புதன், ஆகஸ்ட் 4

பொதுநலன் கருதி பிரசுரிக்கப்படாத கதை - ஆதவன் தீட்சண்யா

 முன்குறிப்பு 1: கதை என்றால் அதற்கொரு நாயகனோ நாயகியோ தேவை எனக் கருதுவீர்களேயானால் அப்பாத்திரங்களுக்கு நிறைபொருத்தம் தாங்களே. உங்களது பெயரையே இதற்கென கோடிட்ட இடங்களில் நிரப்பிக்கொள்ளவும். எதிர்நாயகன்/ எதிர்நாயகி என எப்போதும் நான் வகிக்கும் பாத்திரம் இக்கதையிலும் பாந்தம், தொடர்வதில் எனக்கொன்றும் சங்கடமில்லை.  

முன்குறிப்பு 2: மை தொட்டெழுத மயிலிறகினைக் கைவிட்ட இக்கதை மென்மையின் சாயை துளியுமற்றது. நுரைமெத்தை/ பஞ்சுப்பொதி/ மாவுப்பாக்கெட்/ மலர்மஞ்சம் மீது கிடத்தி படித்துப் பார்த்து மென்மையுணர்க.   

இப்போது சற்றே திறந்தமனதுடன் கதைக்குள் வாருங்கள்.     

‘சகோதர சகோதரிகளே!’ என விவேகானந்தர் விளித்ததற்கு உலகமே சிலிர்த்ததாம். நான் உங்களை அவ்வாறு விளித்தால்? உறவுமுறை சொல்லி விளிப்பதை விடுங்கள், நண்பரே என்றழைப்பதையே சகித்துக்கொள்ள முடியாமல் எத்தனை சண்டைச்சச்சரவுகள்? இருந்தாலும் மரபென ஒன்றிருக்கிறதே, அதற்காக உங்களை நண்பர்/நண்பி என விளித்து முகமன் சொன்னதாக எடுத்துக்கொள்க. மற்றபடி நாம் எப்போதுமே நண்பர்களாக இருந்ததில்லை. எப்போதுமே என்றால் எப்போதுமேதான், தலைமுறை தலைமுறையாக. அடுத்துவரும் சில நூற்றாண்டுகளில்கூட நாம் நண்பர்களாவோமா என்றறியேன். அவநம்பிக்கையோ முன்முடிவோ அல்ல இது, வரலாற்றிலிருந்தும் வாழ்வனுபவத்திலிருந்தும் நான் எட்டிய முடிவு.

நாம் ஏன் நண்பர்களாக இல்லை? ஒரு மனிதர் எப்படி இன்னொரு மனிதருக்கு நண்பராக இல்லாதிருக்க முடியும்? சரி நாம் நண்பர்களாக இல்லையென்றால் பகைவர்களா? அதுவுமில்லை என்பேன். பின் நாம் பிரிந்திருப்பது ஏன்? என்றைக்கேனும் யோசித்திருக்கிறீர்களா? எனக்கு தீரா யோசனை.   

உலகெங்கும் மக்கள் பாலினம், நிறம், மொழி, இனம், வட்டாரம், மதம், வர்க்கம் சார்ந்த அடையாளங்களால் பிரிந்திருக்கிறார்கள். நாமும்தான். எனினும் அவர்கள் குறைந்தபட்சம் இந்த அடையாளங்களால் தமக்குள் ஒரு சமுதாயமாக ஒன்றிணைந்திருக்கிறார்கள். நாமோ இந்த அடையாளங்களுக்குள்ளும் சேர்ந்திழையாமல் பிரிந்தேயிருக்கிறோம். காரணம், இவற்றைவிட வலுவானதொரு அடையாளமாக- குறுக்கும் நெடுக்குமாக ஊடறுத்து நம்மைத் துண்டுதுண்டாக வெட்டிப் பிரிப்பதாக சாதி இருக்கிறது என்பேன். இது எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நம்மை செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் பிரித்தெறிய முடியும் என்பதிலேயே குறியாக இருக்கிறது.

சூரியனுக்குக் கீழிருக்கும் (சூரியனையும் சேர்த்தேகூட) ஏதொன்றையும் அடியும்முடியும் பொடிபட அலசி ஆராயும் நீங்கள் சாதியைப்பற்றி நான் இவ்வாறு பேசத்தொடங்கியதுமே சங்கடமேறி நெளிகிறீர்கள். இல்லாத சாதியை எதற்கு விவாதிக்கவேண்டும் என்கிற அலுப்பை வலிந்தேற்றிய குரலில், இப்படி பேசிப்பேசி நீதான் சாதியத்தை பூதாகரப்படுத்துகிறாய் என்று என்னைக் கடிந்து கொள்கிறீர்கள். வெயிலின் ஈரம், பனியின் வெம்மை, பூவின் சுமை, முள்ளின் இதம், நீரின் தாகம், மழையின் கொதிப்பு என்று கண்மூடி விண்பார்க்கும் உன்னதங்களை எழுதாமல் இப்படி குறுக்கே பாய்ந்து இலக்கியத்தையும் பிரச்சாரமாக்கிவிடுவதாய் குற்றம்சாட்டுகிறீர்கள். எதிர்வாதமிடும் என்னை இணங்கச் செய்யமுடியாத ஒரு கட்டத்தில் நிதானமிழந்துப் போகும் நீங்கள், எதிர்த்துப் பேசுமளவுக்கு உங்களுக்கெல்லாம் துளிர்விட்டுப்போச்சு என்று பொருமுகிறீர்கள். அப்போது உங்கள் குரலில் ஏறியிருக்கும் நூற்றாண்டுகளின் செருக்கும் பரிகாசமும்தான் சாதி என்று சுட்டிக்காட்டினால் வீண்பழி என்று பம்முகிறீர்கள். 

நேருக்குநேர் பேசி இதுகாறுமான இடைவெளியை இன்னும் கூட்ட நாட்டமில்லை. என்றாலும் நாம் உரையாடித்தான் நமக்கிடையேயான பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்பதால் உங்களிடமிருந்து விலகவும் எனக்கு விருப்பமில்லை. அந்த நன்னோக்கில் நான் இப்போது உங்களுக்கு அனுப்பும் இக்கேள்விகள் என்னுடையவையல்ல. எனது மூதாதைகளுடையவை. காலந்தோறும் நாங்கள் எழுப்பிவரும் இக்கேள்விகளை நான் இந்தத் தலைமுறையில் உங்களிடம் எழுப்புகிறேன். அவசரமில்லை, முடிகிறபோது பதிலளியுங்கள். உங்களால் முடியாவிடில் அடுத்து வரும் தலைமுறையையாவது பதிலளிக்கச் சொல்லுங்கள். உங்களிடம் பதிலில்லை என்பதாலோ, நீங்கள் பதிலளிக்க மறுப்பதினாலோ இந்தக் கேள்விகள் மங்கி மறைந்துவிடப் போவதில்லை.   

தன்விவரம்

· பெயர்:

(பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை எப்பெயரில் அழைத்தாலும்… என்பது ரோஜாவுக்குப் பொருந்தலாம், மனிதர்களுக்கு- அதிலும் இந்தியர்களுக்கு? இங்கே என்னவெல்லாமோ இருக்கிறது பெயரில். பொதுவாக ஒருவரது பெயர், அவரது முன்னோருடையதாகவோ குலசாமியுடையதாகவோ இருக்கும். ஜோதிடர்கள் சிவன் விஷ்ணு பார்வதி லஷ்மி இன்னபிற புராண இதிகாசப் பெயர்களைக் குறித்துக் கொடுத்துவிடுகிறார்கள். கடவுளின் அவதாரமென முளைக்கும் பாபாக்கள், குருக்கள், மாதாக்கள், அடியார்கள் மீதான பக்தியில் அவர்களது பெயரையும் சூட்டாமலில்லை. இதன்றி, மதிக்கத்தக்க தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரபலங்கள், மொழி, நிலம், தத்துவங்கள் மீதான பற்றினை வெளிக்காட்டும் விதமான பெயரைச் சூட்டுவதிலும்  மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் யாருடையது உங்களது பெயர்?)

 · நேமாலஜி, நியுமராலஜி என்று பெயரையோ பெயரின் எழுத்துகளை கூட்டிக்குறைத்தோ       எழுதுபவரா நீங்கள்?

(விதிப்படி இருந்தால் செருப்படி வந்தே தீரும், அவன் எழுதியதை எவன் மாற்றமுடியும்?, எண்ணெய்யை பூசிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் என்றெல்லாம் விதிவாதம் பேசிக்கொண்டே, பெயரை மாற்றினாலோ நாலெழுத்தில் முடியும் பெயரை நாற்பது எழுத்துக்களால் எழுதினாலோ ஜாதகப்பலனை மாற்றிவிடலாம் என்று முயற்சிப்பது. ராசிக்கல் மோதிரம், மந்திரித்த கயிறு, கல்மணிமாலை, வாஸ்துமணி, குறிப்பிட்ட நிறத்திலான அங்கவஸ்திரம் போன்ற நிவர்த்தனப் பரிகாரங்களிலும் நாட்டமிருப்பின் சேர்த்துக்கூறவும்.)    

· பெயரின் பின்னொட்டாக உங்களின் சாதி சேர்ந்துள்ளதா?

(சில பெயர்களே சாதியை உணர்த்திவிடக்கூடியவை. பெருமிதத்திற்காகவோ, மரியாதையை(?) எதிர்பார்த்தோ பெயரின் பின்னொட்டாக சாதியைச் சேர்ப்போருண்டு. பெயரில் சாதிப்பின்னொட்டு இல்லாதவர் சாதியைக் கடந்தவர் எனப் பொருளல்ல. பெயரிலாவது கடந்திருக்கிறீர்களா என்றறியவே.)  

· பெற்றோர்:

(நேரடி / தத்தெடுப்பு? தத்தெடுப்பு என்றால் உறவுமுறையிலா வெளியிலா?) 

· இருவரும் சமவயதினரா?

(ஏழு செருப்புத் தேய ஊரூராக அலைந்து பெண்தேடிய காலம்தொட்டு மேட்ரிமோனியல் விளம்பரத்தில் இராப்பகலாக ஜோடி தேடும் இக்காலம்வரை ஆணினும் பெண் இளையவளாக இருக்கவேண்டும் என்பதுதான் இங்கு எழுதாவிதி. சமவயதினளாயின் இரண்டொரு குழந்தைகளை ஈன்ற பிறகு தோற்றத்தில் மூப்பேறி கணவனிலும் மூத்தவள்போல் தெரிவாளாம். இதனால் அவள்மீதான ஈர்ப்பு வற்றி கணவன் வேறுபக்கம் பாய்ந்துவிடும் அபாயம் தடுக்கவே இந்த ஏற்பாடு என்கிற வியாக்கியானம் வேறு. இது அப்பட்டமாக ஆணின் பாலியல் வக்கிரத்தில் ஊறிய வாதம் என்றுள்ள விமர்சனத்தையும் மனதில் கொள்க) 

· உங்களின் தாய் தந்தை இருவரும் ஒரே சாதியினரா?

(அபத்தமெனத் தோன்றும் இக்கேள்விக்கு நீங்கள் தரும் பதில் ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களுக்காக இக்கதைக்குத்  தேவை. சாதித் தொட்டிக்குள்ளேயே இடப்படும் பதியமே திருமணம். தமிழ்நாட்டில் சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வோர் 97.4%. உமது பெற்றோர் 2.6%?. தேசிய குடும்பநல ஆய்வறிக்கையின்படி 2005-2006ஆம் ஆண்டிலேயே இதுதான் நிலையெனில், உமது பெற்றோரின் திருமண காலத்தில் நிலவரம்) 

· சொந்த சாதிக்குள்தான் எனில் ஒரே உட்சாதிப்பிரிவா?

(சாதியும் உட்சாதியும் ஒன்றுக்கொன்று ஆதாரம். சாதிக்குள் பகைப்பிளவாயுள்ள உட்சாதியைக் காப்பதே ஆசாரம். ஒருவேளை உங்களது பெற்றோர் ஆசாரக்கேடர்களா?) 

· உங்களின் பெற்றோர் ஒரே மதத்தவரா?

(மதநல்லிணக்கம் பேணுவதிலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதிலும் நாட்டமுள்ளவர்கள் கூட பிறமதத்தவருடன் மணவுறவை ஏற்பதில்லை. பார்க்க: Religion in India: Tolerance and Segregation, pewforum.org, 2021 June 29. நாடகக்காதல், லவ் ஜிஹாத் போன்ற தற்காலத்து வெறுப்புப் பிரச்சாரம் முந்தைய காலங்களிலும் நடந்திருக்குமா என்பதையறிய இந்த பதில் உதவும்).   

· பெற்றோர் ஒருமுறை மட்டுமே மணம் செய்துகொண்டவர்களா?

(பலதார மணம் போலவே பலதடவை மணக்கும் உரிமையையும் ஆண்கள் நாலாவழியிலும் பெற்றுள்ளனர். ஆனால், கைம்மை அல்லது மணமுறிவு நிலையிலும்கூட இவ்வுரிமையைப் பெண்கள் அடைவது பெருவழக்காக இல்லை. விதிவிலக்காக மறுமணம் புரிவோரை ஏற்பதில் மனத்தடை உள்ளது. அவமதிப்பான இந்த நிலைமை மாறிவிட்டது என்போரும் உளர். உமது பெற்றோர் எவ்வகை?)

குடும்பம்

· குடும்ப உறுப்பினர்கள்: ஆண் --------       பெண் -------- மாறிய பாலினத்தவர் ---------

(கள்ளிப்பால், நெல்புகட்டல், சர்க்கரைத்தண்ணி தெளித்து எறும்புப்புற்றின் அருகில் கிடத்துதல், ஸ்கேன் பார்த்து கருக்கலைத்தல் மூலமாக குடும்பத்தில் கொல்லப்பட்ட பெண்சிசுக்கள், சாதி/மதம் மாறி திருமணம் செய்ததால் குடும்பவிலக்கம் / கொல்லப்பட்டோர் யாருமிருப்பின் அதுபற்றிய விவரத்தை தனியே குறிக்கவும் - அரசுத்தொட்டிலுக்கு, அநாதை/ முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டவர்கள் உட்பட)

· குடும்ப ஜனநாயகம், பாலினச்சமத்துவம் என்பவற்றை இதற்குமுன் கேள்விப்பட்டுள்ளீர்களா?

(குடும்பம் என்பதே ஆணின் அதிகார நிறைவேற்றுத்திடல் தான். பெரும்பாலான குடும்பங்களில் ஆண்/ஆணின் கண்ணோட்டத்திலான பெண்ணின் விருப்புவெறுப்புகள் மட்டுமே முடிவாகின்றன. பாலுறவுக்கான விருப்பம் இடம் நேரம் விதம் என்பவைகூட ஆணின் அதிகாரத்திற்கு அடங்கியவையே. மகவை ஈன்றெடுக்கும் உடலமைப்பு பெண்ணுக்கே உரியது. ஆனால் எப்போது எத்தனை குழந்தைகள் என்பதை அவளா தீர்மானிக்கிறாள்? குடும்பமானது, ஒவ்வொருவருக்கும் தனித்தனியான மனமும் மூளையும் உண்டென அறிந்தேற்கும் பக்குவத்தை வளர்க்கும் நாற்றங்காலா அல்லது கல்லறையா என்பதைப் பொறுத்தே சமுதாயப் பொதுவெளி ஜனநாயகத்தன்மையை அடையும். ஜனநாயகமும் சமத்துவமும் தனித்தனியானவையல்ல) 

· குடும்பத்தினரின் கல்விநிலை:

(இப்போதிருப்பது போலவே கல்வி கற்கும் உரிமை எல்லோருக்கும் எல்லாக்காலத்திலும் இருந்ததில்லை. எப்பாலருக்கும் சமமான கல்வி வாய்ப்புக்கான போராட்டம் சமுதாயத்தில் நடந்ததற்கு நிகராக குடும்பத்திற்குள்ளும் நடந்துள்ளது. உமது பரம்பரையில் எந்தத் தலைமுறை முதன்முதலில் கல்விபெறத் தொடங்கியது? பள்ளி/ கல்லூரி/ பல்கலைக்கழகம்/ தேசிய முக்கியத்துவமுள்ள உயர்கல்வி நிறுவனம் வரை சென்றோர் - இடைநிறுத்தப்பட்டோர்  விவரம்) 

· கல்விக்காக பெற்ற உதவித்தொகை/ கடன்/ சலுகைகள்/ தளர்வுகள்/ இட ஒதுக்கீடு?

(சாதி அல்லது வேறுவகைகளில் இனங்கண்டு தரப்பட்டவை.)

· கல்வியினால் உங்களது குடும்பத்தில் ஏற்பட்ட பண்புமாற்றம் என எவற்றை குறிப்பிடுவீர்கள்?

(சிந்தனை, நடத்தை, மதிப்பீடு, கண்ணோட்டம்)

· உங்களது ரத்த உறவுகளில் எவரேனும் வேறு சாதி/ மதத்தவரை மணம் புரிந்துள்ளனரா? 

(வேறு பண்பாட்டில் வளர்ந்த ஒருவர் உங்களது உறவுவட்டத்திற்குள் நுழைந்ததனால் உண்டான உணர்வுக்கொந்தளிப்பு, அசூயை, பிரமிப்பு, பரஸ்பரம் இழைந்துபோவதில்  ஏற்பட்ட சிக்கல்களும் பரவசங்களும், அவர்களும் மனிதவாழ்வை வாழ்கிறவர்கள்தான் என்கிற புரிதலுக்கு தேவைப்பட்ட காலஅளவு)

· ரத்தக்கலப்பு ஏற்படுத்தியதற்காக யாரையேனும் தண்டிக்க, சித்திரவதைச் செய்திட, கொல்ல, கலவரம் செய்திட நேரடி/ மறைமுக ஈடுபாடு உங்களது குடும்பத்தில் எவருக்கேனும் உண்டா?

(மாற்றார் குடியிருப்பைச் சூறையாட எரிபொருள்- ஆயுதங்கள்- வாகனங்கள்- அடியாட்களை வழங்குவது, காவல் உள்ளிட்ட அரசுத்துறையினரை சரிக்கட்டுவது, வழக்குச்செலவுகளுக்கு பொறுப்பேற்பது, பெண்களை வல்லாங்குச் செய்வது- அதை படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்வது, வன்முறையை நியாயப்படுத்துவது, கண்டுங்காணாமல் கவிதை கதை… எழுதிக் கொண்டிருப்பது)

· உங்களது குடும்பத்தின் இயல்பான உணவுவகைகள் யாவை?

(குதிரைக்கு குடல் காய்ந்தால் தானாக வைக்கோல் தின்னும், புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என எதிரெதிர் நிலைகள் உணவுப்பண்பாட்டில் இருப்பதை கருத்தில் கொள்க)

 · உங்களது சாதி நீங்கள் இறைச்சி சமைத்து உண்பதை அனுமதிக்கிறதா?

(கொல்லாமையை வாழ்முறையாய் ஏற்றவர்களும்கூட தானாக இறக்கும் விலங்குகளின் இறைச்சியை உண்டிருக்கின்றனர் என்கிற வரலாற்றுண்மை, நாங்களெல்லாம் ஆதியிலிருந்தே தாவரவுணவை மட்டுமே உண்பவர்கள் என்போரின் கூற்றை மறுக்கிறது.) 

· அனுமதிக்கிறதெனில், கோழி, வாத்து, புறா, காடை, கவுதாரி, மீன், நண்டு, இறால், நத்தை, முயல், நாய், குதிரை, ஒட்டகம், எருமை, ஆடு, பன்றி, மாடு- இவற்றில் என்னென்ன கறிகளை உண்பீர்கள்?

(பறப்பதில் பட்டத்தையும் காலிருப்பதில்  நாற்காலியையும் தவிர அனைத்தையும் தின்பவர்கள் உள்ளனர். சிலதை மட்டும் தெரிவுசெய்து உண்போரும் உளர்) 

·மாட்டிறைச்சியை உணவுவகைகளில் ஒன்றாக கருதுகிறீர்களா? மாட்டிறைச்சி உண்பது பாவம், தீட்டு என இகழப்படுவது பற்றி?

(இறைச்சிக்காக பசுக்கள் திருடப்படுவதை ஆநிரை கவர்தல் என்கின்றன சங்கப்பாடல்கள். எந்தப் பருவத்திலுள்ள மாட்டின் இறைச்சியை எந்தப் பதத்தில் யாருக்கு விருந்து படைக்க வேண்டும் என்கிற குறிப்புகளை ஆரியர் எழுத்துகளில் காணலாம். பழங்காலந்தொட்டே மாட்டிறைச்சியை இங்கு எல்லோரும் உண்டுவந்துள்ளனர்). 

· ஒருவேளை உங்களுடையது இறைச்சி விலக்கிய குடும்பமெனில் அதற்கு காரணம் ஜீவகாருண்யமா சாதி/மதத்தின் வழிகாட்டலா?

( குழப்பமாக இருந்தால் குழப்பமாக இருக்கிறது என்றே குறிப்பிடவும்)

· பால்பொருட்கள், தானியங்கள், காய்கனிகள், கிழங்குகள், பருப்புகள், கொட்டைகள், கீரைகள் போன்றவை உயிர்களை வதைக்காமல் பெறப்படுவதாக கருதுகிறீர்களா?

(நேரடியான இக்கேள்வியை சரீரம், ஜீவன், ஆத்மா பற்றியவை என்று குழப்பிக்கொள்ள வேண்டாம்)

· உங்களது உணவுவகைகளில் எவையெல்லாம் சொந்தச்சாதியினால் விளைவிக்கப்பட்டவை?

(நிலம், தண்ணீர், விதைகள், இடுபொருட்கள், கருவிகள், உழைப்பறிவு ஆகிய அனைத்திலும் உங்களது சாதியினர் மட்டுமே சம்பந்தப்பட்டு விளைவித்தவை என உறுதிசெய்யப்பட்டவை)

· உங்களது வாழ்வின் நிரந்தர மற்றும் அன்றாடத் தேவைகளில் எவையெல்லாம் உங்களது சாதியினரிடமிருந்து கிடைக்கின்றன? எவற்றுக்கெல்லாம் பிற சாதியினரின் தயவை அண்டியிருக்கிறீர்கள்? பிறசாதியினரின் உழைப்பறிவினால் உண்டானவற்றைப் பெறுவதனால் உங்களது சாதியின் தூய்மைக்கு களங்கம் ஏற்படுவதாக கருதுகிறீர்களா? 

· உங்களது வீட்டின் கழிவறையைச் சுத்தம் செய்வது யார்?

(கழிவறை இருக்கிறதா என்றுதான் முதலில் கேட்டிருக்க வேண்டும். தனிநபரின் சுத்தம் கைக்குட்டையிலும், குடும்பத்தின் சுத்தம் கழிப்பறையிலும் தெரியும் என்பார்கள். உணவுக் கூடத்தைப் போலவே கழிப்பறையும் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் சரிதான்,  ஆனால் அந்தப் பொறுப்பும் பெண்களின் தலையிலேயே விழுகிறது. குழந்தைகள் மற்றும் நடையோட்டமில்லாத முதியோரின் இயற்கை உபாதைகளைத் தீர்த்து வைக்கும் பொறுப்பையும் மற்றவர்கள் ஏற்பதில்லை.)

· வீட்டின் மலக்கிடங்கு/ கழிவுநீர்த்தொட்டியை நிறைக்க உங்களுக்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறது? அதில் உங்களால் ஏற்படும் அடைப்பை நீங்களே நீக்கி சுத்தம் செய்வதுண்டா? உங்களால் ஏற்படுத்தப்பட்ட அடைப்பை சுத்தம் செய்ய வருபவரை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்?

( இக்கேள்விகளுக்கு பதிலளிக்க சங்கடமாக இருந்தால் அடுத்தக் கேள்விக்கு வரவும்) 

விளக்கம் தேவைப்படாத எளிய கேள்விகள்

சொத்து :

· உங்கள் குடும்பத்திற்கென அசையா சொத்துகள் உள்ளனவா? ஆமெனில், எந்தத் தலைமுறையிலிருந்து:

· சாஸ்திரங்களால் அனுமதிக்கப்பட்ட சாதியினர் மட்டுமே பூர்வீக சொத்துள்ளவர்களாக உள்ளனர் என்பதை ஏற்கிறீர்களா?

· குடும்பத்தின் சொத்துக்கள் இருபாலருக்கும் பகிர்ந்தளிப்பட்டுள்ளனவா?

· உங்கள் குடும்பம் எந்தத் தலைமுறையிலாவது அரசிடமிருந்து நிலமாகவோ வேறு வகையாகவோ மானியம் பெற்றுள்ளதா? ஆமெனில் எதற்காக?

· சாதியையே ஒரு மூலதனமாக வைத்து உங்களது குடும்பம் அடைந்த ஆதாயங்களின் விவரம்:

· உங்களுடைய குடும்பத்தின் சொத்து ஏதாவது சட்டவிரோதமாக பிறரால் அபகரிக்கப்பட்டுள்ளதா?

· உங்கள் குடும்பம் பஞ்சமி நிலம் உட்பட யாருடைய சொத்தையாவது சட்டவிரோதமாக அபகரித்து வைத்துள்ளதா?

· நாட்டின் சொத்துகள் நீதியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறீர்களா? 

வீடு

· சொந்தவீடு ---- வாடகை ------

· வீடு கட்டுமானத்திலும் வீட்டிலுள்ள புழங்குபொருட்களிலும் உங்களது சாதியின் பங்கு?

· வீட்டில் யார்யாருடைய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன?

· வீட்டின் அமைவிடம்: ஊர் ---- சேரி ----

ஊரிலெனில்: சாதிரீதியான தெருவிலா பொதுவான பகுதியிலா?

· வீட்டில் சாதிசார்ந்து கற்றுத்தந்த நடத்தைகளைத்தான் நீங்கள் பண்பாடு என்று வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?

·உமது அண்டைவீட்டாரும் நீங்களும் ஒரே பண்பாட்டவரா? ஒத்தவர் எனில், அண்டையில் ஏன் வேறவர் இல்லையென யோசித்திருக்கிறீர்களா? வேறவர் எனில் அவர்களுடன் உங்களது உறவு எத்தகையது?

· உங்களது நண்பர்களில் வேறு சாதி/ மதம்/ பாலினத்தவர் உள்ளனரா? அவர்களில் யாரேனும் எதிர்பாராதவிதமாக உங்கள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் இயல்பாக எடுத்துக் கொள்வீர்களா, தீட்டாகிவிட்டதெனப் பதறுவீர்களா? திறந்திருந்தால் உள்ளே நுழைந்துவிட வேண்டியதா என்று மட்டம் தட்டுவீர்களா? 

· உங்களது வீட்டிற்குள் வேறு பண்பாட்டவர் வந்தால் அவர்களது புழங்கெல்லை வாசல்/ முன்னறை/ சமையற்கட்டு/ சாப்பாட்டறை? அவர்களை எங்கே எதிலே அமரவைத்து, என்ன உறவுமுறையில் விளிப்பீர்கள்? அவர்களுக்கு நீங்கள் புழங்கும் பாத்திரங்களிலேயே தண்ணீர் உணவு கொடுத்திருக்கிறீர்களா?

· அவர்கள் எப்போதேனும் உங்கள் வீட்டில் தங்கிட நேர்ந்தால் அவர்களுக்கு உங்கள் வீட்டின் எந்தப் பகுதியை ஒதுக்குவீர்கள்?

· நீங்கள் வேறு சாதி / மதத்தவர் இல்லங்களில் தங்கியிருக்கிறீர்களா? அப்போது உங்களால் சகஜமாக இருக்கமுடிந்ததா?

· வீட்டில் நூலகம்/ படிப்பறை உள்ளதா?

சாதி

· உங்களது சாதியின் மகிமைக்கான  தொல்கதையில் நீங்கள் ஆண்டப்பரம்பரையா?

· உங்கள் சாதிக்கென தனியான தெய்வமும் கோவிலும் உண்டா? ஒரு சாதிக்கென தெய்வம் உண்டெனில் அது தெய்வமாகுமா?

· கோவிலின் பூசகர் உங்களது சாதியினரா வேறவரா?

· வழிபாட்டுச்சடங்குகளில் பலியிடுதல் உண்டா?

· மறுமணம் செய்துகொள்ள உங்கள் சாதியில் இருபாலருக்கும் அனுமதியுண்டா? 

· அறுத்துக்கட்டும் வழக்கம் உள்ள சாதியா?

· அந்தந்த சாதியினருக்கென்று சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தொழில்களைத்தான் செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்களா?

(நாயைக் குளிப்பாட்டி நடுவூட்டில் வைத்தாலும், ஆட்டுக்கு வால் அளந்துதான் இருக்கணும் என்றெல்லாம் சொல்வதன் பின்னேயுள்ள உளவியல் சார்ந்தும்)

· மருத்துவம், பொறியியல், சட்டம், போக்குவரத்து, மக்கள் பிரதிநிதித்துவம், சுரங்கம், போதைப் பொருட்கள் உற்பத்தி, விநியோகம், கணினி, ஊடகம்- சார்ந்த பணிகளை எந்தெந்தச் சாதிகளுக்கு சாஸ்திரங்கள் ஒதுக்கியுள்ளன?

· சாஸ்திரப்படி உங்களது சாதிக்கென ஏதும் தொழில் இருக்கிறதா? -ஆமெனில் உங்கள் குடும்பத்தவர் செய்யும் அத்தொழில் எது? இல்லையெனில் என்னென்ன தொழில் செய்கிறீர்கள்?

· உங்களது சாதிக்கென சாஸ்திரப்படியாக உள்ள தொழிலைச் செய்யாது வேறு தொழிலைச் செய்வது சாதியாச்சாரத்தைக் கெடுப்பதாகாதா?

· மக்கள்தொகையில் உங்களது சாதியினரின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற பிரதிநிதித்துவம் எல்லா தளங்களிலும் இருக்கிறதா?

இல்வாழ்க்கை 

· வாழ்விணையர் தேர்வுக்கான அடிப்படை?: சாதி/ மதம்/ பொருளாதாரம்/ தோற்றம்/ இவை அனைத்தும். இவை எதுவுமல்ல, வேறு என்றால்  விளக்கவும்.

· நீங்கள் திருமணமானவரா? எவ்வகையிலேனும் உமது மூதாதையருடையதிலிருந்து  மாறுபட்டதா உமது திருமணம்?

· சீர்செனத்தி, அன்பளிப்பு, வரதட்சணை, மொய்முறைமை இருந்ததா?

· திருமணம் சடங்குமயப்பட்டதா? நடத்திவைத்தவர் யார்?

· திருமணத்திற்குப் பிறகான உங்களது இல்லறவாழ்வு யார் வீட்டில்?

(பெற்றோர் உற்றாரை விலகி கணவன் குடும்பத்திற்கு மனைவி வந்துவிடுவதே இங்கு நடைமுறை. மனைவியின் வீட்டில் கணவன் குடியேறுவது ஊக்குவிக்கப்படுவதில்லை.  அது ஆண்மைக்கு இழுக்கு, குலப்பெருமைக்கு களங்கம், கெளரவக்குறைச்சல் என்பதாக பழித்துரைப்பதை கவனம்கொள்க) 

· தம்பதியராகிய உங்களுக்குள் எழும் கருத்து மாறுபாடுகளை எங்ஙனம் தீர்த்துக்கொள்வீர்கள்? 

· கணவன் மனைவியை, மனைவி கணவனை அடிப்பது பற்றி உங்களது கருத்து என்ன?

· வீட்டுவேலைகள், குழந்தைவளர்ப்பு, முதியோரைப் பேணுதல் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறீர்களா?

· விரும்பியதைப் படித்திருக்கிறீர்களா? படிப்புக்கேற்ற வேலையும் வேலைக்கேற்ற ஊதியமும் 21ஆம் நூற்றாண்டுக்கான வாழ்க்கையும் வாய்த்திருக்கிறதா?

· அரசியல், கலை இலக்கியம், விளையாட்டு, பயணம் – ஆர்வமுள்ள துறைகளை குறிப்பிடுக.

· உங்களிடம் யாரேனும் உங்களது சாதி என்னவென்றும், நீங்கள் யாரிடமேனும் அவரது சாதி என்னவென்றும் கேட்டதுண்டா? ஆமெனில், அப்போதைய மனநிலை, எதிர்கொண்ட விதம் விளக்குக.

· ஒருவரது சாதியைத் தெரிந்துகொள்வதற்கு என்னென்னெ வழிமுறைகளைக் கையாள்வீர்கள்?

· இன்ன சாதியினர் என்று தெரிந்தும் தொடர்ந்த அல்லது விலகிய நட்பனுபவம். 

· நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரா? ஆமெனில்  வணங்கும் கடவுள்களின் பட்டியல்?

· உங்களது சாதியை அடுத்திறங்கும் சாதியினரை சக கடவுள் நம்பிக்கையாளர் என்ற வகையில் உங்கள் சாதிக்குரிய கோவிலுக்குள் அனுமதிப்பீர்களா?

· கடவுள் எங்குமிருப்பார் என்ற அடிப்படையில் சேரியிலுள்ள கோவிலுக்குச் சென்று அங்குள்ள சாமியை வழிபடுவதுண்டா?

· பக்தர் என்ற முறையில் கோவிலின் எந்தப் பகுதிவரை உங்களால் செல்லமுடியும்?

· கோவிலின் கருவறைக்குள் செல்லவோ அர்ச்சனை செய்யவோ உங்களுக்கு உரிமை இருப்பதாக கருதுகிறீர்களா?  

· பூப்பெய்தல், மாதவிடாய், குழந்தைப்பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை உங்கள் சாதி தீட்டு எனக் கருதுகிறதா? ஆமெனில் தீட்டுக்கழிப்பு யாரால் செய்விக்கப்படுகிறது?

· உங்களது சாதி/ குடும்பத்திற்கு முக்கியமான திருவிழாக்கள் எவை?

·       ஊர் சேரி என நமது வசிப்பிடங்கள் பிரிந்திருப்பது பற்றி…

· அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்விநிலையங்கள், வங்கிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், அஞ்சல் நிலையம், குடிநீர்த்தொட்டி,  வணிக நிறுவனங்கள், உணவகங்கள், டாஸ்மாக்குகள், சலூன்கள்- ஊரின் எப்பகுதியில் உள்ளன? இவற்றில் ஏதேனும் சேரிப்பகுதியில் இருக்கின்றனவா?

· காவல் ஆவணங்களில் பிரச்னைக்குரிய/ குற்ற நடவடிக்கைகள் அதிகமுள்ள பகுதி என கட்டங்கட்டப்பட்டு கண்காணிக்கப்படும்  பகுதியில் உங்களது வீடு உள்ளதா?

· நெகட்டிவ்  ஏரியா என்று சுழிக்கப்பட்டு நிதியுதவி ஏதும் பெற முடியாதபடி வங்கிகளால் புறக்கணிக்கப்படும் பகுதியில் இருக்கிறதா உங்களது வீடு?

· ஊர்ப்பகுதியின் நிலத்துக்கும் சேரிப்பகுதியின் நிலத்துக்குமான அரசின் வழிகாட்டும் மதிப்பு, சந்தை மதிப்பு ஒருபடித்தானதா?

· உங்கள் குடும்பத்தினர் அங்கம் வகிக்கிற/ ஆதரிக்கிற அரசியல் கட்சிகள் கொள்கை சார்ந்தவையா? சாதி/ மதச் சார்புடையவையா?

· வாக்களிப்புக் காரணி சாதி கடந்த அரசியலா அரசியல் கடந்த சாதியா?

· சாதிச்சங்கம் எதிலாவது அங்கத்தினராக இருக்கிறீர்களா? ஆமெனில் எதற்காக?

· பணியிடத்தில் சக ஊழியர்களை சாதியடிப்படையில் அணுகுவதுண்டா?

· பாலின/ சாதிய/ மதரீதியான வன்கொடுமை நடக்கும்போது இவங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று எப்போதேனும் உள்ளூர ரசித்ததுண்டா?

· அன்றாட வாழ்வில் சாதியை நினைக்கும் / மறக்கும் தருணங்கள்:

· உங்களது சாதியை நினையாமல் அதன் அனுகூலங்களில் தோயாமல் ஒருநாளையாவது கடந்திருக்கிறீர்களா?

· சாதிப் பற்றாளர்/ துறந்தவர்: அளவிடுவதற்கான காரணிகள் யாவை?

· சாதி, மதம், பாலினம், வர்க்கம்  என்றுள்ள பாகுபாடுகளைக் கடந்தவர் என்று உங்களுக்கு நீங்களே மதிப்பெண் இட்டுக்கொள்வதாக இருந்தால் ஒவ்வொன்றுக்கும் நூற்றுக்கு எத்தனை மதிப்பெண் வழங்கிக்கொள்வீர்கள்?

நண்பரே, கதையென்று ஆரம்பித்து நீளும் இக்கேள்விகளைப் படிப்பதற்கே உங்களுக்கு அலுப்பாக இருக்குமானால், இவற்றினும் இன்னும் பன்மடங்கு கேள்விகளை இரண்டாயிரம் ஆண்டுகளாக சுமந்தலைகிற எங்களது மனநிலை எப்படி இருக்குமென நீங்கள் ஒருபோதும் யோசிக்கவே போவதில்லை. ஆனாலும், ஒருதரப்பின் அங்கலாய்ப்பாகவோ குற்றச்சாட்டாகவோ இக்கதை சுருங்கிவிடக்கூடாது என்பதால் நான் இவ்விடத்தில் கேள்விகளை நிறுத்திக் கொள்கிறேன். மையப்பாத்திரம் என்ற வகையில் நீங்கள் இடையிட்டு உரையாடினால்தானே கதைக்குள் உயிர் சுரக்கும்?

எனது கேள்விகளும் அவற்றுக்கான உங்களது பதில்களும் கதையின் ஒருபகுதிதான். வசமாக சிக்கினால் என்னிடம் கேட்கவேண்டும் என்று உங்களுக்குள் எத்தனையோ கேள்விகள் எழும்பியிருக்கக்கூடும். ஆனால் பகையாளியுடன் தர்க்கம் செய்வது உறவாடுவதற்குச் சமம் எனக் கருதி அந்தக்கேள்விகளை அந்தரங்கத்தில் வைத்து குமைந்து கொண்டிருப்பீர்கள். நொதித்துக் கொண்டிருக்கும் அந்தக் கேள்விகளை நீங்கள் இப்போதாவது வெளிப்படையாக எழுப்பி அவற்றுக்கு நான் உளச்சுத்தியோடு பதிலளிக்கும் போதே இக்கதை முழுமையடையும். இப்போது பேசவேண்டியது உங்கள் முறை.

இப்படிக்கு

ஒருபோதும் கீழ்ப்படிதலில்லாதவள்/ன்


நன்றி: செம்மலர், 2021 ஆகஸ்ட் இதழ்.

    

2 கருத்துகள்:

  1. பதிலறிந்தும் உரைக்காத மௌனிகளிடம் கதையான உங்கள் கேள்விகள்... சிறப்பு... பதிலுரைக்கும் குரல்களின் ஓசை விரைவில் கேட்கும் தோழர் @💓 🤝

    பதிலளிநீக்கு
  2. பல்வேறு கூறுகளில் சமத்துவம் காண விரும்பும் மனிதர்களுக்கு தேவையான கேள்விகள். தன்னையறிதல் என்பதுதான், தனி மனிதரின் மாற்றத்திற்கு தூண்டுகோலாகும். அதுவே, குடும்ப அமைப்பு, சமூக அமைப்புகளுக்குள் நல்ல மாற்றங்கள் ஊடுருவ காரணமாக அமையும்!! ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான, அவரவர் மனங்களில் பிரசுரிக்கப் படவேண்டிய கதை இது!! நன்றி தோழர்!!

    பதிலளிநீக்கு

பொதுநலன் கருதி பிரசுரிக்கப்படாத கதை - ஆதவன் தீட்சண்யா

  முன்குறிப்பு 1: கதை என்றால் அதற்கொரு நாயகனோ நாயகியோ தேவை எனக் கருதுவீர்களேயானால் அப்பாத்திரங்களுக்கு நிறைபொருத்தம் தாங்களே. உங்களது பெயரைய...