அழுவதற்கு நேரமற்றவன் - ஆதவன் தீட்சண்யா

தினந்தோறும் இழவு விழுவதாயிருக்கிறது
என் வீடு

கண்ணீரில் ஊறவைத்து உப்பேற்றி
ஒன்றை புதைத்து முடிப்பதற்குள்
நாலாப்பக்கமுமிருந்து
வந்து விழுகின்ற அடுத்தடுத்தப் பிணங்களை
என்ன செய்வதென்றறியாது விக்கித்து
அப்படியப்படியே விட்டுவிட்டதில்
இண்டுஇடுக்கெல்லாம் நிறைந்து
பிணக்கிடங்காகியிருக்கிறது என்வீடு

அப்போதே பிறந்த சிசுவைப்போல
புத்தம்புதிதாய் வந்து விழும் பிணங்களை
பேட்டி காணவும் 
ஆளுயர மாலை சார்த்தி அஞ்சலி செலுத்தவும்    
உண்மையை மீண்டும் மீண்டும் அறியவும்
முன்பின் அறிந்திராத யாரோவெல்லாம்   
முற்றுகையிட்டிருக்கிறார்கள் என் வீட்டை

பிணங்களைத் தாண்டித்தாண்டி போய்
இன்னபிற அலுவல்களைப் பார்த்துவருவதும்
பிணங்களுக்கிடையிலேயே அமர்ந்துண்பதும்
சிலவேளைகளில்
ஏதேனுமொரு பிணத்தை அணைத்துப் படுத்தபடியே
தொலைக்காட்சி விவாதங்களைப் பார்ப்பதுமாகிவிட்டது
மரத்துப்போன எனது அன்றாடம்

நொடிப்பொழுதும் ஓய்வற்று 
இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும்
போர் ஒன்று நிகழ்ந்துவரும் போது
பிணங்களின் வரத்துப் பெருகத்தானே செய்யும் என்று
என்னை நானே ஆற்றுப்படுத்தியவாறு
எல்லாப்பிணங்களுக்கும்
இடத்தை ஒழுங்குசெய்வதிலேயே கழிந்துவிடுகிறது
என்நேரம்

எவ்வாறேனும்
பிணங்கள் இல்லாத நாளொன்று வருமானால்
இதுவரை செத்தவர்களுக்கென
நெஞ்சே வெடித்துச்சிதறும் படியாய்
கதறியழக் காத்திருக்கிறது எனது துக்கம்
பெருகியோடும் என் கண்ணீரில்
உனக்கான துளிகளை கண்டுகொள்வாய்தானே ரோஹித்...

- ஆதவன் தீட்சண்யா, 30.01.2016
4 கருத்துகள்:

 1. Rohit opened the pondora box. All reservation to the underprivileged only in the law book. Nothing implemented. They don't know how much their quota filled and how many leftover. Rulers sold the job vacancies for money. Intellectuals like Rohit are dieing in various establishments under misterious circumstance.

  பதிலளிநீக்கு
 2. மனதின் வலிகள்...கண்ணீரின் வழியே..
  அற்புதம் தோழர்!

  பதிலளிநீக்கு
 3. என் கண்ணீரில் கவிதைகள் நிரம்புகின்றன,,,
  அழுது விடியவில்லை தோழர்,

  பதிலளிநீக்கு
 4. அழுது கொண்டே இறப்பதற்கு ஒரு இனமா? அதுவும் மக்கள் தொகையில் நாலில் ஒருவராய்ப்பிறந்தவருக்கே இதுவென்றால் அடுக்குமா/

  பதிலளிநீக்கு