சனி, மார்ச் 19

நாய்தன் மற்றும் மனிநாய் - ஆதவன் தீட்சண்யா

நந்தஜோதி பீம்தாஸின்
"மீசை என்பது வெறும் மயிர்" 
நாவலிலிருந்து...


நாடு என்பதையே உணர்ந்திராதவர்கள் அதற்கென ஓர்  எல்லையை உருவகித்துக் கொள்வது சாத்தியமில்லை. தனி மனிதரோ ஒரு சமூகமோ எதிரியென யாரையும்  அடையாளப்படுத்திக் கொள்ளாத வரையிலும் எல்லை என்பதும் தேவைப்படுவதில்லை. இன்னமும் பெயரிடப்படாத நாட்டவர், எதிரியையும் எல்லையையும் இன்னும் உருவாக்கிக் கொண்டிராத போதிலும் என்றாவதொரு நாள் கடல் முனியும், வனபூதமும் பறந்து வந்து  தாங்கள் வாழும் நிலப்பரப்பை விழுங்கிவிடக்கூடும் என்கிற தீராத அச்சத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் எல்லை என்பதறியாமலேயே கடலுக்கும் வனத்துக்கும் இடைப்பட்ட தமது வாழிடத்தைக் காவல் செய்துவருகின்றனர்.

இன்னமும் பெயரிடப்படாத இந்த நாட்டின் எல்லையைக் கண்காணிக்க இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலடுக்கு மனிதத்தலையுடன் கூடிய நாய்களிடமும்  இரண்டாம் அடுக்கு நாயின் தலைகொண்ட மனிதர்களிடமும் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த வினோத உருவங்கள், எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி ராணுவத்தினர் செயற்கையாக போட்டுக்கொள்ளும் மாறுவேடத்தைப் போன்றதல்ல, இயற்கையானது. மனித உடலும் மிருகத்தின் தலையும், மிருகத்தின் தலையும் மனித உடலும் கொண்ட ரிஷிகளும் புனிதர்களும் கதாபாத்திரங்களாக இடம் பெறும் புராண இதிகாச தொன்மக் கதைகள் பல உண்டு. கடற்கன்னி என்பதேகூட அப்படியான உலகளாவிய புராதன உருவகம் தான். இந்தியாவின் வடபகுதியில் நான் சுற்றித் திரிந்த காலத்தில் அங்கு மனித உடலும் யானை முகமும் கொண்ட விநாயகர் என்கிற கடவுளின் சிலைகளைக் கண்டிருக்கிறேன். கலவையான உருவ அமைப்புளைக் கொண்ட கடவுளின் அவதாரங்கள் பற்றின  கதைகள்  எல்லா மதங்களிலும் இருப்பதை அநேகரும்  கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஆனால் இந்த நாட்டின் காவல்பணியில் ஈடுபட்டுள்ள மனிதத்தலை நாய்களும் நாய்த்தலை மனிதர்களும் அப்படியான தொன்மத் தொடர்ச்சியில் உருவாகியிருக்கவில்லை. வெவ்வேறு ஜீவராசிகளின் மரபணுக்களை இணைத்துப் புதிய ஒட்டுரக உயிரிகளை உருவாக்கும் ஆராய்ச்சி இங்கிலாந்திலேயே இன்னமும் வெற்றி பெறாத நிலையில் இங்கு இவ்வுருவங்கள் அவ்வகையாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை. நாயின் தலையும் மனித உடலும் கொண்டு வாழ்ந்த கிறிஸ்டோபர் என்கிற புனிதரின் Christopher Cynocephalus குறித்து நடைபெற்றுவரும் ஆய்வுகளில் இவர்களைப் பற்றிய குறிப்பு ஏதும் இடம்பெறாதிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

நாய்த்தலை கொண்ட மனிதர்களின் முன்னோர் மிகவும் மூர்க்க மேறியவர்கள் எனச் சொல்லப்படுகிறது. இந்த மூர்க்கம் பிறவிக் குணமல்ல, வலிந்தேற்றிக் கொண்டதுதான் என்று என்னிடம் சொன்னவர்களுமுண்டு. தமது அக்கம்பக்கத்தவரை மிரட்டி வைக்கும் பொருட்டு அவர்கள்மீது காரணமற்ற வன்மத்துடன் ஆயுதங்களைப் பிரயோகிக்கும் இவர்கள் வளரித் தடி, சில்லாக்கோல், வீச்சரிவாள், வேல்கம்பு போன்ற விசேஷமான ஆயுதங்களைக் கையாள்வதில் லாவகம் கூடியவர்களாய் இருந்திருக்கிறார்கள். தங்களுக்கு இணையாக உலகத்தில் ஒருவருமில்லை என்கிற மாயை இவர்களை வெகுவாக பீடித்திருந்திருக்கிறது. தாங்கள் நம்பிய அந்த மாயையினை மற்றவர்களும் நம்பவேண்டும் என்று விரும்பிய இவர்கள், தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதற்காக மற்றவர்கள் மீது விதித்த கட்டுப்பாடுகளும் விலக்குகளும் தண்டனைகளும் அதுவரை உலகம் காணாதவை. தங்களது இனத்தின் தூய்மையைக் காப்பாற்றிக்கொள்ள இப்படியான கட்டுத்திட்டங்கள் அவசியம் என்று நம்பத் தொடங்கிய இவர்கள், ஒருகட்டத்தில் இனத்தூய்மை கோட்பாட்டைத் தங்களது நாய்களுக்கும் நீட்டித்ததால் ஏற்பட்ட வினை நாய்த்தலை கொண்ட மனிதர்களாக இவர்கள் மாறுவதில் போய் முடிந்தது.

மதகுபோல் நெடிதுயர்ந்து மறிக்கும் மதிலுக்குள் கனத்தச் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கும் தங்களது பெட்டை நாய்கள் கட்டுக்காவலையும் மீறி  பிறர் வளர்க்கும் ஆண்நாய்களுடன் கூடி இனத்தூய்மையைப் பாழடித்துக்கொள்வதோடு அவற்றை வளர்க்கும் தமது குலப்பெருமைக்கும் பங்கம் விளைவித்துவிடுவதாகக் குமைந்த இவர்கள் தம்மைத்தவிர வேறு யாரும் ஆண்நாய் வளர்க்கக்கூடாது என்கிற கட்டளையைப் பிறப்பிக்கும் காலமொன் றும் வந்திருக்கிறது. ஏற்கனவே ஆண்நாய்களை வளர்த்துவந்த மற்றவர்கள் தாமாகவே முன்வந்து அவற்றைப் பாஷாணம் வைத்துக் கொன்றுவிட வேண்டும் என்பது இக்கட்டளையின் பிரதான அம்சம். அப்படி நாய்களைக் கொல்லாதவர்கள் ‘வேறு கால் வேறு கை வாங்கி’ கொல்லப்படுவார்கள் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை எதிர்பார்த்த பலனைத் தந்திருக்கிறது.

எச்சரிக்கையை எதிர்த்தோரது குடியிருப்புகள்மீது தமது குலச் சின்னமான தீச்சட்டிகளை வீசி கொளுத்தியழித்து  கொக்கரித்திருக்கிறார்கள். மறைத்து வைக்கப்பட்ட அல்லது தப்பியோடிய மற்ற வர்களது ஆண்நாய்களை இழுத்துப்போட்டு தலைவேறு முண்டம் வேறாக வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். கழுத்தை நெரித்தும் காதிலே விஷம் ஊற்றியும் கண்களைத் தோண்டியும் கபாலத்தைப் பிளந்தும் ஆண்குறியை அறுத்தும் இவர்கள் நாய்களைக் கொன்றி ருந்த கொடூரத்தைப் பார்க்கும் எவருக்கும் ஆண்நாய் வளர்க்கும் ஆசை ஏழேழு ஜென்மத்துக்கும் எழவே எழாது. உண்மையில் இவர்கள் உருவாக்க நினைத்ததும் எதிர்பார்த்ததும் இந்த அச்சத்தைத்தான். (மற்றவர்களுக்கொரு பாடமாக இருக்கட்டும் என்று சாலையோர விளக்குக் கம்பங்களின் உச்சியில் சுருக்கிட்டுத் தொங்கவிடப்பட்ட ஆண்நாய்களின் சடலங்களிலிருந்து வீசத் தொடங்கிய துர்நாற்றம் இன்றளவுக்கும் இந்த நாட்டின் காற்றில் கலந்து சுவாசத்தையே திணறடித்துக் கொண்டிருக்கிறது).

கட்டளை பிறப்பிக்கப்பட்ட ஏழாம் நாளுக்குள் மற்றவர்களின் ஆண்நாய்கள் ஒன்றைக்கூட விட்டுவைக்காமல் அழித்தொழித்த வெற்றிப் பெருமிதத்தோடு இவர்கள் தங்களுக்கான ‘ஆண் நாய்களின் பண்ணை’ ஒன்றை தமது குடியிருப்புப்பகுதியில் தொடங்கினார்கள். தலைக்கட்டுக்கு இவ்வளவு என வரி வசூலித்து பொதுப்பணத்திலிருந்து உருவாக்கப்பட்ட இந்தப் பண்ணையில் வளரும் ஆண்நாய்களை ஒவ்வொரு வீட்டின் தேவைக்குத் தக்கபடி அனுப்பிவைப்பதே நோக்கம். ஆனால் என்ன காரணத்தினாலோ பண்ணையிலிருந்த ஆண்நாய்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து சாகத் தொடங்கியிருக்கின்றன. விரைவிலேயே அந்தப் பண்ணையில் ஒரு ஆண்நாய்கூட மிஞ்சாமல் அத்தனையும் செத்தழிந்துப் போயினவாம். 

 இயல்பான பாலுணர்ச்சியால் தூண்டப்பெற்ற இவர்களது வீட்டுப் பெட்டைநாய்கள் ஆண்நாய்களைக் காணாமல் நிலைகுலையத் தொடங்குகின்றன. இதுகாறும் தமது இணைகள் வந்து போகும் வழிதோறும் கண்வைத்துக் காத்திருந்த அவற்றுக்கு ஏமாற் றமே மிஞ்சியது. அன்னந்தண்ணி ஆகாரமெல்லாம் ஆலகால விஷம் போல கசந்தது. பாலும் இறங்கவில்லை, படுத்தாலும் உறக்க மில்லை. கழுத்திலிருந்த வாரும் வளையமும் கழன்று விழுமளவுக்கு பசலை முற்றிப்போன நிலை. வெளியிலும் போக முடியாதபடி கட்டுக்காவல். தப்பித்தவறி வெளியே போனாலும் கழுத்திலே வார் மாட்டி கைப்பிடிக்குள் நிறுத்திக் கொண்டார்கள். அங்கே போகாதே இங்கே பார்க்காதே என்கிற அதட்டலைக் கேட்டாலே எட்டிப் பாய்ந்து இடுப்புக்குக் கீழே கொத்தாகக் கடித்துக் குதறி விடலாமா என்று நாய்களுக்கு உச்சத்தில் ஏறியது வெறி. 

பெட்டை நாய்களின் பெருமூச்சும் ஏக்கமும் விரகமும் கலந்த குரைப்பொலி இரவுபகலென எந்நேரமும் அச்சமூட்டக்கூடியதாக அங்கே கேட்டுக்கொண்டேயிருக்குமாம். அந்தக் குரைப்பொலியால் திடுக்கிட்டு கர்ப்பம் கலங்கிப்போன பெண்கள் காலோடு பெய்யும் ரத்தத்தை வெறியோடு நக்கிச்சுவைக்கும் அந்நாய்கள் கண்ணில் படுவோரையெல்லாம் கடிக்கத் தொடங்கினவாம். தணிக்கப்படாத உணர்ச்சி உக்கிரமும் ஓங்காரமுமான வெறியாக மாறிய கட்டத்தில் அந்த நாய்கள் தூங்கும் ஆண்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அப்போதிருந்து நாய்கள் ஈனும் குட்டிகள் மனிதத் தலை கொண்டவையாகின்றன. நாய்களுடன் கூடிய ஆண்கள் பிறகு பெண்களோடு கூடினால் குழந்தைகள் நாயின் தலையுடன் பிறந்தன.

இந்த மாற்றத்தின் பின்னேயிருக்கும் மர்மங்களறியாது மருண்டு போன இவர்கள் இது ஏதோ தெய்வகுத்தத்தால் நிகழும் தீங்கென அஞ்சி துடியான குலசாமிகளுக்குக் கொடை நடத்தி கும்பிடிக்கைச் செய்து நேர்ச்சைகளை நிறைவேற்றியும் பலனில்லை. மனிதர்கள் மனிதவுருவிலேயும் நாய்கள் நாயுருவிலேயும் இனி பிறக்கவே போவதில்லை என்பதை மெதுவே உணர்ந்தபிறகு, வேறுவழியின்றி மாறிய உருவமே தமது மகத்துவமென நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். மூலவுயிரிகளான மனிதர்களும் நாய்களும் காலப்போக்கில் முற்றாக அழிந்து போய்விட, இந்தப் புதிய வகை நாய்களும் (நாய்தன்) புதிய வகை மனிதர்களும் (மனிநாய்) பிறப்பது நீடிக்கிறது.

கொண்டான் கொடுத்தான் உறவு இல்லையென்றாலும் ‘நாயாதி உறவின்’ அடிப்படையில் இவ்விரு குலமும் ஒருகுலமாகச் சேர்ந்து வாழத் தொடங்கி தலைமுறைகள் பல கடந்தோடிவிட்டன. காவற்பண்பும் வேட்டைக்குணமும் மூர்க்கமும் ஒன்றுக்குள் ஒன்றாக ஊறிக்கலந்து உரமேறிப்போன நாய்மனிக்குலமும் மனிநாய்க் குலமும் நாட்டின் காவல் பணியில் ஆதிக்கம் செலுத்தும் நிலை தவிர்க்கமுடியாமல் இப்படியாகத்தான் உருவாகியிருக்கிறது. இவர்களோவெனில், காவல் காப்பதற்கென்றே கடவுள் தம்மை இவ்வாறு பிறப்பித்திருப்பதாக என்னிடம் பெருமிதம் பொங்கச் சொன்னார்கள். பெருமிதம் எப்போதும் கற்பிதம்தானே?


வெள்ளி, மார்ச் 18

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை: நமக்கல்ல யுவராஜிக்கு - ஆதவன் தீட்சண்யா


" ஒரு பட்டியலினத்தவர், பட்டியலினம் இல்லாத ஏதோ ஒரு சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையிலோ, காதலிக்கும் நிலையிலோ, சந்தேக மரணமோ, கொலையோ நடந்துவிட்டால் அதற்கு சாதி ஆணவக் கொலை என பெயர் சூட்டுவது ஏன்? இவ்வாறு பேசுபவர்கள், அவர்களுக்கு ஆதரவு தருபவர்கள் என அனைவரும் கூறும் ஒரே காரணம், அவன் பட்டியலினத்தை சேர்ந்த சமூகம்.
இப்படிப்பட்ட காரணங்களுக்காக ஒரு மரணம் நிகழ்த்தப்படுமானால் அதற்கு சமூகம் காரணம் இல்லை. பெண்ணை கவர்ந்து செல்பவன் பெண் வீட்டாரை நடைபிணமாக்குகிறான். அதன் வெளிப்பாடு தான் இத்தகைய மரணங்கள். இதனை இனியும் வேடிக்கை பார்க்காமல் காவல் துறை அடக்க வேண்டும் "
- என்று உடுமலைப்பேட்டையில் சங்கர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி இப்படியொரு அறிக்கையை விடுத்திருப்பவர், பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யுவராஜ்.  தானே கைப்பட எழுதி கையொப்பமிட்ட 8 பக்க அறிக்கையை நேற்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட போது செய்தியாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.  யுவராஜ் கொடுத்த அறிக்கையை வெளியிட்டுள்ள ஊடகங்கள்,  இது தொடர்பாக எழுப்ப மறந்துவிட்ட கேள்விகள் இவை:

1. கைதிகளை சந்தித்துப் பேச சம்பந்தப்பட்டவரது உறவினர்களைகூட அனுமதிக்காமல் விரட்டியடிக்கும் காவல்துறையினர், யுவராஜிக்கு மட்டும் செய்தியாளர்களைச் சந்திக்க எவ்வாறு அனுமதித்தனர்? இது சட்டத்திற்குட்பட்டு நடந்ததா? இல்லையெனில் அதற்கு உடந்தையானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

2. கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒருவர் சிறைக்கு வெளியேயான நிகழ்வுகள் குறித்து அறிக்கை விடுவதை சட்டமும் சிறைவிதிகளும் அனுமதிக்கின்றனவா?

3. கோகுல்ராஜ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் யுவராஜ், அதேபோன்று நிகழ்த்தப்பட்ட சங்கர் கொலையை ஆதரித்தும் அவ்வாறான கொலைகளைத் தூண்டியும்  அறிக்கை விடுவது குறித்து சட்டத்தின் பார்வை என்ன?

4. கைதியொருவரின் வரம்புமீறிய இத்தகைய சமூகவிரோத நடவடிக்கையை நீதித்துறை தாமாக முன்வந்து விசாரிக்குமா? அவர் அறிக்கை விட்டது சட்ட நடைமுறைகளுக்கு பொருந்தாது எனில் அதன்பேரிலான நடவடிக்கை என்ன?

5. கைதாவதற்கு முன்பு அறிக்கைகள் வழியாக சவடால் அடித்துக்கொண்டிருந்த யுவராஜ், சிறைக்குள்ளிருந்தும் அதே வேலையை எவ்வித தடங்கலுமின்றி செய்துகொண்டிருக்க முடிகிறது என்றால்  சிறைத்துறையினராலோ நீதித்துறையினாலோ கட்டுப்படுத்த முடியாத செல்வாக்கோடு அவர் இருப்பதாக  கருதலாமா? 


செவ்வாய், மார்ச் 8

குரங்கைப்போலவே விகடனும் குட்டியைவிட்டு ஆழம் பார்க்கிறதா? - ஆதவன் தீட்சண்யா

"கண்ஹையா குமாரும் கம்யூனிசமும் போகும் பாதை சரிதானா? என்கிற தலைப்பிலான கட்டுரை ஒன்றை விகடன்.காம் இன்று வெளியிட்டிருந்தது http://www.vikatan.com/news/india/60105-why-kanhaiya-is-not-youth-icon.art கட்டுரையாளரின் பெயரில்லை. வழக்கமாக கட்டுரைக்கு கீழே பின்னூட்டங்களைப் பதிவதற்கென விடப்படும் இடமும் இல்லை. "இது பற்றிய கருத்துகளை இன்பாக்ஸில் பதியவும்" என்று புதுவகையான அறிவிப்பு. 

கட்டுரையின் முதலெழுத்து தொடங்கி முற்றுப்புள்ளிவரை இடதுசாரிகள் மீது வசவும் அவதூறும் மலிந்து கிடந்தன. ஜிகினா வேலை காட்டி அரசதிகாரத்தை கைப்பற்றியுள்ள தங்களால் நாட்டில் அன்றாடம் நிகழ்ந்து வரும் அட்டூழியங்களை இந்த கன்னைய குமார் அம்பலப்படுத்திவிட்டானே என்கிற ஆத்திரம் காவிக்கும்பலுக்கு வருவதில் அர்த்தமிருக்கிறது, விகடனுக்கு ஏன் வருகிறது?  கன்னைய குமாரின் நேர்காணலையும் வெளியிடுவது, அவரை அவதூறு செய்கிற அநாமதேயங்களுக்கும் இடமளிப்பது என்கிற இரட்டை நிலைப்பாட்டின் பின்னேயுள்ள தந்திரம் எதன் பொருட்டானது? இந்தக் கட்டுரையை எழுதியது யார்? கட்டுரையின் உள்ளடக்கத்தோடு ஒருமை கொண்டுதான் விகடன்.காம்  வெளியிட்டதா? வேறு யாரையும் திருப்திபடுத்தி ஆதாயம் தேடும் இழிமுயற்சியின் ஒருபகுதியாக இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதா? இப்படி யார், யாரை என்ன அவதூறு செய்து எழுதிக் கொடுத்தாலும் இதேபோல விகடன் வெளியிடுமா? என்று இதைப் படித்தவர்களிடையே  பற்பல கேள்விகள். ஆனால் இந்தக் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லமால், எதுவே நடவாதது போல இப்போது விகடன்.காம் அந்தக் கட்டுரையை நீக்கியுள்ளது. 

தனது இணையத்தில் இடம் பெறும் தகுதி அந்தக் கட்டுரைக்கு இல்லையென்று கருதியே அதை நீக்கியுள்ளது என்றால் அதுபற்றிய குறிப்பையும் வருத்தத்தையும் விகடன்.காம் வெளியிடவேண்டும். இல்லையெனில், வெளியிடுவோம், எதிர்ப்பு வந்தால் எடுத்துவிடலாம், அவதூறு போய்ச்சேர்ந்த மட்டிலும் லாபம் என்பதே விகடனின் தந்திரமெனனக் கருதப்படும. 

சனி, மார்ச் 5

தணிக்கை - ஆதவன் தீட்சண்யா

‘மனதுக்குப் பட்டதை எழுதுவேன்’ எனத் தொடங்கியது
எழுத்தாளருடைய மிக நீண்ட வாக்குமூலம்

இடநெருக்கடியின் காரணத்தால்
வெட்டிக்குறைக்கப்பட்ட அதன் இரண்டாம் வரி:
‘யார் மனசும் புண்படும்படியாய் எழுதமாட்டேன்’

வாக்கிய நீளத்தையும் சுருக்கி
வாக்குமூலம் இவ்வாறாக முடித்துவைக்கப்பட்டது
‘எழுதமாட்டேன்’

பிறகென்ன, போடுங்கள்
சுபம் / சவம்.

நன்றி: புதியவிதி 28.2.16

வில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா

எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர்களில் வில்லியம் ப்ளேக்கும் (William Blake)  ஒருவர். 18ஆம் நூற்றாண்டு. அவர் ஓவியர், டிசைனர், அச்சாளர். அ...