சனி, ஆகஸ்ட் 29

எஸ்.வி.ஆர். என்கிற அன்புமயமான ஆளுமை - ஆதவன் தீட்சண்யா



மிழ்ச்சமூகத்தின் அறிவியக்கத்திற்கு வளமார்ந்த கொடைகளை நல்கி வருகிறவர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள். இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய, மனிதவுரிமை இயக்கங்களிலும் அவற்றுக்கப்பாலும் எஸ்.வி.ஆர் என்று தோழமையோடு நேசிக்கப்படுபவர். 1940 ஆம் ஆண்டு தாராபுரத்துக்கு அருகேயுள்ள கிராமமொன்றில் பிறந்த அவர் இந்த முக்கால் நூற்றாண்டு காலத்தின் தமிழ்ச்சமூகம் பல்வேறு தளங்களிலும் முனைகளிலும் அடைந்துள்ள மாற்றங்களுக்கு ஓர் ஆக்கப்பூர்வமான ஊக்கியாகவும் சாட்சியமாகவும் விளங்குகிறவர். எக்ஸிஸ்டென்ஷியலிசம்- ஓர் அறிமுகம் என்கிற அவரது முதல் நூல் 1975ல் வெளியானதை கணக்கில் கொண்டால் 2015ல் அவரது எழுத்துப்பணியின் நாற்பதாம் ஆண்டு இது. ஆனால் அதற்கும் முன்பே அரசியல் தொடர்புகள், களப்பணிகள், கட்டற்ற தீவிர வாசிப்பு ஆகியவற்றினால் திராவிட கருத்தியல்களினூடே இடதுசாரியாக பரிணமித்திருந்தார்.

உலகெங்கும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் நடைபெறும் விவாதங்களையும் மாற்றங்களையும் உள்வாங்கியும் தன்வயமாக்கியும் சொந்தக் கண்ணோட்டத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவருகிறவர். தனித்தும், வ.கீதா உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து எழுதியவையும் மொழிபெயர்த்தவையுமாக 67 நூல்களை நமக்கு தந்திருக்கிறார்.  அவ்வப்போது முன்னெழும் பிரச்னைகளின் மீதும், அடிப்படை விசயங்களின் மீதும், நூல்கள், திரைப்படம், ஓவியம், இசை ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் விமர்சித்தும் இன்றளவும் எழுதி வருகிறவர். காத்திரமான விவாதங்களை முன்னெடுத்த அரசியல் பத்திரிகைகள் வெளியாவதில் இவரது பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது.

எழுதும் பொருள் குறித்த ஆழ்ந்த ஞானத்துடனும் அதுவரையான தரவுகளுடனும் எழுதுவது இவரது தனித்தன்மை. அடிக்குறிப்புகள், மேற்கோள்கள், விளக்கக்குறிப்புகள் வழியாக மொழிபெயர்ப்புகளை அதன் முழு அர்த்தத்தில் வாசகருக்கு உட்செலுத்தக்கூடியவர். இவ்வகையில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முன்னுவமை இல்லாதபடி மொழிபெயர்த்திருக்கிறார். தன்னில் பாதிவயதைக்கூட எட்டாத மார்ஸல் முஸ்டோ என்பவரை ‘இளம் மார்க்சீய அறிஞர்’ என்று கொண்டாடி அவரது நூலை தமிழில் மொழிபெயர்க்குமளவுக்கு விசாலமனம் கொண்டவர். உலகெங்குமுள்ள சிந்தனையாளர்கள் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் பலரோடு நேரடித் தொடர்புகளைப் பேணுகிறவர்.

சமூக நீதியை நிலைநிறுத்தும்  தீர்ப்புகளில் நீதிமன்றங்களால் மேற்கோள் காட்டப்படுமளவுக்கு இவரது எழுத்துகள்  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவானவை. 1970களின் பிற்பகுதியில் என்கவுண்டர் என்ற பெயரால் நடத்தப்பட்டு வந்த நரவேட்டையை உலகறியச் செய்ததிலும் மனிதவுரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வருவதிலும் இவரது தலையீடுகள் குறிப்பிடத்தகுந்தவை. சிவில் உரிமைக்கான மக்கள் இயக்கத்தை தமிழகத்தில் தொடங்கிவைத்த அவர் பிற்பாடு பியுசிஎல் அமைப்பின் தமிழக புதுவை செயலாளராகவும் தேசிய துணைத்தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்.  தூக்கு போன்ற கொடுந்தண்டனையிலிருந்தும் இன்னபிற நெடுந்தண்டனைகளிலிருந்தும் பலரது உயிர்கள் இவரது தொடர் முயற்சிகளால் காப்பாற்றப்பட்டுள்ளன. சாதியம், மதம், தேசியம், பாலினம், வர்க்கம், அரசு ஆகியவற்றின் பெயரால் நடைபெறுகிற ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் வாழ்நாளெல்லாம் இணைந்து நிற்பவர். அம்பேத்கரியமும் பெரியாரியமும் மார்க்சீயமும் இணையும் புள்ளிகளை வளர்த்தெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராயுதமாக கொடுப்பதற்கு இன்றளவும் பாடுபட்டு வருகிறவர். அரசின் கண்காணிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் கருத்தியல் எதிரிகளின் அவதூறுகளுக்கும் உடல்நலக் குறைபாடுகளுக்கும் முதுமைக்கும் பணிந்தோ சோர்ந்தோ போய்விடாமல் இன்றும் ஆற்றல்மிக்கதொரு போராளியாக வாழ்ந்துவருகிறவர். ஆயினும் தான் செய்வதற்கு காத்திருக்கிற மலையளவு வேலைகளில் கடுகளவே செய்திருப்பதாக தன்னடக்கத்துடன் சொல்கிறவர்.

தன் இல்லத்திற்கு வருகிற நண்பர்களையும் தோழர்களையும் துணைவியார் சகுந்தலாவுடன் வரவேற்று உபசரித்து பயன்மிக்க உரையாடல்களை நிகழ்த்துகிறவர். மனதுக்குகந்தவர்களோடு சேர்ந்து ரசிப்பதற்கென நூற்றுக்கணக்கான இசைப்பேழைகளையும் திரைப்படங்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு குதூகலத்துடன் காத்திருக்கும் எஸ்.வி.ஆர். என்கிற அன்புமயமான ஆளுமை என்றென்றும் தமிழ்ச்சமூகத்தால் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவர்.

நன்றி: ஹலோ விகடன்
புகைப்படம்: தவமுதல்வன்

1 கருத்து:

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...