வெள்ளி, ஜூன் 24

தீர்த்தம் - ஆதவன் தீட்சண்யா



முதுகெலும்பை நினைவூட்டி அனுப்பிய லிகிதங்கள் பலவும்
திரும்பி வந்துவிட்டன
சரியாய் எழுதப்பட்டிருந்த முகவரியில் பிழைத்திருந்தவர்களும்
வாங்க மறுத்த வினோதம் புரியவேயில்லை என்று 
புலம்பிப்போனார் தபால்காரர்

வாங்கிக்கொண்ட விலாசதாரர் சிலரும்
குரங்கிலிருந்து மனிதனாய் பிரிந்ததும்
முதலில் கைவிடப்பட்ட உறுப்பை நினைவூட்டி வதைக்கும் அதிகாரத்தை
யார் கொடுத்தது உனக்கென்று கொதிக்கும் ரத்தத்தால் பதிலெழுதியிருந்தனர்

முதுகெலும்பை விற்று
கூடுதலாய் வாய்க்கு கட்டிக்கொண்ட பற்களால் இளிக்கும்போது
கிட்டும் ஆதாயங்களை பட்டியலிட்டிருந்த 
மொட்டைக்கடுதாசியொன்றின் கீழ்
அனேகமாய்
ஊரார் அனைவரும் கையொப்பமிட்டிருந்தனர்

இன்னும் நான் தப்பியிருப்பதை அறிந்து
கூனர் உற்பத்தியாளர் சங்கத் தலைவராகிய திருவாளர் அரசாங்கம்
இன்றைய முதுகெலும்புச் சந்தையில் நிலவும் போட்டியை
சபலமூட்டும் மொழியில் விவரித்தப் பின்
‘நிமிர்தலின் தொடக்கம் பணிதலின் முடிவு
பணிதலற்றவர் ஏதுமற்றவர்
கேள்விகளற்ற வாழ்வு நிம்மதியான சாவு’ என
தாக்கீது அனுப்பியிருந்தார்

கடுக்கும் உபாதையை கணமும் சகியாமல்
தூக்கத்திலேயே என் சிசு பெய்யும் மூத்திரத்தை
ஆளுக்கொரு துளி தீர்த்தமாய்
அனுப்பி வைப்பதாய் எனது அடுத்த உத்தேசம்

நன்றி: DYFI இளைஞர் முழக்கம், 2007 ஜூன்  இதழ்
 

2 கருத்துகள்:

  1. ‘நிமிர்தலின் தொடக்கம் பணிதலின் முடிவு
    பணிதலற்றவர் ஏதுமற்றவர்
    கேள்விகளற்ற வாழ்வு நிம்மதியான சாவு’ என
    தாக்கீது அனுப்பியிருந்தார்
    கடுக்கும் உபாதையை கணமும் சகியாமல்
    தூக்கத்திலேயே என் சிசு பெய்யும் மூத்திரத்தை
    ஆளுக்கொரு துளி தீர்த்தமாய்
    அனுப்பி வைப்பதாய் எனது அடுத்த உத்தேசம்

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...