ஃபிர்தவுஸ் ராஜகுமாரனின் ‘‘நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல’’ சிறுகதைத் தொகுப்புக்கான இந்த முன்னுரை.
நடிப்பு
என்பது நடிகரின் திறமைகளைக் காட்டுவதல்ல, அது திறமைகளின் வழியே வாழ்க்கையைக் காட்டுவது
என்பார் பேரா.சே.ராமாநுஜம். இவ்வரையறை எழுத்துக்கும் பொருந்தும் என்கின்றன ஃபிர்தவ்ஸ்
ராஜகுமாரனின் கதைகள்.
திடீர் திருப்பங்களும் திகிலூட்டும் கொண்டையூசி வளைவுகளும் கொண்ட மலைப்பாதைக் கதைகள் எதுவும் இத்தொகுப்பில் இல்லை என்பது ஆறுதலானதுதான். மொழியைத் திருகி நம் முழியையும் பிதுக்கும் பம்மாத்துகளின்றி மிக நேரடியாக வாழ்வைப் பேசுவனவாக இக்கதைகள் அமைந்திருப்பது தற்செயலானதல்ல. சுயமரியாதைக்கு பங்கம் நேராமல் ஒவ்வொரு நொடியைக் கடப்பதுமே இடர்ப்பாடு மிக்கதாய் மாறிவிட்டச் சூழலுக்குள் பொருந்த முடியாது தத்தளிக்கும் ஒரு மனம் இப்படியாகத்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதாகவே உணர்கிறேன். தீவிர மன அழுத்தத்தில் உறைந்து பேச்சுமூச்சற்றுக் கிடப்பதும் ஆற்றுப்படுத்த முடியாத துயரத்தை இனி அடைத்துவைக்கவியலாதென வாய்விட்டுக் கதறித் தீர்ப்பதும் ஒரேவகையான வெளிப்பாட்டு வடிவத்தின் வெவ்வேறு நிலைகள்.
ஆனால் இப்படி அச்சுஅசலான வாழ்வைச் சொல்லிப்போவதில் உள்ள ஒருவகையான மொன்னைத்தனம் தன்கதைகளுக்குள் படிந்துவிடாமல் லாவகமாக கடப்பதினால்தான் ஃபிர்தவுஸ் என்கிற ஒரு கதைக்காரன் நமக்கு கிடைத்திருக்கிறார். புதுமைப்பித்தன் சொல்வதுபோல சமூகத்திற்கும் தனிமனிதருக்கும் உள்ள தொடர்பை தொடர்பின்மையை கண்டுரைக்கும் மனிதக்கண் அவருக்கு வாய்த்திருக்கிறது. அது எப்போதும் தன்னைச் சுற்றியான நிகழ்வுகளை உள்ளார்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறது. நீங்களும் நானும் பார்க்கத்தவறிய/ பார்த்தாலும் உள்வாங்காது கடந்துபோகிற/ இயல்பானவையென ஏற்றுக் கொண்டிருப்பவற்றில் உள்ள முரண்களை/ உண்மை என்று நம்பியிருப்பவற்றில் மறைந்திருக்கும் கபடங்களையெல்லாம் பார்த்தறிய இந்த மனிதக்கண்ணே ஃபிர்தவுசை வழிநடத்தியிருக்கிறது. அதனால், அவர் தன் சொந்த சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அவதூறுகள், தாக்குதல்கள் பற்றி மட்டுமல்லாது ஒரு மதம் என்கிற நிலையில் இஸ்லாத்துக்குள் நிகழவேண்டிய மாற்றங்கள், பெண்களைப் பற்றிய பார்வையில் உள்ள குறைபாடுகள் குறித்த விவாதங்களைக் கிளப்பி நம் கவனத்தை ஈர்ப்பவராயிருக்கிறார். ஆகவே, மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஒரு இஸ்லாமியருக்கு காட்டப்படுகிற சலுகை மனப்பான்மையிலோ பச்சாதாபவுணர்விலோ வேறுவகையான முன்முடிவுகளின்படியாகவோ இக்கதைகளை அணுகி யாரும் அவரை அவமதித்துவிட வேண்டாம் என்று சற்றும் அன்பில்லாமல் கேட்டுக்கொள்கிறேன்.
2.
இத்தொகுப்பிலுள்ள கதைகளின் கட்டமைப்பு, மொழிப்பிரயோகம், கலைத்தன்மை, கதாபாத்திரங்களின் உருவாக்கம், காலஒழுங்கு, எடுப்பு-தொடுப்பு- முடிப்பு போன்ற நுட்பங்களையெல்லாம் நுண்மான் நுழைபுலம்மிக்கப் பண்டிதர் எவரேனும் பார்த்தோ படித்தோ மதிப்பெண் வழங்கக்கூடும். ஆனால் இப்படியான சங்கதிகள் ஏனோ என்னை எப்போதும் ஈர்த்ததேயில்லை. எனக்குள்ள பிரச்னை, இந்தக் கதைகள் எதைப் பேசுகின்றன அல்லது பேச மறுக்கின்றன என்பதுதான்.
கோயம்புத்தூரின் கோட்டைமேடுப் பகுதியில் ஓரளவுக்கு செரிந்து வாழும் இஸ்லாமியர்கள் தான் கதைமாந்தர்கள். பாப்ரி மசூதி இடிப்புக்கு முன்னும் பின்னுமாக இஸ்லாமியருக்கு ஏற்பட்ட உளவியல் நெருக்கடிகளும் அதை அவர்கள் எதிர்கொண்ட விதமும் எதிர்கொள்ள முடியாமல் திணறிப்பெற்ற துயரங்களுமே கதைகளாக விரிந்துள்ளன.
ஃபிர்தவுஸ் எழுதுவதற்கு தேர்ந்துகொண்ட மூலகங்கள் எனக்கும் தெரிந்துதானிருந்தன. ஆனால் அவற்றைக் கச்சாவாகக்கொண்டு ஏதாயினும் எழுதியிருக்கிறேனா என்று யோசிக்கிறேன். ம்ஹூம்... ஒற்றைவரிகூட இல்லை. ஏனிப்படி? எழுத முடியாமல் என்னைத் எடுத்தது எது? அப்படியானால் எனது அக்கறைகள் எது சார்ந்தவை? சமூகம்/ மக்கள் என்ற பொதுத்தலைப்புகள் குறித்த எனது மனப்பதிவில் இஸ்லாமியர்கள் விலக்கிவைக்கப் பட்டுள்ளனரா? இஸ்லாமியத் துவேஷம் கொண்ட யாதொரு மதவாத அமைப்பிலும் அங்கத்துவம் வகிக்காத நான் ஏன் இஸ்லாமியர் மீதான வன்செயல்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எதையும் எழுதவில்லை? இத்தொகுப்பின் கடைசிக்கதையில் தேமே என்று நிற்கிற ஒருவனை வலிய சண்டையிழுத்து இன்னொருவன் தாக்கும்போதும் ஏனென்று கேட்காமல் பேருந்துக்காக காத்திருக்கும் மூவரில் நானும் ஒருவனா? மதநம்பிக்கை கொண்ட இருதரப்புக்குள் நடக்கிற சண்டையில் மதநம்பிக்கையற்ற எனக்கொரு வேலையும் இல்லை என்று காரணம் கற்பித்துக்கொண்டு நடுநிலைவகிக்கும் மனநிலைக்கு ஆட்பட்டுவிட்டேனா? உண்மையில் நடுநிலை என்று ஒன்று இருக்கிறதா? இரண்டு ஆதிக்கவாதிகளுக்குள் சண்டை என்றால் அடித்துக் கொள்ளட்டும் என்று வேடிக்கைப் பார்க்கலாம், விசிலடித்தும் ரசிக்கலாம். இங்கு அதுவல்லவே நிலைமை. எனில், ஒடுக்குகிறவர்களையும் ஒடுக்கப்படுபவர்களையும் ஒரேநிறையில் வைத்து அளவிடுகிற கள்ளத் தராசாக எப்போது மாறியது என்மனம்? ஒருவேளை, மதச்சார்பற்ற உடலும் இந்துத்துவ மனமும் கொண்டு மனிதன் பாதி மிருகம் மீதி என்றாகிவிட்டேனோ? நாட்டை யார் ஆண்டாலும் மக்களின் மனதை ஆளப்போவது நாங்களே என அத்வானி கொக்கரிப்பதன் பின்னுள்ள சூட்சுமம் இதுதான் போலும். இந்தச் சமூகம் மதவாதத்தால் முற்றுகையிடப்படும் அபாயத்தையும் அது உருவாக்கக்கூடிய பாரதூரமான கேடுகளையும் உணர்ந்தவர்களும்கூட செயலற்றுக் கிடப்பதால் உத்வேகம் பெற்றுதான் அத்வானி போன்றவர்களால் இவ்வளவு அகங்காரமாக பேசமுடிகிறது.
முதலில் அவர்கள் ராமனை ஆதியந்தமில்லாத கடவுள் என்றார்கள். பிறகு, பிறப்பும் இறப்புமில்லாத அந்தக் கடவுள் குறிப்பிட்ட சர்வே எண்ணுள்ள இதோ இந்த இடத்தில்தான் பிறந்தார் என்றும் புளுகினார்கள். ‘‘... நம் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட எந்த வழிபாட்டுத்தலத்தையும் சேதப்படுத்தாதே. மக்கள் மன்னரை மனதார வாழ்த்தி மகிழும்படி நீ ஆட்சி செய். உன் நிர்வாகத்தால் அத்தகைய உறவை ஏற்படுத்திக்கொள். இஸ்லாம் தனது நற்குணங்களால் வளரும். அது பேரச்சத்தால் வளராது...’’ என்று தன் மகன் ஹூமாயுனுக்கு உயில் மூலம் ( ராம் புனியானி, தலித் முரசு- செப்2008 ) அறிவுறுத்திய பாபர் மீது அவர்கள் பல அபாண்டங்களை சுமத்தினார்கள். ராமன் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்து நிரவி அதன்மீதே பாப்ரி மசூதி கட்டப்பட்டது என்கிற பொய்யை அவர்கள் திரும்பத்திரும்பக் கூறிவந்தார்கள்.
அவர்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்க வரலாறு ஆயிரம் உண்மைகளை தன்னுள் வைத்திருக்கிறது. ஆனால் அந்த உண்மைகளை புரிகிற மொழியில் சொல்லி மக்களைத் திரட்ட வேண்டிய சக்திகள் ஐம்பது பேர் படிக்கிற தனிச்சுற்று பத்திரிகைகளில் எழுதினார்கள் அல்லது ஒத்தக் கருத்துள்ளவர்கள் நிறைந்த பாதுகாப்பான அரங்குகளில் ரகசியம்போல் பேசி திருப்திகண்டார்கள். மறுபக்கத்திலோ இந்துபயங்கரவாதிகள் களத்திலே இறங்கி மக்களைத் திரட்டிக் கொண்டிருந்தார்கள். அயோத்தியில் செங்கல் சூளையே இல்லை என்பது போல ராமனுக்கு கோவில் கட்ட வீட்டுக்கொரு செங்கல் கேட்டு வெகுமக்களை தமது திட்டத்தில் பங்கெடுக்க வைத்தார்கள். அவரவர் ஊருக்கே திசைதெரியாத மக்களை அயோத்தி இருக்கும் திசை பார்த்து(?) வணங்கச் சொல்லி திரட்டினார்கள். விளக்குப்பூஜையின் பெயரால் பெண்களையும், வானரசேனை என்ற பெயரில் வில் அம்புகளோடு பழங்குடிகளையும் அணிதிரட்டியிருந்தார்கள். முதல் செங்கல்லை வைத்து ராமன்கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பொறுப்பை பீகாரைச் சேர்ந்த ராமேச்வர் சௌபால் என்கிற தலித்துக்கு வழங்கியதன் மூலம் அவர்கள் தலித்துகளுக்கும் குறிவைத்தார்கள்.
இப்படி,
இந்துத்துவத்திற்கு எதிரான அணியின் இயல்பான கூட்டாளிகளாக இருந்திருக்க வேண்டிய சக்திகளையெல்லாம்
அவர்கள் தமது பயங்கரவாத நிகழ்ச்சிநிரலின் கீழ் திரட்டிவிட்டிருந்தனர் என்பதை வெட்கமின்றி
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மக்களிடம் இயல்பாகக் காணப்படுகிற கடவுள் நம்பிக்கையை
இன்னொரு மதத்தாருக்கு எதிரானதாக கட்டமைப்பதில் அவர்களுக்கு தடையேதும் இருக்கவில்லை.
இந்தியாவை இந்துமயமாக்கு- இந்துவை ராணுவமயமாக்கு என்ற தமது திட்டத்தில் சங்பரிவாரத்தினர்
அச்சமூட்டும் வகையில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஆம் அவர்கள் மக்களின் கைகளில்
கொலையாயுதங்களைக் கொடுத்தார்கள். நாடெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களின் இலக்காயின
இஸ்லாமியர்களது சுயமரியாதையும் உயிரும் உடைமைகளும்.
வெறியேற்றப்பட்ட கொலை மிருகங்கள் எந்தநேரத்திலும் தன்மீது பாயக்கூடும் என்ற அச்சுறுத்தலால் முற்றுகையிடப்பட்ட மனதோடு ஒவ்வொரு இஸ்லாமியரும் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அறிவுஜீவிகள் என்ற கற்பிதத்தில் ஆட்டுதாடி வளர்த்துக்கொண்டிருந்த நானும் என்னொத்த நண்பர்களும் என்ன செய்துகொண்டிருந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கையில் வெட்கமாயிருக்கிறது. ‘ரத்த யாத்திரையான ரதயாத்திரை’ என்பது மாதிரியான வார்த்தை விளையாட்டுகளை மதவெறி எதிர்ப்பு பிரச்சார வாசகம் என்று சீரியஸாக நம்பிக்கொண்டு சுவரொட்டிகளாக்கி ஒட்டினோம். இந்தியாவில் மூன்றே மூன்று மதங்கள் மட்டுமே இருப்பதான நினைப்பில் கோவில் மசூதி சர்ச் மூன்றையும் ஒன்றையொன்று உரசியபடி தட்டிகளில் வரைந்து தள்ளினோம். சாத்தியமான இடங்களில் மும்மதங்களின் பெரியவர்கள் கைகோர்த்து செல்லும்படியான மதநல்லிணக்க ஊர்வலங்களை நடத்தினோம். சாத்தியமில்லாத இடங்களில் மாறுவேடப்போட்டியில் பங்கேற்பவர்களைப் போல நாங்களே மும்மதப் பெரியவர்களாக வேடமணிந்து ஊர்வலம் வந்தோம். இலக்கியவாதிகள் பேனாவைவிடவும் பெரிதென நம்பி வைத்திருந்த ஜிப்பாக்கள் பாதிரியின் அங்கியாகவும் இஸ்லாமியப் பெரியவரின் மேலாடையாகவும் இயல்பாகப் பொருந்தின. சற்றே சிவந்த உடல்வாகு கொண்ட ஒருவருக்கு பூணூலை அணிவித்து இவர்தான் இந்து என்று சித்தரிப்பதில் எங்களுக்கு ஒரு குழப்பமும் வரவில்லை. அப்படியிருப்பவர்தான் இந்து என்பதில் அன்றைக்கிருந்த தெளிவு பின்னாளில் மங்கிப்போன துயரத்தை எங்கு கொண்டுபோய் ஆற்ற?
ஆனால் இப்படியான முயற்சிகள் எதுவும் இந்துத்துவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் குறுக்கீடுகளாக அமையவில்லை. பன்முகத்தன்மை கொண்டதொரு சமூகமாக இணங்கி வாழும் பண்பை தக்கவைத்துக் கொள்வதற்கான மக்களது மனசாட்சியை உலுக்கியெழுப்பும் உக்கிரமோ சமூகத்தைக் கூறுபோடும் மதவாதத்தை தனிமைப்படுத்தும் ஆற்றலோ அவற்றுக்கு இல்லை. அடையாளப்பூர்வமான எதிர்ப்பாக குறுகிப் போகுமளவுக்கு உள்ளீடற்று இருந்தன. எனவே இந்துபயங்கரவாதிகளின் கொடிய வன்முறைகளை தன்னந்தனியாய் எதிர்கொண்டாக வேண்டிய இக்கட்டில் தள்ளப்பட்டனர் இஸ்லாமியர்கள். ஹெலிகாப்டரில் பறந்து வெள்ளச்சேதத்தைப் பார்வையிடும் ஆட்சியாளர்களைப் போல கலவரங்கள் நடந்து முடிந்த பிறகு இழவு வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்தவர்களின் சடங்கார்த்தமான நடவடிக்கைகள் இழந்த எதையும் திருப்பித்தரவில்லை. உடுக்கை இழந்தவர் கையாக நீண்டு அரவணைத்துக்கொள்ள ஒருவருமற்ற கையறுநிலையில் தானும் தன் சமூகமும் அவலத்தின் பெருஞ்சுழிக்குள் சிக்கித் திணறிய அந்த காலகட்டத்தின் அலைக்கழிப்பை அதன் சூட்டுக்குள் புகுந்து எழுதியிருக்கிறார் ஃபிர்தவுஸ்.
எந்தக் கலவரமும் திடுமென ஒருநாளில் வெடித்துவிடுவதில்லை. அது வெடிப்பதற்குத் தேவையான கருமருந்து நீண்டகாலமாக மக்களின் மனதில் கொட்டிவவைக்கப்படுகிறது. திரிமூட்டும் தேதிதான் முன்பின்னாகிறது. இஸ்லாமியர் மீது துவேஷம் வளர்க்கும் உள்ளடக்கம் கொண்ட 40 வகையான அவதூறுகளை இந்துத்துவாவினர் தொடர்ந்து பரப்பி வருவதாகவும் அதனடிப்படையிலான முன்னனுமானங்களை உருவாக்கிக் கொள்கிறவர்கள் பெருமளவில் கலவரங்களில் பங்கேற்பதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த அணிதிரட்டலின் நுட்பத்தை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் வாழிடம், தொழில், வியாபாரம், கல்வி என்று பல்வேறு தளங்களில் இஸ்லாமியரோடு இணைக்கமுடன் நெருங்கி வாழ்ந்துவருகிற இந்துக்களின் மனதிலும்கூட இந்துத்வாவினர் எப்படி நஞ்சு பாய்ச்சுகிறார்கள் என்பதை நாம் இன்னும் கண்டறியவில்லை என்றே தோன்றுகிறது. உற்றாரும் உறவாருமாய் இருந்தவர்களே தங்கள்மீது வெறுப்பைக் கக்கும்போது அந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வாய்விட்டு அரற்றுகின்றனர் ஃபிர்தவுசின் கதைமாந்தர்கள்.
வாக்காளர் பட்டியல், டெலிபோன் டைரக்டரி, பொதுவிநியோகக் கடைகளின் பதிவேடு போன்ற ஆவணங்களின் துணையோடு அந்தந்தப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களின் பட்டியலைத் தயாரித்து அவர்கள்மீது தனது கொலைப்பட்டாளங்களை ஏவிவிடும் உத்தியை இந்து பயங்கரவாதிகள் கையாள்கின்றனர். தனிநபர் மோதல்களுக்கு மதச்சாயம் பூசி மதக் கலவரங்களைத் தூண்டுவதும் மதக்கலவரங்களைப் பயன்படுத்திக் கொண்டு தனிநபர்கள் தம் பகைகளை கணக்குத் தீர்த்துக்கொள்வதும் இதற்குள் அடக்கம். கலவரங்களுக்கூடாக நுழையும் காவல்துறை இந்துத்துவாவின் சீருடைப் போர்த்திய அடியாட்களாக செயல்படுவதை அம்பலப்படுத்துகிறார் ஃபிர்தவுஸ்.
இயல்பிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் பண்பில்லாத காவல் துறையினரின் மனவியல்பே தலித்துகளுக்கும் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான வன்மம் கொண்டதாகத்தான் தகவமைக்கப்படுகிறது. எனவே சாதி அல்லது மதக்கலவரங்களில் அவர்கள் ஒருபக்கச்சாய்வுடன்/ ஒரு தரப்பாகவே மாறிவிடுகின்றனர். அகமதாபாத் (1969), பிவாண்டி- ஜல்கான்- மகத் (1970), தலிச்சேரி (1971), தில்லி (1984), மும்பை (1992-93) மதக்கலவரங்கள் மீதான விசாரணைக் குழுக்கள் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துச் சுட்டுமளவுக்கு அவப்பெயர் ஈட்டியவர்கள் அங்குள்ள காவல்துறையினர். கோவை மாநகர காவல்துறையும் இதற்கு விதிவிலக்கானதல்ல என்பதை கொடிய சித்திரவதைகளாலும் பேரிழப்புகளாலும் அறிந்துவைத்துள்ள இஸ்லாமியர்களின் குரல் இத்தொகுப்பு முழுவதிலும் துயரார்ந்த விசும்பலைப்போல் எழும்பியும் அடங்கியும் நம்மை நிம்மதியிழக்கச் செய்கிறது. ‘அடிபடுபவனின் குரல்’ கதையில் வரும் முஸ்தபா கமால் பாட்சா என்ற எழுத்தாளனை கைதுசெய்துவிட்டு ‘‘தேடப்பட்டு வந்த முக்கியத் தீவிரவாதி கைது- திடுக்கிடும் மர்மங்கள்...’’ என்று வெளியாகும் அறிக்கையை வாசிக்கிற போது குஜராத்திலும் காஷ்மீரிலும் நாடெங்கிலும் நடைபெற்றுவரும் என்கவுண்டர்கள் பற்றிய கட்டுக்கதைகள் அம்பலமாகின்றன.
நடைபாதை வியாபாரத்திற்கு செல்கிறவனையும், திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு வருகிறவனையும் தேநீர்க்கடையில் உரையாடிக்கொண்டிருக்கும் நண்பர்களையும் அவர்கள் இஸ்லாமியர் என்பதற்காகவே தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி சிறையிலடைத்து விடும் கொடுமையை நிறுத்தும்படி காவல்துறையை உலுக்கியெடுக்கும் படியான போராட்டங்கள் எதுவும் இங்கு வெடிக்கவில்லை. எனவே ஜனவரி-26, ஆகஸ்டு 15, டிசம்பர் -6 போன்ற நாட்கள் வெளிப்படையாக இஸ்லாமியர்களை வேட்டையாடும் நாட்களாக மாறியுள்ளன. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தொழில் வணிக நடவடிக்கைகளிலும் இஸ்லாமியருக்குரிய பங்கை வழங்க மறுக்கிற அரசாங்கம் இந்தியாவின் சிறைகளை மட்டும் இஸ்லாமியரைக் கொண்டு நிரப்பிவருகிறது. திரும்ப வரவே வராத அவர்களது காலத்தை அது பறித்துக்கொள்கிறது.
வாழ்வதற்கான அரியதருணங்களை இளையபருவத்தை இஸ்லாமிய இளைஞர்கள் சிறைகளில் தொலைக்கிற அவலத்திற்கு யார் பொறுப்பேற்பது? ஒரு குற்றமும் இழைக்காதவர்களை ஆண்டுக்கணக்கில் அடைத்துவைத்து விடுவிக்கிறபோது இந்தச் சமூகத்திற்குள் பொருந்த முடியாமல் அவர்கள் பின்தங்கிப்போகிறார்கள். ஆளுமைச்சிதைவு கண்ட இவர்கள் இந்த உலகம் தங்களை விட்டுவிட்டு முன்னே போய்க்கொண்டிருப்பதாக மனச்சோர்வு கொள்கின்றனர். முன்புபோல குடும்பத்தாரோடு இயல்பாக கலந்து பழக முடியாமல் தம்மைத்தாமே தனிமைப்படுத்திக்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகின்றனர். சிறையில் நடந்த சித்திரவதைகள் குறித்து ஆழ்மனதில் தங்கியுள்ள அச்சம் அவர்களை நிம்மதியிழக்க வைக்கிறது. ஒரு சராசரி மனிதர்களுக்குரிய எல்லா வாய்ப்புகளையும் அவர்கள் இழந்து தவிக்கின்றனர். எந்தக் களிம்பினாலும் ஆற்றமுடியாத காயங்கள் அவர்களது உடம்பிலும் மனதிலும்.
‘‘...
நான் அந்த நகரத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள்
எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன அல்லது சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டன என்பதை நேரில்
கண்டேன். சுமார் 24 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துக்களின் இழப்பு 200 கோடியைத்
தாண்டும். இதனை இந்து-முஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல்துறையின் கைங்கரியத்தினால்
நடந்தது. இதன் காரணமாகத் தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது’’ என்று மூத்த பத்திரிகையாளர்
குல்தீப் நய்யார் 8.1.98 டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் எழுதியிருந்ததை இவ்விடத்தில்
இணைத்துப் பார்த்தால் தடாவிலும் பொடாவிலும் இஸ்லாமிய இளைஞர்கள் சிக்கவைக்கப்பட்டதன்
பின்னேயுள்ள இந்துப்போலிஸ் மனநிலையை விளங்கிக்கொள்ள முடியும். ஆம், அவர்கள் குற்றவாளிகளை
தப்புவிக்கிறார்கள், பாதிக்கப்பட்டவர்களை தண்டிக்கிறார்கள்.
மதச்சார்பற்ற அரசு என்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் சட்டத்தின் கீழ் இயங்குவதாக பீற்றிக்கொள்கிற இந்த நாட்டின் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல்நிலையங்கள் அவ்வளவும் இந்துப் பெரும்பான்மைவாதம் என்கிற பேரழிவு நோயால் பீடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நாத்திகர்கள் மற்றும் சிறுபான்மை மதத்தவரின் நம்பிக்கைகளும் உணர்வுகளும் கிஞ்சித்தும் மதிக்கப்படாத இடங்களாக அவை உள்ளன. பெரியாரின் வழிவந்ததாய் புருடா விடுகிற பகுத்தறிவுக்கொழுந்துகளின் ஆட்சியில் சாமிப்படங்கள், பூஜைகள், பக்திப்பாடல்கள் என்று இந்துமதச் சடங்குகள் நடக்காத அலுவலகம் ஒன்றையும் நம்மால் காணமுடியவில்லை. இந்து என்கிற தனது மனநிலையைக் கடந்து ஒரு பொதுமனிதராக பணியாற்றுவதற்கான சட்டப்பூர்வ நெருக்கடி எதுவும் இல்லாததால் பெரும்பாலான அரசுஊழியர்கள் அப்பட்டமான இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலைக்கு லகுவில் தாவுகிறார்கள். அவர்களது பொதுப்புத்தியில் தொழிற்சங்கங்கள்கூட தலையிடுவதில்லை. குற்றமும் தண்டனையும் கதையில் வருகின்ற சாகுலைப் போன்ற யாராவதொரு இஸ்லாமியர் கண்ணும் காதுமற்ற அவர்களிடம் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் நெடுங்காலமாய்.
3.
ஆயிற்று, காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு பாப்ரி மசூதியை இடித்து 18 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ‘‘ஹிந்துக்கள் தங்கள் வலிமையைப் பயன்படுத்தி மாற்றார்கள் எங்கெல்லாம் நமது திருக்கோயில்களை அழித்து தங்கள் வழிபாட்டுஸ்தலங்களை உருவாக்கியுள் ளார்களோ, அவற்றை இடித்து மீண்டும் திருக்கோயில்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் ஹிந்துக்களின் நிலைப்பாடு. இது எப்போது சாத்தியம்? ஹிந்துக்கள் அரசியல் பலம் பெறும் போது சாத்தியமாகும். ஆக்கிரமிப்பு மனோபாவம் ஹிந்துக்கள் மனதில் அதிகரிக்கும்போது இது நடக்கும். எனவே நாம் செய்ய வேண்டியது எல்லாம் Aggressive Hind எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஒன்றுதான்...’’ ( ஸ்ரீராம ஜன்மபூமி போராட்ட வரலாறு, ஆர்.பி.வி.எஸ் மணியன்- பக்.13) என்கிற விசுவ ஹிந்து பரிசத்தின் உத்தி, இன்னொருவருக்குச் சொந்தமான இடத்திற்கு சட்ட விரோதமாக உரிமை கோருவது- சர்ச்சைக்குரியதாக மாற்றுவது- பிறகு அடியாட்களின் வன்முறையால் அபகரித்துக்கொள்வது என்கிற கட்டப் பஞ்சாயத்து தாதாக்களின் உத்திதான். அவர்களது இவ்வகையான ஆக்கிரமிப்புகளுக்கு சட்டப்பூர்வ ஒப்புதல்போல அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பும் அமைந்துவிட்டிருக்கிறது. எனவே இந்தியாவில் எந்த இடம்தான் இந்துவுக்கு சொந்தமில்லை? என்று அவர்கள் இஸ்லாமியர்களின் ஒவ்வொரு வழிபாட்டுத்தலத்தின்மீதும் உரிமை கோருகிறார்கள். இதோ மசூதி இடிக்கப்பட்ட நாளான இன்று விசுவ இந்தப் பரிஷத் ஒட்டியிருக்கும் சுவரொட்டி ‘‘பாக்கி இருக்கு பாக்கி இருக்கு, காசி மதுராவில் பாக்கி இருக்கு... ’’ என்று கொக்கரிக்கிறது.
தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்தை பதற்றத்தில் மூழ்கடித்துக் கொல்வதற்கும், சமூகத்தை என்றென்றும் இணக்கம் காணமுடியாப் பகைமைக்குள் வீழ்த்தவதுமான இந்து பயங்கரவாதிகளின் கொடுஞ்செயல்களுக்கு எதிராக என்னதான் செய்யப்போகிறாய் என்ற கேள்வியை நம் ஒவ்வொருவர் முன்னும் எழுப்புகிறார் ஃபிர்தவுஸ். அது, இஸ்லாமியருக்கு கருணை காட்டுங்கள் என்ற இரைஞ்சுதல் அல்ல. ஒரு நாகரீக சமூகத்தின் அங்கத்தவர் என்ற முறையில் உனது சகமனிதனை நீ எவ்வாறு நடத்தப்போகிறாய் என்ற அறச்சீற்றத்தின் குரல். ‘‘மனிதனை மனிதனாகக் கண்டால் அவனுடனான உறவை மனித உறவாகவே கொள்ள முடியும். அப்போது அன்பிற்கு அன்பையும் நம்பிக்கைக்கு நம்பிக்கையையும் மட்டுமே பரிமாறிக் கொள்ள முடியும்...’’ என்கிறார் மார்க்ஸ். என்ன செய்யப்போகிறீர் என்னருமை வாசகர்களே?
- ஃபிர்தவ்ஸின் இந்தத் தொகுப்பு இவ்வளவு காலம் கடந்து வருகிறதே என்ற ஆதங்கத்துடன் அம்பேத்கர் நினைவுதினம்/ இஸ்லாமியரின் கறுப்பு தினம்/ 06.12.10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக