சுதந்திரப் போராட்டத்தின் முதலாமாண்டு
நிறைவுமலரில் வெளியாகியிருந்த இக்கட்டுரை காலத்தின் தேவை கருதி தேடிப்பிடித்து இங்கு
மறுபிரசுரம் செய்யப்படுகிறது. மேற்சொன்ன மலரின் பிரதியை நுண்ணொளி மின்னகச் சுருளாக
இவ்வளவுகாலமும் பாதுகாத்து வருகின்றமைக்காகவும் அதிலிருந்து இக்கட்டுரையை நகலெடுத்துக்கொள்ள
அனுமதித்தமைக்காகவும் ‘மூச்சு’- தனிநபர் நூலகப் பொறுப்பாளர்களுக்கு எமது நன்றியை இவ்விடத்தில்
உரித்தாக்குகிறோம்.
நாசூக்கு, இங்கிதம், மென்மொழி போன்ற
கற்பிதங்களுக்கு அடிமையாகிப்போன நமது இளையதலைமுறையினருக்கு இக்கட்டுரையின் தலைப்பேகூட
அருவருப்பையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தக்கூடும். அவர்கள் அன்றாட வாழ்வினை நடத்திப்போவதில்
யாதொரு இடர்ப்பாட்டையும் தங்குதடையையும் எதிர்கொள்வதில்லை. அவர்களுக்கு எல்லாமே இயல்பாக
கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே இப்போதிருக்கும் நிலையே என்றென்றும் இருந்து வருவதாக
நினைத்துக்கொள்வதோடு இந்த நிலையே இனி எந்நாளும் நீடிக்குமென்பதும் அவர்களது நம்பிக்கையாக
இருக்கிறது. இதில் அவர்களது பிழையென்று ஏதுமில்லை. தாங்கள் கடந்துவந்தப் பாதையையும்
அதன் பாடுகளையும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு சரியாக பயிற்றுவிக்காத எந்தவொரு சமூகத்திலும்
நேரக்கூடியதுதான் இங்கும் நடக்கிறது. இவ்விசயத்தில் நமக்கு முன்னால் கெடத்தக்க உதாரணங்களாக
இருக்கும் சோவியத் யூனியனையும் இந்தியாவையும் பார்த்து நாம் எதையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை
என்கிற வருத்தத்தின் விளைவே இக்கட்டுரை.
இக்கட்டுரையை எழுதியவர் பெயர் சுதந்திரன்
என்பதன்றி அவர் குறித்து நமக்கு யாதொரு தகவலும் கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு தங்கம்
என்று பெயர் சூட்டி ஏக்கத்தை தீர்த்துக்கொள்கிற ஏழைகளைப்போல, பெயரளவிலேனும் தாங்கள்
அடிமைகளல்ல என்று காட்டிக்கொள்வதற்காகவே அந்தக்காலத்தில் சுதந்திரன் என்ற பெயரில் அநேகர்
உலவியதால் இவர் எந்த சுதந்திரன் என அடையாளம் காண்பதில் இன்றுவரை சிக்கலே நீடிக்கிறது.
அரசாங்கத்தை விமர்சித்து எழுதுகிறவர்களின் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவது அல்லது தேசதுரோக
குற்றம் சாட்டி சிறையில் அடைப்பது என்கிற அப்போதைய வழக்கம் இவர் விசயத்திலும் கடைபிடிக்கப்பட்டதா
என்பது எவரும் அறியாத ரகசியம் தான். ஆனால் இக்கட்டுரை வெளியாகி மூன்று நாட்களுக்குப்
பிறகு என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட முதல் 194 பேரில் ஒருவரான சுதந்திரன்
என்பவர் இவர்தான் என்கிற சந்தேகமும் நிவர்த்திக்கப் படாமலே இருக்கிறது. ஒருவேளை அந்த
சுதந்திரன் இவரில்லை என்றாலும் தினத்துக்கு ஏழெட்டு முறையேனும் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட
ஏதாவதொரு என்கவுண்டரில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற யூகத்தையும் மறுப்பதற்கில்லை.
நடுக்கடலில் அமைக்கப்பட்டிருந்த மிதவைச்சிறைகளிலும்
தீவிடைச்சிறைகளிலும் விசாரணையின்றி நெடுங்காலம் அடைத்து வைத்திருந்து பின்னர் பாலைவனத்திலோ
சதுப்புநிலக்காடுகளிலோ கொண்டுபோய் இறக்கிவிடப்பட்ட 32லட்சம் பேரில் இந்த சுதந்திரனும்
இருந்தாரா என்பதை உறுதிசெய்து கொள்ளவும் வழியில்லை. ஸ்ரீலங்கா பாணியில், பிணம் நொதித்து
உப்பி மேலே வராதபடியிருக்க நுரையீரலைத் துளைத்து சேதப்படுத்தி கடலுக்குள் வீசப்பட்ட
1லட்சத்து 73 ஆயிரத்து 49 பேரில் இவரும் ஒருவராக இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத
கருத்தொன்றும் வெகுகாலம் நிலைத்திருந்தது. இத்தனை வழிகளிலும் சாகாமல் பிழைத்திருந்தாலும்கூட,
கக்கா நாட்டில் சமாதானத்தை நிறுவப்போவதாக புளுகிக்கொண்டு அவ்வப்போது அமெரிக்காவும்
ஐ.நா. அமைதிப்படையும் நடத்திவந்த ஆளில்லா விமானத்தாக்குதலிலிருந்து இவரால் தப்பித்திருக்க
முடியாது என்கிற வரலாற்றாளர் கூற்றையும் மறுப்பதற்கில்லை. இயல்பான மரணம் என்பதும்கூட
கக்காநாட்டு குடிமக்களது வாழ்வில் பெருங்கனவாகிப் போனதாக முன்பொருமுறை அவர் ஆதங்கத்தோடு
எழுதியிருந்த வரிகள் அவருக்கே பொருந்திப்போனது வரலாற்றின் துயரம். எப்படியாயினும்,
சுதந்திரன் என்ற பெயருக்காகவே அவர் நினைக்கப்படுவதைப் போல, சுதந்திரன் என்ற பெயருக்காகவே
அவர் கொல்லவும்பட்டார் என்கிற உண்மையினை மட்டும் நாம் என்றென்றும் நினைவில் வைப்போம்.
இவர் குறித்த மேலதிக விபரம் வாசகர் யாருக்கேனும்
தெரிந்திருப்பின் disappearedsoul@fmail.kn என்ற மின்னஞ்சல் மூலம்
எமக்கு எழுதி உதவவும்.
மூத்திரத்தை அடக்கினாலும்
ஆத்திரத்தை அடக்க முடியாது
- சுதந்திரன்
லிபரல்பாளையத்தை முன்னுதாரணமாக கொண்டு,
அது எதைச் செய்தாலும் அப்படியே ஈயடிச்சான் காப்பிபோல அச்சொட்டாக நகலெடுப்பதில் ஆர்வம்
கொண்டியங்கியது நமது கக்கா நாடு. இந்த அடிமைப்புத்தி எத்தகைய ஆபத்துகளுக்கு இட்டுச்
சென்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் நாம் லிபரல்பாளையத்துக்கு நேர்ந்த
கதியை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
தோட்டத்தில் பாதி கிணறு என்றால் பண்ணையம்
பாழ். நாட்டில் பாதி ரோடு என்றால்? அந்த நாடும் விளங்காது என்பதற்கு லிபரல் பாளையம்
தான் மிகக் கேடான உதாரணம். இப்படிச் சொல்வதனால் இந்த சுதந்திரன் ரோடே வேண்டாம் என்கிறான்
என்று யாரும் நினைத்துவிடக்கூடாது. மனிதர்கள் என்றால் நாலு இடங்களுக்கு போய்வரத்தான்
வேண்டும். போகவர இருந்தால் தான் மனிதர்கள், போட்ட இடத்தில் கிடந்தால் பிணம் அல்லது
சாணி. மக்கள் நடமாட, மாடுகன்னு புழங்க, வண்டி
வாகனம் போய்வர ரோடு தேவை என்பதெல்லாம் சரிதான். ஆனால் மக்களுக்காக ரோடு என்பது ரோடுக்காக
மக்கள் என்பதாக மாறி விடக்கூடாது. குறுக்கும் நெடுக்குமாக நாட்டையே கிழித்து இத்தனை
ரோடுகள் இவ்வளவு பெரிதுபெரிதாக தேவையா என்கிற கேள்வியை லிபரல்பாளையத்தில் யாரும் எழுப்பவில்லை.
அதற்காக கக்கா நாட்டு மக்களும் மொன்னைகளாக- முழுங்காததை முழுங்கி வாய்திறக்க முடியாதவர்களாக
கிடக்கவேண்டுமா? பக்கத்து நாட்டோடு நல்லிணக்கமாக இருப்பது வேறு, அங்கு செய்வதையெல்லாம்
இங்கும் செய்து பார்ப்பது வேறு.
அதுவுமில்லாமல் லிபரல்பாளையம் அப்படியொன்றும்
முன்னுதாரணமாக கொள்ளத்தக்க அளவுக்கு மதிப்புமிக்க நாடுமல்ல. இன்னமும் அடிப்படைத் தேவைகளையும்
வசதிகளையும் பாகுபடுத்தி அறிந்துகொள்வதற்குரிய அறிவையும் கூட பெற்றிருக்காத அந்நாட்டை
பின்பற்றப் போய்தான் கக்கா நாட்டுக்காரர்களாகிய நாமும் கழிப்பறை ‘வசதி’, குடிநீர்
‘வசதி’, சுடுகாட்டு ‘வசதி’ என்றெல்லாம் வெட்கமற்று பேசுகிறவர்களானோம். குடிதண்ணீரைக்கூட
இன்னமும் முழு சனத்துக்கும் கொடுக்க வக்கில்லாத அந்த நாடுதான் நமக்கு முன்னுதாரணம்
என்றால் அதைவிட வெட்கக்கேடு வேறென்ன இருக்கமுடியும்?
முதலில் அகலஅகலமாக ரோடு போட்டால்தான்
உங்கள் நாடு விருத்தியாகும் என்று யாரோவொரு பொருளாதார அடியாள் பிராஜக்ட் ஒன்றை தயாரித்து
லிபரல்பாளையத்தை நம்ப வைத்திருந்தான். அக்காலத்தில் சி.ஐ.எ.வினால் உலகெங்கும் பல்வேறு
போலிப்பெயர்களில் களமிறக்கப்பட்டிருந்த பொருளாதார அடியாட்களில் ஒருவனான அவன் ஒரு ரோடு
என்னவெல்லாம் மாயங்களை நிகழ்த்தும் என்பதை சுருக்கமாக எடுத்துரைத்தான். அகண்ட சாலைகளே
உங்களை அகண்ட தேசத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியவை என்று அவன் சொன்னதுமே தனது கனவு
நனவாகப்போவதாக குதித்தது ஆளுங்கட்சி.
ஏற்கனவே இருக்கின்ற சாலைகளை விலத்திக்கொண்டு
புதிய சாலையை அமைப்பது. ஊருக்குள் வராதவகையில் புதிய சாலையின் மருங்கில் புதிய பேருந்து
நிலையத்தைக் கட்டுவது. இவ்வாறு செய்வதன் மூலம் ஊர்- பழைய சாலைகள்- புதிய சாலை- பழைய
பேருந்து நிலையம்- புதிய பேருந்துநிலையம் ஆகியவற்றுக்கு இடையே போக்குவரத்து பெருகும்.
இதற்கான வாகனங்கள் அதிகரிக்கும். இந்த இடைப்பட்ட பகுதியில் புதிதாக கடைகண்ணி, கட்டிடங்கள்,
வீடுகள், லாட்ஜ்கள் உருவாகி ஊர் வளரும். சுற்றுவட்டாரத்தில் நிலமதிப்பு கூடி ரியல்
எஸ்டேட் தொழில் பெருகும். நிலத்தை இழந்து அதற்கு ஈடாகப் பெறுகிற நிவாரணத்தொகையை மக்கள்
சந்தையில் இறக்குவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் - என்றெல்லாம் அவன் தனது திட்டவரைவை
விளக்கினான். தவிரவும் திரும்புகிற பக்கமெல்லாம் இதேமாதிரி வேலை நடந்து கொண்டிருப்பதை
பார்க்கிற சனங்கள், நாட்டில் எப்போதும் வளர்ச்சிப்பணிகள் நடந்தவண்ணமே இருப்பதாக நம்புவார்கள்.
வளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் என உங்களின் செல்வாக்கும் இதனால் உயரும் என்கிற கடைசி விசயத்தை
அவன் சொல்லி முடித்தபோது ஆளுங்கட்சியினர் உற்சாக மிகுதியால் மேசையைத் தட்டி ஆரவாரம்
செய்தனர். இப்படி மேசையைத் தட்டி ஆரவாரம் செய்வதற்காக ‘லாபி’ முறைப்படி பெரும்பாலான
உறுப்பினர்கள் கையூட்டின் மூலம் சரிக்கட்டப்பட்டிருந்தனர். ( இப்படி லாபி செய்வதற்காகவே
சுசாமி, டேரா காடியா என்று அநேகத்தரகர்கள் லிபரல்பாளையத்தை ஆக்கிரமித்திருந்தனர்). ஒப்பந்ததாரரிடமிருந்து ஒரு சதவீதம் கமிஷன் வாங்கினால்கூட
நூறு தலைமுறைக்கு உட்கார்ந்து திங்கலாமே என்று கணக்குப் போட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும்
போர்க்கால வேகத்தில் ஒப்புதல் வழங்கினார்கள்.
சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டர்
அளவுக்கு தேசிய நெடுஞ்சாலையின் நீளத்தை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு தொடங்கப் படும்
இத்திட்டம் படிப்படியாக வேகத்தை அதிகரித்து நாளொன்றுக்கு ஆறு கிலோமீட்டரை புதிதாக இணைக்கும்.
இவ்வளவு பெரிய பிராஜக்டை நிறைவேற்ற நாலுலட்சம் கோடி பணத்துக்கு எங்கே போவது? அந்த அடியாளே
தீர்வு சொன்னான். உங்களுக்கு ஒப்புதல் என்றால் நானே கடனுக்கும் ஏற்பாடு செய்கிறேன்
என்று கூறிய அந்த அடியாள் ஏற்கனவே தயாரித்து
வைத்திருந்த பத்திரங்களை நீட்டி கையொப்பம் கேட்டான். வேளாண் நிலங்களில் சாலையமைக்கக்கூடாது,
வாழும் வீடுகளை இடிக்கக்கூடாது, சாலையமைத்துக் கொடுக்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம்
நழுவக்கூடாது, மக்களின் போக்குவரத்தையும் நடமாட்டத்தையும் தனியார் கட்டுப்பாட்டில்
ஒப்படைக்கக் கூடாது என்று இத்திட்டத்தை எதிர்த்தவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று
அவதூறு செய்து அடக்கும் பொறுப்பை ஊடகங்கள் பார்த்துக்கொண்டன.
இப்படியொரு திட்டத்தை வகுப்பதில் லிபரல்பாளையத்தின்
தொழில் முதலாளிகள் பேரார்வம் காட்டிவந்தனர் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவர்களைப்
பொறுத்தவரை அகண்ட தேசம் என்பது அகண்ட சந்தை. சந்தைக்கு சரக்குகளைப் போலவே சாலைகளும்
பிரதானம். அவர்கள் தமக்கான கச்சாப்பொருட்களை நாலாதிசையிலிருந்தும் வரவழைக்கவும் உற்பத்திப்பொருட்களை
சந்தைகளுக்கு கொண்டு சேர்க்கவும் வேண்டியிருந்தது. இரண்டுக்கும் தேவையான கூலிகளை நாடெங்கிலுமிருந்து
திரட்டிப் பிடித்து வராவிடில் அனைத்தும் பாழ். சில தொழில்களுக்கு மனிதக்கூலிகளே கச்சாப்பொருளாயுமிருந்தனர்.
கோவணாண்டி முதல் கோட்சூட்டாண்டி வரையான இந்தக்கூலிகள் கொடுக்கப்பட்ட வேலையை மாடுகளைப்
போன்றோ மனிதரல்லாத பிற விலங்குகளைப் போலவோ செய்துகொண்டிருந்தால்தான் எல்லாம் சரிவர
இயங்கும். இந்த ஒழுங்கில் ஏதேனும் வில்லங்கம் வருமானால் ராணுவம் மற்றும் போலிஸ் படைகளை
விரைவாக அனுப்பிவைத்தாக வேண்டும். சீரான சாலைகள் இருந்தால்தான் இந்த வேலைகளெல்லாம்
சுளுவாக நடக்கும். அதுவுமில்லாமல் இந்த சாலையமைக்கும் தொழிலில் புழங்கவிருக்கும் பெருந்தொகை
அவர்களை உற்சாகமடைய வைத்திருந்தது.
கனவைக்கூட தனியாக காண்பதற்கான சுயமரியாதையை
இழந்து ஏதேனுமொரு பன்னாட்டுக்கம்பனியோடு சேர்ந்து கூட்டாக காண்பதற்குப் பழகிப் போய்விட்டிருந்த
லிபரல்பாளையம் முதலாளிகள் பாட் (பி.ஓ.டி), பூட் (பி.ஓ.ஓ.டி) திட்டங்கள் படி சாலைகளின்
உரிமையாளர்களாகப் போகும் கனவையும் அவ்வாறே காணத்தொடங்கினர். ஆனால் அது பகற்கனவு என்பதை
அடுத்தடுத்த நிகழ்வுகள் உணர்த்தின. இவ்வளவு பெரிய திட்டமொன்றை செய்து முடிப்பதற்குத்
தேவையான இயந்திரங்களையும் தொழில்நுட்பங்களையும் அனுபவத்தையும் இதற்குமுன் பெற்றிராத
லிபரல்பாளையம் முதலாளிகளை நம்பி கடன்தருவதற்கு வளர்ந்த நாடுகளும் உலகவங்கியும் தயங்குவதாக
பொருளாதார அடியாள் உதட்டைப்பிதுக்கியதும்கூட அந்த திட்டத்தின் ஒரு பகுதிதான். முன்னனுபவம்
கொண்ட பன்னாட்டுக்கம்பனிகளிடம் லிபரல் பாளையம் தேசிய நெடுஞ்சாலைத்திட்டத்தை ஒப்படைக்கச்
செய்வதற்காகவே இப்படியொரு நெருக்கடி செயற்கையாக உருவாக்கப்பட்டது. கடைசியில் கடனைக்
கொடுத்த நாடுகளே தங்கள் நாட்டு கம்பனிகளை அனுப்பியும் தொழில்நுட்பங்களையும் இயந்திரங்களையும்
விற்றும் அந்த கடன்தொகையை தங்கள் நாட்டுக்கே திருப்பிக்கொண்டன. மீளாக்கடனில் லிபரல்பாளையம்
முழுகத் தொடங்கியது இவ்வாறுதான்.
சாலையமைக்கும் திட்டம் தொடங்கப்பட்ட
போது லிபரல்பாளையம் புதிய சகாப்தத்திற்குள் நுழைவதாக முன்னறிவிக்கப்பட்டது. அது பற்றி
வெளியான அரசு விளம்பரங்களில் ‘லிபரல்பாளையம் உலகத்தை இணைக்கிறது...’ என்று நாட்டையாளும்
பிரதமரும் அவரையாளும் கட்சித்தலைவரும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
நஞ்சை புஞ்சை வெள்ளாமைக்காடுகளையும்
நன்னீர் ஏரிகளையும் கானகங்களையும் கையகப்படுத்திய தேசிய அகண்டசாலை ஆணையம் வழியில் சிக்கிய
ஆயிரக்கணக்கான சிற்றூர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. வாழ்வாதாரத்தை பறிக்கும் இம்முயற்சிக்கெதிராக
மக்கள் தொடர்ந்த வழக்கில், ஒட்டுமொத்த தேசமும் ஒரு பெரிய நகரமாக வளர்வதற்கு விவசாயிகளும்
சிற்றூர்வாசிகளும் இந்தத் தியாகத்தை செய்துதானாக வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாட்டின் பொருளாதாரம் நலிந்திருக்கும் நிலையிலும்
சொற்பத்தொகையையேனும் இழப்பீடாக கொடுக்கும் அரசின் கருணையை வெகுவாக பாராட்டிய
நீதிமன்றம் வீடிழந்தவர்களுக்கு உதவும் வகையில்
சொன்ன யோசனையை அரசு உடனே ஏற்றுக்கொண்டது. அதன்படி, கல்லையும் மண்ணையும் காரையையும்
கொண்டு நிரப்பி வீணடிக்கப்படும் மேம்பாலங்களின் அடிப்பாகம் முழுவதும் பெரிய அலமாரிகளைப்
போன்ற வீடுகளாக மாற்றப்பட்டது. மேசையின் இழுப்பறைக்குள் பொருட்களைப் போட்டு மூடிவிடுவதைப்போல
வீடிழந்த மக்கள் பாலத்தின் அடிப்பாகத்து அலமாரிகளில் தம்மைத்தாமே அடைத்துக்கொண்டனர்.
அந்தக் குடைவரை வீட்டில் வசிக்கும் மக்கள், குகைகளில் வசித்த ஆதிக்காலத்திற்குள் தாங்கள்
திரும்பவும் வீசப்பட்டுவிட்டதாக புகார் கொண்டிருந்தனர்.
கடன்கொடுத்த நாடுகள் தாங்களே கடனை வசூலித்துக்கொள்வதாக
கூறிக் கொண்டு சாலைகளை ஆங்காங்கே மறித்து சுங்கச்சாவடிகளை அமைத்தன. முதல் போட்டவன்
சும்மா விடுவானா? வசூலிப்பதுதானே நியாயம் என்று மக்களும் தாங்களாகவே கட்டணம் செலுத்த
தயாராகியிருந்தார்கள். ஆனால் வாகனங்கள் பெருகினால்தானே சுங்கச்சாவடிக்கு வருமானம்?
அரசாங்கத்தை நெருக்கி வங்கிகள் மூலம் வாகனக்கடனை வாரியிறைக்க வைத்தார்கள். அன்றைய தேதியில்
லிபரல்பாளையத்தில் சைக்கிளை மட்டும்தான் முழுத்தொகை கொடுத்து வாங்கவேண்டியிருந்தது,
மற்றபடி ஒரு ரூபாய் கட்டினால் போதும் அடுத்த நொடியே நீங்கள் எப்பேர்ப்பட்ட காருக்கும்
உரிமையாளராகிவிடலாம். அந்தளவிற்கு சுலபத்தவணைகளில் கடன் கிடைத்தது. சுலபத்தவணை என்று
சொன்னாலும் தவணையைக் கட்டுவது சுலபமில்லை என்பதை லிபரல் பாளையம் மக்கள் வெகு சீக்கிரத்தில்
உணர்ந்தார்கள். எவ்வளவு மழை பெய்தாலும் உறிஞ்சிக்கொள்கிற மணற்காட்டைப்போல தங்க நாற்கரச்
சாலைகளில் ஓடியாடி சம்பாதிப்பதில் பெரும்பகுதியை அந்தச் சாலைகளே உறிஞ்சி இழுத்துக்
கொண்டிருந்தன. ஆக்டோபஸ்சின் கரங்களைப்போல நாடு முழுதும் விரிந்து கிடக்கும் அந்தச்
சாலைகளின் நெரிப்பைத் தாளாமல் சனங்கள் திணறித் தவித்தார்கள். அந்தந்த வட்டாரத்து வழிப்பறிக்கூடங்களைப்போன்று
சுங்கச்சாவடிகளில் ஆயுதமேந்திய அடியாட்களும் அதிகாரிகளும் நிரம்பி நின்று கட்டணங்களை
வசூலித்தனர்.
***
அகண்ட சாலைகள் என்கிற முழக்கத்தோடு லிபரல்பாளையத்திற்குள்
நுழைந்த கொள்ளையர்கள், அதே காலத்தில் ‘சொகுசான வீடு சுகபோக வாழ்வு’ என்கிற முழக்கத்தோடு
நமது கக்கா நாட்டுக்குள் நுழைந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் நவீனமான வீடு என்று
அத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். உலகத்தின் எந்தவொரு
நாட்டிலும் இல்லாத புதுமைத்திட்டத்தைக் கொண்டுவந்தமைக்காக பிரதமரைக் கொண்டாடிக் களித்த
ஊடகங்கள், அவரை நாட்டின் நிரந்தரப் பிரதமராக ஆக்க வேண்டும் என்று மக்களை வற்புறுத்துமளவுக்குச்
சென்றன.
சொ.வீ.சு.வா. திட்டத்தின் முதற்படியாக
மக்கள் தமது பூர்வீகமான வீடுகளை காலி செய்து கொடுத்தார்கள். அந்த வீடுகள் யாவும் உடனடியாக
இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சொகுசு வீடுகள் கட்டிமுடிக்கப்படும் வரை மேம்பாலங்களுக்கு
அடியிலும் சாலையோரங்களிலும் நடைபாதைகளிலும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்களில்
மக்கள் தங்கவைக்கப்பட்டனர். பஞ்சம் பிழைக்க இடம் பெயர்ந்து வந்தவர்களைப் போன்றும் ஏதிலிகளைப்
போன்றும் அந்த முகாம்களில் அவர்கள் அல்லாடிக்கிடந்தனர்.
அதிநவீன கட்டுமான தொழில்நுட்பங்களைக்
கொண்டு விறுவிறுவென கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா வெகு
விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அண்டைநாடான
லிபரல்பாளையத்தின் புதிய பிரதமர் டெவலப்பன், தாங்கள் ரோட்டில் செய்த புரட்சியை கக்காநாடு
வீட்டில் செய்திருப்பதாக பாராட்டு தெரிவித்தார். நாட்டின் முதல் குடிமகனுக்குரியதைப்
போன்ற அத்தனை வசதிகளோடும் கூடிய வீட்டை குடிமக்கள் அனைவருக்கும் சொந்தமாக்கியுள்ள கக்காநாட்டு
பிரதமர் தரகுமணிநாதனின் சமத்துவப்பாங்கு உலகுக்கே முன்னுதாரணம் என்று அவர் மேலும் புகழ்ந்துரைத்தார்.
விழாவில் நிறைவுரையாற்றிய கக்காநாட்டு பிரதமர் தரகுமணிநாதன், சொ.வீ.சு.வா.திட்டத்திற்கு
தேவையான தொகை முழுவதையும் முதலீடு செய்த இன்ட்ரஸ்ட் ஃபர்தர் இன்ட்ரஸ்ட் வங்கிக்கும்,
வீடுகளை கட்டி முடித்த அதன் துணைநிறுவனமான டெமாலிஷன் அன்ட் கன்ஸ்டரக்ஷன் கம்பனிக்கும்
நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பழமையில் மங்கி பாழடைந்துக் கிடந்த தமது
பூர்வீக வீடு இருந்த இடத்தில் இப்படியொரு அதி நவீன சொகுசு வீடா என்கிற ஆச்சர்யம் மக்களை
கிறுகிறுக்க வைத்தது. பெயருக்கேற்றாற்போல இது உண்மையிலேயே சொகுசான வீடு சுகபோக வாழ்வுதான்
என்று மகிழ்ந்த அவர்கள் அரசாங்கத்திற்கு தமது நன்றியையும் விசுவாசத்தையும் தெரிவித்தார்கள்.
தற்காலிக முகாம்களுக்கு ஓடிப் போய் சட்டிமுட்டி சாமான்களைத் தூக்கிக்கொண்டு குழந்தைக்குட்டிகளோடு
திரும்பி வந்து குடியேறிய பரவசத்தில் அவர்கள்
அன்னம் தண்ணி ஆகாரமின்றி திளைத்துக் கிடந்தார்கள்.
கண்ணுக்கு இதமான வண்ணத்தில் சுவர்ப்பூச்சு,
வெளிச்சத்திற்கும் காற்றோட்டத்திற்குமான நெடிதகன்ற சன்னல்கள், இடத்தை அடைக்காமல் ஆனால்
தேவைப்பட்ட இடங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நாற்காலிகளும் மேசைகளும், நேரில்
காண்பதைவிடவும் துல்லியம் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி, அமைதியின் ஒருபகுதிபோல மெலிதாய்
ஒலிக்கும் இசை, தேக்கு மரத்தால் இழைத்த கட்டிலில் நுரையைப் போல் மிருதுவான மெத்தை,
துர்நாற்றம் சிறுதுமின்றி எந்நேரமும் நறுமணம் கமழும் கழிப்பறையும் குளிப்பறையும், சமைக்கும்
ஆர்வத்தை கிளர்த்துவதான பாங்கில் அதிநவீன பாத்திரங்களுடன் கூடிய சமையலறை, அருவிபோல்
கொட்டும் தண்ணீர், தடையற்ற மின்சாரம்- என்று வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் அம்சமும்
அவர்களை உன்மத்தம் கொள்ளவைத்தன.
எல்லோரும் குடியேறிவிட்டதை உறுதி செய்துகொண்ட
கக்காநாட்டு அரசு பிறப்பித்த ஓர் உத்தரவு பின்வரும் ஷரத்துகளைக் கொண்டிருந்தது. 1.
தற்காலிக முகாம்கள் உடனடியாக கலைக்கப்படுகிறது. 2. அனைவருக்கும் வீடு உறுதி செய்யப்பட்டுவிட்டதால்
இனி வெட்டவெளியிலோ பொது இடத்திலோ யாரும் தங்குவது சட்டவிரோதம். 3. எல்லாவீடுகளிலும்
இப்போது கழிப்பறை இருப்பதால் வெட்டவெளியிலோ பொது இடத்திலோ மலஜலம் கழிப்பது கடும் தண்டனைக்கும்
அபராதத்திற்குமுரிய குற்றம்.
உத்தரவு வெளியானதற்கு மறுநாள் இன்ட்ரஸ்ட்
ஃபர்தர் இன்ட்ரஸ்ட் வங்கியின் வாகனம் ஒன்று ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் தனது பணியாளர்
ஒருவரையும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருவரையும் இறக்கிவிட்டுப் போனது. தங்களது பாதுகாப்புக்காகவும்
வீட்டைப் பராமரிக்கவும் அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டவர்களாக இருக்கும் என்று
நினைத்து மக்கள் அவர்களை வரவேற்று உபசரித்தார்கள். வந்தவர்கள், அந்தந்த வீட்டிலிருந்த
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பயோமெட்ரிக் முறையில் கையடக்க
கணினியில் பதிவு செய்துகொண்டு படிவங்கள் சிலவற்றில் கையொப்பத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.
பிறகு, அவர்கள், தம்மோடு கொண்டு வந்திருந்த மேசை மற்றும் நாற்காலிகளை படுக்கையறைக்கும்
கழிப்பறைக்கும் செல்லும் இடத்தில் போட்டு அமர்ந்துகொண்டார்கள். அவ்வாறு அவர்கள் அமர்ந்ததுமே
அந்த இடம் கட்டணக் கழிப்பறை ஒன்றின் நுழைவாயிலைப்போல தோற்றம் காட்டியது. உட்கார்ந்திருக்கும்
அவர்களையும் அவர்களால் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கருவியையும் தாண்டித்தான் படுக்கையறைக்கோ
கழிப்பறைக்கோ எவரொருவரும் செல்ல முடியும்.
சொ.வீ.சு.வா. திட்டத்தில் முதலீடு செய்த
தொகையும் அதற்குரிய வட்டியும் படுக்கையறை மற்றும் கழிப்பறை பயன்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படும்
என்றோ, அவ்வாறு வசூலிக்கும் பணியாளர்கள் இரவும் பகலும் அந்தந்த வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள்
என்றோ அரசாங்கம் இதற்குமுன் ஒருபோதும் சொல்லியிருக்கவில்லை. இப்படியொரு நிபந்தைனையை
ஆரம்பத்திலேயே வெளிப்படையாக அரசு அறிவித்திருக்குமானால் சொகுசு வீடே வேண்டாம் என்றுகூட
மக்கள் சொல்லியிருக்கக்கூடும். ஆனால் சொகுசுவீட்டில் ஒரு வார காலம் புழங்கவிட்டு அதன்
சுகத்தில் லயிக்கவைத்தப் பிறகு, இதேவீட்டில் தொடர்ந்து வசிக்க வேண்டுமானால் இந்த நிபந்தைனக்கு
கட்டுப்பட வேண்டும் என்று சொல்வது பெரும் மோசடி என்று மக்கள் குற்றம் சாட்டினர். ஆனாலும்
முதல் போட்டு இம்மாம் பெரிய வூட்டைக் கட்டினவன் சும்மா வீடுவானா? ரோடு போட்டவன் காசு
கேட்டா கொடுக்கிறது மாதிரிதான் இதுவும் என்று தமக்குத்தாமே சமாதானம் சொல்லிக்கொண்டனர்.
வீட்டுக்கு வெளியே புழங்கினால் கட்டவேண்டிய
அபராதத்தையும் தண்டனையையும் ஒப்பிடும் போது வீட்டுக்குள்ளேயே சுங்கம் கட்டி புழங்குவது
தேவலாம் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டிருந்தார்கள். சமையலறையும் பொதுக்கூடமும்
மட்டும் 24 மணிநேரமும் கட்டண விலக்குப் பெற்ற புழங்குப்பகுதிகள். காலை 6 மணியிலிருந்து
இரவு 9.59 வரை கழிப்பறையைப் புழங்குவதற்கு கழிவுகளின் அளவையும் பயன்பாட்டு நேரத்தையும்
பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இரவு 10 மணியிலிருந்து காலை 5.59 வரை கட்டணத்தில்
50 சவீதம் சலுகை. புழங்கப்போகும் ஒவ்வொரு முறையும் தனித்தனியாகவோ, தேவைப்பட்டால் குடும்பத்தவர்
அனைவருக்கும் மொத்தமாக ( ஃபேமிலி மன்த்லி பேக்கேஜ்) மாதாந்திர அடிப்படையிலோ கட்டணத்தைச்
செலுத்தவேண்டும். ஃபிரி பெய்டு, போஸ்ட் பெய்ட், ஃபாஸ்ட் லேன், ரீ சார்ஜ், டாப்அப் என
ரகரகமான கட்டணம் பணமாகவோ கடனட்டை மூலமாகவோ வசூலிக்கப்பட்டது. படுக்கையறையைப் பொறுத்தவரை,
இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வயது வந்தோர், தம்பதிகள், குழந்தைகள், முதியவர்கள்
என்கிற வகைப்பாட்டிற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் அதிகரித்தால்
கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கையும் கூடும் என்கிற வியாபாரத் தந்திரத்தில் தம்பதிகளுக்கு
மட்டும் வார ஓய்வு நாட்களில் கட்டணச்சலுகை வழங்கப்பட்டது. 6 மணிக்கு மேற்பட்டால் ஒவ்வொரு
15 நிமிடங்களுக்கும் தனியாக கட்டணம் கணக்கிடப்பட்டது. பகல் நேரத்தில் பயன்படுத்த கட்டணம்
இரு மடங்கு என்பதால் பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை.
படுக்கையறைக்கும் கழிப்பறைக்கும் சுங்கம்
கட்ட சம்பாதிப்பதே வாழ்வின் ஆகப்பெரும் நோக்கம் என்றாகிவிட்டதே என்கிற கவலையால் பீடிக்கப்பட்டவர்களாயினர்
நம் கக்காநாட்டு மக்கள். இதுவல்லாமல், நள்ளிரவில் படுக்கையறைக்குள் நுழைந்து பெண்களைச்
சீண்டி இம்சிப்பது, கழிவறைக்குள் எட்டிப்பார்ப்பது என வசூலாளனும் காவலர்களும் செய்கிற
அத்துமீறல்களும் அவர்களை நிம்மதியிழக்கச் செய்திருந்தது.
***
கடுமையாக ஏற்றப்பட்ட சுங்கச்சாவடி கட்டணத்தை
எதிர்த்து இந்தியாவின் சிறுநகரங்களான கிருஷ்ணகிரியிலும் வாணியம்பாடியிலும் ஓமலூரிலும்
வாகனவோட்டிகள் தொடங்கியப் போராட்டம் பிசுபிசுத்துப் போனது. அதனால் உற்சாகமடைந்த லிபரல்பாளையத்தின்
பிரதமர் டெவலப்பன், தன் நாட்டில் நெடுஞ்சாலைத் திட்டத்தின் அடுத்தக்கட்ட விரிவாக்கத்தை
‘சொர்க்கத்திற்குச் செல்லும் ஒரே சாலை...’ என்கிற முழக்கத்தோடு கொண்டு வந்து சேர்த்தான்.
தூரத்தையும் நேரத்தையும் வேகத்தால் சுருக்குவதற்கு இந்தியா தயாரித்திருந்த ‘இன்டலிஜென்ட்
டிரான்ஸ்போர்ட்டிங் சிஸ்டம்’ என்பதையும் உள்ளடக்கியிருந்தது அவனது திட்டம். பன்னாட்டு
நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கி, விண்ணகத்தில் இருக்கும் கடவுளை சட்டென எட்டித்தொடும்
வகையில் உலகிலேயே உயரமான கோபுரத்தைக் கட்டப்போவதாக கறுப்பின மந்திரவாதி நாவலில் கூகிவா
தியாங்கோ எழுதியிருந்தது லிபரல்பாளையத்தில் உண்மையாகப் போகிறது என்கிற கேலிப்பேச்சு
நாடெங்கும் பரவியது.
முதற்கட்டமாக, குறிப்பிட்ட சில பெரிய
நகரங்களை இணைக்க நான்குவழிச் சாலை அமைத்ததில் டெவலப்பனுக்கும் அவனது அமைச்சரவை சகாக்களுக்கும்
அதிகாரிகளுக்கும் கிட்டிய ஆதாயங்கள் அடுத்தடுத்தும் பல சாலைகளை அமைக்கும் திட்டங்களை
நோக்கி அவர்களை நெட்டித்தள்ளின. எனவே நல்ல நிலையில் இருந்த நால்வழிச்சாலைகளை கொத்தியெடுத்து
குழிபறித்து ஆறுவழிச்சாலைகளாகவும் திடுமென அதையும் பாழ்படுத்தி எட்டு வழிச்சாலைச் சாலைகளாகவும்
மாற்றினார்கள். இப்படி எக்ஸ்பிரஸ் ஹைவே, ஃப்ளை வே, சூப்பர் காரிடர் என எங்கு பார்த்தாலும்
ரோடு... ரோடு... ரோடு. ஒரு வகையான சாலையை இன்னொரு வகையானதாக மாற்றியமைக்கும் போதெல்லாம்
லிபரல்பாளையத்தின் கடனும், மக்களின் மீதான சுங்கக்கட்டணமும் அதிகரித்தன.
நாட்டின் நிலம் முழுவதும் ரோட்டுக்கே
என்கிற அளவுக்கு நிலைமை மோசமடைந்தபோது சுங்கச்சாலைகளுக்கு எதிரான போராட்டம் வெடித்தது.
போராட்டம் என்றால் ஏதோ நாலுபேர் நாற்பது கொடியைப் பிடித்துக்கொண்டு தெருமுக்கில் முனகி
விட்டுப் போகிற இப்போதைய சடங்குபோலத்தான் அப்போதும் நடந்திருக்கும் என்று யாரும் நினைத்துக்
கொள்ளக்கூடாது. வாஷிங்டன் டஸ்ட் என்கிற நாளிதழ் அப்போது வெளியிட்டிருந்த செய்தியிலிருந்து
அவர்களது போராட்டம் எவ்வளவு உக்கிரமானது என்பதை நம்மால் உணரமுடியும்.
“வண்டி வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மீறி
வந்த வாகனங்களை மக்கள் நெடுஞ்சாலைகளில் மறித்தார்கள். புதிதாக சாலையமைக்கும் இடங்களுக்கு
பாய்ந்துச் சென்ற அவர்கள் அங்கு வேலைகளை தடுத்ததோடு அங்கேயே அமர்ந்து ‘ரோட்டிலே சோறு
விளையுமா?’, ‘வேளாண் நிலங்களை தார்க்காடாக மாற்றாதே’, “ரோடு இங்கே ஊர் எங்கே?’ நாங்கள்
பிள்ளைகளைப் பெற்றது ரோட்டிலே சாகக் கொடுப்பதற்கல்ல...’ என்று எதிர்ப்பு முழக்கங்களை
எழுப்பிய வண்ணமிருந்தார்கள். போக்குவரத்து தடைபட்டதும் ஓடோடி வந்த அதிகாரிகளையும் சுங்கச்சாவடி
நிர்வாகத்தினரையும் அவர்கள் கைக்கு சிக்கியதையெல்லாம் கொண்டு தாக்கினார்கள். ஒடுக்குவதற்கு
வந்த போலிசும் ராணுவமும் வழிநெடுக எழுப்பப்பட்டிருந்த தடையரண்களைக் கண்டு வெருண்டோடின.
இப்படி ஏதேனும் பிரச்னை வந்தால் போலிசும் ராணுவமும் ஓடோடி வந்து ஒடுக்குவதற்கு தோதாக
இருக்கட்டும் என்று போடப்பட்ட ரோடுகளையே மக்கள் போராட்டக்களமாக மாற்றியிருந்தார்கள்.
செத்து விரைத்தது போன்று கிடந்த ரோடு
இப்போது அசைந்து புரண்டு ஆர்ப்பரிப்பது கண்டு ஆங்காரமெடுத்த பிரதமர் டெவலப்பன் வான்வழித்
தாக்குதல் நடத்தி அவ்வளவு பேரையும் கொன்றொழித்தான். கன்னங்கரேலென நீண்டிருந்த அச்சாலைகள்
மக்களின் ரத்தத்தில் தோய்ந்து செந்நிறமாகின. ரோட்டில் செத்துக் கிடந்தவர்களை புல்டோசர்
கொண்டு குப்பைக்குகூளம்போல ஒதுக்கித் தள்ளி போக்குவரத்தை சீர்செய்ததை வெகுவாகப் பாராட்டிய
ஊடகங்கள் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாத்து நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கு இந்தத்
தாக்குதல் அவசியம்தான் என்று அவனுக்காக கொக்கரிக்கவும் செய்தன. அந்தந்த வட்டாரத்தில்
போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர்களின் பிணங்கள் சாலையோரக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடப்
பட்டிருந்தன. சுங்கச்சாவடியை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்கிற எச்சரிக்கை வாசகம்
அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் பிணங்களின் வாயில் ஒட்டப்பட்டிருந்தது.
மக்களுக்கு எதிராக ஆயுதங்கள் பிரயோகிக்கப்படும்
போது மக்களே ஆயுதங்களாக மாறிவிடுவார்கள் என்பதற்கு கி.பி. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற
இரண்டாம் கட்டப் போராட்டமே சான்று. லண்டன் கலவரம், அமெரிக்கக் கடன் பத்திர விவகாரம்,
பங்குச்சந்தை வீழ்ச்சி, தங்கத்தின் விலையேற்றம் என்று உலகத்தின் கவனம் வேறுபக்கம் திசை
திரும்பி இருந்ததால் லிபரல்பாளையத்தில் நடந்த இப்போராட்டம் உரிய கவனம் பெறாமல் போய்விட்டது
என்பது ஆவணச்சுரண்டிகளில் ஒருசாராரின் கருத்து.
எனினும் அதே வாஷிங்டன் டஸ்ட் என்கிற அந்தப் பத்திரிகை இதுபற்றி கூறுவதை படியுங்கள்.
“சாலையில் வண்டிகளின் போக்குவரத்து நடமாட்டம்
மந்தமாக இருந்த ஒரு மத்தியான வேளை. சுங்கச்சாவடிக்கும் முன்பாக ஒருமைல் தூரத்தில் ஓரமாக
ஒரு கார் நிறுத்தப்படுவது சிசிடிவி கேமராவில் துல்லியமாகத் தெரிந்தது. வெட்டவெளியில்
இயற்கை உபாதைகளை தீர்த்துக்கொள்ள இவ்வாறு சாலையோரத்தில் வண்டிகள் நிறுத்தப்படுவது வழமைதான்.
ஆனால் காரிலிருந்து இறங்கியவர் ஒரு பெண் என்பதால் வேறு காரணங்களாக இருக்கக்கூடும்.
ஆனால் அது சுங்கச்சாவடி ஆட்களின் யூகங்களுக்கு பிடிபடாத காரணமாயிருந்தது. அந்தப்பெண்
அவ்வளவு தூரத்திலிருந்தே நாட்டப்பட்டிருந்த சுங்க அறிவிப்புப்பலகைகளில் இடம்பெற்றிருந்த
விதிமுறைகளை வரிசையாக படித்துக்கொண்டிருக்கிறார். யாரோ ஒரு மூளை குழம்பியவளின் கிறுக்குத்தனமான
செயல் என்று சுங்கச்சாவடி அதிகாரிகளும் அடியாட்களும் அவரது நடவடிக்கைகளை கேமரா வழியே
அசட்டையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு அடுத்தவந்த மற்றொருவரும்
அதேபோல் தனது வாகனத்தை சாலையோரம் நிப்பாட்டிவிட்டு அறிவிப்புப் பலகைகளை படிக்கத் தொடங்குகிறார்.
அந்த கிறுக்கிக்குத் துணையா ஒரு கிறுக்கனும்
இந்த வேகாத வெயிலில் வந்து சேர்ந்திருக்கிறான் என்று சுங்கச்சாவடி அதிகாரிகளும்
அடியாட்களும் கேலிபேசி சிரிக்கிறார்கள். ஆனால் அவர்களது சிரிப்புக்கு அற்ப ஆயுள். அடுத்தடுத்து
வரும் வாகனங்களும் அவ்வாறே நிறுத்தப்பட்டு அதிலிருந்து இறங்கும் ஆண்களும் பெண்களும்
அறிவிப்புப் பலகைகளை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.
வண்டிகள் வருகின்றனவேயொழிய அதில் ஒன்றுகூட
சுங்கச் சாவடிக்குள் நுழையவேயில்லை. ஒன்றன்பின்
ஒன்றாக ஓரங்களை நிரப்பிய வாகனங்கள் இப்போது ஓரத்தில் இடமின்றி சாலைகளிலேயே நிறுத்தப்பட்டன.
சற்றைக்கெல்லாம் போக்குவரத்து தடைபட்டு ஒரு வண்டிகூட உள்ளே வராமல் கல்லா காற்று வாங்குகிறது
என்றதும்தான் இதில் ஏதோ விபரீதம் இருக்கிறது என்று சுங்கச்சாவடி ஆட்களுக்கு உறைத்திருக்கிறது.
வண்டிகளை எடுக்குமாறு அவர்கள் விசில்களை ஊதியபடி பெரும் தொன்னைகளோடும் உருட்டுக் கட்டைகளோடும்
வாகனவோட்டிகளை நோக்கி ஓடினார்கள். முதலாவதாக வண்டியை நிறுத்தியிருந்த அந்தப் பெண்,
அவசரப்படுத்தாதீர்கள், இந்த அறிவிப்புப் பலகைகளில் உள்ள விதிமுறைகளை எல்லாம் படித்து
முடிக்காமல் எப்படி சுங்கம் செலுத்த முடியும்? கொஞ்சம் பொறுங்கள் என்றார். மற்றவர்களும்
அதையே திருப்பிச் சொன்னபோது அது போர் முழக்கம் போல அந்த பக்கம்பராந்திரி முழுக்க எதிரொலித்தது. ஆமாம்,
அது போர் முழக்கம்தான்.
அந்தப் பெண்ணின் முதலாவது வாகனம் நிற்கத்
தொடங்கியதிலிருந்து அடுத்த இருபதாவது நிமிடம் நாட்டின் சாலைகள் அனைத்தும் ஸ்தம்பித்துப்
போயின. அப்போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்றில், லிபரல் பாளையத்தின்
நிலப்பரப்பெங்கும் வாகனங்களால் போர்த்தப் பட்டது போலிருந்தது. தரைமார்க்கமாக ஈ எறும்புகூட
நகர முடியாது என்பது மாதிரியான நிலை. லிபரல்பாளையத்தை அண்டைநாடுகளுடன் தரைமார்க்கமாக
இணைக்கும் பன்னாட்டுச் சாலைகளிலும் கூட எல்லைதாண்டி வாகனங்கள் நிற்கத் தொடங்கின. சரக்குகள்
வந்து சேராத துறைமுகங்கள் காற்று வாங்கின. பயணிகள் வந்து சேர வழியில்லாததால் விமான
நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. ரயில் சேவையும் முடங்கியது. கச்சாப்பொருட்களின்
வரத்து நின்றதால் தொழிற்சாலைகளின் இயக்கமும் நின்றது. எது எது எங்கு எப்படி இருந்ததோ
அங்கேயே அப்படியே கிடக்கும் நிலை உருவானது. வர்த்தகம் முடங்கியது. உலகெங்கும் பங்குச்சந்தைகள்
வரலாறு காணாத சரிவைச் சந்தித்தன. லிபரல்பாளையத்தின் சுங்கச்சாவடி பிரச்னை ஒரு சர்வதேசப்
பிரச்னையாக மாறிவிட்டிருந்தது.
பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அரசும்
சுங்கச்சாவடி உரி¬மாளர்களும் விடுத்த அழைப்பை போராட்டக்காரர்கள் நிராகரித்தனர். ‘பேசுவதற்கு
ஒன்றுமில்லை. வேளாண் நிலங்களை பாழ்படுத்தும் திட்டங்களை கைவிடுகிறோம், சுங்கச் சாவடிகள்
மூடப்படுகின்றன, இனி மக்கள் சுதந்திரமாக நடமாடலாம்... என்கிற உத்தரவை பிறப்பித்தால்
அந்த நொடியிலேயே நாங்கள் சாலைகளை விடுவிக்கத் தயாராக இருக்கிறோம்’ என்பதே அவர்களது
பதிலாக இருந்தது. வெகுவாக நிலைகுலைந்துப் போன அரசாங்கம் வேறு வழியின்றி போராட்டக்காரர்களின்
கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்தது. அதற்கென பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகல் தொலைக்காட்சியிலும்
சமூக ஊடகங்களிலும் காட்டப்பட்டன. திரண்டிருந்த வாகனவோட்டிகள் வெற்றியின் ஆரவாரத்தோடு
சுங்கச் சாவடிகளுக்குள் புகுந்து அவற்றை பெயர்த்தெறிந்தார்கள்.”
சுங்கச்சாவடி கொள்ளையர்களை விரட்டியடிக்கும்
போராட்டம் லிபரல்பாளையத்தில் அடைந்த வெற்றி, உலகெங்கும் சுதந்திரத்துக்காகப் போராடும்
மக்களுக்கு கட்டுக்கடங்காத ஆற்றலையும் மன எழுச்சியையும் வழங்கியது. அப்படியாக உந்தப்பட்ட நமது கக்கா நாட்டவர் சிலரால் தொடங்கப்பட்டதே ‘படுக்கையறை
மற்றும் கழிவறை நுழைவுச் சுதந்திரத்திற்கான போராட்டக் குழு’. பிரச்னை எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியான போராட்ட
வடிவத்தை மேற்கொள்வதால் பயனேதும் விளையப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
எனவே அவர்கள் எதிரிக்கு சேதாரத்தையும் நிர்ப்பந்தத்தையும் உருவாக்கும் வகையிலான போராட்ட
வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர்.
அன்றாடப் பயன்பாட்டு எண்ணிக்கையை படிப்படியாக
குறைப்பது என்கிற முதற்கட்டப் போராட்டத்தின் படி மக்கள் படுக்கையறைக்குள் செல்லாமல்
சமையலறையிலும் பொதுக்கூடத்திலும் நடமாடியபடியே தூங்காமல் இருந்தனர். காலையில் ஒருமுறையும்
இரவு ஒருமுறையும் மட்டுமே கழிப்பறைக்குப் போனார்கள். முன்பு கட்டணத்தின் சுமையிலிருந்து
தப்புவதற்காக, அன்றாடப் பயன்பாட்டு எண்ணிக்கையை குறைக்கும் சிக்கன நடவடிக்கையாக இயற்கை
உபாதைகளையும் பாலுணர்வையும் தூக்கத்தையும் முடிந்தமட்டிலும் அடக்கியடக்கி பழக்கப்பட்ட
உடல் இப்போது ஒத்துழைத்தது. இந்த அடக்கிக்
கொள்ளும் போராட்டத்தால் மன உளைச்சலுக்கும் உடற்கோளாறுகளுக்கும் ஆளான சிலரும்கூட நாட்டுநலன்
கருதி பொறுத்துக்கொண்டார்கள்.
அந்த வாரத்தின் ஈற்றில் கால்வாசிகூட
நிறையாத கல்லாவைப் பார்த்து கதிகலங்கிப்போன வசூலாளர்கள் தங்களுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான
டாலர் வருமான இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக அரசாங்கத்திடம் முறையிட்டார்கள். அவர்களுக்கு
ஏற்படும் இழப்பை தனது சொந்த இழப்பாக கருதி துக்கித்த அரசாங்கமோ, பயன்படுத்தினாலும்
பயன்படுத்தா விட்டாலும் குறைந்தபட்சம் இவ்வளவு தொகையை கட்டணமாக செலுத்தியே தீரவேண்டும்
என்றொரு புதிய சட்டத்தை வெளியிட்டது. மக்களோ
சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார்கள்.
போராட்டத்தை பலவீனப்படுத்தும் விதமாக
வசூல் நிறுவனம் அறிவித்த கால்வாசி கட்டணக்குறைப்பை நிராகரித்த போராட்டக் குழு, வீடுகளுக்குள்
இருக்கும் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக கலைத்துவிட்டு வெளியேறுவதற்கு 48மணி நேர கெடு
விதித்தது. நிலைமை சிக்கலாகிக் கொண்டிருப்பதை
உணர்ந்து இன்ட்ரஸ்ட் ஃபர்தர் இன்ட்ரஸ்ட் வங்கி கொடுத்த நெருக்கடியால் திணறிய அரசாங்கம்
கடுமையானதொரு தாக்குதலை மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் என்பதை போராட்டக்குழு உணர்ந்திருந்தது.
அரசாங்கத்தின் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்வது அல்லது பதிலடி கொடுப்பது என்கிற
எதிர்வினை நிலைக்கு மாறாக எடுத்தயெடுப்பில் ஏறியடித்து முதற்தாக்குதலை தொடுப்பவர்களாக
களமிறங்குவோம் என்று அறைகூவல் விட்டது போராட்டக்குழு. அவ்வளவுதான், அடுத்த அரைமணிக்கும்
குறைவான நேரத்தில் அந்தந்த வீட்டாள்கள் தத்தமக்குத் தெரிந்த வழிமுறைகளைக் கையாண்டு
அவரவர் வீட்டை சுங்கக்காரர்களிடமிருந்து மீட்டெடுத்தார்கள். மக்கள் தமக்குள் உறைந்திருந்த
போர்க்குணத்தை மிகுந்த ஆற்றலோடு வெளிப்படுத்தினார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசால்
ஏவப்பட்ட ராணுவத்தில் ஒருபகுதி தமது ஆயுதங்களை அரசுக்கு எதிராக திருப்பிப் பிடித்து
மக்களின் வெற்றியை உறுதிப்படுத்தியது. சுங்கச்சாவடியினரையும் அவர்களைத் தாங்கிப் பிடித்திருந்த
அரசாங்கத்தினரையும் நாட்டைவிட்டே மக்கள் விரட்டியடித்த இந்த வீரவரலாறு எதிர்காலச் சந்ததியினரை
சுதந்திர உணர்ச்சியோடு வாழ்வதற்கான ஒளியை வழங்குவதாகுக.
13.05.2016
நன்றி: உயிர் எழுத்து, ஜூன் 2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக