புதன், நவம்பர் 30

அமெரிக்கத் தேர்தல்: சில அவசரமான அவதானிப்புகள் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா

காலம் இதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையை தோழர் ந.முத்துமோகன் அவர்கள் வாசிப்பதற்காக அனுப்பியிருந்தார். முக்கியத்துவம் கருதி இங்கு பகிரப்படுகிறது. 


அமெரிக்கத் தலைவர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட  அடுத்தநாள் காலையில் இப்பதிவை கணனியில் எற்றுகிறேன். இக்கட்டுரையை நாலாண்டு கழித்து அதாவது டிரம்பின் ஆட்சியின் முதல் தவணைக்குப்பின் படிக்கும்போது இங்கே சொல்லப்பட்டவை கோமாளித் தனமானவையா அல்லது தீர்க்கதரிசனமானவையா என்பது  டிரம்பு நடந்துகொள்ளும் விதத்திலும் அவரை சரித்திரம் எப்படி விசாரணை செய்கிறது என்பதிலும் பொறுத்திருக்கிறது.
            
டொனால்ட் டிரம்ப்பின்  வெற்றி அறிவிக்கும் முக்கிய  செய்தி: அமெரிக்கத் தலைவர் பதவிக்கு முன் அனுபவம், அறிவு, மற்றும் தகுதிகள் போன்றவை தேவை இல்லை; பணமும், சொல்வாக்கும், வீறாப்பும் எளியவரைக் கேலி செய்யும் அடாவடித்தனமும், முக்கியமாக  ஊடங்களின் தலைப்புச்செய்திகளை வசியவைக்கும் தன்மையும் இருந்துவிட்டால், அமெரிக்கக் கனவை ஒரு வெள்ளை இனத்தவர் சாதித்துவிடலாம். ஈழப் பெற்றொரின் அவ்வையார் தன்மையான  "பிள்ளையே கவனமாகப் படி" என்ற வார்த்தைகளுக்கு, மோடி செல்லாது என்று அறிவித்த 500, 1000 ருபாய் நோட்டுகள் போல், இனி அதிக மதிப்பிருக்காது.

ஓர் ஆபிரிக்க அமெரிக்கரின் ஆட்சிக்குப்பின் வெள்ளையரின் பேரினவாதத்தை ஆதரிக்கும் கே.கே.கே.யின் ஆசீர்வாதத்துடன்  பதவிக்கு வருவது, ஒபாமாவின் தேர்வு உருவாக்கியதாகச் சொல்லப்படும் பின்-இனஞ்சார்ந்த (post racial) சமுதாயம் வெறும் கற்பிதம் என்பதை உணர்த்துகிறது. ''மீண்டும் அமெரிக்காவை மகத்தான நாடாக்குவோம்`` என்ற இவரின் தேர்தல் பிரசாரத்தில் பொதிந்துகிடக்கும் உப பிரதி: அமெரிக்காவை மறுபடியும் வெள்ளையர்  கைக்குக்  கொண்டுவருவதே.

டிரம்ப் எற்படுத்திய நவீன கட்டுக்கதைகளில்  ஒன்று, இவர் தன்னை உழைக்கும் வர்க்கத்தினரின் வேட்பாளராகவும், ஹிலரியை தற்போதைய ஆதிக்கத்தரப்பின் (The Establishment) வேட்பாளராகவும்  சித்தரித்தே. குடியேறிகள், அரசின் நல உதவி பெறுகிறவர்கள்,  பிரத்தியேகமான  சலுகைகளை அனுபவிக்கும் சிறுபான்மையினர், கூட்டு நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு பாதகமாகத் திணித்த ஒப்பந்தங்களுக்கு எதிரான வேட்பாளராகவும், கடினமாக வேலைசெய்யும் அமெரிக்க  உழைப்பாளிகளை  பாதுகாக்கும் நாட்டுப்பற்றுமிக்க வேட்பாளராகவும், அவர்களில் ஒருவராகவும் தன்னை டிரம்ப் அடையாளப்படுத்திக்கொண்டார். இது உண்மையல்ல. இவரும் ஆதிக்கத்தரப்பைச்  சேர்ந்தவர். துருப்பிடித்த பகுதி (Rust Belt) என்று அழைக்கப்படும் ஊர்களிலிருக்கும் டிரம்பின்  ஆதரவாளர்கள் இவர் நடத்தும் உண்டுறை விடுதியில்  ஒரு நாள் தங்க  இவர்களின் ஒரு மாதச் சம்பளம் போதாது. இந்தத் தொழிலாளர்களுக்கும் டிரம்புக்கும் இடையே காணப்படும் வர்க்க இடைவெளி, தலைமன்னாரையும் ராமேஸ்வரத்தையும் பிரிக்கும்  பாக்கு நீரிணையைவிட விரிவானது, அழமானது.  இவர் அமைச்சரவையில் நியமனமாகப்போகும் பெயர்களைப் பாருங்கள். எந்த சகதியை வடிகட்டவேண்டும் (drain the swamp) என்று சொன்னாரோ அதே வாஷிங்டன் என்ற சகதியில் இருந்து வந்தவர்கள்.

டிரம்ப் பற்றிய இன்னுமொரு கட்டுக்கதை: வெள்ளை இன உழைப்பாளர் வர்க்கத்தின் கோபமே இவரின் வெற்றிக்குக் காரணம் என்பது. புள்ளிவிபரங்களை சற்று ஊன்றிப் படித்தால்  கிடைக்கும் செய்தி சற்று வேறானது. இது தொழிலாள வர்க்கம் கொதித்து ழும்பி நடத்திய புரட்சி அல்ல. ஆண்டுக்கு $250,000 மேலாகச் சம்பளம் வாங்குவோரில் 48 வீதத்தினரும் டிரம்புக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதேபோல் வருடத்திற்கு  $30,000 கீழ் ஊதியம் பெறுகிறவர்களில் 53 வீதம் ஹிலரி கிலிண்டனுக்குத் தங்கள்  சம்மதத்தைத் தெரிவித்திருந்தார்கள். மற்றும் 49வீத வெள்ளை பட்டதாரிகள் வாக்கு டிரம்புச் சென்றிருக்கிறது. இந்த புள்ளிவிபரம் தரும் இன்னும் ஒரு விநோதமான செய்தி. பெண்ணின வெறுப்பை தன் வாழ்நாள் சாதனையாக்கிய டிரம்புக்கு வெள்ளைப்பெண்களில் 53வீதம் வாக்கைப் போட்டார்கள். வெள்ளையர்களின் சிறப்புரிமை, அந்த இனத்தின் தனிச்சலுகைகள் இந்த வெள்ளைப்பெண்களுக்கு முக்கியமாகப்பட்டது. பெண்னிய உரிமைகள் அல்ல. கருக்கலைப்பு பற்றிய டிரம்பின் கல்தோன்றா மண்தோன்றாக் காலத்து பிற்போக்கான கருத்துகளைப் பற்றி இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மக்கள் கணிப்பியலில் ஆயிரம் ஆண்டுகாலத்தினர் (millennial) என்று அழைக்கப்படும்  இளம் வயதினர்களில் பெரும்பான்மையினர் டிரம்புக்கு எதிராக வாக்களித்தது இந்த புள்ளிவிபரம் தரும் ஆறுதலளிக்கக்கூடிய வாசிப்புகளில் ஒன்று.

டிரம்பின் சாதனைகளில் ஒன்று, பின்-உண்மை அரசியலை (post-truth politics) பொது சொல்லாடலில் புகுத்தியது. இந்த அரசியல் தகைமையற்ற கூற்றின் ஆக்கியோன் டிரம்ப் இல்லை. ஆனால் இந்த கருத்தாடலை தீவிரப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். உண்மைகள், சான்றுகள்,  உறுதிசெய்யக்கூடிய நிகழ்பாடுகள் ஒன்றுமே இப்போது முக்கியமல்ல. வாய்க்கு வந்தபடி சொல்லவேண்டியது, அது உண்மையா பொய்யா என்ற கவலை இல்லை. ஹிலரி பொய்பேசுகிறவர், தார்மீகக் கோலானவர் என்றார். இவைகளுக்கான ஆதாரங்கள் ஒன்றுமே தரவில்லை.

"செய்யுளில் பிரசாரம் செய்யுங்கள், உரைநடையில் ஆட்சியை நடத்துங்கள்" என்று  படிப்பதற்குப் புத்திசாலித்தனமான ஆனால் நடைமுறைக்கு  அறவே உதவாத  வசனங்களை நியூ யோர்க் ஆளுநர் Mario Cuomo சொன்னதாகக் கூறப்படுகிறது. டிரம்ப் தன்னுடைய பிரசாரத்தை வசையில் தான் நடத்தினார். டிரம்ப் ஒரு சமவாய்ப்பு (equal opportunity) வசவாளர். பெண்கள் முதல் வலுதளர்ந்தோர் வரை இழிவாகப் பேசினார்.  அவருடைய வசை மொழிக்கு முன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் திருவள்ளுவர் போல் தெரிகிறார்கள். இந்தக் கீழ்த்தரமான,  கடுங்காரமான, பிறிதானவர்களை ( the other) குற்றம் சாட்டும் அரசியல் பிரசாரம் டிரம்பின்  தனி குத்தகை அல்ல. இதற்கு முன்பும் அமெரிக்க தலைவர் தேர்தலில்  காரசாரமான இன, மத வெறி பரப்புரை செய்யப்பட்டிருகிறது. அந்தப் பெருமை 1850 முதல் 1853 வரை குடியரசு அல்லது ஜனநாயக கட்சியைச் சேராத  அமெரிக்க தலைவராயிருந்த Millard Fillmore ச் சேரும். இவர் அங்கம் வகித்த கட்சியின் பெயர் The Know-Nothing Party. இவர்கள் இன்றைய கே.கே.கே. யின் முன்னோடிகள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவரின் கட்சியின் ஆதாரவாளர்கள் கிறிஸ்தவ சீர்திருத்தச் சபையைச் சேர்ந்தவர்கள். டிரம்பைப் போலவே இவர்கள், குடியேறிகள் அமெரிக்க கலாச்சாரத்தை தீட்டுப்படுத்துகிறார்கள் என்ற விஷத்தைப் பரப்பினார்கள்.  டிரம்புக்கு முஸ்லிம்கள் போல் இருவர்களுக்கு கத்தோலிக்கர். பாப்பாண்டவர் அமெரிக்காவை ஆட்கொண்டுவிடுவார் என்று பயம் இருந்தது. இன்று டிரம்ப்பின் சொல்லாடலில் காணப்படும் எல்லா அவதூறுகளும் இவர்களின் பிரசரத்திலும் காணலாம். "எல்லா மனிதர்களும் சமனானவர்கள்" என்று எங்கள் அரசியல் சாசனம் கூறுகிறது. இவர்களுடைய பார்வையில் "எல்லா மனிதர்களும் சமனானவர்கள், ஆனால் கறுப்பர்கள், கத்தோலிக்கர்கள், அன்னியர்கள் தவிர என்று ஆபிரகாம் லிங்கன் இவர்களின் மனப்போக்கை ங்கலாயித்திருந்தார்.

இலக்கியத்தில் எதிர்காலம் பற்றி  தீர்க்கதரினமான ழுத்துக்கள் உண்டு.  Franz Kafka நாஜிகளின் வாயுக்கூடங்கள் ( gas chambers) பற்றி முன் எச்சரிகை செய்தார். Orwell அவருடைய  1984  இல் மக்கள் வாழ்வில் எங்கும்  வியாபித்திருக்கிற சார்வாதிகார ஆட்சி எவ்வாறு ஒரு தனிமனிதனின்  ஆளுமையையும், சுதந்திரத்தையும் ஒருநாள் வன்முறையில் கட்டுப்பட்டுக்குக் கொண்டுவரும் என்று கற்பனை செய்தார். Philip Roth அவருடைய Plot Against Americaவில் யூத எதிர்ப்பாளர்கள் அமெரிக்க ஆட்சிக்கு வந்தால் எற்படும் விபரீதங்களை புனைகதையாக ழுதினார். ஆனால் டிரம்பைப் போல் அதிதீவிர தனித்தன்னாட்சியாளர் ஒருவர் உருவாகலாம் என்று முன்னுணர்வுடன் சொன்ன நாவல்   Sinclair Lewis வின்  It Can't Happen Here (1935).  இந்த நாவலில் ஒரு வல்லாண்மையாளர் (fascist) அமெரிக்க ஆட்சியைக் கைப்பற்றினால் விளைவும் தாற்பரியங்களைக் கதையாகச் சொன்னார். அவர் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன் நாவலில் பதிவு செய்தது இன்று நிறைவேறியிருக்கிறது. இந்த நாவலின் கதாநாயகன் வின்ரிப்புக்கும் டிரம்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவருமே ஆணவப்போக்குடையவர்கள். இரண்டு பேருக்கும் மெக்சிக்கர்களே எதிரி. வின்ரிப்பு அந்த நாடு மீது போர் தொடுத்தார். டிரம்ப் அந்த வேலையை இன்னும் செய்யவில்லை. நாலாண்டு காலம் இருக்கிறது. இவர்கள் பார்வையில் பெண்கள் இருக்கவேண்டிய இடம் அடுப்படி.  இந்த நாவல் பற்றி இன்னொரு இதழில் விரிவாக ழுதியிருக்கிறேன். இந்த நாவல் தரும் மறைமுகமான செய்தி: வல்லாண்மை அமெரிக்காவில் அமுலானால் அது அமெரிக்கத்தன்மையானது என்று அழைக்கப்படும் When fascism comes to America, they will call it Americanism.

மெக்சிகோ-அமெரிக்க  எல்லையில் மதில் எழுப்புவேன், முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வருவதை தடைசெய்வேன் என்றெல்லாம் டிரம்ப் அவருடைய பிரசாரத்தில் கூறிய அடாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா என்று பதட்டத்துடன் இருப்பவர்கள் இரண்டு வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் : ஒன்று ஒபாமா மற்றது குவாந்தானமோ  பே (Guantanamo Bay), ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் இந்த தடுப்பு காவல் நிலையத்தை இழுத்து முடுவேன் என்றார் ஒபாமா. எட்டு வருடங்கள் கழித்து இன்னும் கைதிகள் அங்கே இருக்கிறார்கள்!

மக்கள் தேசிய விருப்புவாதம் உலகு எங்கும் காணப்படுகிறது. இன்று ஆட்சி நடத்தும் அரசியல் தலைவர்களைப் பார்க்கும்போது எமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அமெரிக்காவில் டிரம்ப், துருக்கியில் Tayyip Erdoğan,  பிலிப்பின்ஸ் தீவுகளில் Rodrigo Duterte,  செக் குடியரசில்  Miloš Zeman,  ஹாங்கேரியில் Viktor Orban...  அதேபோல் அய்ரோப்பாவில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் எதிர் கட்சிகளைப் பாருங்கள்; அச்சம் இன்னும் அதிகமாகும்.  பிரான்சில் Marine Le Pen, ஒல்லாந்தில் Geert  Wilders,  ஆஸ்திரியாவில்  Norbert Hofer. இவர்கள் பரப்புரைக்கும் அதீத தேசியவாதம் தங்களுடைய நாடுகளுக்கேற்ற தன்மைகளைக் கொண்டிருந்தாலும் இந்தத் தலைவர்களை ஒன்றிணைக்கும் சாமச்சாரங்கள் உண்டு. குடியேறிகளைக் கட்டுப்படுத்தவேண்டும், அவர்கள்  தூய தேசிய அடையாளத்தை கறைபடுத்துகிறவர்கள்; இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள், ஆகையினால் அவர்களைக் கண்காணிக்கவேண்டும்; உலகமயமாக்கல் தேசிய அரசுகளின் இறையாண்மையை சிதைத்து விடுகிறது, எனவே சுதந்திர சந்தையைக் கட்டுப்படுத்தவேண்டும்... இவர்களின் ஒரே நோக்கம் அன்னிய தீய சக்திகளிடமிருந்து பழைய வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பதே. சமத்துவ சர்வ தேச, பன்முக ஒழுங்கினை உருவாக்குவதைவிட, தத்தம் நாட்டுக் குடிமக்களின் தனிநிலைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுகிறார்கள். பிற நாடுகளுடன் தொடர்பைத் துண்டித்து ஒரு ஒதுக்குநிலையை விரும்புகிறார்கள். எதிர் உலகமாயக்குதலுக்கு இவர்கள் தரும் விடை பொருளாதார தேசியம்.

கடைசியாக, இதேபோன்று தாராளவாதம் மங்கி, இருள் ஓங்கிய நாஜி நாட்களில் Bertolt Brecht ஏழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. அவரின் கவிதையை உரைநடையில் தந்திருக்கிறேன். இவை நல்லுணர்ச்சி தரும் வாக்கியங்கள் அல்ல. ஆனாலும் வாசித்துப் பாருங்கள்: இந்த இருண்ட நாட்களில் பாட்டுப்  பாடலாமா? ஆம், பாடலாம். பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும், இருண்ட நாட்கள் பற்றி. 

1 கருத்து:

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...