கடந்தகாலத்தின் காதைப் பிடித்து சமகாலத்திற்கு இழுத்துவருதல் - ஆதவன் தீட்சண்யாகாட்டாளி என்கிற தனது முதல் நாவலின் மூலம் தமிழிலக்கியப் பரப்பில் அரூர் பகுதி மக்களின் வாழ்க்கை குறித்த கணக்கை தொடங்கிவைத்த தோழர் ரவீந்திரபாரதி அவர்களின் இரண்டாவது நாவல் இது- கருக்கலில் முறிபடும் சிறகுகள். கதைக்கென தேர்ந்து கொண்டுள்ள நிலப்பரப்பும் மாந்தர்களும் காலமும் மொழியும் முதலாவதின் தொடர்ச்சி போல தோன்றினாலும் இந்நாவல் பேசுபொருள் சார்ந்து முந்தையதிலிருந்து துல்லியமாக வேறுபட்டுள்ளது.

இந்தியாவின் ஆன்மா கிராமத்தில் இருக்கிறதென்றால் அந்த கிராமம் என்னவாக இருக்கிறது என்கிற உண்மையை இந்நாவலின் வழியே இரவீந்திர பாரதி மேலுயர்த்திக் காட்டுகிறார். இந்தியாவின் / தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூர் சமூகமும் தனது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே உள்ளகமாக பொறியமைவு ஒன்றை உருவாக்கி வைத்திருப்பதாக விதந்தோதப்படுகிறது. உண்மையில் இந்தப் பொறியமைவு சாதியம்தான். ஒன்றுக்கொன்று ஒத்தாசையாக இணங்கி வாழ்தல் என்கிற மூடாக்கை பாசாங்காக போர்த்திக்கொண்டுள்ள இப்பொறியமைவானது நேரடி அர்த்தத்தில் ஒதுக்குதலையும் ஒதுங்குதலையும் கீழ்ப்படுத்துதலையும் கீழ்ப்படிதலையும் அச்சாகக் கொண்டியங்குகிறது. அதன் சீரான இயக்கத்தை குலைக்க முயற்சிப்பவர்களை அது உள்ளிழுத்து அரைத்துக் கூழாக்கி அந்த சதைக்கூழையே மசகெண்ணெய்யாய் மாற்றிக்கொண்டு சுழல்கிறது. இந்தக் கொடூரம் வெளிப்பார்வைக்கு சட்டெனத் தெரியாததால் ஈ எறும்புக்குக் கூட இன்னல் விளைவிக்காத இரக்கக்குணம் கொண்டவர்கள், கள்ளங்கபடமறியாத, சூதுவாதற்ற அப்பாவிகளென சிற்றூர் சமூகத்தவரைப் பற்றிய கற்பிதம் இங்கே உலவுகிறது. தொலைவிலிருந்து பார்த்து உருவாக்கிக்கொள்ளும் இத்தகைய கற்பிதங்களைக் கலைத்துப் போடும் இந்நாவல், இயல்பான மனிதாய உணர்வுகள் சாதியத்தால் எப்படி உருச்சிதைக்கப்படுகிறது என்பதையும் காட்டி முடிகிறது. 

***
சேலத்திலிருந்து கிழக்கே கல்ராயன் மலைக்கும் மேற்கே சேர்வராயன் மலைக்கும் இடையேயான மஞ்சவாடிக் கணவாய் வழியே வடக்கு நோக்கி நீளும் சென்னை நெடுஞ்சாலையில் 60வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது அரூர். அரூருக்கு வட கிழக்காக, இடையிட்டு ஓங்கித் தாழும் கிழக்கு மலைத்தொடரின்  குன்றுகளுக்கும் அவற்றின் அடிவாரங்களில் மேவிப் பரவியிருக்கும் காப்புக்காடுகளும் ஊடாக நீள்கின்ற திருவண்ணாமலை நெடுஞ்சாலைக்கும் தீர்த்தமலை சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிற்றூர்களில் ஒன்றான கூடலூர் தான் இக்கதையின் களம்.

பண்பாட்டுப்பொதுமைகளை தமக்குள் பகிர்ந்து கொள்கிறவர்களாக, தாயாப்புள்ளையாக - மாமன் மச்சானாக- வெளிப்பார்வைக்கு தெரிகிற கூடலூர் மக்கள், வாழ்வியல் தேவைகளுக்கான உற்பத்தி நடவடிக்கைகளில் சேர்ந்திருக்கும் போதே வாழ்வின் எல்லாத்தளங்களிலும் பிரிந்துமிருக்க சாதியே அடிப்படையாக இருக்கிறது. நிலவுடைமைச்சாதிகள், நிலத்தை அண்டி வாழும் புழங்குகிற சாதிகள், புழங்கத்தகாத சேவைச்சாதிகள் என்பதானது இந்தப் பிளவு. பல தலைக்கட்டுகளுக்கு முன்பு, தருமபுரிக்கு அருகேயுள்ள கோயிலூரில் சாதி ஒடுக்குமுறை தாளாது கிறிஸ்தவ மதத்திற்கு  மாறியதோடு  அங்கிருந்து இடம் பெயர்ந்த சலவைத்தொழிலாளர்களின் குடும்பம் ஒன்றும் கூடலூரில் குடியேறி கலந்திருக்கிறது. வெளியிலிருந்து வந்து தலித்துகளுக்கு துணிவெளுக்கும் தொழிலை மேற்கொண்டுள்ள அந்த கிறிஸ்தவ குடும்பம் திடுமென - ஆனால் மிகவும் பொருந்தியிழைந்து கதையை நாம் எதிர்பாராத முடிவுக்கு இட்டுச் செல்கிறது.

உள்ளொடுங்கிய அந்த ஊருக்கு கணக்கப்பிள்ளையாய் ஒரு பார்ப்பனர் வந்து சேர்ந்திருக்கிறார். பிறசாதியினர் படிப்பது குறித்தும் வேலைக்கு வருவது குறித்தும் பார்ப்பனர்களுக்குள்ள ஒவ்வாமையையும் வெறுப்பையும் காட்டிக் கொள்கிற அதேநேரத்தில் அனுசரித்துப் போவதாக பாவனை செய்கிற பிழைப்புவாதத்தின் குறியீடாகவும் அவரது மனைவி வெளிப்படுகிறாள். வேறு சாதிக்காரன் சாப்பிட்ட இலையை எடுக்க ஊர்க்காரி குப்புவை அவள் அழைப்பதும் தற்போது வெள்ளத்தால் சென்னையில் மண்டியிருக்கும் ஒரு லட்சம் டன் குப்பையை அள்ள துப்புரவுப் பணியாளர்களாகிய தலித்துகளை கொண்டுவந்து இறக்கியிருப்பதும் ஒரேவகையான மனநிலைதான்.

***
மழைமறைவுப் பிரதேசம் என்பதன் முழுப்பொருளில் விளங்கும் இப்பகுதியில்  மக்களின் முதன்மை வாழ்வாதாரம் வேளாண்மை. மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாறுகளை நம்பமுடியாததால் பெரும்பாலும் மேட்டாங்காட்டு வெள்ளாமை எனப்படும்  புஞ்சைச் சாகுபடி. கமலை வழியான கிணற்றுப்பாசனத்தின் மூலம் நஞ்சைப்பயிர்களும் விளைவிக்கப்படும் அங்கு இன்னும் மின்சார பம்புசெட்டுகள் வந்து சேர்ந்திருக்காத காலத்தில் கதை நடக்கிறது. ‘நீ மட்டும் பட்டணத்துக்குப் போயிருந்தேன்னு வச்சிக்கோ, உன்ன யாரும் அடிச்சிக்க முடியாது. தங்கவேல், சந்திரபாபு கூட உன்னை மெச்சிக்குவாங்க...’ என்கிற குறிப்பின் வழியே இந்தக் கதை திரைப்பட ஆளுமை சந்திரபாபு உயிருடனிருந்த காலத்தைச் சேர்ந்தது- அதாவது 1974ஆம் ஆண்டுக்கு முந்தையது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

1974வரையிலும்கூட ரவிக்கை அணிவதை ‘தேவடியாத்தனம் / பஜாரித்தனம்’ என்று பெண்களே இளக்காரம் பேசுமளவுக்கு நகர நாகரீகம் வந்து சேர்ந்திராத சிற்றுரான கூடலூரில் கமலைக்கிணற்றுப் பண்ணையம் கொண்டது கூக்கட்டையன் என்கிற குட்டையனின் குடும்பம். குட்டையனின் தம்பி கந்தையன். கமலைவாரியின் குத்துக்காலில் முரட்டுத்தனமாக முதுகைத் தேய்த்தும் வீட்டுக்குள்ளிருந்து பெரிய பானையைத் தூக்கிவந்து வாசலில் போட்டு உடைத்தும் கல்யாணம் செய்துகொள்வதற்கான தனது விருப்பத்தை வீட்டாள்களுக்கு குறிப்பால் உணர்த்துகிறான். கல்யாணம் என்றால் அது சொந்த சாதிக்குள்தான் என்பதன்றி வேறொன்றையும் அறிந்திராத ஊர் அது- மற்றெல்லா ஊர்களையும் போல. (விதிவிலக்காக புழங்கத்தக்க சாதிக்குள் எப்போதோ நடந்துவிட்ட ஒரு கலப்பு குறித்து இப்போதும் முனகிக் கொண்டிருக்கும் ஊர் அது.) எனவே உள்ளூரில் சொந்தசாதிப் பெண் கிடைக்காத பட்சத்தில் ஏழு செருப்பு தேய பக்கம் பராந்திரியெல்லாம் நடந்தாவது சொந்த சாதிப் பெண்ணையே கல்யாணம் முடிக்கிற வழமைக்கேற்ப கந்தையன் அரூரையும் மஞ்சவாடி கணவாயையும் தாண்டி சேலம் மாவட்டம் வலசூரைச்  சேர்ந்த முத்தம்மாள் மகள் பார்வதியை மணம் முடித்து கூட்டி வருகிறான். பம்புசெட் பாசனத்தில் பண்ணையம் பண்ணும் வலசூர் குடும்பத்துப் பெண்ணான பார்வதியை, பெட்ரோமாக்ஸ் விளக்கையே அதிசயம்போல பார்க்கும்  கூடலூருக்கு இழுத்துவருவது சாதிதான்.

கந்தையன், பார்வதி ஆகியோரது குடும்பங்கள் இரண்டையும் மையத்தில் இருத்திக்கொண்டு அவர்களின் இரண்டு ஊர்களும் அவற்றின் சுற்றுப்புறங்களும் அவற்றோடு தொடர்புடைய ஏனையப்பகுதிகளும் அன்றைய காலக்கட்டத்தில் அடைந்து கொண்டிருந்த மாற்றங்களை சொல்லிப்போகிறது இக்கதை.

1965 அக்டோபர் 10 ஆம் நாள் தருமபுரி தனி மாவட்டமாக உருவாகும்வரை சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இணைந்திருந்தபோதும் அரூர் பகுதி, தனித்த வட்டார வழக்கையும் வாழ்க்கைவட்டச் சடங்குகளையும் கொண்டது. இந்த வகையில் கூடலூர் கவுண்டர்களின் பழக்கவழக்கம் கூடலூரில் உள்ள மற்ற பிற சாதியினருடன்தான் பெரிதும் ஒத்துப்போவதாய் இருக்கின்றதேயன்றி வலசூரில் உள்ள அதே  கவுண்டர்களுடன் பெரிதும் வேறுபட்டதாய் இருக்கிறது. கேழ்வரகை அரைத்தும், கம்பு, சோளம் ஆகியவற்றை இடித்தும் கூழாக காய்ச்சிக் குடிக்கும் ‘வடக்கத்திப் பழக்கம்’, ‘தெக்கத்தியாரான’ வலசூர்க்காரர்களுக்கு கிடையாது. பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் பரியப்பணம் கட்டும் வடக்கத்திப் பழக்கத்திற்கு மாறாக தம் பெண்ணை மணக்கும் மாப்பிள்ளைக்கு ‘பொட்டிப்பணம்’ கொடுப்பவர்கள் தெக்கத்திக்கவுண்டர்கள். வீடுவாசல் அமைப்புகூட ஒன்றுபோலில்லை. வழிபாட்டுத் தெய்வங்களும் வெவ்வேறானவை. சொற்களஞ்சியமும் வேறுபட்டதுதான். ஒரே பதார்த்தம்தான் என்றாலும் கூடலூரில் முட்டைப்பணியாரம் என சுட்டப்படுவது வலசூரில் சொய்யானாக இருக்கிறது. கூடலூரின் ‘பருப்பஞ்சோறு’ வலசூரில் ‘வெத்தலப்பாக்கு’. உடைப்பழக்கத்திலும் வேறுபாடு. கூடலூர் பெண்கள் சேலைத்தலைப்பான மாராப்பினால் உடம்பின் மேல்பாகத்தை மறைத்துக் கொள்பவர்களாய் இருக்க, வலசூரின் பெண்கள் ரவிக்கை அணிகிறவர்களாய் இருக்கிறார்கள். (பெருநகரத்தின் அருகாமையினால் உடை நாகரீகத்தில் இந்த மாற்றம் விரைவாக அங்கு வந்து சேர்ந்திருக்கலாம்). உழவுமுறை, பாசன முறை,  திருமணத்திற்கு முன்பும் பின்புமான சடங்குகள், கர்ப்பிணிக்கு செய்யப்படும் கட்டுஞ்சோறு (வளைகாப்பு) சடங்கு என்று எதுவொன்றிலும் ஒன்றுபடும் புள்ளிகளைவிடவும் வேறுபடும் புள்ளிகளே அதிகமாய் உள்ளன. இப்படி, வாழ்வின் எல்லாத்தளங்களிலும் நிலவும் வேறுபாடுகளையும் ஒரே சாதி என்கிற கற்பிதம் இணைக்கிறது. ஆகவே மூத்த மகள் பார்வதியைத் தொடர்ந்து இரண்டாவது மகள் கமலாவையும் வடக்கத்திப் பையனொருவனுக்கு மணம் செய்வித்து அனுப்பி வைக்கிறாள் முத்து.

***

பாசம் என்கிற வலிய ஆயுதத்தை ஏந்தி சாதியைக் காப்பாற்றும் படையாக ஒவ்வொரு குடும்பமும் ஓயாது விழிப்புடன் இயங்குகிறது. பாசம் பலனளிக்காதபோது பாசக்கயிற்றை வீசி கழுத்தை நெறிக்கவும் அது தயங்குவதில்லை. சாதித் தூய்மையைக் காப்பாற்றும் பொறுப்பு பெண்ணுடையதாக்கப்பட்டுள்ளது. பிறசாதியினரிடமிருந்து தன்னைத்தானே விலக்கி வைத்துக்கொள்வதோடு, தன்வயிற்றுப் பிள்ளைகளும் விலகி நிற்குமாறு வளர்க்கும் பொறுப்பும் பெண்ணுக்குரியதாகிறது. அதற்காகவே பிறசாதி ஆண்களிடம்   பழகுவதிலிருந்து அவர்கள் வெகுவாக  தடுக்கப்படுகின்றனர். ஒருவேளை பழக நேரிட்டாலும் அதை வெறும் பழக்கமாக நிறுத்திக் கொள்வதற்கான எல்லையை உணர்த்தியே பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். இந்த எல்லையை மீறாது இருப்பவர்களே நல்ல வளர்ப்பெனவும் அவர்களது குடும்பமே மானமுள்ள குடும்பமெனவும் கருதப்படுகிறது.

மிக அரிதாக இந்த சாதி எல்லையை மீறி பிறசாதி ஆணுடன் காதல் வயப்படுகையில் தங்களது சாதி மற்றும் குடும்பத்தின் கௌரவத்திற்கு பங்கம் ஏற்பட்டுவிட்டதாக கருதிக் கொள்கின்ற குடும்பமும் சாதியும் அவளை கொன்றொழிக்கின்றன. நாகரீக சமூகத்தின் மாண்புகளுக்கும் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் பெண்ணுக்குள்ள தன்னுரிமைக்கும் அவளது உயிர் வாழும் உரிமைக்கும் எதிரான இந்தப் படுகொலையைக் கண்டு மனம் பதைக்கும் ஒரு எழுத்தாளர் தெரிவிக்கும் கண்டனமாக இந்த நாவலைச் சுட்டமுடியும். நெடுங்காலமாகவே தாயை தகப்பனை சகோதரர்களை உற்றார் உறவினரை கொலைகாரர்களாக மாற்றிவிடுகிற குற்றத்தை செய்துவருகிறது சாதியம். மனதுக்குப் பிடித்தவரையே மணம் முடித்து வாழ்வதற்காக குடும்பத்திலிருந்து அதாவது சாதியை உதறித் தள்ளிவிட்டு வெளியேறிப் போகிறவர்களையும் தேடிப் போய் கொன்றொழிக்கிற சாதியின் வன்மத்தை கதைக்குள் வைத்தே சொல்ல முடிந்திருக்கிறது இரவீந்திரபாரதியால்.

***
 சமூகத்தின் விளிம்போரத்திற்கு தள்ளப்பட்டுள்ள சலவைத் தொழிலாளர்கள், சாதியம் தம்மீது சுமத்தியுள்ள இழிவுகளிலிருந்து விடுபட்டு சுயமரியாதையை மீட்டெடுத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் எத்தனங்கள், அவற்றுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இயங்கும் ஆதிக்கச்சாதியினரின் உளவியல், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டவடிவமாக உருப்பெறும் மதமாற்றம், மதம் மாறினாலும் சாதியையோ தொழிலையோ மாற்றிக்கொள்ள முடியாத அவலம், ஊர்விட்டு பெருநகரமொன்றுக்கு ஓடிவந்துவிட்ட காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிற மூதாட்டியின் நல்லுள்ளம், இயல்பான அவளது மனிதாயச் சுபாவத்தையும்கூட குறுக்கீடு செய்கிற சாதியம் - என்று 1970களில் நடந்ததாக கூறப்படும் இக்கதை இன்றைய பாடுகளையே பெரிதும் பேசுகிறது. ஆகவே, கடந்த காலத்தின் கழிவுகளை தற்காலத்திலும் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கும் பலரை இக்கதை அடையாளம் காட்டுகிறது. உங்களது கண்களுக்கும் சிலர் தெரியக்கூடும்.

ததும்பும் தோழமையோடு
ஆதவன் தீட்சண்யா
15.12.15, ஒசூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக