செவ்வாய், அக்டோபர் 6

ஐம்பூதத்தான் அருள் - ஆதவன் தீட்சண்யா



1.
இரவின் சடவுகளால் சோம்பிப் புலர்ந்து
அந்தரத்தில் வீணே சுழன்றலைந்த 
அந்தச் சூரியனை
ராந்தல் கண்ணாடிபோல் சாம்பலால் துலக்கி
கதிர்களை நீவி பிரயோசனமாய் ஒளிரப் பணித்தேன்

பின்
அதன் வெம்மை நன்கு பூமியில் படும்படியாக
வாசலை துப்புரவாக கூட்டிவைத்தேன்

ஏலவே நான் சொல்லிவைத்திருந்ததன் பேரில்
கோழிகள் கூவி
எழுப்பின எல்லோரையும்

ஆனால் சற்றைக்கெல்லாம்
அறுத்தெறிந்த அன்னாசிப்பழத்துண்டைப்போல
மேலேறிச் சுழன்று போய்க்கொண்டிருந்தது சூரியன்

நட்டாற்றில் முங்கியிருந்து திடுமென வெளிப்பட்ட ஒருவன்
மந்திரங்களை முணுமுணுத்தபடி
வானோக்கி விரித்தான் கைகளை
கொஞ்சம் தாமதித்திருந்தாலும்
அவன் கைகளுக்கு சிக்கியிருப்பேனே என்று
பதறும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு
மூச்சிரைக்க சடுதியாய் மேலேறிய சூரியன்
நட்சத்திரங்களையும் கோள்களையும் கிரகங்களையும்
ஒளிறெக்கைக்குள் மறைத்து பத்திரப்படுத்தியது

இப்போதுமென்ன
வசைகளை மந்திரமென முணங்கும் அவன்
சூரியனைத் தன் அக்குளிலிருந்து பிறப்பித்ததாகத்தான்
ஊரெங்கும் சொல்லித் திரிகிறான்
அறிவியலும் வரலாறும் அறியாத நீங்களோ
சூரியனை விடுத்து
அவனைத் தொழுகிறீர்.

2.
பூமியின்
ஒவ்வொரு அங்குலத்திலும்
அதனதன் உரிமைக்காரர் பெயர் பதியப்பட்டாயிற்று

மஞ்சள் நீலம் அதிபச்சையென
வண்ணம் பூசிய முட்டுக்கற்கள்
ஆக்கிரமித்தவர் பெயரை அறிவிக்கின்றன

இவ்வாறே
கடற்பரப்பும் வான்வெளியும்
அளந்து பிரிக்கப்பட்ட பிறகு
வேறு கிரகங்களுக்கு விரைகிறீர்கள்

எங்காவது இருக்கிறதா எங்கள் பெயருமென
தேடியலையும் நாங்கள்
யார் தலையில்
கால் வைக்க?

 
3.
காற்று எல்லாவிடத்திலும் நிறைந்திருக்கிறது
சாதியைப்போல
பொத்தானுக்கு அடங்கி வீசவும் உறையவும் கற்றுக்கொண்ட அது
கடவுளைப்போல வீசுகிறது பாரபட்சமாக 
நாசியைக் கருக்கும் நாற்றங்களை எம்மீது வீசிச்செல்லும் அது
எம்வாழ்வின் நறுமணங்களை வேறெங்கோ வழித்துச்செல்கிறது
மூளும் ஆத்திரத்தில்
கழுத்தைப் பிடித்து இறுக்கிவிடலாமாவெனத் தோன்றுகிறது
எல்லோரும் செத்தொழிவீர்களேயென விட்டுவைக்கிறேன்.

4.
அமீபாவை ஈன்றெடுக்கும் வலுவை
தண்ணீருக்கு ஈந்ததிலிருந்து தொடங்குகிறது
உயிர்களுக்கான எமது கொடை
ஆதியமீபாவின் ஒற்றைச்செல் பல்கிப் பெருகியபோது
அதன் ஒவ்வொன்றிலும் எங்கள் பெயரிருந்தது
ஆய்வகங்களின் மேசைகளில் நீங்கள் செய்ததெல்லாம்
உங்களது பெயர்களை ஸ்டிக்கர்களாக ஒட்டியதுதான்.
நெற்றிவேர்வை நிலத்தில் சொட்டி
நீரை பூமியில் உண்டுபண்ணிய எங்கள் வாயில்
சிறுநீரைப் பெய்யும் நுட்பம்
நீங்கள் கண்டுபிடித்த மற்றொன்று.

5.
அண்மையில் தெரிகிற ஆகாயம்
உண்மையில் தொலைவில் இருக்கிறது
மேகங்கள் சுதந்திரமாய் நகர்ந்து திரிவதைப் பார்த்தாலே
அது இன்னமும் ஊர் சேரியென
பிரிக்கப்படாததாய் இருப்பது புரிகிறதல்லவா
பூமியை முழுதாய் உங்களுக்கு தானபத்திரம் செய்தபின்
இரவோடிரவாகப் பறந்த நாங்கள்
ஆகாயத்தில் குடியேறியதற்கு அதுவும் ஒரு காரணம்
மற்றொன்று
உங்களால் கொளுத்தப்பட முடியாத கூரை அது
ஆயினும்
நீங்கள் ராக்கெட்டுகளை அனுப்புவதன் பின்னேயுள்ள
சூழ்ச்சிகள் நாங்கள் அறியாததல்ல
நாங்கள் வசிக்கும் ஆகாயம்
ஒருபோதும் உங்களுக்கு தரைவிரிப்பாக மாறாது.
 
 நன்றி: செம்மலர், அக்டோபர் 2015
















1 கருத்து:

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...