செவ்வாய், மே 29

மனுநீதியை வீழ்த்திட சமூகநீதி – ஆதவன் தீட்சண்யா


சமூகநீதி என்பது வரலாற்றுப் பின்புலத்துடன் ஆழ்ந்தகன்ற பொருள் கொண்டது. மக்களாட்சி முறையை இந்தியா தேர்ந்துகொள்ளும் பட்சத்தில் சமத்துவம்தான் அதன் ஆணிவேர்க் கருத்தாக இருக்கவேண்டும் என்று மிகத் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வந்தவர் அண்ணல் அம்பேத்கர் (தொகுதி 37, ப.36). எங்கே சமத்துவம் மறுக்கப்படுகிறதோ அங்கே பிற யாவும் மறுக்கப்படுவதாகவே கொள்ளவேண்டும் என அவர் பிறிதோர் இடத்தில் (தொகுதி 6, ப.89) குறிப்பிடுவார். அவ்வாறு இங்கு மறுக்கப்பட்டவற்றின் பட்டியல் மிக நீண்டது.  நாட்டின் இயற்கைவளங்கள், சொத்துகள், முடிவெடுக்கும் அதிகார அமைப்புகள், முடிவுகளை செயல் படுத்தும் நிர்வாக இயந்திரம், பண்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் உரிமையும் பங்கும் அவற்றை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளும் சுதந்திரமும் சமமாக பகிர்ந்து கொள்ளப் படுவதற்கு இங்கு சாதியம் தடையாக இருந்து வருகிறது. 

1980ல் ஆந்த்ரபாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா ஒரு கணக்கெடுப்பு நடத்தி இந்தியாவில் 7331 சாதித்தொகுப்புகளும் அவற்றுக்குள் 65,000 பிரிவுகளும் இருப்பதாக தெரிவித்தது. அதே 1980ல் மண்டல் கமிஷன்  இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மட்டும் 3743 சாதிகள் இருப்பதாக தெரிவித்தது. 2011ல் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை நிதி ஆயோக் துணைத்தலைவர் அர்விந்த் பனகரியா ஆய்வு செய்திருக்கிறார். சாதிகள், உட்சாதிகள், குடும்பப்பெயர்கள் என்று 4.6 மில்லியன்  பெயர்கள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கிறார். தினம் 12 மணிநேரம் ஒதுக்கினாலும்  கூட இப்பெயர்கள் முழுவதையும் வாசித்து முடிக்கவே 355 நாட்கள் தேவைப்படும் என்கிறார் அவர்.  இதெல்லாம் ஓர் உத்தேசக் கணக்குதான். இந்தியாவில் எத்தனை சாதிகள் இருக்கின்றன என்கிற விவரத்தை முறையாக திரட்டுவதற்கான முயற்சி முழுமைப்பெறவேயில்லை.

பார்ப்பனர்களை உச்சியில் தாங்கி கீழ்நோக்கி செங்குத்தாக ஒன்றின் கீழ் ஒன்றெனும் பன்மப்படிவரிசையில் சரிந்து விரியும் இந்தச் சாதியடுக்கில் உள்ள எந்தவொரு சாதியும் இன்னொரு சாதிக்கு சமமானதல்ல. இந்தச் சாதிகளுக்குள் உள்ள உட்சாதிகளும்கூட ஒன்றையொன்று சமமாக ஏற்பதில்லை. இந்தச் சமமின்மை தீட்டு/ புனிதம் என்கிற கற்பிதத்தின் பெயரால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சாதியடுக்கில் ஒரு சாதி எந்த இடத்தில் இருந்தாலும் அது சில சாதிகளுக்கு மேலாகவும் சில சாதிகளுக்கு கீழாகவும் ஒருசேர இருக்கிறது. இவ்விதமாக அந்தச் சாதிக்கு கிடைக்கும் சமூக அந்தஸ்தையே அச்சாதியின் உறுப்பினர்களாகிய தனிமனிதர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சாதிக்குரிய அந்தஸ்தின் அடிப்படையில் தான் அவர்களது மொத்த வாழ்வும் சாவும் சாவுக்குப் பிறகான நிலையும் தீர்மானிக்கப்படுகிறது. சாதியின் பெயரிலான இந்தப் பாரபட்சத்தை விளங்கிக் கொள்ளாமல், அந்த பாரபட்சத்தினால் பாதிக்கப்பட்டு பின்தங்கிப்போன குடிமக்களை அந்தப் பாதிப்பிலிருந்து மீட்டு பிறருக்கு இணையான நிலைக்கு உயர்த்தும் ஓர் எதிர் பாரபட்ச நடவடிக்கையாக முன்வைக்கப்படும் சமூகநீதி என்பதை விளங்கிக் கொள்வது கடினம்.

பட்டியல் சாதியினர் & பட்டியல் பழங்குடியினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆட்சி மன்றங்களிலும், பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சில இடங்களை ஒதுக்கீடு செய்து தருவதுதான் சமூகநீதி என்கிற தவறான கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. சரி, ஒரு வாதத்திற்காக அதுதான் சமூகநீதி என்று ஒத்துக்கொண்டால், அதுவாவது ஒழுங்காக நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மை. போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வரை இந்த இடஒதுக்கீடு தொடரவேண்டும் என்கிற அரசியல் சாசன நிலைப்பாட்டை அழித்தொழிக்கும் கெடுமுயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள்தொகை விகிதாச்சாரப்படி எஸ்.சி. 15%, எஸ்.டி. 7.5% என 22.5% இடங்கள் அரசியல் சாசனத்தின் மூலம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. (மாநிலங்களில் இந்த அளவு மாறுபடும்). இப்போதைய மக்கள்தொகை கணக்கீட்டிற்கேற்ப இந்த அளவு உயர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கப்படாமலே உள்ளது. மண்டல் குழுவின் பல்வேறு பரிந்துரைகளில் ஒன்றின்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் வழங்கப்படுகிறது. மக்கள்தொகையில் 54% அளவுக்குள்ள பிற்படுத்தப் பட்டவர்களுக்கு அதில் பாதியளவில்- 27% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு காரணம், இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 50 சதவீதத்திற்குள் இருக்கவேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான். மீதமுள்ள 50% இடங்கள் பொதுப்பட்டியல் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறியபோதிலும் உண்மையில் அந்த 50% இடங்களில் அதற்குரிய மதிப்பெண்களைப் பெற்றிருக்கும் பட்சத்திலும்கூட எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. ஒருபக்கம் இடஒதுக்கீடு என்பதை எதிர்த்துக்கொண்டே பொதுப்பட்டியல் என்பதன் பெயரால் 50% இடங்களை, மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள  மேலடுக்குச் சாதியினர் இத்தீர்ப்பின் துணையோடு தொடர்ந்து அபகரித்து தமக்கென ஒதுக்கீடு செய்துவருகின்றனர்.  

ஆட்சியாளர்கள் எவ்வளவு உயரிய நோக்கங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை செயல்படுத்துவது நிர்வாகத்துறை தான் என்பதால் அது அனைத்து மக்கள் குழுக்களின் பிரதிநிதித்துவத்தையும் கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால், இதில் துறைச் செயலாளர்கள், உச்ச/உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள், ராணுவம் மற்றும் காவல்துறை உயர் பொறுப்புகள் போன்றவை கிட்டத்தட்ட மேலடுக்குச் சாதியினருக்கு மட்டுமே என்பது எழுதாவிதியாக உள்ளது. கடைநிலை ஊழியம் தவிர்த்த எஞ்சிய பணியிடங்களில் பெரும்பான்மையும் கூட இவர்களாலேயே கைப்பற்றப் பட்டுள்ளன. குறிப்பிட்ட சதவீத அளவு இடங்கள் எஸ்.சி/ எஸ்.டி/ ஓ.பி.சி வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் தகுதிவாய்ந்த போதுமான ஆட்கள் பற்றாக்குறை, க்ரீமிலேயர் போன்ற சாரமற்ற காரணங்களைக் காட்டி அவற்றை நிரப்பாமல் காலியாக வைப்பது அல்லது மேலடுக்கினருக்கு ஒதுக்கிக்கொள்வது என்கிற தந்திரம் கையாளப்படுகிறது. “நிர்வாகப் பதவிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இடம் பெற்றால் மட்டுமே, அவர்களின் அந்தஸ்தும் வாழ்க்கை நிலையும் அபிவிருத்தியடையும். நிர்வாகப் பதவிகள் கேந்திரமான பதவிகள். அவற்றிலிருந்து கொண்டு அரசு விவகாரங்களுக்கு வழிகாட்ட முடியும்” என்கிற அம்பேத்கரின் நிலைப்பாடு ( தொ: 19 ப.34) இவ்வாறாக மறுக்கப்படுகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 93% விவசாயம் உள்ளிட்ட முறைசாரா துறைகளில் உள்ளது. மிச்சமுள்ள 7% வேலைவாய்ப்பு, முறைப்படுத்தப்பட்ட தனியார் மற்றும் அரசுத் துறைகளில் உள்ளது. தனியார் துறையில் இன்றளவும் இடஒதுக்கீடு கிடையாது. ஆக, ஒப்பீட்டளவில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 3.5% மட்டுமே அரசுத்துறையில் உள்ளது. நிர்வாகம் மற்றும் உற்பத்தி என இரண்டாக கிளை பிரியும் இந்த அரசுத்துறையில் மட்டுமே இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சி, பாதுகாப்பு சார்ந்த இடங்களில் இட ஒதுக்கீடு கிடையாது.

***
மனித வாழ்விற்கு மிக அடிப்படை ஆதாரமான நிலம் இங்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கிறது?  இந்தியாவின் மொத்த விளைநிலம் 394.6 மில்லியன் ஏக்கர்.  இதில் மக்கள்தொகையில் 56.4 சதம் குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு துண்டு நிலம்கூட இல்லை. இவர்கள், சொத்து வைத்துக்கொள்ள உரிமையற்றவர்கள் என்று சாதியத்தால் மறுக்கப்பட்ட சாதியினர். மறுபுறத்திலோ மொத்த விளைநிலத்தில் 32% வெறும் 5% பேரிடம் இருப்பதாக அரசின் சமீபத்திய புள்ளவிவரமே தெரிவிக்கிறது. இந்த 5% பேரும் சாதியடுக்கின் மேலே இருத்திக்கொண்டவர்கள் தான் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. இவர்களுக்கு மன்னராட்சிக் காலங்களில் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்ட இனாம்கள் மூலமாக இந்நிலக்குவிப்பு நடந்துள்ளது. செட்டில்மென்ட் ஆப் இனாம்ஸ் என்னும் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பகால ஆவணம் அக்ரஹாரம், பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம், திரிஷ்வாகம், தர்மாசனம், பட்டம், பொறுப்பு, அத்யாயனம், புராணம், பஞ்சாங்கம், தோப்பு, தொரப்பாடி, கர்ணம், மணியகாரர் போன்ற பெயர்களில் வளமான பெரும் நிலப்பரப்புகள்  மேலடுக்குச் சாதிகளுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. (1963ல் நிறைவேற்றப்பட்ட இனாம் ஒழிப்புச்சட்டம் இதை உறுதி செய்கிறது.)  இவ்வாறு இனாம் கொடுப்பதற்காக வேளாண் சாதிகளிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டதோடு, அந்த நிலங்களில் அவர்கள் கூலிகளாக உழைத்துக் கொடுக்கும்படியும் தாழ்த்தப்பட்டனர்.

கைவினைஞர்களாகவும், பல்வேறு குடிமைச் சேவர்களாகவும் நீர்க்கட்டி போன்ற வேளாண் சேவகர்களாகவும் இருந்த அடியடுக்குச் சாதியினருக்கு துண்டுத்துக்காணி நிலம் மட்டுமே இனாமாக கொடுக்கப்பட்டுள்ளது. நிலப்பகிர்வில் ஒரு பெரும் மாற்றம் என்றால், அது 1892ல் DC லேண்ட் என்கிற வகைப்பாட்டின் கீழ் அன்றைய சென்னை மாகாணத்தின் தீண்டப்படாத சாதியினருக்கு 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியதையே குறிப்பிட வேண்டும். (1891ல் திராவிட மகாஜன சபையின் மாநாட்டுத் தீர்மானம் தரிசு நிலங்களை தீண்டப்படாதாருக்கு வழங்கவேண்டும் என்று கோரியிருந்தது.) ஆனால் இன்றைக்கு அந்த 12 லட்சம் ஏக்கர் நிலத்தில் சில ஆயிரம் ஏக்கர் நிலமே அவர்களது அனுபோகத்தில் உள்ளது. எஞ்சிய நிலம் அவ்வளவும் அரசுத்துறை அதிகாரிகளின் துணையோடு சாதி இந்துக்களால் அபகரிக்கப் பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் நிலச்சீர்த்திருத்தம் மூலம் கையகப்படுத்தி நிலமற்றோருக்கு அரசால் வினியோகிக்கப்பட்ட நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றும் முயற்சிகளில் நிலக்கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போபால் பிரகடனத்தின் வழிகாட்டுதலால் மத்திய பிரதேசத்தில் பட்டியல் சாதியினருக்கு நிலம் வழங்கும் திட்டம் பின்னர் வந்த பா.ஜ.க அரசால் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. குஜராத்தில் நில உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் கையகப்படுத்தி நிலமற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட 1,63,880 ஏக்கரில் தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 56,873 ஏக்கர் நிலம் நடைமுறையில் அவர்களது கைக்குப் போய்ச்சேரவேயில்லை. தமிழகத்தில் நிலமற்றோருக்கு 2 ஏக்கர் திட்டம் எந்தளவுக்கு செயல்படுத்தப்பட்டது என்கிற விவரங்கள் கிடைக்கவில்லை.

அரசின் பல்வேறு கொள்கைகளினால் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்றத் தன்மையினால் நிலத்தை விட்டு தாங்களாகவே வெளியேறும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கார்ப்பரேட் விவசாயம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பெயரால் நடக்கும் நிலத்தை அபகரிப்பதும், இதேபோல கனிமக் கொள்ளையர்களுக்கு இசைவாக வனங்களிலிருந்தும் கடற்புறங்களிலிருந்தும் பழங்குடிகளையும் மீனவக்குடிகளையும் வெளியேற்றுவதுமாக நிலமற்றோர் பட்டாளத்தை பெருகச் செய்கிறது அரசாங்கம்.

நாட்டின் மொத்தநிலமும் நீதியாக அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு இயக்கங்களின் ஆரவாரமான வெற்று முழக்கமாக இருக்கிறதேயன்றி செயல் முழக்கமாக மாற்றப்படவில்லை. நிலப்பகிர்வு குறித்த இந்த அக்கறையற்ற போக்கின் விளைவால் உபரிநிலங்களை கையகப்படுத்துவதில் அரசும் அக்கறையற்றுள்ளது. நிலமற்றோருக்கு 2002ல் அரசால் வழங்கப்பட்ட நிலத்தின் சராசரி அளவு 0.95 ஏக்கர் என்றிருந்த நிலை 2015ல் 0.88 ஏக்கர் எனக் குறைந்துள்ளது.

நிலப்பகிர்வில் ஒரு மாற்றம் வராமல் பேசப்படும் எந்தவொரு நீதியும் சமூகநீதி ஆகாது. இதுபோலவே தொழில், வர்த்தகம், ஒப்பந்தங்கள், வழிபாட்டுத்தலங்கள், அரசின் பொது நிறுவனங்கள் போன்றவற்றிலும் சாதியின் பெயரால் வாய்ப்பு மறுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவம் அருகிக்கொண்டு தானுள்ளது. சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சாசனத்தை விடவும் ஏற்றத்தாழ்வினை மீட்டமைக்கும் மனுஸ்மிருதிக்கும் கார்ப்பரேட் நலன்களுக்கும் கூடுதல் விசுவாசத்தைக் வெளிப்படுத்தும் சங்பரிவாரத்தின் ஆட்சி, இந்த வீழ்ச்சியை துரிதப்படுத்துகிறது. சமூகநீதியை நோக்கிய ஒரு நூற்றாண்டின் சாதனைகளை ஒழித்துக்கட்டுவதில் பலமுனைகளிலும் வெறித்தனமாக இறங்கியுள்ள இந்த மனுவாதிகளை, சமூகநீதியை அதன் ஆழ்ந்தகன்ற பொருளில் அடைவதற்கான போராட்டக்களத்தில் தான் வீழ்த்த முடியும்.

- உயிர் எழுத்து, மே 2018


புதன், மே 9

மெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா


‘‘தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’’, ஆலங்கோடு லீலாகிருஷ்ணனின் மலையாள நூல். யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தாத்ரிக்குட்டி, நம்பூதிரிப்பார்ப்பனப் பெண். ஆசாரக்கேடாக பலபேருடன் பாலுறவு கொண்டிருந்தாள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு ஆளாகிறாள். விசாரணையை பயன்படுத்திக்கொள்ளும் அவள், நம்பூதிரிகளின் குடும்ப அமைப்பு, அது பெண்கள்மீது பாலியல் சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் நிகழ்த்த ஆண்களுக்கு வழங்கியுள்ள அதிகாரம், பாசாங்கான ஒழுக்கவிதிகள், மனிதத்தன்மையற்ற சடங்குகள் ஆகியவற்றை தன்போக்கில் அம்பலமேற்றுகிறாள். அடுத்துவந்த காலத்தின் மாற்றங்களுக்கு அவளே இவ்வாறாக விதையூன்றிப் போனாள் என்பதை விவரிக்கும் இந்நூலில் ‘நீசக்காரியம்என்றொரு சடங்கு குறிப்பிடப்படுகிறது.

நம்பூதிரிக் குடும்பங்களில் மூத்த ஆண் மட்டுமே அதே சாதிக்குள் மணம் முடிக்கும் உரிமையுடையவர். இளையவர்கள் நாயர் சாதியில்தான் மணம் முடித்தாக வேண்டும். இவ்வழக்கத்தினால், நம்பூதிரிப்பெண்களை மணப்பதற்குப் போதுமான நம்பூதிரிகள் கிட்டாத நிலை. எண்ணிக்கையில் நிலவிய இச்சமமின்மை, ஒரு நம்பூதிரிக்கு -வயது வித்தியாசம் பாராது- பல நம்பூதிரிப்பெண்களை கட்டிக்கொடுக்கும் அவலத்தை உருவாக்கியது. நீசம் என்பதற்கு ‘பொருத்தமில்லாத ஆண் பெண்களின் புணர்ச்சிஎன்றொரு பொருளுண்டு. அவ்வகையில் நம்பூதிரிகளின் பாலுறவு நீசக்காரியம் எனச் சுட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது சுட்டுவதோ வேறொன்றை.

ஆண் தட்டுப்பாட்டினால் நம்பூதிரிப்பெண்கள் பலர் திருமணமின்றி முதிர்கன்னிகளாகவே மடிந்தனர். திருமணமாகாத (ஆகவே கன்னிகழியாதவர்கள் என நம்பப்படுகிற)/ திருமணமாகியும் கன்னிகழியாத  இப்பெண்கள் அதன்பொருட்டு சாபம் விடக்கூடும் என்கிற அச்சம் நம்பூதிரிகளுக்குண்டு. சாபம் பலிதமாவதைத் தடுக்க, திருமணமாகாமல் இறக்கும் பெண்ணின் பிணத்தைப் புணர்ந்து கன்னிகழிக்கும் நீசக்காரியம் என்னும் பரிகாரச்சடங்கைச் செய்கின்றனர். நீசக்காரியத்தை நிறைவேற்றுகிறவர் நீசக்காரியன்.  தீண்டப்படாத சாதியினர் இதற்காக பணிக்கப்பட்டனர். 

பொருத்தமான இணையைத் தேடிக்கொள்வதிலிருந்து பெண்ணை தடுத்துவிடுகிற சாதியம், இறந்தபின் அவளை சாந்தப்படுத்த மனிதத்தன்மையற்ற இச்சடங்கை கைக்கொண்டிருக்கிறது. பிறர் கண்ணில் படாது வீட்டுக்குள்ளேயே பதுக்கிவைக்கப்பட்ட, வெளியே நடமாடினாலும் தாழம்குடையால் முகம் மறைக்கும்படி பணிக்கப்பட்ட நம்பூதிரிப்பெண் இறந்ததுமே கன்னிகழிக்க ஒரு தீண்டத்தகாதவரிடம் ஒப்படைக்கப்படுகிறாள். அந்த ஆண்தான் இதற்காக நீசக்காரியன் என்று இழித்துரைக்கப்படுகிறார். பிணமாகவேனும் நீசக்காரியத்தில் பங்கெடுக்க வைக்கப்படுகிற அவள் நீசக்காரியள் என்றாகிவிடுவதில்லை. அதாவது அவர்களது சாதிப்புனிதத்திற்கு பங்கமுமில்லை. புனிதத்திற்கான வரையறை நம்பூதிரிகளின் தேவைகளுக்கு உட்பட்டதுதான்.

பிணம் தழுவுதல் என்று வள்ளுவரும், அருவருப்பான மணவகை என்று அபே துபுவாவும் இந்த நீசக்காரியத்தை குறிப்பிடுவதாக ஒரு வாதமுண்டு. இச்சடங்கு மூலவடிவினை இழந்து சந்தனம் தழுவுதலாக பூடகமாகிவிட்டது. முற்றாக வழக்கொழிந்தும் போகலாம். ஆனால் தம் பெண்களுக்கும் தீண்டப்படாதாருக்கும் நம்பூதிரிகள் இழைத்த “நீசக்காரியம்”, மொழிக்குள் உறைந்திருந்து அவர்களை  கொடும்பலி கேட்கும்.

விகடன் தடம், மே 2018

செவ்வாய், மே 8

தலித்துகளும் முஸ்லிம்களும் - ஆதவன் தீட்சண்யா

1.
எனது சிறுபிராய காலத்தில் எங்களது கமலை மாடுகளுக்கு லாடம் கட்ட ஒருவர் வருவார். அவரை பாய் என்று என் அப்பா அழைப்பது வழக்கம். அப்போது பாய் என்பதை அவருடைய பெயர் என்றுதான் நான் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேனேயன்றி அது இஸ்லாமியரை விளிக்கும் ஒரு சொல் - அவர் ஒரு இஸ்லாமியர்- இஸ்லாம் ஒரு மதம் என்பதெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் காலக்கிரமத்தில் எனக்குத் தெரிந்த முதல் இஸ்லாமியர் அவர்தான். ஆறாம் வகுப்பில் ஒரு மாணவர் சேர்ந்தார். அவர்தான் எனக்குத் தெரிந்த இரண்டாவது இஸ்லாமியர் என்று இப்போது கணக்கில் வைக்கிறேன். ஆனால் அப்போது தெரிந்திருக்கவில்லை.

யோசித்துப் பார்த்தால் எனக்கு அப்போது வேறுசில இஸ்லாமியர்களும் பரிச்சயமாகியிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒருவர் சைக்கிள் ஷாப் வைத்திருந்தார். அவரிடம் வாடகைக்கு எடுத்துதான் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர் எங்களூர் சிறார்கள். மற்றவர் குடை ரிப்பேர் செய்கிறவர். இன்னாருவர் அங்கிருந்த கூட்டுரோட்டில் சின்னதாக ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் கறிபோடும் பாய் ஒருவர். இவர்களது பெயர்களெல்லாம் நினைவில் இல்லை. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு இஸ்லாமியர் அறிவியல் பாடத்திற்கு ஆசிரியராக வரத் தொடங்கினார். மேல்நிலை வகுப்பில் ஒரு மாணவர் எனது பெஞ்ச்மேட்.  

எனது பதினேழு வயது வரை என் வாழ்வில் குறுக்கிட்ட இஸ்லாமியர்கள் இவர்கள்தான்.  அதாவது ஒரு கை விரல்களுக்குள் முடிந்துபோகிற அளவிலானதுதான் இந்த எண்ணிக்கை. அவர்களில் இஸ்லாமிய சகோதரி ஒருவருமில்லை. அப்போது என் வயதொத்த சிறுவர் சிறுமியர் இஸ்லாத்திலும் இருக்கத்தானே செய்திருப்பார்கள்? அவர்களெல்லாம் எங்கே போனார்கள் படிக்க? அல்லது படிக்கவே வரவில்லையா? படிக்க வரவில்லையானால் அவர்களெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அன்று தொடங்கி இன்றுவரை கணக்கிட்டால் எனக்கு இப்போது அனேக இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு நண்பர்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களைப் பற்றி எனக்கு என்னத் தெரியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். எனக்கு நானே உதட்டைப் பிதுக்கி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை என்று ஒப்புக்கொள்வதே நேர்மையாக இருக்கும்.

2.
கமலைகள் மறைந்து ஆயில் என்ஜின்களும் மின் மோட்டார் களுமாகிவிட்ட இக்காலத்தில் மாடுகளே தேவையற்றதாகிட்ட நிலையில், மாட்டுக்கு லாடமடிக்கிற அந்த பாய் எங்கே போயிருப்பார்? யூஸ் அண்ட் த்ரோ நாகரீகம் உச்சத்திற்கு வந்து விட்ட நிலையில் குடை ரிப்பேர் செய்கிற ஒருவர் இங்கு இன்னமும் தேவைப்படுகிறாரா? அரூர் போன்ற சின்ன நகரங்களில் குதிரை வண்டி ஓட்டிக்கொண்டிருந்த அந்த பாய்களும் குதிரைகளும் எந்த இரு சக்கர வாகனத்தின் கீழ் அரைபட்டு மாண்டிருக்கக்கூடும்? மோட்டார் வாகன ஒர்க்ஷாப்புகளில்  ஆயிலும் கிரிசும் கரியும் படிந்து தன் சொந்த நிறத்தையும் முகத்தையும் இழந்துவிட்ட சிறுவர்களில் ஏன் பலரும் இஸ்லாமியராகவே இருக்கின்றனர்? வெகு அரிதான சிலரே வணிகத்திலும் தொழில்களிலும் அரசுப் பணியிலும் இருக்கின்றார்கள் என்றால் மற்றவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக என்ன செய்கிறார்கள்?

ஆளுங்கட்சியில் ஒருமுறை ஒன்றியச் செயலாளராயிருந்தவன் வாரீசுகள் கூட ஒன்பது தலைமுறைகளுக்கு உட்கார்ந்து தின்னும் அளவுக்கு சொத்து சேர்த்துக்கொள்ளும் ஒரு சமூகத்தில், ஆளுமையும் தேசபக்தியும் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகவும் திகழ்ந்து வீரமரணமடைந்த திப்புசுல்தானின் வாரீசுகள் வேலூரில் பீடி சுற்றிப் பிழைப்பதற்கு காரணமென்ன? சுமார் 800 ஆண்டுகள் இந்த நாட்டை இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி செய்திருந்த போதும் இஸ்லாமியர்கள் ஏன் இப்படி அவல வாழ்வில் வீழ்ந்துகிடக்கிறார்கள்? அப்படியானால் ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர்களும் இந்த அடித்தட்டு இஸ்லாமியரும் வெவ்வேறானவர்கள் தானே? பின் ஏன்   அந்த அரசர்கள் நிகழ்த்தி விட்டதாகக் கூறப்படும் ‘வரலாற்றுத் தவறுகளுக்காக’ இந்த அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்? கருவிலிருக்கிற இஸ்லாமியக் குழந்தைகூட கடப்பாரையால் குத்திக் கொல்லப் படுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

பாபர் மசூதி தகர்ப்புக்குப் பிறகு ஒவ்வொரு இஸ்லாமியரும் தேசவிரோதியாகவும் தீவிரவாதியாகவும் உருவகிக்கப்படுகிற அரச பயங்கரவாதத்திற்குள் இந்து பெரும்பான்மை மனோபாவம் வகிக்கும் பங்கு என்ன? தன் தேசபக்தியை நிறுவித் தொலைத்தாக வேண்டிய கட்டாயம் ஏன் இஸ்லாமியர் மீது திணிக்கப்படுகிறது?

இந்த கேள்விகளுக்கெல்லாம் சச்சார் கமிட்டி அறிக்கையிலும்கூட நமக்கு போதிய பதில்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. அதன் பரிசீலனை வரம்புகளும் நோக்கங்களும் வேறாக இருப்பது மட்டுமே இதற்கான காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சச்சார்  கமிட்டி ஒரு உண்மையை உணர்த்தியிருக்கிறது. அதாவது இந்த நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளங்களின் பல்வேறு முனைகளில் இஸ்லாமியர்களது நிலை தலித்துகளைப் போல அல்லது தலித்துகளைவிடவும் கீழ்நிலையில் இருக்கிறது என்பதே அது. இங்கேதான் தலித்துகளையும் இஸ்லாமியரையும் இணைத்தும் பகுத்தும் பார்க்கும் தேவையேற்படுகிறது.

பார்ப்பனீய மேலாதிக்கவாதத்தின் வர்ணாசிரம- சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரானப் போராட்டத்தின் ஒரு வடிவமாக இஸ்லாத்தை தழுவியர்களே இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையோர். இந்த உண்மையை மறைத்து, இந்தியாவில் இருக்கிற எல்லா இஸ்லாமியரையும் வெளியே இருந்து படையெடுத்துவந்த இஸ்லாமிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கற்பிதம் செய்வித்தும், வாள்முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் என்று பாசாங்காய் கருணைக் காட்டியும் இந்துத்வவாதிகள் கிளப்பிவிடும் தேசியவெறி உலகப் பிரசித்தமானதுதான். இந்த பிரச்சாரத்தின் நோக்கம், எஞ்சியுள்ள தலித்துகளை தங்கள் பிடிக்குள்ளேயே நிறுத்திவைப்பதுதான்.

3.
இந்தியப் பூர்வகுடிகளாகிய நாகர்களும், வெளியே இருந்து நெடுங்காலத்திற்கு முன்பே வந்துவிட்ட த்ரேனியர்களின் வழித்தோன்றல்களாகிய திராவிடர்களும் இணைந்து உருவாக்கி நிலைபெற்றுவிட்ட ஒரு நாகரீக சமூதாயத்திற்குள் ஆரியர்களின் நுழைவு ஏற்படுத்திய மாற்றங்கள் இங்குள்ள எல்லா பேதநிலைகளுக்கும் வழியமைத்தது. நிற, இன, மொழி துவேஷங்களின் வழியாக தமது தனித்துவத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆரியர்களின் பதைப்பில் உருவான தீட்டு- புனிதம், உயர்வு-தாழ்வு, நல்லது-கெட்டது என்ற கருத்தாக்கங்களின் இறுகிய வடிவமாக வர்ணாசிரமக் கோட்பாடு உருவானது. வேதத்தின் முதன்மையை ஏற்றுக்கொள்ளாதவர்களும், போரில் தோற்றவர்களும், அடிமைகளும் வர்ணத்துக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்டனர். வர்ணபேதங்களை எதிர்த்துப் போராடிய பௌத்தம் வீறுகொண்டெழுந்தபோது கட்டுக்குள் நிறுத்தப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், புஷ்யமித்திர சுங்கனின்  கொலைச்செயல்களின் மூலம் மீண்டும் வெறிபிடித்தெழுந்தது. இப்போது அவர்ணர்களின் பட்டியலுக்குள் பௌத்தர்களும் நெட்டித் தள்ளப்பட்டனர்.

இருந்தபோதும் வர்ணப்பிரிவினையில் உள்ள நெகிழ்வுத் தன்மைகள் தூயத்துவத்தைக் காப்பாற்றுவதற்கு தடையாக இருந்தது. எனவே மேல்கீழ் மற்றும் கிடைமட்ட பரிவர்த்தனைகளை முற்றாக விலக்கிவிட்ட மேலும் இறுகிய வடிவமாக சாதி உருவானது.  இந்த சாதியக் கட்டமைப்பிலும் பார்ப்பன மேலாதிக்கமே நிலைநிறுத்தப்பட்டது. வர்ண அமைப்புக்குள் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்ணகளுடன், சாதிக்கலப்பால் உருவான பிரதிலோம சாதி என்ற தொடத்தகாத சாதிகளும் இணைக்கப்பட்டு தீண்டத்தகாத சாதிகளின் பெருந்தொகுப்பு உருவாக்கப்பட்டது. பார்ப்பனருக்கு பிறசாதியினர் அனைவருமே தீண்டத்தகாதவர்கள். பிறசாதியினர் ஒவ்வொருவருக்கும் தம்மைத்தவிர மற்றவையனைத்தும் தீண்டத்தகாதவை. தீண்டாமைக்கு உள்ளான சாதிகள் இந்த ஒடுக்குமுறைக்கும் ஒதுக்கிவைப்புக்கும் எதிராகத் திரண்டுவிடாதபடி ஒவ்வொரு சாதியும் உட்சாதிகளாக சிதறடிக்கப்பட்டது.  இந்த உட்சாதிகளுக்குள் நிலவும் இணக்கமற்றத் தன்மைகளுக்கும் மோதல்களுக்குமான நியாயமும் தத்துவபலமும் பார்ப்பனர்களாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் வழங்கப்பட்டன.

ஒருசாதி, இன்னொரு சாதியைக் கண்காணிப்பதாகவும் கட்டுப்படுத்துவதாகவும் இருப்பதால் இவற்றுக்கு ஒடுக்கப்படுகிறோம் என்ற அவமானவுணர்வும், ஒடுக்குகிற அதிகாரம் பற்றிய பெருமிதவுணர்வும் ஒருங்கே வாய்த்தன. எல்லாவற்றுக்கும் கீழே- எல்லோராலும் ஒடுக்கப்படுகிவர்களாக- தாம் ஒடுக்குவதற்கு தமக்குக் கீழே யாருமற்றவர்களாக- தன்மீதான சகல ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுவித்துக் கொள்வதற்கு முன்னிபந்தனையாக ஒட்டுமொத்த சாதியமைப்பையும் தகர்த்தெறிய வேண்டியவர்களாக தலித்துகள் மாறிய நெடிய வரலாறு இன்னும் விரிவாக பேசப்பட வேண்டியுள்ளது.

சமூகத்தின் இயற்கை வளங்களிலும் வழிபாட்டுத்தலங்களிலும் பொதுஇடங்களிலும் நிதியாதாரத்திலும் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் தமக்கான பங்கைக் கோரி தலித்துகள் மேலெழுந்துவிடாதிருக்கும் பொருட்டு கடும் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து தலித்துகள்   நடத்தியப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டில் புதிய கட்டத்தை எட்டியது. பிரிட்டிஷ் ஆட்சியில் - பல்வேறு உள்நோக்கங்கள் இருந்தபோதிலும்- தலித்துகள் பொதுவெளிக்கு வருவது சாத்தியமாகியது. அவர்கள் பிரிட்டிஷாரின் ராணுவப் படைகளில் சேர்ந்து ஆயுதம் ஏந்தியதன் மூலம் புதிய மனவலிவைப் பெற்றனர். (பிறசாதியினரும் ராணுவத்தில் சேர்ந்த பிறகு- அவர்களது சாதியுணர்வுக்குப் பணிந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலித்துகளை சேர்க்க தடையுத்தரவு பிறப்பித்து நீண்ட காலத்திற்கு அமல்படுத்தியதையும் இங்கே நினைவிற் கொள்ள வேண்டும்)

சமூகவாழ்வின் எல்லா முனைகளிலும் ஒதுக்கிவைக்கப்பட்ட தலித்துகளை, அவர்களைப் போலவே மாட்டுக்கறி உண்கிற மிலேச்சர்களான வெள்ளையர்கள் தமது சமையல்காரர்களாகவும் பங்களா உத்யோகஸ்தர்களாகவும் சேர்த்துக்கொண்டதன் உடன்விளைவாக நிகழ்ந்த மாற்றங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. அதாவது ஆட்சியாளர்களின் அருகில்- அதிகாரத்திற்கு அருகே- அது சமையல்கட்டு என்றாலும்- பொதுவெளியில் தலித்துகள் புழங்குவதற்கான வாய்ப்பு உருவாகியது.

தன் சொந்தத் தேவைகளின் பொருட்டு அரசு கல்வியை ஜனநாயகப்படுத்தியது. ஆனால் கிறிஸ்தவ இறைப்பணியாளர்களின் மிஷனரிகளும் அரசும் திறந்த கல்விச்சாலைகளுக்குள் நுழைய தலித்துகள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. பெண்களுக்கும் இதேநிலைதான். பெண்களுக்கான பள்ளியைத்  தொடங்கிய முதல் இந்தியர்கள் மகாத்மா ஜோதிராவ் பூலேவும் அவரது துணைவியார் சாவித்திரியும். அவர்கள் தொடங்கிய கல்விச்சாலை அன்றிரவே கொளுத்தப்பட்டது. தமக்கென்று ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவுவதற்கான இடத்தையும் நிதியையும் அகமத்நகர் தலித்துகள் திரட்டிக் கொடுத்தப் பிறகும் உயர்சாதிக்காரர்களின் நிர்ப்பந்தத்தால் பள்ளிக்கூடம் திறக்க அரசாங்கம் மறுத்துவிட்ட நிலைமை 1850களிலும் நீடித்ததை அம்பேத்கர் பிறிதொரு இடத்தில் மேற்கோள் காட்டுகிறார். மீறி படிக்க வந்த இடங்களில் தலித்துகள் மீது எவ்வளவு பாரபட்சங்கள் காட்டப்பட்டன என்பதின் சாட்சியாக அம்பேத்கரின் வாழ்க்கை விரிந்துகிடக்கிறது.

தடைகளை மீறி தலித்துகளிலிருந்து கல்வி பெற்ற ஒரு பகுதியினர் உருவாகி வந்த போது அவர்கள் தமது சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையின் வரலாற்றை முன்வைத்து சிறப்புரிமைகளைக் கோரினர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஸ்தலஸ்தாபன நிர்வாகத்திலும் (அதிகாரத்திலும் ) பங்கு கேட்டனர். மக்கள்தொகை கணக்கெடுப்பில் தங்களை இந்துமதத்திலிருந்து விலக்கிக் காட்டி தனிப்பிரிவாக வெளிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்துமதத்தின் ஒருபகுதியாக வலிந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு இந்தமத வழிபாட்டுத்தலங்களில் உரிமை வேண்டும் என்று கோரியதோடு நிற்கவில்லை தலித்துகள். நாசிக் காலாராம் கோவிலுக்குள் அம்பேத்கர் தலைமையிலும், வைக்கத்தில் பெரியார் தலைமையிலும் நடந்ததைப் போல நாடு முழுவதும் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். மகத் நகரின் சௌதார் குளத்தில் இறங்கியதைப் போல நாட்டின் பல்வேறு நீர்நிலைகளில் அவர்கள் பருகத் தொடங்கினர்.

முதலில் உயர்சாதியினரிடம் கவனஞ் செலுத்திய கிறிஸ்தவம் பிற்பாடு அடித்தட்டு மக்களை நோக்கி பரவத் தொடங்கியபோது, இந்துமதத்தின் பிடியிலிருந்து வெளியேறும் வழியாக தலித்துகள் கிறித்துவத்தைத் தழுவினர். அங்கும் இவர்கள் சமமாக நடத்தப்படவில்லை. இந்துமதத்தின் நச்சுக்கிருமியான சாதி கிறிஸ்தவத்திலும் விஷம் பாய்ச்சியிருந்தது. ஆகவே கிறிஸ்தவத் திற்குள்ளும் சமத்துவத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் தலித்துகள் போராட வேண்டிய நிலை இன்றளவும் நீடிக்கிறது.

சோழராட்சிக் காலத்திலேயே குடவோலை முறை மூலம் ஜனநாயகப்பூர்வமாக தேர்தலை நடத்திய நாடு எங்களுடையது என்ற மோசடியான பெருமிதங்கள் நிறைய இங்குண்டு. அதிலே யாரெல்லாம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்ற விவரங்களைச் சொல்வார்களேயானால் அது எந்தளவிற்கு ஜனநாயகமானது என்பதும் அம்பலப்பட்டுப்போகும். பிரிட்டிஷார் காலத்திலும் அதுதான் நடந்தது. கல்வியையும் சொத்தையும் வாக்களிப்பதற்கான அடிப்படைத் தகுதிகளாக இடம்பெற வைத்ததன் மூலம் புதியதாக உருவாகி வந்த அதிகாரமையங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முற்பட்ட சாதியினர் வெற்றியடைந்தனர்.  வர்ண- சாதிய விதிகளின்படி தலித்துகளை சொத்தில்லாதவர்களாகவும், கல்வி பெற முடியாதவர்களாகவும் ஒடுக்கிவைத்துவிட்டு- அதன்பேராலேயே வாக்குரிமையும் மறுக்கப்படுவதை எதிர்த்தும் தலித்துகள் போராட வேண்டியிருந்தது. வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற கோரிக்கையை எழுப்பியதன் மூலம் தலித்துகளுக்கு மட்டுமல்லாது தலித்துகளை ஒடுக்குகிற பிறசாதியனருக்கும் கூட அம்பேத்கர்தான் வாக்குரிமையைப் பெற்றுத் தந்தார். வாக்காளர்களாவதற்கும், போட்டியிடுவதற்கும், போட்டியிட்டு வெற்றிபெற்றால் தொடர்ந்து உயிரோடு இருப்பதற்கும் தலித்துகள் போராடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது என்பதை மேலவளவுப் படுகொலையும் பாப்பாப்பட்டி உள்ளிட்ட நான்கு பஞ்சாயத்துகளும் நமக்கு உணர்த்துகின்றன.

எல்லா அரசாங்க வேலைகளும் பார்ப்பனர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் அடிப்படையான உடைவை ஏற்படுத்தும் பொருட்டு இடஒதுக்கீடு- மறுபங்கீடு என்ற கோரிக்கையை தலித்துகளே முதலில் முன்வைத்தனர். பின் அது பிற்படுத்தப்பட்டவர்களின் கோரிக்கையாகவும் மாறி பார்ப்பன ஏகபோகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது இந்த நாட்டின் சமூகநீதி வரலாறாகத் திகழ்கிறது.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருப்பதாக காந்திஜி கூறினார். அவரால் பெரிதும் விதந்தோதப்பட்ட அந்த ஆன்மா சாதியத்தால் தாக்குண்டு அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. கிராமப்புற உடைமைச் சாதிகள் தலித்துகள் மீது கட்டவிழ்த்துவிட்ட தாங்கொணாக் கொடுமைகளை எதிர்த்தப் போராட்டம் செங்கொடி இயக்க வரலாறாக பரிணமித்துள்ளது. சாணிப்பாலும் சவுக்கடியும் பாலியல் வன்முறைகளும் படுகொலைகளுமாக தலித்துகள் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடியே இன்று ஓரளவுக்கு கண்ணியமான வாழ்க்கையை கிராமப்புற தலித்துகள் எட்டியுள்ளனர். ஆனாலும் உத்தப்புரங்களும் திண்ணியங்களும் கயர்லாஞ்சிகளும் ஒழிந்தபாடில்லை.

இவ்வாறு வாழ்வின் எல்லா நிலைகளிலும் நிராகரிக்கப்பட்ட தலித்துகள் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைக் கட்டி அதன் வழியாக தொடர்ந்து அழுத்தங்களை உருவாக்கி தங்களது கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளனர். இருந்தபோதும் இன்றளவும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு தலித்துகளை கீழ்ப்படுத்தவே முற்பட்ட வகுப்பினர் முயற்சித்து வருகின்றனர்.

இந்துமதத்தின் பிடியிலிருந்து வெளியேறாதவரை சாதியிழிவும் தீண்டாமையும் தொடரவேச் செய்யும் என்பதால் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதையும் பிற மதங்களைத் தழுவுவதையும் ஒரு போராட்ட வடிவமாகவே தலித்துகள் கைக்கொண்டுள்ளனர். தலித்துகளின் மீதான தங்களது பிடி இறுகுவதை சகித்துக்கொள்ளாத இந்துத்வவாதிகள்- தலித்துகள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு உரிமையையே ஒரு துருப்புச்சீட்டாக வைத்து அச்சுறுத்துகின்றனர். பிறமதத்திற்கு செல்லும் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று இந்த அச்சுறுத்தல்களையும் மீறி மதமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

நேற்றுவரை டாய் என்றவர்கள், இன்று பாய் என்று அழைக்கிறார்கள் என்கிறபோது ஏற்படுகிற மனநிலை மிக முக்கியமானதாக தலித்துகளால் உணரப்படுகிறது. ஆகவே இஸ்லாத் மீது தலித்துகளுக்குள்ள ஈர்ப்பை தணிப்பது- முடிந்தால் ஒழித்துக்கட்டுவது என்பதில் இந்துத்துவம் கவனங் குவித்துள்ளது. அதன்பொருட்டே இஸ்லாத்தை ஒரு பயங்கரவாதிகளின் தத்துவமாக முன்னிறுத்தும் அமெரிக்க பயங்கரவாத ஆட்சியாளர்களுடன் அது வெளிப்படையாகவே கைகோர்த்து நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த ‘புனிதக்கூட்டின் இளையப் பங்காளி’களான இந்துத்வாவினர்- ஏகாதிபத்தியம் முன்வைக்கிற உலாகளாவிய ஒற்றைப் பண்பாட்டைப் போலவே- இவர்களும் ஒரு ஒற்றைத் தேசிய பண்பாட்டை முன்வைக்கின்றனர். சமூகத்தின் பன்முகத்தன்மையை ஒழித்துக் கட்டுவதன் மூலம் ஏகத்துவமான ஒரு மதவாதத்தை இங்கே நிறுவும் அவர்களது கனவுகளைத் தகர்ப்பது தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் முதற்கடமையாகிறது.

தலித்துகள் தொடர்ந்து போராடி பல்வேறு உரிமைகளை அடைந்திருந்த போதிலும் அவர்கள் மீதான தீண்டாமை மற்றும் புறக்கணிப்பு, உரிமை மறுப்பு ஆகியவை தொடரத்தான் செய்கின்றன. அதை எதிர்த்த தலித்துகளின் போராட்டம் தொடர்கிறது. சச்சார் கமிட்டி அறிக்கை இஸ்லாமியர்களின் நிலையும் தலித்துகளின் நிலையும் கிட்டதட்டட சமநிலையில் முடக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இவ்விரு சமூகங்களும் ஒன்றிணைவது அவசியமாகிறது.

இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், பார்ப்பனீய மேலாதிக்கக் கனவில் முன்வைக்கப்படும் இந்துத்வாவை எதிர்கொள்ளவும், பெரும்பான்மை மதவாதத்திற்குள் இந்திய அரசு எந்திரம் மூழ்கிப் போய்விடாமல் ‘ மதச்சார்பற்ற அரசு ’ என்ற அரசியல் சாசன வாசகங்கள் மெய்ப்பிக்கப்படவும் இந்த ஒற்றுமை அவசியமாகிறது. சரியான தலைமைகளால் அணிதிரட்டப்படாத போது தலித்துகளில் ஒருபகுதியினர்- தங்களைப்போலவே ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் இஸ்லாமியரைத் தாக்க மதவெறியர்களால் பயன்படுத்தப்பட்டதை குஜராத்தில் நேடிரயாகக் கண்டோம். எனவே இந்துத்துவத்திற்கு எதிராக- அதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வழங்குகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தலித்- இஸ்லாமியர் ஒற்றுமை அவசியமாகிறது. ஆனாலும் சாதி- மத அடிப்படையிலான உறவுகள் சில தற்காலிக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே உதவும் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. அவரவரது தனித்தன்மைகளை அங்கீகரித்து இணங்கி வாழும் ஒரு சமூகத்திற்கான விழைவையே நாம் முன்வைக்க வேண்டியுள்ளது. 

- நெல்லையில் நடந்த நிகழ்வுக்கொன்றுக்கு தயாரித்த உரைக்குறிப்பை விரிவுபடுத்தி இந்தக் கட்டுரையை எழுதி பத்தாண்டுகளுக்கு மேலிருக்கும்.  அப்போது சமநிலைச் சமுதாயம் இதழில் வெளியானது


வெள்ளி, மே 4

மே 6 நீட் தேர்வை நிறுத்து - ஆதவன் தீட்சண்யா

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களுக்கு கேரளாவின் எர்ணாகுளம், ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் உதய்பூர் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையத்தை ஒதுக்கியிருப்பதாக ஏப்ரல் 18ஆம் தேதி  சிபிஎஸ்இ அறிவித்தது. நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டிருந்த விவரக்குறிப்பின் அத்தியாயம் 2 விதி 4(சி)ல் குறிப்பிடப்பட்டிருந்த வழிமுறைகளுக்கு புறம்பாக தொலைதூர தேர்வு மையங்களை ஒதுக்கியதானது, மாணவர்களை அலைக்கழிப்பதாகவும் மனநிலையை சிதைப்பதாகவும் அவர்களது நிதிச்சுமையை கூட்டுவதாகவும் இருப்பதால் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வுமையம் ஒதுக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காளிமுத்து மயிலவன் பொதுநல வழக்கொன்றை தொடுத்திருந்தார்.    

இவ்வழக்கை கடந்த 27.04.18 அன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்களை ஒதுக்கவேண்டும் என்ற தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பானது, சம்பந்தப்பட்ட மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் கடும் அலைச்சல் மற்றும் செலவினத்திலிருந்து தப்பிக்கவைத்து நிம்மதியும் ஆசுவாசமும் கொள்ளவைத்தது. தீர்ப்பு அமலாகும் என்ற நம்பிக்கையில் அவர்களில் பலரும் முந்தைய தேர்வுமையங்களுக்குச் செல்வதற்காக பதிவு செய்திருந்த பயணச்சீட்டுகளை ரத்து செய்திருக்கக்கூடும். கமுக்கமாக இருந்த  சிபிஎஸ்இ, தேர்வுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று (03.05.2018) மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்து (என்னத்த விசாரித்ததோ?) சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்த  உச்சநீதிமன்றம், சிபிஎஸ்இ ஏற்கனவே ஒதுக்கிய தேர்வுமையங்களுக்குச் சென்று தேர்வை எழுதமாறு மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

மே 6 ஆம் தேதி காலையில் தேர்வு தொடங்கவுள்ள நிலையில் மிகக்குறுகிய கால அவகாசத்தில் அவர்கள் எப்படி இந்த தொலைதூரங்களுக்கு செல்லமுடியும்? குறைந்தபட்சம் 5ஆம் தேதி இரவாவது சம்பந்தப்பட்ட நகரங்களுக்கு அவர்கள் சென்று சேர்ந்தாக வேண்டிய நிலையில் அவர்கள் எவ்வாறு பயணிப்பார்கள்?  முன்பதிவின்றி ரயிலிலோ பேருந்திலோ சென்றுவிடக்கூடிய தூரத்தில் இருக்கின்றனவா இந்நகரங்கள்? இந்த மாவட்டங்களிலிருந்து 10மணிநேரமாவது பயணித்தால் மட்டுமே எர்ணாகுளத்தை அடைய முடியும். துணைக்கு ஒரு ஆள் தேவை. முந்தின நாள் இரவே சென்று தங்கவேண்டியிருக்கும். இதற்காகும் கூடுதல் செலவினங்களுக்கு யார் பொறுப்பேற்பது?  

மதுரையிலிருந்து ஜோத்பூருக்கு / உதய்பூருக்கு ரயிலில் பயணநேரம் வழித்தடங்களுக்கேற்ப 51 மணியிலிருந்து 63மணி நேரம் வரை நீள்கிறது. இன்னும் சிலமணி நேரத்தில்  அதாவது 04.05.18 நள்ளிரவு 00.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் ரயிலில் பயணித்தால்கூட அவர்கள் தேர்வு நேரத்துக்கு போய்ச்சேர முடியாது. திருவனந்தபுரத்திலிருந்து 5ஆம் தேதி பிற்பகல்தான் வண்டி. அந்த பிகானீர் துரிதவண்டியில் போனாலும் 43மணிநேரம் பயணிக்க வேண்டியிருப்பதால் தேர்வு நேரத்துக்குப் போய்ச் சேர முடியாது. தென்மாவட்ட மாணவர்கள் அங்கிருந்து கிளம்பி வந்து இன்றிரவு 21.20 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பக்கூடிய அனுவரத் எக்ஸ்பிரஸை பிடிப்பதும் சாத்தியமில்லை. ஆக தீர்ப்பு வந்த மறுநொடியே கிளம்பியிருந்தாலும்கூட ராஜஸ்தான் தேர்வு மையங்களுக்கு போய்ச்சேர்வது சாத்தியமில்லை. விமானத்தில் நாளையோ மறுநாளோ செல்வதானாலும்கூட திருவனந்தபுரத்திலிருந்து ஜோத்பூருக்கு குறைந்தபட்ச கட்டணம் 14884 ரூபாய், உதய்பூருக்கு 13517  ரூபாய். சென்னையிலிருந்து 12931ரூபாய். மாணவருக்கு துணையாக செல்லும் ஒருவருக்கும் சேர்த்தால், பயணத்திற்கு மட்டுமே இந்த குறுகிய சிலமணி நேர அவகாசத்தில் குறைந்தது 50ஆயிரம் ரூபாய் புரட்ட வேண்டியிருக்கும். அவ்வளவு பொருளாதார வலுவுள்ளவர்கள் மட்டும் கிளம்பி வந்து நீட் எழுதினால் போதும் என்று சிபிஎஸ்இ-யும் உச்ச நீதிமன்றமும் வடிகட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனவா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

நீட் தேர்வு என்பதே அநீதி, அது ரத்து செய்யப்பட வேண்டும் என்று  கோரிவந்த மாணவர்கள், இன்று எங்கள் மாநிலத்துக்குள்ளேயே தேர்வெழுத அனுமதியுங்கள் என்ற கெஞ்சும் நிலைக்கு தாழ்ந்துபோனதற்கு காரணம் மத்திய அரசும் அதன் கழிவுபோல நாறிக்கொண்டிருக்கும் மாநில அரசும் தான். தமிழக மக்கள் தமது வரிப்பணத்தில் உருவாகி வளர்ந்துள்ள மருத்துவக்கல்லூரிகள் மீதான உரிமையை கடந்து ஆண்டு இழந்தோம். பாடத்திட்டம், கேள்வித்தாள், தயாரிப்பு நிலை என எல்லா நிலைகளிலும் பாரபட்சத்தை எதிர்கொண்ட நமது குழந்தைகள், இப்போது சொந்த மாநிலத்தில் நுழைவுத்தேர்வு எழுதும் உரிமையினையும் இழந்திருக்கிறார்கள். இவ்வளவு அலைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாக்கப்படும் இம்மாணவர்களால் இயல்பான மனநிலையோடு தேர்வை எழுத முடியுமா முடியாதா என்பது ஒருபுறமிருக்க, அவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்வதே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இயற்கைநீதி மற்றும் சமூகநீதியின்பால் நமக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக, 6 ஆம் தேதி நாடு முழுவதும் நடக்கவுள்ள நீட் தேர்வை நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசை கோருவதும் அதற்காக மாநில அரசின் பொடனியைப் பிடித்து நெட்டித்தள்ளுவதும்  அவசியமாகிறது.  


செவ்வாய், மே 1

அம்பேத்கரின் வெளிச்சத்துக்கு வராத பணிகள் - ஆதவன் தீட்சண்யா



ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை, அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கு அம்பேத்கரின், அம்பேத்கரியத்தின் பங்களிப்பு என்ன? 

சாதியோ பொருளாதார நிலையோ ஒருவரின் கற்கும் ஆர்வத்தையும் அறிவார்ந்த சாதனைகளையும் தடுத்துவிட முடியாது என்கிற மிகப்பெரும் நம்பிக்கையே அவரது வாழ்க்கை நமக்கு தரும் முதற்பெரும் செய்தியாக இருக்கிறது. தனித்த திறமைகளையும் கல்வியறிவையும் சுயநலத்திற்காக அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடவும் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்காக சிந்திக்கவும் அர்ப்பணிப்பது என்பது இதேயளவுக்கு போற்றத்தக்க மற்றுமொரு செய்தி.

கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், தத்துவவாதியாகவும், வரலாற்றாளராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும், தொழிலாளர்- பாசனம்- மின்சாரத்துறை அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் அவர் ஆற்றிய பணிகள் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் நேரடியாகத் தொடர்புடையவை. வயது வந்தோர் அனைவருக்கும் இன்றுள்ள வாக்குரிமை அவர் எழுப்பிய கோரிக்கையே. நிர்வாகத்துறையை ஜனநாயகப்படுத்த அவர் பட்டியல் சாதியினருக்கு கோரிய பிரதிநிதித்துவம் தான் அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. பின்னாளில் பிற்படுத்தப்பட்டோரும் பெண்களும் அத்தகைய பிரதிநிதித்துவத்தைப் பெற வழிகோலியது. அரசுப் பணியாளர்களை தேர்வு செய்வதில் நீடித்துவந்த பார்ப்பன ஏகபோகத்தையும் சாய்மானங்களையும் முடிவுக்கு கொண்டுவர அவர் வைத்த முன்மொழிவிலிருந்தே பின்னாளில் அரசுப் பணியாளர் தேர்வாணையங்களும் வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகங்களும. மத்திய மாநில அரசுகளுக்கென தனித்தனி நிர்வாக அதிகாரிகள் தொகுப்புகளும் உருவாகின. இன்றைக்கு மாநில குரூப்1, குரூப்2 என்று அதிகாரிகள் தேர்வாவதற்கு அவரே அடிப்படை.

தொழிலாளர் துறை அமைச்சர் என்கிற முறையில் 1942 நவம்பர் 27 ஆம் நாள் அவர் கூட்டிய ஏழாவது இந்திய தொழிலாளர் மாநாட்டில்தான் வேலைநாள் என்பது எட்டுமணி நேரம் என்கிற மகத்தான முடிவினை அறிவித்தார். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம், அகவிலைப்படி அறிமுகம், மகப்பேறு விடுப்பு, ஆழ்துளைச் சுரங்கங்களில் பெண்தொழிலாளர்களை பணி செய்ய வைப்பதற்கு தடை, மகப்பேறு விடுப்பு என தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல்வேறு உரிமைகளும் அவர் வழியாக வந்தவையே. பொதுநிதி, வங்கித்துறை சீர்திருத்தங்கள் பற்றிய சமீபத்திய விவாதங்களில் அம்பேத்கரின் வழிகாட்டுதல் போற்றப்படுகிறது. ரிசர்வ் வங்கி உருவாக்கம் அவரது சிந்தனைக்குழந்தை தான் எனப்படுகின்றது.  இன்சூரன்ஸ் அரசுடைமையாக்கம், மத்திய மின்தொகுப்பு, சுரங்கங்கள் மீதான அரசுரிமை, தொழில் மயமாக்கம் என்று தேசிய கட்டுமானத்தில் அவரது பங்களிப்பு எல்லையற்று விரிகிறது.

அம்பேத்கர் தன் பால்யத்தில் தந்தையைக் காணச்சென்ற வழியில், தீண்டாமையின் காரணமாக தவித்த வாய்க்கு தண்ணீர் மறுக்கப்பட்டு, மாடுகளும் எருமைகளும் புரண்டு கலக்கிய குட்டையில் தண்ணீர் குடிக்கும்படி விரட்டியடிக்கப்பட்ட கொடிய அனுபவத்தைக் கொண்டவர். அவர் படித்து பாரிஸ்டராகி திரும்பிய பின்னும்கூட அலுவலகத்தில் பொதுப் பயன்பாட்டுக்கென வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து நீரெடுத்துக் குடிக்க தடுக்கப்பட்டவர். அலுவலகத்தின் கடைநிலைப் பணியாளர் முகந்து தரும்வரை தாகத்தோடு காத்திருந்தவர். சவுதார் குளத்தில் நீரருந்தும் உரிமைக்காக தனது மக்களோடு உண்ணாவிரதமிருந்து ஊர்வலம் நடத்தி கடும் தாக்குதலுக்கும் ஆளானவர். அருகாமையிலிருந்த நீர்நிலைகளைப் பயன்படுத்துவதற்கு சாதியவாதிகள் விதித்த தடை காரணமாக, அவர் தான் நடத்திய பல மாநாடுகளில் பங்கெடுத்தவர்களுக்கு விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றும் அவலத்திற்கு ஆளானவர். ஆனாலும் அவருக்கென அதிகாரம் கிட்டியபோது, அதை அவர் தனக்கும் தன் மக்களுக்கும் தண்ணீர் தர மறுத்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை. மாறாக, ஓர் அடிப்படை ஆதாரவளமான நீர் குடிமக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கும் பாசனத்திற்கும் நாட்டை வளப்படுத்துவதற்கும் தடையின்றி கிடைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்தார். இந்த நோக்கத்தில்தான் அவர் அமெரிக்காவின் டென்னஸி ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டத்தைக் கொண்டுவந்தார். வெள்ளப் பெருக்கினால் வங்காளம், பீகார் மாநிலங்களில் தொடர்ந்து கடும் சேதாரங்களை உருவாக்கிவந்த தாமோதர் ஆற்றின் குறுக்கே பேரணையும் நீர்மின் உற்பத்திக்கூடமும் கட்டப்பட்டன. இப்பெருந்திட்டத்தில் தீண்டப்படாத சாதியைச் சார்ந்த மற்றொருவரும் சர்வதேச அளவில் மதிப்பார்ந்த இடத்தைப் பெற்றிருந்த இயற்பியலாளருமான மேக்நாட் சாகாவும் அம்பேத்கருடன் இணைந்திருந்தார். தாமோதர் போலவே மகாநதி, சோன் நதி பள்ளத்தாக்கு திட்டங்களும் அம்பேத்கரின் கொடைகளே.

ரயில் தடங்களைப் போலவே நதிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்- அதாவது நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்கிற அம்பேத்கரது யோசனை, நதிநீர் பகிர்வுக்காக மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்ளும் இந்நாளில் அருந்தீர்வாக நினைவுகூரப்படுகிறது. நாட்டின் நீர் மேலாண்மைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்தும் விதிமாக தேசிய நீர் ஆணையம்  Ambedkar’s Contribution to Water Resources Development என்கிற ஆவணத்தை 1993ல் வெளியிட்டது. அம்பேத்கரை கொண்டாடுவதாக காட்டிக்கொள்வதன் மூலம் தலித்துகளிடையே செல்வாக்கு பெறமுடியும் என்கிற மலிவான உத்தியுடன் களமிறங்கியுள்ள பா.ஜ.க அரசு, அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாளை (14.04.2016) தேசிய தண்ணீர் தினம் என்று கொண்டாடுவதாகவும் இந்த ஆவணத்தையும்  மறுபதிப்பாக வெளியிட்டுள்ளதாகவும் பீற்றிக்கொண்டது.

இந்தியாவின் முதலாவது முன்னோடி ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் என்கிற பெருமைக்குரிய தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம். அது அம்பேத்கரால் உருவாக்கப்பட்டது என்கிற அடிப்படைத்தகவலைக்கூட அத்திட்டக் கழகத்தின் தற்போதைய தலைவரோ  அங்குள்ள தொழிலாளர்களோ அறிந்திருக்கவில்லை,  அங்குள்ள நூலகத்தில்கூட இதுதொடர்பான பதிவுகள் ஏதும் இடம் பெற்றிருக்கவில்லை என்பதை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முசாபர்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான ஏ.கே.பிஸ்வாஸ் நேரடி அனுபவத்திலிருந்து எழுதியிருக்கிறார். இதுதான் களநிலவரம் பற்றிய துல்லியமானதோர் உதாரணம். அம்பேத்கரை, தலித்துகளின் இடஒதுக்கீட்டுக்காகப் போராடியவர் அல்லது அரசியல் சாசனத்தை எழுதியவர் என்கிற சுருக்கப்பட்ட பிம்பமே வெகுமக்களுக்குள் பதியவைக்கப்பட்டுள்ளது. தேச உருவாக்கத்திற்கும் குடிமக்களின் நல்வாழ்விற்கும் அம்பேத்கர் ஆற்றிய பணிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆனால் காலம் அவரது பன்முக ஆளுமையை தேடித்தேடி முன்னிறுத்துகிறது.

தமிழக அளவில் பெரியாரியம் அவ்வப்போது அம்பேத்கரியத்தின் எதிர்நிலையில் வைத்து விவாதிக்கப்படும் போக்கு உருவாகிறதே. உண்மையில் அம்பேத்கரின் காலத்தில் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இடையில் இருந்த உறவு எப்படிப்பட்டது? அவர்களிருவரின் பணிகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தனவா, துணையாக இருந்தனவா?


ஜல்கவோன் என்னும் இடத்தில் 29.5.1929 அன்று மத்திய மாகாணங்கள் - பேரார் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையை "பம்பாயில் சுயமரியாதை முழக்கம்' என்னும் தலைப்பில் "குடி அரசு' (16.6.1929) வெளியிட்டது. அம்பேத்கர் நிறுவிய "சமாஜ் சமதா சங்' (சமுதாய சமத்துவச் சங்கம்) மராத்தியிலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமைஉரையின் மிகச் செறிவான சுருக்கம், ஆங்கிலத்திலும் தமிழிலும் மேற்சொன்ன ஏடுகளில் வெளியிடப்பட்டன. அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், "முதல் மகாராட்டிர சுயமரியாதை மாநாடு' என்று வர்ணித்தது. அதே ஆண்டுத் தொடக்கத்தில்தான் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமாஜ் சமதா சங்கின் முதல் மாநாட்டிற்கு, “தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின் பிரபல தலைவர் ஈ.வெ. ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன'' என்னும் செய்திக் குறிப்பிலிருந்து, பெரியாரும் அம்பேத்கரும் அதற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றோ, இருவருக்கும் தொடர்பு இருந்தது என்றோ ஊகிக்கலாம் ("ரிவோல்ட்', 29.9.1929). - தோழர் எஸ்.வி.ராஜதுரையின் இந்தக் குறிப்பு பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இருந்த தோழமையை உணர்த்துகிறது.

அம்பேத்கர் /பெரியார் பெயரை நொடிக்கு நூறுமுறை பஜனை போல உச்சரித்துக்கொண்டு அவர்களது நோக்கங்களுக்கு எதிராக செயல்பட்ட/ செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற எவரொருவரை விடவும் பெரியாரும் அம்பேத்கரும் கருத்தியல் ரீதியாக வெகுவாக ஒன்றி செயல்பட்டனர். அம்பேத்கர் ‘சாதியொழிப்புஎன்கிற தனது ஆவணத்தை பெரியாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். பெரியார் அதை தமிழில் வெளியிட்டு பரவலாக்கியிருக்கிறார். சாதியத்திற்கும் இந்துமதத்திற்கும் எதிராக நடத்தப்பட வேண்டிய சமரசமற்றப் போராட்டங்களை ஆளுக்கொரு முனையிலிருந்து முன்னெடுத்த பெரியாரும் அம்பேத்கரும் தம்மளவில் எதிரெதிரானவர்கள் அல்ல. அவ்வாறு நிறுத்துகிறவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கலாம்.  அவற்றை பின்தொடர்ந்து நாம் நேரத்தை விரயமாக்க வேண்டியதில்லை. 

சோசலிசம் குறித்து அம்பேத்கருக்கு இருந்த கருத்துகள் என்ன? அந்தக் கருத்துகள் உருவாகி வந்த பின்புலம் என்ன? குறிப்பான நிகழ்வுகள் ஏதும் சொல்ல முடியுமா?

அயல்நாடுகளில் படிக்கச் சென்றபோது பேபியன் சோசலிஸ்டுகளுடன் ஏற்பட்ட தொடர்புகளாலும் அவர்களது கருத்தியல் செல்வாக்கினாலும் தான் அம்பேத்கர் சோசலிசம் பேசினார் என்று சிலர் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஏற்றத்தாழ்வு, புறக்கணிப்பு, அவமானம் என சாதியத்தின் கொடுமைகளை எல்லா நிலைகளிலும் இடையறாது சந்தித்தேயாக வேண்டிய அவலத்திற்குள் தள்ளப்பட்ட ஒரு தலித் என்கிற வகையில் அவற்றுக்கெதிரானவராகவும் சமத்துவத்தைக் கோருகிறவராகவும் அவர் தன்னியல்பாகவே இருப்பது தவிர்க்க முடியாதது. சமத்துவம் என்பதன் கோட்பாட்டு விளக்கத்தை வேண்டுமானால் அவர் தாமதமாக - வெளியுலகத் தொடர்புகள் மூலமாக அறிந்திருக்கலாம். ஆனால் சமத்துவம் என்பதை அவர் தனது அகவயமானத் தேவையாக உணர்ந்து அதைத் தேடியடைவதிலேயே முழு வாழ்நாளையும் அர்ப்பணித்திருக்கிறார். இந்த நிறைவேறாத கனவை செயல்பூர்வமாக மாற்றிக்காட்டுவதில் அவர் காட்டிய உழைப்பும் விடாப்பிடியான ஈடுபாடும்தான் பிறரிடமிருந்து அவரை தனித்தொளிரச் செய்கிறது.

1917ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தியாவில் சாதிகள் என்கிற ஆய்வுக்கட்டுரையிலேயே வர்க்கம் பற்றி அவரது குறிப்புகளை காணமுடிகிறது. நாடு திரும்பி அவர் தனது அரசியல் செயற்பாடுகளை தொடங்கிய காலந்தொட்டே தொழிலாளர்களை அணி திரட்டுவதில் அக்கறை காட்டி வந்திருக்கிறார். பம்பாய் நூற்பாலைகளில் நிலவிய தீண்டாமைகளைக் காணும் அவர், சாதியானது தொழிலை மட்டுமல்லாது தொழிலாளர்களையும் பிரித்துவைக்கிறது என்றும்  தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணிதிரட்டுவதில் சாதி பெரும் தடையாக இருக்கிறது என்றும் தெளிவுபடுத்தினார். சாதிகளைக் கடந்து உழைக்கும் மக்களை திரட்ட வேண்டும் என்கிற திட்டத்தோடுதான் 1936 ஆகஸ்டில் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.

1938 பிப்ரவரியில் மன்மத் நகரில் ரயில்வேயில் பணியாற்றும்  ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மாநாட்டுக்கு தலைமை வகித்து அவர் ஆற்றிய உரை இன்றைக்கும் பல்வேறு அம்சங்களில் பொருத்தப்பாடு கொண்டது.  ‘என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று - பிராமணியம், இரண்டு- முதலாளித்துவம்என்று அறிவித்தோடு சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதன் எதிர்மறைதான் பிராமணீயம் என்று நிறுவுவார். ‘...நமது இலக்கு இந்த கூலி அடிமைத்தனம் என்னும் கருத்தோட்டத்திலிருந்து விடுபட்டு விடுதலைக் கோட்பாட்டை அடைவதாக இருக்கவேண்டும்... அதாவது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய இலக்குகளை நோக்கி தொழிற்சங்க இயக்கத்தை வழிநடத்த வேண்டும். சமுதாயத்தைப் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும். இந்தப் புனர் நிர்மாணமே தொழிலாளி வர்க்கத்தின் முதற்கடமையாகும்...’ என்று அறைகூவல் விடுக்கிறார். புனர் நிர்மாணம் என்பதற்கு பதிலாக புரட்சி என்கிற நேரடிச் சொல்லை ஒருவேளை அவர் பயன்படுத்தியிருப்பாரேயானால் அவரை கம்யூனிஸ்ட் என்று பலரும் சொல்லியிருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை, இந்த முழக்கம் ‘இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத் தவிர எதுவுமில்லை, அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டுஎன்பதற்கு இணையானதே. ‘இந்தியாவும் பொதுவுடைமைக்கான முற்படு தேவைகளும்என்கிற பொதுத்தலைப்பின் கீழ் அவர் எழுதியுள்ள கட்டுரைகளை வாசிக்கிற எவரும் இம்முடிவுக்கே வரமுடியும்.   

மார்க்சீயம் முன்வைத்த விஞ்ஞான சோசலிசத்துடன் தொடர்பில்லாத பல வகைமைகள் சோசலிசத்தில் உண்டு. அம்பேத்கரின் சோசலிசம் அரசு சோசலிசம் எனப்படுகிறது. அவர் பங்கு வகித்த பல்வேறு அமைப்புகளின் கொள்கைகளில் சோசலிசத்தின் மீதான தனது பிடிப்பை கூறிவந்த அவர் 1946 ஜூன் 17 அன்று அரசமைப்பு அவையில் ஆற்றிய உரையில் அதை மறுவுறுதி செய்கிறார்.  ‘இந்த நாட்டில் சமூக, பொருளாதார நீதி இருக்கும்படி செய்வதற்குத் தொழில்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும், நிலம் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்மானம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று  நான் எதிர்பார்த்திருக்க வேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் நீதியில் நம்பிக்கை கொள்ளும் எந்தவொரு எதிர்கால அரசாங்கமும், அதன் பொருளாதாரம் ஒரு சோசலிசப் பொருளாதாரமாக இருந்தாலன்றி, அந்த நீதியை எவ்வாறு செயல்படுத்தும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை....’.

சோசலிசத்தின் மீது அம்பேத்கருக்கு இருந்த சீரான நம்பிக்கை கம்யூனிஸ்ட்டுகளின் மீது அதேரீதியில் இல்லாமல் போனதற்கு பல நியாயமான காரணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அதை அவர் பகையுணர்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை. பல்வேறு மக்கள் பிரச்னைகளில் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து போராடியிருக்கிறார்.  அதேவேளையில் சாதியத்தைப் புரிந்துகொள்வதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருந்த பார்வைக்குறைபாட்டை கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ், பிரிட்டிஷ் ஆட்சி அமைத்த பல்வேறு குழுக்களை பலரும் புறக்கணித்த நிலையில் அம்பேத்கர் அவற்றிடம் கோரிக்கை சாசனங்களை அளித்தது தொடர்பாக கம்யூனிஸ்ட்டுகளுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருந்தபோதிலும் அம்பேத்கர் முன்வைத்த தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை, தனி செட்டில்மென்ட் போன்ற கோரிக்கைகளை ஆதரித்திருக்கிறார்கள். இதுபற்றி ‘ஆறு கோடி தீண்டாதார்என்கிற தலைப்பில் பி.டி.ரணதிவே எழுதி 1945ல் வெளியான பிரசுரம் அப்போதே தமிழிலும் வெளிவந்துள்ளது. 

பொருளாதாரம் என்கிற அடிக்கட்டுமானத்தை மாற்றினால் சாதி என்கிற மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்கிற கம்யூனிஸ்டுகளின் வாதத்தை அவர் மறுத்தார். அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா என்று துல்லியமாக பிரித்தறிய முடியாதபடிக்கு சாதி இருப்பதை சுட்டிக்காட்டினார். ஒரு வாதத்திற்காக, சாதி மேற்கட்டுமானம் தான் என்றே ஒப்புக்கொண்டாலும் மேலேயுள்ள அதை தகர்க்காமல் அடிக்கட்டுமானத்தை தகர்க்கமுடியாது என்று விளங்கப்படுத்தினார். இவரது இந்த விளக்கத்தை சரியென ஏற்றுக்கொள்வதற்கு கம்யூனிஸ்டுகளுக்கு குறிப்பிட்ட காலம் தேவைப்பட்டிருக்கிறது. சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும்  இணைத்தே நடத்தவேண்டுமென்கிற நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். சாதியம் ஒழிக்கப்படக் கூடாதென்பதல்ல, பொருளாதாரக் கட்டமைப்பு மாறினால் சாதியும் ஒழிந்துவிடும் என்கிற யாந்திரீகமான - பிழையான பார்வைதான் எங்களை தடுத்துவிட்டது என்று பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்துகொண்டு கம்யூனிஸ்டுகள் களத்திற்கு வந்திருக்கிறார்கள்.

தொழிலாளிகளில் ஒருபகுதியினரை சாதியடிப்படையில் அம்பேத்கர் பிரிக்கிறார் என்று கம்யூனிஸ்ட்டுகளும், தலித் தொழிலாளர்களை - அவர்கள் மீதான தீண்டாமைகளைக் களையாமலே - தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்கிற வலைக்குள் இழுத்துப் போட்டுக்கொள்ள கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிப்பதாக அம்பேத்கரும் பரஸ்பர குமைச்சல் இருந்திருக்கிறது. இருதரப்பினரும் தத்தமது ஆதரவு தளத்தை தக்கவைக்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே இதை பார்க்கவேண்டியுள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் மீது அம்பேத்கர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தருணங்கள் எல்லாமே தேர்தல் காலங்கள் என்கிற ஒத்திசைவைக் கொண்டுள்ளது தற்செயலானதல்ல. தேர்தலுக்கு முன்னும் பின்னும் அவர் கம்யூனிஸ்ட்டுகளுடன் போராட்டக்களத்தில் இணைந்து நின்றிருக்கிறார். ( பார்க்க- Bridging the Unholy Truth - Anand Teltumbde). ஆனால் இந்த காலப்பின்னணியை கவனத்தில் கொள்ளாமல், கம்யூனிஸ்டுகளிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அம்பேத்கர் சொல்லியிருக்கிறார், கவனம் கவனம் என்று சிலர் கதறுகிறார்கள். அதே அம்பேத்கர் இந்துத்வவாதிகளிடம் எந்த ஒட்டுறவும் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று விடுத்த எச்சரிக்கையை இவர்கள் எங்கும் பேசுவதில்லை. தலித்துகள் வலதுசாரி முகாம்களுக்குள் இழுக்கப்படுவது பற்றியும் கவலையுமில்லை. சாதியத்தை அதன் எல்லாக் கொடூரங்களோடும் மீட்டமைப்பதற்காக தலித்துகள்மீது கொடிய அடக்குமுறைகளை ஏவிவரும் இந்துத்வ பா.ஜ.க. பெரும்பாலான ரிசர்வ் தொகுதிகளை கைப்பற்றியுள்ளது பற்றியும் கலவையில்லை. ‘ராம்விலாஸ் பஸ்வான், உதித் ‘ராம்ராஜ், ‘ராம்தாஸ் அதாவாலே ஆகிய  ‘தலித்ராம்கள்,  தலித்துகள்மீது எவ்வளவு கொடிய ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் முணுமுணுப்பின்றி பா.ஜ.க.வுடன்  பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது பற்றி இவர்களுக்கு எவ்வித கூச்சமும் கிடையாது. தலித்துகளை சப்ஜெக்டாகவும் பிராஜக்டாகவும் மாற்றி கொள்ளையடிக்கும் தொண்டு நிறுவனங்கள் என்கிற ஃபண்டு நிறுவனங்களால்  தலித் அணிதிரட்சி சிதறடிக்கப்படுவது பற்றியும்கூட இவர்களுக்கு கவலையில்லை. இவர்களது ஒரே கவலை கம்யூனிஸ்டுகளிடம் தலித்துகள் போய்விடக்கூடாது என்பதுதான். போராட்டப் பாதையை விடுத்து, அம்பேத்கர் உருவாக்கிக் கொடுத்த அரசியல் சாசனத்தைப் பற்றி நின்று நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிற போக்கானது, அதிகாரத்தை எப்படியாவது யாருடனாவது பகிர்ந்துகொண்டு அதை நியாயப்படுத்திக் கொள்வதற்காக தூய தலித்தியம் பேசிக்கொண்டு தனிமைப்பட்டு காலந்தள்ளுவது என்கிற  தற்கால நிலைக்குத் தாழ்ந்துள்ளது.

அதேவேளையில்  அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமைகளை அடைவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற அம்பேத்கரின் வழிகாட்டுதலை உள்வாங்கியவர்கள் களத்தில் இருக்கிறார்கள். சாதியொழிப்புக்கான போராட்டத்தை தலித்துகள் மட்டும் தனித்து நடத்திவிட முடியாது என்கிற தெளிவு அவர்களுக்கிருக்கிறது. ஆகவே, அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளையும் பெரியாரிஸ்டுகளையும் சாதியத்தைத் துறந்து வாழப் போராடுகிறவர்களையும் தமது தோழமைச்சக்திகளாக கருதுகிறார்கள். அதுபோதுமானது.

நன்றி: https://www.bbc.com/tamil/india-43757881

ஓடிப் போனவன் - பிரெஞ்சுக் கவிஞர் போரிஸ் வியான், தமிழில்: வெ.ஸ்ரீராம்

  குடியரசுத் தலைவர் அவர்களே இதோ உங்களுக்கு ஒரு கடிதம் நீங்கள் ஒருவேளை அதைப் படிக்கலாம் உங்களுக்கு நேரம் இருந்தால். இப்போதுதான் கிடைத்தன எனக்...