதாக
அரசும், மதநல்லிணக்கம் பேணுகிறவர்களாக மக்களும் இருக்க வேண்டும் என்பதுதான் நமது மெய்யான
விருப்பமென்றால் நாம் அதற்காக என்ன செய்திருக்கிறோம் என்று கணக்கு பார்க்கவேண்டிய காலம்
வந்துவிட்டது. ஒத்தக் கருத்துள்ளவர்களைத் திரட்டி மதநல்லிணக்க அல்லது மக்கள் ஒற்றுமை
கருத்தரங்கோ கலைஇரவோ திரைப்பட விழாக்களோ பாரம்பரிய உணவுத் திருவிழாக்களோ நடத்தி சங்பரிவாரத்தின்
கருத்தியலை வீழ்த்த முடியாது. மிகுந்த அரசியல் பிரக்ஞையோடு நடத்தப்படும் பட்சத்தில்
இவை போராட்டங்களுக்கான நியாயத்தை முன்மொழிகிற, பரவலாக்குகிற சாத்தியங்களைக் கொண்டிருக்கிறதே
தவிர இவற்றையே போராட்டங்கள் என எண்ணி திருப்தியடைவது அறிவீனம். மேடையிலிருந்து விடுக்கப்படும்
அறைகூவலில் இதுவும் ஒருவகை என்பதற்கும் அப்பால் இவற்றின் பயன்மதிப்புதான் என்ன?
சங்பரிவாரத்தை
ஆவேசமாக விமர்சிப்பதன் மூலம் இந்துத்துவ அரசியலை முறியடித்துவிட முடியும் என்கிற மூடநம்பிக்கையிலிருந்து
விடுவித்துக்கொள்ள இதைவிடப் பொருத்தமான தருணமொன்றை வரலாறு நமக்கு வழங்கப் போவதில்லை.
மக்களை அணுகுவதற்கும் அவர்களோடு உரையாடுவதற்கும் மரபான வழிமுறைகளல்லாது வேறேதேனும்
மார்க்கமுண்டா என்று இப்போது கூட நாம் யோசிக்காவிட்டால் எப்போது யோசிக்கப் போகிறோம்?
மக்கள் பெருந்திரளாக கூடுமிடங்களிலும் தருணங்களிலும் அவர்களை ஈர்க்கும் சக்தியாக நாம்
எப்போதேனும் இருந்திருக்கிறோமா? மதச்சார்பான நடவடிக்கைகளில் அன்றாடம் ஈடுபட்டுவரும்
வெகுமக்களை திசைமாற்றி மதச்சார்பற்ற செயல்களில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்கள் ஏதும்
நம்மிடம் இருக்கிறதா? குறைந்தபட்சம் நம்முடைய
சொந்த வாழ்வில் அதற்கான ஏற்பாடு உள்ளதா? பல்வேறு சமூக நிறுவனங்களிலும் சங்பரிவாரம்
ஊடுருவி வளர்ந்துவருவது குறித்து நமக்குள்ள கவலை மெய்யானதுதானா? நம்மால் தலைமை தாங்கப்படும்
பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் அமைப்புகள் தங்களது வேலைத்தளங்களிலும் அலுவலகங்களிலும்
அரசியல் சாசனம் வலியுறுத்துகிற மதச்சார்பற்றத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று
சொல்வதற்கான நெஞ்சுரத்தைக் கொண்டுள்ளனவா? அலுவலக வளாகத்திலேயே கட்டப்படும் கோவில்கள்,
வெள்ளிக்கிழமை பூஜைகள், பரிகாரச் சடங்குகள், வங்கிகளில் லட்சுமிக்கு அன்றாடம் காட்டப்படும்
தீபாராதனை, ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் போன்றவை சிறுபான்மையினரை அந்நியப்படுத்தி பெரும்பான்மையினரை
மத ரீதியாக ஒருங்கிணைக்கும் செயல்கள் என்கிற விமர்சனமாவது நமக்கிருக்கிறதா?
பாஸிஸ்ட்டுகளின்
ஆட்சிக்காலத்தில் வேலை நியமனம், சம்பள நிர்ணயம், பதவி உயர்வு எதுவானாலும் பாஸிஸ்ட்டுகளை
ஆதரிப்பவர்களுக்கே கிடைக்கும் என்ற நிலை இத்தாலியில் உருவாகியிருந்தது. வேலை முடிந்தாலோ
ஆலை வளாகத்திற்குள்ளேயே பாசிஸ்ட்களால் நடத்தப்பட்டுவந்த டெபோராவாலா என்கிற சூதாட்டவிடுதிகளுக்குப்
போகுமாறு தொழிலாளர்கள் தூண்டப்பட்டனர். அதாவது வேலைநேரத்திற்கு அப்பாலும் தொழிலாளர்களை
தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் பாஸிஸ்டுகள். சூதாட்டத்திலும் குடியிலும் தமது
ஊதியத்தை இழந்தத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளின் பின்னிரவிலும் வீடு திரும்பினார்கள்.
வேலைத்தளத்திலோ வீட்டிலோ தமது சக தொழிலாளர்களைச் சந்திக்க முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டதைப்
போன்ற நெருக்கடி உருவாகியுள்ளதை உணர்ந்த கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்களைச் சந்தித்து
உரையாடி அரசியல்படுத்துவதற்காக தாங்களும் அந்த சூதாட்ட விடுதிகளுக்குச் செல்வதென முடிவெடுக்கிறார்கள்.
(பாஸிஸத்திற்கெதிரான பால்மிரோ டோக்ளியாட்டியின் 21 கட்டுரைகள் என்ற நூலில் படித்ததாக
நினவு) தங்களால் அணிதிரட்டப்பட வேண்டியவர்கள்
இருக்குமிடம் சூதாட்ட விடுதிதான் என்றால் அங்கும் செல்லத்தான் வேண்டும், ஆனால் அவர்களோடு
ஒன்றி நிற்பதாக கருதிக்கொண்டு தாங்களும் சூதாடிகளாகவும் குடியர்களாகவும் மாறிவிடக்கூடாது
என்கிற எச்சரிக்கை உணர்வுடன் கூடிய அந்த முடிவிலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதேனும்
இருக்கிறதா என்று பரிசீலிப்பதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை. வெவ்வேறானது
போல தோன்றினாலும் வெகுமக்களிடமிருந்து தனிமைப்படுதல் அல்லது ஒன்றிக்கலந்து கரைந்துபோதல்
ஆகிய இருவிதமான போக்குகளும் ஒரே விளைவைத்தான் உருவாக்குகின்றன என்பதை கவனத்திற்கொண்ட
ஓர் அணுகுமுறையே நமக்குத் தேவைப்படுகிறது.
விஞ்ஞானப்பூர்வமான
பகுத்தறிவை வெகுமக்களிடையே பரப்புவது, உலகமும்
உயிர்களும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதை விவரிக்கும் இயங்கியல் வரலாற்று பொருள்முதல்வாதத்தையும்
பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டையும் மக்களுக்குப் புரியும் மொழியில் பேசுவது, இந்துமதம்
என்கிற ஒன்று இல்லை, அது பலதையும் கலந்துகட்டிய கலவை என்கிற உண்மையை உரத்துச் சொல்வது,
அப்படி சொல்வதனால் எவருடைய மனமாவது புண்படுமானால் உடனே மருந்து வாங்கிவர ஓடாமல் இருப்பது,
வேதங்களோ பகவத் கீதையோ புனித நூல்களல்ல, சமஸ்கிருதம் தெய்வீக மொழியுமல்ல தேசிய மொழியுமல்ல
என்பதை அம்பலப்படுத்துவது, மதவழிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு மாற்றாக மதச்சார்பற்ற மாற்றுக்
கொண்டாட்டங்களை உருவாக்குவது, சாதிய பாலினப் பாகுபாடுகளுக்கும் இனத்துவேஷங்களுக்கும்
எதிராக சமத்துவக் கருத்தியலை முன்வைப்பது, பெரும்பான்மையினரின் அச்சுறுத்தலிலிருந்து
சிறுபான்மையினரை பாதுகாப்பது- சுயாதீனமான வாழ்வுக்கான அவர்களது போராட்டத்தில் உடன்
நிற்பது, சங் பரிவாரத்தின் ஆட்சி எவரின் நலனுக்கானது என்பதை அம்பலப்படுத்துவது, காவி
பயங்கரவாதத்திற்கும் கார்ப்பரேட் பயங்கரவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை சமரசமின்றி
முன்னெடுப்பது என்று நம்முன்னே கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன, கடுகளவேனும்
செய்துகொண்டிருக்கிறோமா என்பதை யோசிப்பது தோழர்.அசோகனுக்கு செலுத்துகிற பொருத்தமான
அஞ்சலியாக இருக்கக்கூடும். ஒருவேளை அத்தகைய யோசிப்பு அவசியமற்றது என்று திருப்தியுறுவோமானால்
அது இந்த நாட்டின் சுதந்திரத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் இணங்கிவாழும் சகிப்புத்தன்மைக்கும்
எதிர்காலத்தில் சமைக்க விரும்பும் சமத்துவத்திற்கும் மனித மாண்புகளுக்கும் செலுத்தக்கூடிய
அஞ்சலியாகவும் மாறக்கூடும்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த
தோழர்
அசோகன் முத்துசாமி அவர்களின் நினைவுநாளுக்கான உரைக்குறிப்பு
28.05.15/
சேலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக