ஞாயிறு, ஆகஸ்ட் 1

இலா என்றொரு வீராங்கனை - ஆதவன் தீட்சண்யா

இன்றைய தி இந்து நாளிதழில்  ஷோகினி சட்டோபாத்யாய் The Rebel who missed the Olympics என்ற தலைப்பில், இலா  மித்ரா பற்றி எழுதியுள்ள கட்டுரையைப் படித்ததிலிருந்து னம் விவரிக்கவியலாத உணர்வுக்கலவைக்குள் சிக்கிக்கொண்டது. 1940 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கெடுக்குமாறு அழைக்கப்பட்ட முதல் வங்கப்பெண் என்ற பெருமைக்குரிய இலா, விளையாட்டுகளிலும் தடகளப் பிரிவிவிலும் வியத்தகு சாதனைகளைப் புரிந்தவர். இரண்டாம் உலகப்போர் காரணமாக அந்த ஒலிம்பிக் போட்டிகள் தடைபட்டுப் போன நிலையில், அந்த விளையாட்டு வீராங்கனை மகத்தான அரசியல் வீராங்கனையாக உருவெடுத்த வரலாறை இந்தக் கட்டுரை விரிவாக பேசியுள்ளது.

வங்கத்தில் ஏற்பட்ட கடும் உணவுப்பஞ்சத்திலும் புயற்சேதத்திலும் மக்கள் படும் துயரம் பொறுக்காத கல்லூரி மாணவி இலா மாணவர், பெண்கள் இயக்கம் வழியாக கம்யூனிஸ்டாகிறார். அக்காலத்தில் முன்னெழுந்த பிரச்னைகளுக்கு முகம்கொடுத்துப் போராடும் முன்வரிசைப் போராளியாக தீரமிகு பங்காற்றிய இலா தேபாகா எழுச்சியின் நாயகிகளில் ஒருவர். அதற்காகவே அவர் எதிர்கொண்ட கொடூரமான தாக்குதல்களையும்  ஒடுக்குமுறைகளையும் பற்றி படித்துக்கொண்டே வந்தவன் ஓரிடத்தில் விக்கித்து நின்றுவிட்டேன். 

ஈழ எழுத்தாளர் ராகவன் தனது சிறுகதை ஒன்றில் “வேகவைத்த முட்டையை ஓடுடன் கொதிக்ககொதிக்க பெண்ணின் பிறப்புறுக்குள் திணிக்கும்” சித்ரவதையை சிங்கள ராணுவத்தினர் பெண்போராளிகள் மீது ஏவியதாக எழுதியதைப் படித்தபோது இவ்வளவு குரூரமானதா மனிதமனம் என்று அரற்றித் திரிந்திருக்கிறேன். இன்று இந்த இந்து கட்டுரையைப் படித்தபோதும் அதேமாதிரியான பதைபதைப்புக்கு ஆளாகிப்போனேன். இலங்கைக்கும் முன்பாகவே சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களும் போலிசாரும் இந்தக் கொடுங்கோல் சித்ரவதையை இலா மீது ஏவியுள்ளனர். 1950 ஜனவரியில் கைது செய்யப்பட்ட இலா, விசாரணையின் போது தாங்கள் எதிர்பார்க்கும் தகவல்களை சொல்ல மறுத்ததால் ஆத்திரமடைந்த நஹோல் காவல்நிலைய அதிகாரி  இலாவின் பிறப்புறுப்பில் வேகவைத்த சுடுமுட்டையைத் திணித்து இவள் இப்போது பேசுவாள் என்று கொக்கரித்திருக்கிறான். 

இவ்வளவு கொடுமைகளையும் தாங்கி வளர்ந்த தீரமிக்க கம்யூனிஸ்டாகிய இலா சிறைப்பட்டதும் விடுதலையானதும் சித்ரவதைகளின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு எத்தனித்தவாறே அரசியல் அரங்கில் அவர் தனித்தொளிர்ந்ததும், பின்னாளில் அவருக்குரிய முக்கியத்துவத்தை அடையாமல் தணிந்துபோனது ஏனென்றுமான கேள்விகளுடன் விரியும் இந்தக் கட்டுரையப் படித்துக்கொண்டிருக்கும் போதுதான் இலா பற்றி ஏற்கனவே நாமும் ஏதோ எழுதியிருக்கிறோமே என்பது நினைவுக்கு வந்தது.

2018 ஆம் ஆண்டு, நாடகவியலாளர் பிரசன்னா ராமசாமி தனது நாடகமொன்றிற்காக, நிலவுரிமை தொடர்பான நாட்டின் குறிப்பிடத்தக்க போராட்டங்களில் ஒன்றை ஒரு காட்சியாக எழுதித் தருமாறு கேட்டிருந்தார். அதற்காக நான் அப்போது எழுதியதில் இலா வருகிறார். அந்தக் காட்சி:    


இரவுநேரம்.

இரண்டு பெண்கள் நெடிய கம்புகளேந்தி காவலுக்கு வருகிறார்கள்.

ஒருத்தி கையில் தீப்பந்தம்.

அவர்களுக்குள் உரையாடிக்கொண்டே மேடைக்குள் வருகிறார்கள்.

"இப்ப மாதிரியேதான் அப்பவும். ஆம்பளைங்க பாதிபேரு ஜெயில்ல. மீதிப்பேர் தலைமறைவு. நம்மளாட்டம் பொண்டுங்கதான் ராக்காசிகளாட்டம் காவலிருந்து ஊரைக் காப்பாத்தியிருக்காங்க."

"பொம்பளைங்கள அவங்க ஒண்ணும் பண்ணலியா..."

"ஒண்ணும் பண்ணலியா...? பண்ணாத கொடுமையில்ல படுத்தாத இம்சையில்ல... இலா மித்ரான்னு ஒரு அம்மா. சந்தால் பழங்குடிகள திரட்டி போராடினவங்க. அவங்கள போலிஸ்காரனுங்க தூக்கிப்போய் ஸ்டேசன்ல வச்சு கூட்டா பலாத்காரம் பண்ணி சித்ரவதை செய்திருக்கானுங்க.."

"அப்பயிருந்தே போலிஸ்காரங்க இதேமாதிரி ஈனமாத்தான் இருக்கானுங்க..."

 மற்றவள் பின்தொடர தீப்பந்தக்காரி முன்செல்கிறாள். 

மேடையின் மூன்று மூலைகளில் தீக்கொளுத்தி பந்தமேற்றுகிறாள்.

நாலாவது மூலையில் கையிலிருக்கும் பந்தத்தைச் செருகுகிறாள்.

மேடை இப்போது காவல்பரப்பு. 

பந்தமெரியும் ஒளி காட்சிக்குப் போதுமானது.

( பந்தமேற்றும்போது நடக்கும் உரையாடல்)

"இலா மித்ராவையாவது உசுரோட விட்டானுங்க. அகல்யான்னு ஒரு பொண்ணு. எட்டுமாச கர்ப்பிணி. ஆனாலும் அடங்காம போராட்டத்துல முன்ன நிக்கிறாளேங்கிற ஆத்திரம். சுட்டு கொன்னிருக்கானுங்க. 

துப்பாக்கி பேனட்டால அவ வயித்தை குத்திக்கிழிச்சு உள்ளயிருந்த சிசுவை ரத்தப்பிண்டமா தூக்கி புழுதியில வீசியிருக்கானுங்க." 

"அய்யோ... இப்படியெல்லாம் வதைக்கிறதுக்கா ஒரு அரசு வேணும்?"

 "அரசுன்னு ஒண்ணு இருக்கறதே சனங்களை வதைக்கிறதுக்குத்தானே?"

 "நிராயுதபாணியா இருக்குற நம்மளாட்டம் எளிய சனங்களோட குற்றம்தான் என்ன?"

 "நிராயுதபாணியா இருக்கிறதுதான்."

 "சரி, நீ இந்தப்பக்கம் போய்வா. நான் அந்தப்பக்கம் போய் வாறேன்."

 வடிவில் ஒருத்தி சுற்றி வருகிறாள். மற்றவள் தன் பக்கமிருந்து எதிர்ச்சுற்றில் ‘டவடிவில் வருகிறாள். இருவரும் ஒரு மூலையில் சந்திக்கிறாள். 

"அந்தப் போராட்டத்துக்குப் பேர் என்ன சொன்னே?"

 "தேபாகா. மூன்றில் இரண்டு பங்கு. வெள்ளாமையில் பண்ணையாருக்கு ஒரு பங்கு. விளைவிக்கிற உழவர்களுக்கு இரண்டு பங்கு."

 பிறகு அவரவர் திசையில் மீண்டும் செல்கிறார்கள். 

அமைதி. அமைதியின் பகுதிபோல இரவுக்கேயுரிய சத்தம். 

 இரண்டுமூன்று சுற்றுகளுக்குப் பிறகு ஆளுக்கொரு மூலையில் அமர்கிறார்கள்.

இடையிடையே ஒருத்தி சமிக்ஞை ஒலி கிளப்புகிறாள்.

மற்றவள் பதில் ஒலி எழுப்புகிறாள். 

அமைதி.

ராக்குருவி / பூச்சிகள்/ வண்டுகளின் கலவை ஒலி.

முதற்கோழி கூவும் சத்தம்.

அமைதி.

ஒரு மூலையில் பந்தம் அணைகிறது.

சமிக்ஞை ஒலி சற்றே மாறிய தொனியில் எச்சரிக்கை போல ஒருத்தியிடமிருந்து.

அடுத்தடுத்து மற்ற பந்தங்களும் அணைகின்றன. 

மேடையில் இருள்.

மற்றவளிடமிருந்து அதேரீதியில் பதில் ஒலி வருகிறது.

அதே ஒலி இப்போது இருட்டில் பலபக்கமிருந்தும்.

தொடர்ந்து, பல பேர் ஓடிவரும் சத்தம். பெருங்கூச்சல்.

"பிடி... பிடி.. தப்பிக்க விடக்கூடாது."

"ராவும் பகலும் இதேவேலையாப் போச்சு இவங்களுக்கு."

 மேடையின் ஒரு மூலையில் வெளிச்சம்.

விடிகிறது.

நுழைமுகத்தில் செருப்பு துடைப்பம் கருப்புக்கொடி தோரணம் தொங்கிக்கொண்டிருப்பது தெரிகிறது.

நிலத்தின் (மேடையின்) மையம். 

அளந்து நடுவதற்கான சில முட்டுக்கற்கள் கீழே சரிந்திருக்கின்றன.

தலையுயரம் தாண்டிய ஒரு முட்டுக்கல் ஊன்றப்பட்டுள்ளது.

முதலாளி போன்ற உடை.

தலையில் போலிஸ் தொப்பி.

தோளில் அரசியல்வாதி போன்ற தோரணையில் சால்வை.

ஒரு கையில் அதிகாரிகள் வைத்திருப்பதைப்போன்ற கோப்புக்கட்டுகள்.

மறுகையில் நிலம் அளக்கும் டேப் / சங்கிலி வைத்துள்ள ஒருவன் அந்த முட்டுக்கல்லில் கட்டிப்போடப்பட்டிருக்கிறான்.

வேறு இருவர் வந்து பெண்களிடமிருந்து கம்புகளை பெற்றுக்கொண்டு காவல் பொறுப்பேற்கிறார்கள்.

"இவனை தப்பிக்கவிட்றாதீங்க, மண்ணைத் திருடி தின்னுப்புடுவான், கவனம். ராத்திரிக்கு வர்றோம்."

 ராக்காவல் இருந்த பெண்கள் இருவரும் கையசைத்தபடி மேடையிலிருந்து வெளியேறுகிறார்கள்.

 ***

1 கருத்து:

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...