வெள்ளி, ஜனவரி 5

காம்ஸ் தோழரின் கதைகள் - ஆதவன் தீட்சண்யா

ஒரு வனதேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும் - எஸ்.காமராஜ் சிறுகதைத்தொகுப்பு, வெளியீடு: நீலம் பதிப்பகம்

கொப்பளிக்கும் பாதையில் சிறுசெடியின் நிழலாவது காலற்றிக்கொள்ள கிடைக்காதா என்கிற பரிதவிப்புடனும், கிடைக்காமலா போய்விடும் என்கிற நம்பிக்கையுடனும் விரையும் ஒருவரது கண்ணுக்கும் மனதுக்கும் என்னென்ன எந்தளவுக்குப் படுமோ அந்தளவில் காட்டுபவை காம்ஸ் தோழரின் கதைகள். எனவே இக்கதைகள் மஞ்சனத்தி மரம் என்று பத்து இடங்களிலாவது வந்தால்தான் அது கரிசக்காட்டு இலக்கியம் என்றுள்ள கற்பிதத்திற்கு வெளியே நிற்கின்றன.   

வெளிப்புறத் தோற்றங்களைத் துளைத்து ஊடுருவிப்போய் வாழ்வின் சாரத்தை அறியும் நுட்பம் ஆன்மீகத்தினால் வாய்ப்பதல்ல; அது லெளகீகத்திலிருந்து பெறப்படுவது. கண்கள் மீது அப்பிச்செல்லும் காட்சிகளை வழித்தெறிந்துவிட்டு நாம் வேறெதையோ நோக்கி விரைகையில் காம்ஸ் அவற்றை மனதால் பார்ப்பதற்கு இந்தப் பட்டறிவே காரணம். 

வெள்ளந்தியானவர்கள் என்னும் ஸ்டிக்கர் ஒட்டி காட்டப்படும் கிராமத்தவர்கள் எந்தளவுக்கு சாதிய, ஆணாதிக்க, சொத்துடமைச் சார்ந்த பாகுபாடுகளையும் சுரண்டலையும் இயல்பானவை என நம்பி பின்பற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை தொகுப்பின் பல கதைகள் அம்பலப்படுத்துகின்றன. அதேவேளையில், அவர்களுடைய இயல்பைக் குலைத்துப் போடுவதற்கு அவர்களுக்கிடையிலிருந்தே பூச்சி என்றொரு பெண் பரணில் கிடக்கும் அருவாவையும் வேல்கம்பையும் ஏந்திக்கொண்டு தெருவுக்கு வருவாள் என்பதையும் இக்கதைகள் காட்டுகின்றன. 

பூச்சியின் சாயையில் எனக்கு இன்னொருத்தி தெரிகிறாள். வாழ்விடத்திலும் பணியிடத்திலும் துப்புரவுத்தொழில் சார்ந்த “நகராட்சி வாசனை” அல்லாத ஒரு நறுமணத்தை கனவிலும் நனவிலும் தேடியலையும் துப்புரவுத் தொழிலாளியின் மனைவியான அவள் பூச்சியைப்போல அருவாவையும் வேல்கம்பையும் தூக்காமல் பொடிமட்டையை எடுக்கிறாள். ‘எதுத்து அடிக்க முடியாத தெருவுக்குள்ள எதுக்குடா சினிமாக்காரி மாதிரி பொம்பிள. கொஞ்சம் மினுக்கலக் கொறச்சிக்கங்கப்பா. ஒரு பய மாதிரி ஒரு பய இருக்கமாட்டான்” என்று அருள்வாக்குச் சொல்லும் ஊரில் அவளால் முடிந்தது அதுதான். அவள் சுரைக்காய் விதையின் வெண்மையில் உள்ள தனது பற்களில் மூக்குப்பொடியை அப்பி பழுப்பேற்றி விகாரப்படுத்திக்கொண்டு தன்னை அடையத் துடிக்கும் கங்காணியை நெருங்கமுடியாதபடி விரட்டியடிக்கிறாள். தலித் ஆண்களைத் தீண்டாமல் ஒதுக்கிவைக்கிறவர்கள் தலித் பெண்களைக் கண்டுவிட்டாலோ கட்டித்தழுவ பரபரக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்ப காரைக்காலம்மையார் டெக்னிக்கை கண்டடைந்த உறவுப்பெண்கள் அவளுக்கும் சொல்லிப் பழக்குகிறார்கள். முதல்முதலில் மூக்குப்பொடியேறிய காந்தலில் வீங்கிப்போன ஈறுகளுடனும் உதடுகளுடனும் சுயவதைக்கு ஆளாகி அவள் படும் அவஸ்தையைப் பார்க்கையில் அவள் பூச்சியாக மாறியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. 

பூச்சிக்கிழவி ஏந்திய ஆயுதங்களுக்கு இணையான கூர்மையைக் கொண்டவை தான் ஓவியர் கனியண்ணனின் தூரிகையும் வண்ணக்குழம்பும். மனம் ஒவ்வாத எந்தவொரு வேலைக்கும் இந்த உலகத்தையே விலையாகத் தந்தாலும் புறங்காலால் எத்தித் தள்ளிவிடுகிற நெருப்பும் செருக்கும் கொண்டிருந்த அவருக்குத் தெரிந்திருக்கிறது காளிமுத்து போன்ற அரசியல் செல்வாக்கும் சாதிபலமும் கொண்ட ஒருவனை தனது ஓவியத்தால் பணியவைக்க முடியுமென்று.   

“சிறப்புப்பூஜை ஆரம்பிக்க இருப்பதால் மேளக்காரர்கள், சமையல்காரர்கள், சுத்தக் குறைவானவர்கள், தீட்டுப்பட்டவர்கள், கீழ்ச்சாதிக்காரர்கள் எல்லோரும் கோயில் வளாகத்தை விட்டு வெளியேறும்படிக்குக் கும்பாபிசேகக் கமிட்டியார் கேட்டுக் கொள்கிறார்கள்” என்ற அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் அங்கிருந்து யாரோ தன்னை நினைவுக்கெட்டாத தூரத்தில் தூக்கி வீசிவிட்டதைப் போன்ற  அவமானத்தில் குன்றி ஒதுங்கும் ஒருவனின் அனாதரவான மனநிலையை யாராவதொரு கனியண்ணனால் வரையமுடிந்தால் அந்த ஓவியம் எப்படி இருக்கும் என்று தொடர்பற்று யோசிக்கிறேன். 

ஒருவர் தனக்கேற்படும் அனுபவங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் பாடம் இன்னொருவரை சட்டென புரிந்துகொள்ளத் தூண்டுகிறது. அப்படியான புரிதல் ஏற்பட்டதை நேரடியாக சொல்லாவிட்டாலும் அவர்களது நடத்தை அதன் உரைகல்லாகிவிடுகிறது என்பதை உணர்த்துகிறார்கள் காம்ஸின் கதை மாந்தர்கள். பசியால் துடித்தழும் குழந்தையை அடக்க தன்னிடம் அடியைத் தவிர ஒன்றுமில்லையே என்று செல்லத்தாயி மருகிக்கிடக்கையில் எதிர் வீட்டு சுந்தரிப்பிள்ளையின் அம்மா பிள்ளைச்சோறு கொண்டுவருகிறாள். அவ்வாறு அவள் பிள்ளைச்சோறு கொண்டு வருவதற்கு காம்ஸ் சொல்லும் காரணம் “இதே ஊரில் இதைவிடவும் மோசமான வறுமையில் ஆறு பிள்ளைகளை பெத்தவளல்லவா அவள்”. 

கடன் கேட்டு வந்துள்ள மாரியப்பனிடம் நூறுரூபாயை நீட்டுகிறவனும், தன்னிடம் நூறு ரூபாயை நீட்டும் நண்பனிடம் முப்பத்தைந்து ரூபாய் போதும் என்று தன் தேவைக்கு மட்டும் பெற்றுச்செல்கிற மாரியப்பனும் கூட அந்த எதிர்வீட்டு சுந்தரிப்பிள்ளையின் அம்மாவுக்கிருந்த அதே மனதைத்தான் கொண்டிருக்கின்றனர். தனக்கொரு காதலன் கிடைத்து அவனோடு இருக்கும் போது கிடைக்கும் ஆசுவாசத்தில்தான், கைம்பெண்ணான தனது தாய் வேறு யாரோ ஒருவருடன் ஆத்மார்த்தமாய் கொண்டுள்ள உறவின் நியாயம் புரிகிறது ஜெனிபருக்கு. இந்தப் புரிதலும் பக்குவமும் எத்தனை பேருக்கு வாய்க்குமெனத் தெரியவில்லை, காம்ஸ் தோழருக்கு வாய்த்திருக்கிறது. 

மனிதப்பண்புகளுக்குப் புறம்பான குணநலன் கொண்டிருப்பவர்களை  மெலிதான அங்கதத்தால் வலுவாக சாத்துவதற்கென்றே நாராயணன், குருபாத தாத்தா, முதன்முதலாக ஆபீஸருக்கான ட்ரெயினிங்கில் இருக்கும்போது தனக்கு கொம்பு வளருவதாக உணர்ந்தவன் போன்றவர்களின் கதைகளை எழுதியிருக்கிறார். 

இப்படி எல்லா கதைகளையும் நானிங்கே பேசிவிட்டால் நீங்கள் எதைப் படிப்பீர்கள்?

 - மிக்க தோழமையுடன்,

ஆதவன் தீட்சண்யா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...