தர்க்கம் அற்ற கதை - ஆதவன் தீட்சண்யா


உங்களைப் பின்தொடர்ந்ததில் கிடைத்த இந்தக் கதையை இப்பதான் முடிச்சேன். யாராவதொருத்தர் படிச்சுப் பார்த்து சரியா வந்திருக்கான்னு சொல்ல முடியுமா?

ஏய் பாகீரதி, தொடப்பத்த அப்படி ஓரமா போட்டுட்டு இதை வாங்கி சத்தமா படி. நாங்களும் கேட்கிறோம் என்றாள் அபிதா. அய்யய்யோ, நான் ஸான்ஸ்கிரிட்ல படிச்சதால எனக்கு தமிழ்ல அவ்வளவா படிக்க வராது. நீ படியேன்டி என்று கிரிஜாவிடம் தள்ளிவிட்டாள் பாகீரதி. ஏய்,  ஹவ் கேன் ஐ...  செகண்ட் லாங்வேஜ் ஜெர்மன் படிச்ச நான் எப்படிடி தமிழ்ல படிப்பேன் என்று கிரிஜாவும் நழுவிவிட அபிராமி வெடுக்கெனப் பிடுங்கி படிக்கத் தொடங்குகிறாள். நீங்களும் கேளுங்கள்.

***
யோவ் எழுத்தாளரே, நீ எழுதப்போற இந்தக் கதையில நாங்க யார்?
தூய்மைப் பணியாளர்
ஓ... இப்படி தூயத்தமிழ்ல சொன்னா தொடப்ப வேலை மாறிடுமா?’
அதெப்படி மாறும்?’
கதையில கூட எங்களுக்கு வேற வேலை தரமாட்டே?’
கதையில மாற்றி எழுதிட்டா நிஜத்துல மாறிடுமா?’
நிஜத்த மாத்துற மாதிரி கதைய எழுத உனக்கு ஏலாதுன்னு சொல்லு.’
அடியே, வேலை நேரத்துல எதுக்குடி அந்தாளோட வீண் பேச்சு?’
நீ போடா தம்பி, போய் ஒரு ஓரமா என்னமாச்சும் கிறுக்கிக்கிட்டு கிட...’
ஆமா, தோகை விரிச்ச மயிலாட்டம் தொடப்பம் இருக்குது... அது துப்புரவா ஊரையெல்லாம் கூட்டிப் பெருக்குதுன்னு எழுது...’
ஏன்டி நம்ம கதையை எழுதவந்திருக்கிற இந்த ஆளையும் விரட்டுறியே, பொறவு யாருதான் நம்மை கதைய எழுதுவாங்க?’
அடி போடி இவளே, இடைத்தரகு இல்லாம நம்மக் கதைய நாமளே சொல்லமுடியாதா?  இந்தாளுக்கு கதை வேணும்னா நாம பேசிக்கிற வேறு கதைகளைக் கேட்டு எழுதிப் பிழைச்சிக்கட்டும்...’

சொச்ச பாரத் மிச்ச பாரத்துன்னு ஷோ காட்டி பிலுக்கிக்கிட்டுத் திரியற எந்த நாயும் இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கிறதில்ல. எப்பவும்போல நாமதான் ஊரையே கூட்டியள்ளி சுத்தம் பண்ண வேண்டியிருக்கு என்று காலங்காத்தால ஆரம்பித்தாள் அபிராமி (பெயரையாவது மாற்றும் திட்டத்தின் கீழ் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கதையில் இடம்பெறும் மற்றப் பெயர்களும் இத்திட்டத்தன்கீழ் வருபவையே). இந்தக் கங்காட்சியெல்லாம் இங்கென்ன புதுசா? நாட்டுக்கு ராசா மாறினாலும் தோட்டுக்கு பொழப்பு மாறாதுன்னு அந்தக் காலத்துலியே நம்மவங்க சும்மாவா சொன்னாங்க என்று தன்பங்குக்கு சலித்துக்கொண்டாள் பாகீரதி. தோ, ஊரூருக்கு சமத்துவபுரம்னு கட்டுனாங்களே, அங்கெல்லாம் வாரம் ஒரு சாதியா தெருக்கூட்டுது? சும்மா ஊரை ஏமாத்தப் பேரு வைப்பாங்க... நீ வேலைய பாருடி என்றாள் அபிராமி. ஏய், மெதுவா பேசுடி யார் காதுலயாவது வுழுந்துடப் போவுது. அப்புறம் குப்பைக் கூட்டுற பொட்டைக பேசுற பேச்சா இதுன்னு எகத்தாளம் பேசுவானுங்க என்றாள் பாகீரதி. இந்தா இதை எழுதிக்கிட்டிக்கிற இந்தாளுக்குக்கூட இவளுகள இவ்ளோ பேசவுடலாமா வேணாமாங்கிற குழப்பம் இருக்கத்தான் செய்யும். குப்பைக் கூட்டுறவளுக இப்படியெல்லாம் யதார்த்தத்துல பேசவேமாட்டாங்க, இது கதாசிரியர் வலிந்து எழுதியிருக்கார்னு எந்த இலக்கியப்புடுங்கியாவது தம்மேல பொல்லாப்பு சொல்லிருவாங்கன்னு தயங்கித்தயங்கிதான் அடுத்த வரிய எழுதறார். குப்பைக்கூட்டிக இன்னின்னதுதான் பேசணும்னு சட்டம் கிட்டம் ஏதாச்சும் இருக்கா? அட அப்படி ஒரு சட்டமே இருக்குதுன்னு வை, அதை சீவக்கட்டையால சிங்காரிச்சு விரட்டுவமா இல்லை நாவடங்கிப் பொழைப்பமா? யதார்த்தத்துல பேசாதவங்க கதையிலாவது இஷ்டம்போல பேசட்டும்னு எங்கள பேசவிட்டுட்டு அப்பால நகருங்க கதாசிரியரே என்று  என்று இளக்காரம் பொங்கச் சொன்னாள் அபிராமி. மான அவமான உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு கதையொன்றை இழந்துவிடக்கூடாது என்பதால் நான் குறுக்கிட்டு ஏதும் பேசாமல் அவர்களை பின்தொடர்ந்தேன். 

நகராட்சி ஆணையர், வட்டாட்சியர், வேளாண் இணை இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டப் பொறியாளர் ஆகியோரது அலுவலகங்களைக் கொண்டது அந்த பெரிய வளாகம். காவல் நிலையமும், கீழமை மேலமை நீதிமன்றங்களும், மின்னாளுமை சேவை மையமும்கூட அந்த வளாகத்திற்குள்தான் இருக்கின்றன. அந்த வளாகத்தவர்களுக்கென்று கோவிலொன்றும்கூட அங்குண்டு ( மசூதியும் சர்ச்சும் ஏன் இல்லை என்று கேட்டு “தாயாப்புள்ளையா இருக்குற இடத்துல” அமைதியை குலைக்க வேண்டாமென வாசகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்). அலுவலக வேலைநேரம் தொடங்குவதற்கு முன்பாக உள்ளும் புறமுமாக ஒட்டுமொத்த வளாகத்தையும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் ஹவுஸ் கீப்பிங் வேலை இவர்களது சுயஉதவிக்குழுவுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டிருந்தது.

ஊருக்கு குந்தகம் பண்றவங்க எல்லாரும் ஒரே இடத்தில் இருந்துத் தொலையட்டும்னு தான் இத்தினி ஆபிசுங்களையும் இங்கேயே கட்டியிருப்பாங்க போல என்று ஆரம்பித்தாள் அபிராமி. கவர்மென்ட் ஆபிஸ்ல குப்பைக் கொட்றேன்னு இவங்க சொல்றது நெசம்தான் போல, ஒவ்வொரு ரூம்லயும் ஒரு வண்டி குப்பை. பாவம், யாரார் கொடுத்த மனுங்களோ இந்தா இங்க இழுபடுது என்று சொல்லியபடியே முதல் அலுவலகத்தை கூட்டிக்கொண்டிருந்தார்கள் இருவரும். கோவில் பக்கம் கூட்டப்போயிருந்த கிரிஜாவும் அபிதாவும் பதைபதைக்க இவர்களிடம் ஓடிவந்து அந்தக் கோயில் பக்கம் போகவே முடியல, பயங்கர நாத்தம் என்றார்கள். உள்ளே இருக்கிற சாமிகீமி செத்துப் போய் நாறுதோ என்னமோ என்றாள் அபிராமி. அட சும்மா இருடி, இவ வேற நேரங்காலம் தெரியாம அரசியல் பேசிக்கிட்டு... மெய்யாலுமே நாத்தம்டி என்றாள் கிரிஜா.

பின்னால எங்கியாச்சும் சாக்கடை அடைச்சிருக்கும், ஹரிஹர ஸர்மாவும் ஷிவ்ராம் சாஸ்திரியும் பக்கத்துலதான் எங்கியாச்சும் இருப்பானுங்க, கூப்புட்டு அடைப்ப எடுக்கச் சொல்லுடி...

அய்யோ, சாக்கடை நாத்தமா இருந்தா எங்களுக்கு தெரியாதாடி?  இது வேற மாதிரி அடிக்குது.

கோவில் பக்கம் நால்வரும் விரைந்தார்கள். நாற்றம் கோவிலுக்குள்ளிருந்து வரவில்லை, அது கோவிலுக்கு அள்ளையில் இருக்கிற தாலுகாபீஸிலிருந்து வருகிறது என்பதை பாகீரதிதான் துல்லியமாக கண்டு சொன்னாள். பெருச்சாளி ஏதாவது செத்திருக்குமோ என்று கேட்டாள் அபிராமி. நல்லவேளை, ஊழல் பெருச்சாளின்னு உன்னோட வழக்கமான பாணியில் சொல்லாமப் போனியே என்று பதிலடி கொடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பை கிரிஜாவும் அபிதாவும் வேண்டுமென்றே நழுவவிட்டார்கள்.

வட்டாட்சியர் அலுவலகம் பிரதான நுழைவாயிலிருந்து உட்பக்கம் தள்ளி ஒதுங்கியிருந்தது. அலுவலகத்தை நெருங்கநெருங்க துர்நாற்றம் வலுத்து குடலைப் புரட்டியது. நால்வரும் மூக்கைப் பொத்திக்கொண்டு பக்கம் போனார்கள். அந்த அலுவலகத்தின் கதவு சன்னல் எல்லாமே சாத்தப்பட்டிருந்தன. அரசாங்க ரகசியம் எதுவும் வெளியே போயிடக்கூடாதுன்னு இப்படி பூட்டிருக்காங்க போல என்றாள் பாகீரதி. ஓய், சும்மா தொணதொணக்காதடி என்று கடிந்துகொண்ட அபிராமி, வடப்புற சன்னல் கண்ணாடி ஒன்று உள்ளங்கையளவு உடைந்து ஓட்டையுடன் இருப்பதைக் கண்டு ஓடிப்போய் அதில் கண்வைத்தாள். அலறுவதற்கு திறந்த வாயை அவளே தன் கைகொண்டு பொத்தியபடி மற்றவர்களை சைகையில் அழைத்தாள். கதையில் ஏதோ முக்கியமான திருப்பம் உருவாகிறதுபோல என்கிற பரபரப்பில் நானும் எட்டிப் பார்த்தேன்.

***
வட்டாட்சியர் அலுவலகத்தில், அதுவும் அவரது மேசையில் நான்கு பிணங்கள் கிடப்பதாக பரவிய செய்தி ஊரையே திரட்டி அங்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டிருந்தது. ஏதேனுமொரு தேவைக்காக வரும் சாமானியர்களை அலைக்கழித்து மனதளவில் சாகடித்து நடைப்பிணமாக அனுப்பிவிடும் சுபாவம் பெற்றிருந்த அந்த அலுவலகத்தில் உண்மையிலேயே நான்கு பிணங்கள் இருக்கிறதென்றால் பார்ப்பற்கு கூட்டம் அலைமோதத்தானே செய்யும்? தங்களது உதவியில்லாமலே நால்வர் செத்துப்போய் தப்பித்துவிட்டதால் ஆத்திரமடைந்த போலிஸார் பெரும் களேபரம் செய்து அங்கு அமைதியை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஆள் நடமாட்டமில்லாத ரயில் ரோட்டோரம், கண்மாய், பாறையிடுக்கு, புதர் மண்டிய பூங்காக்கள், பாழடைந்த கிணறுகள், புகழ்பெற்ற மடங்கள், உயர்கல்வி நிறுவனத்தின் விடுதிகள் மாதிரியான இடங்களில் பிணங்கள் கிடப்பது ஊரில் வழமைதான். ஆனால் தாலுகாபீசில், அதுவும் தாசில்தார் மேசையில் பிணங்கள் கிடப்பது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதால் இவ்விசயத்தை தொலைக்காட்சிகள் பெருஞ்செய்தியாக்கிக் கொண்டிருந்தன.

ஊழியர்களாலும் அதிகாரிகளாலும் திருவாளர் பொதுசனத்தாலும் அன்றாடம் குப்பைமேடாகி விடும் அலுவலக வளாகத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வதற்காக அதிகாலையே வந்துவிட்டிருந்த நால்வரில் அபிராமி என்பவர்தான் பிணங்களை முதலில் பார்த்திருக்கிறார். அந்த அறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக தனது சகதோழிகள் கூறியதால் சந்தேகப்பட்டு வடப்புற சன்னலின் உடைந்தக் கண்ணாடி இடுக்கில் பார்த்தபோதுதான் பிணங்கள் கண்ணில்பட்டதாக எமது செய்தியாளரிடம் தெரிவிக்கிறார் அபிராமி. அவரது பேட்டியை நேயர்கள் இப்போது எமது நேரலையில் காணலாம்.’’ அபிராமியுடன் இருந்து அடுத்தடுத்து பிணத்தைக் கண்டவர்கள் என்ற அடிப்படையில் பாகீரதி, கிரிஜா, அபிதா ஆகியோரது பேட்டிகளும் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன.

குற்றவாளிகளை பிடிப்பதைவிடவும் குற்றத்திற்கு யாரையாவது பொறுப்பாக்கிவிடுவதில் காவல்துறையினர் சமர்த்தர்கள். விசாரணை வளையத்திற்குள் கொண்டுபோய் ‘வழக்கமான பாணியில்விசாரித்து செய்யாத குற்றத்தை செய்ததாக ஒத்துக்கொள்ள வைக்கும் அவர்களது கொடூரப்பார்வையை எங்கள் மீது திருப்பிவிடக்கூடாது என்று ஆரம்பித்து தாங்கள் கண்டதை விலாவாரியாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் நான்கு பெண்களும். எனக்கு தெரிந்த செய்தியாளர் ஒருவர் நீங்கள் இதுபற்றி கருத்து ஏதும் சொல்லவிரும்புகிறீர்களா என்றார். இல்லை, கதாபாத்திரங்களை பேசவிட்டு கதாசிரியர் ஒதுங்கிக்கொள்வதே சரி, அவர்கள் பேசியதே போதும் என்று மறுத்துவிட்டேன். 

***
அலுவல்பூர்வமாகவும் அதற்கு புறம்பானதுமான வேலைகள் முடிந்து அலுவலகத்தைப் பூட்டும் போது உள்ளே யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு பூட்டுவதுதான் வழக்கம். நேற்றும் அவ்வாறுதான் பூட்டப்பட்டது. பூட்டும்போது உள்ளே ஒருவரும் இல்லை என்பதை ஊழியர்கள் பலரும் உறுதி செய்தனர். தாசில்தாருக்கும்கூட இந்த நடைமுறையில் சந்தேகம் ஏதுமில்லை. ஆனால் பூட்டிவிட்டுப் போன அலுவலகம் பூட்டிய நிலையிலேயே இருக்க, பிணங்கள் எப்படி உள்ளே போயிருக்க முடியும்? மேசையில் கிடத்தியது யார்? உள்ளாள் ஒத்தாசை இல்லாமல் பிணங்கள் உள்ளே வந்திருக்கவே முடியாது. அப்படியானால் அந்த கருப்பாடு யார்? குழம்பிப்போன தாசில்தார் தனது பணியாளரைக் கொண்டு காவல் துறையினர் முன்னிலையில் கதவைத் திறக்கச் செய்தார்.  போலிசாருடன் சேர்ந்து உள்ளே நுழைய முயன்ற பலரும் குபீரெனத் தாக்கிய துர்நாற்றத்தால் பின்வாங்கிவிட, சுதாரித்துக் கொண்ட சில போலிசார் மூக்கைப் பொத்திக்கொண்டு முன்னேறினர். 

உள்ளே நுழைந்த போலிசார் முதலில் அறைக்குள் வேறு யாரும் பதுங்கியிருக்கிறார்களா என்று சோதித்தனர். யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அவர்கள், பிணங்கள் உள்ளே வந்திருப்பதற்கான வழிவகைகள் பற்றியே துருவித்துருவி ஆராய்ந்தனர். சந்தேகம் வந்துவிட்டால் பானையைத் திறந்து யானையைத் தேடுவதும் உண்டுதானே. அவர்கள் ஒரு இண்டுஇடுக்கையும் விட்டுவிடாமல் சோதித்தனர். கைரேகை நிபுணர்களும் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு புலன் விசாரணை தீவிரமாகியது. அடையாளம் காணவியலாத படி பிணங்கள் உருக்குலைந்து அழுகிப் போயிருந்தன. அடையாளம் காணவியலாத அல்லது காணக்கூடாதென தாங்கள் கருதுகிற எத்தனையோ பிணங்களை அநாதைப் பிணங்கள் என்று கணக்குத் தீர்ப்பதில் நீண்ட அனுபவமுள்ள காவல்துறை இவ்விசயத்தில் சற்றே திணறித்தான் போனது. மேற்கூரையும் கூட பிரிக்கப்படாத நிலையில், பூட்டிக்கிடந்த இந்த அறைக்குள் பிணங்கள் எப்படி யாரால் வந்தன? ஒருவேளை பூட்டும்போதே பிணங்கள் உள்ளே இருந்தனவா? அலுவலகம் பூட்டப்பட்டதற்கும் பிணங்கள் காணப்பட்டதற்கும் இடைப்பட்ட இந்த குறுகிய நேரத்திற்குள் பிணங்கள் எப்படி இந்தளவிற்கு அழுகிப் போயிருக்க முடியும்? வேறெங்கோ செத்து நாள்பட்ட பிணங்களை பூட்டிக்கிடந்த இந்த அறைக்குள் யாரும் கொண்டு வந்து போட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார்களா?

***
தாசில்தார் அறைக்குள் பிணங்கள் எப்படி வந்தன என்பதையே கண்டறிய முடியாமல் போலிஸ் திண்டாடிக்கொண்டிருக்கும் போதே அண்டை மாவட்டத்தின் ஆட்சியரது அலுவலகத்திலும் வீட்டிலுமாக மொத்தம் 17 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. குடும்பத்தோடு உல்லாசப் பயணம் சென்றிருந்த அவர் வீடு திரும்பியபோது வாசற்படியில் ஒன்றும் வரவேற்பறையில் மற்றொன்றுமாக இரண்டு பிணங்களைக் கண்டார். படுக்கையில் இரண்டும் பாத்ரூமில் ஒன்றுமாக அவர் அடுத்தடுத்தப் பிணங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே தனது பொம்மைகளுக்கிடையே குழந்தையின் பிணம் ஒன்று இருப்பதாக அவரது மகள் அலறினாள். பயத்திலிருந்த அவளை தேற்றிக் கொண்டிருக்கும் போதே அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அங்கும் பிணங்கள் இருப்பதாக அரற்றியது. கலெக்டரின் இருக்கையில் அவரைப்போலவே அமர்ந்திருந்த பிணமொன்றை அகற்றியெடுப்பது பெரும்பாடாகிவிட்டதாகவும் படித்து கலெக்டராகும் ஆசையோடு இருக்கும்போதே செத்திருக்கக்கூடும் என்றும் அவரது நேர்முக உதவியாளர் திகிலுடன் விவரித்தார். 

அனல்போல வெயில் தீய்க்கும் அவ்வூரில் இந்தப் பிணங்கள் மட்டும் ஆற்றிலிருந்து இழுத்துப் போட்டது போல ஈரம் காயாமல் சொதசொதவென நீரும் நிணமும் கசிந்தபடியே கிடந்தன.  ஆண்கள் பெண்கள் பால்குடி மறவா பச்சிளம் பாலகர்கள் என்றிருந்த இந்த பதினேழு பிணங்களும் ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட போது, அவற்றுக்கு உரிமை கோரி ஒருவருமே வரவில்லை. கடைசியில், மாவட்ட ஆட்சியரே பொக்லைனில் குழிவெட்டி கூட்டாகப் புதைத்துவிட்டு நள்ளிரவில் பங்களாவுக்கு திரும்பினார். வாசலிலேயே காத்திருந்த அவரது மனைவியும் குழந்தைகளும் இன்னமும் அங்கிங்கெனாதபடி பங்களா முழுக்க பிணங்களே நிறைந்திருப்பதாகவும் அவை தங்களை பழிவாங்கக்கூடும் என்று அஞ்சுவதாகவும் அரற்றினர். ஒரு மாறுதலுக்காக வெகுதூரம் தள்ளியிருந்த தங்களது சொந்த ஊருக்கு அவர்களை அழைத்துப்போன ஆட்சியர், மறுநாள் அதிகாலையில் தனக்கருகில் ஆணும் பெண்ணுமாக இரண்டு பிணங்கள் படுத்திருப்பதைக் கண்டார். அவற்றின் காதுகளில் ஊற்றப்பட்டிருந்த விஷம் வழிந்து அவரது படுக்கையை நனைத்துவிட்டிருந்தது. உதவிக்கு யாரையாவது அழைக்கலாமென வாய் திறப்பதற்குள் அந்தப் பிணங்கள் இரண்டும் சடசடவெனக் கருகத்தொடங்கின. வேகும் உடல்கள் பாளம்பாளமாக வெடித்து அந்த அறை முழுவதும் சதைக்கொத்துகளாக சிதறத் தொடங்கின. 707 கலெக்டர்கள் உள்ள இந்த நாட்டில் உன்னை மட்டும் பிணங்கள் இப்படி பின்தொடருமளவுக்கு என்ன பாவம் செய்தாய் என்று குடும்பத்தினரும் உறவினர்களும் சரமாரியாக துளைத்தெடுத்த கேள்விகளுக்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை. தனது பணிக்காலத்தில் கொல்லப்பட்டவர்களில் யாராவது இப்படி பிணங்களாக வந்து மிரட்டுகிறார்களா, அப்படிதானென்றால் மீதிப் பிணங்களும் வீடு புகுந்தால் தன் கதி என்னவாகும் என்பதைத் தவிர அவருக்கு வேறு யோசனையே இல்லாமல் போனது.

***
வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் தொடர்புடைய இடங்களில் பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக எந்த அலுவலகத்தில் பிணங்கள் கிடைக்கும் என்று சனங்களிடையே காரசாரமான விவாதம் நடக்கத்தொடங்கியது. அடுத்தது இன்னார் அலுவலகத்தில் தான் என்று சிலரும் அதில் இத்தனை பிணங்கள் கிடைக்கக்கூடும் என்று வேறு சிலரும் பந்தயம் கட்டி சூதாடுமளவுக்கு விசயம் முற்றிக்கொண்டிருந்தது. ஆனால் இவர்கள்  யூகித்ததற்கு மாறாக இம்முறை அலுவலகங்களில் அல்லாமல், எரிந்து கரிக்கட்டையாகிப்போன 22 பிணங்களை ஒரு வீட்டிலும் அதேரீதியில் கருகிப்போன மேலும் 22 பிணங்களை மற்றொரு வீட்டிலுமாக காண வேண்டியதாயிற்று. விசாரித்துப் பார்த்ததில் அந்த வீடுகளில் வசிப்பவர்கள், 1973ஆம் வருடத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாய் இருந்த இருவரின் வாரிசுகள் எனத் தெரியவந்தது. அலுவலகங்களை விட்டுவிட்டு இப்படி தனிநபர்களின் வீடுகளுக்குள் பிணங்கள் விழத் தொடங்கிவிட்டதால், இனி அடுத்து யாருடைய வீட்டில் வேண்டுமானாலும் பிணங்கள் கண்டெடுக்கப்படலாம் என்கிற அச்சம் நாடுபூராவும் பரவிக் கொண்டிருந்த வேளையில் வடமாநிலம் ஒன்றின் உயர் நீதிமன்றத்தில் 21 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதற்கு மறுநாளே அதே நீதிமன்றத்தில் 58 பிணங்கள் ஒருசேர குவிந்திருக்கும் செய்தி வெளியாகி உலகத்தையே அதிரச்செய்தது. 27 பெண்கள் 16 குழந்தைகள் 15 ஆண்கள் என இந்த 58 பிணங்களும் முன்பு கண்டெடுக்கப்பட்ட பிணங்களைப் போலல்லாமல் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் இருந்தன. 1912ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் அந்தப் பழமையான நீதிமன்றம் பல பேருடைய சாவுக்கு காரணமாக இருந்து வந்துள்ள போதிலும் அதில் இதற்குமுன் பிணம் ஏதும் கண்டெடுக்கப்பட்டிருக்கவில்லை. இப்போதோ நுழைவாயில் தொடங்கி, நீதிபதியின் மேசை, அவரது இருக்கை, வழக்கறிஞர்கள் அமருமிடம், விசாரணைக்கூண்டு, நீதிபதி அவ்வப்போது குட்டித்தூக்கம் போடும் தனியறை என்று எங்கெங்கு பார்த்தாலும் பிணங்கள். வழக்காவணங்களும் வாய்தா கட்டுகளும் அடுக்கியிருந்த அலமாரிகளில்கூட மடிந்தும் சுருண்டும் பிணங்கள் கிடந்தன. பிணங்களைப் பார்த்த அதிர்ச்சியில் அலறியவர்களை அடக்குவதற்காக நீதிபதி சுத்தியலை அறைந்த அதிர்வு தாங்காமல் கூரையிலிருந்தும் சில பிணங்கள் விழுந்தன.

இவ்விசயத்தில் தானாக முன்வந்து அவசர வழக்கொன்றை பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றமானது, நீதிமன்றங்களுக்கு வருகிற மனிதர்களுக்கே நீதி கிடைப்பதில்லை என்கிற உண்மை தெரிந்திருந்தும் இந்தப் பிணங்கள் இங்கு வருவதானது, நீதிமான்களின் மனவுறுதியைக் குலைத்து அவர்களை பணிசெய்ய விடாமல் தடுக்கும் தேசவிரோதச் செயலாகும் என்று கருத்து தெரிவித்திருந்தது. ஆனால் இதற்காக பிணங்களுக்கு எப்படி என்ன தண்டனை கொடுப்பது என்கிற முடிவுக்கு உடனடியாக வரமுடியவில்லை என்கிற வருத்தத்தையும் பகிர்ந்துகொண்ட நீதிபதிகள், இந்தப் புதிய சூழலை மனதிற்கொண்டு ‘பொடா( Prevention of Deadbody Act)  என்கிற சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

***
நாட்டில் அரசோடு தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் பிணங்கள் விழுந்து கொண்டிருக்கும் அசாதாரணச்சூழல் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு பிரதமர் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வந்தது. அரசாங்கத்திற்கும் குடிமக்கள் பிணங்களாவதற்கும் நேரடித் தொடர்பிருப்பது இயல்புக்கு மாறானதோ அசாதாரணமோ அல்ல என்றும், அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க இவ்விசயத்தை சில எதிர்க்கட்சிகளும் சமூக (விரோத) ஊடகங்களும் மிகைப்படுத்துவதாகவும் ஆளுங்கட்சி பதிலடி கொடுத்தது. இருப்பினும் மடியிலே கனமில்லாததால் வழியிலே பயமில்லை என்ற கூறிக்கொண்ட ஆளுங்கட்சியின் தேசிய தலைவர், பிரதமர் பூமி திரும்பியதும் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் கூட்டப்படும் என்றார். இனி சுற்றியடிக்க ஒரு நாடும் மிச்சமில்லை என்கிற நிலையில் விமானத்தை விட்டிறங்கி ராக்கெட்டில் ஏறி வெவ்வேறு கிரகங்களுக்கும் சுற்றிக்கொண்டிருக்கும் பிரதமர் எப்போது பூமி திரும்புவார் என்பதுதான் ஒருவருக்கும் தெரியவில்லை.

***
கதையைப் படித்துக்கொண்டிருந்த அபிதாவை இடைமறித்த பாகீரதி கேட்டாள்: ‘நாட்டுல இப்படியொரு பிரச்னை நடந்துக்கிட்டிருக்கிற விசயமாச்சும் பிரதமருக்கு தெரியுமா?’
கீழேயிருந்து சொல்லாமலா இருப்பார்கள்?’ அபிராமி.
தகவல் தெரிந்து பிணங்களைப் பார்க்க பயந்துக்கிட்டு மேலயே சுத்திக்கிட்டிருப்பராக்கும்கிரிஜா.
அடியே, பிணங்கள்தான் அவரைப் பார்க்க பயப்படணும். அவர் பிரதமரானதே பிணங்களால தான்அபிதா.
அப்போ, ஒரு நடை வந்து அதுகளுக்கு தேங்க்ஸ் சொல்ற மாதிரி கதையில ஒரு ட்விஸ்ட் வையுங்க எழுத்தாளரே...’ பாகீரதி.

***
பிரதமர் பூமி திரும்பாமலிருப்பதற்கு நம்பத்தகுந்த காரணம் என்று வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. அதாவது பிரதமராலும் அவரது கூட்டாளிகளாலும் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் ஆயிரக்கணக்கானவர்களின் பிணங்கள் அவர் தரையிறங்கும் நாளில் ராக்கெட் ஏவுதளத்தில் குவிந்து மறித்து பெரும் விபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறதாம். விண்வெளிக்கு ஏவப்படும் பலவும் நடுவானில் வெடித்து கடலில் விழுவது இங்கு வாராந்திர வாடிக்கைதான் என்றாலும் அவையெல்லாம் ‘தோல்வியடைந்த தொழில்நுட்ப முயற்சிகள்என்கிற தலைப்பில் கணக்கு வைக்கப்பட்டு விடும். ஆனால் இது அப்படியானதல்லவே. ஒரு போராட்டத்தால் ராக்கெட் தரையிறங்க முடியவில்லை என்று செய்தி வெளியாவது நல்லதல்ல என விண்வெளியியலாளர்கள் கருதுவதால், பிரதமரை இப்போதைக்கு தரையிறங்கவிடாமல் மேலேயே சுற்றவிட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இந்த விவரம் தெரியாமல் அடுத்தடுத்த கிரகத்திற்கு உற்சாகமாகப் போய்க்கொண்டிருக்கிறாராம் பிரதமர். இந்த வாட்ஸ் அப் செய்திக்கு வந்த கமென்ட் ஒன்று: ‘கிரங்கங்களுக்கு கிரகம் பிடிச்சிருச்சேய்...’

ஜனாதிபதி மாளிகையில் அவரைத்தவிர வேறு பிணங்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் பலமான மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிணங்களைப் பொறுத்தமட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு பொருட்டேயில்லை. செத்தொழியட்டும் என்று பிணமாக்கினால், பிணங்களாகி தொல்லை கொடுப்பதை எப்படி சமாளிப்பதென ஆய்வு செய்ய ஜஸ்டிஸ் பாரபட்சன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அரசு அமைத்தது.

ஆணையம் தனது பூர்வாங்க விசாரணையை துவக்கவிருந்த தினத்தில் அதன் அலுவலகத்திலேயே நூற்றுக்கணக்கான பிணங்கள் விழுந்திருந்தன. இதற்கு முந்தைய பிணங்களைப் போலல்லாமல் இந்தப் பிணக்குவியலில் பல்வேறு மாநிலத்துப் பிணங்களும் இருந்தன. அவற்றை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும் போதே எதிர்பாராத திசையிலிருந்தெல்லாம் பிணங்கள் வந்து அலுவலகத்தில் விழுந்தன. துப்பாக்கி பேனட்டாலும் லத்திக்கம்பினாலும் பிறப்புறுப்பு கிழிக்கப்பட்ட பெண்களின் பிணங்கள், பெல்லட் குண்டு தாக்கி தசை கிழிந்து கன்றிப்போன குழந்தையின் பிணம், கைகால்கள் கட்டப்பட்டு நெற்றியில் சுட்டு வீழ்த்தப்பட்ட கட்டைவெட்டியின் பிணம், தலை வேறு முண்டம் வேறாக தரிக்கப்பட்ட செய்தியாளரின் பிணம், குண்டுவெடிப்பில் சிக்கி சதையிணுக்குகளாக சிதறிப்போன முதியவரின் பிணம், பூச்சிக்கொல்லி விஷத்தால் மாய்ந்த உழவரின் பிணம் என்று வகைப்படுத்தவே முடியாதபடிக்கு விகாரமாக பிணங்கள் வந்து விழுந்து கொண்டேயிருந்தன. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ஜஸ்டிஸ் மனமாச்சர்யன், சராசரியாக 11 நிமிடங்களுக்கு ஒரு பிணம் என்கிற அளவில் விழுந்துகொண்டிருக்கும் இப்போதைய நிலையே இனியும் தொடர்ந்தாலும் கூட நிர்ணயிக்கப்பட்டுள்ள காலவரம்பிற்குள் விசாரணை முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பிணங்களுக்கிடையே பணியாற்றுவது தங்களுக்கு அப்படியொன்றும் புதிதல்ல என்பதற்கு தங்களது கடந்தகால விசாரணை அறிக்கைகளே போதுமான சாட்சி என்று அவர் மேலும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஆரவாரமாக அறிவித்திருந்தாலும் ஜஸ்டிஸ் பாரபட்சன் ஆணையத்தினர், சாட்சியமளிக்க முன்வந்த குடிமக்களில் ஒருவரையும் சந்திக்க ஆர்வம் காட்டவில்லை. ஏற்கெனவே வெளியான ஏதாவதொரு ஆணையத்தின் அறிக்கையில் தேதி, இடம், பெயர் ஆகியவற்றை மாற்றிப் போட்டு புதுசு போல தயாரித்தளிப்பதில் நீண்டகால அனுபவம் பெற்றிருந்த அவர்கள் விரும்பிய இடங்களை உல்லாசமாக சுற்றிப் பார்ப்பதிலேயே பொழுதைக் கழித்தனர்.

பிரேக்கிங் நியூஸ் - 1: அருவியில் குளித்துவிட்டு திரும்பிய ஜஸ்டிஸ் பாரபட்சன் ஆணையத்தினர் மீது அழுகிய மனிதச்சதைகளை வீசி மர்மநபர்கள் தாக்குதல். 

பிரேக்கிங் நியூஸ் - 2 : ஜஸ்டிஸ் பாரபட்சன் ஆணையத்தினர் மீதான தாக்குதல் கோழைத்தனமானது. உள்துறை அமைச்சர் காட்டம்.

பிக் பிரேக்கிங் நியூஸ்: ஜஸ்டிஸ் பாரபட்சன் ஆணையத்தினர் தாக்கப்பட்டதற்கு ‘நீதிக்கான குடிமக்கள் நடுவம்என்கிற அமைப்பு பொறுப்பேற்பு. எனவே ‘தாக்குதலின் பின்னணியில் யார்?’ என்கிற தலைப்பில் இன்றிரவு 9 மணிக்கு பிரபல சிந்தனையாளர் சாறு, பிராப்ல சிந்தனையாளர் பீணூல் நாராயணன், கவிஞர் கோமியன் ஆகியோர் பங்கேற்கும் வாடகைவாயர்கள் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. 

ஜஸ்டிஸ் பாரபட்சன் ஆணைய அலுவலகம். நீதிபதிகளுக்கு எதிரே உட்கார்ந்திருந்த எழுவரில் ஒருத்தி ‘உங்களை நம்பி கொடுத்த வேலையை நீங்கள் ஒழுங்காகச் செய்து நீதி வழங்கி விடுவீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு துளியும் கிடையாது. ஆனால் பாதிக்கப்பட்ட நாங்கள் இத்தனை பேர் இங்கேயே இருந்தும் எங்களில் ஒருவரைக்கூட சந்திக்காமல் அறிக்கை எழுதத் துணிந்த குற்றத்திற்காகத்தான் உங்கள் மீது இந்த பலப்பிரயோகம். இப்போதாவது எங்களது வாக்குமூலங்களை பதிய முன்வந்தமைக்கு நன்றி. தொடங்கலாமா?’ என்றாள்.  ஆமோதிப்பதை தவிர தங்களுக்கு வேறு மார்க்கமில்லை என்பதை அறிந்திருந்தனர் நீதிபதிகள்.

* முதன்முதலாக கண்டெடுக்கப்பட்ட நான்கு பிணங்களும் எங்களது உறவினர்கள்தான். பத்து நாட்களுக்கு முந்தைய மழைமோடத்தில் செத்துப்போனார்கள். அவர்களை புதைக்க மயானத்திற்கு எடுத்துப்போன எங்களை ஊர்ச்சாதிக்காரர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். எங்களது பிணங்களை அங்கே புதைத்தால் அவர்களது பிணங்கள் தீட்டாகிவிடுமாம். சரி, உங்கள் புனிதத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சாலையோரம் அல்லது மலையடிவாரத்தில் ஏதாவதொரு இடத்தைத் தேடி புதைக்கலாமெனப் பிணங்களைத் தூக்கிக் கொண்டு போனோம். அவர்களோ ஊர் தீட்டாகிவிடும் என்று பாதையை மறித்து முள்வேலி போட்டுவிட்டார்கள். வேலியை அப்புறப்படுத்த முயற்சித்த எங்களை கடுமையாக தாக்கினார்கள். எனவே கொட்டும் மழையில் அங்கேயே பாடைகளை இறக்கிவைத்துவிட்டு நாங்கள் இந்த தாசில்தாரையும் காவல் துறையினரையும் சந்தித்து மன்றாடினோம். அவர்கள் ஊர்க்காரர்களோடு சேர்ந்துகொண்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகஎங்களில் பலர் மீதும் பொய்வழக்கு ஜோடித்து உள்ளே தள்ளிவிட்டார்கள். ஜாமீன் கிடைத்து நாங்கள் வந்து பார்ப்பதற்குள், எடுத்துப் புதைக்க ஆளில்லாமல் சதைத்துண்டுகளை வழித்தெடுத்து உங்கள் மீது வீசுமளவுக்கு அவர்களது உடல்கள் அழுகி நொதித்துப்போய்விட்டன. இப்படி நாட்கணக்கில் பிணங்களை வைத்துக்கொண்டு ஊர்க்காரர்களோடும் அரசு நிர்வாகத்தோடும் மல்லுக்கட்டிக் கிடப்பதே எங்களுக்கு வேலையா? வாழ்வதற்குதான் போராட வேண்டியிருக்கிறது என்றால், செத்து எங்களை புதைத்துக்கொள்ளவும் நாங்கள் போராடிக் கொண்டேயிருக்க வேண்டுமா?

எதை உண்ண வேண்டும் எதை உடுத்த வேண்டும் யார்கூட படுக்கவேண்டும் என்று எல்லாவற்றையும் தீர்மானிக்க தனக்கு உரிமை இருப்பதாய் சொல்லும் இந்த அரசாங்கம் நாங்கள் செத்துப்போனால் அடக்கம் பண்ணுகிற பொறுப்பையும் ஏற்கத்தான் வேண்டும். இனிமேல் நாங்கள் மயானமும் கேட்கமாட்டோம், பாதையும் கேட்கமாட்டோம். எங்கள் சேரியில் இனி யார் செத்தாலும் பிணங்கள் தாசில்தார் அலுவலகத்தில் இருக்கும்படியாய் செய்துவிடுவோம். தாசில்தாருக்கு நேரமிருக்கிற போது அவர் எங்கு வேண்டுமானாலும் புதைத்துக்கொள்ளட்டும்.

2. எங்கள் பெயரை பதினேழு பிணங்கள் என்றே பதிந்துகொள்ளுங்கள். நெடுங்காலம் வாழ்ந்திருக்க வேண்டிய எங்களை அந்தக் கலெக்டரின் ஒரு வார்த்தை கொன்றுவிட்டது. ஆமாம், நீதிகேட்டு நிராயுதபாணிகளாய் வந்த எங்களை சுட்டுக்கொல்ல தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அந்தாள் ஒரு கொலைகாரன். மனித உருவில் மறைந்தலையும் ஒரு பிணந்தின்னி. ஆற்றங்கரையில் எங்களை மடியில் கிடத்திக்கொண்டு கல்லும் கரைந்துருகும் படியாக எங்களது சொந்தங்கள் கதறிக்கொண்டிருந்தார்கள். சைரன் பொருத்திய தனது வாகனத்தில் ஜம்பமாய் வந்திறங்கிய அந்த கலெக்டர், வெடுக்கென எங்களை பிடுங்கிக் கொண்டுபோய் பிணவறையில் போட்டு அழுக வைத்தான். பிறகொரு நாள் ஒரு ஆளம்புக்குத் தெரியாமல் அவனே எங்களை அள்ளிப்போய் அநாதைப் பிணங்களைப் போல புதைத்து விட்டான். புதைத்துவிட்டால் எல்லாம் முடிந்தது என்கிற அவனது நினைப்பை பொய்யாக்காவிட்டால் அவன் அடுத்தடுத்தும் பலரை கொல்வான். மனித உயிர்களைப் பறிக்கும் கொடுஞ்செயலை தனது நிர்வாக நடவடிக்கையின் தவிர்க்கமுடியாத ஓரம்சம் போல நினைத்து தன்னைத்தானே நியாயப்படுத்திக் கொள்ளவும் துணிவான். எனவேதான் அவனை மட்டுமல்லாது அவனைப்போன்ற அதிகாரிகளை பின்தொடர்ந்து கண்காணிப்பதென்று முடிவெடுத்திருக்கிறோம். அவனது குற்றங்களுக்காக அவனது குடும்பத்தினரை பீதியூட்டலாமா என்று நீங்கள் நினைக்கலாம். இப்படியொரு கொலைகாரனின் அதிகாரத்தையும் அதன்வழியான சொகுசுகளையும் அனுபவித்துக்கொண்டு அவனோடு சேர்ந்து வாழ்வதற்கான தண்டனையை அவர்கள் பெற்றுத்தானேயாக வேண்டும்?

3. ஐயா, இந்த நாட்டின் நீதி உங்களது பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களைப் போன்றவர்கள் யாருக்கு நீதி வழங்குகிறீர்கள்? அலுவல்ரீதியாக உங்களுக்கிருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளுக்கிடையிலும் நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனிக்கவும் நீங்கள் தவறுவதில்லை. நீதிமன்றத்தின் கதவுகள் யாராலும் தட்டப்படாத நிலையிலும்கூட சில பிரச்னைகளில் நீங்களே தானாக முன்வந்து தலையிட்டு நீதிவழங்கலை உறுதிசெய்கிறீர்கள். ஆனால், நீங்களே பாதிக்கப்பட்டதாக உணர்ந்து உங்களை வாதியாக்கிக் கொள்ளும் இந்த விழிப்பு மனநிலை, 18 நிமிடங்களுக்கொரு முறை  நாங்கள் வன்கொடுமைக்கு ஆளாகும் போதோ அன்றாடம் எங்களில் மூவர் கொல்லப்படும் போதோ உறைநிலைக்குச் சென்று விடுகிறது என்பது குற்றச்சாட்டல்ல, உண்மை. நீங்களாக முன்வருவதிருக்கட்டும், நாங்களாக ஓடிவந்து கதறி கூப்பாடு போட்டாலும் கண்ணும் காதுமற்றவர்கள் போல நடந்து கொள்கிறீர்கள்.

நீதியின் சின்னமென நீங்கள் ஒரு கள்ளத்தராசினை ஏந்தியிருக்கிறீர்கள். நீங்கள் வழங்கும் தீர்ப்புகள் இந்தியாவின் சாதி பரிபாலன முறையை நினைவூட்டுகின்றன. நாங்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட வழக்குகளில்கூட கொலையாளிகள் பக்கம் அப்பட்டமாக சாய்ந்து அவர்கள் அனைவரையும் விடுவித்து நிரபராதியாக்குகிறீர்கள். எங்களை நாங்களே மாய்த்துக் கொள்ளவில்லை என்பது உண்மை. நாங்கள் கொல்லப்பட்டு உங்கள் முன் பிணமாகக் கிடப்பதும் உண்மை. ஆனால் நீங்களோ நீதிக்காக காத்துக் கிடக்கும் எங்களது பிணங்களை எவ்வித உறுத்தலுமற்று தாண்டிப்போய்  கொலையாளி என்று யாருமில்லை எனத் தீர்ப்பளிப்பளிக்கிறீர்கள். எங்களைப் பொறுத்தவரை இப்போது நீங்களே கொலையாளிகள். உங்களாலும் கொல்லப்பட்டுவிட்ட நாங்கள் வேறிடத்திற்கு செல்லப் போவதில்லை. ஏற்கெனவே நீதி செத்துக்கிடக்கும் உங்களது நீதிமன்றங்கள் அதன் மெய்யான பொருளில்- மயானங்களாக இருப்பதை உலகுக்கு உணர்த்தவே நீதிமன்றங்களை பிணங்களால் நிறைக்கத் தொடங்கியுள்ளோம்.
.....
....
***
கதை சரியா வந்திருக்கிறாப்ல தான் இருக்கு என்றார்கள் பெண்கள் நால்வரும். கிரிஜா மட்டும் கடைசிப் பத்தியை திரும்பவும் படிக்கச் சொன்னாள்.

...நமஸ்காரம். அடியேனை நோக்கு நன்னா தெரியும். சின்ன பெரியவாளை ஸேவிக்க மடத்துக்கு வர்றச்சே என்னை பாத்திருப்பேள். தோப்பனார் காலத்துலேர்ந்து அங்கதானே சுத்திண்டிருந்தேன், பார்த்திருப்பேள். ஆனா இப்போ முன்னபின்ன பரிச்சயம் இல்லாதவா மாதிரி மூஞ்சை திருப்பிக்கிறேள். என்னைக் கொன்னது யார்னு இந்த லோகத்துக்கே தெரிஞ்சிருக்கு. ஆனா, உங்களாட்டம் நீதிபதிகளுக்குத்தான் கண்ணவிஞ்சுப் போச்சு. அவாளை நிரபராதின்னு விடுவிச்சுட்டேள். இதோ இவங்கள்லாம்தான், இவன் தானே தன்னை வெட்டி மாய்ச்சு பொணமாயிட்டானான்னு தைரியமா கேட்டாங்க, கேட்கிறாங்க. என்னது, பொணமோட பொணமா இப்படி கண்டநிண்ட ஆட்களோட சேர்ந்து நான் வந்தது ஆசாரக்கேடா? அப்போ பகவானோட சந்நிதானத்துல வச்சு என்னை கொன்னுப் போட்டானுங்களே, அது என்ன ஆசார சீலமா?’

நீதி மறுக்கப்பட்டவங்கள்ல ஒருத்தரா இவரையும் சேர்த்து இந்த இடத்தில் கதையை முடித்தது சரிதான் என்றாள் பாகீரதி.

ஆனால், பூட்டிக் கிடக்கும் அலுவலகங்களுக்குள் பிணங்கள் போனது எப்படின்னு எங்கேயும் சொல்லாம விட்டிருக்கேன். லாஜிக் இடிக்குதேன்னு வாசகர்கள் கேட்கமாட்டாங்களா?’

ஏய்யா எழுத்தாளரே, லாஜிக் இல்லாத எந்த விசயத்தையும் உன் வாசகர்கள் ஏத்துக்கவே மாட்டங்களா? இத்தனை அப்பாவிங்க பொணமாக்கப்பட்டதுல என்னய்யா லாஜிக் இருக்கு? கொத்துகொத்தா அவங்கள கொன்னுப்போட்டவங்கள நிரபராதின்னு விடுவிச்ச தீர்ப்புகள்ல என்ன லாஜிக்கை கண்டுபிடிச்சி அமைதியா இருக்கீங்க? வருஷாவருஷம் சட்டவிரோதமா 22 ஆயிரம் பேரை மலக்குழியில இறக்கி கொலை பண்றாங்க. இதுவரைக்கும் ஒருத்தர்கூட தண்டிக்கப்படாததுல என்ன தர்க்கமிருக்கு? முற்றுப்புள்ளி வச்சிட்டு மூடிக்கிட்டுப் போய்யா என்றாள் அபிராமி. மற்றவர்களும் கூட அதையே தான் சொல்ல நினைக்கிறார்கள் போல.

12.07.17

நன்றி: உயிர் எழுத்து , ஆகஸ்ட் 2017
ஓவியங்கள் : கார்த்தி

1 கருத்து:

  1. கதை நன்றாக உள்ளது. ஆனால், அறிவுரை சொல்லும் பகுதியைக் குறைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் கதை, கட்டுரையாக மாறி விடுகிறது.

    பதிலளிநீக்கு